அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தொன்று

This entry is part of 42 in the series 20030828_Issue

இரா முருகன்


அத்தியாயம் இருபத்தொன்று

சுந்தர கனபாடிகள் வைகை நதியோடு போய்க் கொண்டிருந்தார்.

சுத்த ஜலம் பிரவாகமாக இரு கரையையும் அடைத்துக் கொண்டு நுங்கும் நுரைப்புமாகப் பொங்கி வழிந்து ஓடியதன் சுவடுகள் ஈர மணலில் அழிந்தும் அழியாமலும் தடம் விரிக்க, வற்றி இளைத்துப் போன நதி சின்னச் சாரைப் பாம்பாக சலித்துக் கொண்டே அசைந்து போனது.

கரையோரம் வெகுதூரம் போய், புதர் மறைவில் பிரம்ம செளசம் முடித்துக் கால் கழுவிக் கொள்ள வந்தபோதே நதியடி மணலை நாட வேண்டிப் போனது.

நதியெல்லாம் தெய்வம். இப்படி பிருஷ்டம் சுத்தப்படுத்தவா பகவான் அதுகளைப் படைத்து விட்டிருக்கிறான் ? ஜீவாத்மா பரமாத்மாவில் கலக்க விரசாகப் போவது போல் அதெல்லாம் சமுத்திரத்தைப் பார்க்க ஓடிக்கொண்டே இருக்கின்றன. இந்த வைகை மட்டும் கொஞ்சம் விதிவிலக்காக, கிராமதேவதைக்கு நேர்ந்து கொண்ட மாதிரி எங்கேயோ கண்மாயிலோ ஏரியிலோ போய்க் கலக்கிறதாம்.

சுந்தர கனபாடிகளுக்கு பூகோளம் தெரியாது. நாணாவய்யங்கார் சொல்லி நேற்றைக்குக் கேள்விப்பட்டதுதான். வேதபாடசாலையில் அதெல்லாம் சொல்லிக் கொடுக்கிறதில்லை. ருத்ரமும் சமகமும் ரிக்கும் யஜூரும் தான் அங்கே நாள் முழுக்க. கனபாடிகள் சாம வேதியான காரணத்தால் அவருக்கு உபரியாக அந்த அத்தியாயனமும் உண்டு.

ஓலைச் சுவடியில் கிரந்த எழுத்தில் எல்லாம் இருக்கும் என்றாலும் யாரும் சுவடியைத் திறந்து வைத்துக் கொண்டு கற்பிப்பதுமில்லை. கற்றுக் கொள்வதுமில்லை. காதால் கேட்க வேணும். மனதில் கிரகித்து வாங்கிக் கொள்ள வேணும். அப்புறம் பல தடவை உரக்கச் சொல்லிப் பழக வேணும்.

பிரம்மஹத்தி. உஷஸ்னு உன் நாக்கெழவுலே வராதா ? தர்ப்பையைப் போட்டுப் பொசுக்க. உசஸ்ஸாமே. சவண்டிக்கு ஒத்தனாப் போறதுக்குக் கூட ஒனக்கு யோக்கியதை இல்லை.

சுந்தர கனபாடிகள் சிரித்துக் கொண்டார். அடித்தும், தலைமயிரும் தலைக்குள்ளே இருக்கப்பட்ட மூளையும் எல்லாம் வெளியே தெறித்து விழுவது போல் அப்பளக் குடுமியைப் பிடித்து இழுத்துத் தரையில் மோதியும் பாடசாலையில் அவருக்கு சாமவேதம் கரைத்துப் புகட்டிய ஈஸ்வர ஸ்ரெளதிகளின் சவண்டிக்கு ஒத்தனைப் பிடிக்க மழைநாளில் அவர் தான் பல வருஷம் முன்னால் காடு மேடெல்லாம் திரிந்து நடக்க வேண்டிப் போனது.

முழங்காலையும் மறைத்து இடுப்பு வரை ஆழத்துக்கு நீர் உயர்ந்த இடத்தில் கொஞ்சம் நின்றார் சுந்தர கனபாடிகள்.

இதுக்கும் மேல் இங்கே தண்ணீரை எதிர்பார்க்க முடியாது. நாலு முழுக்குப் போட்டு விட்டுக் கரையேற வேண்டியதுதான்.

நர்மதே சிந்து காவேரி.

குளித்து வந்து வீபுதிச் சம்படத்தைத் திறந்து குழைத்து நெற்றியிலும் மாரிலும் தோளிலும் பூசிக் கொண்டார். இப்படியே ஈர வஸ்திரத்தை உலர்த்தியபடிக்கு மணல் வெளியில் ஏகாங்கியாக நிற்க மனதுக்கு ரம்மியமாக இருந்தது. அடிக்கிற காற்றில் பூவாக அது உலர்ந்ததும் பஞ்ச கச்சமாக உடுத்திக் கொண்டு மீனாட்சி சுந்தரேசுவரர்களைப் பார்க்க நடையை எட்டிப் போட வேண்டியதுதான்.

நடந்து நடந்து நடந்தே தான் ஜீவிதம் முழுக்கப் போய்க் கொண்டிருக்கிறது. தர்ப்பைக் கட்டைத் தூக்கிக் கொண்டு அக்கம் பக்கம் ஏழு கிராமம் புஞ்சைக் காட்டு வரப்பில் நடக்க வேணும். சீத்தாராமய்யன் பிதாவுக்கு புரட்டாசி திரிதியையில் திதி. குத்திருமல் நோக்காட்டோடு திண்ணையே கதியாகக் கிடந்து உயிரை விட்ட சிவராமனைப் பெற்றவளுக்கு மார்கழி பிரதமையன்று வருஷாந்திரம். சோமசுந்தரமய்யன் பெண்டாட்டி சிவலோகம் புறப்பட்டுப் போய்க் கல் ஊன்றிக் காரியம் செய்ய மூணாவது நாள்.

யாருக்கு நினைவு வருகிறதோ இல்லையோ சுந்தர கனபாடிகள் சகலமான சாவுகளையும் அது கழிந்து போய்ப் பல வருஷம் ஓடின பிறகும் நினைவு வைத்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. சாவோடு சம்பந்தப்பட்ட கிரியைகளைச் செய்விக்கக் கால் தேயச் சகல திசையிலும் ஓடி நடக்க வேண்டியிருக்கிறது.

இந்த நடை நிற்கும்போது அவருக்காகச் சாப்பிட ஒத்தனைத் தேடி யார் நடப்பார்களோ தெரியவில்லை. அதுவரை தர்ப்பைக் கட்டும் மடிசஞ்சியில் ஒற்றை வாழைக்காயும் அரிசியும் உளுந்தும் பயறும் தலையில் எள்ளுமாகக் கால்நடைதான்.

சதாசிவ பிரம்மேந்திரர் போல் நடந்து கொண்டே, பாடிக் கொண்டே சன்னியாசியாகப் போய்விட்டால் என்ன ? எதைப் பற்றியும் கிஞ்சித்தும் கவலைப் படாமல், வருத்தப்படாமல்.

வைகைக் கரையில் தானே அவர் கையை வெட்டி எறிந்தார்கள் ? ராஜாவின் அந்தப்புரத்துக்குள் சுய நினைவு தப்பிப்போய், இடுப்பில் துணி இல்லாமல் ஈசுவர தியானத்தில் திளைத்துப் பாடிக் கொண்டே நுழைந்த குற்றத்துக்கான தண்டனை இல்லையோ அது ?

அது என்ன பாட்டு ? மானச சஞ்சரரே. சம்ஸ்கிருதம் தான். சுந்தர கனபாடிகளுக்குக் கரைத்துப் புகட்டியிருக்கிறார்கள். மானச சஞ்சரரேக்கு அப்புறம் அடுத்த அடி என்ன ?

அமாவாசைத் தர்ப்பணம் செய்ய எள்ளோடும் தண்ணீரோடும் இரைத்து விடும் மந்திரம் தான் நாக்கில் சட்டென்று வருகிறது.

திவசப் பிராமணனாகவே ஜீவிதம் முடியப் போகிறது.

தீபாவளிக்குக் கோடி வஸ்திரம் உடுத்தியானதும் அதை அவிழ்த்து வைத்து விட்டுத் ஊரோடு தர்ப்பணம் செய்யப் பவித்திரம் மாட்ட ஓட வேண்டி இருக்கிறது.

நவராத்திரிக் கொலுவுக்கு மூச்சு வாங்க சேந்தியிலிருந்து பொம்மைப் பெட்டியை இறக்கும்போது யாராவது போய்ச் சேர்ந்து தகனத்துக்கு வரச் சொல்லி வாசலில் வந்து நிற்கிறார்கள்.

விஷ்ணு இலையில் அப்பமும் எள்ளுருண்டையும் சரியாக வேகாத சாதமுமாக ஹோமப் புகை சுற்றி வரும் வீடுகளுக்குள் உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு தட்சிணையோடு திரும்பி வந்ததும் ராத்திரி சாப்பிடாமல் படுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மோர்க்களி சாப்பாட்டில் சேர்த்தி இல்லை, சத்து மாவு உருண்டை ராத்திரி பட்சணம் என்று கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று மற்ற வைதீகர்கள் சமாதானம் சொன்னபடி ராத்திரி ஏதேதோ சாப்பிடுகிறது போல் சுந்தர கனபாடிகளால் முடியாது. திவசத்துக்கு இறங்கி வந்தவர்கள் யாருடைய பித்ருக்களாக இருந்தாலும் இங்கே எல்லாம் முடித்து விட்டுப் போனவர்கள். இல்லை, அவசர அவசரமாக போதும் போயிடு என்று அனுப்பப் பட்டவர்கள். அவர்களின் பிரதிநிதியாக எள்ளைத் தலையில் போட்டுக் கொண்டு பூணூலை வலம் இடமாகத் திருப்பி மாட்டிக் கொண்டவன் கொடுக்கும் மரியாதைகளை ஏற்றுக் கொள்கிற வைதீகன் சுந்தர கனபாடிகள்.

அவர்கள் சார்பாகத் தான் அப்பமும் வடையும் மிளகுக் கறியும் மற்றதும். அது கழித்தால், ராத்திரி போஜனம் செய்யக் கூடாது என்று எழுதாத விதி. மீறிப் பண்ணினால், அந்த ஆத்மாக்கள் பசியோடு அலையும் என்றார்கள் பாடசாலையில் அவருக்குக் கற்பித்தவர்கள்.

ஒரு சத்து மாவு உருண்டை இன்னொருத்தனை, அவன் உயிரோடு இருக்காவிட்டாலும், பட்டினி போடும் என்றால் சுந்தர கனபாடிகளுக்கு அது வேண்டாம்.

எல்லோரையும் போலக் கல்யாணத்துக்கும் காதுகுத்துக்கும் நவக்கிரஹ ஹோமத்துக்கும் போய் நாலு காசு பார்க்காமல் இப்படி சதா சர்வ காலமும் தகனம், கல் ஊன்றுதல், பிண்டப் பிரதானம், மாசியம், சோதகும்பம், தர்ப்பணம், வருஷாப்திகம், ஹிரண்ய திவசம் என்று அலைவானேன் ?

அதுக்கு சுந்தர கனபாடிகள் காரணமில்லை.

டேய் கொழந்தே மாட்டுக் கண்ணு சுந்தரம். மத்ததுக்கெல்லாம் அரைகுறை வைதீகன் போறும். பெரியவா ஆசீர்வாதத்தோட மனசொருமிச்சுத் தாலி கட்டினாலோ, தட்டான் வந்து சிசுவுக்குக் காது குத்தி ஆயுட்ஷேமம் பண்ணினாலோ, ஆவணி அவிட்டத்துக்குப் பூணல் மாத்தித் தரச் சொல்லிக் கேட்டாலோ மத்தவா போகட்டும். உனக்கு அது வேண்டாம். உடம்பை விட்டுட்டு உசிரைத் தூக்கிண்டு போனவாளைக் கரையேத்தறது மாதிரி சிக்கலான காரியம் ஏதும் உண்டா சொல்லு. பாத்துப் பாத்துச் செய்யணும். மூணு தலைமுறைக்காரா இறங்கி வரா. இங்கே இருக்கும்போது வசப்படாத ஞானம் எல்லாம் அங்கே போனதும் அவா எல்லாருக்கும் வாச்சுடறது. உன் மந்திரத்துலே, வைதீகக் கிரமத்துலே ஒரு பிசகு வந்தாலும் போறும், அவா வந்தபடிக்கே போயிடுவா. போய்ப் பசியும் பட்டினியுமா அலைவா. இங்கே இருக்கப்பட்டவாளையும் அந்தப் பசியும் அலைச்சலும் பிடிச்சு ஆட்டும். சம்ஸ்காரத்தை மட்டும் நீ கவனிச்சுக்கோ. அது போதும். அவாள்ளாம் உன்னை ஆசிர்வாதம் பண்ணுவா.

சுந்தர கனபாடிளின் குருநாதர் ஈஸ்வர சாஸ்திரிகள் பாடசாலையில் கடைசி வருஷம் சாம வேத அத்தியாயனம் பண்ணுவித்த போது ஆக்ஞை பிறப்பித்தது இந்த மாதிரியில். அப்புறம் ஒற்றை வாழைக்காயும், ஈரமான எள்ளுமே உலகமாகிப் போனது கனபாடிகளுக்கு.

சம்ஸ்காரம்.

சுந்தர கனபாடிகள் உரக்கச் சொன்னார். பால் மாட்டோடு முன்னால் நடந்தவன் திரும்பிப் பார்த்தான்.

ஊரில் திவசப் பிராமணன் என்று பெயர். இங்கே கிறுக்குப் பிராமணன் என்று நினைத்து விடப் போகிறார்கள்.

சுற்றுப்புறம் மறந்து போய் பிரம்ம தியானத்தில் மூழ்கினது போல் கண்ணை மேல்பார்வையாகச் செருகிக் கொண்டு, சட்டென்று நினைவில் வந்த ஸ்லோகத்தை உரக்கச் சொல்லியபடி முன்னால் நடந்தார் சுந்தர கனபாடிகள்.

மாட்டுக்காரன், மூக்கணாங்கயிற்றை இழுத்துப் பிடித்து மாட்டை நிறுத்தினான்.

அவன் எதிர்பார்த்தபடியே கனபாடிகள் பசுவின் பின்னால் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டு நமஸ்கரித்தார். மாட்டுக்காரன் சணல் மூட்டையாக முடிந்து தோளில் தொங்க விட்டிருந்த சஞ்சியில் இருந்து ஒரு பிடி புல்லை எடுத்து கனபாடிகளிடம் மரியாதையோடு நீட்டினான்.

அவன் கொடுத்த பசும்புல்லை அவனுடைய பசுவுக்கே தானம் செய்யும்போது சுந்தர கனபாடிகளுக்குச் சிரிப்பு வந்தது.

நாலு நாலாக் கறவை சரியில்லே சாமி. பெரியவங்க ஆசிர்வாதத்துலே எல்லாம் சரியாகணும்.

அவன் கவலை அவனுக்கு.

தானே சரியாயிடும்ப்பா. கடலைப் புண்ணாக்கு போடறியோ ?

பசு சாணம் இட ஆரம்பிக்க காலை விலக்கி நடந்தபடி சொன்னார் கனபாடிகள்.

எங்க சாமி ? ஆனை விலை குதிரை விலை எல்லாம்.

சுந்தர கனபாடிகளுக்கு ஆனை விலையும் குதிரை விலையும் எல்லாம் தெரியாது. எந்த கிரகஸ்தன் அமாவாசைத் தர்ப்பணத்துக்கு எவ்வளவு கொடுப்பான், திவசத்துக்கு எத்தனை படி அரிசி வரும் என்று தெரியும்.

அரசூரோடு வந்து இருந்து வேத பாடசாலையைப் பார்த்துக் கொள்ளேன் என்று அம்மான் சேய் சுப்பிரமணிய ஐயர் சதா கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறார். போய் ஒரே இடமாக நிலைத்து விடலாமா என்று பல தடவை சுந்தர கனபாடிகளுக்குத் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

ஆனாலும் குருநாதருக்கு வாக்குத் தத்தம் செய்து கொடுத்தது நினைவில் வந்து தொலைத்துக் காலைப் பின்னால் இழுக்க வைக்கிறது. அப்புறம், கனபாடிகளுக்கு மற்ற மந்திரம் எல்லாம் கிட்டத்தட்ட மறந்து போய்விட்டது.

சாமி, இப்படி வடக்கே இந்தப் பொட்டல்லே குறுக்காலே விழுந்து போனாக் கோவில் வந்திடும். பையப் பதறாமப் போங்க. விடிகாலப் பூசைக்கு நெறைய நேரம் கிடக்கு.

மாட்டுக்காரன் சொன்னபடிக்கு முன்னால் போனான்.

இவன் சாயலில் யாரையோ பார்த்த ஞாபகம். எங்கே ?

வருடாவருடம் நவராத்திரிக்கு பொம்மைக் கொலு வைக்க சேந்தியில் இருந்து இறக்கி வைக்கும் கொலுப்பெட்டியில் பாம்புப் பிடாரன் முகம் தான் இவனுக்கும்.

நேற்றைக்கு வடம்போக்கித் தெருவில் பலகாரமும் சித்திரான்னமும் விற்றுக் கொண்டிருந்த பிராமணனும் கொலுபொம்மைப் பெட்டியில் கல்யாணப் புரோகிதன் போல்தான் இருந்தான்.

எல்லாம் நூறு வருடம் முந்திய பொம்மை. சுந்தர கனபாடிகளின் மாதாமகர் காலத்து அழுத்தமான வர்ணம். அவர்கள் காலத்தில் உட்கார்ந்து சாப்பிட்டிருக்கிறார்கள். தர்ப்பைக் கட்டோடு அலைய வேண்டி இருந்திருக்காது. விநாயக சதுர்த்திக்கு களிமண் பிரதமை செய்து தும்பை மாலை சார்த்திக் கொழுக்கட்டை சாப்பிட்டுக் கொண்டு. நவராத்திரிக்குக் கொலு வைத்து, தினசரி பூஜை செய்து சுண்டல் விநியோகித்துக் கொண்டு. மாரில் சந்தனமும், நானாவித புஷ்ப பரிமள திரவிய வாசனையுமாக எல்லாக் கல்யாணப் பந்தலிலும் உட்கார்ந்து பந்திக்குக் காத்திருந்தபடி வேடிக்கை விநோதம் பேசிக் கொண்டு. சீமந்தத்துக்கு பூரண கர்ப்பிணி மூக்கில் இலைச்சாறு பிழிந்து மந்திரத்தோடு விடுவதை ஆசிர்வதித்துக் கொண்டு.

சீமந்த மந்திரம் என்ன எல்லாம் ?

தொடையிலே தட்டிண்டு அக்னியை அப்பிரதட்சணமாச் சுத்தி வாங்கோ.

அப்பம் வடை பிராமணன் கொலுப்படியில் கல்யாண புரோகிதனாக இருந்து சிரித்தான்.

நீ சிரிப்பேடா. ஏன் சிரிக்க மாட்டே. பொழைக்கத் தெரிஞ்சுண்டுட்டே. புளியஞ்சாதமோ, தயிர்சாதமோ, ஊசிப் போனதோ, உசந்த ருஜியோ, உன் குடுமியையும் பூணூலையும் பாத்துட்டுன்னா வாங்கறான். நாளைக்கே நீ ஒரு கல்லுக் கட்டடத்துலே உக்காந்துண்டு ஓய் கனபாடிகளே இன்னும் மூணு பேரைக் கூட்டிண்டு வந்துடும். அடுத்த வாரம் அத்தைப்பாட்டிக்கு சுப ஸ்வீகாரம். உமக்கு சேலம் குண்டஞ்சு வாங்கி வைக்கறேன்னு சொல்லுவே.

சுந்தர கனபாடிகள் கோயிலுக்குள் நுழைந்தபோது வெளிப்பிரகாரத்தில் கோஷ்டியாகப் பாடிக் கொண்டு வந்துகொண்டிருந்தார்கள்.

தமிழ்ப் பாட்டு. திருப்புகழா தேவாரமா என்று தெரியவில்லை. கேட்க வெகு சுகமாக இருந்தது அந்தக் காலை நேரக் காற்றுக்கும், குளித்துச் சுத்தமான உடம்புக்கும்.

கோயிலுக்குள்ளே கர்ப்பக்கிரகத்துக்கு வெளியே நின்று கொண்டு ஓதுவார மூர்த்திகள் யாராவது பாடுகிறது தான் இது. ஆனால் இப்படிக் கூட்டமாகப் பாடும்போது ஏற்படும் அழகு அதில் இல்லை.

வைஷ்ணவர்கள் இது போல பாடி வைத்துக் கொண்டு அதையும் வேதத்தில் சேர்க்கிறார்கள். ஜோசியர் நாணாவய்யங்காருக்கு அதெல்லாம் அத்துப்படி.

வைஷ்ணவனோ, ஸ்மார்த்தனோ, இவர்கள் கூடவே சேர்ந்து பாடிக் கொண்டு இப்படியே நிம்மதியாகப் போனபடி இருக்கலாம்.

அவர்கள் பாடி விட்டு, சந்நிதி தொழுது விட்டுத் திரும்ப வீட்டுக்குப் போவார்கள். பட்டுத் தறி முன் நெய்ய உட்கார்வார்கள். கனபாடிகள் ஷேத்ராடனம் முடிந்து திரும்பியதும் எரவாணத்தில் செருகி வைத்த தர்ப்பைக் கட்டைத் திரும்ப எடுக்க வேண்டியதுதான்.

சாமி இந்தாங்க.

பொம்மை போல் சிரித்துக் கொண்டே மாட்டுக் காரன் அவருடைய இடது கையை ஆற்று மண்ணோடு எடுத்துக் கொடுத்தான்.

கோயில் நகரா டமடம என்று உச்சத்தில் முழங்க, தொடர்ந்து காண்டா மணிச் சத்தம் உயர்ந்து எழுந்து காற்றில் பரவியது.

கனபாடிகள் ஒரு வினாடி விதிர்த்துப் போனார்.

தோள் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார்.

இரண்டு கையும் இருக்கிறது.

கூப்பினார்.

தாயே. பரமேச்வரி. ஜகதாம்பா. எல்லாரையும் காப்பாத்தும்மா ஈஸ்வரி. எனக்கு விதிச்சதை நான் செஞ்சு தான் தீரணும்.

கண்களை மூடி ஒரு மனதோடு கும்பிட்டார்.

அவர் சந்நிதிக்குள் நுழைந்தபோது திரை போட்டு அலங்காரம் ஆரம்பித்திருந்தது.

(தொடரும்)

Series Navigation