விடியும்! (நாவல் – 2)

This entry is part [part not set] of 42 in the series 20030626_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


2

அது தொண்ணூற்றி நாலு, சரஞ் சரமாய் பனி பொழிந்த மார்கழி கூதல் காலத்தின் ஒரு நடுச்சாமம். அவன் றொரொன்டோ விமான நிலையத்தில் வந்து இறங்கியதும், ஒன்றுக்கு இருக்கும் சாட்டில் சலகூடத்துள் நுழைந்து நெஞ்சு நடுங்கி பாஸ்போட்டைக் கிழித்துப் போட்டதும், கொழும்பில் ஏஜென்சி காட்டிக் கொடுத்தபடி அகதிப் பாட்டு பாடியதும், இன்று போலிருக்கிறது.

கையில் மடியில் இருந்ததெல்லாம் விற்றுச் சுட்டுக் கடன்பட்டு கப்பல் ஏற்றி விட்ட அப்பா நெஞ்சுக்குள்ளேயே நின்றார். நீயென்றாலும் தப்பிப் பிழைச்சிரு மகனே என வாய் சொன்னாலும் உன்னை நம்பி இங்கே ஆறு உசிர்கள் இருக்கிறதை மறந்திடாதே

என்று அவரது முகம் சொன்னது எப்படி மறந்து போகும் ?

பயந்து நடுங்கிய அளவிற்கு கனடா குடிவரவு அவனைப் படுத்தவில்லை. மாறாக டொரொன்டோவை மூடியிருந்த பனிமழை பயமுறுத்தியது. ப+ச்சொரிந்தது போல் வானிலிருந்து பனி கொட்டியதை செல்வம் அன்றுதான் முதன்முதலாகப் பார்த்தான். ஆங்கிலச் சினிமாக்களில் பார்த்ததை நேரில் கண்டதும் புல்லரித்துப் போயிற்று. போகப் போகத்தான் உபத்திரவம் புரிந்தது. கண்ணைப் படைத்தும் சூரியனைக் காணவில்லை. கம்பளிக்குள் மறைந்து காலந்தள்ளும் கடிடம் தெரியத்தான்

பகலவனின் பெறுமதி புரிந்தது.

ஐந்தாறு நாட்களாக முகாமில் வேளா வேளைக்குச் சாப்பிட்டு படுத்து எழும்பினான். அவனுக்குப் பின்னால் அவனைப் போலவே முகாமிற்கு வந்த யாழ்குடாவைச் சேர்ந்த சிலரை யாரோவெல்லாம் வந்து தங்கள் பொறுப்பில் கூட்டிப் போவதை ஏக்கத்தோடு பார்த்தான். அடுத்த திட்டமென்ன ? தெரியாது.

பெருங்காற்றில் அள்ளுப்பட்ட காகிதத்துண்டுக்கு திட்டமென்ன வேண்டியிருக்கிறது! போய் விழப் போகிற இடம் அதன் கையில் இல்லை. முடிந்ததெல்லாம் – திருகோணமலையில் குடிகொண்டிருக்கும் முத்துக்குமாரர், காளியாச்சி, ஆலடிப்பிள்ளையார், சிவனார், கும்பத்துமால் அம்மன், அந்தோனியார், பெரியகடைமாதா ஆகிய அத்தனை கடவுளர்களிடமும் எல்லாவற்றையும் பாரப்படுத்தி விட்டு அவர்களின் தெய்வீக அருளில் ஏதாவது அதிசயம் நடக்கும் என்ற நம்பிக்கையோடு காத்துக்கொண்டு இருந்ததுதான். அத்தனை பேருக்கும் விண்ணப்பம் வைத்தவன் சனீஸ்வரனை மறந்தே போனான். அவர் இடக்கு முடக்காக ஏதாவது பண்ணிவிடக் கூடும். அவருக்கும் – ஊருக்கு வரமுடிந்த பின்னொரு காலத்தில் ஒரு மாதம் முழுதும் சனிக்கிழமை தோறும் எள்ளுப் பொட்டனி எரிப்பதாக நேர்த்தி செய்து கொண்ட பின்னரே நெஞ்சுப் பாரம் கொஞ்சம் குறைந்தது.

யாரையோ பார்க்க வந்த டானியல் அவனைத் தற்செயலாகத் சந்தித்தான். அந்தச் சந்திப்பு மட்டும் நிகழாதிருந்தால்!

நீங்க ? உங்களை ஊரில் கண்டிருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே பக்கத்தில் வந்து நின்றான் டானியல். பிறந்தது யாழ்ப்பாணமாயிருந்தாலும் தகப்பனின் இடமாற்றத்தோடு திருகோணமலையிலே வளர்ந்தவன், படித்தவன்.

“நான் செல்வநாயகம். நானும் உங்களைக் கண்டிருக்கிறேன். ஒரே ஊராயிருந்தும் பழகச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.”

“இங்கே ஆரும் சொந்தக்காரர் இருக்கினமா ?”

இல்லையென்று தலையாட்டியது அவன் மனதைத் தொட்டிருக்க வேண்டும். திருகோணமலை மண்ணைச் சொந்தமெனச் சொன்னது இதயத்தைத் தட்டியிருக்க வேண்டும். எல்லோரையும் போல அவன் சும்மாவே போயிருக்கலாம். சொந்தம் என வெளடிளைக்காரரிடம் பொய் சொன்னான். கையெழுத்திட்டு கூடக் கூட்டிக் கொண்டு போனான். இருக்க இடம் தேடித் தந்தான். வர்த்தகப் பட்டத்திற்குத் தோதான வேலை தேடிச் சேர்த்து விட்டான். வதிவிட உரிமைக்காக வழக்குப் போட்டு வழக்கறிஞரிடம் அலைந்தது வரை அவன்தான் செய்தான். அதுவும் அலுப்புச் சலிப்பில்லாமல் செய்தான். அடுப்படிக்குள் கேட்டுக் கேள்வியில்லாமல் நுழைந்து இருக்கிறதைப் போட்டுச் சாப்பிடும் உள்வீட்டுப் பிள்ளை என்கிற உரிமையைக் கொடுத்தான். சுகதுக்கங்களை மிச்சம் மீதியில்லாமல் பரிமாறி குடும்பத்தில் தானுமொருவனாக நினைக்கத் தூண்டினான்.

அத்தகைய நண்பனின் விருப்பத்தை தட்டிக் கழிக்க முடியாது. அம்மி சிறிது அரங்கியதுமே காத்திருந்தவள் போல அரைக்கத் தொடங்கினாள் சியாமளா.

பொம்பிளை பிடிச்சிருக்கா பாருங்க என்று படத்தைக் காட்டி அபிப்பிராயம் கேட்டாள்.

டானியல் வேலை செய்யும் பக்டறி தொடர்பில் டொரொன்டோவிலேயே பிடிபட்ட அந்த மானிப்பாய் பெண் பரவாயில்லாமல் இருந்தாள். சிறிது நேரம் கழித்துப் பார்க்க நேரில் நிற்பது போலவேயிருந்தது. பக்கத்தில் சியாமளா இருந்ததால் அவள் அவனைக் கவனியாத போது படத்தை மறைத்துப் பிடித்து கள்ளமாகப் பார்த்தான். முதலில் பரவாயில்லையாயிருந்தவள் இப்போது படங்களில் பார்த்துப் பார்த்து நன்றாகப் பழக்கமாகிப் போன பழைய தமிழ் நடிகையின் குடும்பப் பாங்கான சாயலோடு கவர்ச்சியாகத் தோன்றினாள். அந்தக் கணத்திலிருந்து அவன் அவளோடு மானசீகமாக சிநேகமாகிப் போனான்.

அவள் பெயர் மேரி என்றாள் சியாமளா. நெற்றியில் அவசரச் சுருக்கம் விழுந்தது. களைத்து வியர்த்து தியேட்டருக்கு படம் பார்க்க ஓடி வந்தவனுக்கு ஹவுஸ்புல் பலகையைப் பார்த்த ஏமாற்றம். கிறிஸ்டியனா ? அப்பவே சொல்லியிருக்கலாமே என்று கத்டிதினான் செல்வம்.

ஏன் ஏன் கிறிஸ்டியன் என்டா என்னடா ? கிறிஸ்டியன் என்டா மனுசரில்லையா ? நானும் கிறிஸ்டியன் தானே. என்னைத் தள்ளி வைச்சிற்றியா. ?.. .. .. என்று கடுகாகப் பொரிந்தான் டானியல்.

“அதுக்கில்லை மச்சான். இதெல்லாம் நடைமுறையில் ஒத்துவருமா ? நான் கோயிலுக்குப் போவேன். அவ சேர்ச்சுக்குப் போவா. பொட்டு வைக்கச் சொன்னால் வெறும் நெத்தியாக வந்து நிப்பா. சீலை கட்டச் சொன்னா கவுனோடு வருவா. இதெல்லாம் தேவையா ? நிம்மதியா வாழத்தான் கல்யாணம் என்று நான் நினைக்கிறேன்.”

எல்லாக் கேள்விகளுக்குமான பதில்களை சட்டைப் பையிலிருந்து எடுப்பது போல் உடனுக்குடன் எடுத்துவிடும் வல்லமை படைத்தவன் டானியல். நியாயங்கள் அவனது நுனிநாக்கில் மண்டியிட்டுக் காத்திருப்பது போலிருக்கும். அவனிடம் வாய் கொடுத்துத் தப்புவது கடினம். அவன் சொன்னான்.

“இதெல்லாம் ஆணாதிக்கமடா. ஆறுதலாக யோசிச்சுப் பார். எங்களுடைய மனசிலதான் எல்லாமிருக்கு. என்னையும் சியாமளாவையும் பார். நாங்க நிம்மதியாக சந்தோசமாக இல்லையா ? குழந்தைகுட்டி பெறவில்லையா ? கோயிலுக்குப் போகிறோம் சேர்ச்சுக்கும் போகிறோம். எங்களுக்குள் விட்டுக் குடுத்து அட்ஜஸ்ற் பண்ணிக் கொண்டு வாழ்கிறோம். பரந்து கிடக்கிற இந்த உலகத்தில் மதத்தைச் சொல்லி மனுசரைப் பிரிக்கக் கூடாது. நீ என்னை விடப் படிச்சவன். ஆனால் வீணாகப் பயப்பிடுறாய். மேரி உனக்கேற்ற அடக்கமான பெண். பிச்சுப் பிடுங்கல் இல்டிலாத மரியாதையான குடும்பம். விட்டுவிட எனக்கு மனசில்லை மச்சான்.”

சுpயாமளாவும் சொன்னாள். “எனக்கென்றால் நூற்றுக்கு நூற்றுப்பத்து வீதம் மேரியைப் பிடிச்சிருக்கு.”

“அதென்ன நூற்றுப்பத்து ? ”

“உங்கள் குணத்திற்கு ஒத்துப் போகக் கூடிய பிள்ளை. சாம்பல்தீவு பலாச்சுளை மாதிரி நிறம். கண்டால் விடமாட்டாங்க.”

டானியல் அதற்கு மேல் அடுக்கினான். “ரிசெப்சனிஸ்ட் கும் கிளார்க் வேலை. வயசு இருபத்தொன்பது. ஒரே மகள். அவர்கள் சேர்த்து வைச்சிருப்பதெல்லாம் மகளுக்குத்தான். சொந்த வீடு. இதற்கு மேல் என்ன வேண்டும் ?”

“பொம்பிளையை பாத்திற்றீங்க போல.”

“குடும்பத்தோடு எங்களுக்கு நல்ல பழக்கம். உன் முடிவு தெரிந்தால் வாய் வைச்சிருவன்.”

“இன்னமும் வைக்கவில்லையா ? நீ சொன்னதைப் பார்த்தால் பேசி முடிவு எடுத்தது மாதிரியல்லவா இருந்தது.”

“இன்னம் இல்லை. ஆனால், நான் கேட்டால் மறுப்புச் சொல்ல மாட்டார்கள்.”

“அவ்வளவுதானா”

“ஏன், என்ன கவலை ?”

“போய்க் கேட்டாப்பிறகு இல்லையென்று சொன்னால் என்ன செய்வாய் ?”

“ஓஹோ, அப்பிடிப் போகிறதா கதை, அப்ப தம்பிக்கு விருப்பமென்று சொல்லு. நான் பிடிச்சு முயல் தப்புகிறதாவது.”

“டானியல், எனக்கு மட்டும் கல்யாணம் கட்ட ஆசையில்லையா என்ன. கல்யாணம் கட்டி குடும்பத்தோடு உங்களுக்குப் பக்கத்தில் இருக்க வேண்டுமென்றுதான் ஆசை. ஆனால்! ”

“என்ன ?”

“வீட்டுப் பொறுப்பு இன்னம் இருக்கு மச்சான்.”

“டேய் அவனவன் கனடா வந்து கொஞ்சம் காசு பிடிபட்டவுடன் பொம்பிளைப் பைத்தியம் பிடிச்சு காதில் கடுக்கன் மாட்டிக் கொண்டு அலைகிறான். நீ அப்படியா. முப்பத்தேழு என்ன நாப்பத்தேழானாலும் பல்லைக் கடிச்சுக் கொண்டு குடும்பத்துக்காக உழைக்கக் கூடிய மனுசன். உன் பலம் உனக்குத் தெரியாது. கல்யாணம் கட்டினாப் போல தாய்பிள்ளையை மறந்திருவியா ? உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லாவே அமையும். சியாமளா நீர் என்ன சொல்றீர் ?”

“போய்க் கேக்கிறதுக்கு நாள் பார்த்து வைத்திருக்கிறேன். நீங்க ஓமென்றால் சரி.”

அந்த ஒற்றுமைத் தம்பதி அவனிடம் எடுத்துக் கொண்ட உரிமைக்கு முன்னால் உடைந்து போனவன், மெதுவாகச் சொன்னான்.

“டானியல், சின்னம்மாவும் அப்பாவும் மாமாவும் எனக்கு அங்கே பேசியிருக்கு இங்கே பேசியிருக்கு என்று அடிக்கடி கடிதம் போடுகிறார்கள். தங்கச்சிமார் கரை சேரட்டும் அதற்குப் பிறகு பார்க்கலாம் என்று இன்று வரைக்கும் மறுத்துக் கொண்டே வந்து விட்டேன். உன்னிடம் என்னால் அப்படிச் சொல்ல முடியவில்லை. நீங்கள் இருவரும் எவ்வளவு கரிசனையுடன் எனக்காகப் பார்த்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். நான் அதை மிகவும் உயர்வாக மதிக்கிறேன். அதனால்தான் வேதம் என்றாலும் பரவாயில்லை என்கிற முடிவுக்கு வந்திருக்கிறேன். எங்கள் வீட்டிலும் அயலிலும் இது பிரச்னைதான். ஆனால் உங்களுக்காக அந்தப் பிரச்னையை நான் சமாளிக்க வேண்டும். உங்களுடைய விருப்பத்தைப் ப+ர்த்தி செய்ய வேண்டியது என்னுடைய கடமை.”

டானியல் விழியுயர்த்திப் பார்த்தான். அதிகமாகக் கிடைத்த மரியாதையில் நாணி நிலம் நோக்கினாள் சியாமளா. அங்கே ஒரு மெளனம் நிலைகொண்டது. செல்வம் சாதாரணத்தில் அதிகம் பேச மாட்டான். இன்று பேசியது அதிகம் என வியந்தான் டானியல். சிறிது நேரம் கழித்துக் கேட்டான்.

“நாளைக்குப் போய் பொம்பிளையைப் பார்ப்பமா செல்வம் ?”

“நான் வரேல்லை.”

“பழையபடியும் முருங்கை மரத்தில் ஏறுகிறாய் ? ”

“இல்லை எனக்கு ஒரு மாதிரியிருக்கு. நீங்க மட்டும் போயிற்று வாங்க.”

டானியல் செல்வத்தைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தான். சியாமளா வெட்கத்தில் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.

பெண் கேட்க தம்பதிகள் போயிருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடக்கூடும். தன்னுடைய படத்தைப் பார்த்துவிட்டு அழகில்லை என்று பெண் மறுத்து விட்டால்! டானியலிடம் தனிமையில் அந்தச் சந்தேகத்தைச் சொல்லியிருந்தான்.

“உனக்கென்னடா குறைச்சல். ராசா மாதிரி இருக்கிறாய். அம்மாவிடம் குடித்த பால் இன்னம் முகத்தில் வடியுது. டை கட்டின வேலை. கை நிறையச் சம்பளம். கம்பனிக்கார். உன்னை எடுக்க அவர்கள் கொடுத்து வைச்சிருக்க வேனும்.”

டானியலும் சியாமளாவும் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு போயிருக்கிறார்கள். நல்ல காரியத்துக்கு முழுக் குடும்பமாகப் போனால்டி பெறுமதியாயிருக்குமாம்.

செல்வநாயகம் மிச்சமிருந்த நகத்தையும் கடித்துக் கொண்டு அவர்களுக்காகக் காத்திருந்தான்.

(தொடரும்)

karulsubramaniam@yahoo.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்