மீனாட்சி அம்மாளின் சமையல் புத்தகம்

This entry is part [part not set] of 34 in the series 20030427_Issue

ராமசந்திரன் உஷா


இடம்-உலகம்

தேதி-2-2-2222

யூ விற்கு எல்லோரையும் போல அரசாங்க வேலைதான்.அன்று விடைப்பெறுபவர்களூக்கு நேர்முக தேர்வு.இந்தஅலுவலகக் கிளைக்குமாற்றலாகி வந்து ஒருவாரம்தான் ஆனது.புதிய வேலை,அதிக வேலை.இப்பொழுது எல்லாம் விடைப்பெறுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாயிற்றுவிட்டது என்று அவளுக்கு சொல்லபட்டது.மனுக்களின் இலக்க எண்களைபார்த்துக்கொண்டு வரும்போது,அந்த எண்ணை பார்த்து, அவள் வியந்தாள்.அவளை பெற்றவளின் எண் அது.அன்று அவள் தாய்க்கு நேர்முகத் தேர்வு.

அவளுடைய உதவி ஹேயை அழைத்தாள்..அலுவலகத்திலும்,வீட்டிலும்,வெளியிலும் அவளுக்கு எல்லா வேலையும் செய்யும் இயந்திரம் அது. யூ விற்கு படிப்பதில் மிகுந்த ஆர்வம்.படிப்பவர்கள் மிகவும் குறைந்து வருவதால்,அரசாங்கம் நடத்திய படிக்கும் போட்டியில் யூ வாங்கிய முதல் பரிசு இந்த ஹே.

பெற்றவள் உலகில் இருந்து விடைபெற போகிறாள் என்ற செய்தி சிறிது கலக்கத்தை கொடுத்துவிட்டது அவளுக்கு.

திரைபேசியில் பேச விருப்பமில்லாமல்,ஹேவிடம் பெற்றவளின் இலக்கத்தை கூறி,அவள் அந்த கட்டடத்தில் தான் உள்ளாள்,அவளை கையோடு அழைத்துவர சொன்னாள்.

‘விதி! ‘ என்று கேள்வி எழுப்பியது ஹே.

அவளுக்கு தன் மகளை சந்திக்கவிருப்பபட்டால் மாத்திரம் அழைத்துவரும்படி விதியை எடுத்து சொன்னாள்.

ஹே கிடைத்த புதிதில் இப்படி விதி நிர்ணயம் செய்யாமல் யூ மிகவும் தொல்லைகுண்டானாள்.பிறகு விதி என்பதை உள்ளிட்டபிறகு சரியானது.ஆனாலும் விதியை உள்ளிடுவதை யூதான் சரியாக செய்யவேண்டும்.இல்லாவிட்டால் ஒன்றிற்கு ஒன்றாக செய்துவிடும் அந்த இயந்திரம்.

சிறிது நேரத்தில் ஹே திரும்ப வந்தது.ஒரு மணி நேரத்தில் அவள் தாய் வருவாளாம்.சிறிது முக ஒப்பனை செய்துக்கொள்ளும்படி ஆலோசனை சொன்னது.கழிவறையில் சென்று தாழிட்டு கொண்டாள்.அங்கிருந்த ஒப்பனை

இயந்திரம் சில திருத்தங்கள் செய்தது.கொழுப்பு எரிப்பு மாத்திரையை ஒழுங்காக எடுத்துக்கொள்ளும்படி அறிவுருத்தியது.

யூ பிறந்ததிலிருந்தே அரசாங்க வளர்ப்பில் இருந்ததால்,தாயை பேசும் திரையில்தான் அதிகம் பார்த்து இருக்கிறாள்.

சிறிது நேரத்தில் வந்தவளை பார்த்து ஆச்சரியமாகிவிட்டது யூக்கு. அருகில் வந்து அணைத்து கொண்ட தாயை வியப்புடன் பார்த்தாள்.இதுதான்,மெய்சிலிர்ப்பா என்று அந்த உணர்ச்சியை தாயிடம் சொன்னாள்.

‘அப்படியே இருக்கிறாய்,கேள்வி கேட்டு கொண்டு! உன்னை போல் இருக்கும் சிலரால்தான் இன்னும் இந்த மொழி அழியாமல் இருக்கிறது! ‘ என்றாள்.

ஏன் விடை பெற போகிறாய் என்று கேட்டாள் யூ.

நீண்ட பெருமூச்சுக்கு பிறகு தாய்,தனக்கு நூற்றி ஐம்பது வயதாகிவிட்டது ,வாழ்க்கை அலுப்புட்டுகிறது என்றும்,உலகில் இருந்து விடை பெறுபவர்களுக்கு அரசு நிறைய சலுகைகள் தருகின்றன என்றும்சொன்னாள்.

யூ விற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

அரசாங்க சலுகையாக உலகில் உள்ள ஏழு அற்புதங்களை பார்த்துவிட்டு,விடை பெற போவதாகவும் சொன்னாள்.

சில அச்சு புத்தகங்களை அவளுக்கு அன்பளிப்பாக தரவிருப்பப்படுவதாகவும்,அதற்கு அரசு ஒப்புதல் அளித்து விட்டதாகவும் கூறினாள்.அச்சு புத்தகங்களா! வியப்புடன்,நன்றி கூறினாள் யூ.

பேச்சு முடிந்து,தாய் புறப்பட்டு போகும்போது,தொண்டை அடைத்தது,கண் கலங்கியது யூக்கு.அதுதான் துக்கம் என்றது ஹே.

யூவுடன் பழகி நல்ல மொழி அறிவு வந்துவிட்டது ஹேக்கு.

சில நாட்கள் கழித்து அஞ்சல் மூலமாய் தாயிடமிருந்து,புத்தக கட்டு வந்தது யூவுக்கு.பிரித்து பார்த்தால், திருக்குறள்,பாரதியின் கவிதைகள்,கையடக்க பதிப்பான கல்கியின் பொன்னியின் செல்வன் மற்றும் மீனாட்சி அம்மாளின் சமைத்துபார் புத்தகம். புதையல் கிடைத்தது போல் மகிழ்ந்தாள் யூ. அதனுள் ஒரு எழுத்தும்

இருந்தது.எழுதுவதே வழக்கொழிந்து போனதால்,அதை படிக்க யூவிற்கு மிகவும் கஷ்டமாய் இருந்தது.அதில் அவள் தாய்,யூ கட்டாயம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும்,அது உலகிற்கு செய்யும் சேவை என்றும்.உலகம் தழைக்க சந்ததியினர் அவசியம் என்றும் அறிவுருத்தியிருந்தாள்.

யூ யோசிக்க ஆரம்பித்தாள். ஏற்கனவே அரசு பிள்ளை பெறும் பெண்களுக்கு தரும் பல்வேறு சலுகைகள் அவளுக்கு சபலத்தை ஏற்படுத்தியிருந்தன.

பிள்ளை பெற முடிவெடுத்து, விண்ணப்பத்தை பார்த்தால் சலுகைகளின் பட்டியல் பெரியதாக இருந்தது.அதில் முக்கியமானது சமைக்கும் அடுப்பு.சமையல் குறிப்பை உள்ளிட்டு விட்டால், குறிப்பில் உள்ளதை சமைத்து கொடுத்துவிடும்.அரசு வாழ்நாட்களுக்கு தேவையான கொழுப்பு எரிப்பு மாத்திரையும் இலவசமாய் தரும்.மீனாட்சி அம்மாளின் சமைத்துபார் புத்தகம் வேறு,அவள் ஆவலை அதிகமாக்கிவிட்டது.

நல்லநாளை தேர்ந்தெடுத்து,மருத்துவர்கள் உதவியால் யூவிற்கு கருவூட்டபட்டது.பல்வேறு இலவச பொருள்கள் அவள்இருப்பிடத்தை நிரப்பின.யூ திரும்ப,திரும்ப சமையல் புத்தகத்தை படித்துக்கொண்டு இருந்தாள்.

ஒருநாள்,அவள் அவியல் செய்ய முடிவெடுத்தாள்.ஹேவிடம் தேவையான பொருட்களை வாங்கிவரும்படி சொன்னாள்.தேங்காய் எண்ணை தவிர மற்ற பொருள்கள் கிடைத்துவிட்டது.ஹே பல இடங்களில் தேடி அலைந்து அதையும் வாங்கி வந்தது.

அன்று கருபரிசோதனை நாள்.சமையல் புத்தகத்தை ஹேவிடம் கொடுத்து,அவியல் செய்முறையை சமைக்கும் அடுப்பில் உள்ளிட சொன்னாள்.

வழக்கப்படி , ‘விதி! ‘ என்றது ஹே.

‘அதில் உள்ளதை மாற்றாமல் உள்ளிடுவதுதான் விதி ‘ என்றாள் யூ.

தன் நண்பர்கள் எல்லோரிடமும் தான் அவியல் சாப்பிட போவதை சொல்லிக்கொண்டு,மருத்துவமனை போய்சேர்ந்தாள் யூ.இரண்டுமாத கருவின் அவயங்களின் அமைப்பு அவளிடம் காட்டப்பட்டது.உதட்டின் அமைப்பும்,

மூக்கின் அளவும் சரியில்லை என்று யூ அபிப்ராயப்பட்டாள்.அவள் விருப்பப்படி இரண்டும் மாற்றி அமைக்கப்பட்டன.

சிறிது நேர ஒய்வுக்கு பிறகு அரசு ஊர்தியில் இருப்பிடத்துக்கு அனுப்பப்பட்டாள் யூ.

வந்தவுடன்,ஹேவிடம் அவியலை கேட்டாள் யூ.ஆனால் அவியல் சரியாக வரவிலை,.அப்படியே புத்தகத்தில் இருந்ததைதான் உள்ளிட்டேன் என்றது ஹே!

என்ன தவறு என்று யோசித்து பார்த்தால்,புத்தகத்தில் அடுப்பை பற்றவைக்கவும் என்றே போடவில்லை.யூ தலையில் அடித்துக் கொண்டு ,மின் இணைப்பு கொடுத்தாள். .சிறிது நேரத்தில் மணக்கும் அவியலை கொண்டு வந்து தந்தது ஹே.

மறுநாள் யூவிற்கு மசால் தோசை சாப்பிடும் ஆவல் எழுந்தது.வழக்கப்படி எல்லா சாமான்கள் தோசைகல் உட்பட சேகரித்தது ஹே. மின் இணைப்பு கொடுக்கும்படியான விதியை சொல்லிவிட்டு குளிக்க போனாள் யூ. குளிக்கும்போது,

தீடாரென்று புகையும்,தீ எச்சரிக்கை கருவிகளின் சத்தமும் கேட்டது.இயந்திர தீயணைப்புகள் அங்கு குழுமி விட்டன.

என்னவாயிற்று என்றால், மசால் தோசை சுட,புத்தகத்தில் அடுப்பில் கல்லை போடவும் என்று இருந்ததை,ஹே தோசை கல்லை எடுத்து,அடுப்பில் சிறிது வேகமாய் போட்டு இருக்கிறது.சமைக்கும் அடுப்பு உடைந்து,நெருப்பு பிடித்து எரிய ஆரம்பித்திருக்கிறது.அந்த நெருப்பில் பக்கத்தில் இருந்த மீனாட்சி அம்மாளின் சமைத்து பார் புத்தகம் முழுவதும் எரிந்து போனது.

வேதனைதாளாமல் யூ , ஹேவிடம், ‘முட்டாள் இயந்திரமே! என் கண்ணில் படாமல் ஒழிந்து போ! ‘ என்றாள்.

‘ஒழிவதற்கு விதி ? ‘ என்றது ஹே.

-நன்றி:அம்பலம் புத்தாண்டு சிறப்பிதழ்-

13-4-2003

Ramachandranusha@rediffmail.com

Series Navigation

ராமசந்திரன் உஷா

ராமசந்திரன் உஷா