உறவுகள்.

This entry is part [part not set] of 38 in the series 20030419_Issue

எம்.கே.குமார்.


நிலாவின் மேற்பரப்பில் காணப்படும் நீர்த்திவலைகள் போல இருந்தது அவளின் முதுகுப்பகுதியில் காணப்பட்ட நீர்த்துளிகள்.அவள் இப்போதுதான் குளித்துவிட்டு வீட்டுக்குள் நுழைகிறாள்.தோளின் ஒரு முனையில் ஈரத்துணிகள் அவளை அட்டைபோல ஒட்டிக்கொண்டிருந்தன. இறுக்கிக்கட்டப்பட்ட அந்த கருப்பு நிற உள்ளாடை அவளின் கணவன் போல அவளைக்கட்டிக்கொண்டிருந்தது. உடம்பிலிருந்தும் உடையிலிருந்தும் விழுந்த நீர்த்துளிகள் சொர்க்கத்தை அனுபவித்துவிட்டதைப்போன்று ஆனந்தம் கொண்டாடின.

கன்னிப்பெண்ணைக்கண்டதும் கால்பின்னால் ஓடிவரும் அழையா இளைஞர்களின் கண்கள் போல அவளின் காலடியோடு ஒட்டிக்கொண்டு வந்தன கொல்லைப்புரத்து செம்மணல்கள். வீட்டுக்குள் நுழையுமுன் அவள் தன் கால்களிலிருந்த மண்ணை கால்துடைப்பானில் தட்டிவிட்டாள். காதலி இகழ்ந்த காதலன் போல அவை மனமற்று வாழ்க்கை வெறுத்துப்போய் விருப்பமற்று விடுதலை பெற்றன.

அவள் உள்ளே நுழைந்த நேரம், சொல்லிவைத்தாற்போல் வந்தான் அந்த சொர்க்கத்துக்கு சொந்தக்காரன்.அவன் வந்து அவள் பெயர் சொல்லிக்கூப்பிட்ட விதமே நமக்கு அதை உறுதிப்படுத்தியது…. அவனுக்கு இப்போதுதான் கல்யாணம் ஆகி இருக்கவேண்டும் என்பதை. பெயரைக்கூப்பிடுவது பிரியமானவன் என்பது அவளுக்கும் தெரிந்துவிட்டது. அது அவள் வெட்கத்தோடு வந்து கதவைத்திறந்த விதம் நமக்கு சொல்லியது.

திறந்தவன் முகத்தில் தென்றலோடு கூடிய மலரைக்கண்ட மயக்கம். வண்டாய் மாற வாஞ்சை கொண்டான். முகத்திலும் ஆங்காங்கே முற்றுப்புள்ளியாய் நீர்த்துளிகள். மஞ்சள் கொண்ட முகத்தில் மருதாணி நிறம் வெட்கமாய் வந்து விட்டு விட்டு நின்றது.

வெட்கம் சிந்தும் மான் விழிகளைக்கண்டு வேங்கை ஒன்று வெறுப்புற்று விடுமோ ? தலையில் கட்டிய ஈரத்துண்டும் நெஞ்சை நனைத்திருக்கும் ஈரத்துணிகளும் பொங்கிப்பாயும் புது நிற வெட்கமும் புத்தம் புதிய மஞ்சள் நிலவாய் புன்னகை பொலியும் பூமகள் முகமும் வந்தவன் கண்களை போதையாக்கி அவனின் மனதை பேதையாக்கின.

‘குளிச்சியா………. ‘

ஆமென்று தலையாட்டி திரும்பிக்கொண்டது சொர்க்கம்.

கட்டிக்கொண்டவன் அவளை கட்டிக்கொண்டான். இரவறிந்த அவளுக்கு பகலறிவது புதுசு.வேண்டாமென விட்டு விலகினாள். ஈரத்துணிகள் அவனை இம்சை செய்தன. பின்னாலிருந்து பிடித்த அவனுக்கு மேடுகள் பள்ளமாகின.பள்ளங்கள் மேடாகின. முயற்சியின் தோழனாய் முயன்ற அவனுக்கு வெற்றியின் கிண்ணமாய் அது கையில் பட்டது. சட்டென்று அதை எட்டி அவிழ்த்தான். விடுதலை பெற விரும்பியது அது. விடாமல் அதை கைக்குள்ளே இழுத்து விடுதலை தவிர்த்து தன் விருப்பமின்மை சொன்னாள் அவள்.

வீட்டுக்குள்ளே ஒரு போர் நடந்தது. பிடித்ததும் துடித்ததும் அவளின் நிலை. பிடித்ததால் பிடித்தது அவனின் நிலை.

எப்படி இருப்பினும் அவள்தான் ஜெயிக்கணும் என்றொரு நிலையில் அவள் இருந்தாள்.

சத்தமாய் கொஞ்சம் குரலை உயர்த்தி ‘சொன்னாக்கேளுங்கோ ‘ என்று கிணற்றுத்தவளை குரலில் சொன்னாள்.

அடங்காத மனது அடம் பிடித்தது. நேரங்காலம் தெரியாமல் காலை வாரி விட்டது. கொஞ்சம் ரோஷமாய் தள்ளி வந்தது. இம்சை கலந்த விடுதலையை எண்ணி வேல்விழியாள் உள்ளறைக்குச் சென்றாள்.

உடைமாற்றி அவள் வெளிவந்த போது கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்தான் அவன்.

‘கோபமா…….. ? ‘

‘சரி..சாப்பிடலாம் வாங்க…….. ‘

‘சாப்பாடு வேணாம்…… ‘

‘என்னாச்சி உங்களுக்கு……… ? ‘

‘சொன்னாத்தான் தெரியுமோ…. ? ‘

‘ஏன் இப்படி நடந்துக்கிறீங்க……… ? ‘

‘எப்புடி நடக்குறாக ? ‘

‘சரி..பேசாம வந்து சாப்பிடுங்க…மத்ததெல்லாம் அப்புறம் பாக்கலாம் ‘

‘அப்புறம் எதையும் நா பாக்க விரும்பலே ‘

‘சின்னக்கொழந்தை மாதிரி அடம் புடிக்காதீங்க ‘

மெல்ல அவன் அருகினில் வந்து கைகளைப்பிடித்து சாப்பிட அழைத்தாள். இழுத்து வராததை கொடுத்து வரவைக்கலாம்..உச்சந்தலையில் அழுத்திக்கொடுத்து தலை கோதி அவன் கைகளைத்தொட்டாள்.கைகளைத்தொட்டதால் வந்தது வினை. உறங்கிப்போயிருந்த மதில் பூனை படக்கென்று ஏறி அவள் மார்புக்கு வந்தது.

கொஞ்சமாய் எரிச்சலும் கொஞ்சமாய் அவஸ்தையும் அவளைக்குழப்பிக்கொண்டிருக்க, எதிரியைத்தாக்க இதுதான் நேரம் என்பது அவனுக்குத்தெரிந்திருந்தது.

சட்டென்று பற்றி சடுதியில் அவளை அழுத்தினான். கிட்டிய மகிழ்ச்சியில் முட்டிக்குதித்தான். மாட்டிய எலியாய் உடல் தடுமாற மனமது அவளை மயக்கித்தள்ள, யாரும் வந்து கதவைத்தட்டினால் எல்லாம் போய்விடும் என்றே பயந்தாள்.

இப்போது எல்லாம் சுமூகமாக நடக்கிறது.

*********************************************

வீட்டிற்கு வெளியே கொல்லைப்புறத்தில் ஒரு மாமரம். மாமரத்திற்கு அடியில் ஒரு மரக்கட்டில். கட்டிலில் கிடந்தாள் அவள். மகனுக்கு, தான் மரித்துப்போவதற்கு முன் திருமணம் செய்து பார்க்க ஆசைப்பட்டவள்.

கணவன் காட்டுக்குப்போய் இருபது வருடங்கள் ஆகின்றன. நன்றாகத்தான் போனார், இருபது ஆடுகளுடனும் நாலு மாடுகளுடனும். திரும்பி வரும்போது கட்டிலில் தூக்கி வந்தார்கள். வரும்போதே அவர் பாதி இல்லை. கடைசியாய் அவளிடம் அவள் கண்களைப்பார்த்து சொன்னார், ‘எப்புடியாவது நீ பொழச்சிருட்டிடா. நா இல்லையின்னு வருத்தப்படாவூதே..செரியா…… ‘

புருஷன் பரமேஷ்வரன். சொன்ன வார்த்தை காக்கும் பெண்கள். குளத்தூர் பெரிய வீட்லெ பெரியவுக வேலைக்குக்கூப்பிட்டாக. சென்றாள். வேலையைத்தான் பார்த்தாள். பெரியவுக வேலையை மட்டும் பார்க்கவில்லை. மத்ததெல்லாத்தையும் பாத்தாக. மனசுக்குள் வலி வந்து விட்டது.

உடம்பு சரியில்லை என்று வெளியே வந்துவிட்டாள். வெட்டு வெட்டப்போனாள். கூலிக்கு மண் சுமந்தாள். இறக்கும்போது அவர் கருவையும் கொடுத்துவிட்டுச்சென்றது ஒருவிதத்தில் சந்தோசமாகவும் மறுபக்கம் வேதனையாகவும் இருந்தது.

இறந்த எட்டாவது மாதத்தில் வெளியே வந்தான் அவன். அப்படியே அப்பனை உரித்து வைத்தமாதிரி. அதனால் ஊர் வாயில் இருந்து தப்பித்தாள். முந்தானைக்குள் வளர்த்தாள். முடிந்தவரை உழைத்தாள். சாணி பொறுக்கினாள். சுள்ளி எடுத்து விற்றாள். கடலைமிட்டாய் செய்தாள். பள்ளி வாயிலில் விற்றாள். அதையும் அவன் சொல்லி அழுதபோது வேண்டாம் என்று விட்டாள். மீண்டும் மண் வேலை.

அப்பனைப்போல கெட்டிக்காரன். அசராமல் படித்தான். ஏதோ அவனே பிரியப்பட்டு படித்துவிட்டு உள்ளூர் கூட்டுறவு நிலையத்தில் 600 ரூபாய் சம்பளத்தில் வேலை. பெண்ணையும் அவன் தான் பார்த்தான். ஏனோ இதிலெல்லாம் அவளைக்கேட்க வேண்டும் என அவனுக்குத்தோணவே இல்லை.

மண்வெட்டியபோது அது காலையும் சேர்த்து வெட்டியது. நல்ல காயம். இரும்பு சேர்ந்து கொண்டது. பெரிதானது. சீழ் வடிந்தது. இந்த வேலைக்கெல்லாம் ஒன்னை யாரு போகச்சொன்னா சனியனே என்றான் எடுத்த எடுப்பில் அவன்.

எல்லாம் எரிந்தது அவளுக்குள். படுத்த படுக்கையானாள். அவளின் ஆசைப்படி காதலித்தவளை மணந்துகொண்டான். அவளின் மற்ற ஆசைகளை மறந்துவிட்டான். எப்படியும் மூணு மாதமாவது ஆகலாம். இல்லை ஆறு மாதம்.

அவளின் கால் கட்டைவிரல்களை கட்டெறும்புகள் குத்தகை எடுத்திருந்தன. கொஞ்சம் கொஞ்சமாய் அதை தின்று முடித்தன.

ஒற்றைத்துணி உடலை போர்த்தியிருக்க அவளைச் சுற்றி உறவுக்கூட்டமாய் ஈக்கள்.

கண்கள் வெறித்திருக்க……….,

ஒன்றுக்கும் இரண்டுக்கும் ஒன்றாய் போனாள்..படுத்த படுக்கையில்.

உயிரின் கடைசி அவஸ்தை அவளிடம். வாய்க்குள்ளிருந்து வந்தது ‘ச்செ ‘. ‘ எப்படியாவது ஒரு பேரக்குழந்தையை பாத்துட்டு போயிட்டா…..அப்பா…… ? ‘

எப்போதோ சோறு போட்ட நாய் இப்போது அவளை நோக்கி வந்தது.

ஒற்றைத்துணித்திரையை நாக்கால் தள்ளி, வேண்டியதை மட்டும் நக்கிக்கொண்டது.

எம்.கே.குமார்.

Series Navigation

எம்.கே.குமார்

எம்.கே.குமார்