அரசூர் வம்சம் – அத்தியாயம் நான்கு

This entry is part of 28 in the series 20030504_Issue

இரா முருகன்


சங்கரன் கடைவீதிக்குள் நுழைந்தபோது உச்சிப் பொழுதாகி இருந்தது.

காரியஸ்தனைக் கடையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அவன் புகையிலை நிறைத்த ஓலைக் கொட்டான்களுக்கு நடுவே தலைக்குசரக் கட்டையில் தலையைச் சாய்த்துச் சின்னதாக நித்திரை போகும் நேரம் அது.

இன்றைக்கு ஏகமாக வேலை காத்துக் கிடக்கிறது. முடிந்து தலையைச் சாய்ப்பதற்குள் சாயங்காலமாகி விடும். அப்போது தூங்கினால் மூதேவி வந்து என்ன என்று விசாரிப்பாள்.

ஒண்ணுமில்லே. நீயும் வந்து பக்கத்துலே படுத்துக்கோ.

மாரிலும் முதுகிலுமாக பிடிக்கு அடங்காமல் நாலு முலை. உடம்பு முழுக்க ஊர்ந்து கெளபீனத்தை உருவ நான்கைந்து கைகள். ஒட்டியாணம் மூடிய அரைக்கட்டு. மூதேவிக்கும் யோனி ஒன்றுதான் இருக்கும்.

தாயோளி மாட்டுக்கு எப்படி வாச்சிருக்கு பாருடா.

கொல்லன் இடத்தில் வண்டி மாட்டைக் குப்புறத் தள்ளி லாடம் அடித்துக் கொண்டிருந்தவர்கள் கீழே கை காட்டிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

அங்கங்கே வண்டிகள் முன்னோக்கிச் சாய்ந்து வைத்திருக்க, மாடுகள் பக்கத்தில் வைக்கோலை அசைபோட்டபடி நின்றிருந்தன. வெய்யிலில் சாயம் காய்கிற வாடை.

துணி விற்கும் கடைகளில் சின்னதாகக் கூட்டம். பெருத்த வயிறோடு எண்ணெய் வாணியர் எண்ணைய்க் குடத்தருகில் உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்தார். கடையின் பின்வசத்தில் அவர் வீடு என்பதால் அடிக்கொரு தடவை உள்ளே இருந்து யாராவது வாசலுக்கு வந்து எண்ணெய்க்குடத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பப் போய்க் கொண்டிருந்தார்கள்.

கொட்டகுடி தாசிக்கு இதுக்கு மேலேயும் ஒரு கஜம் வேண்டி இருக்கும்.

லாடத்தை மாட்டுக் குளம்பில் இறக்கிக் கொண்டே சொன்னவன் சங்கரனைப் பார்த்தவுடன் மரியாதையோடு நிறுத்தினான். அவன் கடந்து போனதும் தொடர்ந்த சிரிப்பு.

சங்கரனுக்கும் நின்று பார்க்க ஆசைதான். கொட்டகுடி தாசியைப் பற்றிய வர்த்தமானங்கள் அவனுக்கும் இஷ்டமானவை.

பேசவும் பார்க்கவும் தான் இதெல்லாம். அம்பலப்புழை சம்பந்தம் குதிர்கிற வரைக்கும் பார்த்ததை வைத்தும் கேட்டதை வைத்தும் மேலே மேலே கற்பனை பண்ணி ராத்திரியில் கெளபீனம் நனையக் காத்திருக்க வேண்டும்.

பகல் நேரம் அற்பமான ஒரு ஐந்து நிமிஷ சந்தோஷம் போக மற்றப் பொழுது கணக்கு எழுத. புகையிலைச் சிப்பம் எண்ண. பக்கத்து ஊர்களுக்கும் தூரதேசத்துக்கும் புகையிலை அனுப்பச் சித்தம் செய்ய. கொட்டைப்பாக்கை நறுக்க எடுத்துப் போட்டு வாங்கி வைக்க. கால் காசும் அரைக்காசும் வாங்கிப் போட்டுக் கொண்டு புகையிலையும், பாக்கும் நிறுத்து வாழை மட்டையில் கட்டிக் கொடுக்க உத்தரவு கொடுத்துக் கொண்டு கடைவீதியில் கண்ணோட்டிக் கொண்டிருக்க.

அபூர்வமாகக் கொட்டகுடித் தாசி வருவாள். வயதான ஸ்திரீகளோடு ஒட்டிப் படர்ந்தபடி தட்டான் கடையில் கைவளையல் செய்யக் கொடுக்கவோ, மூக்குத்தித் திருகு பொருத்தவோ சின்ன வயது ஸ்திரிகள் வருவார்கள்.

கொட்டகுடித் தாசி தரையில் பதித்த பார்வையை மேலே எடுப்பதே இல்லை. ஆனாலும் அவள் கடந்து போனதும் வைத்த கண் வாங்காமல் பின்னசைவில் லயித்துச் சங்கரன் பார்த்தபடியே இருப்பான்.

தட்டான் கடைக்கு வரும் பெண்களின் கண்ணை ஒரு வினாடி சந்திக்கும்போதும், மாடியில் இருந்து எவ்விப் பார்க்கும்போதும் சங்கரனுக்கும் அந்த அழகு தவறாமல் நினைவு வரும்.

கொட்டகுடித் தாச்ி இப்போது கடந்து போனால் ? கடைத்தெருவில் கண்ணுக்கெட்டியவரை பார்த்தான் சங்கரன்.

வெறுமையாகக் கிடந்தது தெரு.

கழுத்து வியர்வையை உத்தரியத்தில் துடைத்துக் கொண்டு குடுமியை அவிழ்த்து விட்டபடி கடையோரமாக நின்றான். வேனல் சூடு தாங்க முடியாமல் போய்க் கொண்டிருக்கிறது இந்த வருஷமும்.

கையில் எடுத்து வந்திருந்த செம்பு கூஜாவைத் திருகித் திறந்து உதட்டில் படாமல் பாத்திரத்தை உயர்த்தினான். உரைப்பும் இனிப்புமாக வெல்லப் பானகம் நாக்குக்கு இதமாக இருந்தது.

சாதாரணமாகச் சுக்குவெள்ளம் தான் கொண்டு வரும் பழக்கம். வீட்டில் பெண்டுகள் விசேஷம் என்பதால் பானகம் கொடுத்தனுப்பியிருந்தார்கள்.

சங்கரனுக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது. மதிய விருந்து கொடுத்த அசதி அது. எண்ணைய்ப் பலகாரங்கள் சாப்பிடச் சாப்பிட இன்னும் இன்னும் என்று நாக்கு கேட்கிறது. வகை தொகை இல்லாமல் சாப்பிட்டு முடித்ததும் எட்டு ஊருக்கு ஏப்பமும் வயிற்றில் வாயு சேருகிற தொந்தரவுமாக உபத்திரவப் படுத்துகிறது.

குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ.

குனிந்து பார்க்கலாமோ.

பாதி மறைத்த ஸ்தனமும்

பாங்காய் இடுப்பில் ஒட்டியாணமும்

வாழைத் தொடையும்

வடிவான தோளுமாய்க்

குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ.

குனிந்து பார்க்கலாமோ.

சுண்ணாம்புக் கட்டியால் ஒன்று, இரண்டு என்று இலக்கம் எழுதிய பலகைகளை ஒவ்வொன்றாகப் பிரித்து வாசலில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கொண்டிருந்தபோது அவன் வாய் முணுமுணுத்தது.

வாயில் சாதத்தோடு பாட ஆரம்பித்து மூக்கில் புரை ஏறச் சிரித்த பெண்டுகள். சுப்பம்மாக் கிழவி ஏதோ மந்திரம் செய்து ஒரு நிமிடம் எல்லோரையும் அசங்கியமாக எதையோ பாடச் செய்துவிட்டாள் என்று தோன்றக் கூட்டமாக அலைபாய்ந்து போன சிரிப்பு.

சுப்பம்மாக் கிழவியும் அந்த நிமிஷப் பெருமையை தனக்கே ஆக்கிக் கொண்டு சிரித்துவிட்டு இன்னும் கொஞ்சம் ரசாபாசமாகப் பாட ஆரம்பித்தாள்.

உச்சிப் பொழுதிலே

உள்ளே வரச் கூப்பிட்டுக்

காசுமாலைக்கு

கழுத்து அளவு பார்க்க

தாழ்வாரத்திலே தட்டானோடே

தையூ போனாளாம்.

உறவுக்காரப் பெண்டுகளில் யாரோ கையைக் காட்டி அவசரமாக நிறுத்தினாள்.

போறும். புருஷா வாசல்லே தான் இருக்கா. அம்பி வேறே வரலாமா போகலாமான்னு வாசல்லேயே நிக்கறான். நிறுத்துங்கோ அத்தை.

பாட்டு நின்றபோதுதான் சங்கரனுக்குச் சட்டென்று உறைத்தது.

குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ.

குனிந்து பார்க்கலாமோ.

அது அவனுக்காகப் பாடினது மாதிரி இருக்கிறது.

சுப்பம்மாக் கிழவிக்கு எப்படித் தெரியும் ?

ஊரில் யாராவது சொல்லி இருக்கலாம்.

யாருக்குத் தெரியும் ?

சுப்பம்மாக் கிழவியிடம் சுவாதீனமாக வந்து பழகும் மூத்தகுடிப் பெண்டுகள் யாராவது இருக்குமோ ?

இருக்கட்டுமே. இப்ப என்ன ?

சங்கரன் உதட்டைப் பிதுக்கினான்.

பாதி மறைத்த ஸ்தனமும்

பாங்காய் இடுப்பில் ஒட்டியாணமும்

வாழைத் தொடையும்

வடிவான தோளுமாய்க்

குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ.

அவன் கடைக்குள் நுழைந்தபோது சுற்றிலும் பாட்டுக் குரல்.

அவனுக்கு அவமானமாக இருந்தது. சந்தோஷமாக இருந்தது. பயமாக இருந்தது.

வீடு எழும்பியபோது சங்கரன் ஊரில் இல்லை. சுப்பிரமணிய அய்யர் அவனை தனுஷ்கோடிக்கு அந்தப் பக்கம் அனுப்பி இருந்தார்.

சித்தப்பா சபேசய்யரோடு அங்கே புகையிலைக் கடையைப் பார்த்துக் கொள்ளப் போனான் சங்கரன்.

லிகிதம் எழுதுவதும் உண்டியல் எழுதுவதும் கணக்கும் வழக்கும் பிடிபட்டுப் போனது அங்கே வைத்துத்தான்.

ஏட்டுப் பள்ளிக்கூடத்தில் பிரி முறுக்கிக் கொண்டு ஓடிய சமாச்சாரம் அதெல்லாம். அங்கே சுப்புராம வாத்தியாரின் வசவும் திட்டும் மறக்க முடியாமல் இன்னும் மனதிலேயே நிற்கிறது.

நாக்கிலே தர்ப்பையைப் போட்டுப் பொசுக்க.

உங்கப்பன் கோமணத்தை அவுத்த நேரம் ராவுகாலம்டா பிரம்மஹத்தி. எட்டு மாகாணி ரெண்டா ? எந்தத் தேவிடியாப் பட்டணத்துலே ?

சுப்புராம வாத்தியார் தேகம் தளர்ந்து போய்த் தடியை ஊன்றிக் கொண்டு எப்போதாவது கடைத்தெருவுக்கு வருகிறார். நீர்க்காவி வேட்டியும், கிழிந்த மேல்துண்டுமாகக் கண்ணுக்கு மேல் கையை வைத்துக் கொண்டு பார்க்கும்போது சங்கரன் பக்கத்தில் போய்க் கையைப் பிடித்துக் கூட்டி வந்து பலகையில் இருத்தி ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு ரெண்டு பாக்கும் வெற்றிலையும் கொடுக்கும் வழக்கம்.

எட்டு மாகாணி அரை என்று அவரிடம் சொல்ல வேண்டும். கொட்டகுடித் தேவிடியாளின் அரைக்கட்டு மனதைப் போட்டு இம்சைப் படுத்துவதையும் சொல்லலாம். அவருக்குக் காது கேட்பதில்லை இப்போது.

சாமி. தொண்டிக்குப் போற சரக்கு வண்டி வந்திருக்கு. தெருக்கோடியிலே நிக்க வச்சுட்டு வந்திருக்கேன். சரக்கு ஏத்திடலாமா ?

ஐயணை முண்டாசை எடுத்துப் பிரித்தபடி வந்தான்.

எத்தனை சிப்பம் ஐயணை ?

தடிமனான கணக்குப் புத்தகத்தைத் திறந்தபடி மைக்கூட்டில் கட்டைப் பேனாவை நனைத்தபடி கேட்டான் சங்கரன்.

குனிந்து பார்க்கலாமோ ?

பார்த்தபோது தெரிந்த ஸ்தனங்களின் வனப்பு கிறங்க அடித்தது. அது அகஸ்மாத்தாக மாடிக்குப் போனபோது.

தற்செயலான அந்த நிமிஷங்களுக்காகத் தவம் கிடக்கிறான் சங்கரன்.

தினசரி தானமாக ஒரு வினாடி கீழே இருந்து கண்கள் சந்திக்க வரும். உடை நெகிழ்ந்த ஈரமான மேல் உடம்பில் மறு வினாடி படிந்த பார்வையை வலுக்கட்டாயமாக விலக்கி அடுத்த நாள் விடிய ஏங்க ஆரம்பித்தபடி இறங்குவான அவன்.

தப்பு என்றது மனசு. தப்பு என்று முன்னோர்கள் புகையிலை அடைத்த இருட்டு அறைகளின் ஈரக் கசிவில் கலந்து பரவிச் சொன்னார்கள்.

இன்றைக்கு சுப்பம்மாக் கிழவியின் குரலில் ஏறிப் பாடுகிறார்கள். எகத்தாளம் செய்கிறார்கள். எச்சரிக்கிறார்கள்.

நாசமாகப் போங்கள். உங்கள் மேல் ஒரு மயிருக்கும் எனக்கு மரியாதை கிடையாது. செத்தொழிந்து போனவர்கள் இங்கேயே என்ன எழவுக்குச் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள் ?

மளுக் என்று கட்டைப்பேனா முறிந்து மசி கணக்குப் புத்தகத்தில் சிதறியது.

சாமி. சகுனம் சரியில்லே. அப்புறம் அனுப்பிச்சுக்கலாமா ?

ஐயணை மரியாதையோடு கேட்டான்.

பார்க்கலாமோ. குனிந்து.

பார்க்கலாமே.

சங்கரன் உரக்கச் சொன்னது புரியாமல் விழித்தான் ஐயணை.

(தொடரும்)

eramurug@yahoo.com

Series Navigation