அரசூர் வம்சம் – அத்தியாயம் ஒன்பது

This entry is part of 34 in the series 20030607_Issue

இரா முருகன்


ராஜா அரண்மனையின் முன் வசத்தில் இருக்கப்பட்ட விசாலமான மண்டபத்துக்கு நடந்தபோது நீள ஒழுங்கையில் காரை பெயர்ந்து அவர் காலடியில் விழுந்தது.

காரைக் கட்டியை ஓரமாகக் குனிந்து நகர்த்திக் கொண்டிருக்கும்போது காலில் பாதரட்சை இல்லாதது நினைவு வந்தது.

யாரங்கே ?

ராஜா குரல் கொடுத்தார்.

ராணிக்கு விசிறிக் கொண்டிருந்த சேடிப்பெண்ணைத் தவிர வேறு யாரும் அங்கே கூப்பிடு தூரத்தில் இருக்க முடியாதுதான்.

ஆனால், முத்தம்மா என்று அவளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வேலை ஏவுவது ராஜாவுக்கு விதிக்கப்பட்ட கெளரதையான செயல் இல்லை.

என்ன வேணும் ?

முத்தம்மா கழுத்து வியர்வையைப் புடவையில் துடைத்தபடி கேட்டுக் கொண்டே வந்தாள்.

ராஜா கூப்பிட்டால் கீழடங்கியதுகள் ஓடி வந்து சேவித்து வினயமாக வாய் பார்த்து இருக்கிற காரியம் இல்லைதான் இது.

ஆனால் இந்தச் சேடிப்பெண்ணைக் கோபிக்க முடியாது. வீட்டு விலக்கு நின்று கொண்டிருக்கும் ராணிக்கு சதா வரும் முன்கோபமும் சலிப்பும் இவளுக்கு வருவதில்லை. அவ்வப்போது புழங்க அனுமதிக்கிறபோது அவளுக்குத் தானே அந்தப் பொழுதுகளுக்கான ராணியாகிற சந்தோஷம் இருப்பதே காரணம்.

ராஜா அவள் காலைப் பிடித்துவிட ஒருதடவை ஊஞ்சலில் படுத்து ஓய்வெடுத்திருக்கிறாள். ராணி தூங்கிக் கொண்டிருந்த இம்மாதிரியான பகல் பொழுது அது.

என்ன வேணும்னு கேக்கறேன் இல்லே.

ராஜாவின் நரைமீசையை குதிரை லகான் போல் விளையாட்டாக இழுத்தபடி அவள் திரும்பக் கேட்டாள். இப்போதும் தன்னை ராஜா மடியில் இருத்திக் கொண்டால் இன்னொரு முறை கால் பிடித்து விடச் சொல்லி உத்தரவு போட்டு விட்டுக் கொஞ்சம் தூங்கலாம் என்ற அசதியும் எதிர்பார்ப்பும் கண்ணில் தெரிந்தது.

என் பாதரட்சை எங்கே தொலைஞ்சு போச்சு பெண்ணே ? தேடி எடுத்து வா. சமூகம் கேட்டு வந்தவர்களைச் சந்திக்கப் போகும்போது வெறுங்காலோடு போவது உசிதமில்லை என்று உனக்குத் தெரியாதா என்ன ?

அவள் ஏதோ ரண வேதனை அனுபவிப்பது போல் முணுமுணுத்தபடி உள்ளே போனாள்.

ராஜா அந்த முன் மண்டபத்தில் சுவரில் சாய்ந்து ஒரு மரப்பலகையில் அமர்ந்தார்.

சுற்றிலும் காரை பெயர்ந்த சிதறல்கள்.

கொத்தனை வரச் சொல்லிப் பத்து நாளாகிறது. மராமத்துக் காணாமல் அரண்மனையே க்ஷீணித்துப் போய்க் கொண்டிருக்கிறது.

காசு கொடுத்தால் கொத்தனும், சித்தாளும், நிமிர்ந்தாளுமாக ஒரு பட்டாளமே வரும். இந்த ஓட்டை அரண்மனையை சீர்படுத்துவதென்ன, புத்தம் புதுசாக வெள்ளைச் சுண்ணாம்பும், கோழி முட்டையும், சீமைச் சாந்தும் குழைத்துப் பிரம்மாண்டமாகத் தூண் நிறுத்தி ஒரு பெரிய பங்களாவே நிர்மாணித்து விடமுடியும்.

யாரும் எந்தப் பக்கத்திலும் ஒளிந்திருந்து பார்க்காமல் சுபாவமாக மனம் உற்சாகம் கொள்ளும் வரை ராணி நீராடித் திரும்ப நாலு பக்கத்திலும் பக்கப் பதிய மேற்கூரையோடு குளத்தையும் அமைத்து விடலாம்.

சொன்னால் கிரகித்துக் கொண்டு வேண்டியபடி எல்லாம் நிர்மாணித்துக் கொடுக்க நாடிக் கொத்தனும் அங்கமுத்துக் கொத்தனும் இருக்கிறார்கள்.

ஆனால் கொத்தனார்களுக்குப் பதிவாக வாரத்துக்கு ஒண்ணரை ரூபாயாவது கூலியாகக் கொடுக்க வேண்டும். நிமிர்ந்தாளுக்கு அதில் அரையே அரைக்கால் பாகம். சித்தாளுக்கு கால் பாகம் கூலி.

முழுக்கப் பணமாகக் கொடுக்க முடியாது போனால், பாதிக்குப் பாதி பணமும், மீதிக்கு நெல்லுமாகத் தரலாம். கும்பிடு போட்டுவிட்டு வாங்கிப் போவார்கள்.

ஆனால் இருக்கிற நெல்லைத் தின்று தீர்க்க இங்கேயே ஸ்திரமாக சொந்த பந்தம் என்று ஒரு கூட்டம் அரண்மனைக்குள் இருக்கிறது. போன சாகுபடிக்குக் குடியானவர்கள் கொண்டு வந்து அளந்து போனது இத்தனை நாள் நீடித்திருந்ததே அதிசயம் தான்.

மழையே இல்லாம வரண்டு போய்க் கிடக்குது. இந்த வருஷம் இதுவும் வராது.

போன வாரம் கிராமங்களைக் கண்டு வரப் போயிருந்த காரியஸ்தன் சொன்ன சமாச்சாரம் கவலையை அதிகப்படுத்துகிறதே ஒழிய ஆசுவாசத்தைத் தரவில்லை.

உள்ளதுக்கே அல்லாடிக் கொண்டிருக்கும்போது இந்த பனியன் சகோதரர்கள் வேறே.

என்னத்துக்காக வந்திருக்கிறான்கள் ?

நான் தானே நினைத்துக் கொண்டு அவர்களைக் கூப்பிட்டேன். தப்புதான். கம்பங்களி சாப்பிடும் ஆனந்தத்தில் அவர்களை மனதில் அழைத்து பங்களா பற்றி வெற்றுப் பேச்சு பேச நினைத்திருக்க வேண்டாம்.

நல்ல வாய்க்கு ருசியான சாப்பாடும், காதுக்கு இனிமையான சங்கீதமும் மனதை நிலை தடுமாறச் செய்து போடுகிறது.

அரைக்கட்டில் உப்பு சரியாக முடிந்து வைத்திருக்கிறதா என்று பார்த்துக் கொண்டார் ராஜா.

ஆறு மாசக் கர்ப்பிணி போல் ஏற்கனவே பெருத்த வயிறோடு ஒட்டி சின்னக் குவியலாக உப்பும் இடுப்போடு ஒட்டி நறநறத்துக் கொண்டிருந்தது.

அகஸ்மாத்தாகக் கண்டுபிடித்தது தான்.

போன தடவை இவன்கள் வந்தபோது கம்பங்கூழில் உப்புப் போட மறந்து போனான் இழவெடுத்த சமையல்காரன்.

அந்தப் புழுத்த நாயை நாலு தலைமுறைக்குத் திட்டித் தீர்த்து, உப்புக் கொண்டு வரும்படி ஆக்ஞாபித்தார் ராஜா.

அவனோ சமுத்திரக் கரைக்கே போய் உச்சி வெய்யிலில் உப்பளத்தில் பூக்க வைத்து எடுத்து வந்ததுபோல் வெகுவாக நேரம் கழித்து உப்பு ஜாடியோடு வந்து சேர்ந்தான்.

ஆட்டுப் பட்டியில் அதுகளோடு கூடி இருந்து சுகிக்கப் போயிருந்தாயோடா களவாணி ?

சமையல்காரனைக் கடிந்து கொண்டு ஒரு சிட்டிகை வலது கையில் அள்ளிக் கொண்டிருக்கும்போது வாசலில் இதுபோல் பனியன் சகோதரர்கள் வந்து நின்று அழைத்தார்கள்.

கூழ் ஆறிப் போயிருக்கு. திரும்பச் சூடாக்கிக் கொண்டுவா. நான் இவர்களோடு சல்லாபம் செய்துவிட்டு வருகிறேன்.

அவன் உப்பு ஜாடி ஒரு கையிலும் கம்பங்கூழ் இன்னொன்றிலுமாக சலித்துக் கொண்டு உள்ளே போனான்.

இந்த உப்பை என்ன பண்ணுகிறதாம் ?

ராஜா அவனைக் கூப்பிடலாமா என்று யோசித்து வேண்டாம் என்று வைத்து அந்த உப்பை இடுப்பில் முடிந்து கொண்டு வெளி மண்டபத்துக்கு வந்தார்.

அன்றைக்கு இவராகச் சொல்லாமல் அவன்கள் எதையும் பற்றி முந்திக் கொண்டு பேச ஆரம்பிக்கவே இல்லை. அவர் நினைப்பது அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது என்ற விஷயமே ஆசுவாசத்தை அளிக்கப் போதுமானதாக இருந்தது ராஜாவுக்கு.

நிலைப்படிக்கு மேலே புதுசாகச் சாந்து குழைத்துப் பூசலாமே என்று மட்டும் யோசனை சொன்னார்கள் பனியன் சகோதரர்கள் அன்று.

அது ராஜா நடந்து வரும்போது காரை பெயர்ந்து உதிர்ந்ததைப் பார்த்ததால் இருக்கும்.

புதுசாகவே ஒரு நல்ல வளப்பான பங்களா எழுப்பலாம். இந்த வருஷம் பருவம் தப்பாமல் மழை பெய்து விளைகிற தானியம் எல்லாம் அமோகமாக விளைந்து கன்றுகாலியெல்லாம் தழைத்துப் பெருகினால், கிஸ்தி கொடுத்ததுபோக மிச்சப்படும் பணத்தில் அரண்மனையை ஒட்டியே புதுசாக இன்னொண்ணு எழுப்பி விடலாம். பெரிய தூண். மதுரையில் நாயக்கர் மஹாலில் இருக்கிறது போல் வழவழத்துப் பெரிசாக எழும்பி.

ராஜா சின்ன வயதில் தனக்குப் போக வித்தை சொல்லிக்கொடுத்த செண்பகவல்லியின் தொடைகளை நினைத்துக் கொண்டார் அப்போது. ஆனாலும் அதைப் பனியன் சகோதரர்கள் கவனித்து எங்களுக்கு நீ என்ன நினைக்கிறாய் என்று தெரியுமே என்ற கள்ளக் குறிப்புப் புலப்பட வார்த்தையாடவில்லை.

உப்பின் மகத்துவம் தான் எல்லாம். மனதில் இருப்பதை இவன்கள் தெரிந்து கொள்ளாமல் இருக்க ஏதாவது சாதனம் கூடி உருவாக்கவோ மந்திர தந்திரம் செய்து இடுப்பில் அரைஞாண்கொடியில் தகடு அடித்து அணிந்து கொள்ளவோ முடியுமானால் நன்றாக இருக்கும் என்று அவர் நினைத்தது அத்தனை எளுப்பமாக ஒரு சிட்டிகை உப்பை மடியில் முடிந்து கொள்வதால் நடக்கக் கூடும் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை.

புது அரண்மனை பற்றி அவர்களோடு அன்று பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியாமல் சமையல்காரன் நாலு தடவை கம்பங்களி கிண்டி எடுத்து வைத்து அலுத்துப் போய் சமையலடியிலேயே நித்திரை போய் விட்டான்.

புது அரண்மனையில் வசதியான காற்றோட்டமான அறைகள் இருக்கும். விசாலமான முற்றத்தில் மல்லர்கள் யுத்தம் செய்து ராஜாவுக்கு ராத்திரி படுக்கப் போவதற்கு முன் உற்சாகம் ஊட்டுவார்கள். வெளி தேசங்களில் இருந்து வெள்ளைக்காரத் துரைசானிகள் உடுப்பைக் களைந்து விட்டு ஆடி மகிழ்வித்து அந்தப்புரத்துக்கு அனுப்புவார்கள். சும்மா படுக்கப் போனாலும் ஒரு கெத்தோடு உள்ளே நுழையலாம்.

அந்த முற்றத்தில் உள்ளூர் வீணை, குழல் வித்துவான்கள் விஸ்தாரமாக வாத்தியம் வாசித்துத் திறமையைக் காட்டுவார்கள். பாரசீகத்திலிருந்து அபூர்வமான கலைஞர்கள் வருவார்கள். வயிற்றில் நிறையத் தக்க வைத்துக் கொண்டு அபானவாயு வெளியேற்றும்போது அதில் நூதனமான இசையை உண்டாக்கிக் காட்டுகிற வித்துவான்கள் அவர்கள்.

யமகம், பின்முடுகு, முன் புடுகு, திரிபு என்றெல்லாம் எழுத்தெண்ணிக் கிண்ண முலைக் கிண்ண முலைக் கிண்ண முலைக் கிண்ண என்று நீட்டி முழக்கிப் பாடி சிருங்கார ரசம் துளும்பப் பதம் பிரித்துப் பொருள் சொல்லும் வித்துவான்களோடு சல்லாபம் செய்யலாம்.

இதைச் சொன்னபோது பனியன் சகோதரர்கள் தங்களுக்குள் ஒருதடவை பார்த்தபடி மெல்லச் சிரித்தபடி, நாட்டியமாடும் பெண்களோடு சல்லாபம் செய்தாலும் பொழுது இன்பமாகக் கழியும். வத்தலும் தொத்தலுமாக இருக்கும் புலவனோடு என்னத்துக்கு அதைச் செய்வானேன் என்று கேட்டார்கள்.

அவர்கள் காலத்தில் சல்லாபம் என்பதற்கு சம்பாஷணை என்ற பொருள் இல்லாமல் போயிருக்கிறதாம்.

கலிகாலம் என்றார் முன்னோர் பாணியில் ராஜா.

உங்கள் காலத்து செளகரியங்கள் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். புது பங்களாவில் அமைத்து விடலாம்.

ராஜா சொன்னார். வயிறு நிறைந்த திருப்தியில் வெறுங்கையில் முழம்போட சுகமாக இருந்தது.

புது பங்களாவில் வீட்டுக்குள்ளேயே மலசலங் கழிக்கக் கழிவறை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று அப்போது பனியன் சகோதரர்கள் யோசனை தெரிவித்தார்கள்.

அது அசங்கியமானது. ஆரோக்கியக் குறைச்சலும் கூட என்று சொல்லிவிட்டார் ராஜா.

என்னதான் அவருக்கு ஐம்பது வருடம் கழித்து வருவதாக இருந்தாலும் அந்த மாதிரி ஆபாசத்தை எல்லாம் புத்தி வளர்ச்சியின் சின்னமாக ஊருக்கு முன்னால் ஸ்தாபித்து எல்லோருடைய இளக்காரத்தையும் வாங்கிக் கட்டிக் கொள்ள அவர் தயாராக இல்லை.

பனியன் சகோதரர்கள் புது அரண்மனை நிர்மாணிப்பது பற்றிப் பேச இன்னும் நிறையத் தகவல்களோடு வருவதாகச் சொல்லிப் போனார்கள் அப்போது. கூடவே மலையாளக் கரைக்குப் பயணம் போய் வருவது குறித்தும்.

இப்போது தன்னைப் பார்த்ததும் மலையாளக் கரை பற்றி அவன்கள் ஆரம்பிப்பார்கள். ரகசியமாகக் கூடக் கூட்டிப் போய் மார்பு வளப்பம் பார்த்துக் கொண்டிருக்கும்போது பின்னாலிருந்து கழுத்தை நெறித்துக் கொன்று போட்டு மடியில் பணம், இடுப்பில் தங்க அரைஞாண், கழுத்தில் சொர்ணமாலை, காதில் எண்ணெய் ஏறிய கடுக்கன் என்று எல்லாவற்றையும் பறித்துப் போவார்களோ.

ராஜா வைரம் ஏறிய தன் தோளைப் பார்த்துக் கொண்டார். இந்த சோனிப் பயல்கள் ஊதினால் விழுந்து விடுவான்கள்.

மலையாளக் கரை பற்றி இப்போது பேச வேண்டாம். ராணி பிறத்தியான் பார்வையில் படாமல் உடம்பு சுத்தி செய்து கொள்ள ஏற்பாடு செய்து தர வேண்டியது பற்றி வேண்டுமானால் அவர்களுடன் பேசலாம்.

மடியில் உப்பு இருக்கிற படியால் ராணியின் பருத்த முலைகளையும் வசீகரம் தீர்ந்து கொண்டிருக்கும் நக்னம் பற்றியுமான தன் யோசிப்புகளைப் பனியன் சகோதரர்கள் அறியாமலேயே போகட்டும்.

பாதரட்சை கொண்டு வர இத்தனை நேரமா ?

சமையல் காரன் உப்புக் கொண்டு வர நேரம் மிகுந்து போய் அவனைப் போன வாரம் கடிந்து கொண்டது நினைவு வந்தது.

சேடிப் பெண்ணை ராஜா கடித்துக் கொண்டார்.

இப்படிக் கண்ட இடத்தில் கடித்தால் ராணியிடம் சொல்லுவேன். இந்த மாதம் நீங்கள் சம்பளமும் படிப் பணமும் கூடக் கொடுக்கவில்லை இன்னும்.

சேடிப்பெண் நிர்த்தாட்சண்யமாகச் சொல்லவே சட்டைப் பையில் கையை விட்டு ஒரு வெள்ளி நாணயத்தை எடுத்து அவள் மேல் துணிக்கு நடுவே போட்டார் ராஜா.

அவள் நெருங்கி வந்து அவருக்கு வாயில் நெத்திலிக் கருவாடு மணக்க ஒரு முத்தம் ஈந்து விட்டு ராணிக்கு விசிற ஓடினாள்.

ராஜா வாயைத் துடைத்தபடி முன் மண்டபத்தில் எழுந்தருளியபோது பனியன் சகோதரர்கள் எழுந்து நின்று வணங்கினார்கள்.

அதில் மூத்தவன் ஒரு எலுமிச்சம்பழத்தை அவர் கையில் கொடுத்தான்.

ஏதும் மந்திரித்த சங்கதியாக இருக்குமோ என்று நினைத்த ராஜா வேண்டாம் என்றார்.

மரியாதைக்குக் கொடுப்பது இது. வாங்கிக் கொள்ளுங்கள்.

குட்டை பனியன் சொன்னான்.

ராஜா கையில் வாங்கி அந்தப் பழத்தை முகரும்போது முன்னோர்களை நினைத்துக் கொண்டார். அவர்கள் அதற்குள் ஏறி ஏதாவது சொல்ல ஆரம்பிப்பார்கள் என்று தோன்றியது.

அமைதியாக இருந்தது எல்லாம். முன்னோர்களும் அயர்ந்து தூங்கும் வேனிற்காலப் பிற்பகல். அவர்கள் காலத்திலிருந்து யாராவது விசிறி விட்டுக் கொண்டிருப்பார்கள். இல்லை அவர்கள் விசிறியை வாங்கி வைத்து விட்டுக் கால் பிடித்து விட்டுக் கொண்டிருப்பார்கள்.

முன்னோர்கள் இந்த நினைப்பு குறித்து நாளைக்கு கோபப்படலாம். போகட்டும். ஏதாவது சொல்லி சமாளித்துக் கொள்ள வேண்டியதுதான்.

பனியன் சகோதரர்கள் இருக்கத் தோதான கொஞ்சம் உயரம் தாழ்ந்த ஆசனங்களைக் காட்டி அவர்களை அவ்விடம் இருத்திவிட்டு ராஜாவும் தனக்கான இடத்தில் இருந்தார்.

பனியன் சகோதரர்களில் மூத்தவன் ஒரு கறுப்புப் பெட்டியை முன்னால் நகர்த்தினான்.

நூதன ஒப்பாரிகளோடு கூடிய பழுக்காத்தட்டுக்களா ? பக்கத்து வீட்டுப் பாப்பாரப் பிள்ளைகளுக்குக் கொடுக்கக் கொண்டு வந்தது தானே ?

ராஜா விசாரித்தார்.

அவர்கள் பூடகமாகச் சிரித்தார்கள்.

(தொடரும்)

Series Navigation