புதிய வானம்

This entry is part [part not set] of 42 in the series 20030626_Issue

வேதா


பால்கனி வழியே தெரிந்த சாலையிலும் , எதிர்வீட்டு மொட்டை மாடியில் நடைபயின்ற புறாவிலும் லயித்துப் போனபடி சென்னை ஞாயிறின் மங்கிய மாலைப் பொழுதில் நானும் என் நினைவுகளுடன் மெல்ல நடந்து சென்றேன்.பல விஷயங்கள் என்னைப் பொறுத்த வரையில் எதிர்பாராமல் அரங்கேறிவிடுகின்றன. இன்றும் கூட அப்படித்தான்! கிழக்குக் கடற்கரைச் சாலையின் ஓரமாய் அமைந்திருந்த அந்த தொண்டு இல்லம்…..மனதைவிட்டு அகல மறுக்கிறது ஒரு அணிலின் முகம் மட்டும். ‘மஞ்சள் நிறத்தழகி, மனசெல்லாம் வெளிளை; யார்னு சொல்லுங்க ? ‘ என்று புதிர் போட்டான். ‘ம்….வாழைப்பழம், சரியா ? ‘ சரியான பதிலை அவன் என்னிடம் எதிர்பார்க்கவில்லைதான்! ஒரு விஞ்ஞானியின் வேகமும் எழுத்தாளரின் கூர்மையும் இருந்தது அவன் அசைவுகளில்!!

துறுதுறு கண்கள்; பெயர் ரவி. எப்போதும் அவன் சிந்தித்துக்கொண்டே இருப்பதைச் சொல்லியது முன்நெற்றி நரம்பு. ‘இவனுக்கு தீக்காயம் ஆகிடுச்சு, எங்கே, காலைக் காட்டு.. ? ‘ அடுத்த குழந்தைகள் சொல்லும்போது கழிவிரக்கம் விரும்பாதவனாய், காலை விட்டுவிட்டு தன் மனசையே மறுபடி காட்டினான். நான் போன கொஞ்ச நேரத்துக்கெல்லாம், நாற்காலியில் குழந்தைகள் சூழ அமர்ந்திருந்த என்னை, ‘அக்கா! வந்து கீழ எங்க எல்லார்கூடயும் உட்கார்றீங்களா ? ‘ என்றான். செருப்பால் என் புத்தியில் அறைந்தது போல் இருந்தது அவன் வார்த்தை. ஓடிப்போய் கிழே அமர்ந்துகொண்டேன். விரிந்து கீழே புரண்ட என் துப்பட்டாவைச் சேர்த்தெடுத்து என் மடியிலேயே வைத்தான். என் மேல் அத்தனை குழந்தைகளும் வந்து விழுந்தன; மடியில் புரண்டன. ‘இந்த மடி இவ்வளவு புண்ணியம் செய்திருக்குமா என்ன ? ‘ என்று வியந்தேன். நிறைய குழந்தைகள் ‘கடி ஜோக் ‘ சொன்னது. ‘நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ‘ கன்னத்தை தொட்டுத் தொட்டுப் பார்த்தது. பெண் குழந்தைகள் என் கம்மலையும், பின்னலையும் ஆராய்ச்சி செய்தபடி இருக்க, கருப்பையா, ராஜலஷ்மி, ஹரி, துளசி, திவ்யா என்று அறிமுகப்படலம் நடந்தது. என் பெயரைக் கண்டுபிடிக்கச் சொன்னேன். நிறைய பேர் என்னென்னவோ சொல்லியும் , சரியாக ‘லஷ்மி ‘ என்று இவன் தான் ஜாக்பாட் அடித்தான். ஆனால், எனக்கு கொஞ்சம் முன்யோசனை பத்தாதுதான்!! ‘அது என் பேர்ல பாதி; முதல்ல என்ன வரும்னு சொல்லுங்க பாப்போம் ? ‘ என்று எதிர்கேள்வி போட்டேன். காற்று தீர்ந்த பலூன் ஆனது அவன் முகம். கடைசியில் யாரலும் கண்டுபிடிக்க முடியாமல் நானே தான் சொல்ல வேண்டி வந்தது. அதற்காக பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை அவன்.

அடிக்கடி என் கூட்டத்தில் இருந்து காணாமல் போனான். ‘ரவி எங்கே ? ‘ என்று நான் தேடும் ஒவ்வொரு சமயமும், என் மற்ற நண்பர்களைச் சுற்றிய கூட்டத்தில் எதையாவது கவனித்தபடி இருப்பான். அடிக்கடி என் குரலையும் உள்வாங்கிக் கொண்டு இருந்தான். ஒரு கதை சொன்னேன். அவனுக்குப் பிடித்த வகையில் புத்திக்கூர்மை அதில் இருக்காது என்று நிதானித்தபின் வேறிடம் தாவினான். என் தோழி பேசிய ஹிந்தி வார்த்தைகளை அவன் தனியே சொல்லிப் பார்ப்பதை கவனித்தேன். அவனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

குழந்தைகள் என்னை ‘சக்கரை நிலவே ‘ பாடச் சொல்ல, சலிப்பாய் ‘எப்போது பாட்டு முடியும் ? ‘ என்பதிலேயே குறியாக இருந்தான். சட்டென்று உணர்ச்சிகள் புறப்பட்டது அவன் விழிகளில்! தன்னைத் தோற்கடித்த என்னைத் தோற்கடிக்கும் வேகத்தில், ‘வெளிளைச் சிரிப்பழகன்; மஞ்சள் மனசழகன்; அவன் யார் ? ‘ என்று அடுத்த புதிர் போட்டான். நான் யோசித்து யோசித்து சலித்தேன். விடை தெரியவில்லை. அவன் தான் சொன்னான். விடையைவிட , அவன் வெற்றியை ரசித்தேன். ‘வசீகரா பாட்டு தெரியுமா ? ‘ என்று கேட்டான். பாடி முடிக்கும்வரை பொறுமையாக இருந்தான். ‘உனக்கு ரொம்பப் பிடிக்குமா ? ‘ என்று கேட்டேன். ‘அந்த முடிவிலி -ங்கற வார்த்தை சரியா தெரியலை, அதான் பாடச் சொன்னேன் ‘ என்றான். அதன் அர்த்தம் தெரியுமோ, என்னவோ ? நான் நிதானிப்பதற்குள், முதன்முதலாக என் கழுத்தை வளைத்து ‘தாங்க்ஸ்க்கா ‘ என்றான். விழிகள் கொஞ்சம் விஸ்தாரமாய்த் தான் இருந்தது. என்னமோ, அவன் ரசிப்பும், பார்வையும், அசைவுகளும் எனக்கு உன்னை நினைவுபடுத்தின.

‘அடுத்த முறை வரும்போது உன்னை மாதிரியே ஒரு அண்ணாவைக் கூட்டிட்டு வர்றேன்! ‘ என்று சொன்னேன். சந்தோஷமாகத் தலையசைத்தான். ‘நிறைய விடுகதை படிச்சுட்டு வாங்க! ‘ எனக்கு வீட்டுப்பாடம் கொடுத்தான். அவன் புத்திக்கூர்மையின் முன்னே என் மொத்தமும் மழுங்கிப்போன மாதிரி அவமானமாய் இருந்தது எனக்கு. புறப்படும் நேரம், ‘என் பேர் என்ன ? ‘ என்று சோதித்தான். நான் கொஞ்சம் தடுமாறி, ‘ரவி, சரியா ? ‘ என்று சொன்னதும்தான் நிம்மதி அவன் முகத்தில். ‘நீங்க நல்லா எல்லார்கூடயும் பேசறீங்க ‘ என்றான். இரண்டு தினங்கள் முன்பு யாரோ என் மனதில் அப்பிய சேற்றை அவனது வார்த்தைகள் கழுவியதுபோல் உணர்ந்தேன். ‘அடுத்த வாரமும் வாங்க ‘ என்று கையசைத்தான்.

வீட்டுக்கு வரும் வழியெல்லாம் நினைத்துக்கொண்டே வந்தவளுக்கு சட்டென்று விடுகதையின் விடை மறந்ததுபோல் இருந்தது. விடை மறந்தாலும், இவன் உருவில் ஒரு விடுகதை என் வாழ்வில் தொடங்குமோ ? என்று கூட தோன்றியது. வீடு வந்ததும் உடனே உன்னிடம் சொல்ல வேண்டும் என்று பரபரத்தேன். சரி, நீ தேர்வுக்குத் தயாராகும் சமயம் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று பேசாமல் இருந்தேன். கடற்கரையில் வைத்து என் கண்கள் விரிய சொல்வதிலும், காலாற நடந்துகொண்டே நீ என் கதை கேட்பதிலும் இருக்கும் சுகம் வேறு எதில் வரும் ? நான் மறுபடி பிறந்த கதையை உன்னிடம் மற்றொரு நாள் சொல்லிக்கொள்ளலாம் என்று என்னையே நான் சமாதானம் செய்துகொண்டேன். ம்…ஞாபகம் வந்தது, விடுகதைக்கான விடை…அதான்! முட்டை…..பால்கனி வழியே தெரிந்த சாலையிலும் , எதிர்வீட்டு மொட்டை மாடியில் நடைபயின்ற புறாவிலும் லயித்துப் போனபடி சென்னை ஞாயிறின் மங்கிய மாலைப் பொழுதில் நானும் என் நினைவுகளுடன் மெல்ல நடந்து சென்றேன்.

****

piraati@hotmail.com

Series Navigation

வேதா

வேதா