அல்லி-மல்லி அலசல் (பாகம் 1)

This entry is part [part not set] of 37 in the series 20030619_Issue

பவளமணி பிரகாசம்


மல்லி:அல்லி, என்ன செஞ்சிகிட்டிருக்க ?

அல்லி:பள்ளியிலேர்ந்து பசியோட வர்ற பிள்ளைங்களுக்கு குடுக்குறதுக்கு என்ன பலகாரம் செய்யலாம்னு யோசிச்சிட்டிருக்கேன், மல்லி.

மல்லி:கடையிலேதான் விதம்விதமா விக்குதே ?

அல்லி:வாய்க்கு ருசியா என்னென்னவோ விக்குதுதான். ஆனா, அதிலே கெடுதலும் நிறைய இருக்கே. அபரிதமான வளர்ச்சியோட இப்ப காலத்து பிள்ளைகள், பாக்குறதுக்கே விகாரமா மாறிகிட்டு வர்றதை நீயும் கவனிச்சிருப்பியே ?அளவுக்குக்கதிமான கலோரிகளோட, உடல் எடையை கூட்டும் விதத்திலதான் கடையில் விக்கிற பலகாரங்கள் இருக்கு.

மல்லி:ஓ! அதனால கைப்பக்குவமா, தரமான பொருள்கள வச்சி வீட்டிலேயே பலகாரம் செய்யபோற ? பிள்ளைங்களோட பசிக்கு நல்ல தீனி குடுக்கப் போற ?

அல்லி:பசியைப் பத்தி யோசிச்சிப் பாத்திருக்கியா ?மனிதனோட இயற்கை உந்துதல்கள்ல முதல் இடம் பசிக்குன்னு தெரியுமா உனக்கு ?

மல்லி:தெரியுமே. பசி வந்திட பத்தும் பறந்து போம்னு பழமொழி கூட இருக்கே.

அல்லி:அந்த பழமொழிக்கு இரண்டு விதத்துல அர்த்தம் எடுத்துக்கலாம். பத்து நல்ல குணங்கள் பறந்து போய் விடும் அப்படின்னு சொல்லலாம். ‘பற்றும் பறந்து போம் ‘ அப்படின்னு எடுத்துகிட்டா பாசம்ங்கற பற்றும் பறந்து போய்விடும்னு அர்த்தமாகுது.

மல்லி:அதனாலதான் தாயும் சேயும் ஆனாலும் வாயும் வயிறும் வேறுன்னு சொல்றாங்க.

அல்லி: வயிறு படுத்தும் பாட்டை பத்தி ஒளவையார் சொல்றத கேட்டியா ? ‘ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய், இரு நாள் உணவை ஏலென்றால் ஏலாய், இடும்பைக்கூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது ‘.

மல்லி: ஆமா. ஒட்டகத்த மாதிரி நம்மால store பண்ணிக்க முடியாதுங்கறாங்க.ஒரு நாள் சாப்பிடாம இருக்கறதும் கஷ்டம், 2 நாளைக்கு சேர்த்து சாப்பிட்டுக்கவும் முடியாது- இப்படி தகராறு பண்ற வயிறோட வாழ்றது சிரமம்னு பாட்டி சரியா சொன்னாங்க.

அல்லி: அவங்க கோணத்துல பாத்தா வயிறால தொந்தரவுதான். ஆனா ஒரு மனிதனோட மனசுக்குள்ள நுழையறதுக்கு அவனோட வயிறு வழி வகுத்து கொடுக்குதுன்னு ஒரு ஆங்கில பழமொழி சொல்லுது- ‘The way to a man ‘s heart is through his stomach ‘.

மல்லி:அது ரொம்ப கரெக்ட். கணவருக்கும், குழந்தைகளுக்கும் பிடிச்ச சாப்பாட்டை வயிறார உண்ண குடுக்குற இல்லத்தரசிகள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாத்தான் இருக்கு.

அல்லி:இந்த சர்வ வல்லமை படைச்ச வயிறுக்கு புத்தி புகட்டுறதுக்காக மத்த அவயவங்கள் வேலை நிறுத்தம் செஞ்ச நீதிக் கதை எனக்கு ஞாபகத்துக்கு வருது.வீண் கர்வத்தால வயிறு பசியால வாடி அதுக்குப் பிறகு உண்மையை உணர்ந்துகிட்டது.

மல்லி:வயிற்றுப் பசியோட கொடுமைய முழுசா உணர்ந்த பாரதியார் ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் ‘ அப்படின்னில்ல கர்ஜனை பண்ணினாரு ?

அல்லி: பசிப் பிணியை போக்க மணிமேகலைக்கு ஒரு அமுத சுரபி கிடைச்சதால காய சண்டிகைக்கு சாப விமோசனம் கிடைச்சது.

மல்லி:ஒரு அமுத சுரபியின் உதவியோட மணிமேகலையால பசிப் பிணியை ஒழிக்க முடிஞ்சுதுன்னா திரெளபதிக்கோ பாத்திரத்தில ஒட்டிக்கிட்டிருந்த ஒரு பருக்கையே அட்சய பாத்திரத்தோட மாயத்த செஞ்சதா மகபாரதம் சொல்லுது.

அல்லி:ஒரு பருக்கையால பசி தீர்க்க முடியும்னு திரெளபதி வழங்கின யாசகம் உணர்த்துச்சி. ஆனா, மிகப் பெரிய ராஜா வீட்டு திருமண விருந்துக்கு சமைச்ச மொத்த சாப்பாடும் ஒத்தை ஆளான கடோத்கஜனுக்கு போதலைங்கறது இன்னொரு கதை.

மல்லி:பாண்டவர் வீட்டு கல்யாணத்துக்கு வந்த கடோத்கஜனை மாதிரியே மலையத்வஜன் மகள் பார்வதியை மணக்க வந்த சுந்தரேஸ்வரரின் பக்தனான குண்டோதரனும் பாண்டியராஜன் தயாரிச்ச மொத்த உணவையும் உண்டு முடித்தானாம்.

அல்லி:இப்படிப்பட்ட பெருந்தீனியர்கள் ஒரு பக்கம்னா இன்னொரு பக்கம் கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், கபிலர் போல வடக்கிருந்து- அதாவது உணவருந்தாம- உயிர் விட்டவங்க நிறையப் பேர்.

மல்லி:உண்ணாவிரதம் பிற்காலத்தில மகாத்மா காந்தி கையில எப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்த ஆயுதமா இருந்து நம்ம நாட்டுக்கே சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததுங்கிறதுதான் எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயமாச்சே.

அல்லி: வருஷத்துல, மாசத்தில, வாரத்தில இத்தன வேளை, இன்னின்ன கிழமை உண்ணாம நோன்பிருக்கிறது எல்லா மதத்துலயும் இருக்கிற ஒரு ஆன்மீக நெறிக்கான பழக்கமாவே பல நூற்றாண்டுகளா இருந்து வருது.

மல்லி: இந்த விரதமிருக்கிர பழக்கத்தால நற்சிந்தனைகள் வளர்ந்து தர்மம் தழைக்கிறதோட ‘லங்கணம் பரம ஒளஷதம் ‘ன்னு ‘பட்டினியே சிறந்த மருந்து ‘ன்னு சொல்ற மாதிரி உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குறதால ஒரு வைத்திய சிகிச்சைன்னு கூட சொல்லலாம்.

அல்லி:விரதம் இருக்கிறது உடல்நலத்துக்கு நல்லது மட்டுமில்ல, நாட்டோட பொருளாதாரத்துக்கும் கூட நல்லதுங்கறதுனாலதான் நம்மோட முந்தைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ‘miss-a- meal on Monday ‘ன்னு ஒரு வழக்கத்தை கடைப் பிடிக்க சொன்னாரில்லையா ?

மல்லி: அவர் ஒரு வேளை சாப்பாட்டை குறைக்கச் சொன்னாருன்னா வள்ளுவப் பெருமானோ எப்பொழுதுமே குறைவாக உண்பது நல்லதுங்கிற அர்த்தத்திலதான் ‘செவிக்குணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் ‘னு சொன்னாரு.

அல்லி:உண்ண வேண்டிய அளவு என்ன, எத்தனை வேளைன்னெல்லாம் பாத்தாச்சி, உண்ண வேண்டிய முறை என்னன்னு நம்ம முன்னோர்கள் சொல்லியிருக்காங்க தெரியுமா ?

மல்லி: ‘மருந்தேயாயினும் விருந்தோடுண் ‘ அப்படின்னும், ‘அறுசுவை உணவேயானாலும் விருந்தில்லா உணவு பாழ் ‘ அப்படின்னும் தமிழர்களோட விருந்தோம்பல் குணத்தை அழகா சொல்லியிருக்காங்க.

அல்லி:அப்படி விருந்தினரோட உணவு உண்ணனும்ங்கற பழக்கம் இருந்ததினால நிறைய அனுகூலங்கள் இருந்திச்சாமே ?உதாரணமா புருஷன் பெண்டாட்டிக்குள்ள சண்டையிருந்தா விருந்தாளி வருகையில தீர்ந்திரும்னு ‘விருந்து கண்டொழித்த ஊடல் ‘ன்னு சொல்லப் பட்டிருக்கு.

மல்லி:விருந்தினர்கள் பத்தின கதைகள்ல வேடிக்கையுமுண்டு, விபரீதமும் உண்டு. சபரி தன்னோட அதிதிகளான ராமலட்சுமணர்களுக்கு பழத்தை கடிச்சி சுவைச்சிப் பாத்து பரிமாறுனதுல எச்சில் கூட புனிதமான அன்பை காட்டுது. அதே மாதிரி சிவனடியார் ரூபத்துல வந்த ஈசன் பிள்ளைக்கறி கேட்ட சோதனயில அந்த தம்பதியோட பக்திதான் ஜெயிச்சுது.

அல்லி: எதை விருந்தா பரிமாறுகிறோம்ங்கிறது முக்கியமில்ல, ஆத்மார்த்த அன்போட பரிமாறணும். அப்படி பரிமாறுவதால விருந்து மணம் பெற்றதாகுன்னு இன்னொரு உதாரணம் மூலமும் தெரிஞ்சிக்கலாம். வறுமையில வாடின போதும் அங்கவை, சங்கவைங்கற பாரி வள்ளலோட இரு மகள்களும் ஒளவையாருக்கு அப்போதைக்கு தங்களால முடிஞ்ச எளிய கீரையை சமைச்சி சாப்பிட சொன்னது ருசியான விருந்தா இருந்திச்சாம்.

மல்லி: எளிய உணவுன்னதும் எனக்கு குசேலர் கிருஷ்ணருக்கு கொடுத்த அவல் ஞாபகம் வருது. ஒரு பிடி அவலுக்குள்ள ஒளிஞ்சிருந்த நட்புங்கற அன்பு குசேலருக்கு குபேர யோகத்தையைில்லியா கொண்டு வந்துச்சி ?

அல்லி: அன்போட குடுத்த அவல் சுபிட்ஷத்த கொடுத்ததென்னவோ வாஸ்தவந்தான். ஆனா கலகக்கார நாரதர் கொண்டு வந்து கொடுத்த மாம்பழத்தால பரமசிவன் குடும்பத்தில பிரிவினையில்லையா வந்திச்சி ?

மல்லி:அருமையான மாம்பழத்திற்கு அண்ணன் தம்பிக்குள்ள சண்டை வந்திச்சி. ஆனா கிடைத்தற்கரிய ஒரு நெல்லிக்கனியை அதியமான் ஒளவைக்கு குடுத்து பெருமை அடைஞ்சிருக்காரு.

அல்லி: ஆனாலும் ஒளவை ஒன்னும் லேசுப்பட்டவங்க இல்ல. காரியம் சாதிக்க வேண்டி பெரிய புள்ளிகள் விருந்து வைக்கிற வழக்கம் அவங்க காலத்திலேயே இருந்திருக்கும் போல. அதனாலதான் பிள்ளையார்கிட்ட பாலும், தெளி தேனும், பாகும், பருப்பும் நான் தர்றேன், பதிலுக்கு சங்கத்தமிழ் மூன்றும் நீ எனக்குத் தான்னு பேரம் பேசியிருக்காங்க.

மல்லி:சங்கத் தமிழுக்கு ஆசைப் பட்ட ஒளவையார் மட்டுமில்ல, சாதாரண பேச்சுத்தமிழை உபயோகிக்கிற மூத்தவங்களும் சாப்பாட்டை சம்பந்தப்படுத்தியே தங்களோட அறிவுரைகளை மக்களுக்கு வழங்கியிருக்காங்க. ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் ‘ அப்படின்னும், ‘ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும் ‘ என்றும், ‘ஒரு பிள்ளை பெற்றவனுக்கு சாப்பாடு உறியிலே, நாலு பிள்ளை பெற்றவனுக்கு நாற்சந்தியிலே ‘ அப்படின்னும் சொல்லியிருக்கிறத பாக்கும் போது பசிங்கிற இயற்கை உந்துதல் மனிதனோட வாழ்க்கைல ஒரு பெரிய சக்தியா விளங்குதுன்னு புரியுதில்லியா ?

***

pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்