முக்காலி

This entry is part [part not set] of 42 in the series 20030626_Issue

இரா முருகன்


சாப்பிட்டு மீந்து போன சாதத்தோடு மின்சார குக்கர். மேஜை மேல் பிளாஸ்டிக் டப்பாவில் பல்கேரியத் தயிர். நாரத்தங்காய் ஊறுகாய்ப் பொட்டலம். பக்கத்து லேப்-டாப் கம்ப்யூட்டரில் கம்பெனியின் ஒரு வருஷத்து வருமான பட்ஜெட். கொஞ்சம் தள்ளி தொலைக்காட்சியில் பதினேழு டர்க்கி டவல் சேர்த்துத் தைத்த துக்கிணியூண்டு உடுப்பு இடுப்பில் அரைகுறையாக ஏறி இறங்கி நிற்க இரண்டு மாமிச மகா மலைகள் மோதிக் கொள்ளும் சூமோ மல்யுத்தம். ஏசி குளிரில் மீன் வாசம். மீறிக் கொண்டு, சாயந்திரம் கொளுத்தி வைத்த சந்தனாதி ஊதுபத்தி வாசனை. கட்டிலின் தலைமாட்டில் வார்னிஷ் அட்டையில் கொசகொசவென்று நவக்கிரகம் வரைந்த குருப்பெயர்ச்சி பலன் புத்தகம். கால் மாட்டில் மண்டி போட்டு பிரார்த்தனை செய்தபடி ஒரு அழகான தாய்லாந்துப் பெண். அடிக்க ஆரம்பித்த தொலைபேசி.

கணேசனுக்குச் சூழ்நிலையே அபத்தமாகப் பட்டது. அந்தப் பெண் வேறு பிரார்த்தனை முடிந்து கண் திறந்து பார்த்து, ‘ஆரம்பிக்கலாமா ? ‘ என்று கண்ணால் கேட்டாள்.

‘கொஞ்சம் இரு வரேன்.. ‘ என்றபடி கணேசன் கட்டிலில் இருந்து இறங்கி டெலிபோனை எடுக்க, அவள் வெகு சமர்த்தாக நார்த்தங்காய்ப் பொட்டலத்திலிருந்து ஒரு துண்டு எடுத்துக் கடித்து விட்டுக் குழப்பமாகச் சிரித்தாள்.

‘கணே..யார்ப்பா ரூமிலே ? ‘

நிர்வாகி குரல். தில்லியிலிருந்து தொலைபேசுகிறார். பாங்காக்கில் எல்லாம் ஓய்ந்த, இல்லை சகலமும் ஆரம்பமாகிற ராத்திரி ஒன்பது மணி. அங்கே தில்லியில் குளிர் துளைக்க, சகலரும் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் சாயந்திரம் ஆறரை மணி. போய், டிவி பெட்டிக்கு முன்னால் கம்பளியைப் போர்த்திக் கொண்டு உட்கார்ந்து கண்ணீர் விடவோ, யார் கோடிசுவரனாகிறான் என்று பார்த்து வயிற்றெறிச்சல் பட்டபடி பருப்பும் சப்பாத்தியும் சாப்பிடவோ இவரும் கிளம்ப வேண்டியதுதானே..

‘ஏம்ப்பா..கேட்டேன் இல்லே…யார் ரூம்லே..பொண்ணு சிரிச்ச மாதிரி கேட்டுது ‘

எஜமான். கம்ப்யூட்டர் கம்பெனி நிர்வாகி. நாலு கண்டத்திலும் நாற்பது நாடுகளிலும் கிளைகள். கணேசனை தாய்லாந்தில் சாப்ட்வேர் ஆர்டர் பிடிக்க அனுப்பி ஒரு மாதமாகிறது. இப்படி ராத்திரியில் கூப்பிட்டு, பிரீசேல்ஸ் நிலவரம் கேட்கிறார்..

‘சார்.. ஹோட்டல் பொண்ணு.. ‘

‘பொண்ணா..அவ என்ன பண்றா ‘

நீங்க கொடுக்கற அலவன்ஸ்லே அவளை வைத்துக் கொண்டு குடித்தனமா நடத்த முடியும் ? மசாஜ் செய்து விட வந்திருக்கிறாள். ஐநூறு பாட் கட்டணம். என் அரை நாள் அலவன்ஸ் அம்பேல்..தினசரி ஏகப் பட்ட பிராஸ்பெக்ட் விசிட்.. கால் வலிக்கிறது.. ஒரு வழியாக விவசாய பேங்கில் சேர்மன் ..ஒரு வெள்ளைக்காரர். திங்கள்கிழமை பிற்பகல் பார்க்க வரச் சொல்லியிருக்கிறார். அவர் மட்டும் சாப்ட்வேர் உருவாக்க, இருப்பதைத் தட்டிக்கொட்டிச் சரிப்படுத்தி ஓட ஒத்தாசை செய்ய ஆர்டர் கொடுத்தாலே, குரு பெயர்ந்தவுடன் டார்கெட்டை எட்டி விடலாம். ஒற்றைக் காலில் நின்றாவது அவரை எப்படியாவது இம்ப்ரஸ் செய்ய வேண்டும்.. அதற்குத் தயாராக இரண்டு காலையும் மிச்ச சொச்சத்தையும் இதமாக மசாஜ் செய்து பிடித்து விட இவள்..

‘உன் ரூம்லெ அவ என்ன பண்றான்னு கேட்டேன் ‘

நிர்வாகி குரலில் எரிச்சலைவிட, தான் கற்பனை செய்ததை கணேசன் சொல்லி உறுதி செய்து கொள்ளத் தவிப்பு தெரிந்தது.

‘சார்..அவ ‘

முட்டாளே யோசி..மசாஜ் பண்ண வந்தான்னு சொன்னால், உன்னை பாங்காக்குக்கு இதுக்குத்தான் அனுப்பியிருக்கேனா என்று எகிறலாம் எதிர்ப் பார்ட்டி.

‘சார்..இந்தப் பொண்ணு ஓட்டல்லே வேலை செய்யறா..என் துணியைத் திரும்பிக் கொடுத்துட்டுப் போறதுக்கு வந்திருக்கா.. ‘

‘ஏன் அதை அவ கிட்டே விட்டுட்டு வந்தே..எப்படி உன் ரூமுக்கு வந்தே. ‘

கணேசனுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. மரணக் கடியனுக்கு எல்லாம் சேவை செய்து சம்பாதிக்க ஆண்டவன் தலையில் எழுதி வைத்து விட்டான். நார்த்தங்காய் சுவைத்த மசாஜ் அழகி வேறு நாக்கை நீட்டி அழகு காட்டினாள்.

‘சலவை செய்த துணியைக் கொண்டு வந்திருக்கா சார்.. திங்கள்கிழமை பகல் நேரம் தாய்லாந்து விவசாய பேங்கிலே வரச்சொல்லி இருக்காங்க..இங்கிலீஷ்கார துரைதான் சேர்மன்.. பார்மலா டிரஸ் போட்டுக்கிட்டு கெத்தாப் போக வேணாமா ? ‘

‘தட்ஸ் ஆல் ? ‘

அதற்கு சே இவ்வளவுதானா என்று அர்த்தம்.

‘ஒண்ணுமில்லே கணே..என் மச்சினன் அய்யாசாமி கலிபோர்னியாவிலேருந்து சென்னை வந்திருக்கான்.. மியூசிக் சீசன்லே அவன் ஒய்ப் பாட ஏற்பாடு ஆகி ..சரி அதை விடு.. அவன் தாய்லாந்தில் புக்கட் போய்ட்டு அப்படியே கலிபோர்னியா திரும்பிப் போக ஆசைப் படறான். .நாளைக்குக் காலையிலே பிளைட்லே வரான்.. கவனிச்சுக்கோ.. சரியா.. சிரிச்சு வழியற ஓட்டல் பொண்ணை எல்லாம் சீக்கிரமாத் திருப்பி அனுப்பிடு .. அப்புறம் உன் கதையை சிரிக்கப் பண்ணிடுவா.. சேல்ஸ் பட்ஜெட் என்ன ஆச்சு ? இந்த வாரக் கடைசியிலே என் டேபிள்லே இருக்கணும் ‘

நிர்வாகி போனை வைக்க, கணேசன் தளர்ந்து போய் கட்டிலுக்கு வந்தான். மசாஜ் அழகி, உலர்ந்த நார்த்தங்காய்த் துண்டை வாயில் டால்பின் போல் கவ்விய படி, அவன் கால்களை எடுத்துத் தன் மடியில் வைத்துக்கொண்டு பிடித்துவிட ஆரம்பித்தாள்.

‘போனில் யார்..உன் பெண்டாட்டியா ? ‘

தட்டுத்தடுமாறி ஊறுகாய் வாடையோடு கிள்ளை மொழி.

உன் பெயர் என்ன என்று பதிலுக்குக் கேட்டான் கணேசன்.

‘னாய். நிட்னாய் அப்படான்னு இங்கே எல்லோரும் செல்லமாகக் கூப்பிடுவாங்க ‘

கணேசனின் வலதுகாலை மேல் கூரையில் படுகிற மாதிரி உசரத் தூக்கி, முழங்காலில் ஒரு கராத்தே அடி கொடுத்து மடக்கிப் படுக்கையில் விட்டாள். இப்போ எப்படி இருக்கு என்பது போல் பார்வை. கட்டிலில் இருந்தபடியே எட்டி இன்னொரு நார்த்தங்காய்த் துண்டை எடுத்து சப்புக் கொட்டியபடி, ‘இது என்ன மாதிரி மீன் வத்தல் ? ‘ என்று கேட்டாள்.

சுகமாக இருந்தது. இல்லாமல் என்ன செய்யும் ? ரொம்ப டாசண்ட் ஆன மசாஜ் பெண்கள். ஓட்டலே ஏற்பாடு செய்யும்.. என்று ரிசப்ஷனிஸ்ட் பெண் தினசரி ராத்திரி திரும்பும் போது அறிவிக்கும் போது கணேசனுக்கு இனம் புரியாத குறுகுறுப்பு. எல்லோரும் ஆஹா ஓஹோ என்று சொல்லும் தாய்லாந்து மசாஜ் ஓட்டல் ரூமிலேயே கிடைக்கிறது.. இன்றைக்கு வாரக்கடைசி..அனுபவித்துவிட வேண்டியதுதான் என்று தீர்மானித்து ஓகே சொன்னான். டாசண்ட்டே இவ்வளவு சுகமாக இருக்கிறது என்றால், மற்றதைப் பற்றி ஆற அமர விசாரித்து வைத்துக் கொள்ள வேண்டும்..

திரும்ப டெலிபோன் ஒலித்தது. நிட்னாய் எடுக்கப் போனாள். வேண்டாம் என்று தடுத்து விட்டு கணேசன் சலித்துக் கொண்டே இறங்கினான்.

நிர்வாகிதான்.

‘அய்யாசாமி அரை வழுக்கையும், தொப்பையுமா, மூக்கிலே பெரிய மச்சத்தோட இருப்பான். மிச்சத்தை நீயே பார்த்துக்கோ.. எதுக்கும் ஒரு அட்டையிலே அவன் பேரை எழுதிப் பிடிச்சுக்கிட்டு ஏர்போர்ட் எக்சிட்லே நில்லு..சரியா.. அவன் ஒரு வி ஐ பின்னா அவன் ஒய்ப் வி வி ஐ பி.. எது கேட்டாலும் கிடைக்கற மாதிரி ஏற்பாடு செய்யணும்.. சரியா…. ஆமா.. அந்தப் பொண்ணு ‘

‘போயாச்சு சார்.. ‘ கணேசன் ஈனசுவரத்தில் பதில் சொல்லியபடி படுக்கைக்கு வந்தான். அதற்குள் மசாஜ் அழகி ஊறுகாயை ஒரு வழி பண்ணி விட்டு, மிச்சமிருந்த பல்கேரியத் தயிரை விரலால் தொட்டு நக்க ஆரம்பித்திருந்தாள். இன்னும் ஒரு போன் வருவதற்குள் இவள் வந்த வேலை முடியாவிட்டால் ஊறுகாய் தீர்ந்து போய் நாளை ராத்திரி அவன் நிட்னாயைத் தொட்டுக் கொண்டுதான் தயிர் சாதம் சாப்பிட வேண்டும். அதற்கு இன்னொரு ஐநூறு பாட் அழ வேண்டும். இந்த ஊர் சாப்பாடு பிடிக்காமல் தயிர் சாதத்தில் ஒப்பேற்றிக் கொள்ள ஆரம்பித்து வெற்றிகரமான மூன்றாவது வாரம் இப்படி முடிய வேண்டாம்..

‘நிட்னாய்..ஓட்டலில் உனக்கு சாப்பிட ஏதும் தரமாட்டாங்களா ?

‘சாயந்திரம் தான் ஜப்பானீஸ் ரெஸ்ட்டாரண்டில் தவளைக்கால், வெளியே தள்ளு வண்டியில் ரெண்டு பொட்டலம் வறுத்த வெட்டுக்கிளி சாப்பிட்டேன்.. திரும்பப் போய் நத்தையும் நண்டும் கலந்து நூடில்ஸோடு சாப்பிட்டு விட்டு வீட்டுக்குக் கிளம்பினால் நடு ராத்திரிக்குப் போய்ச் சேருவேன்..அப்புறம் உக்காந்து ஓய்வா சாப்பிட எங்கே நேரம்.. பொறிச்ச நெருப்புக்கோழி சாப்பிடணும்னு ரொம்ப நாளா ஆசை..இன்னிக்காவது போகிறபோது ஹோட்டல் சமையல்கட்டில் நுழைஞ்சுட்டுப் போகணும்..என் தோழி தான் முக்கிய சமையல்காரியா இருக்கா .. ‘

ஊர்வன, பறப்பன, நிற்பன, நடப்பன என்று சகலமானதையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டு இன்னும் பசியடங்காத ஆரணங்கு அவன் விரலைச் சொடுக்குப் போட்டுக் கொண்டே கடிப்பது போல் பாவ்லா காட்ட கணேசன் அவசரமாக பின்னால் இழுத்துக் கொண்டான். நெருப்புக்கோழி சமைக்கும் தோழி வாய்த்த டாசண்டான அழகி. உஷாராக இருப்பது நல்லது.

அவள் இதமாக நெற்றியை மெல்ல வருடி, தோள்களை மெதுவாக, மிக மெதுவாகப் பிடித்து விட, அவனுக்கு கண்கள் செருகத் தொடங்கிச் சுருள் சுருளாகச் சுகமாகத் தூக்கம் வந்தது.

எழுந்தபோது நடுராத்திரி. டிவியில் கூம்பு கூம்பான கோபுரங்கள் பக்கம் புத்த பிக்குக்கள் வரிசையாக நகர்ந்து கொண்டிருந்தார்கள். டாப்பாயில் வைத்திருந்த ஆறு வாழைப்பழங்கள், ஒரு பாக்கெட் பிஸ்கட், பிளம் கேக் இவற்றின் மிச்ச சொச்சங்களோடு, பூப்போட்ட கைக்குட்டையையும் கட்டிலில் விட்டுவிட்டு நிட்னாய் போயிருந்தாள்.

கால நேர விவஸ்தையில்லாமல் வந்த தூக்கம். கணேசனுக்குத் தன் மேலேயே எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது.

நாளைக்கு வந்து சேரும் அய்யாசாமிக்கு பேனர் எழுதிக் காட்ட வேண்டுமே. அட்டைக்கு எங்கே போக ? ரிசப்ஷனுக்கு போன் செய்யலாமா ? அய்யாசாமி நாசமாகப் போகட்டும். திரும்பத் தூக்கம் வருகிறது..

தொலைபேசி அதட்டி எழுப்ப விழித்துக் கொண்டபோது விடிந்திருந்தது.

அய்யாசாமிதான். விமான நிலையத்திலிருந்து கூப்பிட்டார். உனக்காக ஒரு மணி நேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறோம். சென்னை – கோலாலம்பூர் – பாங்காக் என்று ஏகமாகச் சுற்றிக் கொண்டு வந்திருக்கிறோம்.. பெட்டி மலேசியாவிலேயே தங்கிவிட்டது.. நீ முதலில் வா..

அய்யாசாமி ஆங்கிலத்தில் நாசுக்காக அலற, பல் கூட விளக்காமல், ராத்திரி முழுக்க எரிந்த விளக்கை அணைக்காமல் கிளம்பினான் கணேசன். மாங்காய் மடையன். சென்னையிலிருந்து நேரடியாக பிளைட் பிடித்து வராமல் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டு கே.எல் போய், பெட்டியைக் கோட்டை விட்டு.. அய்யாசாமிக்குத் தங்க ஒரு அறை.. எல்லாம் வந்து பார்த்துக் கொள்ளலாம்..

வெடவெடவென்று கெச்சலாக நாகேஷ் கெட் அப்பில் இருந்தார் அய்யாசாமி. பக்கத்தில் பத்து பதினைந்து வருடம் முந்தி பீல்டைக் கலக்கி ரிட்டையரான பழைய ஹீரோயின் போல் பொதபொதவென்று சூடிதாரில் சாமியின் மாமி. கூடவே இன்னும் யாரோ.

‘நான் ராஜாமணி. இவங்க கூட நானும் உங்கள் சாப்ட்வேர் கம்பெனியில் முதலீடு செய்திருக்கிறேன்.. ஏஞ்சல் பண்டிங்.. ‘

தரையோடு தரையாக இருந்த கட்டை குட்டை ராஜாமணி கால் கட்டை விரலில் எக்கி நின்று கணேசன் கையைக் குலுக்க, மாமி சொன்னாள் – ‘என்னோட தம்பிதான் இவன்.. கேடரிங் டெக்னாலஜியிலே டாக்டரேட் வாங்கியிருக்கான்..இவங்க ரெண்டு பேருமா கலிபோர்னியா முழுக்க ஆறு உடுப்பி ஓட்டல் நடத்தறாங்க.. நான் சின்னதா ஒரு இந்தியன் டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் வச்சிருக்கேன் ‘

கசங்கிய உடையும், தூக்கம் விழித்துச் சிவந்த கண்ணுமாக வந்தவர்களைப் புது மரியாதையோடு பார்த்தான் கணேசன். படியளக்கிற தெய்வங்கள். உடனடி லாபம் எதிர்பார்க்காமல் ஏஞ்சல் பண்டிங்க் என்று முதலீட்டைக் கொட்டிய நெட்டை, குட்டை, குண்டு தேவதைகள்.

‘மங்களாவுக்கு பில்டர் காப்பி வேணும்..எங்கே கிடைக்கும் ? ‘ அய்யாசாமி கேட்டார். மனுஷர் இன்னும் கலிபோர்னியா காப்பி கிளப் அடுப்படியில் மனதளவில் இருப்பார் போல் என்று நினைத்துக் கொண்ட கணேசன் ஜாக்கிரதையாகப் பேச்சை மாற்றினான்.

‘பாங்காக் சிட்டி போனால் கிடைக்கும் சார்… முதல்லே உங்க பெட்டி வரலேன்னு கம்ப்ளெய்ண்ட் கொடுத்திட்டுப் போகலாம்.. வழியிலே ஸ்டார்பக்கில் காப்பி வாங்கிக்கலாம் ‘

‘ஓ..இங்கேயும் ஸ்டார்பக் உண்டா ? ‘ ராஜாமணி நொடியில் கணேசன் கையைக் குலுக்கினான். இவனை வசப்படுத்தினால், அய்யாசாமி தம்பதியை வளைத்துப் போட்டுவிடலாம் என்று கணேசன் கணக்குப் போட்டான். மிஞ்சிப் போனால் கணேசனை விட நாலைந்து வருடம் பெரியவனாக இருப்பான்.. அவ்வளவுதான்.

‘ராஜா..உன்னை..உங்களை அப்படிக் கூப்பிடலாமா ? ‘

‘நல்லாக் கூப்பிடுடா ‘

ராஜாமணி எள்ளென்றால் அவன் உசரத்துக்கு ஏற்ற அரை ஆழாக்கு எண்ணெயாகத் தளும்பி எழும்பி நின்று இன்னொரு தடவை எக்கி கணேசனின் கையைக் குலுக்கினான். இந்த ரேட்டில் போனால் சாயந்திரத்துக்குள் கை சுளுக்கி நிட்னாயை மசாஜ் செய்யக் கூப்பிட வேண்டி இருக்கும். அவளை நினைக்கும் போதே குறுகுறுவென்று ஒரு இன்பமான நினைவு. கூடவே ஊறுகாய் வாடையோடு ஒரு நெருப்புக் கோழி எட்டிப் பார்த்து விட்டு பீங்கான் தட்டில் தலை புதைத்துக் கொண்டது.

தாய் ஏர்வேஸ் கவுண்டரில் ஒரு தடவைக்கு இரண்டு தடவை விஷயத்தை சாங்கோபாங்கமாகக் கேட்டுவிட்டு, ஒரு தாத்தா அதிகாரி முழுக்க தாய்-மொழியில் மொழியில் அச்சடித்த காகிதத்தை நீட்டிப் பூர்த்தி செய்யச் சொன்னார். அய்யாசாமி பேய் முழி முழிக்கப் பயந்து போய் தன் வயதில் இன்னொருத்தரை அழைத்து வந்தார். ஆரணங்குகள் எல்லாம் எங்கோ மறைந்த சனிக்கிழமை விடிகாலையில் பெரிசுகளின் மேற்பார்வையில் அய்யாசாமி இம்போசிஷன் எழுதுவதுபோல் மூன்று முறை காகிதங்களில் கட்டங்களை நிரப்பி வெளியே வந்தபோது கணேசன் தோளில் சாய்ந்து தூங்க ஆரம்பித்து விட்டார்.

‘பெட்டி எப்போ வரும் ? ‘ கிளம்பும் முன் நினைவாக கணேசன் கேட்க, அதிகாரி அமர்த்தலாகச் சொன்னார் – ‘உங்கள் ஓட்டலில் மதியத்துக்குள் டெலிவரி செய்யப்படும் ‘

தகவல் அறிந்ததற்காக ராஜாமணி இன்னொரு தடவை கைகுலுக்க ஆயத்தமாக, கணேசன் அந்த அமெரிக்க கோஷ்டியோடு டாக்சி ஸ்டாண்ட் பக்கம் போனான்.

‘சுக்கும்வித் சாய் ஹான் ‘ டிரைவரிடம் தாய்-மொழியில் சொன்னான் கணேசன்.

‘இப்பத்தான் இங்கே நீ வந்ததாச் சொன்னாங்க ..அதுக்குள்ளே இம்புட்டு மலையாளம் படிச்சுட்டியா ? ‘ என்றான் ராஜாமணி.

‘அசடே.. அது மலையாளம் இல்லை.. கட்டகானா.. ‘ தப்புத்தப்பாக விளக்கம் கொடுத்த மாமி தொடர்ந்து கேட்டாள், ‘ஏம்ப்பா இங்கே இந்தியக்காரங்க நிறைய இருக்காங்களா ? ‘

‘உண்டே.. ஏன் கேக்கறீங்க மாமி ? ‘

‘சாயந்திரம் இங்கே நம்ம ஜனங்களுக்கு முன்னாலே சின்னதா ஒரு பாட்டுக் கச்சேரி ஏற்பாடு பண்ணிடு.. இவ்வளவு தூரம் வந்துட்டு நம்ம மனுஷாளுக்கு நம்ம சங்கீதத்தை அனுபவிக்க என்னாலே ஆன உபகாரம் செய்ய வேண்டாமா ? நீ வல்லாளகண்டன்.. புலிப்பால் கேட்டாலும் காய்ச்சி ரெண்டு ஸ்பூன் சக்கரை போட்டு ஆத்தி ஊத்தி டம்ளர்லே கொண்டு வந்து கொடுப்பியாமே.. உங்க பாஸ் சொன்னார் ‘

கெட்டது குடி. கணேசன் படித்த எந்த கிரைசிஸ் மேனேஜ்மெண்ட் வகுப்பிலும் இம்மாதிரி சூழ்நிலைகளை எப்படிச் சமாளிப்பது என்று தாடி வைத்த புரபசர்கள் சொல்லிக் கொடுத்ததில்லை. பாங்காக்கில் புலிப்பால் கூடக் கிடைக்கலாம். கர்நாடக சங்கீதம் பாட, கேட்க எங்கே போய் ஏற்பாடு செய்வது ?

‘ஏண்டா உன்னோட பிரண்ட்ஸ் எத்தனை பேர் தேறும் ? ‘ ராஜாமணி முன் சீட்டில் சீட் பெல்ட் அணிந்த பிள்ளையாராக ஆரோகணித்து இருந்து பின்னால் திரும்பிக் கேட்டான்.

என்னத்த பிரண்ட்ஸ் ? வந்ததும் சூட் தைத்துக் கொடுத்த சர்தார்ஜி, பஞ்சாபி ஓட்டல் நடத்தும் குரானா, அங்கே வெயிட்டர்களான நாலு பெங்காலி வழுக்கையர்கள்.. விவசாய பேங்கில் பார்த்த ஒரு சிந்திக்கார அதிகாரி.. இவர்களைப் பிடித்துக் கட்டிப் போட்டு கர்நாடக சங்கீதம் கேட்க வைக்க முடியும் என்று தோன்றவில்லை. ஆனாலும் என்ன ? நிர்வாகி ஆணையிட்டிருக்கிறார். படியளக்கும் தெய்வங்கள் கேட்கும்போது முடியாது என்று முகத்தில் அடித்தது போல் சொல்ல முடியாது.

‘பிரண்ட்ஸ் நெறைய உண்டு.. ஆனா திடார்னு கச்சேரின்னு ஏற்பாடு செஞ்சா.. பக்க வாத்தியத்துக்கு எங்கே போறதுன்னுதான் யோசனை.. ‘

புத்தி தீட்சண்யத்தோடு லா-பாயிண்ட் எடுத்து வக்கீலுக்குக் கொடுத்த குமாஸ்தா போல் கணேசன் மாமியைப் பார்க்க, அவள் துச்சமாகச் சிரித்தாள்.

‘அந்தக் கவலையே உனக்கு வேண்டாம்.. இவர் என்னத்துக்கு இருக்கார்.. நல்லா கஞ்சிரா அடிப்பார். ராஜாமணி வயலின் வாசிப்பான்.. வாத்தியம் எல்லாம் பெட்டியிலே இருக்கு.. மதியத்துக்குள்ளே வந்து சேர்ந்துடும்.. மெட்ராஸ் கச்சேரி மட்டும் கான்சல் ஆகலேன்னா இவ்வளவு நேரம் ஊர் முழுக்க அதைப் பற்றித்தான் பேசிக்கிட்டிருப்பாங்க.. ‘ மாமி ராஜாமணியைப் பார்த்தாள்.

‘வெள்ளிக்கிழமை மத்தியானம் ஒரு மணிக்கு கச்சேரின்னு சொல்லிட்டு, அங்கே போய் நின்னபோது, வியாழக்கிழமையை வெள்ளின்னு தப்பாப் போட்டுட்டோம்..தேதியைப் பார்த்திருக்கக் கூடாதான்னு நம்ம மேலேயே பழி போடறாங்க.. என் ஆர் ஐன்னா இளப்பம். நாங்க அனுப்பற டாலர் மட்டும் வேணும்.. ‘ ராஜாமணி குறிப்பறிந்து அனுபல்லவி பாடினான்

‘நாங்க வியாழக்கிழமை வராததாலே பதிலா சபா காண்டான் சரக்கு மாஸ்டரே சகபாடிகளோடு பாடிட்டாராம்.. அடுத்த சீசனில் ஒரு சேஞ்சுக்காக இவங்களையே சாயந்திரக் கச்சேரிக்கு மேடையேத்தி, வித்வான்களைக் காண்டானில் போடலாம்னு குப்புடு விமர்சனம் எழுதியிருக்காராம் ‘

மாமி தொடர்ந்து சரணம் பாட, கஞ்சிரா அடிக்க வேண்டிய அய்யாசாமி கஞ்சா அடித்ததுபோல் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்.

ஒரு தீர்மானத்தோடேயே கலிபோர்னியாவிலிருந்து கிளம்பியிருக்கிறார்கள். சென்னை பிழைத்து விட்டது. பாங்காக் என்ன ஆகப் போகிறதோ..

சுக்கும்வித் வீதியில் ஆறாம் குறுக்குத் தெருவில் ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குள் நாலு பேராக நுழைந்தபோது. மூன்றாம் பேர் அறியாமல் இவர்களைப் புக்கட்டுக்கு டிக்கட் வாங்கிக் கொடுத்து உடனே அனுப்பி வைக்காவிட்டால் இரண்டு நாள் விடுமுறையை ஒரு வழி பண்ணி விடுவார்கள் என்று கணேசன் மனம் மொணமொணக் கணக்குப் போட, கவுண்டருக்குப் போனான்.

அய்யாசாமி தம்பதிகளுக்கு ஒன்றும் ராஜாமணிக்கு ஒன்றுமாக பிரம்மாண்டமான இரண்டு அறைகள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. அய்யாசாமியின் பர்ஸில் இருந்து டாலர் நோட்டுக்களும் டாலர் டிராவலர் செக்குகளும் பிதுங்கி வழியக் கண்டு பரவசமடைந்த ஓட்டல் வரவேற்புப் பெண் அவர் பெயரை ஆங்கிலத்தில் AYYA$$AMY என்று கம்ப்யூட்டரில் பதிந்து கொண்டாள்.

ஓட்டலில் வரவேற்பறைக்கு இரண்டு பக்கமும் பெரிய பெரிய ஹால்கள். அங்கே வெள்ளைப் படுதா கட்டி கொஞ்சம் கன்னடம் போல், கொஞ்சம் தெலுங்கு போல் தெரியும் தாய்-மொழியில் ஏதோ நீளமாக எழுதிய பேனர்களை வைத்துக் கொண்டிருந்தது மாமியின் கழுகுக் கண்ணில் பட, என்ன என்று விசாரி என்று கணேசனுக்கு உடனடி ஆணை பிறப்பித்தாள்.

‘எங்கள் விருந்தாளிகள் மகிழ தாய்-இசை நிகழ்ச்சி. புகழ் பெற்ற தாய்லாந்து பாடகர்கள் நாட்டுப் பாடல், பாப் பாடல் எல்லாம் பாடப் போகிறார்கள். இன்றைக்கு சாயந்திரம் ஆறு மணிக்கு அவசியம் வந்து இருந்து கேளுங்கள் ‘

வரவேற்புப் பெண் அழகாகச் சிரித்துப் பத்திரிகை எடுத்துக் கொடுத்தாள். ‘ஒவ்வொரு அறையிலும் கவரில் போட்டு நேற்று இரவு அழைப்பு வைத்திருக்கிறோம் ‘ என்றும் சொன்னாள். நிட்னாய் அதையும் நாரத்தங்காய் ஊறுகாயோடு மென்று தின்று விட்டாளா என்று தெரியவில்லை கணேசனுக்கு.

‘நல்ல சபையாக இருக்கே..அக்கா பாடலாம் இங்கே ‘

ராஜாமணி சாவகாசமாக சர்ட்டிபிகேட் வழங்கிக் கையைக் குலுக்க, அய்யாசாமியும் மங்களாவும் சுறுசுறுப்பாக இரண்டு பக்கமும் உலுக்க, கணேசன் சங்கடமாகப் பார்த்துக் கொண்டு வரவேற்பழகியை நெருங்க, அவள் கலவரத்துடன், என்ன விஷயம் என்றாள்.

‘இந்த அம்மா இன்னிக்கு சாயந்திரம் இங்கே பாடணும்..இந்திய இசை..ஏற்பாடு செய்ய முடியுமா ? ‘

கணேசன் ஆரம்பிக்க, ‘இவங்க ஓட்டல் கிளை புக்கெட்லே இருந்தா நாளையிலேருந்து ஒரு வாரம் எக்சிக்யூட்டிவ் ச்வீட் ரிசர்வ் செய் ‘ என்று டாலர்சாமி சொன்னதிலிருந்து புரிய வேண்டியதைப் புரிந்து கொண்ட அவள் பின்னறைக்கு ஓடிப்போய் மேனேஜரைக் கூட்டி வந்தாள். பாதி ஆம்லட் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பிடித்து இழுத்துவரப்பட்ட அவர் டாலரிலே பேசும், பாடும், மூச்சு விடும் அமெரிக்க டூரிஸ்டுகள் என்றதும் உணர்ச்சிவசப்பட்டு, உடனே சரி சொல்லி விட்டார்.

‘மெயின் அய்ட்டம் ஆறு மணிக்கு..நீங்க ஐந்து மணிக்கு ஆரம்பித்து ஒரு மணி நேரம் இசை மழை பொழியுங்கள் ‘ என்று மங்களா மாமியை வாழ்த்தி விட்டு, ஆம்லட்டை விட்ட இடத்திலிருந்து பிடிக்க மேனேஜர் உள்ளே போக, மாமி பார்த்த எந்தரோ மகானுபாவுலு நன்றிப் பார்வையில், நடுவில் கவுண்டர் மட்டும் இல்லாவிட்டால் ராஜாமணி எக்ஸ்ற்றீம்லி லாங்க் ஜம்ப் செய்து அந்தப் பக்கம் போய் அவர் காலடியில் நாலடியாராக சாஷ்டாங்க நமஸ்காரம் செய்திருப்பான்.

அவரவர் அறைகளைக் காட்டிவிட்டு தளர்ச்சியாகத் தன் அறைக்குக் கணேசன் திரும்பும்போது, ராஜாமணியும் கூடவே ஓட்டமும் நடையுமாக வாசலில் நின்று ஒரு விரலைக் காட்டினான்.

‘உன் ரூம்லேயே பாத்ரூம் இருக்கே ‘ என்று கணேசன் நினைவுபடுத்த, ‘அட, அது இல்லேப்பா .. இங்கே ராத்திரி எல்லாம் தூள் படுமாமே.. நைட் ஷோ..மிட் நைட் ஷோ..லேட் நைட் ஷோ..மசாஜ் கூட இங்கே மஜாவா இருக்கும்னு கேள்விப்பட்டேனே.. ‘

பொரித்த, வெந்த நெருப்புக்கோழி சாப்பிடும் அகோரப்பசி அழகிகள், கோழி சைஸில் பாதி இருக்கும் இவனை ஏடாகூடமாக ஏதாவது செய்து விட்டால் என்ன ஆகும் என்ற திகிலோடு கணேசன் அவன் நீட்டிய கையைக் குலுக்காமல் நின்றான்.

‘எல்லாம் நீ புக்கெட்லே போய் அனுபவி ராஜா.. படா ரீஜண்டா இருக்குமாம்.. பாங்காக் என்ன பிஸ்தா.. ராத்திரியே உனுக்கும் உன் மச்சான், அக்கா அல்லாருக்கும் பிளைட்டு ஏற்பாடு செய்யச் சொல்லிட்டேன்.. இப்ப நாஷ்தாவும் ஏற்பாடு செய்தாச்சு.. உன் அதிர்ஷ்டம், வெயிட் போடாத வெயிட்ரஸ் எடுத்துட்டு வரலாம்.. உடனே ரூமுக்குப் போ ‘

கணேசன் அறைக்கதவைச் சாத்தினான். இவனிடம் தன் விசிட்டிங்க் அட்டையை முதலிலேயே கொடுத்திருந்தால் கணேசன் என்ன உத்தியோகம் பார்க்கிறான் என்பதை ஞாபகம் வைத்திருப்பான்.

கணேசன் ஷவரில் இருந்தபோது அறைவாசலில் அழைப்பு மணி. கிட்டத்தட்ட ஆர்க்கிமிடாஸ் போல் வெளியே கிளம்பியவன், பூப்போட்ட கைக்குட்டைக்காக நிட்னாய் வந்திருப்பாளோ என்று யோசித்து, அவசரமாக உடுத்திக் கொண்டு கதவைத் திறந்தான்.

ராஜாமணி.

‘கணேசா..பெட்டியெல்லாம் வந்தாச்சு..தாய் ஏர்வேஸ்லேயிருந்து ஒரு அழகான பொண்ணு வந்து ரூமிலேயே கொடுத்திட்டுப் போனா..இத்தனை நேரம் அவ கையைப் பிடிச்சுக் குலுக்கிட்டு இப்பத்தான் விட்டேன்.. ‘

விரைப்பாக வைத்த கையைப் பாசத்துடன் பார்த்தபடி ராஜாமணி சொன்னான். அற்ப சந்தோஷம் அடைந்த அவன் இனி ஆயுசுக்கும் கை அலம்புவான் என்று கணேசனுக்குத் தோன்றவில்லை.

‘அப்போ நிம்மதியா பெட்டியிலேருந்து கொட்டாங்கச்சி வயலினை எடுத்து வச்சு பிராக்டிஸ் பண்ணு.. சாயந்திரம் வாசிக்க வேண்டாமா ? ‘

கணேசன் கழற்றி விடுவதிலேயே குறியாக நிற்க, ராஜாமணி இடித்துத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான்.

‘அக்கா உன்னை உடனே வரச் சொல்றா ‘

‘பிரட் டோஸ்டும் சாண்ட்விச்சும் கட்டோடு பிடிக்கலே..ஓடிப்போய் உடுப்பி ஓட்டலாப் பார்த்து, இட்லியும், கெட்டிச் சட்னியும் பத்திரிகைக் காகிதத்திலே சணல் கயிறு கட்டி பார்சல் செய்து, கூடவே தூக்குப் பாத்திரத்தில் சாம்பாரும் சுடச்சுட வாங்கி வந்து சேரு ‘ என்று ஆணையிடப் போகிறாளோ என்று கணேசனுக்கு அடுத்த கட்ட திகில். கூப்பிட்டவனோடு கூடப் போனான்.

‘அதெல்லாம் ஒண்ணும் வேணாம். ஒரு முக்காலி வேணும் ‘

மாமி அமர்த்தலாகச் சொல்ல கணேசனுக்கு ஒரு இழவும் புரியவில்லை.

‘என்ன வேணும்னு சொன்னீங்க ? ‘

‘முக்காலிப்பா.. முக்காலி.. ஸ்டூல்.. ‘ அய்யாசாமி கையால் அபிநயித்த கனபரிமாணத்தில் நிட்னாய் கிடைக்கலாம். முக்காலிக்கு எங்கே போக ?

‘எனக்குத் தரையிலே உட்கார்ந்து பாட கஷ்டம்..கால் மரத்துப் போயிடும்..முதுகுவலி வேற..முக்காலியிலே குத்த வைச்சு உக்கார்ந்து பாடுவேன்.. இவங்க தரையிலே உட்கார்ந்து பக்க வாத்தியம் வாசிப்பாங்க ‘

மாமி அய்யாசாமியையும் ராஜாமணியையும் அற்ப ஜந்துக்களாகப் பார்த்தபடி விளக்கினாள். அய்யாசாமி காலில் செருப்பை நுழைத்துக் கொண்டு டாலர் பையைத் தூக்கிக் கொண்டு ‘வா கணேசா..போய் வாங்கி வந்துடலாம் ‘ என்று கிளம்பினார்.

இவர்கள் பேயும் இல்லை. இது புளியமரமும் இல்லை. கணேசன் லிப்டில் இறங்கப் பொத்தானை அழுத்தினான்.

‘நானும் வரேன் ‘ என்று ஓடி வந்தான் ராஜாமணி. நல்ல வேளையாக, ‘நீ பிராக்டிஸ் பண்ணு.. ஹூஸ்டன் கச்சேரியிலே நடுவிலே ஸ்வர வரிசை மறந்து போய்க் கழுத்தை அறுத்தே.. சுருதி சுத்தமா இருக்கணும் இங்கெல்லாம் .. ஞானஸ்தர்கள் இருக்கப்பட்ட இடம் ‘ என்று அய்யாசாமி அவனை விலக்கினார்.

வெய்யிலில் சுக்கும்வித் வீதியில் முக்காலி தேடி நடையை எட்டிப் போட்ட இருவரணியைப் பின்னால் இருந்து துரத்தியபடி, ‘சார்..சார் ‘ என்று ஒரு அழுக்கு ஜீன்ஸ் தாய்-தடியன் ஓட்டமும் நடையுமாக வந்தான்.

‘என்னப்பா ? ‘ அய்யாசாமி கேட்டார்.

ஜீன்ஸ் காரன் கையில் மறைத்தும் மறைக்காமலும் பிடித்திருந்த புகைப்படங்களைப் பார்த்ததும் கணேசனுக்கு விஷயம் விளங்கிவிட்டது.

‘கண்டுக்காதீங்க வாங்க ‘ என்று கணேசன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு கிளம்ப, ஜீன்ஸ்காரன் லட்சியமே செய்யாமல் அய்யாசாமி பக்கத்தில் போய் அவர் காதில் அரைகுறை ஆங்கிலத்தில், ‘பொண்ணு வேணுமா ? ‘ என்று விசாரித்தான்.

மங்களமான பயத்தால் ஏக பத்னி விரதனான அய்யாசாமி ‘நோ ‘ என்று தெருவே எதிரொலிக்கக் கூச்சல் இட்டார்.

‘ஓகே.. ஓகே …அப்ப பையன் வேணுமா ‘

அவன் விஷமமாகக் கண் அடித்து பாக்கெட்டிலிருந்து வேறு படங்களை எடுக்க, விஷயம் முற்றும் முன், முற்றும் துறந்த சமாசாரங்களை அவசரமாக விலக்கி கணேசன் அய்யாசாமியை வழி நடத்திப் போனான்.

செருப்பு விற்கிற கடை, துணி விற்கிற கடை, காசெட் விற்கிற கடை, மீன் விற்கிற கடை, தொப்பியும், லெதர்பையும் விற்கிற கடை, சாப்பாட்டுக் கடை, இன்னொரு சாப்பாட்டுக் கடை, இன்னுமொரு சாப்பாட்டுக் கடை என்று வரிசையாகக் கண்ணில் பட, முக்காலி விற்கிற ஒரு கடையையும் காணோம்.

‘அங்கே பாரு ‘ அய்யாசாமி கை காட்டிய இடத்தில் ஒரு பூனைக்கண்ணன் வாரிக் குவித்து வைத்து மார்க்கச்சை விற்றுக் கொண்டிருந்தான்.

‘சார் நாம வாங்க வந்தது அது இல்லே.. ‘ கணேசன் நினைவு படுத்தினான்.

‘தெரியும்ப்பா..அவன் உட்கார்ந்திருக்கிற முக்காலியைப் பார்..மங்களாவுக்குச் சரியா இருக்கும் ‘

‘முந்தாநாள் தான் பிரான்ஸிலேருந்து வந்தது ‘ என்ற அவனுடைய நைச்சியமான வார்த்தைகளை அலட்சியம் செய்து, அவன் உட்கார்ந்திருந்த முக்காலியைச் சுட்டிக் காட்டி அய்யாசாமி விலை விசாரிக்க, முழுக்கடையையும் விலைக்குக் கேட்கிறார் இந்த ஆசாமி என்று கடைக்காரன் மனதிலும், கால்குலேட்டரிலும் தப்புக்கணக்குப் போட்டு தோராயமாகச் சொன்ன விலைக்கு தாய்லாந்து அரசர் சிம்மாசனம் கூட நாலு வாங்கி விடலாம்.

கணேசன் நடுவில் புகுந்து நாலு வாரப் பழக்கத்தில் கொஞ்சம் அத்துப்படியான தாய்-மொழியில் விளக்கத் தொடங்க, முகம் பிரகாசமடைந்த அவன், பக்கத்து பளபளா நைட்டி கடைக்காரனையும் அழைத்து வந்தான். இரண்டு கடையையும் சேர்த்து விலை பேசுகிற உற்சாகம் அவனுக்கு.

ஒரு வழியாகப் புரிய வைத்து, முன்னூறு தாய்-பாட் கொடுத்து அந்த முக்காலியை வாங்கிக் கொண்டு அய்யாசாமி கிளம்ப, அவன் அன்பு ததும்ப ஒரு கச்சையை எடுத்து இனாமாக முக்காலியின் மேல் வைத்தான்.

‘முக்காலி வாங்கி வரச் சொன்னா கண்டதையும் வாங்கிட்டு வந்து நிக்கறீங்களே ‘ என்று அவர் சட்டைப் பையில் செருகி வைத்திருந்ததைப் பார்த்து சிடுசிடுத்த மங்களா, பின்னால் முக்காலியைக் கட்டித் தூக்கிக் கொண்டு கணேசன் நிற்பதைக் கண்டு அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். உள்ளே ராஜாமணி வயலினில் கரைந்து கொண்டிருந்தான். கணேசன் தன் வாழ்நாளிலேயே இத்தனை சோகமான கதனகுதூகலத்தைக் கேட்டதில்லை.

‘வந்து உட்கார்ந்து கஞ்சிராவுக்கு ரவை போட்டு தயார் பண்ணுங்க ‘ என்று அவள் அய்யாசாமியை உள்ளே இழுத்துத் தள்ளி, கதவை அடைக்கும் முன், ‘கணேசா.. நீ பாவம் ரொம்பக் கஷ்டப் படறே.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு, நாலு நாலரை மணியைப் போல் இங்கே வா.. ‘ என்று உத்தரவு பிறப்பித்தாள்.

சொன்னபடிக்கு நாலரை மணிக்குக் கதவைத் தட்ட, அமர்க்களமாக ஜிப்பா, பட்டு வேஷ்டி அணிந்த அய்யாசாமி வரவேற்றார்.

‘கணேசா..நீ பூர்வீகம் திருவையாறு தானே ? ‘

‘ஆமா சார்..எதுக்குக் கேக்கறீங்க ? ‘

‘சங்கீதம் தெரியுமில்லியா ? ‘ ‘

‘நல்லாத் தெரியும் சார்.. மேனேஜ்மெண்ட் சயன்ஸ் கூட அடுத்த பட்சம்தான் ‘ என்று வாய் வரைக்கும் வந்ததை அடக்கிக் கொண்டான் கணேசன்.

‘அப்ப ஒரு காரியம் செய்.. நீ முதல் வரிசையில் உட்கார்ந்து, ஸ்பஷ்டமா தாளம் போட்டுட்டு வா.. எனக்கு அப்பப்ப தப்பினாலும் நீ விட்டுடாதே.. மீதியை நானும் பகவானும் பார்த்துக்கறோம் ‘

அய்யாசாமி யாசிக்க, வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை கணேசனுக்கு. இவர்கள் ராத்திரி பிளைட்டில் புக்கட் கிளம்பும் வரை இன்னும் இப்படி எத்தனை வினோதமான கோரிக்கைகள் வருமோ தெரியவில்லை.

மங்களா மாமி பாடத் தொடங்கும் போது அவை நிரம்பி வழிந்தது. அடுத்துப் பாட வரப்போவது தாய்லாந்தின் பிரபல பாப் பாடகன் என்பதை அறியாத மாமி எல்லாம் தனக்கு வந்த கூட்டமாகப் பாவித்து, ஸ்டூலில் ஆரோகணித்துக் கண்ணை மூடி ஒரு வினாடி தியானம் செய்தாள். எலக்டிரானிக் பெட்டிய சுருதி மீட்டி வைத்து விட்டு அடாணாவை அதிகாரமாக ஆரம்பித்தாள்.

கணேசன் முன் வரிசையில் கையைப் பெரிதாக அசைத்துத் தாளம் போட்டபடி சுற்றிலும் பார்க்க, பின்னால் விவசாய பேங்க் சேர்மன் வெள்ளைக்காரர்.

இந்த ஓட்டல் எழும்ப கடன் கொடுத்தது விவசாய வங்கி என்று எங்கேயோ படித்தது நினைவு வர, இப்படித் தாளம் போட்டு விட்டு நாளை மறுநாள் இவர் முன்னால் போய் எப்படி நிற்பது கணேசனுக்குச் சின்னதாகக் கவலை. அதை மறக்கத் தாளத்தில் முனைப்பு எடுத்துக் கொண்டு பக்க வாட்டில் பார்க்க, நிட்னாய் ஒரு பெரிய மில்க் சாக்லெட் பாளத்தைச் சாப்பிட்டபடி நின்று கொண்டிருந்தாள். பின்னால் ஓட்டல் மேனேஜர், பேக்கேஜ் டூரில் வந்து, ஓட்டலில் தங்கி இருக்கும் ஜப்பான், ஜெர்மனி டூரிஸ்டுகள்.. எல்லா நாற்காலிகளிலும் அவர்கள் தான்.. பார்வை திரும்பவும் மேடையில் விழுந்தது.

மங்களா ஸ்டூலில் ஆரம்பப் பள்ளிக்கூட வாத்தியாரம்மாள் போல் கறாரும் கண்டிப்புமாக உட்கார்ந்திருந்தாள். கீழே பிளாஸ்டிக் பாய் விரிப்பில் பயந்து போய் அழும் பிள்ளைகளாக அய்யாசாமியும், ராஜாமணியும் உடல் நடுங்க வாசித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு வினாடி தாளத்தோடு சேர்த்து அய்யாசாமியை அறைகிற மாதிரி மாமி போக்குக் காட்டினாள். ராஜாமணியைக் காதைப் பிடித்துத் திருகுவது போல் சுவரப் பிரஸ்தாரத்தில் ஒரு அபிநயம். இரண்டு பக்கத்திலும் இருக்கும் இந்த பாவப்பட்ட ஜன்மங்களை ஒரே நேரத்தில் தலையைப் பிடித்து மோத வைத்து துவம்சம் செய்கிறது போல் கீர்த்தனையின் போது ஒரு கைபாவம்..முகபாவம்.. கணேசன் முன் வரிசையில் வேறு எதையும் கவனிக்காது வாழ்க்கையின் லட்சியமே இது என்பதாகப் பலமாகத் தொடையில் தட்டிக் கையை மேலே ஏற்றி இறக்கித் தாளம் போட்டுக் கொண்டிருந்தான்.

ரீதிகெளளையில் ‘தத்வமறியத் தரமா ? ‘ என்று பாபநாசம் சிவன் பாட்டை எடுத்த மாமி, ‘மதிசேகரன் மகனே..சுமுகனே..மதவாரண முகனே ‘ என்று பல்லவி ஆரம்பித்து ‘நிதமா.. நிமமாகரிகமா.. நிகமா.. நிதநித நிதகமரி.. ‘ என்று குஷியாக மேலே மேலே போக, அனுசரணையாக ஈடு கொடுத்து, அய்யாசாமியும் ராஜாமணியும் கொட்டி முழக்கி மலையேற, மாமி ஒரு எம்பு எம்பி ‘மதிசேகரன் மகனே ‘ என்று தடாலென்று இறங்கியபோது மர முக்காலியில் ஒரு கால் உடைந்து சரிந்து, அய்யாசாமியின் கஞ்சிராவை அடித்துத் தள்ளிக் கொண்டு அவர் மடியில் தொப்பென்று போய் விழுந்தாள்.

இப்படி உணர்ச்சிவசப்பட்டு முடிப்பதும் இந்திய சங்கீதத்தில் ஒரு முறை போலும் என்று நினைத்த ஜப்பானியர்கள் அசராமல் கைதட்டி, அந்த அரிய காட்சியைத் தங்கள் வீடியோ காமிராக்களில் பத்திரமாகப் பதிவு செய்து கொண்டார்கள்.

மாமியைத் தலையிலும் காலிலும் கை கொடுத்து அய்யாசாமியும், கணேசனும் ஓட்டல் அலுவலக சோபாவுக்குக் கொண்டு போனபோது ‘கால் சுளுக்கிடுத்து…சுளுக்கிடுத்து.. ‘ என்று இன்னொரு பல்லவியை திரும்பத் திரும்பப் பாடியதைக் கேட்க அய்யாசாமிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. கணேசனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. ராஜாமணி மினியேச்சர் நீரோ மன்னன் போல் வயலினோடு மாமி தலைமாட்டில் நின்று கொண்டிருந்தான்.

‘நகருங்க.. ‘ என்று இனிமையான குரல். கணேசன் திரும்பிப் பார்க்க நிட்னாய்.

அவள் சோபாவின் முனையில் உட்கார்ந்து, மாமியின் காலை மடியில் போட்டுக் கொண்டு பரபரவென்று மசாஜ் செய்ய ஆரம்பித்தாள். மாமி குரல்அரை இடம் தள்ளி எடுத்து உச்சத்துக்குப் போய் வலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து சமத்துக்கு வர, நிட்னாயின் விரல்கள் அவள் காலில் தனியாவர்த்தனம் வாசித்துக் கொண்டிருந்தன.

மூக்கடைப்பு மாத்திரை சாப்பிட்டுச் சட்டென்று துரித நிவாரணமும் புத்துணர்ச்சியும் அடைந்த மாதிரி மாமி ஒரு புன்சிரிப்பு சிரித்தபடி எழுந்து உட்கார்ந்தாள். போயே போச்சு என்றாள். வயலினைப் பக்கத்து மேஜையில் வைத்து விட்டு நிட்னாயோடு கைகுலுக்க ராஜாமணி உருண்டு வரும் முன், கணேசன் பாய்ந்து அவன் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நிட்னாய்க்குக் கண்ணால் நன்றி சொன்னான்.

‘கணேசா..உனக்கு வேண்டப்பட்டவளா இந்தப் பொண்ணு.. அமோகமா இருப்பா ‘

மாமி வாயாற வாழ்த்தினாள்.

வெளியே தாய்லாந்து பாடகர் பாட ஆரம்பிக்க உற்சாகக் குரல்கள். கணேசன் களைத்துப் போய் நடக்க, பின்னாலிருந்து யாரோ கூப்பிட்டார்கள்.

விவசாய வங்கி துரை.

‘அற்புதமாக இந்த இசை நிகழ்ச்சியை கண்டக்ட் செய்தீர்கள் கணேசன்.. ஜுபின் மேத்தாவைக் கூட ஜுஜிபி ஆக்கிவிடும் நேர்த்தியான கண்டக்டர் நீங்கள். உங்கள் மேல் எனக்கு பரிபூரண நம்பிக்கை இருக்கிறது..உங்கள் தொழிலிலும் இதே நேர்த்தியை எதிர்பார்க்கலாம் இல்லையா ? திங்கள்கிழமை எங்கள் வங்கியின் மென்பொருள்களை நிர்வகிக்கும் காண்டிராக்ட் பற்றிப் பேசலாம்..வாருங்கள் ‘

துரை வலிமையோடு கையைப் பற்றிக் குலுக்கிவிட்டுப் போக, கணேசன் தன்னை மறந்து போய் நின்றான். கையை ஆட்டித் தாளம் போட்டதை அவர் தப்பாகப் புரிந்து கொண்டதால் அவருக்கும் நஷ்டம் இல்லை. கணேசனுக்கும் கம்பெனிக்கும் லாபம்தான்.

ராத்திரி அய்யாசாமி கோஷ்டியை புக்கட்டுக்கு விமானமேற்றி விடும்போது இதைச் சொல்ல, நெகிழ்ந்து போன மங்களா மாமி, ‘ஊருக்குப் போய் முதல் வேலையாக உனக்கு மார்க்கெட்டிங் ஜெனரல் மேனேஜராக புரமோஷன் தரச் சொல்கிறேன்.. ‘ என்று மங்கல வாக்கு தர, இன்னொரு தடவை கை குலுக்க நேரமில்லாமல் ராஜாமணி கையை ஆட்டி விட்டு, பாதுகாப்பு பரிசோதனை அறையில் மறைந்தான்.

ராத்திரி கணேசன் அறைக்குத் திரும்பும்போது பத்து மணி. உடம்பெல்லாம் அசதியாக வலித்தது. ரிசப்ஷனுக்கு தொலைபேசி மசாஜ் சர்வீஸைக் கூப்பிடச் சொல்லிவிட்டு உடையை மாற்றிக் கொண்டான். கதவு திறக்கும் சத்தம்.

‘நிட்னாய் ? ‘, திரும்பாமலேயே கேட்டான்.

‘அவள் ட்யூட்டி முடிஞ்சு போய்ட்டா.. ‘

அதி புஷ்டியாக மங்களா மாமிக்குத் தங்கை போல் துள்ளிக் குதித்துக் கொண்டு வந்த மசாஜ் அணங்கு, அவனைக் கட்டிலில் குப்புறத் தள்ளினாள். முதுகில் தாவி ஏறி, ஏற்றக்காரன் போல் ஏறி இறங்கி மிதிக்க ஆரம்பித்து, ‘எப்படி இருக்கு ? ‘ என்றாள்.

‘உனக்குப் பாடத் தெரியுமா ? ‘

குருப்பெயர்ச்சிப் பலன் அட்டையைப் பார்த்துக் குழறியபடியே கணேசன் கண்ணயர்ந்தான்.

———————

இரா.முருகன்

#98410 85461

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்