பறவைப்பாதம் 4

This entry is part [part not set] of 34 in the series 20030607_Issue

எஸ் ஷங்கரநாராயணன்


சட்டைப்பையில் அவளது கையெழுத்தில் அவளது தொலைபேசி எண்… என்பதே தனி உற்சாகம் தருகிறது. ‘இதை ஹெட்மாஸ்டரிடம் குடுத்திறலாமா ? ‘ – ‘அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சே ? ‘ என்றாள் பிருந்தா சிரிக்காமல். ‘எனக்குந்தான் பிருந்தா… ‘ என்று முணுமுணுத்துக் கொண்டார்.

அதற்கும் சிரித்தாள். ‘எனக்கும் ஆயிட்டது மிஸ்டர் ‘

காலம் உருட்டி விட்ட கணங்களில் திசை பிரிந்து தள்ளித் தள்ளி விழுந்து கிடந்தார்கள் அவர்கள். இடையில் ஏ அப்பா, தலைமுறை அகழி… என் பெரிய பிள்ளை பிளஸ்-டூ. சிறியவன் எட்டாவது படிக்கிறான். உனக்கு எத்தனை குழந்தைகள் பிருந்தா ?

இரவில் துாக்கம் வரவில்லை. உறங்கினாலும் கண்ணுக்குள் அந்தப் பாவாடை சட்டை தாவணி பிருந்தா. ரெட்டைச்சடையுடன் கார்த்திகையன்று புடவை கட்டிய பிருந்தா! புடவை கட்டி ரெட்டைச்சடை அணிந்தால் என்னவோ போலிருந்தது.

இளமை அவர்களை ஒரேபோர்வையில் போல பொத்திக் கொண்டது. எனினும் காலம் பிற்பாடு அவர்களைக் கத்தரித்தது… உடனடி நடவடிக்கை என அவர்கள் வகுப்புகள் மாற்றப் பட்டு விட்டன. ஜல்சா என்றால் என்ன என்று கடைசிவரை தெரியவில்லை. அதை எழுதியவன் ஸ்ரீதர். ஹெட்மாஸ்டரிடம் உதைவாங்கி, அவன் அப்பாவிடம் உதைவாங்கி… என சம்பிரதாய அமக்களங்கள். தனியே அவனைக் கூப்பிட்டுப் பேசினான் ராஜகோபால். தனக்கும் அர்த்தம் தெரியாது – என்றான் அவன். பின்ன ஏன்டா அப்டி எழுதினே ? – பொதுவா அப்டிதான் எழுதறது… என்று தன் மானசிக குருவை வணங்கிக் கொண்டே அவன் சொல்கிறான். அவன் குரு யார் தெரியவில்லை. ‘சின்னவயசு அவங்கப்பாவாய் ‘ இருக்கலாம்.

ஆனால் பிருந்தாவின் அப்பா கெட்டவர் அல்ல… என்றுதான் கடைசியில் ஆனது. உலகமே கெட்டதல்ல. நாமும் கெட்டவர்கள் அல்ல… ஒரு உணர்ச்சிப் போக்கில் உதிரம் எகிறி உத்திரத்தில் தட்டித் தெறித்த கணங்கள் அவை. பசிநேரம் பால்குடிக்க கன்றுக்குட்டி தாய்மடியை முட்டுகிறது. அது கோபத்தின் சின்னம் கூட அல்ல.

தனியே அவனையும் அவளையும் கூப்பிட்டு இதமாய்ப் பேசினார் பிருந்தாவின் தந்தை. ‘டேய் படிக்கிற வயசுடா. மனசை அசைய விடக்கூடாது. கவனத்தைச் சிதற விடக் கூடாது… ‘

‘சரி ‘ என்கிறாள் பிருந்தா.

‘சாரி ‘ என்கிறான் அவன்.

‘நாலுவீடு தள்ளியிருக்கே நீ. இவளுக்குப் பாதுகாப்பு மாதிரி இருக்க வேண்டாமா ? இந்த துாரத்துக்கு ஒரு கடிதமா ? நாலுபேர் அசிங்கமாப் பேசிட்டாளோல்யோ… ‘

‘சாரி ‘ என்கிறாள் அவள்.

‘என்னமோ சினிமா கினிமான்னு இப்பல்லாம் எல்லாத்தையும் குழப்பி விட்டுர்றான்கள்… ஒரு ஆண் பொண்ணைப் பாத்தாலே காதல்ன்றான் படவா ராஸ்கல் ‘

– ஜல்சான்னா என்ன மாமா ? – என்று கேட்கத் தோணியது. எந்தப் படத்தில் வருது ? – என்று கேட்பார்.

ராஜகோபாலின் அப்பாவுக்கு வேலையிடம் மாறி அவர்கள் கிளம்பவும் சட்டென்று உலகம் இருண்டு சுருண்டது… காற்று பாயைச் சுருட்டினாப் போல. அவை துயரமான கணங்கள்.

அவளை இனி சந்திக்க முடியுமா தெரியவில்லை. கடிதம்… என நினைக்கவே சிரிப்பு. அது ஒரு வயசு என்னவோ உலகமே கடிதம் போடுவதில் இருக்கிறாப் போல. கடிதம் பரிமாறாத காதல் உண்டா ? பிருந்தாவின் அப்பா சொல்வது சரியாய் இருக்கலாம்… சினிமா கெடுத்துத்தான் விட்டது. படிக்காத ஆட்கள் காதலிக்க மாட்டார்களா ? பார்வையற்றவர்கள் கல்யாண ஆசைப்பட மாட்டார்களா ?

சினிமா பல விபரீதங்களை சமுதாயத்தில் நிகழ்த்தித்தான் விட்டதோ ? சுரிதார் போட்ட பெண்ணை அம்மா என்று சினிமாவில் சொன்னால் எடுபடுவதில்லை. துக்கக் காட்சி என்றால் வயலின் அழுகிறது. வானம் அழுகிறது… எல்லாம் வேண்டியிருக்கிறது. வரவர நாடு கெட்டுப் போச்சு. சிலருக்குக் காலையில் காபி சாப்பிட்டால்தான் வயிறு சுத்தமாகும்!… அதைப் போல.

‘நாங்க ஊர் காலிபண்ணிப் போறோம் மாமா… ‘ என்று, தைரியமாய் பிருந்தாவின் அப்பாவிடம் போய்ச் சொன்னான். ‘ஓகோ ‘ என்றார் அவர். ‘எப்ப ? ‘ என்று விசாரித்தார். ‘தெரியல. கூடிய சீக்கிரம்… அப்பாவுக்கு பெங்களூருக்கு மாத்தியிருக்கு… ‘ என்ன தோணியதோ எழுந்து வந்து அவனை நெற்றியில் முத்தமிட்டார். ‘நீ நல்லபையன். எங்கயிருந்தாலும் நல்லாயிருப்பே ‘ என்றார். அவர் சொல்றாப்ல, சினிமாவில் இதெல்லாம் வருவதில்லை- என்று நினைத்துக் கொண்டான் ராஜகோபால்.

‘பிருந்தா ? ‘ என்று கூப்பிட்டார். வந்தாள். ‘நம்ப ராஜுவோட அப்பாவுக்கு பெங்களூர் மாத்திட்டாங்களாம்… ‘

‘வசுமதி சொன்னாப்பா… ‘ என்றாள் பிருந்தா. அக்காவோடு எப்போதிருந்து சிநேகிதமாய்ப் பேச பழக ஆரம்பித்தாள் தெரியவில்லை.

என்ன தோணியதோ அவர்களைத் தனியே விட்டுவிட்டு எழுந்து போனார் அவர். அவன் அழ நினைக்கிறான். அதுவரை அழக்கூடாது, ஆனால் அழுகைவரும், என நினைத்திருந்தான். அழுகை வரவில்லை. சில கணங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஹா, அவளுக்கு அழுகை வந்தது. பெண்கள்! அவர்கள் இடுப்பில் தண்ணீர்க்குடம் சுமக்கிறதைப் போலவே… கண்ணில் கண்ணீர்க்குடம் சுமக்கிறார்கள்… என நினைத்துக் கொண்டான். நம்ப சேஷாத்ரியிடம் நல்லாயிருக்கா கேட்க வேண்டும்.

கிட்ட வந்தாள். சட்டென்று அவனை… உதட்டில்… ஆமாண்டா ஆமாம், முத்தமிட்டாள். ‘மறக்காதே ராஜு ‘ என்றாள். துடைத்துக் கொண்டபடி ‘ஜல்சா ? ‘ என்றான்.

‘தெர்ல… ஸ்ரீதரோட அப்பாவிடம் கேட்டுக்கோ… ‘

‘என் கவிதை நல்லாருக்கா சேஷாத்ரி… ‘

‘பாரதியாரா ? ‘

‘டேய் பாவி அவர்ட்டதான் காபி அடிக்கறியா ? ‘

கொஞ்சம் வெட்கப்பட்டு விட்டு சேஷாத்ரி ஒத்துக் கொண்டான். பாரதியார் ஜல்சா பற்றிச் சொல்லியிருக்கிறாரா… அவனுக்கும் தெரியவில்லை. ‘ஒருமாதிரி… படகோட்டிங்க ஐலஸாம்பாங்க… ‘ என்கிறான் அவன்.

‘நீ எப்டிடா சேஷு கவிதை எழுத ஆரம்பிச்சே ? ‘

‘எங்கப்பா எழுதுவார்! ‘

‘அவரும் பாரதியார் ரசிகரா ? ‘ என்கிறான் ராஜு சிரித்துக்கொண்டே.

—–

ஏன் அழுதாள் அப்படி ? எனக்கு வரவில்லையே… என்றிருந்தது. நான் அழுதிருக்க வேண்டும். சினிமா சில கணங்களை அழுத்துவது போலவே, சில கடுமையான கணங்களையும் மரத்துப் போகச் செய்து விடுகிறது. மிகக் கடுங் கணங்கள் சினிமாவில் சகஜம். துப்பாக்கி இல்லாமல் சினிமா கிடையாது. தொலைபேசி இல்லாமல் வீடு கிடையாது. கற்பழிப்பு இல்லாமல் கிளைமைாக்ஸ் கிடையாது…

இளமை திரும்பி விட்டாப் போல இருந்தது. ஸ்கூட்டரை உதைத்த உதையில் உற்சாகம். எவன் இந்த ஸ்கூட்டரைக் கண்டுபிடிச்சானோ ? போன ஜென்மத்தில் அவன் கழுதையாய் இருந்திருப்பான்!

சினிமாவில் ஹீரோக்கள் ஸ்கூட்டரிலும், வில்லன்கள் பைக்கிலும் வருகிறார்கள்.

நான் வில்லனா ஹீரோவா ?

‘அப்டின்னு உலகத்தில் தனியா யாரும் கிடையாது ‘ என்றாள் பின்சீட்டில் ஈஸ்வரி. ‘நாம சில சமயம் வில்லேனஸ்ஸாவோ சில சமயம் ஹீரோயிக்காவோ நடந்துக்கறோம். லேட்டாயிட்டது… கண்டதைப் பேச வேணாம். ரோட்டைப் பார்த்து ஓட்டுங்க ‘ என்கிறாள்.

‘நீ நல்லவதான். என் பின்சீட்டுக்கு வந்தால் வில்லனா ஆயிடறேடி ‘ என்றார் அவர்.

அலுவலகம் பரபரத்துக் கிடந்தது. மின்சாரம் இல்லை. லிஃப்ட் வேலைசெய்யவில்லை. நான்கு மாடிகள் ஏற வேண்டிவந்தது. மூச்சுவாங்கியது. அலுவலகம் வந்து சீட்டில் உட்காரும்போது ஹா, என ஓர் அலுப்பு. ஜெனரேட்டர் ஒடிக் கொண்டிருந்தது பெருஞ்சத்தத்துடன். அதுபாட்டுக்கு வாசலோரம் ஒதுங்கிச் சுருண்டிருக்கும், தெருநாய் போல. எழுப்பிவிடப்பட்ட நாயின் உருமல் போலிருந்தது இப்போது அதன் சத்தம்.

நேற்றே பிருந்தாவுக்கு ஃபோன் செய்ய நினைத்தார். சட்டென்று… என்ன பேச எப்படித் துவங்க, என ஓர் திணறல். மனசைக் கட்டுப்படுத்திக் கொண்டார். என்னவோ ஓர் தயக்கம். அப்படியென்ன கட்டுப்படுத்த முடியாமல், என ஒரு வீம்பு. ஓர் உள்க்குரல். டேய், இந்த ஜல்சால்லாம் வேணாம். உன் வாழ்க்கை அமைதியாப் போயிட்டிருக்கு… என ஓர் சிவப்பு தெரிந்தது மனசில்.

அடக்க முடியலியே… என்றிருந்தது. சரி, அடக்கணும். அவ்ளதானே ?… ஆமாம்…. அப்ப அந்தக் காகிதத்தை எடுத்து எறி.

கொஞ்சம் யோசித்தார். பிருந்தா… இது… எனக்கு ஏன் இந்தப் பிரச்னை ? இந்த சேஷாத்ரி ஏன் அவளைப் பார்த்தான்… அவர் தனக்குள் நகைத்துக் கொண்டார். அவனை நீ வேலை மெனக்கிட்டுக் கூப்பிட்டு தொலைபேசி எண்ணை வாங்கிப் பையில் ஏன் வைத்துக் கொண்டாய் ?

அவனைப் பார்த்ததுமே என்னைப் பற்றி விசாரித்திருக்கிறாள், என்றதும் ஒரு சிலிர்ப்பு. திரும்ப மின்சாரம் வந்தாப்போல ஒரு கிர்ர்.

வேறெதாவது நினை… என மனதை உதைத்தார் அவர். நம்பரைத் தன் டிஜிடல் டைரியில் சேஷாத்ரியும் குறித்துக் கொண்டானோ ?… என்று தோணியது. ‘சார், மைசூரில் இருந்து எஸ் அன்ட் எஸ் பேசறாங்க ‘ என்று ரிசப்ஷனிஸ்ட் நாயை அனுப்பி வைத்தாள். தொலைபேசி நாய்!

வேலை மும்முரப்பட்டது. பிடிவாதமாய் சட்டைப் பையில் இருந்து பிருந்தாவின் கையெழுத்தில் – தொலைபேசி எண்ணை எடுத்துக் குப்பைத் தொட்டியில் எரிந்தார். அந்த ஜோரில் துப்புரவுப் பணியாளன் வந்து குப்பையைக் காலி செய்து எடுத்துக் கொண்டு போனான். ஐயோ… என்றிருந்தது. மற, என்றார். அவளை மறந்தாக வேண்டும். அது காதல் அல்ல. அது காதலோ மண்ணாங்கட்டியோ, இப்போது அதன் இரண்டாம் பாகம் தேவையும் இல்லை. ஈஸ்வரி. நந்தகுமார். கண்ணன் – உன் வளையங்கள் இவை. அமைதியான நல்ல வாழ்க்கை….

சரி, போரடிக்காதே- என்றார் மனசிடம். அவளை மறந்து விடு.

முயற்சிக்கிறேன்.

நாய் மீண்டும் குரைத்தது. ஆமாமாம்… வேலை இருக்கிறது. வேலைகளில் மூழ்கிப் போனார்.

இப்போது ராமேந்திர ரெட்டி. அவரது மேலதிகாரி.

‘மதுரைல ஒரு கஸ்டமர் மீட்டிங். போயிட்டு வரீங்களா ? ‘

இல்ல சார், என்று சொல்ல நினைத்தார். நாக்கு தன்னைப் போல ‘சரி சார் ‘ என்றது. அட நாயே, தொலைபேசியை வைத்தபோது என்ன உற்சாகம்….

ஆ, அவளைப் பார்க்கப் போவதில்லை நான். திருச்சி போனாலும் சேஷாத்ரியைப் பார்க்கிறேனா என்ன ? அவளைப் பார்க்கப் போவதில்லை நான். ‘பார்க்கலாம் ‘ என்றது மனசு.

‘அவளைப் பார்க்கப் போவதில்லை என்கிற உன் உறுதிமொழியைப் பார்க்கலாம்… ‘ என்றது மனசு.

—-

நன்றாக உறங்கிக் கொண்டிருந்த போது திடுமெனக் கலைந்தது உறக்கம். மனசில் எதோ அதிர்வுபோல… அவளைச் சந்திக்கிற கணங்களுக்காக சிறு ஒளி உள்ளே கதகதப்பாய் இருந்தாப் போலத்தான் இருக்கிறது. மெளன ஸ்வரங்கள். எட்டாவது ஸ்வரம். ஆறாவது விரலின் அபிநயம்.

சேஷாத்ரி திருச்சியில் இருந்து பேசினார். ‘அப்றம் ? என்ன சொன்னா, உன் பிருந்தா ? ‘

ஒருவிநாடி திகைத்துப் போனது. என்ன பதில் சொல்ல தெரியவில்லை. ‘வேலையா இருக்கேண்டா ‘ … ‘செளக்கியமா இருக்காளாமா ? ‘ – ‘நான் இன்னும் அவகூடப் பேசல… ‘ – ‘அட ஏன் ? ‘ – ‘நம்பரை எங்கியோ மிஸ்பிளேஸ் பண்ணிட்டேன் ‘. ‘0452 மதுரை ‘, என்று சொல்லி அவரே நம்பரும் சொன்னார். எழுதிக்கோ, என்று பரபரத்த மனசைக் கட்டுப் படுத்தினார். எழுதிக் கொள்ளவில்லை. – ‘பேசுடா. அவ பேசச் சொன்னாளால்லியா ? ‘ –

இராத் துாக்கத்தைக் கெடுத்த பாவி சேஷாத்ரி ஒழிக.

இனி பார்க்காமல் மனம் ஓயாது என்றிருந்தது. அவன் பார் ராஸ்கல், மனப்பாடம் செய்து வைத்திருக்கிறான்.

அறையில் இங்குமங்கும் உலாத்தினார். தாகமாய் இருந்தது. தண்ணீர் ஜாடியில் படுக்கப்போகுமுன் ஈஸ்வரி நிரப்பி வைப்பாள். கண்ணாடி ஜாடி. அதில் நிரப்பியிருக்கிறதா என்று விடிவிளக்கின் ஒளியில் பார்த்தார். இருந்தது.

ஜாடிக்குப் பாக்கத்தில் தொலைபேசி. தண்ணீர் குடிக்க வேண்டாம், என்றது மனசு. சிரிப்பு வந்தது. வரவர தொலைபேசியைப் பார்க்கவே பயப்படுகிறாப் போலவா நிலைமை ஆகி விட்டது…

தைரியமாப் போ…. போனார். தண்ணீர் குடித்தார். தொலைபேசி இருந்தால் என்ன ? – என்று நினைத்துக் கொண்டார். வந்து மனைவியை அணைத்துப் படுத்துக் கொண்டார்.

ஈஸ்வரியின் உறக்கம் கலைந்தது. ‘என்னப்பா ? ‘ என்று அவர்பக்கம் திரும்பினாள். ‘ஐ லவ் யூ ஈஸ்வரி… ‘ – ‘அதுக்கென்ன ? ‘ என்றாள் அவள். ‘இல்ல சும்மாச் சொன்னேன்… ‘

‘சும்மா யாராச்சும் சொல்வாங்களா ? ‘ என அவரை முத்தமிட்டாள்.

‘யூ ஸ்டில் லவ் தட் பிருந்தா! ‘ என்கிறாள் ஈஸ்வரி. இப்படி ஆளுக்காள் குழப்பினால் நான் என்ன செய்வது ?

அவர் மேலும் மனைவியிடம் எதாவது பேச நினைத்தார். அவள் துாங்கியிருந்தாள்.

—-

மனசின் குட்டிக்கரணத்துக்குக் குறைச்சல் இல்லை. மதுரைக்கு இன்னும் எவ்வளவு துாரம் என்றே கணக்கு. முதல்வகுப்புப் பெட்டி. சுகமாகத் தாலாட்டும் ரயில். ரயில் மனிதர்களைக் குழந்தையாக்கி விடுகிறது. நல்லாருக்கா பாரதியார் என் கவிதை ?

‘படகு தாலாட்டினா ஐலசா… ‘

‘அப்ப கட்டில் தாலாட்டினா ? ‘

‘ஜல்சா ‘ என்கிறான் ஸ்ரீதர். அவனைப் பார்த்தாரே சமீபத்தில். பத்திரிகை ரிப்பார்ட்டிங்கில் பெரிய ஆளாகி விட்டான். முன்பு சுவரில் எழுதியதைக் கிசுகிசுவாகப் பேப்பரில் எழுதறியாக்கும், என்றார் சிரிப்புடன்.

தடக் என ரயில் நிற்க… வந்தது மதுரை! நீ வந்தது கிளையன்ட் கூட்டத்துக்கு, என்று ஞாபகத்தில் வெச்சிக்க என்றார் மனசில் ரெட்டி. எத்தனையோ கூட்டங்கள் பார்த்தாாச்சி. அது பெரிய விஷயமே அல்ல. அந்தத் தொலைபேசி எண்… 27384 இல்லை 834 ? – அட சும்மா கிட, என்றது மனசு.

மதுரை மீனாட்சி அரசோச்சும் ஊர். அவருக்கு அது பிருந்தாவின் ஊர். பிருந்தாதான் மீனாட்சி.

பெங்களூருக்குக் கிளம்பியபோது குடுத்தா பார் ஒரு முத்தம். மறந்துறாதேடா…

பாரதியார் இன்னொரு கவிதை சொல்லவா- கார்த்திகை தீபத்தில் பட்டது அவள் பாவாடை. தீப்பிடித்தது என் மனசில்!

‘உடனே நீ அவளை அணைச்சிண்டுட்டியாக்கும் ? ‘ என்கிறார் பாரதியார்.

லேசான குளிரான பனி. குள்ளக்குளிர் என்கிறாள் திருப்பாவையில் ஆண்டாள். சுகமான பனி. அதிகாலை குளிக்குமுன் அந்தத் தண்ணீர் எப்படி சிலீர்ங்கும் என கற்பனை எடுக்கும் குளிர்… அது குள்ளக்குளிர். உள்ளக்குளிர். முதல் குவளை மேலே கொட்டிக் கொண்டால் பிறகு அந்தக் குளிரே சுகமாகி விடும். பிருந்தா பற்றிய தயக்கமும் அப்படியா ? முதல்குவளைத் தண்ணீரை எடுத்துக் கொட்டிக் கொள்ளலாமா ? பிருந்தாவுக்கு ஃபோன் செய்யலாமா ?

செய்யலாமா ? செய்யலாமா ? செய்யலாமா ?… என்று மனசெங்கும் எதிரொலி. என்ன இது ? உணர்ச்சிகள் சப்பாத்தி மாவு போல அவரைப் பிசைகின்றன.

பெரிய ஹோட்டல். தனியறை. ஏ/சியின் குள்ளக்குளிர். மனசு வேண்டாம் என்றது.

என்னது ?

பேச வேண்டும்… என்பது வேண்டாம்.

அதாவது பேச வேண்டாம்… என்பது வேண்டும். சரியா ?

ஆமாம். பேசுவது தவறு என்பது சரி.

அட ஆமாம், பேசுவது சரி என்பது தவறு. சரிதானே ? – என்று சிரிக்கிறார்.

ஹலோ ஈஸ்வரி மேடமா ? உங்க கணவர் மதுரை போயிருக்கிறார் தெரியுமா ? – என்கிறார் ரிப்போர்ட்டர் ஸ்ரீதர்.

அவர் பிருந்தாவைக் காதலிக்கிறார்… என்றாள் ஈஸ்வரி.

அறையில் இங்குமங்கும் உலவினார் ராஜகோபால்.

அப்பா ? – என்று கூப்பிட்டான் நந்தகுமார்.

ஃப்ரெண்டுக்குப் பரிசு வாங்கணும்னு காசு கேட்டிங்களேப்பா. இந்தாங்க.

வேண்டாம், என்றார் ராஜகோபால்.

ஐம்பது போதுமாப்பா ? – என்கிறான் நந்தகுமார்.

வாடிக்கையாளர் சந்திப்பு மாலைதான். அவசரம் என்று திண்டாட வேண்டாம் என்று காலையிலேயே வந்தாச்சி. மாலைவரை என்ன செய்வது ?

ஆ, நான் வாழ ரொம்ப அலட்டிக் கொள்கிறேன். ஒரு சாதாரண சந்திப்பு. எனக்கு இப்போது வயசு நாற்பது பிளஸ். நான் ‘அந்த ‘ ரெண்டுங் கெட்டான் சிறுவன் அல்ல. தடுக்க தடுக்க வேட்டி கட்டி, சைக்கிள் கற்றுத் தேர்ந்து… படித்து, வேலையில் அமர்ந்து, மீசை வைத்தபின் இப்போது எடுத்தும் ஆகிவிட்டது. ஆ, மீசை வைத்த என் முகமே என் யோசனையில் இல்லை.

ஃபோன் பேசு அவளுடன். சாதாரணமாய்ப் பேசு. பெரிய காவிய உரையாடல் எல்லாம் வேணாம். கற்பனையாய் உள்ளே நாயை முகர்ந்தலைய விடவும் வேணாம்.

அவள் பேசச் சொன்னாள். சாதாரண விஷயம் அது. நாகரிகமான விஷயம். அதற்கு முலாம் பூசுவதா ? மைக்ராஸ்போப் வழியே கொசுவைப் பார்த்துவிட்டு பயந்து கொள்வதா ?

ஃபோன் அடிறா மாப்ள…

மனசு மறித்து விடுமோ என்று விழுந்தடித்துக் கொண்டு தொலைபேசிக்கு ஓடுகிறாப் போலிருந்தது. ஷ், இந்தப் பரபரப்புதான் வேணாங்கறது.

‘ஹலோ… ‘

அதே… அத்தே குரல்! பிருந்தாவின் குரல். என் பிருந்தா. சிலிர்த்து அழுகை வந்திட்டதேய்யா.

‘நான் ராஜகோபால்… ‘ என்று மாத்திரம் சொல்கிறார். குள்ளக்குளிரா, விஸ்வரூபக்குளிராய் இருந்தது.

‘உங்களுக்கு யார் வேணும் ? ‘

‘ஆர் யூ மிஸஸ் பிருந்தா ? ‘

‘அவங்க ஆஸ்பத்திரில இருக்காங்க… நீங்க ? ‘

‘அவகூட நான் ஸ்கூல்ல படிச்ச பழைய ஃப்ரெண்ட்ம்மா… உனக்குத் தெரியாது. ‘

‘தெரியும் ‘ என்றது அந்தக் குரல்.

குபீரென்று ஓர் ஆச்சரியம் வளைத்துக் கொண்டது அவரை.

‘அம்மா சொல்லீர்க்காங்க உங்களைப் பத்தி… ‘

ஹா!- என்று திகட்டியது. என்ன சொல்லீர்க்காங்க… என்று கேட்கத் துடிப்பாய் இருந்தது. மனசில் பட்டம் ஒன்று எழும்பி, படபடத்து அலைகிறது. குளிராவது கிளிராவது…

‘நீ அவ டாட்டராம்மா ? ‘ என்றார் கனிவுடன்.

‘ஆமா அங்க்கிள். நான் ராஜி ‘ என்றாள் அவந்தச் சிறுபெண். அதே குரல். அம்மாவின் குரல். அங்க்கிள்… சரி, என நினைத்துக் கொண்டார்.

நான் ராஜகோபால்.

அவள் ராஜி.

அம்மா சொல்லீர்க்காங்க!

ஆகா… அவள் காதலிக்கிறாள். அவள் வேகத்துக்கு முன்னால் நான் எம்மாத்திரம். உன் அன்புக்கு நான் தகுதியற்றவன் பிருந்தா. அழுகை வந்தது. அன்னிக்கு நான் சொன்னேன்- பெங்களூர் போகிறேன் பிருந்தா… சட்டென்று அழுதாய். பெண்கள் எத்தனை உறுதியுடன் இந்த உலகில் ‘பிடித்துக் ‘ கொள்கிறார்கள். அவளை உசுப்பி விட்டவன் நான். பிறகு ஒதுங்கிக் கொண்டேன். ஆண்கள் கெட்டவர்கள், என்றாள் மெகாசீரியல் கூனிப்பாட்டி. பிருந்தாவின் பாட்டி. அது சரிதான் போலும். வெட்கப்பட்டார்.

‘எங்கேர்ந்து பேசறீங்க அங்க்கிள்… ‘

அட அந்தக் குரலே எத்தனை உருக்குகிறது மனசை.

‘இங்கதாம்மா… உங்க ஊரில் இருந்துதான். மதுரையில் இருந்துதான். ராம் பேலஸ்ல ரூம் 112. அப்பாவுக்கு இன்னும் சரியாகல்லியா ? ‘

‘ரொம்ப மோசமா இருக்கு அங்க்கிள் ‘ எனும்போது ராஜி அழுகிறாள். ஐயோ என் செல்லமே அழாதே. அவள் தலையைத் தடவிக் கொடுக்க ஆவேசப் பட்டார். நான் இருக்கேன். நான் வந்திட்டேன்… என என்னென்னவோ வார்த்தைகள் மனசில் குழறிக் குமுறி எழுந்தன.

‘எந்த ஆஸ்பத்திரியில் ? ‘ என்றார் ராஜகோபால்.

‘செயின்ட் மேரிஸ். ஐ.சி.யூ. வார்டில் ரூம் 316. ‘

‘நான் வரேன். உடனே வரேன்… ‘ என்றவர் ‘பயப்டாதே குழந்தே. உங்கப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது. ஐ ப்ரே டு மை ‘அரவிந்த அன்னை ‘… என்கிறார்.

‘நான் அங்கதான் அங்க்கிள் கிளம்பிட்டிருக்கேன்… நேராச்சி. ஃபோனை வெச்சிறவா ? ‘

‘எஸ் எஸ் ‘ என்கிறார்.

தொலைபேசியை வைத்ததும் பெரும் இருள் அவரைச் சூழ்ந்து ஒரு ஆட்டு ஆட்டி திரும்ப மங்கல் வெளிச்சம் என்று கொஞ்ச கொஞ்சமாய்த் தெளிவு பெற்றது பார்வை. பிருந்தா உன் உணர்வின் இந்த நெருக்கடியில் ஐயோ, உன்னைப் பார்க்காமல் போகத் தெரிந்தேன்.

கண்ணைத் துடைத்துக் கொண்டார். ‘உடனே வருகிறேன் பிருந்தா. நான் உன் பக்கத்தில் இருக்கிறேன் பிருந்தா… ‘

அதானே ? இன்னொரு முறை அந்த ஐசியூ நம்பர் கண்டுபிடித்துப் பேசினால்தான் என்ன ?

‘ஹலோ ? ‘ என்கிறாள். அதே குரல். இது ராஜி அல்ல.

‘நீ… சாரி, நீங்க பேசுவீங்கன்னு தெரியும் ‘ என்கிறாள் பிருந்தா.

‘எப்படி ‘ என்கிறார் ஆச்சரியத்துடன்.

‘இப்பதான் ராஜி பேசித்து… ‘

‘நீங்க வேணாம். நீன்னே கூப்பிடு பிருந்தா… ‘

‘முயற்சிக்கிறேன். ‘

‘உன் ஹஸ்பெண்டுக்கு எப்படி இருக்கு ? ‘

‘நீங்க… வா ராஜகோபால்! ‘

‘உடனே வர்றேன் ‘ என்று ஃபோனை வைத்தார்.

(அடுத்த வாரம் முடிவு பெறுகிறது)

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்