அரசூர் வம்சம் – அத்தியாயம் பத்து

This entry is part of 42 in the series 20030615_Issue

இரா முருகன்


கறுப்புப் பெட்டி நிறைய வட்ட வட்டமாகத் தட்டுக்களை வைத்து எடுத்து வந்திருப்பார்கள் பனியன் சகோதரர்கள்.

நூதனமான, நாய்க் குடை போல் காது விரித்த ஒரு பெட்டியில் வைத்துக் கரகர என்று முன்னால் ஒரு பிடியை முறுக்கிச் சுற்றிவிட்டு உட்கார்ந்தால் நெஞ்சில் பாரமாக ஏறி இடம் பிடிக்கும் பாட்டுக்கள் எல்லாம்.

அந்தத் தட்டுக்களை ராஜா பார்க்க மட்டுமே முடியும். அவற்றை அனுபவிக்க பக்கத்து வீட்டில் எப்போதடா சுழல வைக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும்.

அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் ராணி குளிப்பதைப் பார்ப்பதற்குக் காத்திருப்பது போல்.

ஆனால் அவர்களிடம் பணம் காசு மெத்த உண்டு. அலுத்துப் போகும் வரை சங்கீதம் பொழிய இந்தத் தடியர்களிடமிருந்து பெட்டி பெட்டியாக வாங்கி வீட்டில் அடுக்கிக் கொள்ளலாம். காலையில் எழுந்து பல் விளக்கும்போதும், சாப்பிடும்போதும், தூங்கும் போதும், மாடியில் இருந்து ராணி குளிப்பதை எட்டிப் பார்க்கும்போதும் அந்த சங்கீதமும் துணைக்கு வரும்படி செய்து வைத்துக் கொள்ளலாம்.

ராணி என்ன அவளை விட வனப்பான பெண்களைப் பக்கத்தில் இருந்தே பார்க்கலாம். கூடி இன்புறலாம். எல்லாம் அந்த இசையைக் கேட்டபடியோ. அல்லது அதைக் கேட்பதற்கான தொடக்கமாகவோ.

பாட்டுப் பாடும் தட்டுத்தானே ? அப்புறம் பார்த்துக் கொள்கிறேன். நபும்சகனுக்கு மார்க்கச்சை கிடைத்தது போல் அதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன் ?

ராஜா தன்னிரக்கத்தோடு சிரித்தார்.

என்ன அப்படிச் சொல்லி விட்டாங்க. நீங்க நினைச்சால் ஒண்ணு என்ன ஓராயிரம் பாட்டுப் பெட்டியும் மார்க்கச்சையும் வாங்கலாம். சமஸ்தானம் செலவு பண்ண ரொம்ப யோசிக்கிறது.

நெட்டை பனியன் ராஜா கையில் இருந்து எலுமிச்சம்பழத்தைத் திரும்ப வாங்கிக் கொண்டே சொன்னான்.

அந்தஸ்தில் உயர்ந்த யாரையாவது சந்திக்கப் போகும்போது அவர்கள் கையில் பழத்தையோ, பூ மாலையையோ கொடுப்பது அவர்கள் கால வழக்கம் போல. கொடுத்த பழத்தை ஒரு தடவை முகர்ந்து பார்த்ததும் திருப்ப வாங்கி வைத்துக் கொள்வதும் அதே கால தேச வர்த்தமானம் அனுசரித்துத்தான் இருக்க வேண்டும்.

கறுப்புப் பெட்டி முழுக்கத் திறக்காமல் உள்ளே பூட்டு சண்டித்தனம் செய்தது. நெட்டை பனியன் போராடிப் பார்த்து விட, குட்டையன் ராஜா அரண்மனைச் சுவரில் அலங்காரமாக வைத்திருந்த வாள், கேடயம், ஈட்டி என்று பழைய ஆயுதத்தை எல்லாம் ஒவ்வொன்றாகப் பரிசோதித்து விட்டு, ஒரமாகக் கச்சைவாரில் தொங்கிய குறுவாளை எடுத்து வந்தான்.

அந்தக் கறுப்புப் பெட்டிக்குப் பக்கத்தில் தரையில் குந்தி இருந்து குறுவாளால் அதன் பூட்டை நெம்ப அது உடனே திறந்து கொண்டது.

கண்டவனும் எடுத்து வந்த உளுத்துப் போகும் மரப்பெட்டியைத் திறக்கவா நாங்கள் வெகு வீரமாக கலகக் காரர்களையும், துஷ்ட ஜந்துக்களையும் பரலோகம் அனுப்பி வைக்க காலம் காலமாக எடுத்தாண்ட குறுவாளை உபயோகிக்கிறது ? அவனுகளுக்குத்தான் புத்தியில்லை என்றால் உன்னுடைய அறிவு உன் விதைக் கொட்டைக்குள் போய் முடங்கி விட்டதா ? அங்கே வேறே ஏதாவது உருப்படியாக உற்பத்தி ஆகியிருந்தால் இன்னேரம் உன் வம்சம் வளர்ந்திருக்குமே.

நாளைக்கு பூஜை செய்ய உட்காரும்போது மூதாதையர்கள் இறங்கி வந்து சொல்லிப் போவார்கள்.

அல்லது நாளை மறுநாள் அமாவாசைக்கு வரும்போது.

அய்யர் கோபித்துக் கொண்டு போனதால் அவர்கள் அமாவாசைக்கு வருவது நிச்சயமில்லை என்று ராஜாவுக்குத் தோன்றியபோது நெட்டை பனியன் கறுப்புப் பெட்டியில் இருந்து பழுக்காத் தட்டுக்களை எடுத்து ராஜா கையில் கொடுத்தான்.

அவற்றை அபிமானத்தோடு வாங்கி நாசிக்கு அருகில் வைத்து தீர்க்கமாக வாடை பிடித்தார் ராஜா.

மனதுக்கு ரம்மியமான சாவின் வாடை.

எப்படியோ இதற்குள் ஒளித்து வைத்திருக்கிறார்கள். பிழியப் பிழிய அழுதாலும் தீராத சோகத்தை எல்லாம் பொழிந்து தீர்க்கும் அந்தத் தட்டுக்களில் ஓடிய வரிகளுக்கு இடையில் எப்படியாவது தன்னை நுழைத்துக் கொள்ள முடியுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

ராஜா ஒப்பாரி பதிந்த அந்தத் தட்டுக்களை மனமேயில்லாமல் திருப்பிக் கொடுத்தார். இதற்குள் பதிந்து வைத்திருப்பதைக் கேட்டு அனுபவிக்க எப்போது வாய்க்குமோ.

ஒரு யாசகனைப் போல் பக்கத்து வீட்டை ஒருவினாடி ராஜா பார்த்தார்.

அவர் கையில் கனமாக ஒரு புத்தகத்தை வைத்தான் குட்டை பனியன்.

ராஜா புத்தகங்களை அறிவார். வெள்ளைக் காரன் தேசத்தில் இருந்து துரைத்தனத்தார் பாஷையில் அச்சுப் போட்டு வருகிறவை. பலதும் அந்த சீமையின் விஞ்ஞானம், தத்துவ சாஸ்திரம், வைத்தியம், சாஹித்தியம் பற்றியதாக இருக்கும் என்று அதைக் கொஞ்சம் போலவாவது படித்தவர்கள் சொல்லிக் கேட்டதுண்டு.

தவிரவும், கணக்கு வழக்கு எழுதவும் வெறுமனே காகிதத்தைக் கட்டிப் பொதிந்து வைக்கிறதை துரைத்தனத்தார் கொடுத்து, அரண்மனையில் காரியஸ்தன் கணக்கு எழுத உபயோகிக்க வேண்டி இருக்கிறது.

இப்போது பெரிதாகக் கடைகண்ணி வைத்திருப்பவர்களும் பனைஓலைச் சுவடியில் கணக்கு வழக்கு பதிவதை விட்டுவிட்டு அதே தரத்திலான காகிதப் புத்தகத்தில் தான் எழுதிக் கொண்டிருப்பதை ராஜா கடைத்தெருவில் உலாப் போகும்போது பார்த்திருக்கிறார்தான்.

காகிதத்துக்கு துரைத்தனத்தார் இன்னொரு உபயோகமும் கண்டு பிடித்து வைத்திருப்பதாகக் கேள்வி.

மலசலம் கழித்து வந்தால் அதைத் துடைத்துப் போடவும் காகிதம் தான் பிரயோஜனப் படுமாம்.

பட்டணத்து துரைத்தனத்தார் துரைசானிகளோடு இன்பமாக இருக்கும் நேரம் தவிர மற்றப் பொழுதெல்லாம் இந்த மாதிரி காகிதப் புத்தகங்களோடுதான் காணப்படுவார்களாம்.

துரைசானிகள் காகிதத்தைத் துடைத்துப் போட உபயோகிப்பதில் மும்முரமாக இருக்கும் பட்சத்தில் துரைமார்கள் காகிதத்தில் அச்சடித்துப் போட்டதைக் கவனமாகப் படித்தபடி மிகுந்த நேரம் செலவழிப்பதே உத்தமம் என்று ராஜாவுக்குத் தோன்றியது.

எனக்கு வெள்ளைக் காரன் பாஷை படிக்கத் தெரியாது. கணக்கு எழுதும் வேலையெல்லாம் காரியஸ்தன் பார்த்துக் கொள்கிறான். மற்றப்படிக்கு செம்பில் ஜலம் எடுத்துக் கொண்டு போய்க் கால் கழுவி வருகிறேன். இந்தப் புஸ்தகம் எல்லாம் எனக்கு எதற்கு ? பணம் கொழுத்த புகையிலைக் கடைக்காரப் பிள்ளைகளுக்குக் கொடுத்தாலும் பிரயோஜனமாக இருக்கும்.

ராஜா திருப்பித் தந்த புத்தகத்தை மரியாதையோடு கையில் வாங்கினான் நெட்டை பனியன். அதைப் பிரித்தபடி காட்டித் திரும்ப ராஜா கையில் வைத்தான்.

கண் பார்வை மங்கலாகிக் கொண்டு இருக்கிறது. ஆனாலும் அந்தப் புத்தகத்தின் விசித்திரம் அவரைப் பிடித்து இழுத்தது.

ஆணும் பெண்ணுமாக விதம் விதமாக உறவு கொள்கிற படங்கள்.

காகிதத்தால் பின்னால் துடைத்துப் போட்டு, வெகு சுத்தமாக ஸ்நானம் செய்து விட்டு வாசனாதி திரவியங்களைத் தேகம் முழுக்கப் பூசிக்கொண்டு இது மாதிரி விஷயங்களில் ஈடுபடுவார்களாக இருக்கும்.

நக்னமாக வெளுத்து சோகை பிடித்திருந்த உடல்களுக்குப் பக்கமாக பழுக்காத்தட்டுக்களைச் சுழல விட்டுக் கிளர்ச்சியூட்டும் இனிமையும் சோகமுமான சங்கீதத்தைப் பொழியும் பாட்டுப் பெட்டி படம் எங்கேயாவது தட்டுப்படுகிறதா என்று ராஜா ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப் பார்த்தார்.

விதிக்கப்பட்ட கடமையை ஆற்றுகிறது போல், உறைந்து போன நிசப்தத்தில் துரைத்தனத்தார் தீவிரமாக வம்சவிருத்தியில் ஈடுபடுகிறது தான் பக்கத்துக்குப் பக்கம் விரிந்து கொண்டு போனது.

இதை வைத்திருந்து சாவகாசமாகப் பார்த்து விட்டுக் கொடுங்கள். பக்கத்து வீட்டில் அடுத்த முறை வரும்போது கொடுத்துக் கொள்கிறோம்.

ராஜா வேண்டாம் என்று மறுத்துப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தார்.

ராணி பார்த்தால் இது என்ன அசங்கியம் என்று முகத்தைச் சுளிப்பாள். போதாக்குறைக்கு மூதாதையார் ஏதாவது செய்து இதைச் சுட்டெரித்துப் போடவும் சாத்தியம் உண்டு. அப்புறம் யார் இதற்குப் பணம் அழுகிறதாம் ?

இதெல்லாம் எப்படிச் சித்திரக்காரன் வரைவான் ? அது ஏன் கறுப்பும் வெள்ளையுமாக ஒரே மாதிரி இருக்கிறது எல்லாம் ?

ராஜா கேட்க, பனியன் சகோதரர்கள் கபடமாகச் சிரித்தார்கள்.

இது வரைந்த படம் இல்லை.

கறுப்புப் பெட்டிக்குள் மடக்கி வைத்திருந்த ஒரு முக்காலியை எடுத்து விரித்தான் குட்டை பனியன். கண்ணாடி விளக்கு போல் ஏதோ சாதனத்தை எடுத்து அதன் மேல் இருத்தினான்.

இதுவும் பாடுமோ ?

ராஜா கேட்டார்.

பாடாது. ஆனால் படம் எடுக்கும்.

அதென்ன படம் எடுக்கிறது ?

உங்களை இப்படி உட்கார்ந்தபடிக்கே படமாக எடுத்துப் போடும்.

சித்திரக்காரனைக் கூப்பிட்டால் ஏழெட்டு வர்ணத்தைக் குழைத்து திரைச்சீலையில் வரைந்து நான் தான் என்று நம்ப வைத்துக் காசு வாங்கிப் போவானே. இதுக்கெல்லாம் எதற்கு யந்திரம் ?

ராஜா சவத்தைத் தள்ளு என்கிற அலட்சிய பாவனையோடு கையை விலக்கியபடி கேட்டார்.

இது உள்ளதை உள்ளபடியே பிடிக்கக் கூடியது. நீங்கள் சரி என்றால் ஐந்து பத்து நிமிடத்தில் எடுத்து விடலாம்.

ராஜா புரியாமல் பார்த்தார்.

துரைகளும் துரைசானிகளும் அந்தப் புத்தகத்தில் செய்கிறதை எல்லாம் தானும் ராணியும் செய்து அதைப் படம் பிடித்துப் போகவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா இந்தத் திருட்டுப் பயல்கள் ?

மடியில் உப்பு நறுநறுத்ததை பரத்திச் சீராக்கிக் கொண்டு செண்பகவல்லியை இதைக் கொண்டு படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தார் ராஜா.

அவள் வயோதிகத்தில் செத்துப் போய் ஏழு வருஷமாகி விட்டது.

ராஜா கறுப்புப் பெட்டிக்குப் பக்கத்தில் தரையில் வைத்திருந்த குறுவாளை எடுக்கக் கையில் சின்னதாகக் கீறி ரத்தச் சுவடை உண்டாக்கிக் கொண்டு சொன்னது அது.

முன்னோர்.

உன் வயசுக்கு நாங்கள் எல்லாம் ஈசுவர சிந்தையும், குடிபடைகளைப் பராமரிக்கிறது பற்றிய யோசனைகளுமாக சதா இருந்தோம். நீ சாப்பிடவும் ஒட்டுக் கேட்ட ஒப்பாரிப் பாட்டை ரசிக்கவும், சம்போகம் பற்றி வெறுமனே நினைக்கவும், சேடிப்பெண்ணுக்குக் கால் பிடித்து விடவும் தவிர வேறு என்ன செய்கிறாய் ? போதாக்குறைக்கு இந்த லீலாவிநோதங்களை அச்சுப் போட்ட புத்தகம் வேறே.

குறுவாளின் வளைந்த பிடி கைக்கு அடங்காமல் திமிறி முணுமுணுத்தது.

அவசரமாகக் கையைத் துடைத்துக் கொண்டு சம்போகம் பற்றிய அந்தப் புத்தகத்தை பனியன் சகோதரர்களிடம் கொடுத்து உடனே உள்ளே வைக்கச் சொன்னார் ராஜா.

அந்தப் படம் பிடிக்கும் பெட்டியையும் எடுத்து வையுங்கள். முக்காலியை மடக்கி எடுத்து அந்தாண்டை போங்கள்.

உங்களுக்கு மனநிலமை சரியில்லை என்றால் வேண்டாம் இதொன்றும். நாங்கள் சும்மா இதையெல்லாம் பார்க்கக் காட்டி விட்டு, புதுமனை பற்றிக் கொஞ்சம் கதைத்து விட்டுப் போகலாம் என்று வந்தோம். அப்புறம் அந்த மலையாளக்கரைப் பயணம். இந்த இரும்பு வாகனம் வேண்டாம் என்றால் போகிறது. புகை விட்டுக் கொண்டு நகரும் ஒரு வண்டி இருக்கிறது. அதில் வைத்துக் கூட்டிப் போகிறோம். பரம சுகமாக இருக்கும். துரைத்தனத்தார் இன்னும் சில வருஷங்களில் இங்கே கொண்டு வரப் போவது.

பனியன் சகோதரர்கள் மரியாதையோடு எழுந்து நின்று சொன்னார்கள்.

அப்படியே துரைத்தனத்தார் வார்த்து வெளியிடும் வெள்ளிப் பணத்தையும், தங்கப் பணத்தையும் இவர்கள் கொண்டு வர முடியுமானால் நன்றாக இருக்கும்.

இந்தக் களவாணிகளா ? சொன்னால் அச்சு அசலாக அது போல் செம்பில் காசு அடித்து மேலே வர்ணப் பொடி பூசி எடுத்து வந்து விடுவார்கள்.

ராஜா குறுவாளை வார்க்கச்சையில் வைத்துச் சுவரில் மாட்டும்போது பக்கத்தில் இருந்த கேடயம் உருண்டு தரையில் விழுந்து ஒலி செய்ய அதற்குள் இருந்து இன்னொரு குரல் கேட்டது.

சமயம் சரியில்லை போலிருக்கு. நாங்கள் இன்னொருமுறை வருகிறோம்.

பனியன் சகோதரர்கள் கறுப்புப் பெட்டியை மூடிக் கொண்டு கிளம்பும்போது ராஜா மடியில் இருந்து இரண்டு வெள்ளி நாணயங்களை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்.

அவர்கள் தொழுது வாங்கிக் கொண்டார்கள். வாசலில் நிறுத்தி இருந்த வண்டியில் இருந்து இரண்டு பெரிய புட்டியுகளை உள்ளே கொண்டு வந்து வைத்தார்கள்.

சீமைச் சாராயம்.

நாளைக்குத் தானே அமாவாசை ?

அவர்கள் கிளம்பிப் போனதும் அறை முழுக்கக் குரல்கள் ஆர்வமாக விசாரித்தன.

அய்யர் சீமைச்சாராயத்தை எடுத்து எப்படி இவர்களுக்குப் போய்ச் சேரும்படி கொடுப்பார் என்று ராஜாவுக்குப் புரியவில்லை. அவர் வருவாரோ என்னமோ.

பக்கத்து வீட்டைக் கொளுத்த இந்தச் சண்டாளர்களை உபயோகித்துக் கொள்ளலாம் என்று உங்கள் புத்திக்குத் தோன்றவே இல்லையா ?

பகல் தூக்கம் கலைந்து எழுந்து வந்த ராணி சொன்னாள்.

(தொடரும்)

eramurug@yahoo.com

Series Navigation