அதிர்ச்சி (குறுநாவல்)

This entry is part [part not set] of 42 in the series 20030626_Issue

ஜோதிர்லதா கிரிஜா


முணுக் முனுக்கென்று எரிந்துகொண்டிருந்த அந்தச் சிறிய சுவரொட்டி விளக்கைச் சுற்றிச் சுற்றிப் பறந்துகொண்டிருந்த விட்டில் பூச்சி கடைசியில் அதற்குள் விழுந்தே விட்டது. அது விளக்கில் விழுந்து செத்துவிடப் போகிறதே எனும் என் கவலையை உண்மையாக்கிவிட்டு அது முடிவில் செத்துத் தொலைந்தது. விளக்கும் அணந்தது. முட்டாள் பூச்சி! நெருப்பிலே போய் இப்படி வலிய விழுந்து அறிவுகெட்டதனமாய்ச் செத்துப் போகுமோ ?

விளக்கு அணைந்ததும் அந்தச் சிறிய கூடம் இருட்டில் அமுங்கியது. நான் சோம்பலுடன் படுக்கையில் எழுந்து உட்கார்ந்துகொண்டேன். நிலாக்காலமாக இருந்தாலும் சன்னலின் வழியே சிறிது நிலா வெளிச்சமாவது வரும். இன்றைக்கு அமாவாசை யாதலால் துளியும் வெளிச்சம் இல்லை. கன்னங்கரிய அந்த இருட்டு திகில் ஊட்டுவதாக இருந்தது. மகிழ்ச்சி என்னும் வெளிச்சம் மருந்துக்குக்கூட இல்லாமற் போய்விட்ட – இருள் நிறைந்த – என் வாழ்க்கையை அந்த அமா வாசை இருட்டு நினைவு படுத்தியதால், அந்தக் கூடத்தில் நிலவிய இருட்டை நான் மிகவும் வெறுத்தேன்.

இரவு நேரமானாலும் கூட அப்பா அடிக்கடி எழுந்து தண்ணீர் குடிப்பார். அதனால், விடிவிளக்கை மறுபடியும் ஏற்றித்தான் தொலைக்க வேண்டும். இல்லாவிட்டால், இருட்டில் கண் தெரியாமல் யாரையாவது மிதித்துவைப்பார். சோம்பலையும் அலுப்பையும் வலுக்கட்டாயமாக உதறித் தள்ளிவிட்டு நான் மெதுவாக எழுந்தேன். எனக்கு அடுத்தாற்போல் ஜானகி படுத்துக் கொண்டிருந்தாள்.

‘ஜானகி! தீப்பெட்டி இருக்கிற இடம் தெரியுமாடி ? ‘ என்று அவளை உலுக்கிக் கேட்டேன். இரண்டு மூன்று தடவைகள் உலுக்கிய பின்னரும் பதில் இல்லை. நல்ல தூக்கம். இந்தக் குடும்பம் இருக்கிற இருப்பில், எப்படித்தான் இவளாலிப்படிக் கவலையற்றுத் தூங்க

முடிகிறதோ!

அவளுக்கு அடுத்தாற்போல் படுத்துக்கொண்டிருந்த சித்தியை எழுப்பலாமா என்று கணம் போல் யோசித்தேன். சித்திக்கு அது ஏழாம் மாதமோ என்னவோ. மிகவும் அலுப்பாகத் தூங்கிக்கொண்டிருப்பாள் என்று தோன்றியது. அதனால் எழுப்பவேண்டாமென்றுதான் பார்த்தேன். ஆனலும், தீப்பெட்டிக்காக அவளை எழுப்பித்தானாக வேண்டும் போலிருக்கிறது.

‘சித்தி! சித்தி! ‘ – பதில் இல்லை. எனவே சித்தியைப் பற்றி மெல்ல உலுக்கினேன். அதன் பிறகுதான் சித்தி கொஞ்சம் அசைந்துகொடுத்தாள். ‘ம்…ம் ‘ என்று முனகிய சித்தியிடம் தீப்பெட்டி இருக்குமிடம் பற்றி விசாரித்தேன்.

‘என்னது ? தீப்பெட்டியா ? ‘ என்று கொட்டாவியுடன் விளித்த சித்தி தன் தலைமாட்டிலிருந்து அதை எடுத்து என்னிடம் கொடுத்துவிட்டுத் திரும்பவும் கண்ணயர்ந்தாள். கணப்பொழுதுக்குள் தூங்கிவிட முடிந்த சித்தியை எண்ணிப் பொறாமைப்பட்டவாறே, நான் சுவரோரமாகவே அடி மேலடி எடுத்து வைத்து நடந்து சென்று விடிவிளக்கை ஒருவாறு ஏற்றி வைத்தேன்.

தீக்குச்சி உரசப்பட்ட ஓசையில் அப்பாவுக்குத் தூக்கம் கலைந்துவிட்டது போலும். அவர் கண்களை அரையாகத்திறந்து தலை உயர்த்திப் பார்த்தார்.

‘என்ன, பரிமளா ? வெளக்கு அணைஞ்சு போயிடுத்தா ? எண்ணெய் இல்லியாஎன்ன ? ‘

‘எண்ணெய் இருக்குப்பா, விட்டில் பூச்சி விழுந்துடுத்து… ‘ என்று பதிலளித்துவிட்டு நான் படுத்துக்கொண்டேன்.

ஆமாம். இந்த அப்பா கூட ஒரு விட்டில் பூச்சிதான். கிட்டத்தட்ட! சின்ன கொழுந்தாய் ஒளிர்ந்துகொண்டிருந்த விளக்கு வெளிச்சத்தைக் கண்டு மயங்கிக் கண்ணவிந்து

அதிலே விழுந்து முட்டாள்தனமாய் உயிரை விட்டுவிட்ட அந்த விட்டில் பூச்சிக்கும், நாற்பது வயசுக்கு மேல் இரண்டாம் தடவையாகத் திருமணம் செய்துகொண்டு வேண்டாத குடும்பச்சுமையை இழுத்துவிட்டுக் கொண்டிருக்கும் இந்த அசட்டு அப்பாவுக்குமிடையே எந்த வகையான வேறுபாடும் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. அந்தப் பூச்சி உயிரையே விட்டுத் தொலைத்துவிட்டது. இந்த மனிதப் பூச்சியோ தானும் உயிர் வாழ்ந்துகொண்டு – இன்னும் சில உயிர்களைப் பிறப்பித்துக்கொண்டும் தான் – நானும் வாழ்கிறேன் என்று அரை உயிராய் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

அப்பா எழுந்து கொல்லைப்பக்கம் போய்விட்டு வந்து அப்படியே ஒரு குவளைத்தண்ணீரையும் மடக் மடக்கென்று குடித்துவிட்டுப் படுத்துக்கொண்டார். அவர் உடனே தூங்கிப் போனாரா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் முக்குகிற ஓசை கேட்டது. அப்பாவுக்கு முக்காமல் தூங்கத்தெரியாது. தூங்கும்போது மட்டுமல்லாமல், எப்போது பார்த்தாலும் சித்தி முனகிய வண்ணந்தான் இருப்பாள். இரண்டு பேருமே எப்போதும் ஏதாவது வியாதி கொண்டாடிக்கொண்டுதான் முக்கலும் முனகலுமாய்க் காலம் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், முக்கலோ முனகலோ, வருடந் தப்பினாலும் ஒரு குழந்தை பிறக்கத் தப்புகிறதில்லை.

தாயும் தகப்பனும் நோயும் நொடிப்புமாக இருக்கையில் குழந்தைகள் மட்டும் கழுக் மொழுக்கென்று ஆரோக்கியமாக இருக்குமா என்ன ? நெஞ்சுக்கூடும் சூணாவயிறுமாய் ஒவ்வொன்றுமே நோஞ்சானாய்த்தான் இருக்கிறது.

படுக்கையில் விழுந்த எனக்குத் தூக்கம் வரமாட்டேன் என்றது. சித்திக்குப் பக்கத்தில் படுத்துக்கொண்டிருந்த அவளுடைய ஐந்து குழந்தைகளையும், ஆறாவதாக அவள் வயிற்றில் வளர்ந்துகொண்டிருந்த உயிரையும் நினைத்துப் பார்த்தபோது எனக்கு அருவருப்பாய் இருந்தது. ஆமாம்; என் தம்பி – தங்கைகள் என்னும் நினைப்பைக் காட்டிலும் சித்தியின் குழந்தைகள் என்னும் நினைப்பே நெஞ்சில் மிகுதியாக எழுகிறது. அப்படி நினைப்பது தப்பாக இருக்கலாம். ஆனால் அப்படித்தான் என்னால் நினைக்க முடிந்தது.

மூத்ததுக்கு ஒன்பது வயசு ஆகிறது. இரண்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கிறான். ஐந்து வயசில்தான் பேச்சு வந்தது அவனுக்கு. படிப்பு ஏறுவேனா என்கிறது. எப்படி ஏறும் ? இருபத்துநான்கு மணி நேரமும் விகாரப் பட்டுக்கொண்டிருக்கிற தகப்பனுக்குப் பிறக்கிற குழந்தைகளுக்கு மூளை மந்தமாகத்தானே இருக்கும் ? அடுத்த நான்கும் எப்போதும் நைநை என்று அழுதுகொண்டிருக்கும் இரண்டுங்கெட்டான்கள். என்ன முயற்சி செய்தாலும் அந்தக் குழந்தைகளை நேசிக்கிற பக்குவம் வரமாட்டேன் என்கிறது. ஆழ்ந்து சிந்திக்கும் போது சித்தியையோ அவள் பெற்றிருக்கிற குழந்தைகளையோ வெறுப்பது பாவம் என்றும், அம்மா செத்துப் போய் ஒரு வருடம் ஆன கையோடு சித்தியை அழைத்துக்கொண்டு வந்தவரும் இத்தனை குழந்தைகளுக்குப் படைப்பாளியுமான அப்பாவைத்தான் வெறுக்கவேண்டும் என்றும் தோன்றுகிறது. அப்பாவின் மேல் மட்டும் எனக்கு வெறுப்பில்லையா என்ன ? இந்தக் காரணத்துக்காக மட்டுமல்லாமல், இன்னும் வேறொரு காரணத்துக்காகவும் அப்பாவின் மீது எனக்கு மனத்தாங்கல் உண்டுதான்.

அம்மா செத்துப்போனபோது எனக்குப் பதினைந்து வயது. ஜானகிக்குப் பத்துவயது.

இந்த வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு அப்பா நாற்பது வயசுக்கு மேல் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட போது எங்கள் மனங்களில் எழுந்த வெறுப்புக்கு அளவே இல்லை. அம்மா இருந்தவரைக்கும் ‘சச்சு, சச்சு ‘ என்று உயிரை விட்டுக்கொண்டிருந்த இந்த அப்பாவுக்கு அம்மா போய் ஒரு வருடம் முடிந்த உடனேயே இன்னொருத்தியை அதே உறவில் வைத்துக்கொள்ளும் எண்ணத்துடன் கூட்டிக்கொண்டு வருவதற்கு எப்படித்தான் மனம் வந்ததோ!

அம்மா ரொம்ப அழகாக இருப்பாள். சிவப்பாகத் தளதளவென்று பூசினாற்போன்ற சதைப்பிடிப்புடன் இருப்பாள். குடும்பத்தில் நிலவிய வறுமை அம்மாவை மட்டும் ஒன்றும் செய்யவில்லை. இன்னும் வசதி மிக்க குடும்பத்தில் வாழ்ந்தால் அம்மா அதைக் காட்டிலும் அதிகச் செழுமையுடன் இருந்திருப்பாளோ என்னவோ! அம்மாவின் களையான முகம் என் மனக்கண்ணில் தோன்றி என்னை வருத்தியது. கண்களில் துளித்த நீர் காதோரங்களை ஈரமாக்கிற்று.

அம்மா! என் அம்மா! என்னதான் அம்மாவும் அப்பாவும் வணக்கத்துக்கு உரியவர்கள் என்றாலும், அம்மா அம்மாதான்! இன்றைத் தேதியில் அம்மா உயிருடன் இருந்தால் இந்த வீடு இப்படி இருக்குமா என்னும் கற்பனையில் ஈடுபடாமல் இருக்க முடியவில்லை.

அம்மா நன்றாக, ஒரு வியாதி வெக்கை யில்லாமல்தான் இருந்து வந்தாள். திடாரென்று ஒரு நாள் நெஞ்சு வலிப்பதாய்ச் சொன்னாள். கை மருத்துவமாகச் சுக்குக் கஷாயம் வைத்துக் குடித்தாள். ஆனால் அது நிற்கவில்லை. உடம்புடனேயே இருந்துகொண்டிருந்தது. சில நேரங்களில் அம்மா துடியாய்த் துடிப்பாள். முடிவில் இதய நோய் என்று தெரிந்தது. இந்தப் பட்டிக்காட்டில் உயர்ந்த மருத்துவ வசதி ஏது ? மருத்துவ வசதி இருக்கிற ஊருக்குப் போய்க் கவனிக்கப் பணவசதிதான் அப்பாவிடம் ஏது ? கடைசியில் அம்மாவை அந்த நோய் காவு வாங்கிச் சென்றது.

அம்மா உயிருடன் இருந்த வரையில் ஜானகியும் நானும் அவளது அன்பு மழையில் நனைந்துகொண்டு மகிழ்ச்சியும் சிரிப்புமாக வாழ்ந்துகொண்டிருந்தோம். வறுமை எங்களைச் சிறிதும் பாதிக்கவில்லை. ஆனால் இப்போது அப்படி இல்லை. வாழ்க்கை கசந்துகொண்டு வருகிறது.

அம்மா செத்துப் போனதன் பிறகு கொஞ்ச நாள் கழித்து அப்பா ஒரு நாள் இரவு பத்து மணிக்கு மேல் வாசல் திண்ணையில் உட்கார்ந்துகொண்டிருந்த போது எதிர் அகத்து ராவுஜி மாமா, ‘ என்ன ஓய்! அடுத்த மாசம் உம்ம சம்சாரம் போய் ஒரு வருஷம் ஆறது போலிருக்கே ? ‘ என்று விசாரித்தார்.

‘ஆமா… ஒரு வருஷம் அதுக்குள்ள ஓடிப் போயிடுத்து… ‘ என்று பதில் சொன்ன அப்பா பெருமூச்செறிந்தார்.

‘என்ன செய்யறதாய் இருக்கீர் ? ‘ என்று அவர் பேச்சைத் தொடர்ந்த போது அப்பா கொஞ்ச நேரம் பதில் சொல்லாமல் இருந்தார். பிறகு, ‘ கல்யாணம் பண்ணிண்டுடலாம்னு இருக்கேன்!… ‘ என்று அவர் பதில் சொன்னதும் என் பக்கத்தில் படுத்துக்கொண்டிருந்த ஜானகி வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். அப்பா சொன்ன பதிலைக் கேட்டதும் எனக்கும் எப்படியோ இருந்தது. பத்து வயசே நிறைந்த ஜானகிக்கே அது அதிர்ச்சியாக இருந்தது என்றால், என் உணர்ச்சிகள் எவ்வாறு பாதிக்கப் பட்டிருக்கும் என்பதை விவரிக்கத் தேவை இல்லைதானே ?

அப்பா சொன்ன பதிலால் ராவுஜி மாமாவும் அதிர்ச்சி யுற்றிருந்திருக்க வேண்டும் என்பது அவர் உடனே பதில் ஒன்றும் கூறாததிலிருந்து தெரிந்தது. .சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு அவர் சொன்னார்: ‘என்ன சுவாமி! உம்ம பொண்ணு கல்யாணத்தைப்பத்திக் கேட்டா, நீர் உம்ம கல்யாணத்தைப்பற்றிப் பேசறீர்! ‘ – ராவுஜி மாமா துணிச்சல்காரர்தான். மனத்தில் தோன்றியதைப் பளிச்சென்று கேட்டுவிட்டார். கொஞ்சங்கூட அச்சமோ தயக்கமோ இல்லாமல் ராவுஜி மாமா கேட்ட அந்தக் கேள்வி அப்பாவைக் கொஞ்சம் தூக்கிவாரித்தான் போட்டிருக்கும் என்பதில் ஐயமே இல்லை. ஏனென்றால் அவர் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லத் தாமதம் ஆகியது.

‘பரிமளாவுக்கு இப்ப என்ன அவசரம் ? பதினஞ்சுதானே ஆறது ? தவிர கையில பணத்தை வச்சுண்டுன்னா வரன் பாக்கணும் ? வெறுங் கைய வச்சுண்டு மொழம் போட முடியுமாங்காணும் ? ‘

ராவுஜி மாமா, ‘நமக்கேன் வம்பு ‘ என்று அத்துடன் பேச்சை விட்டுவிடுவார் என்றுதான் நினைத்தேன். அவரது இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும் அந்தப் பேச்சை அத்துடன் நிறுத்தியிருப்பார்கள்தான். ஆனால் அவர் அப்படிப் பின்வாங்கவில்லை!

‘ என்ன ஓய்! நீர் பேசறது வேடிக்கயா யிருக்கு! இந்த வயசுக்கு மேல நீர் மறுபடியும் கல்யாணம் பண்ணிண்டாரானால், உம்ம குடும்பம் வேற பெருகுமேங்காணும் ? அப்புறம் பொண்ணுகள் கல்யாணத்துக்கு எப்படிப் பணம் சேர்ப்பீர் ? ஏற்கெனவே வரும்படி இல்லாம கஷ்டப்பட்டுண்டு இருக்கீர் ? வேண்டப்பட்டவன்கிற உரிமையில பேசறேன். தப்பா யெடுத்துக்காதேயும்! ‘

அப்பா அதற்குப் பதில் சொல்லவில்லை. அப்பா எதுவும் சொல்லாததால் மேற்கொண்டு பேச்சைத் தொடரும் வாய்ப்பை இழந்த ராவுஜி மாமா தம் வாயை மூடிக்கொண்டார். ஆனால் அப்பா இரண்டாங் கலியாணம் செய்துகொள்ளப் போகும் செய்தி ஊர் முழுவதும் மறு நாளே பரவி விட்டது. எங்களைச் சந்தித்தவர்கள் எல்லாருமே தங்கள் அனுதாபத்தை எங்களுக்குத் தெரிவித்துக் கொண்டார்கள். ஏற்கெனவே அதை வரவேற்காத எங்கள் மனநிலைக்குத் தூபம் போட்டாற்போல் அவர்கள்

பேசிய பேச்சுகள் அமைந்தன.

அப்பாவின் நோக்கத்துக்குத் தடை விதிக்கக்கூடிய நெருங்கிய சொந்தக்காரர்கள் யாரும் எங்களுக்கு இல்லை. அதனால் அப்பாவின் திருமணம் அம்மாவின் மறைவுக்குப் பிறகு ஒரு வருடம் கழித்து, சரியாக ஒரு மாதத்துக்கெல்லம் நடந்தேறியது. பக்கத்து ஊரில் இருந்த ஓர் ஏழைப் பெண்ணை அப்பா மணந்தார். திருமணம் பெண்ணின் ஊரில்தான் நடந்தது. அந்தத் திருமணம் எங்களுக்கு மிகவும் விந்தையான அனுபவமாக இருந்தது. ஏதோ கனவு மாதிரி இருந்தது. சரிகை வேட்டியும் தானுமாய் மாலையுடன் அசட்டுக் களை முகத்தில் வழிய மண மேடையில் அமர்ந்திருந்த அப்பாவின் மணக்கோலத்தை இப்போது நினைத்துப் பார்த்தாலும் சிரிப்பும் அருவருப்பும் போட்டி போட்டுக்கொண்டு என் உள்ளத்தில் எழுகின்றன.

திருமணம் ஆன கையோடு அப்பா சித்தியை அழைத்து வந்துவிட்டார். அப்பா பண்ணின காரியம் பிடிக்காததால் ஜானகியும் நானும் சித்தியுடன் சரியாக முகங் கொடுத்துப் பேசவில்லை. கேட்டதுக்கு மட்டுமே வேண்டாவெறுப்பாகப் பதில் சொல்லுவோம். மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்ச நாள் இருந்தோம். ஆனால் நின்று நிதானமாய் யோசித்துப் பார்த்த போது சித்தியை வெறுப்பது சரியில்லை – அப்பா செய்த தப்புக்கு அவளைக் கரிப்பது நியாயமாகாது -என்றுதான் அவ்வப்போது தோன்றும். ஆனாலும், எங்கள் அன்புக்குரிய அம்மாவின் இடத்தைப் பிடித்துக்கொண்டவள் எனும் நினைப்பிலிருந்து என்ன முயன்றும் எங்களால் மீளவே முடியவில்லை. ஆயிற்று. சித்தி இந்தக் குடும்பத்தில் ஒருத்தியாகச் சேர்ந்து பத்து ஆண்டுகள் ஆய்விட்டன.இன்னும் அது எங்களால் முடியவில்லை.

சும்மா.சொல்லக்கூடாது. சித்தி எவ்வளவோ நல்லவள்தான். வந்த புதிதில் எங்கள் மனங்களைத் தன் பால் ஈர்ப்பதற்காக அவள் என்னென்னவோ செய்து பார்த்தாள். நாங்கள் இருவரும் அவளை உள்ளன்போடு வரவேற்கவில்லை – அவளை வெறுத்தோம் – என்பது நன்றாகப் புரிந்ததன் பின்னர் அவள் எங்களைக் கவர்வதற்காக எவ்வளவோ முயன்றாள். அவள் செய்த முயற்சிகள் யாவும் தோற்றே போயின. சித்திக்கு அதில் வருத்தம்தான் என்பதும் எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. சித்தியை அழைத்துக்கொண்டு அப்பா வீட்டுக்கு வந்த அன்று அப்பாவின் தூரத்துச் சொந்தக்காரச் சுமங்கலிப் பாட்டி ஒருத்தி சித்தியையும் அப்பாவையும் ஆரத்தி கொட்டி வரவேற்று இருத்திவிட்டு, இரவுச் சாப்பாட்டையும் தயாரித்து வைத்துவிட்டுச் சென்றாள்.

அப்பா திருமணம் செய்துகொண்ட போது வந்த எரிச்சலைக் காட்டிலும் அவர் வீட்டுக்கு வந்த அன்றே சித்தியோடு தமது படுக்கைக்கு இரவு ஒன்பது மணிக்கெல்லாம் சென்றதுதான் எங்களுக்குச் சொல்லி மாளாத அருவருப்பை ஏற்படுத்தியது. ஜானகி விவரம் புரிந்தவளா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு அது மன்னிக்க முடியாத குற்றமாக அந்த நேரத்தில் தோன்றியது. நாங்கள் இருவரும் தூங்கிப்போன பிற்பாடு அவர்கள் போயிருக்கலாமே என்று தோன்றியது. நாங்கள் தூங்கிப் போகிறவரை கூட அவர்கள் காத்திருக்க வேண்டும் என்பதில்லை. நாங்கள் படுக்கப் போனதன் பிறகு, ஒரு நாகரிகம் – அல்லது கூச்சம் – கருதியேனும் அப்பா கொஞ்சம் பொறுமை காட்டியிருந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். விவரந் தெரிந்தவளோ இல்லையோ, ஜானகியும் அப்பாவை அன்று மிக அதிகமாக வெறுத்தாள் என்பதை என்னால் உணர முடிந்தது.

… அடுத்த ஆண்டிலேயே சித்திக்குப் பிள்ளைக் குழந்தை பிறந்தது. நாங்கள் இருவரும் பெண்கள் என்பதால், பிள்ளைக் குழந்தை பிறந்தது பற்றி அப்பாவுக்குச் சொல்லி முடியாத மகிழ்ச்சி. கல்கண்டை எடுத்துக்கொண்டு அப்பா ராவுஜி மாமாவுக்கு வழங்குவதற்காக எதிரகத்துத் திண்ணைக்குச் சென்றபோது, ‘ ரொம்ப சந்தோஷம், சுவாமி! … ஆனால், இத்தோடு நிறுத்திக்கொள்ளும்…இல்லேன்னா திண்டாடித் தெருவில் நிப்பீர்!… நான் சொல்றேனேன்னு தப்பா யெடுத்துக்காதேயும்… ‘ என்று தமது வழக்கம் போலவே அதிகப் பிரசங்கித்தனமான ஓர் அறிவுரையைச் சொல்லிவிட்டுத் தான் ராவுஜி மாமா அப்பாவை அனுப்பி வைத்தார்.

ஆனால் ராவுஜி மாமாவின் அறிவுரைக்கு எந்த வகையான எதிரொலியும் அப்பாவிடம் ஏற்படவில்லை. ஏற்பட்டிருந்தால், இன்று எங்களைத் தவிர இன்னும் ஐந்து குழந்தைகளைப் பெற்றது போதாதென்று இன்னும் ஆறாவதாக ஒன்றை வேறு சித்தி சுமந்துகொண்டு நிற்க நேர்ந்திருக்குமா ? போன மாதம் ஒரு நாள் கூட, ராவுஜி மாமா விசிறிக்காம்பினால் தமது முறம் போன்ற முதுகைச் சொறிந்துகொண்டு, ‘வருமானம் போறாம ஏற்கெனவே கஷ்டப்பட்டுண்டு இருக்கீர். இந்த அழகுல குடும்பம் வேற பெருகிண்டே இருக்கு…. எல்லாம் கடவுளுடைய சோதனை! ‘அவன் ‘ செயல்… ‘ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே அப்பாவிடம் வருத்தப்பட்ட போது, மனுஷன் உண்மையாகவே இரக்கப்பட்டுப் பேசுகிறாரா, இல்லாவிட்டால் கிண்டல் பண்ணுகிறாரா என்பதே புரியவில்லை. ராவுஜி மாமா கண்களில் குறும்புதான் எப்போதுமே வழிந்து கொண்டிருக்கும். இத்தனைக்கும் அவருடைய கண்கள் ரொம்பவும் சிறியவை. அந்தச் சிறிய கண்களை அடிக்கடி சிமிட்டிக்கொண்டு அவர் பேசுவதெல்லாம் அநேகமாய்க் கிண்டலுக்காகத்தான் இருக்கும்.

அவர் அப்படிச் சொன்னபோது, அப்பா உடம்பை எட்டுக் கோணல்கள் பண்ணிக் கொண்டு அசட்டுச் சிரிப்பு வேறு சிரித்துக்கொண்டு நின்றதை இப்போது நினைத்தாலும் எனக்கு நாக்கைப் பிடுங்கிக்கொள்ள வேண்டும் போல் இருக்கிறது. குழந்தை வேண்டும் என்று ஒருவன் ஆசைப் பட்டும் அது பிறக்காமல் இருப்பது வேண்டுமானால் கடவுள் செயலாக இருக்கலாம். வருஷா வருஷம் பெற்றுக் கொள்ளுவது கூட அவன் செயலா! அது ‘அவன் ‘ செயலோ, இல்லாவிட்டால் அவன் மீது பழிபோடும் அப்பாவின் செயலோ, அதன் விளைவை ‘ அவள் ‘ அல்லவோ அனுபவிக்க வேண்டியிருக்கிறது! என்னதான் இருந்தாலும், வருஷா வருஷம் வயிற்றைத் தூக்கிக் கொண்டு சித்தி பெற்றுப் பிழைப்பதை நினைத்துப் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது.

கல்யாணத்துக்குப் பெண்களை நிறுத்தி வைத்துக்கொண்டு அப்பா இரண்டாங் கலியாணம் செய்துகொண்டு வந்த போது, இந்த ஊரேதன் சிரித்தது. அது அப்பாவுக்குத்

தெரியாதா என்ன ? ஆனால் அவர் அதை யெல்லாம் பொருட்படுத்தவே இல்லையே! ‘பில் கலெக்டர் ‘ மாமா நேரடியாகவே கேலி செய்தபோது, ‘உம்ம மாதிரி நான் ஒண்ணும் ‘தெற்குத் தெரு ‘ வுக்குப் போயிண்டிருக்கல்லேங்காணும்! ஒழுங்காக் கல்யாணம் பண்ணிண்டு வந்திருக்கே

னாக்கும்!… ‘ என்று ஒரு போடு போட்டாரே அப்பா!..

எங்களுக்கு மணமாகி, நாங்கள் அவரை விட்டு விட்டுப் போய்விட்டால், அதற்குப் பிறகு ஒரு தலைவலியோ கால்வலியோ வந்தால், வெந்நீர் போட்டுக் கொடுப்பதற்குக் கூட ஆள் இல்லாமல் போய் விடுமே என்பதற்காகத் தான் தாம் இரண்டாங் கலியாணம் செய்துகொண்டதாக அப்பா ஊரெல்லாம் சொல்லிக்கொண்டு அலைந்ததை இப்போது நினைத்துப் பார்க்கையில், நாாளைக்கு இவர் மண்டையைப் போட்டுவிட்டால் அடுக்கடுக்காய் இவர் பெற்று வைத்திருக்கிற குழந்தைகளையும், சித்தியையும் – ஏன் ? ஜானகியையும் என்னையும் கூடத்தான் – யார் காப்பாற்று வார்கள் என்று பதிலுக்குக் கேட்கவேண்டும் போலிருக்கிறது.

தலையைக் காலை வலித்தால் வெந்நீர் வைத்துக் கொடுப்பதற்காக மட்டுந்தான் அப்பா இரண்டாங் கல்யாணம் பண்ணிக்கொண்டார் என்பது அப்பட்டமான பொய் என்பதற்குச் சாட்சி சொல்லுவதற்குத்தான் ஐந்து அவதாரங்கள் வந்து பிறந்திருக்கின்றனவே! ஆறாவதாக வேறு இன்னொன்று வரப் போகிறது.

அப்பாவுக்குப் ‘பண்ணி வைக்கிற ‘ புரோகிதர் உத்தியோகம். அந்த உத்தியோகத்தில் இருக்கிறவர்கள் வேறு எந்தத் தொழிலிலும் ஈடுபடக்கூடாது என்று சாஸ்திரத்தில் சொால்லயிரு க்கிறதாம். ஆனால், சாஸ்திரத்தில் சொல்லி யிருக்கிறபடி யெல்லாமா இந்தக் காலத்தில் நடந்து கொண்டிருக்கிறது ? அதனால் எங்கள் வீட்டிலும் சாஸ்திர மீறல் நடந்தது. ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கு மிடையே ஐந்து ஆண்டு இடைவெளி இருக்க வேண்டும் – குறைந்தது மூன்று ஆண்டு இடைவெளி யாகிலும் இருக்க வேண்டும் – வயசுக்கு வந்த பெண்கள் வீட்டில் இருக்கும்போது அவளுடைய பெற்றோர் குடும்பத்தில் ஈடுபடக்கூடாது – போன்ற முக்கியமான சாஸ்திர விதிகளை யெல்லாம் மீறி யிருக்கிற அப்பாவுக்கு வயிற்றுப் பிழைப்பைக் கருதிச்செய்யவேண்டி வந்த மீறல் எந்த மட்டுக்கு!

எனவே, எங்கள் அகத்தில் பஜ்ஜியும் பொண்டோவும் போட்டு விற்கத் தொடங்கி னோம். அம்மா உயிருடன் இருந்த நாள்களில் குடும்பத்தில் இருந்த நான்கே பேருக்குக் கூட முழு வயிற்றுக்குச் சாப்பாடு போட முடியாமல் அப்பா திணறிக் கொண்டிருந்த நிலைமையில், இப்போது குடும்பம் பெருகத்தொடங்கியதன் பின்னர் தொழிலை விஸ்தரிக்க வேறு வேண்டிய தாயிற்று. அம்மா இருந்த நாள்களில் அரைப்பதும் கரைப்பதும் எங்களுக்கு அலுப்புத் தட்டாத வேலைகளாக இருந்தன. ஆனால், சித்தி வந்ததன் பிறகு அந்தப் பாடு படும்போது எரிச்சல்தான் மண்டிக்கொண்டு வந்தது. அவள் வந்ததன் பிறகு குடும்பம் வேறு எக்கச்சக்கமாகப் பெருகிவிட்ட தால், எல்லா வேலைகளுமே மிகுதியாகிவிட்டன.

ஜானகிக்கும் சித்திக்குமிடையே வாக்குவாதங்கள் விளையத் தொடங்கின. ஆனால் பணிந்துபோய் விடுபவள் எப்போதும் சித்தியாகவே இருந்தாள். சில நேரங்களில் சித்தியை நினைத்தால் எனக்குப் பாவமாக இருக்கும். அவள் சித்தியை அதிகம் விரட்டக்கூடாது என்று நான் சித்திக்குத் தெரியாமல் ஜானகியைக் கண்டிப்பதுண்டு.

அம்மா இருந்த காலத்த்ில் வீட்டுக்கு வந்து வாடிக்கையாக – அல்லது எப்போதாகிலும் – வாங்கிச் செல்லுபவர்களை மட்டும் நம்பி நாங்கள் அந்தத் தொழிலைச் செய்துகொண்டிருந்தோம். ஆனால் இப்போது அது போதுமான ஆதாயத்தை அளிக்காது என்னும் நிலையில், ஜானகியும் நானும் அவற்றை வெளியில் எடுத்துப் போய் விற்று வரும்படியான கட்டாயம் உருவாயிற்று.

ஜானகி குறிப்பிட்ட சில தெருக்களுக்கும் நான் வேறு சில தெருக்களுக்கும் வாடிக்கையாய்ப் போய் விற்போம். சில வீடுகளில் வாடிக்கையாக வாங்கிக் கொள்ளுவார்கள். தின் பண்டத்துக்குத் தேவை இருக்கிறதோ இல்லையோ, எங்கள் குடும்பத்தின் மீதுள்ள இரக்கத்தினால் தான் அவர்களில் சிலர் எங்களிடம் வியாபாரம் செய்தார்கள் என்பது பல தடவைகளில் தெளிவாகத் தெரியும்போது, மிகவும் சிறுமையாக இருக்கும்.

என் வாடிக்கையாளர்களில் காசிச் செட்டியார் மனைவி ஒருத்தி. அவள் நாள் தோறும் என்னிடம் பலகாரம் வாங்குவாள். அந்த ஆச்சியும் சரி, அவள் வீட்டுக்காரரும் சரி, ரொம்பத் தங்கமானவர்கள். அவர்களுடைய பிள்ளைதான் ஒரு மாதிரி. நான் ஆச்சி வீட்டுக்குப் போகும் போதெல்லாம் அம்மாவுக்குப் பக்கத்தில் அவனும் வந்து நின்று கொண்டுவிடுவான். கல்யாணம் ஆனவந்தான். ஆனாலும் என்ன! அவன் பார்க்கிற பார்வை மானமுள்ள ஒரு பெண்ணைத் தன் உடம்பை ஒரு சாணாய்க் குறுக்கிக்கொள்ள வைக்கிற பார்வை.

பஜ்ஜி-போண்டா விற்பதற்கு வெளியே சுற்றத் தொடங்கியதற்குப் பிறகு பலவகையான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன. பல தரப்பட்ட மனிதர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வாய்ப்புகளின் முடிவில் எனக்குத் தோன்றியது – கல்யாணம் ஆன ஆண் பிள்ளைகளைக் காட்டிலும் பிரும்மசாரி ஆண்களே மேல் என்பதுதான்! அளவுக்கு மீறித் திமிர் பிடித்தவன் கல்யாணம் ஆகிவிட்டால் மட்டுமே அடங்கிப்போய்விடுவானா என்ன! கல்யாணம் என்பது ஒருவன் தறிகெட்டுத் திரியாமல் இருக்க உதவும் என்னும் உண்மை சிலரைப் பொறுத்தவரையில்தான் உண்மை போலும்! சராசரிக்கு மேற்பட்ட அளவில் திமிர் பிடித்தாவன் கல்யாணம் ஆகிவிட்டால் மட்டுமே அடங்கிவிடுவான் என்பது பொய் என்பதை நிலைநிறுத்தும் வகையில் தான் பலர் நடந்துகொண்டார்கள். திமிர் பிடித்தவன் என்றைக்கும் – எந்நிலையிலும் – திமிர்

பிடித்தவன்தான்! உரிக்கு உரி தாவுகிற ருசி கண்ட பூனைதான்.

அந்த ஆச்சியுடைய பிள்ளையும் அப்படிப்பட்ட அசடு வழிகிற ஆசாமிதான். தங்க விக்கிரகம் மாதிரி மூக்கும் முழியுமாக ஒரு பெண்டாட்டி இருக்கையில் குறுகுறு வென்று என்னை என்ன அப்படிப் பார்க்க வேண்டிக் கிடக்கிறது ? எண் சாண் உடம்பும் ஒரு சாணாய்க் குறுகிப் போய்விடும் எனக்கு. உச்சந்தலையில் தொடங்கி உள்ளங்கால் வரைக்கும் அவன் உற்று உற்றுப் பார்க்கும் போது, பூமி பிளந்து அப்படியே என்னை விழுங்கிவிடாதா என்று இருக்கும். சில பெண்கள் வேண்டுமானால் உற்றுப் பார்க்கிற மாதிரி நாம் அழகாய் இருக்கிறோம் என்பதில் கர்வம் கொள்ளக்கூடும்.

அன்றைக்கு ஒரு நாள், ஆச்சி துட்டு எடுத்து வருவதற்காக உள்ளே போன போது, அந்தக் கட்டையிலே போகிறவன், ‘இன்னும் ரெண்டு போண்டோ குடு… ‘ என்று இளித்துக் கொண்டு வந்து நின்றான். இதைச் சொன்னபோது அவன் என்னைப் பார்த்த பார்வை வெளியே சொல்லிக்கொள்ள முடியாதபடி மிகவும் அசிங்கமாக இருந்தது. ‘போண்டோவைக் குடுக்கிறச்சே என் கையில வேணும்னுட்டே இடிச்சு வாங்கிப்பானோ ? அதுக்குத்தான் கேக்கறானோ ? ‘ என்று தோன்றியது. இருந்தாலும், வியாபாரம் பண்ண வந்துவிட்டு, அதையெல்லாம் பார்த்தால் முடியுமா என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு போண்டோக்களைப் பொறுக்கினேன்.

கூடைக்குள்ளே நான் கையை விட்டபோது அவனும் சட்டென்று கூடைக்குள் தன் கையை விட்டு என் கையைப் பிடித்து அழுத்தினான். கண் மூடிக் கண் திறப்பதற்குள் அவன் இப்படிப் பண்ணிவிடுவான் என்று நான் துளியும் எதிர்பார்க்கவில்லை. ஒரே கணத்தில் குப்பென்று வேர்த்துவிட்டது. கையை வெடுக்கென்று உதறி விடுவித்துக் கொண்ட என்னால், ‘சீ ‘ என்னும் ஒரே வார்த்தையைத்தான் சொல்ல முடிந்தது. ‘சாரி ‘ என்று இளித்துக்கொண்டே அவன் தன் கையை வெளியே இழுத்துக்கொண்ட போது, ‘இவன் வேணும்னுட்டுப் பண்னல்லே. இல்லேனா ‘சாரி ‘ ன்னு சொல்லுவானா ‘ என்று நினைப்பதற்கு நான் என்ன அசடா, இல்லை அரைக்கிறுக்கா ?

ஒர் ஆண்பிள்ளையைப் பார்த்த மாத்திரத்தில் – அவனுடன் ஒரு வார்த்தை கூடப் பேசிப்பழகாமலேயே – இவன் பொறுக்கி, இவன் நல்லவன் என்று தெரிந்துகொண்டு விடக்கூடிய மோப்ப சக்தியை ஆண்டவன் எங்களுக்குக் கொடுத்திருக்கிறாரோ, நாங்கள் பிழைத்தோமோ! இந்த விஷயத்தில் எங்களை ஏமாற்ற முடியுமா ? பின் பக்கத்தில் நின்றுகொண்டு யாராவது எங்களை முறைத்துப் பார்த்தால் கூட முதுகில் குறுகுறுக்குமே.

அதற்கு அப்புறம் நான் ஆச்சி வீட்டுக்குப் போவதில்லை.

ஆச்சியின் பிள்ளை ஓர் உதாரணம். அவ்வளவுதான். வயசான ஆண்பிள்ளைகளை விட இளவட்டங்களே மேல் என்று தோன்றும்படி – மொத்தத்தில் இந்த உலகமே சுத்த மோசம் என்று அபிப்பிராயம் ஏற்படுகிற மாதிரிதான் பலரும் நடந்து வந்திருக்கிறார்கள். இந்த மாதிரியான தொந்தரவுகள் வருமே என்பதை உத்தேசித்துத்தான் பெண்கள் வீட்டு வாசற்படியை விட்டு இறங்கி வரக் கூடாது என்று நம் பெரியவர்கள் விதித்திருந்தார்களோ என்று அடிக்கடி எண்ணிக்கொாள்ளுவேன்.

இன்னொரு வாடிக்கைக்காரர் வீட்டிலும் எனக்குக் கசப்பான அன்பவம் ஒன்று ஏற்பட்டது. அந்த மனிதருக்குக் கிட்டத்தட்ட ஐம்பது வயசாவது இருக்கும் என்று நினைக்கிறேன். வீட்டில் அவரும் அவருடைய மனைவியும் மட்டுமே இருந்து வந்தார்கள். ஒரே பெண்ணுக்குத் திருமணம் ஆகி அவள் கணவன் வீட்டுக்குப் போய் ஐந்தாறு ஆண்டுகள் ஆகின்றன. அவர்கள் வீட்டில் நாள்தோறும் இரண்டு பஜ்ஜியும் இரண்டு போண்டோவும் வாங்கிக்கொள்ளுவார்கள். அன்றாடம் கையில் காசைக் கொடுத்துவிடுவார்கள்.

அன்றொரு நாள் நான் வழக்கம் போல் பிற்பகல் மூன்று மணிக்கு அவர்கள் வீட்டை யடைந்தபோது அவருடைய மனைவி அங்கு இல்லை. அவர் மட்டுமே இருந்தார். நான் கூடையை இறக்கிக் கீழே வைத்துவிட்டுத் தரையில் உட்கார்ந்ததும், எதிரில் நின்றுகொண்டிருந்த அந்த மாமா – மாமியின் முன்னிலையில் இந்தப் பூனையும் பால் குடிக்குமோ என்பது போல் குனிந்த தலை நிமிராமல் இருந்து வந்திருக்கும் அந்த மாமா – சட்டென்று குனிந்து என் தோள்களைத் தன் வலிமை மிக்க கைகளால் அழுத்தினார். ஒரு கணம் நான் செய்வதறியாது அதிர்ந்துதான் போனேன். ஆனால், மறு கணமே சுதாரித்துக்கொண்டு – என் வலிமை முழுவதையும் ஒன்றுதிரட்டிக்கொண்டு – அவர் கைகளைப் பிடித்து அப்பால் தள்ளினேன். அப்போதும் ‘சீ ‘ என்னும் ஒரு சொல்லைத்தான் என்னால் சொல்ல முடிந்தது.

தெருவில் காலடிச் சத்தம் கேட்டதாலோ என்னவோ, அந்த மனிதப் பேய் என்னை வேறு ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டது. அதற்குப் பிறகு நான் அந்த வீட்டுக்குப் போவதில்லை.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சில நாள்கள் கழித்து ஒரு நாள் அவருடைய மனைவி என்னைத் தெருவில் தற்செயலாய்ச் சந்தித்து, ‘ஏண்டா! இப்பல்லாம் உங்காத்துல பஜ்ஜி போட்றது இல்லியா ? ‘ என்று விசாரித்தாள்.

என்ன காரணத்தால் நான் அவர்கள் வீட்டுக்கு வருவதை நிறுத்தினேன் என்பதைச் சொல்லிவிடலாமா என்று ஒரே ஒரு கணம் யோசித்தேன். ஆனால் அடுத்த கணமே எனது எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். நடந்ததைச் சொல்லி அந்த அப்பாவி மாமியின் மகிழ்ச்சியைக் குலைக்க நான் விரும்பவில்லை.

‘உங்க வீட்டுக்கு வர்றதுக்கு முந்தியே வித்துப் போயிட்றது, மாமி. நாளையிலேர்ந்து கொண்டு வறேன்… ‘ என்றேன்.

மறு நாளிலிருந்து அவர்கள் வீட்டுக்குப் போகத் தொடங்கினேன். ஆனால், மாமா இப்போதெல்லாம் காணப்படுவதில்லை. தவிர நானும் ஜாக்கிரதையாக இருக்கிறேன். இரேழி வரையிலுங்கூட – எவ்வளவு பழகிய வீடாக இருப்பினும் – போவதில்லை. வாசலோடு எனது புழக்கத்தை நிறுத்திக்கொண்டு விடுகிறேன்.

இன்னும் இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். மொத்தத்தில் பெரும்பாலோருடைய பார்வையே நன்றாயில்லை. எல்லாம் மொய்க்கிற பார்வைகள், துகிலுரிக்கிற பார்வைகள், கற்பழிக்கிற பார்வைகள் – இப்படித்தான்!

ஜானகிக்கும் இம்மாதிரியான தொந்தரவுகள் ஏற்பட்டனவா என்பது தெரியவில்லை. அவளும் என்னைப் போன்றே மதமதவென்றுதான் இருப்பாள். அதனால், அவளையும் இப்படிப்பட்ட தொல்லைகள் தேடி வந்திருக்கும் என்றே தோன்றியது. ஆனால் அதைப் பற்றி அவளிடம் கேட்பதற்கோ அல்லது பேசுவதற்கோ கூட எனக்குக் கூச்மாக இருந்தது. இருந்தாலும், ‘ஜானகிக்குக் இந்த மாதிரி தொந்தரவெல்லாம் வராம இருக்கணுமே, பகவானே ‘ என்று அடிக்கடி வேண்டிக் கொள்ளுவேன்.

ஜானகி என்னைக் காட்டிலும் துணிச்சல்காரிதான். இருந்தாலும் அவள் என் தங்கை என்பதாலும், என்னை விட ஐந்து ஆண்டுகள் இளையவள் என்பதாலும் ஒரு பொறுப்பு உணர்ச்சியோடு நான் அவளைப் பற்றி அடிக்கடி கவலைப்படலானேன்.

ஆச்சு. அம்மா போய்ப் பத்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. நாள்கள்தான் என்ன மாய் ஓடுகின்றன! யாருக்கு என்ன கவலை இருந்தாலும், உலகத்தில் என்ன நடந்துகொண்டிருந்தாலும், சூரியன் அது பாட்டுக்கு உதித்துக்கொண்டும் அஸ்தமித்துக்கொண்டும்தான் இருக்கிறது. ஒருவனுக்கு நாள்கள் மிக விரைவாக ஓடுபவை போல் தோன்றினால், அவன் மிகவுக் மகிழ்ச்சியாக இருப்பதாக அர்த்தம்! அப்படிப் பார்த்தால், நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்றுதானே ஆகிறது!

‘ஐயே! போறுமே! என் சந்தோஷமும் நானும்! ‘

கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு கவலைப் படுவதற்கென்றே கொஞ்ச நேரம் கூட ஒதுக்க முடியாத அளவுக்கு வேலைகள் உடம்பை வெட்டி முறிக்கிற நிலை கூட நாள்கள் கிடுகிடுவென்று ஓடுவதற்கு ஒரு காரணமில்லையா ?

நான் சித்திரை மாதம் முதல் தேதியன்று பிறந்தேனாம். அதாவது புத்தாண்டு பிறக்கும் நாளில்! இதனால் என் பிறந்த நாளை நினைவு வைத்துக் கொள்ளுவதும் என் வயசை எண்ணு வதும் மிகவும் எளிதானவை. ஆச்சு. அடுத்த ஆண்டு பிறக்கும் போது என் இருபத்தாறாம் வயது பிறந்துவிடும். ‘ என்னது! எனக்கு இருபத்தஞ்சு வயசா முடியப்போறது! அடேயப்பா! அப்படின்னா, இன்னும் அஞ்சு வருஷம் ஓடிடுத்துன்னா முப்பது வயசுன்னா ஆயிடும் ? ‘

சட்டென்று என்னைச் சோர்வு பற்றிக்கொண்டது. இந்த இருபத்தைந்து வருட வாழ்க்கையில், ‘ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா ? ‘ என்று எவனும் என்னைக் கேட்டது கிடையாது. ‘உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் பட்றேன் ‘ என்று சொன்னதும் இல்லை.

இல்லை. இல்லை. நான் இப்போது சொன்னது முழுக்க முழுக்கச் சரி யென்று சொல்லி விடுவதற்கில்லை. இப்போதுதான் ஞாபகம் வருகிறது. ஓர் ஆசாமி கேட்டான். கொஞ்சம் வயசானவன்தான். எப்படிக் கேட்டான், தெரியுமோ ? அந்தி சாய்கிற நேரத்தில், கையில் இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளை விரித்துவைத்துக்கொண்டு – அது என் பார்வையில் படும் படியாய் நன்றாய்க் காட்டி – ‘ என்ன, குட்டி ? வாரியா ? ‘ என்று கண்ணடித்துக்கொண்டே கேட்டான். அதற்கு மேலே சொன்னால் அசிங்கம். அவனும் கொஞ்சம் இங்கிதம் தெரிந்தவனாய்த்தான் இருக்க வேண்டும். இல்லா விட்டால் இவ்வளவு சுருக்கமாய்க் கேட்டிருக்க மாட்டான்.

அந்த ஆச்சி பிள்ளைக்குச் சீ என்று சொன்னது போல் இவனுக்குத் தூ என்று சொல்லிவிட்டு – துப்பி விட்டும்தான் – வந்ததை இப்போது நினைத்துப் பார்த்தாலும் காலெல் லாம் வெடவெடவென்று ஆடுகிறது. இப்படி இரண்டு பத்து ரூபாய்த் தாள்களை விரித்துக் காட்டி என்னைக் கூப்பிட்டவன் என் வாடிக்கைக்காரன் அல்லன். அவன் என்னிடம் எதுவும் வாங்கித் தின்றதில்லை. ஒரு வேளை எங்கள் குடும்பத்தில் நிலவிய வறுமையைப் பற்றிக் கேள்விப்பட்டவனாக இருக்க்க்கூடும். காதிலோ, கழுத்திலோ, கையிலோ நகை எதுவும் இல்லாமல் மூளியாகவும், சாயம் போன புடைவையுடனும் பலகாரம் விற்கும் நான் பிறர் யாரும் எடுத்துச் சொல்லாமலேயே எனது வறுமையைப் பறை சாற்றிகொண்டுதானே இருக்கிறேன் ? அதனால், எங்கள் ஏழைமையைப் பற்றி யாராவது அவனுக்குச் சொல்லி யிருப்பார்கள் என்று நினைப்பது கூடச் சரியில்லைதான்.

இன்னொரு சமாசாரம் கூடச் சொல்ல விட்டுப் போய்விட்டது. நான் வழக்கமாகச் செல்லுகிற ஒரு தெருவுக்குப் போகிற வழியில் ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத சின்ன சந்து ஒன்று உண்டு. ஒருநாள் நான் பட்சணக் கூடையுடன் அந்தச் சந்தில் நடந்துகொண்டிருந்த போது எதிர்ப்பட்ட சைக்கிள்கார இளைஞன் சைக்கிளில் இருந்த வாறே என்னை நோக்கிக் கையை நீட்டினான். அவனது அசிங்கம் பிடித்த நோக்கம் புரிந்தபோது எனது நெஞ்சு படக்படக்கென்று இரைந்து துடிக்கலாயிற்று. ஆனால் நான் சட்டென்று நகர்ந்து கூடையின் பாதுகாப்புடன் தப்பிவிட்டேன். தெருமுனையில் ஒரு தலை தெரியவே சைக்கிள்காரன் போய்விட்டான். ஆனால், போகிற போக்கில், ‘ இன்னிக்குத் தப்பிச்சே, பொண்ணு! நாளைக்கு இதே பாதை யிலதானே வருவே ? அப்ப பாத்துக்கிடறேன் ஒரு கை! ‘ என்று கூவிக்கொண்டே போனான்.

எனக்கு அழுகை அழுகையாய் வந்தது. அந்த வருத்தத்தினூடே ஜானகியைப் பற்றிய கவலை வேறு என்னை அரிக்கலாயிற்று. எப்படியோ, ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு யுகமாய்க் கழித்தபடி நான் தெருத்தெருவாய் நடந்து கொண்டிருக்கிறேன். பெண்கள் வீட்டுக்குள் வைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள் என்று நம் பெரியவர்கள் விதித்திருப்பது பெண்களுடையவும் இந்தச் சமூகத்தினுடையவும் ஒட்டுமொத்தமான நலனைக் கருதித்தான் என்பதை என் அனுபவங்கள் அடிக்கடி எனக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

அந்தச் சைக்கிள்காரனின் (என்னைத் தொடும்) நோக்கம் நிறைவேறாமற் போன அன்று வீட்டுக்குப் போனதும் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்துக்கொண்டேன். அப்பாவின் வறுமைக்குச் சவால் விடுபவை போல் மொழுமொழுவென்று செழுமையாய்க் காணப்பட்ட என் முகமும் உடம்பும் எனக்குப் பெருமை யளிப்பதற்குப் பதில் என்னைத் துயரத்தில் ஆழ்த்தின. என் அழகின் மீது எனக்கு ஆத்திரம் வந்தது. சட்டென்று இளைத்துத் துரும்பாகிக் கிழவியாகிவிடக் கூடாதா என்று இருந்தது. இத்தனைக்கும் நான் பவுடர் கூடப் பூசிக்கொள்ளுவதில்லை. பளிச்சென்று முகம் கழுவிக்கொள்ளுவதற்கு வீட்டில் சோப்புக்கட்டி கூடக் கிடையாது. அப்பாவும் சித்தியும் மட்டுந்தான் சோப்பு உபயோகிப்பவர்கள். தலையை மட்டும் நன்றாக வாரிப் பின்னிக் கொள்ளுவேன். அதைகூடச் செய்யாமல் இருக்கலாம்தான். ஆனால் பேன் வந்து விடுமே!

ஜானகி கொஞ்சம் அழகு உணர்ச்சி கொண்டவள். இருக்கிற ஓரிரு துணிமணிகளைப் பளிச் சென்று துப்புரவாக வைத்துக்கொள்ளுகிறவள். சித்தியின் அனுமதி இல்லாமலேயே, அவ்வப்போது அவளது சோப்பை எடுத்து முகங் கழுவ உபயோகிப்பவள். இந்தக் குறைந்த அழகுணர்ச்சி கூட இல்லாமல் ஓர் இளம் பெண் இருக்கமுடியுமா என்ன ? எனக்கு இருபத்தைந்து வயது முடிந்து விட்டதென்று சொன்னேன். ஜானகிக்கு இருபது ஆகிறது. எங்கள் இருவருடைய திருமணங்கள் பற்றியும் அப்பா ஒப்புக்குக் கூடப் பேச்செடுத்ததில்லை. அப்பாவே இப்படி இருந்த நிலையில் சித்தியைப் பற்றிக் கேட்கவே வேண்டியதில்லை.

எதிரகத்து ராவுஜி மாமா, வழக்கம் போல் விசிறிக் காம்பினால் வெற்று முதுகைச் சொறிந்து கொண்டு, ‘ என்ன, சாஸ்திரிகளே! உம்ம பொண்ணுகளுக்குக் கல்யாணம் பண்ண வேண்டாமா ? இப்படி அசிரத்தையா யிருக்கீரே ? ‘ என்று, துளிக் கூடத் தயக்கமே இல்லாமல், எப்போதாகிலும் கேட்கும் போதெல்லாம், ‘ பாத்துண்டுதான் இருக்கேன், ராவுஜி சார்! ஒண்ணும் சரியா அமைய மாட்டேன்கிறதே! ‘ என்று அப்பா கொஞ்சம் கூடக் கூசாமல் புளுகுவார்.

எங்கள் கல்யாணத்தைப் பற்றி அசதி மறதியாய்க் கூட மூச்சும் விட்டறியாத அப்பா அப்படித் தயங்காமல் பளிச்சென்று பொய் சொல்லும் போதெல்லாம் எரிச்சலாக இருக்கும். அப்பா அது மாதிரிப் புளுகும் போதெல்லாம் என்னைக் காட்டிலும் ஜானகிக்குத்தான் அதிகமாய் ஆத்திரம் வரும். ‘ டூப் அடிக்கிறதைப் பாத்தியோல்லியோ – சம்ஸ்கிருத மந்திரம் சொல்ற வாயால! சம்ஸ்கிருதம் செத்துப் போனதே இந்த மாதிரி ஆசாமிகளாலதாண்டி! ‘ என்று எரிச்சலோடு என்னிடம் முணுமுணுப்பாள். .நான் ஒன்றும் சொல்லாமல் கேட்டுக்கொண்டு சிரிப்பேன். எனினும், இன்றைத் தேதியில் அம்மா உயிருடன் இருந்தால் நாங்கள் இப்படி இருப்போமா – இருக்க விட்டிருப்பாளா – என்று நினைத்துப் பார்க்கும் போது மனசே பொங்கித் ததும்புகிற மாதிரி இருக்கும். மனசு நிதானமாக இருக்கிற நேரங்களில் அப்பா வரதட்சிணைக்கும் மற்ற செலவுகளுக்கும் எங்கே போவார் என்று தோன்றும். ஓர் ஏழைப் பையன் கூட – தன் பெற்றோருடன் சேர்ந்துகொண்டு – ஏழைப் பெண்ணின் தகப்பனிடமிருந்து வர தட்சிணையும் சீர் வரிசைகளும் கேட்டுப் பிடுங்கும் அநாகரிகக் கொடுமை மறையாத வரையில் எங்களைப் போன்ற பெண்களுக்கு விமோசனமே இல்லை என்றும் தோன்றும். அதே சமயத்தில், ‘முயற்சியே பண்ணாம கையைக் கட்டிண்டு உக்காந்திருந்தா மாப்பிள்ளைப் பையன் கூரை வழியா வந்து குதிப்பானா என்ன ? ‘ என்றும் எண்ணி எரிச்சலடைவேன்.

அரைப்பதற்கும், கரைப்பதற்கும். தெருத்தெருவாய் அலைந்து விற்பதற்கும் ஆள் இல்லாமல் போய்விடுமே என்பதால்தான் அப்பா எங்கள் மணவாழ்க்கை பற்றிய பிரக்ஞையே இல்லாமல் இருக்கிறாரோ என்றெண்ணி ஆத்திரப்படுவேன். வேண்டாத குடும்பச்சுமையை இழுத்துவிட்டுக் கொள்ளாதிருந்திருந்தால், எங்கள் திருமணங்களை முடித்து விட்டு இன்றைத் தேதியில் அக்கடா வென்று இருக்கலாமோ இல்லையோ என்றும் தோன்றும்.

தம்முடைய வாழ்க்கையின் கணிசமான பகுதியை வாழ்ந்து முடித்துவிட்ட பின்னர், தம் கடைசிக் காலத்தில் தமக்கு ஒரு துணை வேண்டும் என்பதற்காக மறுமணம் செய்துகொண்டிருக்கும் இந்த அப்பா துணை மிக மிக அவசியமாய் இருக்கிற ஒரு பருவத்தில் தாம் பெற்ற பெண்களுக்குத் திருமணம் செய்துவைத்துவிட வேண்டுமென்னும் குறைந்த பட்சப் பொறுப்பு உணர்ச்சி கூட இல்லாதிருப்பது பற்றியும், குறிப்பிட்ட வயசுக்குள் அவர்களுக்கு ஒரு துணையைத் தேடி வைக்காவிட்டால் அந்த வயசைத் தாண்டிய பிறகு அவர்களை யாருமே சீந்த மாட்டார்கள் என்பதையும் நினைத்துப் பார்க்காதது எவ்வளவு பெரிய ஆச்சரியம்! ஊர்-உலகத்தில் எத்தனை தகப்பன்மார்கள் இல்லை ? எல்லாரும் இப்படியா பொறுப்பற்று இருக்கிறார்கள் ?… எல்லாம் நாங்கள் பண்ணிய பாவம்!

ஆச்சு. இன்னும் சில நாள்களில் சித்தியின் ஆறாவது குழந்தை வந்து சேரும். தொடர்ந்து வேலைகளும் மிகுதியாகும். அதற்குப் பிறகாவது இந்த அப்பா குடும்பத்தைப் பெருக்காமல் இருப்பாரா, இல்லாவிட்டால்….

ராவுஜி மாமா வீட்டுப் பெரிய கெடியாரத்தில் பன்னிரண்டு மணி யடித்ததும், நான் கண்களை இறுக்கி மூடிக்கொண்டு தூங்க முயன்றேன். கடைசியில் ரொம்ப நேரம் கழித்துத்தான் கண்ணயர முடிந்தது. மறு நாள் பொழுது விடிந்ததும், தலை கால் புரியாத உணர்ச்சிக் கொந்தளிப்பில் என்னை அமிழ்த்தக் கூடிய ஒரு நிகழ்ச்சி நடக்கப் போகிறது என்பதைப்பற்றி ஏதும் அறியாதவளாய் நான் தூங்கிப் போனேன்.

காலையில் கண் விழித்த போது மிகவும் சோர்வாக இருந்தது. சரியாய்த் தூங்கா ததால் என் முகம் அதைத்துக் கிடந்ததைக் கவசித்தவள் ஜானகிதான் . ‘ என்னடி, அக்கா! ராத்திரி சரியாத் தூங்கலியா ? கண்ணெல்லாம் தடிச்சுக் கிடக்கே ? முகம் கூட அதைச்சாப்ல இருக்கு ? ‘ என்று அவள் நான் பல் தேய்த்துக் கொண்டிருந்த போது கேட்டதற்கு, ‘ஆமா… ‘ என்று உண்மையான பதிலையே நான் சொன்னேன்.

‘ஏன் ? ‘ என்று, வியப்புக்குறி தன் கண்களில் தெறிக்க, வினவிய ஜானகி என்னை உற்றுப் பார்த்தாள்

அவளது பார்வையைத் தவிர்த்தவாறு, ‘ அம்மாவை நினைச்சுண்டுட்டேண்டி, ஜானகி! ‘ என்று பதில் சொன்னேன். ஜானகி அதற்கு மேல் ஒன்றும் கேட்கவில்லை. ஒரு பெருமூச்சு மட்டும் அவளிடமிருந்து சீறிக்கொண்டு கிளம்பியது.

‘ அம்மா இன்னிக்கு உசிரோட இருந்தா, இந்த வீடு இப்படி இருக்குமாடி ? ‘ என்று சற்றுப் பொறுத்து அவள் தொடர்ந்த போது அவள் எதை மனத்தில் கொண்டு பேசினாள் என்பது புரிந்தது. நான் பதில் சொல்லவில்லை.

அன்று வழக்கம் போல் ஜானகியும் நானும் ஆளுக்கு ஒரு கூடையைத் தூக்கிக்கொண்டு அவரவர் பாதையில் புறப்பட்டோம். அந்தப் பொறுக்கி சைக்கிள்காரன், இந்தப் பாதையிலதானே வருவே ? ‘ என்று சவால் விட்டதிலிருந்து நான் அந்தச் சந்து வழியாக நடப்ப தில்லை. அதற்குப் பிறகு அந்தப் பொறுக்கியை நான் தற்செயலாய்க் கூடச் சந்திக்கவில்லை. இந்த உலகமே போக்கிரிகளின் உலகம் என்று மனத்துள் ஆண் இனத்தையே பழித்தவாறு நடந்துகொண்டிருந்த என் எண்ணத்தைப் பொய்யாக்கும் வண்ணம் எனக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது. அப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பதற்கான சாத்தியக்கூறு பற்றி நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.

அன்று மாலையில், வழக்கம் போல் சினிமாக் கொட்டகையில் நின்றுகொண்டிருந்த போது அங்கே இருந்த பெட்டிக் கடை முதலாளி – இளைஞன் – வழக்கமாக என்னிடம் வியாபாரம் செய்கிறவன் – அன்றைக்கும் வாங்கிக்கொண்டான். அன்றைக்கு என்னவோ சினிமாக் கொட்டகை வாசலில் வழக்கமாக நிற்கும் கூட்டத்தைக் காணவில்லை. ஒருகால் எல்லாரும் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே போய் விட்டார்களோ என்னவோ. நான் அன்று சற்றுத் தாமதமாக வந்துவிட்டேன் போலிருக்கிறது.

வழக்கம் போல் நான் எடுத்துவைத்த பொட்டலத்தைப் பெற்றுக்கொண்ட அந்தப் பெட்டிக் கடை முதலாளி கொஞ்சம் விந்தையான முறையில் சுற்றுமுற்றும் கண்களைச் சுழற்றிவிட்டு, ‘ உங்க பேரு என்னம்மா ? ‘ என்று தணிந்த குரலில் கேட்டான்.

எனக்கு ஒரு கணம் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. அவனது கேள்விக்குப் பதில் சொல்லுவதற்கு முன்னால், அக்கம் பக்கத்தில் யாரேனும் இருக்கிறார்களா என்பதைத் தெரிந்து கொள்ளுவதற்காக நானும் சுற்றுமுற்றும் பார்த்தேன். யாரும் காணப்படவில்லை. அட, அப்படியே யாராவது இருந்தால்தான் என்ன ? என்னோடு அவன் பேசுவதை யார் தப்பாக எடுத்துக்கொள்ள முடியும் ? நான் வியாபாரம் செய்கிறவள். அவன் என்னிடம் வாங்கித் தின்கிறவன்…

நான் சற்றே திகைத்து விட்டதைக் கவனித்து விட்டோ என்னவோ, ‘உங்களுக்கு இஷ்டமில்லைன்னா சொல்ல வேணாம்… ‘ என்று அவன் அவசர அவசரமாக – ஏதோ தப்புப் பண்ணிவிட்டவன் போல் – சொல்லிவிட்டுத் தன் தலையைத் தாழ்த்திக்கொண்டு விட்டாள்.

தாழ்ந்திருந்த அவன் முகத்தை அன்றுதான் முதன் முதலாய்ப் பார்ப்பவள் போல் நான் கவனித்துப் பார்த்தேன். ரொம்ப நல்லவன் என்று அவன் முகத்தில் எழுதி ஒட்டி யிருந்ததாய்த் தோன்றியது. களையான முகம் தான். நானும் இரண்டு மூன்று வருடங்களாய் வந்துபோய்க் கொண்டிருக்கிறேன். வாயைத் திறந்து ஒரு பேச்சுப் பேசியதில்லை. ஒரு சின்ன சிரிப்புக்கூடச் சிரித்தது இல்லை. அவன் உண்டு; அவன் வேலை உண்டு. இதனால் எனக்கு அவனிடம் ஒரு மரியாதை உண்டு. அன்று காலையில் நான் ஆண்பிள்ளைகளைப் பற்றி, அவர்கள் எல்லாருமே மோசமானவர்கள் என்பது போல், கேவலமாக எண்ணிய போது, எனக்கு ஏன் இந்தப் பெட்டிக் கடைக்காரனின் ஞாபகம் வரவில்லை என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

தேவையற்றுப் பேசாமலும், பார்வையால் கூடக் கண்ணியமாகவும் அவன் பல நாளாக இருந்து வந்திருப்பதை இப்போதுதான் நினைத்துப் பார்க்கத் தோன்றியது. அப்படிப்பட்டவன் இன்று முதன் முறையாக வாயைத் திறந்து என் பெயரைக் கேட்டுவிட்டது அதிசயத்திலும் அதிசயந்தான். நான் கணம் போல் திகைத்து நின்றதை அவன் கேள்வி எனக்குப் பிடிக்கவில்லை என்பதாக அர்த்தம் செய்துகொண்டு ஏதோ குற்றம் செய்துவிட்டவன் போல் அவன் தலையைத் தாழ்த்திக் கொண்டதைப் பார்த்ததும் எனக்குப் பாவமாக இருந்தது.

‘ பரிமளான்னு பேரு.. ‘ என்று சொல்லிவிட்டு நான் புன்னகை செய்தேன்.

அவன் முகம் சட்டென்று மலர்ந்தது. அவனது கேள்வியை நான் தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதால் விளைந்த புன்னகை அது என்பது எனக்கும் புரிந்தது. அவன் இலேசான புன்சிரிப்புடன் தலையை உயர்த்தி என்னைப் பார்த்தான். எவ்வளவு கண்ணியம் நிறைந்த பார்வை! ‘இவன் ஒண்ணும் ஜாஸ்தி படிச்சவனா யிருக்க முடியாது என்னை மாதிரியே அஞ்சாறு க்ளாஸ் படிச்சிருப்பான். படிப்புக்கும் நடத்தைக்கும் துளியும் சம்பந்தமே இல்லைதான்… ‘

‘ரொம்ப நாளா உங்களை ஒண்ணு கேக்கணும்னு… நீங்க ஒண்ணும் தப்பிதமா நினைக்கல்லேன்னா… ‘

அவன் என்ன சொல்ல நினைக்கிறான் என்பது புரிந்தது போலவும், புரியாதது போலவும் ஒரு குழப்பம் உடனே என்னுள் தோன்றியது. படபட வென்று வந்தது. நானும் அவனுடைய அழகான பெரிய கண்களைப் பார்த்துக்கொண்டு ஒன்றும் பேசாமல் நின்றேன். அந்த நேரம் பார்த்து யாரோ இரண்டு பேர் அவன் கடைக்கு வந்து விட்டார்கள். ‘நாளைக்கு வாங்க, கண்டிப்பா வாங்க… ‘ என்று மிக மெல்லிய குரலில் சொல்லிவிட்டு அவன் காசை எடுத்துக் கொடுத்தான். காசைக் கொடுக்கும் போதெல்லாம் பிச்சைக்காரிக்குப் போடுவது மாதிரி கையில் இடிக்காமல் தூக்கித்தான் எப்போதும் போடுவான். இவனிடம் இருந்த கண்ணியம் இத்தனை நாளும் என் மனத்தில் உறைக்காதது பற்றி நினைத்துப் பார்த்தபோது வேடிக்கையாய்க் கூட இருந்தது. படபடவென்று மனசு அடித்துக்கொள்ள, நான் அவன் கடையை விட்டுப் புறப்பட்டேன். அன்றைக்குப் பூராவும் எனக்கு மனசே சரியா யில்லை. இன்னதென்று விண்டு சொல்ல முடியாதபடி ஒரே மகிழ்ச்சியாகவும், அதே நேரத்தில் ஒரே வருத்தமாகவும் கூட இருந்தது. இப்படி ஒரு விந்தையான உணர்ச்சியை அனுபவித்துக்கொண்டு அன்று இரவு முழுவதும் நான் தூங்காமலே படுத்துக் கிடந்தேன். அவன் என்னிடம் பேசப் போவது என்ன என்பது புரிந்து விட்டதால் மகிழ்ச்சி என்பதையும், அவனது எண்ணம் ஈடேற முடியாத பகல் கனவு என்பதால் வருத்தம் என்பதையும் சொல்லத் தேவையில்லை.

அது வரையில் யாரையும் பார்த்து, ‘ இவனைக் கல்யாணம் பண்ணிண்டா எவ்வளவு நன்னாருக்கும் ‘ என்று நான் நினைத்தது கூட இல்லை. அது மாதிரி ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை என்பது அதற்குக் காரணமா யிருக்கலாம். ஆனால், அந்தப் பெட்டிக் கடைக்காரனின் மனம் ஊகமாய்ப் புரிந்த நிலையில் இப்போது என் பாழும் மனசு தறிகெட்டுத் திரியத் தொடங்கிவிட்டது. எனக்கே தெரியாமல் என்னுள் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்த மனசை யாரோ தட்டி எழுப்பி விட்டுவிட்டாற் போல் இருந்தது. அது தகாத உறவு, கூடாக் கனவு, யாருடைய ஏற்கையையும் பெறமுடியாத தொந்தம் என்பது எனக்கு நன்றாகத் தெரிந்திருந்த நிலையிலும் கூட இந்தப் பாழும் மனசு ஏன் தான் அவனைச் சுற்றிச் சுற்றி வரவேண்டுமோ புரியவே இல்லை.

கண்ணைக் கூடக் கொட்டாமல் இரவெல்லாம் படுக்கையில் புரண்டு கொாண்டிருந்து விட்டு மறுநாள் காலங்கார்த்தாலையில் எழுந்து நான் காரியங்களைக் கவனிக்கத் தொடங்கிய போது, தலைவலி மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. மற்ற நேரமாக இருந்திருந்தால், ஒரு பெரிய துணியைத் தலையைச் சுற்றி இறுக்கிக் கட்டிக்கொண்டு ஓர் ஓரமாக விழுந்து கிடந்திருப்பேன். ஆனால் அப்படி விழுந்து கிடக்கப் பிடிக்காமல், இன்றைக்கு ஒரே குஷியும் கும்மாளமுமாக வேறு அல்லவா இருக்கிறது மனசு! தவிர உடம்பு சரியில்லை என்று படுத்துக் கொண்டிரு ந்தால் இன்று வியாபாரம் பண்ண வெளியே போக முடியாது. அப்புறம் அந்தப் பெட்டிக் கடைக்காரனைப் பார்க்க முடியாது. அவனும் ஆவலோடு என்னை எதிர்பார்த்துக் கொண்டிருப்பான். எனக்கும் அந்தச் சந்திப்பை இழக்க மனமில்லை.

நான் கல்லுரலில் உளுந்தை அரைத்துக் கொண்டிருந்த போது, யார் கண்ணுக்கும் தெரியாததை ஜானகிதான் கண்டுபிடித்தாள். எதிரே வந்து நின்றுகொண்டு என்னை உற்றுப் பார்த்த அவள், ‘என்ன, ஒரு மாதிரி இருக்கே ? கண்ணெல்லாம் செவசெவன்னு இருக்கு ? ‘ என்று கேட்டாள்.

‘ஒரு மாதிரியும் இல்லே. எப்பவும் போலத்தான் இருக்கேன். . ‘ என்று நான் முகத்தைப் பொதுமையாக வைத்துக்கொண்டு சொன்ன பதிலைத் துளியும் நம்பாமல், ‘நீ என்னத்தையோ மறைக்கிறேடி, அக்கா! நீ மறைச்சாலும் உன் மூஞ்சி சொல்றதே, நீ பொய் சொல்றே ன்னு! ‘ என்று அவள் ஒரு போடு போட்டதும், எனக்குத் தூக்கிவாரித்தான் போட்டது.

எனது வியப்பு முகத்தில் தோன்றாமல் சமாளித்துக்கொண்டு, ‘ மூஞ்சி சொல்றதோல்லியோ ? அப்ப அதையே கெட்டுக்கோடி! ‘ என்று சொல்லிவிட்டு நான் அவள் முகத்தைப் பார்க்காமலே கிடுகிடு வென்று குழவியை ஆட்டினேன்.

ஜானகி கொஞ்ச நேரத்துக்கு எதுவும் பேசவில்லை. என்னையே பார்த்துக்கொண்டு நின்றாள்.

‘ந்ீ ரொம்பப் பாவம் பண்ணிப்பிட்டு இந்தாத்துல வந்து பொறந்திருக்கேடி, அக்கா! ‘ என்று உடைந்து போன குரலில் அவள் பெருமூச்சொன்றை உதிர்த்துவிட்டுச் சொன்னதும், நான் அரைப்பதை நிறுத்திவிட்டு அவளை விழித்துப் பார்த்தேன்.

‘என்னடி சொல்றே, ஜானகி ? ‘

‘உன் சிநேகிதி ஆனந்திக்குக் கல்யாணம் ஆயி, இன்னைக்குப் பத்து வயசுல ஒரு பிள்ளை இருக்கு அவளுக்கு. அவளுக்கும் உன் வயசுதான் இருக்கும், இல்லையா ?…சில சமயங்கள்ள இந்த அப்பா மேல எனக்கு எவ்வளவு கோவம் கோவமா வருது, தெரியுமா ? ‘ – இப்படிக்கேட்டுவிட்டு இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு அவள் நின்ற போது

பத்திரகாளி மாதிரி இருந்தாள்.

ஒரு கணம் எனக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியவில்லை. சற்றுப் பொறுத்துச் சொன்னேன்: ‘அதான் சொல்லிட்டியே – பாவம் பண்ணிப்பிட்டு இந்த வீட்டுல பொறந்திருக்கிறதா! நாம பண்ணியிருக்கிற பாவத்துக்கு ஏத்த மாதிரி நமக்குக் கிடைக்கிற வாழ்க்கைக்கு அப்பா எப்படிப் பொறுப்பு ? ‘ – இப்படிக் கேட்டுவிட்டு நான் அரைப்பதைத் தொடர்ந்தேன்.

ஜானகி சொன்னாள்: ‘ அப்பா பொறுப்பு இல்லாம, வேற யாருடா பொறுப்பு ?… இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு நேருக்கு நேரா நின்னுண்டு அப்பா கிட்ட கேக்கப்போறேன்…ஆமா! ‘

அரைப்பதை மறுபடியும் நிறுத்திவிட்டு நான் கேட்டேன்: ‘ என்னடி கேக்கப்போறே ? ‘

என் குரலில் தெறித்த திகைப்பைப் பொருட்படுத்தாதவள் போல் அவள் அமைதியாகப் பதில் சொன்னாள்: ‘உன்னையும் பக்கத்துல வச்சுண்டுதான் கேக்கப் போறேன். அப்ப நீயே தெரிஞ்சுக்கோ…ஆமா ? நீ ஏன் ஒரு மாதிரி இருக்கே ? ‘

‘ஒரு மாதிரியும் இல்லேடி. லேசாத் தலைவலி. ‘

‘ நீ ஒரு மாதிரி இருக்கிறதுக்குத் தலைவலிதான் காரணம்னா, அதை முதல்லெயே சொல்லியிருப்பே! … நீ எதையோ மறைக்கிறே!… ‘

‘உங்கிட்டேர்ந்து நான் என்னத்ததைடி மறைக்கப் போறேன் ? அதுதான் தலைவலின்னு சொன்னேனே ? நம்புறதும் நம்பாததும் உன்னிஷ்டம்.. ‘

ஜானகி என்னெதிரில் நின்றுகொண்டு கண் கொட்டாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது என்னைத் தரும சங்கடத்தில் ஆழ்த்தியது. அவளது ஆராய்ச்சிப் பார்வை என்னை மொய்த்துக் கொண்டிருந்தது.

கொஞ்ச நேரம் கழித்து அவள் சொன்னாள்: ‘உன் முகத்தைப் பாத்தா சந்தோஷமாயிருக்கிற மாதிரி இருக்கு. ஆனா, கண்ணுல ஒரே சோகம் கப்பிண்டிருக்கு…. நீ என்னிக்குமே மனசு விட்டுப் பேசறது கிடையாது…சொல்லாட்டா போ!… ‘ – ஜானகி இரண்டும் இரண்டும் நாலு என்று மிகவும் சரியாக இப்படிக் கணக்குப் போட்டுப் பேசியதை கேட்டதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அப்படியே திடுக் கென்று ஆகிவிட்டது. ‘ என் முகத்தை மட்டும் பாத்து எவ்வளவு சரியாக் கண்டுபிடிச்சுட்டா! … அடி, ஜானகி! நீ உண்மையில மகா கெட்டிக்காரிடா! உனக்கு வர்ற புருஷனும் உனக்கு ஏத்த மாதிரி கெட்டிக்காரனா யிருக்கணும்… ‘ – இப்படி மனசுக்குள் நினைத்துக்கொண்ட நான் என் வியப்பை அவள் தெரிந்துகொண்டு விடக்கூடாது என்பதற்காகத் தலையை நிமிர்த்தாமலே குழவியை விரைவாக ஆட்டினேன்.

‘ சொல்லு, சொல்லுன்னா என்னத்தைச் சொல்றது ? ஏதாவது இருந்தாத்தானே ? ‘ .

‘ … உன் குரலே உன்னைக் காட்டிப் குடுக்கிறதுடி, அக்கா! ‘ என்ற ஜானகி மெதுவாகச் சிரித்தாள்.

அந்த நேரம் பார்த்துத் தற்செயலாக அப்பா அந்தப் பக்கம் வந்தார். எங்களைத் தாண்டிக்கொண்டு சமையலறைக்குச் சென்று குடத்திலிருந்து தண்ணீர் சரித்த அவரது முதுகுப் புறத்தையே வெறித்துப் பார்த்தவாறு ஜானகி நின்றாள். நான் அரைத்தாவாறே அவளையும் அப்பாவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் முதலில் தண்ணீர் குடித்து முடிக்கட்டும் என்பது போல் ஜானகி அவரையே முறைத்துக்கொண்டு நின்றிருந்தாள். அவளது பார்வையின் முறைப்பைக் கவனித்ததும் ஏதோ பிரளயம் வரப் போகிறது என்று தெரிந்துவிட்டது. ஜானகிக்குக் கோபம் வந்துவிட்டால் தலை கால் தெரியாது. வாயில் வந்ததை யெல்லாம் பேசி விடுவாள். பேசிவிட்டு வருத்தப்படுகிற வழக்கமும் அவளுக்குக் கிடையாது. அப்பாவிடம் ஏதாவது ஏடாகூடமாய்ப் பேசி வைக்கப்போகிறாளே என்று எனக்கு அச்சமாக இருந்தது. மனசு திக் திக்கென்று அடித்துக் கொண்டது.

அப்பா தம்ளரை அலமாரியில் கவிழ்த்து வைத்துவிட்டுச் சமையலறையி லிருந்து வெளிப்பட்டார். எங்களைக் கடந்து செல்ல அவர் முற்பட்ட நேரத்தில், ஜானகி, ‘அப்பா! ‘ என்று அவரைக் கூப்பிட்டு நிறுத்தினாள். கூப்பிட்ட தோரணையே ஏதோ அதட்டுகிறாப்போல் ஒல்ித்தது. அப்பாவுக்கும் அது புரிந்திருக்கும் என்று தோன்றியது.

அவர் திரும்பி நின்று, ‘ என்ன ? ‘ என்று கேட்ட முறையில் அது வெளிப்பட்டது.

‘உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கணும்!… ‘

நான் அரைப்பதை நிறுத்திவிட்டேன். அவள் பேசிய தினுசில் ஒலித்த கடுமையை அப்பா புரிந்துகொண்டார் என்பது அவர் முழித்த முழியிலிருந்து தெரிந்தது. ஆயினும், புன்னகைசெய்ய முயன்றவாறு, ‘என்ன ? ‘ என்று கேட்டார்.

‘ பரிமளாவுக்கு எப்ப கல்யாணம் பண்றதா உத்தேசம் ? தலை யெல்லாம் நரைச்சுப்போனாவிட்டா ? ‘ – கொஞ்சம் கூடத் தயக்கமே இல்லாமல் அப்பாவின் கண்களுக்குள் நேருக்கு நேராகப் பார்த்து ஜானகி இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டாள். நான் அதிர்ந்து போனேன்.

அப்பா சட்டென்று தம் தலையைக் கவிழ்த்துக்கொண்டு விட்டார். ஜானகியின் பார்வை அவ்வளவு தீட்சண்ணியமாய்- துளைக்கிறாப்போல் – இருந்தது. எனக்கே அவளைப் பார்க்க அச்சமாக இருந்தது.

கொஞ்ச நேரத்துக்கு அங்கே இறுக்கமான அமைதி நிலவியது. அப்பா பதில் சொல்லத் தோன்றாமல் – அதிர்ச்சியால் வாயடைத்துப் போயோ என்னவோ – பேசாதிருந்தார். தலை மட்டும் தாழ்ந்தது தாழ்ந்தபடியே இருந்தது. முகம் சிறுத்துப் போய்விட்டது.

அவர் பதில் சொல்லுவதற்கு அவகாசம் கொடுக்கும் வகையில் ஜானகியும் சற்று நேரம் அமைதியாகவே நின்றாள். ஆனால், சில கணங்கள் வரை அவர் வாயடைத்துக் கிடந்ததைக் கண்ணுற்றதும் அவள் திரும்பவும் வெகுண்டாள்.

‘கொழந்தைகளைப் பெத்துப் போட்டதோட பொறுப்பு முடிஞ்சுடுத்தா ?…வாய் தவறிக்கூட அவ கல்யாணத்தைப் பத்திப் பேசாமயே இருந்தா என்னப்பா அர்த்தம் ? ஆயுசு பூராவும் உங்களுக்கு அரைச்சுக் கரைக்கிறதுகும், தெருத்தெருவா அலைஞ்சு சம்பாதிச்சுக் கொட்றதுக் காகவும் தான் அவளைப் பெத்தேளா ? படக்கூடாதவன் பார்வையில யெல்லாம் பட்டுண்டு, கேக்கக்கூடாத பேச்சை யெல்லாம் கண்டவன் வாயிலேர்ந்தும் கேட்டுண்டு, நாங்க ரெண்டு பேரும் தெருத் தெருவாச் சுத்தறது உங்களுக்கே நன்னாருக்காப்பா ? உங்களுக்கே நன்னாருக்கான்னு கேக்கறேன்!… ‘

‘ ……… ‘

‘பேசாம இருந்தா என்னப்பா அர்த்தம் ? குப்பு சாஸ்திரிகள் பொண்ணு அன்னம் பண்ணின மாதிரி பண்ணினாத்தாம்ப்பா உங்களுக் கெல்லாம் புத்தி வரும்!…அடக்க வொடுக்கமாயிருக்குற பொண்ணுகளுக்கு இது காலமில்லே! ‘

அப்பாவின் கண்களில் குபுக் கென்று கண்ணீர் பொங்கிற்று. ‘கையில பணத்தை வெச்சுண்டுன்னாம்மா வரன் தேடணும் ? வெறுங்கையை வெச்சுண்டு மொழம் போட முடியுமா ? ‘ என்று தலையை உயர்த்தாமலும், எங்களில் யாரையும் பார்க்காமலும் அவர் பதில் சொன்னபோது, ஜானகி சீறினாள்:

‘நாப்பது வயசுக்கு மேல ரெண்டாங் கல்யாணம் பண்ணிண்டு அஞ்சு கொழந்தைகளையும் வேற பெத்து வைக்காம இருந்திருந்தேள்னா இன்னிக்கு வெறுங்கையா இருப்பேளாப்பா நீங்க ? ‘

‘ஏய்! ஜானகி! என்னடா இது ? இதென்ன பேச்சு ? ‘ என்று நான் பதறிப் போய்க் கத்தியதைக் கொஞ்சம் கூடச் சட்டை பண்ணாமல், ‘நீ சும்மா இருடி. உனக்கு ஒண்ணும் தெரியாது… ‘ என்று அவள் என்னை அடக்கினாள்.

ஜானகியின் சொற்களைக் கேட்டவுடன் அப்பாவின் முகம் இரத்தமாய்ச் சிவந்து போய்விட்டது. தலை நிமிர்ந்து ஜானகியை வெட்டி விடுகிறாப்போல் ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சொன்னார்: ‘என்ன சொன்னே ?.. நாப்பது வயசுக்கு அப்புறம் நான் கல்யாணம் பண்ணிண்டதைப் பத்திப் பேசறதுக்கு நீ யாரு ? என் கல்யாணம் என்னோட சொந்த விஷயம்! அதை நான் நாப்பதுக்கும் பண்ணிப்பேன், அம்பதுக்கும் பண்ணிப்பேன். நீ யாரு கேக்கறது ? …நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிண்டுபோயிட்டா, அப்புறம் எனக்குன்னு யாரு இருப்பா ? வயசு காலத்துல நீங்க செய்வேளா எனக்கு ? ‘

‘ அப்போ, எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்தைப் பண்ணி வெச்சுட்டு நீங்க பண்ணிண்டிருந்திருக்கணும்! வசிஷ்ட மகரிஷி என்ன சொல்லியிருக்கார்ங்குறது தெரியாதா உங்களுக்கு ? வயசுக்கு வந்த பொண்ணை மூணு வருஷத்துக்குள்ள கல்யாணம் பண்ணிக் குடுக்கல்லேன்னா, தனக்குப் பிடிச்ச எவனோடவும் போறதுக்கு அந்தப் பொண்ணுக்கு உரிமை உண்டுன்னும், அது மாதிரி செய்யற ஒரு பொண்ணோ, அவளை அழைச்சுண்டு போற ஆணோ குற்றவாளிகள் இல்லைன்னு அவரும் மனுவும் சொல்லியிருக்கிறதை நான் ஞாபகப் படுத்த வேண்டாம்னு பாக்கறேன். இதெல்லாம் சம்ஸ்கிருதத்தைக் கரைச்சுக் குடிச்சிருக்குற உங்களுக்குத் தெரியாதா என்ன ? சும்மா சம்ஸ்கிருதப் புஸ்தகங்களை வரிசையா அலமாரியில அடுக்கி வெச்சுட்டாப்ல ஆச்சா ? ‘ – நாக்கில் பல்லைப் போட்டு அவள் கூசாமல் கேட்ட கேள்விகளைச் செவியுற்றதும் பெரிய பெரிய புத்தகங்களைப் படித்துப் புரிந்துகொள்ளுகிற அளவுக்கு இதுகளுக்கு ஏன் தான் சம்ஸ்கிருதம் சொல்லிக் கொடுத்தோமோ என்று அப்பாவுக்கு ரொம்ப வருத்தாமா யிருந்திருக்கும் தான். வயசு வந்த ஒரு பெண்ணுக்கு இருக்கவேண்டிய குறைந்த பட்சக் கூச்சம் கூட இல்லாமல் ஜானகியா இப்படி யெல்லாம் பேசுகிறாள் என்று எனக்குத் திகைப்பாய் இருந்தது. நம்பவே முடியவில்லை. அன்று நான் பார்த்தது ஒரு புது ஜானகி. அதுகாறும் நான் அறியாத ஜானகி…

அப்பா, ‘சீ! நீயும் ஒரு பொண்ணா ? வெக்கம்குறது துளிக்கூட இல்லையே ? ‘ என்று கேட்கவும், ஜானகி வாய்விட்டுப் பெரிதாய்ச் சிரித்தாள். இடுப்பைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள்.

‘வெக்கப்பட வேண்டியது நானா, இல்லே நீங்களா ? நீங்க எந்த அளவுக்கு வெக்கப் படணும்கிறதுக்குத்தான் சாட்சி சொல்லிண்டு அஞ்சு அவதாரங்கள் வந்து பொறந்திருக்கே! இன்னும் ஆறாவதா வேற ஒண்ணு வரப்போறது! .. வெக்கம்கிறதைப் பத்திப் பேசறதுக்கு உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு ? ‘ – ஜானகி இவ்வளவு பச்சையாய்ப் பேசுவாள் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

‘ஜானகி! பேசாம இரேண்டி! ‘ என்று நான் கெஞ்சியதை அவள் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தவில்லை.

‘இந்த ஆவணிக்குள்ள அக்கா கல்யாணம் நடந்தாகணும்! ஆமா! குதிர் குதிராப் பொண்ணுகளை வளத்து வெசுண்டு அவா சம்பாத்தியத்துல வயிறு வளத்துண்டிருக்கேள்னும் அதனாலதான் எங்க கல்யாணத்தைப்பத்தின பிரக்ஞையே உங்களுக்கு இல்லைன்னும் ஊர்ல நாலு பேர் பேசற பேச்சு காதில விழறச்சே உங்களுக்கு அவமானமா இல்லே ? …நானா யிருந்தா நாக்கைப் பிடுங்கிண்டு பிராணனை விட்டுடுவேன்! ‘ – ஜானகியின் ஒவ்வொரு சொல்லும் பச்சை மரத்தில் ஆணி அடித்தாற்போல் பளிச் பளிச்சென்று வந்து விழுந்தது.

அப்பா பதிலே சொல்லாமல் போய்விட்டார். இத்தனை அமர்க்களத்தையும் பார்த்துக்கொண்டு சித்தி ஓர் ஓரமாய்க் கூனிக் குறுகிப் போய் நின்றுகொண்டிருந்தாள்…

அப்பாவைக் காட்டிலும் சித்தியை ஜானகியின் சொற்கள் மிகுதியாய்ப் புண்படுத்தியிருக்கும் என்று தோன்றிற்று. அவளது எரிச்சல் எவ்வளவு நியாயமானதாக இருப்பினும் கூட, அப்பாவை அவள் அவ்வளவு அசிங்கமாய்ப் பேசித் தூக்கி எறிந்திருக்கவேஏண்டாமே என்று பட்டது. அப்பா செய்த தப்புக்குச் சித்தி என்ன பண்ண முடியும் என்று நினைத்துப் பார்த்த போது என் மனம் மிகவும் வேதனைப்பட்டது. ஜானகி எனக்காகத்தானே இவ்வளவும் பேசினாள் என்னும் நினைப்பை மீறி அவள் மேல் கொஞ்சம் கோபம் கூட எனக்கு வந்தது.

அப்பாவைத் தொடர்ந்து சித்தியும் அங்கிருந்து நகர்ந்தாள். அவர்கள் இருவரும் எங்கள் பார்வையிலிருந்து மறைந்ததும், ‘என்னடி, ஜானகி இது ? இப்படிப் பேசிட்டே ? என்ன இருந்தாலும் பெத்த தகப்பனார் இல்லையா ? இவ்வளவு ரசாபாசமாகவா பேசறது ? ‘ என்று நான் அவளைக் கண்டித்த போது அவள் என்னை முறைத்துப் பார்த்தாள்.

‘பாவ-புண்ணியம், நகரிகம்-அநாகரிகம் – நீ சொல்ற ரசாபாசம் – இதுகளை யெல்லாம் பார்க்க வேண்டிய வீடுகள் வேறடி. இந்த வீடு இல்லே! ‘

‘நம்ம பக்கம் எவ்வளவு நியாயம் இருந்தாலும் பொண்ணாப் பொறந்துட்டு இவ்வளவு வாய் இருக்கப் படாதுடா, ஜானகி! … இது நல்லதில்லே. பெத்த தகப்பனார்ங்குற ஞாபகம் கூட உன்னை விட்டுப் போயிடுத்தா ? ‘

‘ஆமாம். போயிடுத்துதாண்டி! என்னிக்குப் போச்சு தெரியுமோ ? அப்பா ரெண்டாங்கல்யாணம் பண்ணிண்டு வந்து என்னிக்கு நின்னாளோ, அன்னிக்கே போயிடுத்து!.. ‘

‘ஜானகி! அப்படியெல்லாம் கொடுமையாப் பேசாதே. இன்னிக்கு நம்ம அம்மா-அப்பாவுக்கு நாம என்ன மரியாதை காட்றோமோ, அதே மாதிரியான மரியாதையைத்தான் நாளைக்கு நம்ம குழந்தைகள் நமக்குக் காட்டும்… ‘ – இப்படி நான் சொன்னதும் ஜானகி பகபகவென்று சத்தமாய்ச் சிரித்தாள். அடக்கமாட்டாமல் சிரித்தாள்.

‘கல்யாணமே ஆகக்காணோம். அதுக்குள்ள குழந்தை-குட்டிக்குப் போயிட்டா இவ! வேடிக்கைதான்! ‘

‘சிரிக்காதேடி. அவா காதுல விழப்போறது! ‘

‘விழட்டும். நன்னா விழட்டும். பெரிசா எனக்கு உபதேசம் பண்ண வந்துட்டா – நூத்துக்கிழவியாட்டமா!.. அக்கா! நீ ஒரு சரியான மண்டுடி! ‘

‘இருந்தா இருந்துட்டுப் போறது. ‘

‘மண்டுதான்!…உன் இடத்துல நான் இருந்தா – இந்த வீடு இப்படி அவலமா இருக்குறதுக்கு – என்ன செஞ்சிருப்பேன், தெரியுமா ? ‘

‘என்ன செஞ்சிருப்பே ? ‘ – நான் கேட்ட இந்தக் கேள்விக்குக் கொஞ்சம் கூடத் தயக்கம் காட்டாமல் ஜானகி முகத்தில் அறைந்தாற்போல் பளிச்சென்று பதில் சொன்னாள்:

‘ஓடிப் போயிருப்பேண்டி, ஓடிப்போயிருப்பேன்! இருபத்தாறு வயசு வரைக்கும் தன் பொண்ணோட கல்யாணத்தைப் பத்தி யோசிக்காத தகப்பனுக்கு மரியாதை குடுக்கணுமாம், மரியாதை! ‘ – இப்படி ஒரு பேச்சைப் பேசிவிட்டு, என்னை ஏறெடுத்தும் பார்க்காமல், ஜானகி தன் வேலையைக் கவனிக்கப் போய்விட்டாள்.

எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி இவ்வளவு அவ்வளவு இல்லை.

‘…ஓடிப் போயிருப்பேண்டி, ஓடிப்போயிருப்பேன்… ‘ – ‘ அடேயப்பா!…வாய் கூசாம எவ்வளவு பெரிய வார்த்தையை வீசிட்டுப் போறா இவதான்! இவ ஜானகிதானா ? இல்லே, அவளுக்குள்ளேர்ந்து ஏதாவது பிசாசு கிசாசு பேசித்தா ? ‘ – எனக்கு ஒரே கூச்சமாக இருந்தது. ஜானகி இது மாதிரியெல்லாம் பேசக் கூடியவள் என்னும் உண்மை அன்றைக்குத்தான் எனக்குத் தெரியும். அவள் கொஞ்சம் கோபக்காரிதான். கண்மண் தெரியாமல் தூக்கி எறிந்து பேசக்கூடியவள்தான்..ஆனால் இந்த அளவுக்குப் போவாள் என்பது அன்று வரையில் எனக்குத் தெரியாது…அதுதான் ஏற்கெனவே சொன்னேனே! இவள் ஒரு புது ஜானகி!

குப்பு சாஸ்திரிகளின் பெண் அன்னத்தைப் பற்றி அவள் பேச்சுவாக்கில் சொன்னதை நினைத்துப் பார்த்தேன். குப்பு சாஸ்திரிகளுக்கும் அப்பா மாதிரி ‘பண்ணிவைக்கிற ‘ புரோகிதம் தான் உத்தியோகம். அவருக்கு மனைவி இல்லை. அவருடைய ஒரே பெண் அன்னம் தன் பத்தாம் வயதில் அடி எடுத்து வைத்த போது அவருடைய மனைவி இறந்து போனாள். ஆனால் குப்பு சாஸ்திரிகள் மறுமணம் செய்துகொள்ளவில்லை. அன்னத்தைக் கண்ணும் கருத்துமாகத் தான் வளர்த்தார். எனினும் அவரும் என்ன காரணத்தாலோ பெண்ணுக்குக் காலாகாலத்தில் மணம் செய்விக்கவில்லை. ஒருகால் வறுமை அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். வரதட்சிணையும் காரணமாக இருந்திருக்கலாம். எது காரணம் என்பது இப்போது முக்கியமில்லை. தன் இருபத்திரண்டாம் வயதில் அன்னம் எவனோ வேறு சாதிக்காரனுடன் ஓடிப்போனாள் என்பதுதான் முக்கியம். குப்பு சாஸ்திரிகள் அவமானம் தாங்காமல் ஊரைவிட்டே போய்விட்டார்.

அதற்குப் பிறகு அன்னம் என்னவானாள் என்பது யாருக்கும் தெரியாது. அவனுடன் அவள் ஒழுங்காய்க் குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கிறாளோ, இல்லாவிட்டால் அவன் அவளை விட்டுவிட்டு ஓடிவிட்டானோ ?

எனக்கு உடனே அந்தப் பெட்டிக் கடைக்காரனின் நினைவுதான் வந்தது.

போகலாமா ? வேண்டாமா ?

அவன் என்னை என்ன கேட்கப்போகிறான் என்பது புரிந்துவிட்டது, ஆனால் அது நிறைவேற முடியாத பகற்கனவு. இது தெரிந்தும், அவனைச் சந்திப்பதில் ஏதேனும் ஆதாயம் உண்டா ? அர்த்தம்தான் உண்டா ?

ஏன் இல்லை ? ‘உங்களைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் பட்றேன். அதுக்கு உங்க சம்மதம் உண்டா ? ‘ என்று அவன் சொல்லப்போவதைக் கேட்க ஆசையாகத்தான் இருக்கிறது. அப்படி ஒருவன் சொல்லுவதைச் சாவதற்குள் ஒரு தடவையாவது கேட்டுவிட வேண்டும் என்று இந்தப் பாழும் மனசு அடித்துக்கொண்டிருப்பதை நான் இல்லை என்று சொல்ல முடியுமா ? அது நடக்கக்கூடியதா இல்லையா என்பது வேறு விஷயம். …

அவன் என்னிடம் என்ன சொல்லுவான் ? ‘ஓடிப் போய்விடலாம் ‘ என்று சொல்லுவானோ ? இல்லாவிட்டால், ‘உங்க அப்பாவை விரோதிச்சுண்டு தைரியமா கல்யாணமே பண்ணிண்டு வாழலாம் ‘ என்று சொல்லுவானோ ?

ஒருவேளை இந்த இரண்டுமே இல்லாமல், வேறு ஏதாவது அசிங்கமாக…இருக்காது…இருக்காது…அவனைப் பார்த்தால் அப்ப்டித் தெரியவில்லை. கடைசியில் அவனைச் சந்தித்து என்னதான் சொல்லுகிறான் என்று பார்ப்பது என்னும் முடிவுக்கு வந்துவிட்டேன். …

இந்த முடிவுடன் நான் அன்று மாலை பெட்டிக்கடையை அடைந்தபோது அக்கம் பக்கம் யாரும் இல்லை.

அவன், புன்சிரிப்புடன், ‘ எங்கே கோவிச்சுக்கிட்டு வராம இருந்துடுவீங்களோன்னு பாத்தேன்… கொஞ்சம் பயமாக் கூட இருந்திச்சு… ‘ என்றவாறே தன் சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து என்னிடம் நீட்டினான். இயந்திர கதியில் அதை நான் பெற்றுக்

கொண்டேன்.

‘நாளைக்குப் பதில் சொன்னாப் போதும். ‘

‘சரி… ‘ – முடுக்கிவிடப்பட்ட இயந்திரம் மாதிரியே பதில் சொல்லிவிட்டு, அவனுடன் என் வியாபாரத்தை முடித்துக் கொண்டதன் பிறகு விடைபெற்றுக் கொண்டேன். அவனது கடிதத்தைப் பத்திரமாக கூடைக்கு அடியில் செருகி வைத்துக்கொண்டேன். பிறகு கால்களை எட்டிப்போட்டு நடந்தேன். ஏதோ பெரிய சுமையைத் தூக்கிக்கொண்டு அலைகிறாப்போல் பாரமாக இருந்தது. மனசு பக் பக்கென்று அடித்துக் கொண்டிருந்தது.

நான் வீடு திரும்பியபோது மாலை மணி ஆறரை ஆகிவிட்டிருந்தது. வெயிற்கால மாதலால் இருட்டத் தொடங்கவில்லை. ஜானகி இன்னும் திரும்பி யிருக்கவில்லை. ‘ நல்ல வேளை ‘ என்றெண்ணியவாறு நான் நிம்மதியுடன் குளியலறைக்குள் நுழைந்து கதவைச்சாத்திக்கொண்டேன்.

‘அந்தி சாயற நேரத்துல இதென்ன புதுசா ? சளி பிடிக்கப்போறது,. ‘ என்று சித்தி கதவுக்கு வெளியே இருந்தபடி முணுமுணுத்ததை நான் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

‘ஒரே புழுக்கமாயிருக்கு, சித்தி! ‘ என்று நான் சொன்ன பதில் என் மனப் புழுக்கத்துக்காகவும் சேர்த்து என்பதைச் சித்தி கண்டாளா என்ன ? . .

… நான் வெடவெடவென்று நடுங்கிக்கொண்டிருந்த கைகளால் அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.

அன்புள்ள பரிமளா அவர்களுக்கு,

நான் பெண்கள் வம்புக்குப் போகிற காலிப்பயல் இல்லை என்பதை முதலில் உங்களுக்குத் தெரிவித்துக் கொண்டுவிடுகிறேன். பல நாள்களாக நீங்கள் என்னைக் கவனித்து வருவதால் நான் காலி இல்லை என்பதை நம்புவீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் அழகு, அடக்கம் இரண்டும் என்னைக் கவர்ந்துள்ளன. உங்களை மணந்துகொள்ள நான் விரும்புகிறேன்.

நான் முதலியார் சாதியைச் சேர்ந்தவன். எட்டாம் வகுப்பு வரையில் படித்திருக்கிறேன். வசதி இல்லாததால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை. உங்களுக்குச் சம்மதம் இருந்தாலும் என் சாதி நம் நோக்கத்துக்குக் குறுக்கே நிற்கும் என்பதை நான் நன்றாக உணர்கிறேன். உங்கள் வீட்டாரைப் பகைத்துக்கொண்டு என்னை மணந்துகொள்ளும் துணிச்சல் உங்களுக்கு இருக்குமா என்பது தெரியவில்லை. அந்தத் துணிச்சல் இருக்குமானால் பிரச்சினை எழவே வாய்ப்பில்லை.

இல்லாவிட்டால், இந்த ஊரில் நாம் வாழ்க்கை நடத்துவது சாத்தியமில்லை. வேற்றூர் எங்காகிலும் சென்று கண்ணியமான மண வாழ்க்கையைத் தொடங்குவோம். சம்பிரதாய முறையில் மட்டுமல்லாமல், பதிவுத் திருமணமும் செய்துகொள்ளலாம். தற்சமயம் என்கையில் இரண்டாயிரம் ரூபாய்ச் சேமிப்பு இருக்கிறது. சிலரைப்போல் நான் உங்களைக் கைவிட்டுவிடுவேனோ எனும் சந்தேகம் இருந்தால், அந்தத் தொகையை உங்களிடம் கொடுத்துவிடுகிறேன். அதை உங்கள் பெயரில் தபால் சேமிப்புக் கணக்கில் போட்டுவைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு என் மேல் நம்பிக்கை இல்லாவிட்டால் மனம் விட்டு அதை சொல்லிவிடுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன். அச்சத்திலும் அவநம்பிக்கையிலும் தொடங்கும் காதல் – அது திருமணத்தில் முடிந்தாலும் கூட – ஆணுக்கும் பெண்ணுக்கும் மன நிறைவை அளிப்பதில்லை.

பாதியில் உங்களைக் கைவிட்டு விட்டு ஓடிவிடுவேனோ என்று என் மேல் நீங்கள் சந்தேகப் படுவீர்களானால், அதையே உங்கள் பெண்மையின் சிறப்புக்கு அடையாளமாய்க் கருதுவேனே ஒழிய, வருத்தப்பட மாட்டேன். உங்கள் வீட்டில் உங்கள் திருமணத்துக்கு எந்த விதமான முயற்சியும் எடுக்கவில்லை என்பதை ஒரு நண்பன் மூலமாய்க் கேள்விப்பட்டு வருந்தினேன். உங்கள் குடும்பத்தில் நிலவுகின்ற வறுமை ஒருகால் அதற்குக் காரணமாக இருக்கலாம். ஒரு நல்ல பெண்ணுக்கு வாழ்வளிக்க வேண்டும் எனும் நோக்கமும் இதை நான் எழுதுவதற்குக் காரணமாகும்.

இத்தனை நாளும் நாம் பேசிக்கொண்டதே இல்லை. இந்நிலையில், இப்படி ஒரு கடிதத்தைக் கொடுக்க இவனுக்கு எப்படித் துணிச்சல் வந்தது என்றெண்ணி என் மேல் கோபப்பட மாட்டார்கள் என்று நம்புகிறேன். உங்கள் பதில் எனக்கு ஆதரவாக இருக்குமானால், என்னை மிகுந்த அதிருஷ்டசாலியாக நான் கருதிக்கொள்ளுவேன். என்னை நீங்கள் மணக்க விரும்பவில்லை யானால் நான் மனமுடைந்து போவேன்.

இப்படிக்கு,

உங்கள் அன்பை நாடும்,

நடேசன் ‘

– கைகளும் கால்களும் கிடுகிடுவென்று உதற, நான் அதை ஐந்தாறு தடவைகள் படித்தேன். எனக்கும் ஒருவன் காதல் கடிதம் எழுதிவிட்டானே எனும் விம்மிதமும், இது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு காதல் எனும் நினைப்பால் ஏற்பட்ட வேதனையும் மாறி மாறி என்னை அலைக் கழித்ததில், சிரிப்பும் அழுகையுமாக அதை மறுபடியும் மறுபடியும் வாசித்துக்கொண்டே இருந்தேன். அதில் தொனித்த சத்தியம் என் நெஞ்சைத் தொட்டது. மிகவும் கண்ணியமான கடிதம்.

‘அந்த ஆச்சி பிள்ளையை இந்த நடேசனின் காலில் கட்டி அடிக்க வேண்டும். படிப்புக்கும் பண்புக்கும் சம்பந்தமே இல்லை!….ஆனால் நான் இவனை மணந்து கொள்ளுவதற்கில்லை…இது நடக்கவே முடியாத வெறுங்கனவு.

‘இந்த நடேசன் முதலியார் ஜாதியில் போய்ப் பொறந்து வெச்சிருக்கானே! பிராமணஜாதியில பொறந்து தொலைச்சிருக்கப்படாதோ ? ‘ என்று என் மனசு முட்டாள்தனமாக ஏங்கத் தொடங்கியது. என்ன பைத்தியக்காரத்தனம்!

‘ அக்கா! அக்கா! ‘ என்று கதவுக்கு வெளியே ஜானகியின் குரல் கேட்டது. அவள் அப்போதுதான் திரும்பியிருந்தாள்.

மூடிய கதவுக்கு அப்பால்தான் நான் இருந்தேன் என்பதை அறவே மறந்தவளாய் நான் அவசர அவசரமாய் நடேசனின் கடிதத்தை மடித்து ஒளித்துவைத்துக்கொண்டேன். அதைப் படித்து விட்டு நான் சிரித்ததைக் காட்டிலும் அழுததே அதிகமாக இருந்ததால், ஜானகிக்கு உடனே பதில் சொல்ல முடியவில்லை.

‘அக்கா! சாயங்காலத்துல எதுக்குடா குளிக்கிறே ? ‘

‘ ஒரே புழுக்கமாயிருந்தது, ஜானகி! ‘

‘ஙொண ஙொணன்னு பேசறே ? சளி பிடிச்சிருக்கிற மாதிரின்னா இருக்கு ? இப்ப எதுக்குடா குளியல் ? வேளை கெட்ட வேளையிலே ? நன்னாருக்கு, போ! ‘

நான் பதில் சொல்லவில்லை. குளித்ததாய்ப் பேர் பண்ணிவிட்டு வெளியே வந்ததும், நடேசனுக்குப் பதில் எழுதியாக வேண்டுமே எனும் கவலை என்னைப் பிடித்துக் கொண்டது. கண்கொத்திப் பாம்புகள் மாதிரி எல்லாரும் பார்த்துக்கொண்டிருக்க – தனிமை யான இடமோ வசதியோ இல்லாத வீட்டில் – எப்படி அவனுக்குக் கடிதம் எழுதுவது ? மனசிலே உள்ளதையெல்லாம் அவனுக்கு முன்னால் நின்றுகொண்டு சொல்லுவது என்பது நடக்காத காரியம். சொல்லிக்கொண்டிருக்கும் போதே அழுதாலும் அழுதுவிடுவேன். தவிர, நாலு பேர் வந்து போகும் இடத்தில் எவ்வளவு நேரம் நின்று பேசிக்கொண்டிருக்க முடியும் ? ஒரு கடிதத்தைக் கோவையாக எழுதிக் கொண்டுபோய்க் கொடுத்துவிடுவதுதான் சரி. நிற்க வேண்டாம், நிலைக்க வேண்டாம். கொடுத்துவிட்டு ஓடிவந்து விடலாமே ?

கடிதத்தை எழுதியாக வேண்டுமே எனும் கவலை என்னை அரிக்கலாயிற்று. அதையும் குளியலறையில்தான் எழுதியாக வேண்டும். அடுப்பு விசிறுவதற்கென்று வைத்திருக்கிற அட்டையை மடியில் வைத்துக்கொண்டு கடிதத்தை எழுத வேண்டியதுதான். இந்த ஜானகி வேறு ஏற்கெனவே நான் எதையோ மூடி மறைக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள். எனவே ஜானகியின் கழுகுக் கண்களில் படாமல் தப்புவதற்குக் குளியலறைதான் தோதான இடம்…

குளித்ததாய்ப் பேர் பண்ணிவிட்டு வந்த என்னை ஜானகி கூர்ந்து பார்த்தாள். ‘கண்ணெல்லாம் ஏன் செவந்திருக்கு ? ‘ என்று நான் எதிர்பார்த்த கேள்வியையும் கேட்டாள்.

‘ஏதோ தூசி விழுந்துடுத்து, ஜானகி! ‘ என்று நான் சொன்ன பதிலை அவள் நம்பியிருக்க மாட்டாள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அதற்கு மேற்பட்டு அவள் என்னை ஏதும் கேட்கவில்லை.

அன்றிரவு முழுவதும் எனக்குச் சிவராத்திரிதான். கண்ணைக்கொட்ட வேண்டுமே! ‘ஒடிப் போயிருப்பேண்டி, ஒடிப்போயிருப்பேன் ‘ – அன்று காலையில் ஜானகி பச்சையாய்ப் பேசிய பேச்சும் அவள் வாரி இறைத்த வார்த்தைகளும் என் மண்டையைக் குடையத் தொடங்கின.

சாதி விட்டு சாதியில் கலப்புத் திருமணம் செய்துகொண்டு வாழ்வதெல்லாம் இந்தப் பட்டிக்காட்டில் நடக்காது. …ஜானகி சொன்னது போல் ஓடிப் போனால்தான் என்ன ?

திடாரென்று எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘ நானா இப்படி நினைக்கிறேன் ? நானா ?….ஓடிப்போறது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. நிமிஷமா ஓடிப்போயிடலாம். ஆனா, இந்தக் குடும்பத்தோட கவுரவம் என்னாறது ?…நாளைக்கு ஜானகியை யாரு கல்யாணம் பண்ணி ப்பா ? அதைப்பத்தி யோசிச்சுப் பாக்க வேண்டாமா ? உனக்காகப் பரிஞ்சு அப்பாகிட்ட கன்னா பின்னான்னு பேசின ஜானகியோட வாழ்க்கையை உன்னோட காரியம் எந்த அளவுக்குப் பாதிக்கும்கிறதைப் பத்தித் துளிக்கூட யோசிக்காம, ‘ ‘ஓடிப்போனா என்ன ‘ ன்னு நீ நினைக் கிறது சுயநலமில்லையா ? அம்மா செத்துப்போயிட்ட நெலமையில அம்மா ஸ்தானத்துல உன் தங்கையைப் பொறுப்பா கவனிச்சுக்க வேண்டிய நீயே இந்த மாதிரிப் பண்ணலாமா ? உன் கல்யா ணம்கிறது முழுக்க முழுக்க உன் சொந்த விஷயம்தான். ஆனா அதில நீ எடுத்துக்குற சுதந்திரம் நியாயமாவே இருந்தாலும் அது பிறத்தியாருக்கு அநியாயம் பண்ணும்கிறப்ப, உன் முடிவு சரிதா னான்னு நீ யோசிக்கணும். ஒரு ஆம்பளை என்ன தப்புப் பண்ணினாலும் அவனோட தங்கைக்குக் கல்யாணமாயிடும்! ஆனா, ஒரு பொண்ணோட நடத்தை அந்தக் குடும்பத்தையே பாதிக்கும். இதையும் நீ நினைச்சுப் பாக்கணும்… ‘ – இப்படி ஒரு குரலும் என்னுள்ளிருந்து சீறிப்பாய்ந்த போது திடுக்குற்றுப் போனேன். என் சப்த நாடிகளும் ஒடுங்கிப் போய் விட்டாற்போல நான் வலுவிழந்து போனேன். வேர்த்துக் கொட்டியது நா வறண்டு போயிற்று..

ஒரு பெண் தன் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக்கொள்ள – வேறு வழியற்ற நிலையில் – செய்கிற ‘நியாயமான தப்புகள் ‘ கூட அவளுடைய தங்கைகளின் வாழ்க்கையைப்

பாதிக்கின்றன. முடிவில், திடாரென்று என்னுள் தோன்றிய துணிச்சல் ஜானகிக்கு ஊறு விளையுமே என்னும் அச்சத்தால் உருவிழந்து போனது! .எனவே, மிகச் சில நிமிடங்களிலேயே, கோழைத்தனமும் மனச்சாட்சியும் நிறைந்த பழைய பரிமளாவாக நான் ஆகிப்போனேன். எல்லையற்ற ஏமாற்றம் என்னைச் சூழ்ந்துகொண்ட போதிலும், அந்த ஏமாற்றத்தினூடே ஓர் அமைதியும் என்னை ஆட்கொண்டதை உணர்ந்து பெருமூச்செறிந்தேன். கண நேர வலுவீனத்தில் ஜானகிக்கு எப்படிப்பட்ட தீங்கிழைக்க விருந்தேன் என்று எண்ணிக் கலங்கினேன்.

இரவின் பெரும் பகுதியை நடேசனுக்கு எப்படி, என்ன எழுத வேண்டும் என்று யோசிப்பதிலேயே தூங்காமல் கழித்துவிட்டு விடிகாலைப் பொழுதில் என்னையும் மறந்து கண்ணயர்ந்தேன்.

மறு நாள் காலையில், குளியலறையில் நடேசனுக்குக் கடிதம் எழுதினேன். இரவு பூராவும் உருப்போட்டு வைத்திருந்த கடிதமாதலால் தடங்கல் இல்லாமல் எழுத வந்தது.

‘ அன்புள்ள நடேசன் அவர்களுக்கு.

உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுவதென்று தெரியவில்லை.ஆனால் நான் உங்களை மணந்து கொள்ளுவதற்கில்லை. எனக்கு ஜாதி உணர்ச்சி கிடையாது. என்னை மணக்கிறவர் நல்லவராக இருக்கவேண்டும் எனும் ஒரே எண்ணந்தான் எனக்கு. உங்களிடம் என் மனம் முழுமை

யாக ஈடுபடுகிற போதிலும், நான் செய்கிற காரியம் என் தங்கையின் திருமணத்தைப் பாதிக்கும் எனும் நிலையில் உங்களை நான் மணந்து கொள்ளுவதற்கில்லை. என் தங்கைக்கு முதலில் திருமணம் செய்விப்பதற்கோ, அது வரையில் நீங்கள் எனக்காகக் காத்துக் கொண்டிருப்பதற்கோ வழி இல்லை. என் திருமணத்திற்கே எங்கள் வீட்டில் முயற்சி மேற்கொள்ளப்படாத நிலையில்,

என்னை விட ஐந்து வயது சிறியவளான என் தங்கையின் நிலை என்ன என்பதைப் பற்றி நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லத் தேவை இல்லை. எனவே நான் உங்களை ஏற்க முடியாத நிலையில் இருக்கிறேன். மன்னிக்கவும்.

உங்கள் பயன் கருதாத அன்புக்கு மற்றுமொரு முறை எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

இப்படிக்கு,

பரிமளா. ‘

என் கடிதத்தைப் பட்சணக் கூடைக்கு அடியில் பத்திரமாக வைத்துக்கொண்டு அன்று மாலை வழக்கம் போல் புறப்பட்டேன்…. கடைசியாக நடேசனின் கடையை நெருங்க நெருங்க, என் மனம் தடக் தடக்கென்று அடித்துக்கொள்ளலாயிற்று. கால்கள் பின்னிக்கொண்டு போயின. கண் கொட்டாமல், ஆவலுடனும் நம்பிக்கையோடும் என்னையே பார்த்துக்கொண்டிருந்த அவன் விழிகளைச் சந்தித்ததும் என் மனசு சுக்கல் சுக்கலாய்ச் சிதறிப் போவது போல் இருந்தது. ‘அழுகை வராம இருக்கணுமே, பகவானே! ‘ என்று கடவுளை வேண்டிக்கொண்டு நான் அவன் கடைக்கு அருகில் போய் நின்றேன்.

‘வாங்க! ‘ என்று வாய் நிறையச் சொல்லிவிட்டு நடேசன் என்னைப்பார்த்துச் சிரித்தான். அவனது பார்வையைத் தவிர்த்துவிட்டு, இரண்டு பஜ்ஜி-போண்டோக்களைப் பொட்டலம் கட்டி அவனுக்கு முன் வைத்தேன். அவன் புன்னகையுடன் காசு எடுக்கச் சட்டைப்பைக்குள் கை விட்டபோது நான் சைகையாலேயே காசு வேண்டாமென்று மறுத்தேன்.

‘ஓகோ! எங்கிட்ட காசு வாங்க உங்களுக்குக் கஷ்டமாயிருக்கா ?… ஆனா, நெதமும் ஓசியல குடுத்துக் கட்டுப்படி யாகுமா ? ‘ என்று மலர்ச்சியுடன் வினவிவிட்டு அவன் சிரித்தான்.

என்னால் சிரிக்க முடியவில்லை. களையான அவன் முகத்தை ஆசை தீர ஒரு தரம் ஆழமாய்ப் பார்த்துவிட்டு நான் என் கடிதத்தை எடுத்து அவனுக்கு முன்பாக வைத்த பிறகு சட்டென்று நகர்ந்து விரைவாக நடக்கலானேன்.

ஓட்டமும் நடையுமாகச் சென்றேன். அப்படி நான் நடந்த போது நான் நானாகவே இல்லை. கிறுகிறுவென்று ஒரே தள்ளாட்டமாக – மயக்கம் வரும் போல் – இருந்தது. கால்கள் தொய்ந்து இற்றுப் போய் என் மனத்தின் விரைவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் துவண்டன. கண்ணீரை அடக்கிக்கொள்ளுவது கடினமாக இருதது. எப்படியோ, ஒருவழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

மனம் உடைவது என்றால் என்னவென்பது முதன் முறையாகத் தெரிந்தது. என் தலையில் நானே மண்ணை வாரிப் போட்டுக்கொண்டதாய்த் தோன்றினாலும், ஜானகியின் வாழ்க்கையை முன்னிட்டுத்தான் என் வாழ்க்கையை நான் கெடுத்துக்கொண்டேன் எனும் நினைப்பில் ஆறுதல் காண முயன்றேன்.

… அதற்குப் பிறகு நான் நடேசனின் கடைப் பக்கம் போகவே இல்லை. அவன் கடை இருந்த தெருவுக்குக் கூடப் போகவில்லை. தப்பித் தவறி அவன் பார்வையில் பட்டுவிடக் கூடாதே என்று நான் கவலைப்படாத நாள் இல்லை. எப்போதுமே தலையைக் குனிந்துகொண்டு

நடக்கும் வழக்கமுள்ள நான் இன்னும் அதிகமான கவனத்துடன் கால் கட்டை விரைலைப் பார்த்துக்கொண்டே நடந்தேன்.

எப்படியோ, ஒரு வருடம் வரையிலும் அவன் பார்வையில் படாமல் தாக்குப் பிடித்து விட்டேன்…. ‘ இந்த ஆவணிக்குள்ளே பரிமளா கல்யாணம் நடந்தாகணும் ‘ என்று ஜானகி அப்பா விடல் சத்தம் போட்டதற்குப் பிறகு வந்த ஆவணி போய் இன்னோர் ஆவணி கூட வரப்போகிறது.

திடாரென்று ஒரு நாள் என் மன உறுதி சிதைந்து போயிற்று. நடேசனைப் பார்க்கவேண்டும் எனும் ஆவல் கட்டுக்கு அடங்காமல் என்னுள் பொங்கிற்று. தொலைவில்

நின்றாவது அவனது அன்பு முகத்தை ஒரு தரமாகிலும் பார்த்துவிட வேண்டும் போல் மனசு கிடந்து அடித்துக்கொண்டது. என்னால் என்னை ஜெயிக்க முடியவில்லை. என் கால்கள்

என்னை நடேசனின் கடைப்பக்கம் இழுத்துச் சென்றன.

நான் கடையை அணுகியபோது அங்கே நடேசன் இல்லை என்பது தெரிந்தது. அவனுக்குப் பதில் தொந்தியும் தொப்பையுமாக ஒரு பெரியவர் உட்கார்ந்து வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அவன் இல்லாததால் துணிவுற்ற நான் நெருங்கிச் சென்று, ‘நடேசன் இல்லையா ? ‘ என்று விசாரித்தேன்.

‘அவரு கடையை வித்துட்டுப் போயி அஞ்சாறு மாசத்துக்கு மேல ஆவுதேம்மா ? ‘ என்று அந்தப் பெரியவர் பதில் சொன்னார்.

‘ இப்ப எங்கே இருக்காருன்னு தெரியுமா ? ‘

‘இந்த ஊரைவிட்டுப் போயிட்டாருங்குறது மட்டுந்தான் தெரியும். எங்கிட்டுப் போனாருங்குற வெவரந் தெரியலியேம்மா ? ‘

நடேசனை எட்ட இருந்து பார்க்கும் வாய்ப்பைக் கூட நான் இழந்து விட்டது தெரிந்ததும், எனது நெஞ்சுக்கூட்டினுள் ஒரு நரம்பு படாரென்று அறுந்தாற்போல் இருந்தது. ஆனால் எல்லாம் ஒரு நிமிஷத்துக்குத்தான். மறு நிமிஷமே சமாளித்துக்கொண்டுவிட்டேன். நடேசன் ஊரைவிட்டுப் போனதும் ஒரு வகையில் நல்லதுக்குத்தான் என்று தோன்றியது. கடையில் இருந்த பெரியவர் என்னவோ கேட்டார். அவர் என்ன கேட்டார் என்பதைப் புரிந்துகொண்டு பதில் சொல்லும் நிலையில் நான் இல்லை.

இது நடந்து ஒரு வாரங் கழித்து ஒரு நாள்…என் வியாபாரத்தை முடித்துக்கொண்டு முன்னதாக வீட்டுக்குத் திரும்பிவிட்ட நான் ஜானகி வருகிறாளா என்று பார்ப்பதற்காக வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தேன். கூடத்தில் உட்கார்ந்து அப்பா குழந்தைகளுக்கு சம்ஸ்கிருத சுலோகங்கள் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். ‘இதில ஒண்ணும் குறைச்சல் இல்லே ‘ என்று எனக்குள் முனகிக்கொண்டேன். சாமிக்கு நமஸ்காரம் கூடப் பண்ணவில்லை அன்றைக்கு. ‘ஆ…மா! தினமும் நமஸ்காரம் பண்ணிப் பண்ணி என்னத்தைக் கண்டுது ? ‘ என்று ஒரே வெறுப்பாக இருந்தது.

… தெருக்கோடியில் ஜானகி விரைவாக நடந்து வந்துகொண்டிருந்தாள். அவள் நடையே கொஞ்சம் வேகம் தான். இன்றைக்கு என்னவோ வழக்கத்ததை விடவும் வேகமாய் வந்துகொண்டிருந்ததாய்ப் பட்டது. நான் கண்ணை எடுக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். தலையைக் குனிந்தவாறு அவள் நடந்து வந்துகொண்டிருந்ததைப் பார்த்தபோது எனக்குப் பெருமையாக இருந்தது. ‘என் தங்கையும் என்னைப் போலவே

அடக்கமாத்தான் இருக்கா! ‘

ஜானகி தனக்குத்தானே சிரித்துக் கொள்ளுகிறாப்போல் இருந்தது. அவள் வாசற்படியில் கால் வைத்ததும், ‘என்னடி, நீயே சிரிச்சுக்கறே ? என்ன விஷயம் ? ‘ என்று

கேட்டேன்.

ஒரு விநாடி திகைத்துப் போய்விட்டாள். ‘எப்பவோ படிச்ச ஜோக் ஒண்ணு ஞாபகம் வந்தது. சிரிப்பை அடக்க முடியல்லே.. ‘ அவள் சொன்ன பதிலை என்னால் நம்ப முடியவில்லை. எதையோ அவள் என்னிடமிருந்து மறைப்பதாகப் பட்டது.

இரண்டு நாள்கள் கழித்து எனக்கு எல்லாம் புாிந்தது. ‘நானாயிருந்தா ஓடிப்போயிருப்பேன் ‘ என்று சொன்ன ஜானகி அதைச் செய்தும் காட்டினாள். ஆனால், சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போகவில்லை. என்னிடம் மட்டும் சொல்லிவிட்டுத்தான் போனாள்.

… ‘அக்கா! உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணுமே ? ‘

‘சொல்லு, ஜானகி. ரெண்டு மூணு நாளா நீ ரொம்பக் குஷியா யிருக்கிறதைப் பாத்துட்டு நானே உங்கிட்ட கேக்கணும்னு நெனச்சேன்… ‘

‘பின்னே ஏன் கேக்கல்லே ? ‘

‘எப்படியும் நீயே சொல்லுவேன்னு எனக்குத் தெரியும். ..நானாக் கேட்டா சொல்ல மாட்டேன்னும் தெரியும்!… ‘

‘ஏன் சொல்லமாட்டேனாம் ? என்னைப் பத்தி நீ தெரிஞ்சுண்டது அவ்வளவுதான்! ‘

ஆமாம். மேலே அவள் சொன்ன விஷயங்களைக் கேட்டதும், அவளைப் பற்றி நான் தெரிந்து கொண்டிருந்தது ரொம்பவும் குறைவுதான் என்பது தெரிந்தது.

‘சரி, சொல்லு ‘

‘ … அக்கா! நான் கல்யாணம் பண்ணிக்கிறதாத் தீர்மானம் பண்ணி யிருக்கேன். ‘ – ஜானகி இப்படிச் சொன்னதும் என்ன சொல்லுவது என்று கூடத் தோன்றாமல் அப்படியே திகைத்துப்போய் நின்றுவிட்டேன்.

‘என்னக்கா ? பேசாம இருக்கே ? ‘

‘திடார்னு சொன்னாதால சந்தோஷ அதிர்ச்சியில ஒண்ணும் சொல்லத் தோணாம இருந்துட்டேண்டி, ஜானகி! மன்னிச்சுக்கோ. இப்ப சொல்றேன். ரொம்ப சந்தோஷம். பையன் யாருடா ? அப்பாவுக் கெல்லாம் சொல்லிட்டியா ? ‘

‘உங்கிட்ட மட்டுந்தான் சொல்றேன். அவாள்ளாம் தன்னால அப்புறமாத் தெரிஞ்சுக்கட்டும்….நீயே சாவகாசமா அவா கிட்ட சொல்லிடு. ‘

‘என்னடி, புதிர் போட்ற மாதிரி பேசறே ? சொல்றதைத் தெளிவாச் சொல்லேன். ‘

‘ அன்னிக்குச் சொன்னேனோல்லியோ ? அதை காரியத்துலே காட்டப் போறேன்…அதாவது ஓடிப்போகப் போறேன்! ‘

‘ …… ‘

‘பையன் யாரு, என்னன்னு தெரிஞ்சா, அப்பா கட்டையை எடுத்துண்டு வருவா. நீ கூட என்ன நினைப்பியோ, தெரியல்லே. ‘

‘சொல்லேண்டி. ‘

‘மெயின் ரோடுல ஓட்டல் வெச்சிருக்கானே, கேசவன் நாயர்… ‘

‘ஆமா ? ‘

‘அவனோட தம்பி – மாதவன் நாயர். ‘

‘சேப்பா, ஒசரமா யிருப்பானே, அவனா ? ‘

‘ஆமா. ரெண்டு வருஷமா எங்களுக்குள்ளே ‘இது ‘…உனக்குக் கல்யாணம் ஆனதுக்கு அப்புறந்தான் பண்ணிக்கணும்னு இருந்தேன்… ஆனா அவா வீட்டுல அவசரப் படுத்தறா… அதான்..அவா இங்கே இருக்கிற கடையை மூடிட்டு கேரளத்துக்கே போயிடப் போறாளாம்… நானும் அவாளோட போயிடலாம்னு இருக்கேன்… ‘

‘நீ கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு தீர்மானிச்சிருக்கிறதைப் பத்தி ரொம்ப சந்தோஷம், ஜானகி! ஆனா, ரெண்டு வருஷமா இந்த விஷயத்தை எங்கிட்டேர்ந்து மூடி மறைச்சிருந்திருக்கியே, நியாயாமா ? ‘ என்று கேட்டேன். ‘ அதனால, எனக்கு எவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்குன்னு தெரியுமாடி உனக்கு ? ‘ என்று கேட்க முடியாமல் – அப்படிக் கேட்பதால் எவ்விதப் பயனும் இல்லை என்பதால் மட்டுமில்லாமல், என் தலையில் நானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டதை நினைத்தும் – மனசுக்குள் பொருமினேன். நடேசனுடைய களையான முகத்தையும் கண்ணியம் நிறைந்த கடிதத்தையும் நினைத்துக்கொண்டேன். மனசே பிளந்து போய்விடும் போல் இருந்தது.

என்னுடைய விஷயத்தைப் பற்றி நானாவது ஜானகியிடம் சொல்லியிருந்திருக்கலாமே என்று தோன்றியது. இரண்டு பேருடைய பிரச்சினையும் தீர்ந்து போயிருக்குமே!…

ஜானகி கொஞ்ச நேரம் பதிலே சொல்லாமல் இருந்தாள்.

பிறகு, திடாரென்று, ‘அக்கா! என்னை ஆசீர்வாதம் பண்ணுடா! ‘ என்றவாறு அவள் உணர்ச்சிவசப்பட்டுப் பாய்ந்து வந்து என்னைக் கட்டிக் கொண்டபோது, என்ன சொல்லுவது என்றே தோன்றாமல் அவள் முதுகைத் தடவிக்கொடுத்தேன்.

ஜானகியின் கண்ணிர் என் தோளில் விழுந்தபோது, நானும் அவளோடு சேர்ந்து கொண்டு அழுதேன்.

‘ஜானகி! என்னோட ஆசீர்வாதம் எப்பவும் உனக்கு உண்டுடா. அதை நீ கேட்டு வாங்கிக்கணும்னுட்டு இல்லே.. ‘ – இப்படிச் சொல்லிவிட்டு நான் அவள் தோளில் என் முகத்தை அழுத்திக்கொண்டேன். என்ன முயன்றும் அழுகையை அடக்கிக்கொள்ள முடிiயவில்லை.

அவளை விட்டு நிரந்தரமாகப் பிரியப் போகிற துயரத்தில்தான் நான் அழுதேனென்று அவள் நினைத்துக்கொண்டிருப்பாள். ஆனால், நான் அழுதது அதற்காக மட்டும் இல்லை என்றும் வேறு இன்னொன்றுக்காகவும் கூட என்றும் அவளுக்கு எப்படித் தெரியும் ?

****

……… ஆனந்த விகடன் / 14-7-1970

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா