அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினைந்து

This entry is part of 57 in the series 20030717_Issue

இரா முருகன்


15

ஒரு பெரிய பாடை.

மூங்கிலை வளைத்துக் கட்டி முத்துப் பல்லக்கு போல் செய்திருக்கிறது. உள்ளே சாட்டின் விரிப்பு. தலைக்கு வைத்துக் கொள்ள சாட்டின் தலையணை. பாடையைச் சுற்றிலும் மல்லிகையும், துலுக்க ஜவ்வந்தியும், ரோஜாப் பூவுமாக சரம் சரமாகக் கட்டி வைத்திருக்கிறது. போதாதற்கு அங்கங்கே வெட்டிவேர் வேறே மணமாகத் தொங்குகிறது. பாடைக்குள் ஏறப் படிகள் வளைந்து பளபளவென்று செம்பில் வடித்து வைத்திருக்கின்றன. நான்கு பெரிய மரச் சக்கரங்களின் பலத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கிற அதன் முன்னால் குதிரை பூட்ட விசாலமான அமைப்பு. உட்கார்ந்து ஓட்ட வசதியாக ஒரு ஆசனம். வியர்க்கூறு ஏறிய முதுகையும் வேட்டி தழைந்த இடுப்பில் மேலேறி வந்த அழுக்கு அரைஞாண்கொடியையும் காட்டி உள்ளே இருந்து சஞ்சரிக்கப் பட்டவர்களை அன்னத் திரேஷமாக அருவருப்படையச் செய்யாமல் ஓட்டுகிறவனுக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு சல்லாத்துணிப் படுதா.

சக்கரம் வைத்த பாடை கல்லும் முள்ளுமாக ஒரு கட்டாந்தரையில் நிற்கிறது. குதிரைகள் போன இடம் தெரியவில்லை. ஓட்டுகிறவனும் தான் காணோம். கொஞ்சம் தள்ளி நாலைந்து பேர் வியர்க்க விறுவிறுக்கக் குழி தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆச்சு. அந்தத் தேவிடியாப் புள்ளயைக் கொண்டாந்து கிடத்த வேண்டியதுதான்.

கையில் பிடித்த மண்வெட்டியில் எச்சில் துப்பித் தூரத்தில் எறிந்து விட்டு, குழிக்குள் ஒண்ணுக்குப் போய்க் கொண்டே ஒருத்தன் சொல்கிறான். அது பனியன் சகோதர்களில் குட்டையன்.

ராஜா பாடைக்குள்ளே படுத்திருக்கிறார்.

நெட்டை பனியன் கருப்பு பெட்டியில் பழுக்காத் தட்டைச் சுழல விட்டபடி பல்லக்குக்குள் குனிகிறான்.

அங்கே வெதுவெதுன்னு குழியிலே படுத்துக்கிட்டு இதை ஆனந்தமாக் கேக்கலாமே.

ஏதோ புரியாத மொழியில் பாடிய அந்தப் பழுக்காத் தட்டின் எல்லா வார்த்தைகளும் ராஜா செத்துப் போய்விட்டதாக அறிவிக்கின்றன.

கம்பங்களி கூட தயார். உப்புப் போடலை. அந்த ஆள் இடுப்புலே முடிஞ்சு வச்சிருக்கான். எடுத்துப் போட்டுக்கட்டும்.

சமையல்காரன் தோசை திருப்பியை குழிக்குள் எறிந்து கொண்டே சொல்கிறான். அதை வைத்து என்ன எழவு குழி வெட்டினானோ ? செய்கிற வேலையில் ஒரு சுத்தம் வேணாம் ?

ராஜாவுக்குக் கோபம் மூக்குக்கு மேல் வருகிறது. எழுந்து போய் அவனை இடுப்புக்குக் கீழே உதைத்துக் கொட்டையைக் கூழாக்க வேண்டும். முடியாமல் அசதி. பாட்டு வேறே கட்டிப் போடுகிறது.

குதிரை ஓட்டுகிறவன் ஆசனத்தில் நக்னமாக ஏறி உட்கார்ந்து சாட்டின் திரையை விலக்குகிறாள் ராணிக்குப் பிரியமான சேடிப் பெண். கால்களில் பித்தவெடிப்பு ஏறி இருக்கிறது. கணுக்காலில் ரோமங்கள் கொலுசில் உரச ராஜாவை எட்டி உதைக்கிறாள் அவள். இடுப்புக்குக் கீழே இன்னும் தீவிரமாகப் பார்க்க விடாமல் ராஜாவின் கண்ணில் உதைத்து மூட வைக்கிறாள். வலிக்கிறது. ஆனாலும் இதமாக இருக்கிறது.

நாசியில் படிந்த அந்தப் பாதங்களை வாடை பிடிக்கிறார் ராஜா. கிறங்க வைக்கும் வியர்வை வாடை. உப்புப் புளியும், அரண்மனைத் தாழ்வாரத்துப் புழுதியும், சமையல்கட்டில் மீன்செதிலையும் கொட்டடியில் குதிரைச் சாணத்தையும் மிதித்து வந்த கதம்ப வாசனையும் கூடவே வீட்டு விலக்காகிக் குளித்த ஸ்திரியின் தனி வாடையுமாகப் போதையேற்றும் பாதங்கள்.

குழிக்கு உள்ளே இவளும் படுத்துப்பா. வாங்க போகலாம்.

நெட்டை பனியன் சேடிப்பெண்ணின் மார்பைத் திருகியபடி சொல்கிறான்.

அவளைத் தொடாதேடா முண்டைக்குப் பிறந்தவனே உன் ஜாமான் முடி பொசுங்கி விடும் என்று சபித்துப் போடுகிறார் ராஜா.

சேடிப் பெண்ணின் பாதங்கள் இப்போது ராஜாவின் இடுப்புக்குக் கீழ் ஓங்கி ஓங்கிக் குத்த இடுப்புத் துணி நனைகிறது.

விழித்துக் கொண்டார் அவர்.

மங்கலான வெளிச்சம். ராணி கையால் அவர் உடம்பு முழுக்க உலுக்கி, அடித்துத் தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறாள். இடுப்பில் வேட்டி விலகி ஈர வட்டம் உணர்ச்சியில் படுகிறது.

ராஜாவுக்குப் பெருமையாக இருக்கிறது. இன்னும் ஜீவன் இருக்கிறது என்பதற்கு அத்தாட்சி. சீக்கிரமே ராணிக்குப் புத்திர பாக்கியம் ஏற்படலாம். குழிக்குள் இறங்கிப் படுக்க ராணி வருவாளா ? சேடிப் பெண் எங்கே ? ராணியின் காலுக்கு என்ன வாடை இருக்கும் ?

ராஜா திரும்பக் கண்ணை மூடிக் கொண்டார்.

எவ்வளவு நேரமாக எழுப்பி ஆகிறது. அது என்ன விருத்தி கெட்ட ஒரு தூக்கம் ?

ராணி குரல் காதில் அறைய கண்ணை மறுபடி திறந்து முழுசாக இந்த உலகத்துக்கு வந்தார் ராஜா.

அவர் பாடையில் இல்லை. படுக்கையில் தான் இருப்பு. பக்கத்தில் எந்தக் களவாணியும் குழி வெட்டிக் கொண்டிருக்கவில்லை. ராணி மட்டும் தான் நிற்கிறாள். குளிக்காமல் கொள்ளாமல் ஒரு பழைய சேலையை உடுத்தித் தலை கலைய, கண்ணில் அப்பின மைக்கு மேலே பீளை தள்ளி இருக்க அவள் நிற்கிறாள்.

அப்பாரு போயிட்டாரு. தாக்கல் வந்திருக்கு. எழுந்திருங்க.

கட்டிலில் தலைமுகட்டில் உட்கார்ந்து நாராசமாக ஒப்பாரி வைத்து அழுகிறாள் அவள். தினசரி ஒரு பழுக்காத் தட்டு சங்கீதம் கேட்டிருந்தால் அவளாலும் நேர்த்தியாகப் பாட முடியும்.

புஸ்தி மீசைக் கிழவன் மண்டையைப் போட்டாச்சா ?

ராஜாவுக்கு இனம் புரியாத சந்தோஷம் மனதில் எட்டிப் பார்க்கிறது. தாமிரபரணி பக்கம் இருந்து இங்கே அரண்மனைச் சிறுவயல் பகுதிக் கிராமத்துக்குக் குடிபெயர்ந்ததே தன்னைச் சீண்டத்தானா என்று ராஜா நினைக்கும்படிக்கு, இங்கே வரும்போதெல்லாம் ராஜாவை வார்த்தையால் குத்திக் கொண்டே இருப்பான்.

எப்ப என் பேரப்பிள்ளையை சிம்மாசனத்துல இருந்தப் போறீங்க ?

அவன் தொல்லை பொறுக்க முடியாமல் போன நேரத்தில்தான் சேடிப் பெண் ராஜாவிடம் வந்து புஸ்திமீசைக் கிழவன் வாய் உபச்சாரம் செய்யச் சொல்லி சதா தொந்தரவு செய்வதாகப் புகார் சொன்னாள்.

கடுமையாகக் கண்டித்து அன்றைக்கு விரட்டி அனுப்பியதுதான். அப்புறம் ராஜாவையோ சேடிப் பெண்ணையோ சீண்ட அவன் இங்கே வரவேயில்லை.

அது நடந்து மூணு மாசம் ஆகியிருக்கும்.

எங்க அப்பார் மேலே உங்களுக்கு மரியாதை இல்லே. அதான் சட்டுனு கிளம்பிப் போய்ட்டார். இனிமே உசிர் உள்ள வரைக்கும் இங்கே படிவாசல் மிதிக்க மாட்டார். மானஸ்தர் அவரு.

கிழவன் இறங்கிப் போனதற்கு அடுத்த நாள் ராணி சொன்னபோது மசிரு போச்சு என்று மனதில் நினைத்துக் கொண்டு ராஜா ஆட்டுத் தொடையைக் கடித்துக் கொண்டிருந்தார்.

ஆயிரம் சிப்பாயை அணி வகுத்து நடத்திப் போனவரு இப்படி அநாதையா விடிய ஒரு நாழிகைக்கு மண்டையைப் போடணும்னு எழுதி வச்சிருக்கே. போறபோது என்ன நினைச்சாரோ ? என்னையத்தான் நினைச்சாரோ ?

ராணி திரும்பப் பிலாக்கணம் வைக்க ஆரம்பித்தாள்.

சரி, இப்ப என்ன செய்யணும்ங்கிறே ?

ராஜா அவள் குரலின் இம்சை பொறுக்க முடியாமல் தோளைத் தொட்டு அவளை அணைத்து அழுகையை நிப்பாட்டிப் போட்டார்.

இது கூட நான் சொல்லணுமா என்ன ? உடனே போய் உங்க தகுதிக்கும் அந்தஸ்துக்கும் உறவுக்கும் தகுந்த எல்லா மரியாதையும் செஞ்சு அவரை அடங்கப் பண்ண வேண்டாமா ? என் உடன்பிறப்பு எல்லாம் தாமரபரணிக் கரை தாண்டி வந்திருக்கும் இன்னேரம். நாம தான் இங்கியே புடுங்கிட்டுக் கிடக்கோம்.

ராணி அப்படியே கிளம்பி வரத் தயாராக இருந்தாள். ராஜாவும் அவ்விதமே கிளம்ப வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.

காலைக் கடன் முடிக்காமல் எப்படிப் போகிறது வெளியே ? அரையில் வேறு நனைந்து நாறிக் கொண்டிருக்கிறது. தாடையில் முள் முள்ளாக முடி குத்துகிறது. நாசுவனுக்கு ஆளனுப்பிக் காரியம் முடிய இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும். பசி வேறு தலையைத் தூக்க ஆரம்பித்திருக்கிறது. தோசையும் முட்டைக் குழம்பும் தேங்காய் வெல்லம் கலந்த பூரணமுமாகச் சாப்பிடு என்கிறது நாக்கு.

கொஞ்சம் பொறு. வெய்யில் ஏற்றதுக்குள்ளே கிளம்பிடலாம். என்ன எல்லாம் கொண்டு போகணும்னு அய்யரையும் கலந்துக்கலாம்.

உங்க தலையிலே எழவெடுத்த வெய்யில் ஏற. வரப் போறீங்களா இப்பவே என்னோட இல்லே நான் கிளம்பட்டா ?

ராணிக்கு உடனே போக வேண்டும். ஆனால் ஆஸ்தான ஜோசியரும் புரோகிதருமான அய்யர் இந்த மாதிரியான சாவுச் சடங்குகளில் விவரமான ஞானம் உள்ளவர். அவர் சொல்வதை ராஜா கேட்பதும் நல்லதுதான்.

யாரங்கே ? ராணி புறப்படப் பல்லக்கைச் சித்தம் பண்ணு.

ராஜா இரைய ஆரம்பித்தது குத்திருமலில் பாதியில் நின்றது.

எந்தத் தூமயக் குடிக்கியும் வரவேணாம். எனக்கே போய்க்கத் தெரியும்.

ராணி படபடவென்று வெளியேறினாள்.

பெட்டி வண்டியில் அவளும் கூடவே கால்மாட்டில் அவளுக்குப் பிரியமான சேடிப் பெண்ணும் இருக்க, குதிரைக்காரன் வண்டியை நெட்டோட்டமாக ஓட்டிக் கொண்டு போனது கொஞ்ச நேரம் கழித்து ஜன்னலுக்கு வெளியே தெரிந்தது.

குட்டியாக இன்னும் ஒரு தூக்கம் போடலாமா ? அந்தப் பக்கத்து வீட்டுப் பார்ப்பாரப் பிள்ளைகள் இன்றைக்கு ஏன் பழுக்காத் தட்டு சங்கீதத்தை சத்தமாக வைக்கவில்லை ?

வெய்யில் ஏறுவதற்குள் வருவதாகச் சொன்னது நினைவுக்கு வந்தது. அதற்குள் கொல்லைக்குப் போய், சவரம் செய்து கொண்டு, குளித்து, அய்யரைப் பார்த்து. ஏகப்பட்ட வேலை இருக்கிறது.

மெல்ல நடந்து போய் அரண்மனைச் சமையல் அறை நிலை வாசலில் இரு கையையும் ஊன்றிக் கொண்டு குனிந்து பழனியப்பா என்று சத்தமாகச் சமையல் காரனைக் கூப்பிட்டார்.

ஜாடியிலிருந்து ஒரு பெரிய தொன்னை நிறைய வல்லாரை லேகியத்தையும் வென்னீரையும் அவன் கொண்டு வந்து கொடுத்தால் தான் காலைக்கடன் நிம்மதியாகக் கழியும்.

சமயங்களில் சமையல் கட்டுக் கதவைப் பிடித்தபடி குனிந்து பழனியப்பா என்று விளித்த மாத்திரத்தில் பின்னாலும் முன்னாலும் சந்தோஷமாக முட்டிக் கொண்டு வந்து விடும். இன்றைக்கு அதிர்ஷ்டம் இல்லை.

சமையல்காரன் பக்தி பூர்வம் தொன்னையை வாழை இலையால் மூடி அதை ஒரு வெள்ளித் தட்டில் வைத்து, பக்கத்தில் பஞ்ச பாத்திரத்தில் வென்னீருமாக வந்து நின்றான்.

காலை நேரத்திலேயே கள்ளுத்தண்ணி சாப்பிட்டு வந்திருக்கிறாயோடா திருட்டுப் பயலே ?

ராஜா அபிமானத்தோடு புன்சிரித்துக் கொண்டு விசாரித்தார். என்னமோ அவன் மேல் இப்போது பிரியமாக இருந்தது. ஒரு வாய் லேகியம் உள்ளே போவதற்குள் வயறு கடகடக்க ஆரம்பித்திருக்கிறது.

ஐயனார் சத்தியமா இல்லே மஹாராஜா. அந்த வாசனை பிடித்தே வருஷக் கணக்கில் ஆகிறது.

அப்படியானால் இன்றைக்கு ஊற்றிக் கொள்.

ராஜா குப்பாயத்தில் கையை விட்டு ஒரு வெள்ளி நாணயத்தை அவனிடம் எறிந்தார்.

வெள்ளித் தட்டைத் தரையில் வைத்து விட்டு மூலைக் கச்ச வேட்டியை தட்டுச் சுற்றாக்கிக் கொண்டு தோட்டப் பக்கம் போகும்போது முட்டைக் குழம்பும் தோசையும் சித்தம் பண்ணச் சமையல்காரனிடம் சொல்ல மறக்கவில்லை.

தோட்டத்தில் இன்னொரு வேலைக்காரன் செம்பும் தண்ணீருமாக நின்றான். தோட்டத்து மாமர நிழலில் குரிச்சி போட்டு தரையில் கத்தியும் கிண்ணியுமாக நாசுவன்.

வாழ்க்கை கிரமப்படிப் போய்க் கொண்டிருப்பதாக ராஜாவுக்குத் திருப்தி.

இடக்குப் பண்ணாத வயிறும் மழுமழுத்த கன்னமும் வயிறு நிறைய தோசையும் முட்டைக் குழம்புமாகக் கிளம்பிப் போய் புஸ்தி மீசைக் கிழவனை வழியனுப்பி விட்டு வரலாம். சாவின் வேடிக்கை விநோதங்களை எல்லாம் பார்த்து, கலந்து கொண்டு அனுபவித்து ரொம்பவே நாளாகி விட்டது.

கால் கழுவிக் கொள்ள சேவகன் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கும்போது ராஜாவுக்கு பனியன் சகோதரர்கள் நினைவு வந்தது.

அந்தப் படப்பெட்டியை எடுத்து வரச் சொன்னால் என்ன ? கிழவனைச் சிங்காரித்து ஒரு படம் எடுத்து வீட்டில் எதாவது மூலையில் மாட்டி வைத்தால் ராணியும் சந்தோஷப்படுவாள்.

கொஞ்சம் நேரம் கழித்தே வாங்க.

ராஜா பனியன் சகோதரர்களுக்கு மனதுக்குள் கட்டளை பிறப்பித்தார்.

நாசுவன் முகத்திலும் கம்புக்கூட்டிலும் மயிர் நீக்கி விட்டு ராஜாவைக் கேட்டது இது.

கீழேயும் எடுக்கட்டா தொரே ?

ஈரம் இன்னும் உலர்ந்து தொலைக்காததால் வேணாம் என்றார் ராஜா.

(தொடரும்)

Series Navigation