தளுக்கு

This entry is part [part not set] of 34 in the series 20030607_Issue

அ.முத்துலிங்கம்


யாழ்ப்பாணத்தில் ஒரு கிராமத்தில் மூன்று சிநேகிதிகள் இருந்தார்கள். மூன்று உடலும், ஓர் உயிரும் என்று சொல்லலாம். ஒன்றாகவே சைக்கிளில் பள்ளிக்கூடம் போனார்கள். ஒன்றாகவே படித்தார்கள். ஒன்றாகவே விளையாடினார்கள். ஒன்றாகவே ரகஸ்யம் பேசினார்கள். ஒரு கரண்ட் வயரில் வேலை செய்யும் மூன்று பல்புகள் போல அவர்கள் இருந்தார்கள்.

பேன் பார்ப்பதில் கூட ஒரு புதுமை செய்தார்கள். முக்கோண வடிவில் உட்கார்ந்து கொண்டு ஒருவர் தலையை ஒருவர் பார்த்தார்கள். அவர்களுடைய கூரிய கண்களில் இருந்தும், பரபரப்பான விரல்களில் இருந்தும் பேன் என்ற உயிர்ப்பிராணி தப்பவே முடியாது.

காரியம் இப்படிப் போய்க் கொண்டிருக்கும்போது இவர்களில் ஒருத்திக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அந்த அதிர்ஷ்டக்காரியின் பெயர் பத்மலோசனி. அதிர்ஷ்டம் அடிக்காத மற்ற இருவருக்கும்கூட பெயர்கள் இருந்தன. அவை இங்கே தேவையில்லை.

அதிர்ஷ்டக்கார பத்மலோசனியின் மாமா கனடாவில் இருந்தார். பணக்காரர் என்றால் மொத்தமான பணக்காரர். அவருடைய மகள்தான் மைதிலி. பத்மலோசனியின் வயதுதான் அவளுக்கும். பதினாறு முடிந்து சில நாட்கள் ஆகியிருந்தன. மைதிலி தகப்பனிடம் தன் சிறுவயது தோழியை பார்க்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறாள். ஒரே மகள். அவள் கேட்டதை தட்டமுடியுமா ? பத்மலோசனிக்கு டிக்கட்டும், விசா எடுப்பதற்கு அவர் கம்பனி தலைப்பு போட்ட பேப்பரில் உத்திரவாதம் கொடுத்து இங்கிலீஸில் டைப் அடிக்கப்பட்ட ஒரு கடிதமும், கறுப்பு கழுத்து வாத்துகள் படம் போட்ட இருபது டொலர் தாள்கள் பத்தும் அவள் மாமா அனுப்பியிருந்தார்.

அந்தக் கிராமத்தவர்களுக்கு இது அதிசயத்திலும் அதிசயம். எப்படி பாஸ்போர்ட் எடுப்பது, எப்படி விசா எடுப்பது, எப்படி பிளேன் ஏறுவது என்று குழம்பிபோய் விட்டார்கள்.

காரணம் இதுதான். கள்ள பாஸ்போர்ட் எடுப்பது எப்படி என்று அவர்களுக்கு தெரியும். எந்த ஏஜண்டைப் பிடித்தால் எந்த பாதை திறக்கலாம் என்பதும் தெரியும். எந்த எந்த விசா குத்தவேண்டும், எந்த எந்த விசா குத்தக்கூடாது என்பதும் தெரியும். ஆனால் உண்மையான பாஸ்போர்ட்டில், உண்மையான விசா குத்தி உண்மையான டிக்கட்டில் பயணம் செய்வது பற்றி அவர்கள் ஒருவருக்கும் ஒன்றுமே தெரியவில்லை.

கடைசியில் ஒரு வழியாக பயண ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டன. ஒரு புளியமரத்தின் கீழ் பத்மலோசனியும்,

அதிர்ஷ்டமில்லாத மற்ற இரண்டு சிநேகிதிகளும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருவர் விரலை ஒருவர் பிடித்தபடி. இதுவே முதல் தடவை அவர்கள் பிரியப் போவது. கொஞ்சம் பொறாமைப்பட்டார்கள். கொஞ்சம் மூக்கைச் சிந்தினார்கள். கொஞ்சம் அழுதார்கள்.

‘எடி, கடிதம் போடுவாயோ ? ‘ என்றாள் ஒருத்தி.

‘மறக்க மாட்டாயே! ‘ என்றாள் மற்றவள். அவள் குரல் தழுதழுத்தது.

அவர்கள் வாங்கி வரச்சொன்ன லிஸ்டை எடுத்து ஞாபகமாக பிளவுஸுக்குள் செருகினாள் பத்மலோசனி. ரூல் போட்ட அந்த ஒற்றையில் ஒரு பக்கம் முடிந்து பின் பக்கத்திலும் சில சாமான்கள் எழுதப்பட்டிருந்தன. ஒருவரை ஒருவர் கிள்ளினார்கள். இறுதியாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விடைபெற்றுக் கொண்டார்கள்.

இது எல்லாம் நடந்து ஒரு மாதமாகிவிட்டது. அன்று பத்மலோசனி கனடாவில் இருந்து திரும்பி வருகிறாள். அந்த இரண்டு சிநேகிதிகளும் ஒருவர் விரலை ஒருவர் பிடித்தபடி காத்திருந்தார்கள். ஏதோ பரீட்சை முடிவை எதிர்பார்ப்பதுபோல அவர்கள் நெஞ்சுகள் படபடவென்று அடித்துக்கொண்டன.

சொன்னபடியே சித்தப்பாவின் வாடகைக் கார் பத்மலோசனியை கொண்டுவந்து இறக்கியது. அவள் அங்கே இங்கே திரும்பிப் பாராமல் மிடுக்கோடு உள்ளே போனாள். இரண்டு மணி நேரமாக இவர்கள் காத்திருந்தார்கள். ஒருத்தி அளவுக்கு மீறி வளர்ந்திருந்த தன் ஒல்லிக் கால்களை பாவாடையினால் இழுத்து இழுத்து மூடினாள். மற்றவள், பின்னலில் சேர்த்துக்கொள்ளப்படாமல் அனாதரவாக விட்ட முற்றா மயிர் சுருள்களை விரல்களினால் உருட்டிக் கொண்டிருந்தாள். அந்த தரித்திரம் பிடித்த கார் இன்னும் அங்கேயே நின்றது. கடைசியில் ஒருவாறாக அது கிளம்பியதும் பத்மலோசனி இவர்களை நோக்கி ஓடிவந்தாள்.

அவளைப் பார்த்த இரண்டு சிநேகிதிகளும் திகைத்து விட்டார்கள். நல்ல சாப்பாட்டினால் உண்டாகும் ஒரு இன்ச் சதை அவள் உடம்பு முழுக்க மூடியிருந்தது. ஒரு நாளைப்போல மாட்டும் செருப்புக்கு பதிலாக முன்பக்கம் கூர்மையாக்கப்பட்ட, வார் வைத்து குதி உயர்த்திய கறுப்பு சப்பாத்தை அவள் அணிந்திருந்தாள். வழக்கமான கோதுமை மா அவித்த மணம் அப்போது எழும்பவில்லை. ஒரு புதுவிதமான சென்ற் வாசம் பரவியது. புது ஆடை மணமும், பிளேன் மணமும், கொஞ்சம் கனடா மணமும் அங்கே வீசியது. எல்லோரும் கட்டிப்பிடித்து ஒரு சொட்டு அழுதார்கள். சிறிது சந்தோஷப்பட்டார்கள். பிறகு மூக்கை சிந்தினார்கள்.

அவள் தான் வாங்கிவந்த சாமான்களை எல்லாம் எடுத்து பரப்பி வைத்தாள். வாசனைத்திரவியம், பவுடர், உதட்டுச் சாயம், நகப்பூச்சு என்று அத்தனையும் கிடைக்கமுடியாத அபூர்வ பொருட்கள். நெற்றிப்பொட்டுக்கூட வாங்கியிருந்தாள். கனடாவில் நெற்றிப்பொட்டும் செய்கிறார்களா என்று ஒருத்தி விசாரித்தாள். இன்னொருத்தி வெளிநாடு என்றாலே ஒரு மவுசுதான் என்றாள்.

‘இது என்னடி ? கறுப்பாய், நீட்டாய் வலைபோல ? ‘

‘இதுதான் நைலோன்ஸ். இதைப் போட்டுக்கொண்டுதான் அங்கே எல்லோரும் வெளியே போவார்கள். அப்படியில்லை. அப்படியில்லை. இப்படி தொடைமட்டும் இழுத்துவிடவேண்டும் ‘ என்றாள்.

இரண்டுபேரும் அவள் மேலே விழுந்து தொடையிலே கிள்ளிவைத்தார்கள்.

எல்லா ஆரவாரமும் அடங்கிய பிறகு பத்மலோசனி ஒரு பொக்கிஷத்தை எடுப்பதுபோல ஒன்றை எடுத்தாள்.

‘இஞ்ச பாருங்கோடி. இது சீப்பு இல்லை. சோப்பு இல்லை. முகம் பார்க்கும் கண்ணாடி இல்லை. விக்டோரியா சீக்கிரட்டில் வாங்கிய பிரேஸியர்ஸ். விலையை படியுங்கோ. அதில் 39.95 என்று போட்டிருக்கு. ரூபாய் இல்லை. டொலர்ஸ். பெரிய பெரிய ஹொலிவுட் நடிகைகள் எல்லாம் இதைத்தான் அணிவார்களாம். ‘

அதிர்ஷ்டமற்ற இரண்டு சிநேகிதிகளும் ஆவென்று வாயை பிளந்து பார்த்துக்கொண்டு நின்றார்கள்.

‘இது மாங்காய் புடுங்குவதற்கோ, தேங்காய் உரிப்பதற்கோ போட்டுக்கொண்டு போகிற சமாச்சாரம் இல்லை. உண்மையான பெரிய விசேஷங்களுக்கு மட்டுமே அணியவேணும். இந்தாடி உனக்கு சின்ன சைஸ். எடியே! உனக்கு இரண்டு சைஸ் பெரியது. ‘

பாதி எலுமிச்சம் பழம்போல மார்பு உடையவள் ‘ஏன்டி, இரண்டு சைஸுக்கும் விலை ஒண்டுதானா ? ‘ என்றாள். அவள் தன்னுடைய பிராவை கையிலே தூக்கி மணி போல ஆட்டிக்கொண்டிருந்தாள்.

‘ஸ்டுபிட், இது என்ன பானையா, சருவமா ஒவ்வொரு சைஸுக்கும் ஒவ்வொரு விலைபோட ? எல்லா சைஸுக்கும் ஒரே விலைதான் ‘ என்றாள் பத்மலோசனி.

‘ஐயோ, அப்படி என்றால் எனக்கு நீ இரண்டு சைஸ் பெரிதாக வாங்கி இருக்கலாமே. நான் வளர வளர வைத்து போடுவேன் ‘ என்று முறையிட்டாள்.

‘சீ, மூதேவி, ஆசையை பார் ‘ என்று தாடையில் இடித்தாள் பெரிய மார்புக்காரி.

மூன்று நாட்களாக அவர்கள் வேறு ஒன்றுமே பேசவில்லை. ஒரே கனடாக் கதைதான். கேட்டு கேட்டு அலுக்கவில்லை. இவர்களுக்கு எல்லாமே புதுமையாக இருந்தது. சில கதைகளை இன்னொருமுறை கூறும்படி அவளை கெஞ்சி கேட்டார்கள். அவளும் கொஞ்சம் நடப்பு காட்டிவிட்டு பிறகு சொல்வாள். நயகரா நீர்வீழ்ச்சியிலோ, சி.என் கோபுரத்திலோ, ஸ்கைடோமிலோ அவர்களுக்கு ஆர்வமில்லை. மைதிலி பற்றி கேட்கவே ஆசையாயிருந்தது.

‘உண்மைதானே சொல்லடி, மைதிலி மொடலாகப் போகிறாளா ? ‘

‘அவள் மொடலிங் படிக்கத்தான் ஆசைப்படுகிறாள். அவளுடைய தகப்பன் அவள் என்ன சொன்னாலும் கேட்பார். இரண்டு விளம்பரப் படங்களில் ஏற்கனவே நடித்துவிட்டாள் ? ‘

‘அப்படி அழகா ? ‘ என்றாள் ஒருத்தி. அவள் குரலில் ஏக்கம் தொனித்தது.

‘அவளுடைய கலர் எங்களுடையதைப்போல வெள்ளை இல்லை. அவள் நடுக்கறுப்பு. அந்த நிறத்துக்காக அங்கே கொலைகூடச் செய்வார்கள். அவ்வளவு மதிப்பு. அவளுடன் மோலுக்குள் நடந்துபோனால் ஆட்கள் திரும்பிப் பார்த்தபடியே போவார்கள். ‘

‘ஏன்டி, நீ ஒரு மாதம் இருந்திருக்கிறாய். நீ அங்கே பார்த்த மறக்கமுடியாத ஆச்சரியம் என்ன ? ‘ என்றாள் பெரிய மார்புக்காரி.

‘அங்கே பெண் தபால்காரிகள் இருக்கிறார்கள். ‘

‘அது என்ன பெண் தபால்காரி. தபால்காரி என்றால் பெண்தானே. வேறு என்ன ? ‘

‘ரோட்டு கூட்டும் மெசின். இரவிரவாக வந்து ரோட்டைக் கூட்டிவிடும். காலையில் பார்க்கும்போது ரோட்டுகள் பளிச்சென்று இருக்கும். ‘

எல்லோரும் பெருமூச்சு விட்டார்கள். அணில்கள் அவர்களுக்கு நெருக்கமாக வந்து பொறுக்கி சாப்பிட்டன. ஒருத்தி மெல்லிய குரலில் கேட்டாள்.

‘ஏன்டி, உன்ரை மைதிலிக்கு காதலன் இருப்பானோ ? ‘

‘அங்கே அவளை மைதிலி என்று கூப்பிட முடியாது. அவள் பெயரை சுருக்கி ‘மித் ‘ என்றுதான் கூப்பிடுகிறார்கள். மித் என்றால் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது என்று பொருள். அவள் அழகும் அப்படித்தான். ‘

‘சொல்லடி, அவளுக்கு லவர் இருக்கிறானா ? ‘

‘பலர் இருந்தார்கள். ‘

‘அப்ப ? ‘

பத்மலோசனி ஒர் மர்மப்புன்னகையை செய்து மொனலிசா போல மெளனமாகிவிட்டாள்.

இருவரும் அவள் மீது பாய்ந்து விழுந்தார்கள். அவளைப் பிடித்து அமுக்கினார்கள். அவள் ‘ஆவூ ‘ என்று காயம்பட்ட விலங்குபோல கத்தினாள். அணில்கள் பிய்த்துக்கொண்டு ஓடி மறைந்தன.

‘நான் சொல்லமாட்டன். அது ரகஸ்யம். ‘

‘புரொமிஸ், புரொமிஸ் ‘ என்றார்கள் இருவரும்.

மித்துக்கு ஒரு காதலன் இருக்கிறான். முழுக்க முழுக்க வெள்ளைக்காரன். அவன் ஒரு நாள் அவளை வெளியே கூட்டிப்போவதற்கு வந்திருந்தான், கண்ணைச் சுற்றி காது வரைக்கும் வளைந்த கறுப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு. அவனுடைய பெயர் பொறித்த இலக்கத் தகடு உள்ள கார் அவனிடம் இருந்தது. பத்மலோசனியும் அவர்களுடன் வரவேண்டும் என்று மித் அடம்பிடித்தாள்.

‘நான் எப்படி வருவேன். நீங்கள் இரண்டு பேரும் ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பார்த்துக்கொண்டு இருப்பீர்கள். நான் எதற்கு நடுவே, ஹலொவீன் பூசணிக்காய் போல ‘ என்று சொன்னாள் பத்மலோசனி.

‘அதென்னடி பூசணிக்காய் ? ‘

‘என்னவோ பூசணிக்காய். மித் எனக்காக ஒரு புது டிரஸ்கூட வாங்கியிருந்தாள். என்ன செய்யமுடியும் ? அதைப் போட்டுக்கொண்டு நானும் அவர்களுக்கு பின்னால் இழுபட்டேன். ‘

அன்று மித் உடுத்திய உடைபோல ஒன்றை பத்மலோசனி தன் வாழ்நாளில் பார்த்ததில்லை. மெல்லிய பட்டுத் துணியினால் தயாரிக்கப்பட்ட விலை உயர்ந்த ஆடை அது. ஆயத்த ஆடையாக வாங்காமல், கைதேர்ந்த தையல்காரரால் அளவெடுத்து செய்யப்பட்டது. சிறு காற்றுக்கும் அசைந்து கொடுக்கும் அந்த உடை, மிக நுட்பமான வேலைப்படுகளை அதன் தோள்மூட்டிலே கொண்டிருந்தது. எவ்வளவுதான் உயர்ந்ததாக படைக்கப்பட்டிருந்தாலும் அந்த ஆடை மறைக்க உத்தேசித்திருந்த அவள் உடலின் அழகு அதையும்விட பன்மடங்கு வசீகரத்துடன் இருந்ததாகவே பத்மலோசனிக்கு பட்டது.

அந்த வெள்ளைக்கார காதலன் அவர்களை ஓர் ஐந்து நட்சத்திர ஹொட்டல் உணவகத்திற்கு அழைத்துப் போனான். அது பளபளவென்ற மார்பிள் தரையையும், பனை உயரம் எட்டும் திரைச்சீலைகளையும் கொண்டிருந்தது. நீண்ட வெண்கல சங்கிலிகளில் தொங்கிய பாரமான சரவிளக்குகள் மெல்லிய ஒளியை பாய்ச்சின. அவையினுடைய பிரம்மாண்டத்துக்கும் அவை வீசிய ஒளிக்கும் சம்பந்தமே இருக்கவில்லை.

தூய வெள்ளை மேசை விரிப்பின் நடுவில் மலர் அலங்காரமும் அதைச் சுற்றி நாலு நீண்ட வைன் கிளாஸ்களும் இருந்தன. ஹொலிவுட் அழகி போன்ற ஒரு பரிசாரகி மெல்லிய சிவப்புத் தோல் மெனு அட்டையை அவர்களிடம் கொண்டுவந்து கொடுத்தாள். அது பாதி ஆங்கிலத்திலும் பாதி பிரெஞ்சிலுமாக இருந்தது. காதலர்கள் ஏதோ புரியாத உணவு வகைகளை ஓடர் பண்ணினார்கள். பத்மலோசனி தன் பங்குக்கு ஒரு பதார்த்தத்தை சுட்டிக்காட்டி அதற்கு ஆணை கொடுத்தாள். அதை தெரிவு செய்த காரணம் அதில் அவளுக்கு தெரிந்த இரண்டு வார்த்தைகள் இருந்ததுதான், ‘முட்டை ‘ மற்றது ‘சாதம் ‘.

உணவுகளுக்கு விலைப்பட்டியல் போட்டிருக்கவில்லை. உண்மையான உயர்ந்த உணவகங்களில் விலைப்பட்டியல் இராது என்று மித் பின்னால் பத்மலோசனிக்கு விளக்கினாள். உணவுப்பிரியர்கள் உணவைத்தான் பார்ப்பார்களாம், விலையை அல்ல.

காதலர்கள் தங்கள் உலகத்தில் சஞ்சரித்தார்கள். பத்மலோசனி இரு கைப்பிடிகள் வைத்த சொகுசான உயர்ந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். அப்படி அவள் இருந்தாலும் அந்த வெளியை நிறைத்த உணர்வே அவளுக்கு இல்லை.

பத்மலோசனியின் பிளேட்டை கொண்டு வந்து மேசையிலே வைத்துவிட்டு பளபளவென்று மினுங்கும் மூடியை ஒரு மந்திரவாதியின் கைவேகத்தில் அகற்றினாள் சேவகி. சிறிய சோறு. மஞ்சள் வடிவத்தில் ஏதோ ஒன்று. பூப்போல சீவி அழகுபடுத்திய பீட்ருட். பச்சை வடிவத்தில் சிறு துண்டுகளாக வேகவைத்த அஸ்பரகஸ். இன்னும் நடுவிலே அவித்து வைத்த முட்டை. அந்த சாதாரண முட்டைகூட அழகாகத்தான் இருந்தது.

இடது கையிலே பத்மலோசனி முள்ளுக்கரண்டியை பிடித்தாள். வலது கையிலே கத்தியை தூக்கினாள். அந்த அவித்த முட்டையையே அவள் பார்த்துக்கொண்டு இருந்தாள். அது சுற்றிவர வெள்ளையாக இருந்தது. நடுவிலே கொஞ்சம் மஞ்சள் தெரிந்தது. அதை எங்கே இருந்து ஆரம்பிக்கலாம் என்ற சிந்தனையில் அவள் மூழ்கியிருந்தபோது, ஞாபகத்திலே இருந்து விடுபடாமல் இருப்பதற்கு காரிலே தன் பெயரை எழுதிவைத்த அந்த காதலன் ஒரு காரியம் செய்தான். அங்கே இருந்த அத்தனை விருந்தினர்களுக்கு முன்னும், பரிசாரகிகளுக்கு முன்னும், பத்மலோசனிக்கு முன்னும், அவள் சாப்பிட உத்தேசித்திருந்த முட்டைக்கு முன்னும் அவன் அதைச் செய்தான். அந்த முட்டையில் இருந்து திடாரென்று ஒரு கோழிக்குஞ்சு வெளியே வந்து பறந்து போயிருந்தால்கூட பத்மலோசனி அவ்வளவு ஆச்சரியப்பட்டு இருக்க மாட்டாள்.

அந்த காதலன் ஒரு முழங்காலில் மித்தின் முன் உட்கார்ந்து அவள் விரல்களைப் பிடித்தான். பிறகு ஆங்கிலப் படங்களில் வருவது போன்ற ஒரு ஆடம்பரமான வாசகத்தை பேசினான்.

‘நீ பக்கத்தில் இல்லாதபோது என் சுவாசம்கூட முழுதாக வருவதில்லை. இந்த உலகில் வாழும் அத்தனை ஜீவராசிகளிலும் நான் மிக்க மகிழ்ச்சியுடையவனாக இருப்பேன் என்னிடம் எஞ்சியிருக்கும் வாழ்நாளை நீ என்னுடன் சேர்ந்து கழிக்க சம்மதித்தால். என் அன்புத் தேவதையே! தயவுசெய்து சரியென்று சொல் ‘ என்று இறைஞ்சியபடியே ஒரு பளபளக்கும் மோதிரத்தை நீட்டினான்.

மித்தின் கண்களில் நீர் கட்டியது. சரி, சரி என்று சொல்லியபடியே அவன் கழுத்தை சுற்றி வளைத்துப் பிடித்து உதட்டிலே முத்தம் கொடுத்தாள். அவன் விடுபட்டு மூச்சு விடுவதற்காக நிமிர்ந்தபோது விரல்களால் அவன் பிடரியை மீண்டும் வளைத்து மீதி முத்தத்தை தொடர்ந்தாள்.

அப்பொழுது இரண்டு பரிசாரகிகளும், இன்னும் பக்கத்து மேசை விருந்தினர்களும் எழும்பி நின்று கை தட்டினார்கள்.

‘நீ என்னடி செய்தாய் ? ‘

‘நான் என்ன செய்ய. என் பசியை தீர்ப்பதற்கு ரெடியாயிருந்த அந்த முட்டையை பார்த்துக்கொண்டு இருந்தேன் ‘ என்றாள்.

அவர்கள் விட்ட பெருமூச்சுகள் எல்லாம் சுற்றியிருந்த காற்றின் கனத்தை கூட்டின. அங்கே மெளனம் நிலவியது. புளிய மரத்தில் இருந்து பூ உதிரும் சத்தம்கூட அப்போது கேட்டது.

‘உண்மையாகவே அவன் உதட்டில் முத்தமிட்டாளா ? ‘ ஏக்கமாகக் கேட்டாள் எலுமிச்சம்பழ மார்புக்காரி.

அவ்விடத்தில் கொஞ்சம் பொறாமை முளைவிட்டது. பத்மலோசனி ஆழ்ந்த யோசனையில் தலையில் ஒரு விரலை வைத்தபடி இருந்தாள். சாலையில் சிவப்பு விளக்கு மாறுவதற்கு நிற்பதுபோல அந்த யோசனை அவர்களைக் கடந்து போகும்வரை காத்திருந்தார்கள்.

திடாரென்று ‘என்னடி தலையை சொறியிறாய்! பேன், பேன் ‘ என்றபடி இருவரும் அவள் மேல் பாய்ந்தார்கள். மிகவும் விலை உயர்ந்த போல்மிஷேல் கூந்தல் ஸ்பிரே அடித்து அழகாக வாரப்பட்டிருந்த அவளுடைய தலைமயிரை இழுத்துப்பிடித்து அலங்கோலம் செய்தார்கள். ஒருத்தி பெரிய வாய்க்கால் வெட்டுவதற்கு தயார் செய்வதுபோல அவளுடைய உச்சியை சாவகாசமாக பிரித்தாள். மற்றவள், மயிர் கற்றைகளை விரல்களினால் ஒதுக்கி மண்டைச் சருமம் தெரியும் வரை இழுத்து வைத்து தேடினாள்.

‘அங்கே, அங்கே ‘ என்றாள் ஒருத்தி. அந்த வெளிநாட்டுப் பேன் மிக லாவகமாக அவர்களுடைய துரிதமான விரல்களுக்கு அகப்படாமல் அந்த மயிர் கால்களுக்குள் ஓடி மறைந்தது.

‘என்ன தளுக்கு, என்ன தளுக்கு ‘ என்றாள் ஒருத்தி.

‘ம் ‘ என்று பெருமூச்சு விட்டாள் மற்றவள்.

****

muttu@earthlink.net

Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்