விடியும்! நாவல் – (15)

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


15

பிறந்த மண்ணின் அவா பிடித்தவனாய் ஊரை ஒரு முழுச்சுற்று சைக்கிளில் சுற்றி வந்தும் செல்வத்திற்கு கெலி அடங்கவில்லை. குடியிருப்புகளின் பருமனுக்கு ஏற்ற மாதிரி சிறிதும் பெரிதுமாக கோயில்கள் நிறைந்த குட்டி நகரம். கைக்கும் காலுக்கும் குச்சு குச்சு ஒழுங்கைகள். நகரத்தின் வலது இடது ஓரங்களில் ஒன்றுக்கு ஒன்று ஒத்து வராத குணத்தையுடைய கடல். துறைமுகப் பக்கம் மெல்லிய அலைகளோடு சின்னக்குறட்டை விடும் குழந்தை போல படுத்துக் கிடக்கிற கடல், கோணேச மலைப்பக்கம் ‘அதையிதை ‘ போட்டு உடைக்கும் பிள்ளையின் பிரளி காட்டும். காற்று மாற மாற, நேரத்துக்கு நேரம் உடை மாற்றிக் கொள்ளும் நவநாகரிகக் கன்னி போல, மங்கல்பச்சை வெளிர்நீல நிறங்களை மாற்றி எடுத்துக் கொண்டு மாயா ஜாலம் செய்யும்.

கடலும் கடல் சூழ்ந்த குட்டி நிலமும், சுற்றி உயர்ந்த மலைகளும் திருகோணமலையை உலகிலேயே சிறந்த இயற்கைத் துறைமுகமாக்கி விட்டிருக்கின்றன. அதை நினைக்கையில் அவனுக்கு நெஞ்சு நிமிரும். இது நான் பிறந்த மண், என் தாய் மண் என்று சொந்தம் பாராட்டுவதில் மனங்கொள்ளாத பெருமை.

கோடை மாலைகளில் சனம் ஈக்களாக மொய்க்கும் கோணேசமலை கடற்கரையின் வெண்மணல் மெத்தை இப்போது சோகையடித்துக் கிடந்தது. பெருக்கெடுத்த கடல் கரையில் வாய்க்காலெடுத்து ஓடி முதிர்ந்த மனிதனின் முகக் கோடுகளாய் கோலம் போட்டிருந்தன. கோட்டை வாசல் சமீபமாக மணல்திட்டில் ஏற்றப்பட்ட மீன்பிடி வள்ளங்கள் நாதியற்றுப் போய் வரிசையாக நின்று தம் கவலைகளைப் பகிர்ந்து கொள்ளும் பரிதாபம்.

கடலடி நிற்கும் வரை, அதாவது, மாசிமாதக் கடைசி வரை கடற்கரையை நாயுந் தேடாது. இந்தக் குளிரில் ஐஸ்கிரீம் வண்டிகள் வராது. கச்சான் விற்கும் பையன்கள் சினிமா தியேட்டர் வாசல்களுக்கு இடம் மாறியிருப்பார்கள். தும்பு முட்டாசிக்காரன் தகரப் பெட்டியோடு ஊர் மனைக்குள் சுற்றிக் கொண்டிருப்பான். இளம் சிட்டுகளுக்கு கண் கொடுக்க அலையும் சின்னஞ்சிறிசுகள் வேறு ரூட் பார்த்திருப்பார்கள்.

சைக்கிள் சீற்றில் இருந்து காலை நிலத்தில் குற்றியபடி மாறி மாறி ஓடி வந்து நுரைத்து பாலாக சொரிந்து கொண்டிருக்கும் கடல் அலைகளை கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றான் செல்வம்.

ஓயாத அலைகள்!

அந்தக் கடற்கரையும் முற்றவெளி பூவரசத்தடியும் அவனுடைய பால்யத்தை பக்கம் பக்கமாய்ச் சொல்லும். அங்கேதான் மிக இனிதான பல இளமை மாலைப் பொழுதுகள் கழிந்திருக்கின்றன. ஒரு கணம் நம்பிக்கை வரவில்லை. உண்மையாகவே ஊருக்கு வந்துவிட்டானா!

அதே கடற்கரை அதே முற்றவெளி அதே பூவரச மரத்தடி தானா இது! கனடாவில் இதை விடவும் கண்ணுக்குக் குளிர்ச்சியான எத்தனை இடங்களில் ஐந்து வருடங்களாக திரிந்திருக்கிறான். அப்போதெல்லாம் ஏற்படாத நிறைவு – இதோ, இதோ பிறந்த மண்ணில் அதிலும் சொல்லொணாத் துன்ப மேகங்கள் சூழ்ந்து மங்கிப் போய்க்கிடக்கும் மண்ணில் கால் வைத்ததும் வந்து விட்டதே. எப்படி!

தன்னைச் சுற்றிலும் ஒரு முறை கண்களை வலம் விட்டான். தெருவோர சருகுக் குப்பைக்குள் முகம் நுழைத்துக் கொண்டிருந்த வழி தவறிய சொறி நாயொன்றைத் தவிர பக்கத்தில் ஆருமில்லை. தூரத்தில், ஒலி எழுப்பாத ஆம்புலன்ஸ் வண்டி ஆஸ்பத்திரிப் பக்கம் விரைந்து கொண்டிருந்தது, தட்டத் தனிமை. பரந்தவெளி. பார்ப்பதற்கு பார்வையாளரில்லாத நாடக மேடை நாயகனாய் நிற்கும் உணர்வில் தோள் சிலிர்த்தான்.

நான் வந்திட்டேன். நான் வந்திட்டேன். இது என்னுடைய மண். நான் இங்கதான் இங்கதான் வாழ்வேன். இங்கதான் சாவேன் இங்கதான்.

சத்தம் நகரசபை வாசிகசாலைக் கட்டிடத்தில் பட்டுத் தெறித்து எதிரொலித்து வந்தது போன்ற பிரமை. ஆருக்காவது கேட்டு விடும். சடுதியாக அவன் நிறுத்திக் கொண்டான்.

உனக்கு என்னடாப்பா நடந்தது ? உள்ளிருந்து கேள்வி வந்தது.

என்ன நடந்தது என்றா கேட்கிறாய். சோகமடா சோகம். புழுதி அளைஞ்சு திரிஞ்ச தாய் மண்ணைப் பிரிஞ்ச சோகம். அம்மா அப்பாவைப் பிரிஞ்ச சோகம். கூடித் திரிஞ்ச கூட்டாளிகளிடம் கூடச் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிய சோகம். தூக்கி வளர்த்த தம்பியை இழந்த சோகம்.

அப்ப இனி கனடாவுக்குப் போகமாட்டாயா நீ ?

பதில் தொண்டைக்குள்ளேயே சிக்கிக் கொண்டது.

வானத்தில் வரிசை பிரளாத ஒரு பறவைப்பட்டாளம். போகப் போக வரிசை நெளிந்து மெலிந்து தேய்ந்து மறைந்து கொண்டே போயிற்று. சிறிய இடைவெளியில் கடலுக்கு மேலால் சொல்லி வைத்தாற் போல், அதே திக்கில் பின் தொடரும் இன்னொரு வரிசைப் பறவைகள்.

இவையெல்லாம் ஒத்தபடிக்கு எங்கே போகின்றன ? ஒரு இடத்தில் இருக்க முடியாது போகிற போது இன்னொரு இடம் தேடுகின்றனவா ? இப்படித்தானே நாங்களும் ஆயிரக் கணக்கில் லட்சக் கணக்கில் பறந்து போனோம்!

நேரத்தைப் பார்த்தான். ஐந்தேமுக்கால். இன்னும் கொஞ்சத்தில் இருட்டிவிடும். இரண்டு தரம் குணாளனைப் தேடிப் போயிருந்தும் ஆள் ஒளித்துக் கொண்டு திரிகிற மாதிரியிருந்தது. இன்றைக்கு எப்படியும் ஆளைப் பிடிச்சிர வேனும்.. .. .. ..இருட்டட்டும்.

காலையில் நித்திரைப்பாயை விட்டு எழுந்த கையோடு குளித்து முழுகி கோணேச கோயிலுக்குப் போக வேனும் என்று நேற்று இரவு படுக்கும் போதே தீர்மானித்திருந்தான். வந்த காரியம் விக்கினம் இல்லாமல் முடிய வேனும். தம்பியைக் கண்டு பிடித்து கனடாவுக்கு கூட்டிப் போக வேனும். கோணேசப் பெருமானின் அருள் இல்லாமல் எதுவும் அசையாது. தம்பியைச் சாட்டாக வைத்து என்னை இங்கு இழுத்ததே அவர்தான். அவர் போட்ட முடிச்சை அவர்தான் அவிழ்க்க வேனும்.

பிந்திப் படுத்தும் வெள்ளனையோடு முழிப்பு வந்து விட்டது. சேவல் கூவட்டும் என பாயிலிருந்து எழும்பாமல் காத்திருந்தான். இரவு முழுக்க கூவிக்கூவி களைத்து விட்டதோ என்னவோ சேவல் கூவவில்லை. கிணற்றில் கப்பிச் சத்தம் வந்தது. சுந்தரத்திற்கு ஆறுமணிக்கு பஸ். சின்னம்மாவுக்கு இடியப்பம் அவிக்கும் வேலையிருக்கிறது.

செல்வம் எழுந்து குசினித் தாழ்வாரத்துக் கட்டில் குந்தினான். தெளிந்த வானத்தைப் பார்த்தான். காலையில் எழுந்தவுடன் கொஞ்ச நேரத்துக்கு அவனுக்கு ஒன்றும் ஓடாது. ஐஞ்சு பத்து நிமிசம் எங்கேயோ ஊடுருவி முட்டு முட்டாய் குந்தியிருப்பது சின்னப்பிள்ளையிலிருந்தே பழகிவிட்டது. அது வெட்டியாய் போகும் பொழுதெனத் தெரிந்தாலும் அவனால் எழும்ப முடிவதில்லை.

‘வந்த அலுப்புக்கு கொஞ்சம் படுத்திரன் தம்பி. என்ன அவசரமென்டு இப்ப எழும்பினனி ‘

அவன் எதுவும் சொல்லாமல் சின்னம்மா நிறைத்து வைத்த தண்ணீர் வாளியை குசினிக்குள் கொண்டு போய் வைத்தான்.

‘இடியப்பம் கட்டி வைச்சிருக்கிறன். முகத்தை அலம்பீற்று கொண்டே குடுத்திற்று வந்திரன் தம்பி ‘

செல்வம் பல் தீட்டியபடியே கிணற்றை எட்டிப் பார்த்தான். மாரி மழையோடு நிலத்தை மறைத்து உயர்ந்த நீர்மட்டம். கப்பியில்லாமல கையால் மொண்டு அள்ளலாம்.

‘டேய் உனக்கு காவாலிப் பொடியளோட குண்டடி மெத்திப் போச்சு. இனி எப்பிடி குண்டடிக்கப் போறாய் என்டு பாக்கிறன். ‘

ஒழுங்கைப் பொடியளோடு குண்டடித்து சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருந்த குண்டுப் புதையலை போத்தலோடு கிணற்றுக்குள் அம்மா கவிழ்த்தது, தண்ணீரில் படமாக ஓடியது.

இன்னும் அந்த சுவீற்றிக் குண்டுகள் உள்ளதானே இருக்கும்!

அவன் முகம் கழுவி முடிப்பதற்குள் தெருக்கதவு திறக்கும் சத்தம் கேட்டது. சுந்தரந்தான். புறப்பட ஆயத்தம்.

‘என்ன சுந்தரம் நுளம்புக்கடி எப்பிடி ? ‘

‘நம்ம பக்கத்தில இல்லாத கொசுவா சார் ? ஆளையே தூக்கிட்டுப் போயிரும்.. .. .. .. விரல்களால் பருமன் காட்டினான். ‘

உள்ளே போகத் திரும்பியவனை நிற்பாட்டினான் சுந்தரம்.

‘சார் ஒரு நிமிசம் ‘

‘என்ன சுந்தரம் ‘

‘இங்க வந்தா கோயில் வாசல்ல படுத்து எழும்பிட்டு போறவன் நான். என்னையும் பொருட்டா மதிச்சு கூட்டி வந்து ஒரு சொந்தக்காரனைப் போல ‘

‘இதென்ன சுந்தரம். இதைப் போய் பெரிசா ‘

‘அப்படியில்லீங்க சார் ‘

‘பிறகும் சாரா ‘

‘என்னை அப்பிடியே சொல்ல விடுங்க சார். அதுதான் எனக்கு இயல்பா வருது. உங்க பேரைச் சொல்ல என்னால முடியலை ‘

நன்றியால் நிறைந்து விட்ட அவன் விழிகளைப் பார்க்க செல்வத்திற்கு சங்கடமாயிருந்தது. சின்னம்மாவைக் கூப்பிடும் சாட்டில் நழுவப் பார்த்தான்.

‘பொறுங்க சார் ஒரு விசயம்.. .. .. .. உங்க தம்பி! ‘

சுந்தரத்துக்கு ஆர் சொன்னது! அப்பா சொன்னாரா ? அல்லது வசந்தியின் வீட்டில்! ஒரு இரவு மட்டும் தங்கிவிட்டுப் போகும் வழிப்போக்கனிடம் இந்த விசயத்தைச் சொல்வதால் என்ன ஆகப் போகிறது, தேவையில்லாமல் பகிரங்கப்படுத்துவதைத் தவிர.

செல்வத்தின் மனஓட்டத்தை கணித்துக் கொண்டவன் போல் பேசினான் சுந்தரம்.

‘நேத்து ராத்திரி உங்க மாமா கூட நீங்க பேசினது எனக்கும் கேட்டுது. சரியா புரிஞ்சிக்க முடியலை. சொல்லக்கூடிய விசயமின்னா நீங்களே சொல்லியிருப்பீங்க. ராத்திரிக்கு மட்டும் தங்க வந்தவன் நான். இருந்தாலும் மனங் கேக்கலைங்க. இஞ்சினியர் சார்கிட்டை கேட்டேன். அவங்களும் முதல்ல சொல்ல விரும்பலை. என்ன தோணிச்சோ பின்னால சொல்லீட்டாங்க. சார் நான் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கேன். என்ன வேனுன்னாலும் செய்யிறதுக்குத் தயாரா இருக்கேன் சார் ‘

விடிகாலைப் பொழுதின் இயல்பான தெளிந்த உள்ளத்தோடு அவன் பேசினான். ஆனால் இந்த விசயத்தில் சுந்தரம் பெரிதாக என்ன செய்து விட முடியும். தோட்டக்காட்டானுக்கு இங்கென்ன வேலை என்று பிடித்துக் கொண்டு போய் இலேசாக மாட்டிவிடுவார்கள்.

‘சுந்தரம் நீங்க இவ்வளவு சொன்னதே எனக்குப் பெரிய ஆறுதல். முள்ளில சேலை விழுந்திட்டுது. நிதானமாத்தான் எடுக்க வேனும். நீங்க உங்க மச்சானை பாத்திட்டு வாங்க. ஆறுதலா இதைப் பத்தி பேசுவோம். ‘

‘சார் பன்குளத்துப் பக்கம் பையன்மாரைக் கண்டிருக்கேன். பேசினதில்லை. இந்த முறை விசாரிச்சுப் பாக்கிறேன். ‘

சின்னம்மா இடியப்பப் பார்சலோடு வந்தாள்.

‘என்னத்துக்கங்கம்மா உங்களுக்கு வீண் சிரமம். நான் வழியோட போறவன். எனக்காக நீங்க கட்டுச் சாப்பாடெல்லாம் கட்டிட்டு ‘

விட்டால் சின்னம்மாவிடமும் ஒரு சுற்று உபகாரப்பாட்டு பாடிவிடுவான் போலிருந்தது. அத்தனை நன்றி உணர்வில் வழிந்தான் சுந்தரம். சிலர் சிறிய உதவியையும் மலையாகப் பார்ப்பார்கள். முகத்துக்கு நேரே காட்டியும் விடுவார்கள். ஏற்றுக் கொள்வதில்தான் சங்கடம். நன்றிகள் திகட்டுவதற்குள் புறப்பட்டான் சுந்தரம்.

தலையில் நல்லெண்ணையை சளிக்கச் சளிக்க தேய்த்து ஊறவிட்டுக் கொண்டு வந்தான் செல்வம்.

‘சின்னம்மா தலை கடிக்குது. சீயக்காய் அரப்பு இருக்கா ? ‘

‘இந்த பனிக்குள்ள முழுகப் போறியோ. கொஞ்சம் வெய்யில் எறிக்கட்டன். ‘

‘ஒருக்கா கோணேசரிட்ட ஓடிப்போயிற்று வந்திர்றன். ‘

‘அங்க ஒருசனமும் போறேல்லை. எல்லாம் காடுபத்திக் கிடக்காம். பொறு அழுகல் தேசிக்காய் அடுப்பில வைச்சிற்று வாறன் ‘

கொஞ்ச நேரத்தில் கிணற்றடிக்கு சீயக்காயோடு வந்தாள் சின்னம்மா.

‘இரனை தேய்ச்சு விடுறன் ‘

‘என்னட்டை தாங்க சின்னம்மா ‘

அதற்குள் தலையில் அழுகல் தேசிக்காயைப் புளிந்து விட்டாள் சின்னம்மா. விறாண்டித் தேய்க்கத் தேய்க்கத் தலை புண்ணாய் எரிந்தது.

‘இஞ்ச பாரன் சொடுகை. தலைக்கு என்ன வைச்சு முழுகிறனி. கண்ணை மூடு. ‘

சின்னம்மா முதுகுப்பக்கமாய் நின்று தலை தேய்த்தாள். சுடுதண்ணியால் கழுவி ஊத்தை கழன்றபின் சுகமாய் இருந்தது. அம்மாவும் இப்படித்தான். திட்டித் திட்டி தலை தேய்த்து விடுவாள். சனிக்கிழமைகளில் அப்பா மாறி அவன் மாறி தங்கச்சி மாறி கிணற்றடியே அல்லோல கல்லோலப்படும். ஆரும் தப்ப முடியாது. அன்றைக்கு பத்தியக்கறிதான். அம்மியில் சுக்கு மிளகு சீரகம் பூடு எல்லாம் அளவாகப் போட்டு சரக்கு அரைத்து பாரைமீன் குழம்பு வைப்பாள். சாப்பிடச் சாப்பிட சரக்கின் உறைப்புக்கு மூக்கால் ஓடும்.

‘விடுங்க சின்னம்மா போதும் ‘

‘பொறு பொறு இந்தா முடிஞ்சுது ‘

முழுகி துவட்டிய பின் தலை பட்டுப் போல இருந்தது ரோஜா இதழ்களைத் தொட்டதைப் போல். சின்னம்மா மிளகு ரசத்தோடு இடியப்பம் எடுத்து வைத்தாள்.

‘சின்னம்மா கோயிலுக்குப் போயிற்று வந்து சாப்பிடுறன் ‘

‘தம்பி கோட்டை வாசல்ல ஐடா கேட்பான். கொண்டு போக மறந்திராதை ‘

‘நான் பாஸ்போட் கொண்டு போறன் சின்னம்மா ‘

(தொடரும்)

karulsubramaniam@yahoo.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்