ஓ போடு……………

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


‘ஹலோ கல் ஜோஸியர் கருணாமூர்த்திங்களா ? ‘

‘ஆமாங்க.. கருணாமூர்த்திதான் பேசறன். நீங்க.. ஜூபிடர் டி.வியின் நேரடி ஒளிபரப்புல பேசிக்கிட்டு இருக்கறீங்க. ‘

‘வணக்கம் சார். ‘

‘வணக்கம். சொல்லுங்க. ‘

‘என்பேரு சோணாசலம், மதுரைப் பக்கத்துல சோம்பல் பட்டியில இருந்து பேசறன்…எப்படி

இருக்கீங்க ? ‘

‘ஓ போடற புண்ணியத்துல, நல்லா இருக்கன். ‘

‘என்ன சார் ? உங்க நிகழ்ச்சியை ஓ போடுண்ணு மாத்திட்டாங்க ? ‘

‘எல்லாம் ஒரு கவர்ச்சிக்குத்தான். இவ்வளவு நாளா ‘அதிர்ஷ்டக் கல் ‘ ன்னு நடத்தி வந்தோம். மோதிரம் போடுண்ணு சொல்றதுக்குப் பதிலா ‘ஓ போடுண்ணு ‘ சொன்னா ஒரு கவர்ச்சி கிடைக்குது. அவ்வளவுதான். ‘

‘நிஜந்தானுங்க ‘

‘இதைத் தெரிஞ்சுகிறதுக்காகவா போன் போட்டாங்க ? சரி விஷயத்துக்கு வாங்க ‘

‘எப்படி ஓ போடறதுன்னு தயக்க மாயிருக்கு. ‘

‘பரவாயில்லை. வாயாலேயே போடுங்க. ‘

‘கிண்டல் பண்றீங்க சார். ‘

‘ நோ..நோ.. அப்படில்லாம் இல்லை. நீங்க வெளியூர்ல இருந்து பேசறீங்க, அதனால கை ஜாடை எல்லாம் காட்டினா எங்களுக்குத் தெரியாது பாருங்க. அதனாலே சொன்னேன். சரி பிரச்சினையைக் கொஞ்சம் தைரியத்தோட சொல்லுங்க. ‘

‘அதுதான் பிரச்சினையே ‘.

‘என்னது ? ‘

‘தைரியம்தான் வரமாட்டங்குது. பிரச்சினையே அதுதான். அதிலும் என் சம்சாரம் மதுரைக்காரி. பேரு மீனாட்சி. அவ பக்கத்துல வந்தாலே வெட வெடங்குது. கையும் ஓடலை, காலும் ஓடலை. ‘

‘தற்சமயம் கை விரல்களுக்கு ஓ போடத்தான் எங்கக் கிட்ட அதிஷ்ட கல் இருக்குது, கால்களுக்கும் மேலை நாடுகள்ல போடற மாதிரி கூடிய சீக்கிரம் வந்திடும். இன்னும் சொல்லப் போனா எல்லாப் பிரச்சினைக்கும் முடிவு கட்டறமாதிரி தலையில போடறதுக்கும் கல்லுங்கள உலகத்திலேயே முதன் முறையா நாங்க அறிமுகப் படுத்தலாம்னு இருக்கோம் ‘.

‘நல்லது சார். என் சம்சாரம் பக்கத்து வீட்டுக்குப் போயிருக்கிறா. சட்டுப்புட்டுண்ணு எனக்கு ‘ஓ ‘ போடறதுக்கான வழியைச் சொல்லுங்க. ‘

‘உங்க டேட் ஆப் பெர்த் என்ன ? ‘

‘பத்து ஒண்ணு நாற்பத்திரண்டு சார். ‘

‘அப்படியா ? நீங்க டோப்பஸ் கல்லை சுண்டு விரல்ல போடணும் ‘

‘அய்யய்யோ! ‘

‘அதுக்கு ஏன் சார் அய்யய்யோ ? ‘

‘எனக்கு சுண்டு விரலே இல்லை. ‘

‘ஏன் என்ன ஆச்சு ? ‘

‘சின்ன வயசுல நகத்தைக் கடிக்கிற பழக்கமுங்க. ஒரு நாள் கொஞ்சம் அதிகமாகவே கடிச்சிப்புட்டேன். விரல் போயிட்டுதுங்க. ‘

‘அப்ப மோதிர விரல்ல போடுங்க. ‘

‘அய்யயோ! ‘

‘என்ன சார்! மறுபடியும் அய்யய்யோ சொல்லி பயமுறுத்தறீங்க. ‘

‘உண்மை சார்.. உங்க கிட்ட சொல்றதுல தப்பில்லை. என் சம்சாரம் ‘அம்மா ‘ வோட தீவிர பக்தை. அவங்களப் பிடிச்சிருந்த ஜல தோஷம் சரியாப்போகணும்னு நேந்துகிட்டவ என் விரலைக் கடிச்சித் துப்பிட்டா. நல்லவேைளை, அன்றைக்கு அவள் சுமங்கலி பூஜைக்கான விரதத்திலிருந்தால தப்பிச்சேன். ‘

‘அய்யயோ! புரியுது.. புரியுது. மேலே சொல்ல வேணாம். நீங்க அவசியம் ‘ஓ போடணும். ‘

‘ஆமாம் சார்.. என் சம்சாரங்கிட்டருந்து என்னைக் காபாத்திக்கணும். ‘

‘அதுக்குத்தான ஓ போடச் சொல்றோம். ஒண்ணு செய்யுங்க. ஏதாவது விரல் இருந்துச்சினா மாணிக்கம் அல்லது கனக புஷ்பராகத்துல ஓ போடல ‘ம். ஆனா அதுக்கு அங்க இங்கன்னு அலைய வேண்டாம் மதுரை மேலமாசி வீதியில இருக்கின்ற நம்ம தில்லுமுல்லு ஜூவல்லர்ஸ் கிட்ட அதை வாங்குங்க. உங்க வசதிக்குத் தகுந்தமாதிரிக் கல்லு கொடுப்பாங்க. மற்ற கடைகள்ல வாங்கினா பலன் இருக்காது. ‘

‘நல்லது சார்.. ‘

‘ஹலோ.. அடுத்தது யாரு ? ‘

‘குட் மார்னிங் சார். ‘

‘வணக்கம்மா. இங்கே ‘ஓ போடு ‘ நிகழ்ச்சிக்காக ஜூபிடர் டி.விலருந்து, கல் ஜோசியர் கருணாமூர்த்தி பேசறன். சொல்லுங்க. ‘

‘ சார்.. நீங்க ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்க. ‘பான் பராக் ‘ கை அதிகமாகப் போடாதீங்க. எங்க ரிஸீவர்ல சாரல் அடிக்குது. உங்க காது மடல்ல இருக்குற முடியைக் கொஞ்சம் ட்ரிம் பண்ணிக்குங்க. இன்னும் ஜோரா இருப்பீங்க! ‘

‘ ஹி ஹீ.. தேங்க் யூ தேங்க் யூ. நீங்க ரொம்பத்தான் புகழறீங்க. சொல்லுங்க.. ‘

‘ சார்.. நான் தண்டையார் பேட்டையிலிருந்து பேசறன். பேரு தாரா. உயரம் 152செ.மீ, நிறம் சிவப்பு, படிப்பு பி.எ. கவர்ன்மெண்ட் ஜாப்ல இருக்கன். நல்ல வரனா தேடறேன். சங்கீதம் கூட நல்லா வரும்,.. ‘

‘அது சரிம்மா ‘ஓ போட ‘ வருமா ? ‘

‘என்ன சார் இப்படி கேட்டுட்டாங்க ? எங்க காலேஜ் சுவர்கள்ல இண்ணையவரைக்கும் எதிரொலிப்பது என்னோட ‘ஓ ‘தான். கடைசியா வீட்டுக்கு வந்த வரன் கூட என்னை ‘ஓ போடச் ‘ சொல்லிக் கேட்டுட்டுத்தான் போனார். உங்களுக்கு வேணா போட்டுக் காட்டட்டுமா.. ‘ஓ… ‘ ‘

‘நல்லாவே போடறம்மா, இருந்த ‘லும் வாயால போட்டா போதாது. அதிஷ்டம் வேணுமிண்ணா கைவிரல்ல ‘ஓ ‘. போடணும். ‘

‘புரியுது சார். எனக்குச் சீக்கிரத்துலக் கல்யாணம் ஆகணும். அதுகென்னமாதிரி ‘ஓ போடணும் ‘ சொல்லுங்க. ‘

‘உங்க பிறந்த தேதியைச் சொல்லுங்க.. ‘

‘பதினான்கு சார். ‘

‘கூட்டுத் தொகை அஞ்சு வருது. நீங்க வைரத்தைப் போடணும். கையில விரலிருக்கா ? ‘

‘எதுக்குசார் இப்படியொரு அபத்தமான கேள்வி ? ‘

‘இல்லைம்மா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு மதுரைக்காரர் பயமுறுத்திட்டாரு. ‘

‘எனக்குப் பத்து விரலும் நல்லா இருக்கு. கட்ட விரல்லதான் ஒருவாரமா நகச்சுத்தி ‘.

‘நல்ல வேளை. பெருசா ஒண்ணுமில்லை. உங்க இடதுகை நடுவிரல்ல ஒரு வைர மோதிரம் போடுங்க. வைரம் இல்லைன்னா, வெள்ளை ஸர்க்கன் கல்லாலான மோதிரமும் போடலாம். மோதிரம் போட்ட ஒரு மாதத்துல பலன் தெரியும் ‘.

‘இப்படித்தான் சார் போனமாசமும் ஒருமாசத்துல பலன் தெரியும்னு சொன்னீங்க. ஒரு மாசம் சரியா ஆகலை. கைமேல பலன் கெடைச்சுது. ‘

‘அடடே.. சந்தோஷம்!. நம்ப முடியலையே! ‘

‘என்ன சார் கிண்டலா. கைமேல பலன் கிடைச்சுதுண்ணு சொன்னது எனக்கு வந்த நகச்சுத்தியைப்பத்தி ‘

‘நகச்சுத்திக்கு வியாசர்பாடியில கைராசி அலமேலுன்னு நல்ல வைத்தியரம்மா இருக்காங்க. முருங்கைக்கீரை ஸ்பெஷலிஸ்ட்டு. அங்க போங்க சீக்கிரம் குணமாயிடும் ‘

‘எப்படி சார் சொல்லறீங்க ? ‘

‘ ஹி ஹீ.. அவங்க நம்ம சின்ன வீடாச்சே… ‘

‘ சார் வழியாதீங்க அந்தப் போனைக் கட்பண்ணிட்டு, அடுத்ததை எடுங்க. தாம்பரத்திலிருந்து உங்க மனைவி ரொம்ப நேரமா லைன்ல இருக்காங்க. உடனே பேசியாகணுமாம். ‘

‘என்ன மனோன்மணீ ? திடுதிப்புன்னு போன்ல. அதுவும் நேரடி ஒளிபரப்புல. ‘

‘நீங்க நிகழ்ச்சியை முடிச்சுட்டு உடனே புறப்பட்டு வரணும். ‘

‘எதற்கு ? ‘

‘இங்க, வீட்டுக்கு முன்னாடி உங்க மாப்பிள்ளை வாயிற்படியில நிண்ணுகிட்டு ‘ஓ ‘ போடறார். ‘

‘என்னவாம் ? ‘

‘அவர் தமிழ்நாட்டின் தலை விதியை மாத்தறேண்ணு, புதுசா தமிழ்நாடு வாஸ்து சாஸ்திரக்கட்சின்னு ஒரு கட்சி ஆரம்பிச்சிருந்தாரே ? நீங்களும் சந்தோஷப்பட்டாங்களே! ஞாபகம் ஏதாவது இருக்கா ? ‘

‘அதற்கென்ன இப்போ ? ‘

‘தமிழ் நாட்டோட விதியை மாத்தறதுக்கு முன்னால, நம்ம வீட்டோட வாசல் கதவை மாத்தணுமாம், அப்பத்தான் வீட்டுக்குள்ள காலெடுத்து வைப்பாராம் ‘.

‘அதற்கு ? ‘

‘அரசியல்வாதியாச்சே, ரோட்டுல உட்கார்ந்து ‘ஓ ‘ போடறார். கூட்டம் கூடிட்டுது. ட்ராபிக் ஜாம் ஆயிப்போச்சு. போலீஸ் வேறு குவிஞ்சுட்டாங்க. நீங்க உடனே வந்து பேச்சுவார்த்தை நடத்தணுமாம். சி.என்.என்.காரங்ககூட நேரடியா ஒளி பரப்ப வந்திருக்காங்க.. ‘

‘அய்யய்….யோ! ‘

‘நீங்க எதுக்கு ‘ஓ ‘ பே ‘டறீங்க ? ‘

‘இது வெறும் ‘ஓ ‘ இல்லைடா. ‘அய்யய் ‘ஓ ‘ ‘

********************************************

( இச்சிறுகதை ‘கனவு மெய்ப்பட வேண்டும் ‘ சிறுகதைத் தொகுப்பில் அடங்கிய ஒன்று. மேல் விபரங்களுக்கு

Na.Krishna@wanadoo.fr அல்லது Fax 00 33 3 88 32 99 16)

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா