வேலை

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர்.


இனிமையான மாலைப்பொழுது . வேலை முடிந்த களைப்பையும் மீறி சண்முகத்துக்கு உற்சாகத்தை ஊட்டவே செய்கிறது. குறித்த நேரத்திற்குக் கிளம்பி விடமுடிந்ததும் கூட,அவனுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அடுத்த வாரத்திலிருந்து இதை அனுபவிக்க முடியாமல் போகலாம்.ஏனென்றால், என்றோ எதிர் பார்த்தக் காத்திருந்த வேலைகள், எதிர் பார்க்காத இந்த வேளையில், வந்தது குவிந்துள்ளன. ஒரு வருடத்திற்கேனும் வேலை நிச்சயமாகி விட்டது குறித்தும் மனம் பெரும் நிம்மதியடைந்தது.

வேலைகளை முடித்துக் கொடுக்கும் வரை ஒரு வருடத்திற்கேனும் ஒரு உதவிப்பொறியாளர் தேவை.தக்க ஆளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவன் மேல் முழு நம்பிக்கை வைத்துத் அவனிடம் ஒப்படைத்திருந்தது நிறுவனம்.

அவன் நிறுவனத்துக்கு வேலைகள் கிடைத்தால், ஆட்குறைப்பு நடக்காதே.சண்முகத்துக்குத் தன் வேலை போகுமே என்று கவலை ஒரு நாளும் இருந்தது இல்லை.தனது பத்து வருடக் கடுமையான உழைப்புக்கு, நிச்சயம் மேலிடம் மதிப்புக் கொடுக்கும் என்று அவன் அறிந்தே இருந்தான்.மற்றவர்கள், அதிலும் துளியும் எதிர் பார்க்காமல் வேலை இழப்பவரைப் பார்த்தால், சண்முகத்துக்குப் பரிதாபமாகவும், தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே, என்றும் இருக்கும். இப்போது ஒருவருக்கு உதவும் அருமையான வாய்ப்பு அவனுக்கு வந்திருக்கிறது.

வேலை இழந்து தவிக்கும் தன் நண்பன் தீபனின் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரை சண்முகம் அறிவான். பார்த்துப் பேசியதில்லை. ஆனால், தீபனின் மூலம் அறிந்திருந்தான்.அவருடைய படிப்பும் அனுபவமும் இந்த வேலைக்குச் சாலப்பொருந்தும் என்று அவன் மனம் கணக்கிட்டது.யோசித்தவாறே வீட்டுக்கதவைத் திறந்ததும், சிறிய மகள் அனு, அப்பாவுக்காகவே காத்திருந்தது போல துள்ளி ஓடி வந்து, ‘அப்பா, அப்பா இன்னிக்கி என்ன நடந்திச்சி தெரியுமா க்ளாஸ்ல. மிஸஸ் கோவுக்கு ஒரே கோவம். பாவம்ப்பா,அலெக்ஸ் இல்ல அவனோட புத்தகத்த தூக்கி வீசிட்டாங்க. அது போயி அவனோட கண்ணுல பட்டுடிச்சி.வலிக்குதுன்னு அவன் கத்தி அழுதான். டாச்சருக்கு பயமாயிடிச்சி.கண்ணுல ஏது காயமிருக்கான்னு பார்த்தாங்க.நல்ல வேளை ஒண்ணுமில்ல.கண்ண மூடிப்படுத்திருந்தான்….., ‘ விடாமல், படுசுவாரஸ்யமாய் கூற ஆரம்பிக்கிறாள்.

‘சரி சரி.அப்பா குளிச்சி சாப்புடும் போது பேசிக்கலாம். ம் நேத்தி நீ பாடம் செய்யும் போது க்ளாஸ்ல பேசி, விடாம ஏச்சு வாங்கினத மட்டும் சொல்ல மாட்டியே, சரியான ஆளுடி நீ ‘ மனைவி மங்களம் வந்து கூறியதும், அசட்டுச்சிரிப்பு சிரித்தவாரே, அனு தன் வீட்டுப்பாடத்தைத் தொடரச்சென்று விடுகிறாள்.

‘ஏன் மங்களம், வெரட்டிவுடுற. பேசட்டுமே. ஆமா,. . நம்ம அனு வகுப்புல ரொம்ப பேசுதா என்ன ? அவுங்க வகுப்பாசிரியருக்கு என்னாச்சி ? ஏதாவது பிரச்சனையா என்ன ?,. பானுவுக்குக் கூட ரெண்டாவதுல அவுங்க தானே சொல்லிக்குடுத்தாங்க. ‘—தீவிரமாய்க் கேட்கிறான்.

‘ஆமா,ஆமா,ஸ்கூல்ல கூட, எல்லாரும் ஓரே மாதிரியா இதையேதான் சொல்லிக் கிட்டிருக்காங்க. இப்பல்லாம், அவுங்க ரொம்ப பொறுமையில்லாம இருக்காங்க. அந்த நந்தினியோட அம்மா இல்ல, அவுங்க கூட ‘அன்னிக்கி பள்ளி முதல்வர்கிட்டயே போயிடலாமானு பாக்கறேன் ‘ னுகிட்டிருந்தாங்க. இல்ல, வேற வகுப்பிலயாவது தன் பெண்ணைப் போடணும்னு கேக்கப் போறதா சொல்லி கிட்டிருந்தாங்க.நந்தினி,ஸ்கூலுக்குப்போக மாட்டேன்னு தினமும் காலைல அழுகையாம். என்னான்னு கேட்டா டாச்சரப் பார்த்தா பயமா இருக்குன்னு சொல்லுதாம். சும்மா என்னயே ஏசுறாங்கம்மான்னுதாம். ‘

‘நா கூட ஒரு வாட்டி பானு ரெண்டாவது படிக்கிறப்ப

பார்த்திருக்கேனே அவங்கள. ரொம்பஅமைதியா, தன்மையா பேசுவாங்களே. பானுவும் ஒரு முறை கூட அவங்க கிட்ட ஏச்சு வாங்கினதில்லல்ல ? ம் . … ஆனா சொல்ல முடியாது, வகுப்புல பசங்க என்ன செய்யிதுங்களோ. நாம டாச்சர மட்டும் குத்தம் சொல்லவும் முடியாது. ‘

‘இல்லங்க , உண்மையிலயே மாற்றம் இருக்குங்க. அவங்களுக்கு ஏதும் பிரச்சனையோன்னு நான் நினைக்கிறேன். ‘மங்களம் கூறிக்கொண்டே சமையலறைக்குச் சென்று விட, சண்முகம் குளிக்கச் சென்று விடுகிறான்.மிஸஸ் கோவுக்கு மனதளவில் பிரச்சனையோ இல்லை உடல் உபாதையோ,பாவம்,கிட்டத்தட்டநாற்பது பிள்ளைகளை சமாளிக்க வேண்டுமென்றால், அவரது பொறுமைக்கு எத்தனைச் சோதனைகள் வந்ததோ!ஆசிரியர்களும் மனிதர்கள் தானே.சகல விதமான பிரச்சனைகளும், அவர்களுக்கும் வருவது சாத்தியமே.எனினும்,ஏழு வயதுச் சிறார்கள் பயப்படும் அளவுக்கு அவர் நடப்பதுதான் சரியில்லை.பிள்ளைகளுக்குப் படிப்பிலும் பாடத்திலும் ஈடுபாடு குறையக் கூடும் என்பது ஒரு புறம் இருக்கட்டும், ஆசிரியரிடம் உள்ள அவர்களது பயம், ஆசிரியரை அன்புடனும் பண்புடனும் நடத்த விடாமல் அல்லவோ செய்து விடும்! ஆரோக்கியம் அற்ற சூழல் கூடஅமைந்து விடலாம். பாதிப்பு ஓரிரு சிறுவர்களுக்கு மட்டும் அல்லவே. யோசித்த வண்ணம் குளித்து முடிக்கிறான்.

ஒரு பிரச்சனையை பலகோணத்தில் ஆராய்வது ஒரு பழக்கமாகவே போய் விட்டது சண்முகத்துக்கு. ஆராய்வதோடு மற்றவர் பிரச்சனையைத் தன்னுடையது போல் பாவித்து தீர்வுகாண முயல்வதும் உண்டு.இதன் பலனாய் நல்ல பெயரும் கெட்ட பெயரும்,சமமாகவே சம்பாதித்திருந்தான் ,அவன்.

சாப்பிட மேசைக்கு வந்தவன், தனக்குப்பிடித்த இடியாப்பத்தைக் கண்டதும், ஒரு பிடி பிடிக்கும் எண்ணத்தில் உட்காருகிறான்.

‘கம்பெனிக்கு சில டெண்டர்கள் பாசாகி,சின்னச்சின்ன வேலைகள் சிலது வந்திருக்கு, மங்களம். ‘

‘பரவாயில்லையே.செய்ய வேலையே இல்லைன்னீங்க. இப்ப வேல வந்திடுச்சாக்கும். உங்களுக்கு ஒரு பெரிய கவல விட்டுச்சி. ‘

‘ம்.. .. ஆமா, ,அடுத்த வாரத்துலயிருந்து, நா வர கொஞ்சம் லேட்டாகும். ‘

‘ நீங்க லேட்டா வரதொண்ணும், புதுசில்லையே. இப்பத் தானே, ஒரு வருஷமா, அதுவும் வேலையில்லாததால நேரத்தொட வீட்டுக்கு வரீங்க. ‘

‘ம்,ம்….அப்பறம் மங்களம், வேலையில்லன்னு கம்பெனியில இருந்த ஆளையெல்லாம் நீக்கியாச்சு.இப்ப, வேலை வந்ததும் வேல செய்ய ஆளு பத்தல.நானும் கண்ணனுமே எவ்வளவு தான் செய்யிறது ?அதனால, பாஸ் எனக்கு உதவராப்போல ஒரு ஆள, ஒரு வருஷக் காண்டிராக்ட் பேசி, அப்பாயிண்ட் பண்ணிக்கச் சொல்லியிருகாரு.எப்பிடியும் ஒரு வாரத்துல, ஒருத்தருக்கு நானும் வேல வாங்கித் தருவேன். ‘

‘ஏங்க,ஏங்க, நம்ப பார்த்திபனுக்கு வேல போயி அஞ்சு மாசமாச்சில்ல.அவனுக்கும் உங்கள மாதிரியே பாய்லர்ஸ் ப்ளாண்ட் அனுபவமிருக்கே.பாவங்க, இன்னிக்கி கூட போன்ல பேசினான். வேலை கெடைக்கவே மாட்டேங்குதுக்கான்னு ஒரே பொலம்பல் ‘

‘ஆமா,ஆமா,ஒன் தம்பிக்கி வேலை போச்சின்னா, அதுக்கு அவனே தான் காரணம்.சும்மா சும்மா வேலைய மாத்திக்கிட்டிருந்தா, அதான் ஈஸியா வேலைலேர்ந்து தூக்கிட்டாங்க.அதான், அவம்பொண்டாட்டி நல்ல வேலைல இருக்கே.ஒருத்தருக்குக் கூட வேலையில்லாம தவிக்கற குடும்பத்துக்கு உதவணும் நா நினைக்கிறேன், மங்களம். ‘ சற்று அழுத்தமாகவே சொல்கிறான், சண்முகம்.

‘நீங்க எப்பயுமே இப்பிடித்தான்.நா சொல்லறதயா கேப்பீங்க. சரி, யாரும் சரியான ஆள் கிடைக்கலேனாலாவது தம்பிக்கி சிபாரிசு பண்ணுங்களேன்.அவனும் வேல தேடித் தேடிக் களச்சிட்டான். தெரியுமா ? ‘

‘ஆமா ஆமா தெரியாதா…..சம்பளமும் நல்லா வேணும்,பொஸிஷணும் வேணும்னு கிடைக்கிற வேலையையெல்லாம் உதறித்தள்ளுவான்.போன வாட்டி கூட, எவ்வளவோ நானும் சொன்னேன். ‘நேரமே சரியில்ல பார்த்திபா, இருக்கற நல்ல வேலைய மட்டும் விடாதே ‘ன்னு.தான் நினச்சாமாதிரியே மாறினான். இருக்கறத விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்பட்டா இப்பிடிதான். புதுக்கம்பெனியில ஒரு வருஷம் கூட

வேலை பார்க்கல. ஆட்குறைப்புன்னு வந்தா, அதிக வருஷம் வேல பார்த்தவங்கள விட, சமீபத்துல சேர்ந்தவங்க நீக்கப்பட தான் அதிக வாய்ப்பு இருக்கு. இது அவனுக்கும் தெரியும். இருந்தாலும்,குருட்டு தைரியம். பிள்ள குட்டின்னு ஆனாத் தான்அவனுக்கும் வேலையில்லாம இருக்கறது, எத்தனை கஷ்டம்னு தெரியும். ‘

‘ஆமா, உங்கள மாதிரியே எல்லாரும் இருப்பாங்களா ? வேலை விஷயத்துல பார்த்திபனை மட்டும் மறந்துடாதீங்க,என்ன ? ‘

‘ம்.. இரு, அவசரப்படாத. தீபனோட பக்கத்து வீட்டுக்காரர் ஒருத்தர், வேலைக்கி ட்ரைப்பண்றாராம்.சின்னச் சின்ன பிள்ளைங்க ரெண்டிருக்காம், பாவம். அவரை நான் பார்த்ததில்ல. தீபன் சொல்லித்தான், அவருக்கு நல்ல பாய்லர் எக்ஸ்பீரியன்ஸ் இருக்குன்னு தெரியும்.கூப்புட்டு பேசிப்பார்ப்பமேன்னு நினைக்கறேன் ‘

‘தமிழவங்களா ?அப்பிடியிருந்தா, எனக்கும் தெரிஞ்சிருக்குமே,யாருங்க அது ? ‘

‘இல்ல மங்களம்,சீனர் தான்.பேரு தெரியல. ‘

‘தமிழவங்க கூட இல்லயலா. அப்ப பார்த்திபனுக்கே வேலைய வாங்கிக் கொடுக்கலாம் இல்ல. என்ன…ங்க நீங்க, ‘

‘ஏன்,ஏன் யாராயிருந்தா என்ன ? ‘

‘அதுக்கில்ல, உங்க இடத்துல ஒரு சீனர் இருந்தா,தன்னோட இனத்தச் சேர்ந்தவங்களுக்கு வேல வாங்கிக் குடுப்பாரே தவிர, நம்ப ஆளுங்களுக்கு நிச்சயமா வாங்கித்தர மாட்டாரு.தெரியுமா ? ‘

‘ஏதோ ஒரு சிலரை வச்சி,மொத்தமாஅப்பிடிச் சொல்லாத நீ. எல்லா இனத்துலயும் நல்லவங்க,கெட்டவங்க இருக்கத் தான் செய்வாங்க. சிங்கப்பூருல இருந்துகிட்டு, இதெல்லாம் பார்த்தா முடியாதும்மா.வேலை தெரியுமான்னு தான் கம்பெனில பார்ப்பாங்க, நான் தான்….சரி ,இப்ப இருக்கற நெருக்கடியில ,அதிகத் தேவை யாருக்குனு பார்த்து, சிபாரிசு செஞ்சு உதவலாமேன்னு நினைக்கறேன். ‘

அது பிச்சையே ஆனாலும் பாத்திரம் அறிந்து இட வேண்டும் என்பதில்

சண்முகத்துக்கு எப்போதுமே திடமான நம்பிக்கை உண்டு! நெருக்கடி நேரத்தில், ஓரளவு நல்ல சம்பளத்தில் ஒருவருக்கு வேலை கிடைப்பது என்பது அரிதாகி இருக்கும் வேளையில், இந்த ஒரு வருட வேலை எல்லா விதத்திலும் தகுதியுள்ள ஆளுக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் குறியாய் இருந்தான் சண்முகம்.

‘தீபனோட அடுத்த வீட்டுக்காரரைப் பத்தித் தெரிஞ்சதுனால, இப்படி யோசிக்கிறீங்க.அவரைப் பத்தி தெரியலன்னா பார்த்திபனுக்குத்தானே இந்த வேலய வாங்கி குடுப்பீங்க. ‘

‘ஆமா……கஷ்டப்படறாங்கனு காதுல விழறப்ப உதவ நினைக்கறது தப்பா ? ‘

‘உங்களோட நா பேசி ஜெயிக்க முடியுமா, எனக்கு சமையல் வேல இருக்கு ஆள விடுங்க சாமி, நா போறேன். ‘

‘ஹஹ்ஹா,……யாரு ஜெயிக்கிறது யாரு தோக்கறதுன்னு பார்க்க, நாம என்ன பட்டிமன்றமா நடத்தறோம் ?, ‘மங்களம் மேசையை சுத்தப்படுத்தப் போவதையே பார்த்த வண்ணம், சண்முகம் சிரிப்பை அடக்க மாட்டாமல் கேட்கிறான்.

மூத்த மகள் பானு கணிதத்தில் கேட்ட சந்தேகத்தை தெளியவைத்து,அனுவுக்கு படத்திற்கு வண்ணம் தீட்டவும் உதவிவிட்டு ,செய்தித் தாளைக் கையில் எடுக்கிறான். நாளிதழைத் திறந்தால்,வர வர வேலை இழந்தோரின் அவலங்கள் தான் அதிகமாய் வருகின்றன.சில உற்சாகமூட்டுபவையாக இருப்பதை, மறுக்க இயலாது.

தொலை பேசி கிணுகிணுக்க, தாளிலிருந்து கண்களை அகற்றாமலேயே ஒலிவாங்கியைக் கையில் எடுத்த சண்முகத்தின் முகம்,திடாரெனப் பிரகாசமடைகிறது. அவன் பேச நினைத்த நேரத்தில் அழைத்த ஆருயிர் நண்பன் தீபன்,தன் வீட்டிற்கு வரமுடியுமா என்று அவனை கேட்கிறான்.வேலை ஒன்றும் இல்லாததால்,உடனே ஒப்புக்கொள்கிறான்.

‘மங்களம், தீபன் ஏதோ பேசணுமாம்.ஒரு நடை அவுங்க வீட்டு வரைக்கும் போயிட்டு வர்றேன். ரொம்ப நேரமாகாது.சாவி எடுத்துகிட்டேன். நீங்கள் எல்லோரும் படுத்துக்கங்க. என்ன, ம்.., வரட்டா, ‘கேட்டுக் கோண்டே வாசலை அடைந்து,வெளியேறி விடுகிறான்.

மெள்ள நடந்தாலும் கூட, பத்து நிமிட நடை தான். வேகமாய் நடக்க மட்டுமே தெரிந்த சண்முகம், ஆறே நிமிடங்களில், தீபன் வீட்டு அழைப்பு மணியை அழுத்துகிறான்.

கதவைத்திறந்த தீபனுக்கு ஒரே ஆச்சரியம்!

‘என்னடா, பறந்து கிறந்து வந்தியா என்ன ? ஃபோன வைச்சி கூட பத்து நிமிஷமாகல அதுக்குள்ள இங்க வந்து நிக்கிற, ம் ? ‘

‘இல்லடா, உங்கிட்ட நானும் பேசவேண்டியது இருந்திச்சி.அதனால, நீ கூப்புட்டதும், கிளம்பிட்டேன், ஆமா,என்ன வீட்டுல யாருமே இல்லயா, ஒரே அமைதியா இருக்கு ?. ‘

‘எல்லாரும் கோவிலுக்குப் போயிருக்காங்க. வா, வா. நாம சாவகாசமா பேசி ரொம்ப நாளாச்சில்ல ? ‘

‘உங்க பக்கத்து வீட்டுக்காரருக்கு வேலை வேணும்னியே, எங்க டிபார்ட்மெண்ட் லயே எனக்கு உதவியா ஒரு ஆள் வேணும்.அவரைப் பார்த்தாச் சொல்றியா. ‘சீவ ீ ‘ ஒண்ணு எங்கிட்ட கொடுத்தா நானே செய்ய வேண்டியதை செஞ்சிடுவேன். ‘

‘நேத்திக்கி அவங்க வீட்டுல ஒரே சத்தம்பா.சண்டையா என்னன்னு

தெரியல.சின்னப்பையனுக்கு ஒடம்பு சரியில்லன்னு நினைக்கிறேன்.போன வாரம் என்னாச்சி தெரியுமா, பகல்ல, அவரு தான் பாட்டுக்கு தூங்கிட்டாரு போல இருக்கு.பெரிய பையனுக்கு, என்ன ரெண்டர மூணு வயசுதானிருக்கும்,சமையலறை சன்னல் பக்கத்துல போயி, ஸ்டூல்ல ஏறி கதவைத் திறக்கப் போன நேரம் தெய்வாதீனமா கவனிச்சிட்டாரு. பையனுக்கு ஒண்ணும் ஆகாம பொழச்சிக்கிட்டான். விழுந்திருந்தா….அப்பா! நினைக்கவே நடுக்கமா இருக்கு. ‘

‘மெய்ட் (பணிப்பெண்) என்னா செஞ்சிக் கிட்டிருந்துச்சி ?கவனிக்க வேணாம் ? ‘

‘மெய்ட்டெல்லாம் நிறுத்தி ரொம்ப நாளாவுதுடா.சமாளிக்க

வேண்டாமா. லெவி,சம்பளம்னு, எப்பிடி சமாளிப்பாங்க சொல்லு ? நிறுத்திட்டாங்க.

அவுரும் வேலைக்கிப் போறதில்லையா, பிள்ளைங்கள தானே பார்த்துக்கறாரு. பிள்ளைங்கள பார்த்துக்கக் கூட உதவியில்ல. டாக்டர் அது இதுன்னு வேற ஒரே செலவு போலயிருக்கு. பாவம்டா, குடும்பமே அவரோட வேலை போனதில தவிக்குது. அவரோட மனைவி டாச்சரா இருக்காங்க.அந்த சம்பளத்துல தான் குடும்பம் இந்த அளவாவது ஓடுது. அதான் அனு,பானு ஸ்கூல்ல தான்டா வேலையில இருக்காங்க. உன்னோட பசங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். ‘

‘அது சரி, அவரு பேரென்ன ? ‘

‘பிலிப் கோ டா. நாளைக்கி நா அவரோட பேசி, சீவீய எடுத்துக்கிட்டு உன்னை வந்து ஆஃபீஸ்ல பாக்கச்சொல்றேடா. ‘

‘இரு, இரு கோ வா.அப்ப, என்னோட சின்னப் பொண்ணு வகுப்பாசிரியரா இருக்குமோ. முன்னயெல்லாம் நல்ல அமைதியா இருப்பாங்க. இப்ப ஒரேயடியா கோபப்படறாங்கன்னு, இன்னிக்கி தான் சாய்ந்தரம் வீட்டுல பேசிக்கிட்டிருந்தோம். ‘

‘இருக்கலாம், நானும் ரெண்டாம் வகுப்புல இருக்காங்களான்னு கேட்டுச் சொல்றேனே. உண்மையாவே, மகிழ்ச்சியான அந்தக் குடும்பம், பணத்தேவை, புருஷனுக்கு வேலையில்லாத மன உளைச்சல்னு, மகிழ்ச்சியை இழந்துடுமோன்னு பயப்படற நிலையிலதான் இருக்கு. ரொம்பப் பாவமா இருக்குடா, ‘அடுத்த வீட்டுக்காரருக்காகப் பரிதாபப்படுகிறான், தீபன்

‘ நான் நினைக்கிற மாதிரி நடந்தா ஒரு குடும்பத்துக்கு உதவினமாதிரி இருக்கும். ஆனா, ஒரு வருஷ காண்டிராக்ட் தான்னு, எதுக்கும் சொல்லிடு. ‘

வீட்டினுள் அமர்ந்து, போன கதை, வந்த கதை என்று அவரவர் அலுவலகவிஷயங்கள் பேசித்தீர்க்கிறார்கள் இருவரும்.

வீடு திரும்பி கதவைத்திறந்ததுமே, வீட்டில் நிலவிய அமைதியும் அந்தகாரமும் அனைவரும் உறங்கிவிட்டதை சண்முகத்துக்கு உணர்த்தியது.சத்தம் போடாமல் ஒரு டம்ளர் பச்சைத் தண்ணீர் பருகி விட்டுப் படுக்கிறான்.

மறு தினம் காலையிலேயே பசியாறிக் கொண்டிருந்த சண்முகத்திடம்,மங்களம் முன் தினத்தின் தொடர்ச்சியாக,

‘ஏங்க, பார்த்திபனுக்கு வேலை கிடைச்சுடும்னு சொல்லட்டா ? ‘

‘இரு இரு,அவசரப்படாத மங்களம்,தீபன் வீட்டுப் பக்கத்து வீட்டுக்காரர பாக்க முடியல. இன்னிக்கி, நேர வேலை எடத்துக்கே வருவாருன்னு நினைக்கிறேன். நாளைக்கி சாயந்தரம் சொல்றேனே. ‘ ஆவலுடன் கேட்கும் மனைவியை பார்த்தவண்ணம்கூறுகிறான், சண்முகம்.

‘ஏங்க… இப்பிடி செய்யறீங்க.தக்க நேரத்துல தம்பிக்கு உதவினா, அவனும் நாளைக்கி நமக்கு ஒண்ணுன்னா செய்வானில்ல ? யாருக்கோ செய்யலாம்னா,என்னோட தம்பிக்கி உதவி செய்யக்கூடாதா ? ‘

‘நீ கோபத்துல பேசுற, நிதானமா யோசிச்சா உனக்கே புரியும். அந்த பிலிஃப் கோ நம்ம அனுவோட ஃபாம் டாச்சரோட வீட்டுக்காரர் தான்னு நான் நினைக்கிறேன். குடும்பத்துல பிரச்சனை, பிள்ளைங்கள பார்த்துக்க மெய்ட் இல்லன்னு சமாளிக்க முடியாமதான் மிஸிஸ் கோ வோட அமைதி போச்சின்னும் நா நினைக்கிறேன். ‘

‘அது அவங்க வீட்டுக்காரர்னே வச்சிப்போம்.ம்..அவங்களுக்கு தான் வேலை இருக்கேங்க. நீங்க என்ன சொன்னீங்க நேத்திக்கி, ‘ஒருத்தருக்குக் கூட வேலை இல்லாத குடும்பமா இருந்தா உதவலாம்னு நினைக்கிறேன் ‘னீங்க இல்லையா ? ‘

‘ஆமா, இப்ப அதுக்கு என்ன ? ‘

‘அப்ப அந்த பிலிப்புக்கு வேலை குடுக்கலாம்னா,ஏன் பார்த்திபனுக்குக் குடுக்ககூடாது ? ‘ கோபத்தில் வெடிக்கிறாள்.

‘அட என்னம்மா நீ, முடிவானாமாதிரி பேசறியே ? அவங்களுக்குச் சின்னச் சின்ன பிள்ளைங்களாம்மா, செலவுகளை சமாளிக்க ரொம்ப கஷ்டப் படறாங்களாம். ‘

‘சரி, இப்ப அவங்க குடும்பத்தப் பத்தி தெரியவே, உதவலாம்னு நினைக்கிறீங்க, இல்லேன்னா, என் தம்பிக்கித்தானே வேலை கெடைக்க ஏற்பாடு செஞ்சிருப்பீங்க ? ‘

‘ ஆமான்னு வச்சிக்கயேன். காதுல விழுந்தா, உதவ நினைக்கிறது தப்பா ? ‘

வாய்ச்சண்டை வரக்கூடிய சாத்தியக்கூறுகள் சண்முகத்தை எச்சரித்தன.மங்களம் கோபத்தில் இருப்பது, அவள் விருட்டென்று இடத்தை விட்டு மறைந்ததிலேயே, சண்முகத்துக்குத் துல்லியமாய்த் தெரிந்தது.பேச்சை வளர்க்காமல், தானும் கிளம்பிச்சென்று விடுகிறான்.

எம் ஆர் டா யில் தினமும் சந்திக்கும் பரிச்சயமான முகங்கள் தந்த புன்முறுவல்களை ஏற்று, பதிலுக்குப் புன்முறுவல் பூத்தவண்ணம் பயணித்தாலும், மனம் மட்டும்,மங்களம் காலையில் கோபப்படத் தான் காரணமானதை எண்ணிய படி இருந்தது.

மங்களத்துக்குத் தான், தன் கண்வன்,தன் குழந்தைகள்,தன் சுற்றத்தார் என்பது தவிர வேறெதிலும் அதிக அக்கறைேைா கவனமோ என்றுமே இருந்தது இல்லை. இருப்பினும் கூட சுபாவத்திலேயே நல்லவள் தான். தனக்கு ஒரு பிரதி பலனும் இல்லாத ஒரு உதவியை மற்றவர்க்கு செய்ய அவளால் இயலாது. இதனாலேயே, அவளுக்கு நண்பர்கள் மிகமிகக் குறைவு. வீட்டிலேயே இருப்பதுவும், இதற்கு ஒரு காரணமோ என்று பல முறை அவனுக்குத் தோன்றும். வேலைக்குச் செல்வதை மங்களம் விரும்பியதில்லை.அவனும் வற்புறுத்தியதில்லை.

அனுவுடைய டாச்சர் குடும்பத்திற்கு உதவினால், அந்த டாச்சர் மன அமைதி பெறுவார். அது வகுப்பு மாணவர்களுக்கு, அனுவையும் சேர்த்து உதவியதாகும். மறைமுகமான நன்மை, நமக்கும் உண்டு என்று அவளைச் சமாதானம் செய்து விடலாம். பிலிஃப் டாச்சரின் கணவராய் இருந்தால்!

மக்களில் பெரும்பாலும், பலனை எதிர் பார்த்துத் தான் பிறர்க்கு உதவுகிறார்கள். இதைக் குற்றம் என்று நிச்சயம் கூற முடியாது. சாமர்த்தியம் என்றும் கூறுவது கடினமே. புத்திசாலித்தனம் என்று வேண்டுமால் கூறலாம்.போட்டிகள் மிகுந்த அதி வேகமான இவ்வுலகில் அத்தகைய புத்திசாலித்தனம் கூடத் தேவையாகத்தான் இருக்கிறது.

தான், தனது என்று மட்டுமே வாழ்ந்தால் மனித நேயம் அரிதாகி விடும் அபாயம் உண்டே ?! இதைச் சொன்னால் மங்களம், ‘ மனித நேயத்தைக் கட்டிக்காக்க, வளர்க்க, உங்கள் ஒருவரால் மட்டும் முடியுமா ? அதை நீங்கள் மட்டும் தான் செய்யவேண்டுமா ? ‘ என்பாள்.

இப்படியே போனால் பூனைக்கு மணியை யார் தான் கட்டுவதாம் ? சிறு துளி பெருவெள்ளமல்லவா! சண்முகம் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும், கூட்டத்திற்குள் புகுந்து வெளியே வந்து அலுவலகம் நோக்கி நடக்கிறான்.

நுழையும் போதே, தன்னைச் சந்திக்க யாரோ காத்திருப்பதை அறிந்து, போய் பார்த்தால், பிலிஃப் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு மிகவும் ஆர்வமாய் தன் வேலை அனுபவத்தைப்பற்றி கூறுகிறார்.தனக்கும் முன்னால் வந்து அமர்ந்திருந்த பிலிஃப்பின் ஈடுபாடு, சண்முகத்திற்கு ஒரு நல்ல அபிப்பிராயத்தைக் கொடுக்கிறது. நினைத்ததை விட வேலைகள் சீக்கிரமே முடிய, பிலிஃப் வேலையில் அமர்த்தப் பட்டார்.

ஒரு வாரத்தில் வேலையில் சேர்ந்து விடுவதாய்க் கூறிவிட்டு,சண்முகத்துக்கு பல முறை நன்றி கூறிவிட்டுக் கிளம்பிச் சென்று விடுகிறார்.

உதவிக்குப் பொருத்தமான ஆள் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி ஒரு புறம், ஒரு குடும்பத்திற்கு உதவிய திருப்தி ஒரு புறம் என்று ஆரம்பித்த சண்முகத்தின் அலுவலக நேரம் இனிமையாகவே முடிந்தது. வீடு திரும்பும் போது தான், தற்காலிகமாக நினைவில் இல்லாதிருந்த மங்களம் நினைவுக்கு வந்தாள்.தம்பிக்கு வேலையைக் கொடுக்காததில் அவளுக்கு பயங்கர கோபம். அனுவுடைய டாச்சரா என்றே தெரியாது; அவளைச் சமாளிப்பது எப்படி என்று யோசிக்கிறான் சண்முகம். சரி எப்படியும் ஒரிரு நாட்களில் கோபம் தணிந்து சரியாகிவிடுவாள், என்று குழம்பிய மனதுக்குச் சமாதானம் சொல்கிறான். வீட்டில் எதிர்பாராத விதமாக தீபன் தனக்காகக் காத்திருப்பதைப் பார்த்ததும் ,

‘என்னடா அதிசயமா இருக்கு, இந்நேரத்துல, அதுவும் எங்க வீட்டுல,ம்.. ? ‘

‘வேல முடிஞ்சு நேரா வறேன்.பிலிஃப் எங்க ஆபீசுக்கே வந்து பேசினாரு.அவருக்கு ஒரே சந்தோஷம்.நன்றி சொல்லக் கூட தெரியாம உணர்ச்சி வசப் படறாரு.ரொம்ப நன்றிடா, ‘நண்பனின் தோளைத் தட்டிக் கொண்டே சொல்கிறான்.

‘ நீ எதுக்குடா, நன்றியெல்லாம் சொல்ற. ஆமா, காபி குடிச்சியா ? இருந்து சாப்புட்டுப் போடா, ‘

‘இல்லடா, இன்னொரு நாளைக்கி வரண்டா.பிலிஃபோட மனைவி டூ சீ செக்ஷன்லதான் ஃபாம் டாச்சராம் ‘

நினைத்தது போலவே மிஸிஸ் கோ வுக்கு பிரச்சனை ஆரம்பித்து வளர்ந்திருக்கிறது.அவருடைய வகுப்புப் பிள்ளைகளின் எத்தனை பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிய வாய்ப்புள்ளது. பொதுப்படையாக, ஆசிரியரைக் குறை கூறித் தானே திரிவர்!அவர்களுக்கு ஆசிரியரின் மாற்றங்களுக்கான காரணங்களை ஆராய வேண்டிய அவசியல்லையே. ஆனால், அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை

‘அப்ப. . அனுவோட டாச்சரேதான். ஆனா ,நீ போயி, அனு அவங்க வகுப்புல படிக்கறதப் பத்தியெல்லாம் அவங்க கிட்ட சொல்லாதடா.செஞ்ச உதவிக்கி தப்பான அர்த்தம் வந்துடும். ‘

உள்நோக்கமே இல்லாமல் செய்த உதவிகளுக்குப் பல முறை பல அர்த்தங்கள் கற்பிக்கப் பட்டு கெட்ட பெயர் வாங்கிய அனுபவங்கள் சண்முகத்தை அப்படிப் பேச வைக்கின்றன.

‘உன்னப் பத்தி எனக்குத் தெரியாதா. நா சொல்லமாட்டேண்டா. இன்னிக்கே அவங்க பிள்ளைகளை பார்த்துக்க மெய்ட் தேட ஆரம்பிச்சிட்டாங்க. உத்தியோகம் புருஷச லட்சணம்னுவாங்க. எல்லா இனத்துலயும் இருக்கும் போல இருக்கு. இன்னிக்கி அவரோட மொகமே மாறிடிச்சி. சந்தோஷத்துல ஒரு களையே வந்துடிச்சிடா. ‘

‘டேய், இத இத்தோட விட்டுடு. ஏதோ பெரிசா நா சாதிச்சா மாதிரி எல்லார் கிட்டயும் போய்ச் சொல்லாத. சின்ன விஷயம் தானே. ஏதோ நம்மால முடிஞ்சது செய்வோமே. ‘

வலது கை செய்யும் உதவி இடது கைக்குத் தெரிந்தாலே ஆபாசம் என்று நினைப்பவன், சண்முகம்.

‘சரி, நா வரேன், அப்பறம் பார்க்கலாம். ‘

‘ஏண்டா இன்னிக்கி இங்க தான் சாப்புடேன். ‘

‘இன்னொரு நாளைக்கி வரேன்டா.பார்க்கலாமா.பானு, அனு அங்கிள் போயிட்டு வறேன் என்ன,வரேன் அண்ணி. ‘

தீபன் கிளம்பியதும், மங்களம் ஒரு பார்வை பார்த்து விட்டு பேசாமல்,காபியைக் கையில் கொடுத்துவிட்டுச் சென்று விடுகிறாள்.கோபம் குறையவில்லை என்று சண்முகத்திற்குத் தெரிந்தது.

‘மங்களம், இந்த பிலிஃப்புக்கு வேலை கொடுத்ததுனால அவங்க குடும்பத்து பிரச்சனை எல்லாம் நீங்கிடும். அந்த ஆசிரியருக்கு மனதளவுல மகிழ்ச்சியும் மாற்றமும் வந்தா, ஒரு வகுப்பு மாணவர்கள் எல்லோரும் பயனடைவாங்க. யோசிச்சுப்பாரு. நீ வேணாப் பாரேன். அந்த டாச்சர் சீக்கிரமே முன்ன மாதிரி பொறுமையா அமைதியா பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தருவாங்க. உன்னோட தம்பிக்கும் வேலை நிச்சயம் கிடைக்கும். அவனுக்கு இந்த வேலையக் கொடுக்ககூடாதுன்றதில்ல என்னோட எண்ணம்.பார்த்திபனுக்குத் தகுந்தாப் போல மறுபடியும் காதுல விழுந்தா நிச்சயம் நானே ஏற்பாடு பண்றேன்.வேல கிடைக்கிறது இப்பக் கஷ்டம் தான், இல்லன்னு சொல்லல. ஆனா கிடைக்கறவங்களுக்கு கிடைச்சுக்கிட்டு தானிருக்கு. இப்படியேவா இருந்துடும், நிலமையும் மாறுமே. ‘ மங்களத்தைச் சமாதானம் செய்ய முயல்கிறான் அவன்.

ஒரு குடும்பம் மட்டுமல்ல நாற்பது சிறார்களும் பயனடையப்போகிறார்கள் என்பதை தாமதமாகவேனும் மங்களம் உணறுவாள் என்று நிச்சயமாய் நம்பினான் அவன்.

‘சரி, சரி எனக்கொண்ணும் கோபமில்ல. கொஞ்சம் வருத்தம் தான். நான் கீழ போயி ரொட்டி ஒண்ணு வாங்கிட்டு வரேன்.வந்து சாப்பாடு எடுத்து வைக்கிறேன். ‘

ஓரிரு வாரங்கள் ஆனதும், மாலையில் ஒரு நாள்,

‘ஏங்க அனுவோட டாச்சர் முன்ன மாதிரி ஆயிட்டு வராங்க. வீட்டுக்காரருக்கு வேலை கெடச்சிட்டதுல ஒரு நிம்மதி சந்தோஷம்னு நினைக்கிறேன்.அனு கூட, ‘டாச்சர் இப்பல்லாம் சிரிச்சி சிரிச்சிப் பேசறாங்கம்மா, நா வகுப்புல பேசினப்பகூட என்ன ஏசல தெரியுமா ‘ன்னுசொல்றா. நல்ல மாற்றம் தெரியுதுங்க. உளைச்சலெல்லாம் போயி அவங்களோட பொறுமை திரும்பிடிச்சி. பிலிஃப்புக்கு வேலையக் கொடுத்து நீங்க நல்லது தான் செஞ்சிருக்கீங்க. நான் கூட பார்த்திபனுக்கு வேலைக்கி ஏற்பாடு செய்யாம என்ன இப்பிடிச் செய்யறாருன்னு கோபப்பட்டேன். ‘ என்று மங்களம் பூரிப்புடன் கூறுகிறாள்.

‘அப்பாடா, வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி! ‘, மகிழ்ச்சியில் ஆழ்கிறான், சண்முகம். உணருவாள் என்று எதிர் பார்த்திருந்தாலும் இத்தனை சீக்கிரமே மங்களம் உணருவாள் என்று அவன்,நினைக்கவே இல்லை!

-(முற்றும்)-தமிழ் முரசு 10-8-02 / 17-8-02-

sankari01sg@yahoo.com

Series Navigation

ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர்