ரசிகன்

This entry is part [part not set] of 31 in the series 20030406_Issue

அலர்மேல் மங்கை


ஊருக்கு வந்து இரண்டு நாட்கள் பின்தான் அப்பா அந்த விஷயத்தைக் கூறினார். சண்முகம் கோமாவில் இருக்கிறான் என்று. குடி, அக்கறையும், ஆரோக்கியமும் அற்ற வாழ்க்கை, இத்துடன் டயபடிஸ். எனக்கு அன்று தூக்கம் பறி போனது. சண்முகம் என்னுடைய அத்தை மகன். என் ஆத்ம நண்பன். என்னை எப்போதும் சிரிக்க வைத்தவன். பல சிறு வயதுத் தந்திரங்களையும், கலைகளையும் கற்றுத் தந்த குரு. எனக்கு வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடந்த போது என்னை விடவும் சந்தோஷப்பட்டவன். அதிகம் போனால் நாற்பைதைந்து வயதுதான் இருக்கும்.

எங்கள் தாத்தா வீட்டில் இருந்துதான் ஷாப்டர் ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தான். சண்முகத்தின் அப்பா ஆவுடையப்பன் மாமா கோவில் பட்டியில் டிசிடிஓ ஆக இருந்தார். அங்கு பள்ளிக் கூடங்கள் சரி இல்லையென்று சண்முகம் திருநெல்வேலி டவுணில் தாத்தா வீட்டில் இருந்து படித்தான். அவன் ஒரு நாள் திருநெல்வேலி ஜில்லா கலெக்டராகி விடலாம் என்று அவன் அக்கா காந்திமதிக்கு ரெம்ப நம்பிக்கை. அவளுக்கு,ஏதோ ஒரு விதத்தில், சண்முகத்தை விட நான்கு வயது குறைந்தவனான என் மீது ஒரு காட்டம். அவள் தம்பிக்குக் கிடைக்கப் போகும் கலெக்டர் உத்யோகத்தைத் தந்திரமாக நான் பிடுங்கி விடப் போவதாகத் தீவிரமாக நம்பினாள். லீவு நேரங்களில் திருநெல்வேலிக்குச் சென்ற போதெல்லாம், அவளும் லீவுக்கு அங்கு வந்து என்னைப் படாத பாடு படுத்தினாள். மதிய நேரங்கள் எனக்கு நரகமாகின.

தாத்தாவுக்கு மதிய நேரங்களில் நாங்கள் வெளியே போய் விளையாடுவதோ, ஊர் சுற்றுவதோ பிடிக்காத ஒன்று. பட்டாலையில் வரிசையாகப் பாய் விரித்து, தூக்கம் வருகிறதோ இல்லையோ மாலை நான்கு மணி வரைப் படுத்திருக்க வேண்டும். எங்களுக்குக் காவலாக தாத்தாவும் பக்கத்தில் ஈஸி சேரில் சாய்ந்திருப்பார். ஈஸி சேரில் சாய்ந்த இருபது நிமிடங்களில் தாத்தாவின் குறட்டை சீராக ஒலிக்கும். உடனே கை தேர்ந்த கள்ளன் போல சண்முகம் அடி மேல் அடி வைத்து வெளியேறுவான். தாத்தாவை எழுப்பாமல் எப்படி நழுவுவது என்பதை அவன்தான் எனக்குக் கற்றுத் தந்தான். சில சமயங்களில் காந்திமதி எங்களைப் பிடித்துக் கொள்வாள்.

‘ஏய் எங்கடா போறிங்க ? ‘

சண்முகத்துக்கு உலகிலேயே ஒருவரிடம் பயம் உண்டென்றால், அது அவன் அக்காவிடம்தான். சண்முகம் உடம்பெல்லாம் ஏறு மாறாக முறுக்கிக் கொள்ள,

‘இல்லக்கா…சும்மா அடுத்த வளவுக்குத்தான்… ‘ என்பான்.

அந்த மதிய நேரத்தில், அக்னி நட்சத்திரம் ஊரையே எரித்துக் கொண்டிருக்கும் வேளையில், சண்முகம் அடுத்த வளவில் போய் விளையாட எடுத்த முடிவு, என்னுடைய தீவிர சதிதான் என்பது போல என்னை முறைப்பாள். அது போன்ற சமயங்களில் அடுத்த லீவுக்குத் திருநெல்வேலிக்கு வரக் கூடாது என்று சபதம் எடுப்பேன்.

‘ரெண்டு பேரும் இங்க வந்து உக்காருங்கடா… ‘ என்பாள் காந்திமதி அதிகாரமாக. இருவரும் மறு பேச்சுப் பேசாமல் உட்காருவோம். அடுத்த ஒரு மணி நேரம், எங்களுடைய ஆங்கில, கணக்கு, பொது அறிவு மிகத் தீவிரமாகப் பரிசீலிக்கப் படும். எப்போதும் போல சண்முகத்தை விட, படிப்பில் நான் புத்திசாலி என்று அறியப்படும். அது சண்முகத்தை எந்த விதத்திலும் பாதிக்காது. ஆனால், காந்திமதிக்குப் பின்னாளில் கலெக்டராகப் போகும் தன் தம்பி, ஒரு கொசுவான என்னிடம் தோற்பது பெரிய அவமானமாகப் படும். செயின்ட் சேவியர்ஸ் (அதுதான் நான் படித்த ஸ்கூல்) போன்ற ஸ்கூலில் சண்முகம் படித்தால், அவன் ஒரே நொடியில் என்னை வீழ்த்தி விடுவான் என்றும், ஆங்கிலம், கணக்கில் மட்டும் கெட்டிக்காரனாக இருந்தால் போதாது, பொதுவான கெட்டிக்காரத்தனம் வேண்டும் என்றும், அது சண்முகத்திடம் மிக அதிகமாக இருப்பதால், கவலைப்பட ஏதுமில்லை என்றும் தன்னைச் சமாதானம் செய்து கொள்வாள். நாங்கள் விட்டால் போதுமென்று அடுத்த வளவுக்கு ஓடுவோம்.

அவனைச் சண்முகம் என்று யாரும் கூப்பிடுவது கிடையாது. சம்முவம், சம்முகம் என்றே அழைக்கப் பட்டான். அவனை பற்றிப் பேசும் போது, ‘பெரிய சம்முகம் ‘ என்றே குறிப்பிட்டார்கள். சண்முகம் என்பது தாத்தாவின் பெயர். தாத்தாவுக்கு என் அப்பாவுடன் சேர்த்து எட்டு குழந்தைகள். நான்கு ஆண்கள், நான்கு பெண்கள். அத்தனை பேர் வீட்டிலும் ஒரு சண்முகம் இருந்ததால், இவன் எல்லோரையும் விடப் பெரியவனானதால், ‘பெரிய சம்முகம் ‘ என்று அழைக்கப் பட்டான். மற்ற சண்முகங்கள், நாங்குனேரி சம்முகம், தென்காசி சம்முகம் என்று

அவரவர் ஊரை வைத்து அழைக்கப் பட்டனர்.

காந்திமதி, என்னால் அவன் கெட்டுக் கொண்டிருப்பதாக சித்தப்பாக்களையும்,தாத்தாவையும், ஆச்சியையும் மூளைச் சலவை செய்தாலும், ஆச்சியைத் தவிர வேறு யாரும் அதை நம்பத் தயாராக இல்லை. தாத்தாவுக்கும், சித்தப்பாக்களுக்கும் செல்லப் பிள்ளையாக நானே இருந்தேன். தாத்தா தினமும் காலையில் எழுந்து, குளித்து பூஜை செய்யும் போது, தாத்தாவுக்குப் பூப் பறித்து, அவருடன் அமர்ந்து அப்பா சொல்லித் தந்த தேவாரத்தை என் கீச்சுக் குரலில் படிக்கும் போது, தாத்தா உடல் சிலிர்த்தார் என்று இப்போதும் என்னால் சத்தியம் செய்ய முடியும். பூஜையை முடித்து விட்டு, காலைப் பலகாரம் உண்ண அமரும் போது, ஆச்சியிடம், மகன் தன் மகனை வளர்த்துள்ள அருமையைப் பெருமையாகப் பேசும் போதே, பெரிய சம்முகத்தின் ‘வாடாவழித்தனம் ‘ நினைவுக்கு வந்து, அதற்கு ஆச்சி சம்முகத்துக்குக் கொடுக்கும் செல்லம்தான் காரணம் என்று முடியும். அது போன்ற சமயங்களில் காந்திமதி அங்கு இருந்தாள் என்றால், அவள் என்னைப் பார்க்கும் பார்வையில் நான் அனேகமாகப் பஸ்பமாகி இருப்பேன். அன்று பூராவும் காரணமில்லாமல் அவளிடம், குட்டும், திட்டுக்களும் வாங்குவேன். ஆனால் சண்முகம் இதையெல்லாம் கண்டு கொள்ளாதவனாகத்தான் இருந்தான். என்னிடம் ரெம்பப் பிரியம் அவனுக்கு. குறுக்குத் துறையில் எனக்கு நீச்சல் கற்றுத் தந்தது அவன்தான். கொடுக்காப் புளித் தோப்பில் கவுட்டாபில்ட் வைத்து கொடுக்காப்புளி அடிக்கக் கற்றுத் தந்தது அவன்தான். வீட்டுக்குப் பின்னால் பாப்புலர் தியேட்டரில், படம் துவங்கிய பின், தெரியாமல் உள்ளே நுழைந்து, படம் முடியும் முன்னே நைசாக வெளியே நழுவும் வித்தையை அறிமுகப் படுத்தியவன் அவன்தான்.

சண்முகத்தின் பற்பல திறமைகள் எனக்கு அவன் மேல் ஒரு மரியாதையை ஏற்படுத்தியிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அவனைச் சித்தப்பாக்களும், தாத்தாவும் திட்டும் போது எனக்குத்தான் பாவமாக இருக்கும். ஆனால் அவன் எந்தக் கவலையும் இல்லாதவனாக அலைந்து கொண்டிருந்தான்.

தாத்தாவின் வளவிலேயே, எதிர் வீட்டில் இருந்த தாத்தாவின் ஒன்று விட்ட அண்ணனின் பேரனான குமாருக்கும், சம்முகத்துக்கும் எல்லா விஷயங்களிலும் போட்டி இருந்தது போல் எனக்குத் தோன்றும். அதை அவனிடம் கேட்டால், ‘அதெல்லாமில்லடே… ‘ என்று சிரிப்பான். ஏறத்தாழ அவர்கள் இருவருக்கும் ஒரே வயதுதான். இருவருமே ஷாப்டர் ஸ்கூலில்தான் படித்தார்கள். இருவருக்கும் தனியான நண்பர் வட்டாரம். சம்முகம் எம்.ஜி.ஆர் ரசிகன், குமார் சிவாஜி ரசிகன். எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகும் போதெல்லாம் இருவரும் அதீத பதற்றத்துடன் இருப்பார்கள். சில நேரங்களில் இருவருக்கும் இது பற்றி நிறைய வாக்குவாதங்கள் கூட வந்ததுண்டு. திடாரென்று ஒரு நாள் கக்கூஸ் கதவில், புதிதாக வெளியாகி இருந்த எம்.ஜி.ஆர் படத்தின் அன்றைய வசூல் சாக்பீஸால் எழுதப்பட்டிருந்தது. மறு நாள் அதற்குக் கீழ் சிவாஜி படத்தின் வசூல் எழுதப்பட்டிருந்தது. இதெல்லாம் அந்த வளவில் நகைச்சுவைக்குரிய காரியங்களாகக் கருதப்பட்டன. ஆனால் தாத்தாவும், குமாருடைய அப்பாவும் அதை அவ்வளவாக ரசிக்கவில்லை. தாத்தா ஆச்சியிடம் சம்முகத்தின், தறுதலைத் தனத்தைச் சாடிய போது, ஆச்சி, ‘அவன் பாட்டுக்கு என்னத்தையும் எழுதிட்டுப் போறான்..கக்கூஸ் கதவுலதான எழுதிருக்கான் ? நீங்க பேசாமக் கிடங்க.. ‘ என்று அவரை அடக்கி விட்டாள். ஆனால் குமாருடைய அப்பா, அவனை அடித்த அடியில், அவன் மூன்று நாட்கள் எழும்பவில்லை என்று சண்முகம் என்னிடம் கூறிச் சிரித்தான். அந்த அடிக்காகக் காத்திருந்தது போலக் குமார் அதன் பின் ரெம்ப மாறி விட்டான். ஊர் சுற்றுவதும், சினிமா பார்ப்பதும் அடியோடு குறைந்தது. ஓரளவு படிப்பிலும் அக்கறை கூடி, படித்துப் பின்னால் ‘சவுத் இண்டியா பாங்க் ‘கில் ஆபீஸராகி விட்டான். அவன் ஆபீஸரானதும் அவன் அம்மைக்கு ரெம்பப் ‘பவிசு ‘ வந்திட்டதாக ஆச்சி என்னிடம் சொல்லி இருக்கிறாள்.

என்னிடம் ரெம்பப் பிரியமாக இருந்த சண்முகம் என்னிடம் கோபம் கொண்டு ஒரு லீவு பூராவும் என்னிடம் பேசாமல் இருந்த சம்பவத்தைச்

சொல்லியே ஆக வேண்டும். எம்.ஜி.ஆருடைய ‘உலகம் சுற்றும் வாலிபன் ‘ வெளியான வருட தீபாவளி. தீபாவளி, பொங்கலுக்குத் தாத்தா வீட்டுக்குக் குடும்பத்துடன் அப்பா போய் விடுவது வழக்கம். தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பிருந்தே சண்முகம் பித்துப் பிடித்தவனாகி விட்டான். அப்போது எனக்குப் பத்து வயது இருக்கும், அவனுக்குப் பதிமூன்று, பதினாலு. தீபாவளி அன்றே படத்தைப் பார்த்து விடுவது என்று தீர்மானமாக இருந்தான். தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு, ஒரு மணி சுமாருக்கு, என்னையும் எழுப்பி சென்ட்ரல் தியேட்டருக்கு அழைத்துச் சென்றான், தீபாவளி அன்று காலைக் காட்சிக்கு டிக்கட் வாங்க. எனக்கு ‘உலகம் சுற்றும் வாலிபனை ‘ப் பார்க்க ஆசையிருந்தாலும், அப்படி இரவோடிரவாகப் போய் நிற்பதில் ஆர்வமில்லை. மேலும் வீட்டில் தெரிந்தால் என்ன நடக்குமோ என்ற பயம் வேறு. ஆனால் அவனை எதிர்த்துச் சொல்ல பயந்து கொண்டு, வேறு வழியில்லாமல் அவனுடன் சென்றேன். சண்முகம் மிகுந்த உற்சாகத்தோடு இருந்தான். வழியில் என்னவெல்லாமோ எம்.ஜி.ஆரைப் பற்றியும், படத்தைப் பற்றி அவன் பத்திரிகைகளில் வாசித்ததைப் பற்றியும் பேசிக் கொண்டே வந்தான். எனக்கு உள்ளுக்குள் உதறலெடுத்துக் கொண்டிருந்தது. சென்ட்ரல் தியேட்டரில் துவங்கிய க்யூ பார்வதி தியேட்டர் வரை நீண்டிருந்தது. சென்ட்ரல் தியேட்டருக்கும், பார்வதி தியேட்டருக்கும் நடுவே இரு பஸ் ஸ்டாப்புகள். நான் மலைத்து விட்டேன். சண்முகம் ஒரு கணம் மலைத்தாலும், அடுத்த கணம் உற்சாகமாகி விட்டான்.

‘எப்படியும் மாட்னி ஷோக்குப் போயிரலாம்டே.. ‘எனறு கூறி விட்டு, க்யூவில் என்னையும் இழுத்துக் கொண்டு நின்றான். காலைக் காட்சிக்குப் படம் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை தொலைந்தது. நின்று கொண்டே கதை பேசினோம், கொட்டாவி விட்டோம், தூங்கினோம். விடிந்ததும் ஊரெல்லாம் தீபாவளி கொண்டாட, சண்முகமும், நானும் ஊத்தை வாயுடன் இன்னும் மலைப் பாம்பாக நகரும் க்யூவில் சினிமாவுக்கு டிக்கட் வாங்க நின்று கொண்டிருந்தோம். ‘உலகம் சுற்றும் வாலிபனை ‘ப் பார்க்கும் ஆசை எனக்குச் சுத்தமாகப் போய் விட்டிருந்தது. தீபாவளிக் காலையைத் தவற விட்ட பதற்றம் கூடியது. வயிற்றில் பசி வேறு! சண்முகம் அதே உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருந்தான். எட்டு மணி வாக்கில் நாங்கள் கலெக்டர் ஆபீஸ் அருகே நகர்ந்திருந்தோம். சண்முகத்துக்கும் தீபாவளிப் பண்டங்கள் ஞாபகம் வர, என்னை வீட்டுக்கு அனுப்பினான், இட்லியும், வடையும், அதிரசமும் எடுத்து வர. நான் யார் கண்ணிலும் படாமல் வீட்டுக்குப் போய் குளித்து, தீபாவளி உடைகளை அணிந்து கொண்டு, ஆச்சியிடம் போய் எங்கள் ரகசியத்தை உடைத்தேன். சதித் திட்டம் அவளுக்கு மட்டுமாவது தெரிந்தால்தானே அவனுக்குச் சாப்பாடு கொண்டு போக முடியும். மேலும் எங்கைளைக் காணோமென்று யாருக்காவது சந்தேகம் வந்தால், அவள்தானே காப்பாற்ற வேண்டும் ? ஆச்சிக்கும் ஒரு கணம் திக்கென்றது.

‘அட பாதகத்தி மக்களா ‘ என்று ஒரு கணம் திகைத்து விட்டு, அவள் ஆசைப் பேரனுக்கு இட்லியும், வடையும், அதிரசமும் கட்டித் தந்தாள். எனக்குப் புதிதாகத் தெம்பு வந்திருந்தது. உலகம் சுற்றும் வாலிபனைப் பார்க்கும் ஆசை புதுப்பிக்கப் பட்டவனாக, மீண்டும் சென்று சண்முகத்துடன் சேர்ந்து கொண்டேன். க்யூ நகர்ந்து மாட்டாஸ்பத்திரி அருகே வந்திருந்தோம். எப்படியும் மாலைக் காட்சிக்குப் போய் விடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. என்னுடைய உற்சாகம் குன்றியிருந்த நேரம், சண்முகம் மீண்டும் மதியச் சாப்பாடு எடுத்து வர என்னை வீட்டுக்கு அனுப்பினான்.

வீட்டுக்குள்ளே நுழையும் போதே அப்பா பார்த்து விட்டார். அது அவருடைய நெற்றிக் கண்! அதற்கு அப்புறம் நடந்தவை எல்லாம் ஒரு பத்து வயதுப் பையனால் கட்டுப்படுத்த முடியாத நிகழ்ச்சிகள். அப்பா என்னை முதல் முதலாக அடித்தார், கடைசியும் அதுதான். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.

சித்தப்பாக்கள் இருவரும் கோபத்துடன் சண்முகத்தைத் தேடிச் சென்று மீட்டு வந்ததை அந்த வளவு வெகு நாட்கள் பேசிக் கொண்டிருந்தது. என்னை எட்டப்பனாகக் கருதி அடுத்த முறை தாத்தா வீட்டுக்குப் போகும் போது சண்முகம் என்னுடன் பேச மறுத்து விட்டான். அவன் குணத்துக்கு அவ்வளவு நாட்கள் பேசாமல் இருந்ததே அதிகம்தான்.

அவனுக்கு வயதுக்கேற்ற உணர்ச்சிகளும், திருவிளையாடல்களும் அதிகமாகவே இருந்தன. எதிர் வீட்டில் இருந்த தாத்தாவின் ஒன்று விட்ட அண்ணன் மருமகன், மதுரையில் பி.டபிள்யூ.டியில் இஞ்ஞினியாராக இருந்தவர், சவுதிக்கு வேலைக்குப் போனதும், அவர் மனைவியும் குழந்தைகளும் திருனெல்வேலிக்கு வந்தனர். அவருடைய மகள் ராஜிக்கும் எனக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான். நான் அவளை விட ஏழெட்டு மாதங்கள் பெரியவனாக இருப்பேன். ராஜி அந்த வளவின் கதானாயகியானாள். மதுரை நாகரிங்களான மிடியிலும், சல்வார் கமிசிலும் உலவினாள். தலை முடியை பாப் செய்திருந்தாள். சண்முகத்துக்கு அவள் மீது தீராத காதல் ஏற்பட்டது. சண்முகத்துக்கு அவள் தங்கை உறவு என்று ஆச்சி சொல்லியதெல்லாம் அவனிடம் எடுபடவில்லை. ‘என்ன கூடப் பிறந்த தங்கச்சியா, இல்லை சித்தப்பா, மகள் பெரியப்பா மகளா ? தூரத்து உறவுதானே ‘ என்று என்னிடம் கூறினான். அவளும் ஏதோ வானத்தில் இருந்து இறங்கியவள் மாதிரிதான் நடந்து கொண்டாள். என்னுடைய சித்தப்பா, மற்றும் அத்தை பெண்களுக்கெல்லாம் அவள் போடும் உடைகளும், தலை முடியும், அவள் பேசும் பேச்சும் பெரிய கம்ப சித்திரங்களாகப் பட்டன. சண்முகம் தன்னை எம்.ஜி.ஆராகவும், அவளை சரோஜா தேவியாகவும் வரித்துக் கொண்டு சகட்டு மேனிக்குப் பகல் கனவுகள் காணத் துவங்கினான். எப்போது பார்த்தாலும் ராஜி, ராஜிதான். ஆனால் அவளோ இவனைக் கண்டு கொள்வதாகவே தெரியவில்லை. அவளும் இவனுடைய எண்ணங்களைப் புரிந்து கொண்டாள் போலும். இவனைக் கண்டாலே அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும்தான் வெடித்தது. இவனைத் தூசி மாதிரிதான் நடத்தினாள். ஆனால் அதற்கும் சண்முகம் ஒரு காரணம் சொல்லிக் கொண்டான். பொதுவாகவே, முதலில் பெண்கள் அப்படித்தான் இருப்பர்களாம், அவளுக்கு இவனிடம் காதல் இருக்கிறது என்று யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக அப்படி கடுகடுப்பாக நடந்து கொள்கிறாள் என்று யாரோ சினிமாவில் பேசிய வசனத்தை முழுமையாக நம்பியவனாப் பேசினான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவளுக்கு அவன் மீது காதலெல்லாம் இல்லை என்பது என் சிற்றறிவுக்கு எட்டத்தான் செய்தது. அவள் என்னவோ தான் ராஜ குமாரி, இந்திரா காந்தி, ஹேமமாலினி எல்லாம் கலந்த கலவை என்று அலைகிறாள், அவளுக்கு எப்படி இவனைப் பிடிக்கும் என்பது வரை என் அறிவுக்கு எட்டியது. அவளுடைய தாத்தா, அவளை ‘ராஜ ராஜேஷ்வரி ‘ என்று அழைத்து அவள் பெரிய ராஜ குமாரிதான் என்பது போல அந்த வளவுக்குப் பைறை சாற்றிக் கொண்டிருந்தார். நான்கு வருடங்கள் சண்முகம் அவள் அவனைக் காதலிக்கத்தான் செய்கிறாள் என்று நம்பிக் கொண்டிருந்தான். ராஜி கல்லூரிக்கு மதுரைக்குச் செல்லும் முன் அவனைக் கூப்பிட்டு, ஒழுங்காக வேலை தேடி செட்டில் ஆகும் வழியைப் பார்க்கச் சொன்னதாகவும், அவளுக்கு சண்முகம் மேல் கொஞ்சம் கூடக் காதல் கிடையாது என்றும் சொல்லி விட்டுச் சென்று விட்டாள். அதன் பின் சிறிது நாட்கள் சண்முகம் ரெம்பச் சோகமாக அலைந்து கொண்டிருந்தான். அவள் திருனெல்வேலியில் இருந்த நான்கு வருடங்களும் அவனை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை, பின் இவன் எப்படி அவளுக்கும் இவன் மீது காதல் என்று நினைத்துக் கொண்டான் என்பது எனக்குப் புரியாத புதிர். அவள் மதுரைக் கல்லூரிக்குப் போன வருடம் நானும் பொறியியல் கல்லுரியில் சேர்ந்து விட்டேன், அப்புறம் பல வருடங்களுக்கு அவளைப் பார்க்கவில்லை. நான் படிப்பு முடிந்து வேலைக்குச் சேர்ந்த மறு வருடம், அப்பா ராஜியின் புகைப் படத்தை அனுப்பி, அவளுடைய, அப்பா, அம்மாவுக்கு ராஜியை எனக்கு மண முடிக்க வேண்டும் என்றும் ஆசை இருப்பதாகவும் எழுதிய போது, எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ராஜகுமாரிக்கு ஏற்ற ராஜகுமாரனாக நான் இருப்பேன் என்று எப்படித் தீர்மானிதார்கள் என்று தெரியவில்லை. புகைப் படத்தில் அழகாகத்தான் இருந்தாள். பாப் செய்யப்பட்ட முடி இப்போது வளர்ந்து விட்டது போலும். ஹேமமாலினியின் சாயல் இல்லாவிட்டாலும் அழகாகவே இருந்தாள். இருந்தாலும் அப்பாவுக்கு சொந்தத்தில் பெண் வேண்டாம் என்றும், ராஜிக்கு என்னை விட நல்ல மாப்பிள்ளை கிடைப்பான் என்றும் எழுதி போட்டேன். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அது வருத்தம்தான். இருந்தாலும் அவளை மணப்பது சண்முகத்தை ரெம்பக் கஷ்டப்படுத்தும் என்று ஏனோ எனக்குத் தோன்றியது.

சண்முகம் மாறவே இல்லை. அவனைச் சுற்றி இருந்த மனிதர்கள் ரெம்பவும் மாறினார்கள், சூழல் மாறியது, வீடு மாறியது, காலம் மாறியது, அவன் மட்டும் சிறிதும் மாறவில்லை. நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்த போது ரெம்பவும் சந்தோஷப் பட்டான். அவன் அப்போது பி.எஸ்.ஸி பிஸிக்ஸ் படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தான். அவ்வப்போது, என்னுடன் ஹாஸ்டல் அறையில் வந்து தங்குவான். வேலை கிடைக்கவில்லை என்று அதிகம் வருத்தப்பட்டதாகவும் தெரியவில்லை. எனக்குத்தான் அவன் இன்னமும் வேலை இல்லாமல் இருக்கிறானே என்ற வருத்தம் இருந்தது. அவனுடைய கைச் செலவுக்கு நான் பணம் தருவது, எனக்குத்தான் துக்கமாக இருந்தது. அவன் அதில் எந்த விதமான தவறும் இருப்பதாகத் தெரிந்தும் கொள்ளவில்லை, காட்டிக் கொள்ளவும் இல்லை. ஆனால் நான் தரும் பணத்தில், அவன் ‘ஆயிரத்தில் ஒருவன் ‘ படத்தை எட்டு முறை பார்த்த போது, அவனிடம் கோபம் எழுந்தாலும், என்னால் அவனை ஒரு போதும் கடிந்து கொள்ள முடிந்ததில்லை. ஏதேனும் கூறி, அவனுடைய சந்தோஷ உலகை இடித்துத் தள்ள மனமில்லை. அவன் எப்போதும் கேலியும், சந்தோஷமுமாக இருக்கப் பிறந்தவன், அவனை அப்படி இருக்க விடுவதே என் கடமை என்று தோன்றியது. நிச்சயம் அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும், அதில் அவன் கேலியும், கூத்தும் பண்ணிக் கொண்டிருப்பான் என்றுதான் என்னைச் சமாதானம் செய்து கொள்வேன். ஆனால் அப்போது சினிமா மோகத்துடன் அரசியல் மோகமும் சேர்ந்து கொண்டிருந்தது. அதைப் பற்றி மட்டும் அவனிடம் ஒரு முறை பேசினேன். அதற்கும் சிரித்துக் கொண்டே, ‘அக்கா ஆசைப்படி கலக்டர்தான் ஆக முடியலை.

ஒரு அமைச்சராவது ஆகிருவோம்..என்னடே ? ‘ என்றான். நான் ஒன்றும் கூறவில்லை. எனக்கு அவன் போகும் பாதை அவ்வளவு சுகமானதாகப் படவில்லை. ‘பாத்துக்கோப்பா.. நல்ல வேலை கிடச்சு செட்டிலாறது முக்கியம். ‘ என்று மட்டும் கூறினேன்.

அப்புறம் இருவர் வாழ்க்கையும் எப்படியெல்லாமோ அமைந்தது. நான் பொறியியல் படிப்பு முடிந்து வடக்கே வேலை கிடைத்துப் போய்ச் சில வருடங்களில், திருமணம் முடிந்தது. திருமணத்துக்குச் சண்முகம் செஙகல்பட்டில் இருந்து வந்திருந்தான். அப்போது வேலை கிடைத்து ரயில்வேயில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அதே கேலிச் சிரிப்பும் புன்னகையும்தான். புதுப் பெண்ணான என் மனைவியிடம் நாங்கள் ‘உலகம் சுற்றும் வாலிபன் ‘ பார்க்கப் போன கதையை சுவாரஸ்யம் போகாமல் கூறி, மணப்பெண் என்ற வெட்கத்தையும் மீறி அவளைச் சிரிக்க வைத்தான். அவனுக்கும் பெண் பார்த்துக் கொண்டிருந்ததாக அம்மா சொன்னாள். நல்ல பொறுப்பான, புத்திசாலியான பெண்ணாகப் பாருங்கள் என்று அவன் அம்மாவிடம் கூறிய போது, ‘அத்தான் பொண்டாட்டி புத்திசாலியானவளா இருந்தாத்தான் குடும்பம் உருப்படும்னு சொல்லுதியா ? அதுவும் சரிதான். ‘ என்று சிரித்தாள். அப்போது அருகே நின்றிருந்த காந்திமதி, ‘அவரவர்க்கு எது நடக்கணும்னு இருக்கோ அதுதான நடக்கும் ? ‘ என்றாள். அவளருகே அவள் ஜாடையிலேயே சிறிதும் சினேகமில்லாத பார்வையுடன் ஒரு பத்து வயதுப் பெண். காந்திமதியின் பார்வையில் இன்னும் குரோதம் இருந்ததாகப் பட்டது எனக்கு. மேலும், நான் திருமணம் முடிந்த சில மாதங்களில் மேற் படிப்புக்காக அமெரிக்கா போகப் போவதை அப்பா அவளிடம் சொல்லி இருக்க வேண்டும். ‘என்ன அமெரிக்கா போகப் போறியாமே ? ‘ என்று அவள் கேட்ட தொனி, என்னைச் சிறு வயதில், அவள் தாத்தா வீட்டில் வைத்து மிரட்டிய தொனிக்குச் சிறிதும் குறைவில்லை. அந்த வயதிலும் அவளுடைய அருகாமை என்னைச் சிறிது நடுங்கத்தான் வைத்தது.

மேல் படிப்பிற்காக அமெரிக்கா போன பின், என் வாழ்க்கை நின்று ஆசுவாசப் படுத்திக் கொள்ள இயலாத ஒன்றாகி விட்டது. அப்புறம் அங்கேயே வேலை அமைந்து இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இந்தியா விஜயம் என்று ஆனது. அதற்கு அப்புறம் ஒரு முறை மட்டுமே சண்முகத்தைப் பார்த்தேன். அவனுக்கும் திருமணமெல்லாம் ஆகி தூத்துக்குடியில் இருந்தான். என்னைப் பார்த்து சந்தோஷப் பட்ட நேரத்தில், சிறிது சங்கோஜமும் இருந்தது அவனுக்கு. அமெரிக்க வாழ்க்கை பற்றியெல்லாம் நிறையக் கேட்டான். எனக்குப் பிடிக்கும் என்று மனைவியிடம் கூட்டாஞ்சோறு செய்யச் சொன்னான். அவனருகே அமர்ந்து கூட்டாஞ்சோறு சாப்பிட்ட போது, எனக்குத் திருநெல்வேலியில் ஆச்சி செய்யும் கூட்டாஞ்சோறும், அதைச் சமைப்பதற்குள் அவள் செய்யும் ஆகாத்தியங்களும் ஞாபகம் வந்து சிரித்தேன். அவனிடம் கூறிய போது, ‘அதெல்லாம் ஞாபகம் இருக்கா ? அமெரிக்கா போனாலும் எல்லாத்தையும் மறக்காம இருக்க. ‘ என்று கூறிய போது அவன் கண்கள் கலங்கின. சொல்லத் தெரியாத உணர்வு என்னைப் பிழிந்து எடுத்தது. சிரிப்பும், கேலியுமாக இருக்க வேண்டியவன் கண் கலங்குவது அவனுக்கு இழைக்கப் படும் அநீதி என்று தோன்றியது. அப்புறம் அமெரிக்காவின் தொழிற் சங்கங்களைப் பற்றியெல்லாம் ரெம்ப விசாரித்தான். ரயில்வே தொழிற் சங்கங்களில் ரெம்பத் தீவிரமாக இருக்கிறான் என்று உணர்ந்து கொண்டேன். அப்போது சினிமா வெறி குறைந்து தொழிற் சங்க வெறி கூடியிருந்தது. குடும்பத்தை ரெம்பக் கவனிப்பதாகத் தெரியவில்லை. குடிப் பழக்கம் சேர்ந்துள்ளது என்று அப்பா கூறியிருந்தார். கடைசியாகத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கூறினேன், ‘இதெல்லாத்தையும் கொஞ்சம் மூட்டை கட்டி வச்சுட்டு குடும்பத்தை நல்லா பாத்துக்கப்பா. ‘ சட்டென சண்முகத்தின் முகத்தில் எப்போதும் தவழும் புன்னகையும், சினேகமும் மறைந்தது. ‘பெரிய ஆளாயிட்ட, என்னடே ? ‘ என்றான். எனக்கு மனதெல்லாம் வலித்தது. ஆழமும், வீழ்ச்சியும், சுழியும் உடைய காட்டாற்றின் இரு எதிர்க் கரைகளில் நாங்கள் இருவரும் நிற்பதாகப் பட்டது எனக்கு. காட்டாற்றைக் கடக்க எனக்கு வழி தெரியவில்லை.

அதற்கு அப்புறம் வந்த நேரங்கள் எல்லாம் அவனைப் பார்க்க முடியவில்லை. வேறு ஊர்களுக்கு மாற்றலாகி இருந்தான். அவனை பற்றிக் கேட்டதெல்லாம் மனதை ரெம்ப சங்கடப்படுத்தின. தொழிற் சங்க ரெளடியாகிவிட்டான் என்றார் அப்பா. குடிகாரனாகி விட்டான் என்றாள் அம்மா. அது போன்ற செய்திகளைக் கேட்கும் போதெல்லாம் அழ்ந்த வருத்தம் கப்பிக் கொள்ளும். என்னால் எதுவும் செய்ய முடியாத இயலாமை மீது எனக்குக் கோபம்தான் வந்தது. ஒரு முறை போயிருந்த போது தொழிற் சங்கத் தலைவருக்கும் அவனுக்கும் ஏதோ பிரச்னையாகி, பொய்க் கேஸ் ஜோடிக்கப் பட்டு, ரயில்வே வேலையும் போய் விட்டதாகத் தெரிந்தது. குடும்பத்துடன் உறவையே முறித்துக் கொண்டது போல் நடந்து கொள்வதாகவும் அப்பா கூறினார். அவனுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் உதவலாம் என்று நினைத்த போது சித்தப்பா தடுத்து விட்டார். உதவி செய்யப் போகிறவர்களையும் தாறு மாறாகப் பேசி அனுப்பி விடுகிறானாம். அதற்குப் பிறகு இப்போதுதான் வருகிறேன்.

திருநெல்வேலி ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறான் என்று சொன்னதும் உடனே புறப்பட்டேன். ‘இன்ட்டென்சிவ் கார் ‘இல் இருந்தான். தூங்குவதைப் போலத்தான் இருந்தது. கடைவாயில் ஒரு புன்னகை வழிந்து கொண்டிருப்பது போல் தெரிந்தது என் பிரமையாகவும் இருந்திருக்கலாம். அத்தைக்கு என்னைக் கண்டதும் கண்ணீர் பொங்கிக் கொண்டு வந்தது. என் கண்களில் குளம் கட்டிய கண்ணீரை மறைக்க முகத்தைத் திருப்பிக் கொண்டேன். அந்த நிலையிலும் என் மனைவியையும், குழந்தைகளைப் பற்றியும் விசாரித்தாள் அத்தை. சண்முகம் மட்டும் கோமாவில் இல்லையென்றால் நான் காபி சாப்பிட வேண்டும் என்று பரபரத்திருப்பான் என்று நினைத்துக் கொண்டேன். அவன் மனைவி முகத்தைப் பார்க்கவே தைரியமில்லை. அவளிடம் மருத்துவச் செலவு பூராவற்றையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்ன போது, அவள் அழுத அழுகையைப் பார்க்க முடியாமல் வெளியே வந்தேன். திரும்பும் போது மனதெல்லாம் குற்ற உணர்ச்சி இருந்து ஆட்டிப் படைத்தது. சித்தப்பாதான் என்னைச் சமாதானப் படுத்திக் கொண்டே வந்தார்.

‘ நாம என்னடே செய்ய முடியும் ? அவனா மண்ண அள்ளிப் போட்டுக்கிட்டான். இப்படி சீரழிஞ்சு போவான்னு யாருக்குத் தெரியும் ?, ‘ என்றார். எனக்கு வருத்ததிலும் கோபத்திலும் குரல் உடைந்தது. சித்தப்பாவும் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

அடுத்த ஒரு வாரத்தில் சண்முகம் செத்துப் போனான். நெஞ்சு இறுக வாசலில் அமர்ந்திருந்தேன். உள்ளேயிருந்து அவ்வப்போது அழுகைக் குரல் ஓங்கி ஒலித்து அடங்கியது. ஒரு உயிர் இப்படிச் சீரழிந்து அனாவஸ்யமாகப் போனதில் எல்லாருக்கும் இருந்த வருத்தமும், சோகமும் பெரிய திரையாகக் கவிழ்ந்திருந்தாலும், செத்துப் போனவன் போய் விட்டான், அதற்காக இருப்பவர்களும் சாகவா முடியும் என்பது போல அவ்வப்போது காபி, வினியோகமும், சோடா வினியோகமும் நடந்து கொண்டிருந்தது. என் நினைவுகளும், மனதும் இலக்கிலாமல் பாய்ந்து கொண்டிருந்தது. அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஏதேனும் அர்த்தமுண்டா, ஏன் அர்த்தமில்லாமல் போனது என்று மனது குமுறிக் கொண்டிருக்கும் வேளையில், அவனுக்குக் கட்டப் படும் பாடையையும், சங்கு ஊதுபவன் காபி அருந்துவதையும் வெறித்துக் கொண்டிருந்தேன். ஆயிற்று. சண்முகம் கடைசிப் பிரயாணத்திற்குத் தயாராகி விட்ட நேரத்தில், வெளியே தாரை தப்பட்டைச் சத்தம் கேட்டது. வெளியே ஏதோ ஊர்வலம் வருகிறது என்றும், அது கடந்து போன பின்புதான் அவனுடைய இறுதி ஊர்வலம் புறப்பட முடியும் என்று சித்தப்பா யாரிடமோ சொல்வது கேட்க, திண்ணையில் இருந்து எழும்பி வெளியே எட்டிப் பார்த்தேன். ஏதோ சினிமாவுக்கு விளம்பர வண்டி போய்க் கொண்டிருந்தது. ஒரே வாண்டுகள் கூட்டம். வண்டி மிக மெதுவாக நகர்ந்து சண்முகத்தின் வீட்டருகே வந்தது. ஏதோ எம்.ஜி.ஆர் படத்துக்கு விளம்பரம்!

அவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த துக்கமும், சோகமும் உடைத்துக் கொண்டு வர, குமுறிக் குமுறி அழுதேன். என்னை எப்போதுமே அழ வைத்து வேடிக்கை பார்க்கும் காந்திமதியும், அன்று என்னுடன் சேர்ந்து அழுதாள்.

***

alamu_perumal@yahoo.com

Series Navigation

அலர்மேல் மங்கை

அலர்மேல் மங்கை