ஆடம் ஸ்ட்ரீட் அழகி

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

ப்ரகாஷ்ராயன்


ப்ரசாத்

———-

நான் சுரேஷின் வீட்டிற்கு சென்ற போது , சுரேஷின் அம்மா யாரையோ திட்டிக் கொண்டிருந்தாள். அது என்னை இல்லை என்று தெரிந்ததும், காரை ஓரமாக பார்க் செய்து விட்டு தைரியமாக உள்ளே நுழைந்தேன். கிளம்புவதற்கான ஏற்பாட்டு ஏதும் காணோம். இன்றைக்குத் தானே சொன்னார்கள். காரைக் கூட எடுத்து வந்திருக்கிறேனே

‘ என்ன மாமி, ப்ரோக்ராம்ல ஏதாவது சேஞ்சா ?, … ஆறு மணின்னு போன்ல பேசும் போது சொன்னேனே, மறந்துட்டாங்களா ? ‘ என்றேன். அதற்கு மாமி, அதாவது சுரேஷின் அம்மா. ‘ வா, ப்ரசாத், அந்த கூத்தை ஏன் கேட்கிறே ? நல்லாத்தான் இருந்தான் உன் ஃபெரண்டு, இப்போ திரும்பவும் , முருங்கமரம் வேதாளம் கதைதான் ‘ நீயே போய் என்னன்னு விசாரி ‘ என்றாள்.

விஷயம் ஒன்றுமில்லை. சுரேஷுக்கு பெண்பார்க்கச் செல்ல வேண்டும். இவன் வயது ஒத்த எனக்குக் கல்யாணம் ஆகி இரண்டு வயதில் ஒரு வாண்டு என் வீட்டை அதகளம் பண்ணிக் கொண்டிருப்பதிலும் தன் வீட்டில் அந்த மாதிரி குழந்தை சத்தம் கேட்காமல் இருப்பதிலும் , அவன் அம்மாவுக்கு சற்று ஆதங்கம். ஹூம்… என்று பெருமூச்சு விடுவாள். இருக்காதா பின்னே ? வயது முப்பதைத் தொடப் போகிறது. இனியும் தாமதித்தால், பெண் கிடைப்பது கஷ்டமாக இருக்கும் என்று சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறான்.

ரங்கராஜபுரம். உயர் நடுத்தர வகுப்பு மூன்று அறை ப்ளாட். செத்துப் போவதற்கு முன், அவன் அப்பா வாங்கியது. செருப்பை கழட்டிவிட்டு , ஹாலைக் கடந்து, அவன் ரூமுக்கு சென்றதும், கம்ப்யூட்டரில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தான்.

சுரேஷ் என் நீண்ட நாள் நண்பன். பார்த்தசாரதி கோயில் அருகே ,ஒரே தெருவில் பக்கத்து பக்கத்து வீட்டில் பிறந்து வளர்ந்தும் , ராமகிருஷ்ணாவிலும், விவேகானந்தாவில் ஒன்றாக படித்தும், வளர்ந்த நட்பு எங்களுடையது. ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கவுண்டண்டாக அவன் இருக்க, நான், திருவல்லிக்கேணியில் என் வீட்டிற்கு பக்கத்திலேயே ஒரு ஆட்டோ பைனான்ஸ் நிறுவனம் நடத்துகிறேன். இப்போது அவன் திருவல்லிக்கேணியில் இருந்து ஜாகை மாற்றி மாம்பலத்துக்கு சென்று விட்டாலும், தினப்படிக்கு பார்த்துக் கொள்வது வழக்கம். நாங்கள் இருவரும் ஒன்றாக நீண்ட நாள் சுற்றிக் கொண்டிருந்தாலும், எனக்கும் அவனுக்கும் ரசனைகள் ஒன்றானதல்ல. ‘Poles apart ‘ என்று சொல்வார்களே அது மாதிரி. நான் டா என்றால் அவன் காபி ரசிகன். எனக்கு கமல் என்றால் அவன் ரஜினி, பள்ளியில் படிக்கும் போது எனக்கு ஜெயலட்சுமி டாச்சர் என்றால் அவன், ரூபி டாச்சர். இது மாதிரி எந்த விஷயத்திலும் ஒத்துப் போகாதவர்கள்.

திருமண விஷயத்திலும் அப்படித்தான். மூன்று வருடங்களுக்கு முன் நான் காதல் திருமணம் செய்து கொண்டேன். இவன் கல்யாணமே வேண்டாம் என்று அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்கிறான். என் காதல் திருமணத்தின் போது, தாலி, ரெஜிஸ்ட்ரார் ஆபீஸ், போலீஸ், தகராறு என்று எனக்காக வியர்வை சிந்தியவன். இவன் திருமணத்தில் எனக்கும் தார்மீக பொறுப்பு இருக்கிறது என்று உணர்ந்து, சமயம் கிடைக்கும் போதெல்லாம் திருமணம் செய்து கொள்ள வேண்டியதன், சமூக, குடும்ப, பயலாஜிகல் காரணங்களை எடுத்துச் சொல்வேன். லேசாக மசிந்து கொடுக்கவே, முனைந்து, எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் பற்றி, மாமியிடம் எடுத்துச் சொல்லி, அது இன்று பெண் பார்க்கும் படலம் வரை வந்து நிற்கிறது. சற்றே நிம்மதி கொண்டிருந்த வேளையில் திரும்பவும் ஏதோ ப்ரச்சனை செய்கிறான்.

‘ ஏண்டா திரும்பவும் ஏதோ தகராறு பண்றியாமே ? பொண்ண வந்து பாத்துட்டு புடிக்குது, இல்லே புடிக்கலேன்னு சொல்லு. அத உட்டுட்டு, காலைலே செரின்ன்னு சொல்றே, இப்ப வந்து வேணான்னு

சொன்னா என்னடா அர்த்தம் ?

‘ அது இல்லே மாப்ளே! ‘ நான், இவனுக்கு, மாப்பிள்ளையாம்… . ‘ அது வந்துடா,… போட்டோவிலே பாக்க பொண்ணு பாக்க லட்சணமாத்தான் இருக்கு, இல்லேன்னு சொல்லலே, நல்ல பேக்ரவுண்டு, நம்ம ஃபேமிலிக்கு சரியா வரும். இருந்தாலும் …. ‘

‘ அப்பறம் என்ன கேடு ? படிச்சு, படிச்சு, நேத்தைக்கு முழுக்க சொன்னேன், மாமிக்கு உடம்பு முடியலே, உனக்கும் வயசாகுதுன்னு. மாடு மாதிரி தலையாட்டிட்டு, இப்ப வந்து லுங்கிய வழிச்சி விட்டுகிட்டு, வந்து வியாக்கியானமா பண்றே ? பரதேசி ‘ எதுவா இருந்தாலும், பொண்ணை பாத்துட்டு வந்து பேசிக்கலாம், இப்ப எந்திருச்சு பேண்ட் போட்டுட்டு கிளம்பு ‘

எனக்கு கோபம் வந்தது. இவன் பொருட்டு, இருந்த வேலையை எல்லாம் தள்ளி வைத்து விட்டு, வந்திருக்கிறேன், இவன் என்னடாவென்றால்…

‘ கல்யாணம்னு ஒண்ணு பண்ணிகிடனுமான்னே யோசனையா இருக்கு, ஒரு கோப்பை ஒயினுக்காக கடையவே வாங்கணுமான்னு ஒருத்தர் சொன்ன மாதிரி. என் லட்சியத்துக்கு கல்யாணம் எல்லாம் சரிப்பட்டு வருமாடா ? ‘ என்றான் திடார் சாக்ரடாஸ் போல.

லுங்கி கட்டிய சாக்ரடாஸை நான் அதுக்குமுன் பார்த்ததில்லை.

‘ எவனோ பொண்ணு கிடைக்காதவன் இல்லாட்டி, குடிகாரன் சொல்லி இருப்பான். ‘ , நீ நெஜமான காரணத்தை சொல்லு. ‘ ‘ எவனாவது மொட்டை கடுதாசு போட்டிருக்கானா ? காதல் கீதல்னு ? ‘

‘சேச்சே , டாவி சீரியல் ஜாஸ்தி பாக்கறியா ? அது இல்ல.. ‘ என்று உடனடியாக மறுத்தான். அவன் தன் தயக்கத்துக்கான காரணத்தை சொன்னான். ‘ அந்த பொண்ணு பிறந்து வளர்ந்தெதெல்லாம் நாக்பூர்லேயாம், ‘ என்றான். ‘ அப்படின்னா அந்த பொண்ணுக்கு தமிழ் எழுதப் படிக்க தெரிஞ்சிருக்குமோ என்னவோ ? ‘

எனக்கு இப்போதுதான் விளங்கியது . இவனுக்கு சமீபமாக எழுத்து பித்து பிடித்திருக்கிறது. திடாரென்று ஒரு பிரிண்ட் அவுட்டை மெனக்கெட்டு என் ஆபீசுக்கு வந்து, தந்து படிக்கச் சொல்வான். கம்ப்யூட்டரில் தமிழில் கூட டைப் அடிக்க முடியும் என்பதே எனக்கு கொஞ்ச நாளாகத்தான் தெரியும். என் வேலைக்கு எம்.எஸ் வேர்டும். ஸ்பெரெட்ஷீட்டும், டாலியும் போதும் . காகிதத்தை கையில் திணித்து எப்படி இருக்கிறது என் கவிதை என்பான். இதெல்லாம் கவிதை இல்லேடா என்றால் கோவித்துக் கொள்ளப் போகிறான் என்று சுமாராக இருக்கிறது என்று சொல்வேன். என்னை மாதிரி , இன்னும் பலரும் அவன் மீது பச்சாதாபம் கொண்டிருந்தார்கள் என்பது எனக்கு தெரிந்திருக்கவில்லை. விளைவு, அவன் தன்னை ஒரு கவிஞன், எழுத்தாளன் என்றே நம்பத் துவங்கி விட்டான்.

ஒரு வாஷிங் மிஷின் கம்பெனி அக்கவுண்டண்ட் மனைவி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு எழுத்தாளன் மனைவிக்கென்று ஒரு இலக்கணம் இருக்கிறதல்லவா ? அவள் நிறையப் படிக்கிறவளாக இருக்க வேண்டும் கொஞ்சமாவது எழுதத் தெரிந்திருக்க வேண்டும். ‘ என் எழுத்தாள கணவரைப் பற்றி ‘ என்று ஏதாவது பத்திரிகை வியாசம் கேட்டால், அதை எழுதும் அளவுக்காவது எழுதத் தெரிந்திருக்க வேண்டும். அவன் எழுதுகிறவற்றை பற்றி க்ரிடிகலாக அலசத் தெரிந்திருக்க வேண்டும். இதெல்லாம் அவன் , தன் கல்யாணப் பேச்சு ஆரம்பிக்குமுன் என்னிடம் சொன்னவை.

இந்த நிபந்தனைக்கு ஏதாவது பங்கம் வந்து விட்டது என்று நினைக்கிறானா ?

‘ டேய், உனக்கு ஒருத்தன் பொண்ணைத் தரேன்னு ஒருத்தன் சொல்றதே பெரிய விஷயம். உனக்கு கண்டிஷன் வேறயா ? ‘ அந்த பொண்ணுக்கு தமிழ் எழுதப் படிக்க தெரியாதுன்னு யார் சொன்னா ?

முகம் மலர்ந்து. ‘ அப்படின்னா , தெரியுமா ? ‘ , அதாவது, உனக்குத் தெரியுமா ? ‘

அவன் என்னைக் கேட்டதில் ஒரு நியாயம் இருக்கிறது. இந்த பெண் பார்க்கும் படலத்தை நான் தான் ஏற்பாடு செய்தேன். . பெண்ணுடைய ஒன்று விட்ட அண்ணன், என்னுடைய கிளையன்ட். நான் , முனைந்து விசாரித்து , ஏற்பாடு செய்திருக்கிறேன். உண்மையில் எனக்கும், அப்பெண்ணிற்கு தமிழ் எழுதப் படிக்க தெரியுமா என்று தெரியாது. ‘

‘ தெரியும் ‘ என்று பொய் சொன்னேன். மேலும், ‘ இப்படியெல்லாம் கண்டிஷன் போட்டா, உனக்கு பொண் கிடைக்கவே கிடைக்காது. அதுலயும், தமிழ் எழுதப் படிக்கத் தெரிஞ்சவங்க எல்லாருக்கும், கதை கவிதையெல்லாம் ரசிக்கத் தெரிஞ்சிருக்கும்னு என்ன கேரண்டி ? வந்து பார், பேசு. புடிச்சிருந்தா சரின்னு சொல்லு. சோபன ராத்திரி அன்னைக்கி மேற்படி விஷயங்கள் கூடவே, கவிதையை ரசிக்கவும் கத்துக் கொடு. யார் வேண்டாங்கறா ? என்று கடைசி வரியின் போது கண்ணடித்தேன்.

இதற்கிடையில், அவனுடைய அம்மா வந்து காபி வைத்து விட்டு சென்றாள். எனக்குக் கையில் கொடுத்தவள், அவனுடைய மேஜைமேல் லொட்டென்று வைத்து விட்டு சென்றாள். கோபம்.

இவன் வந்து பெண்ணைப் பார்க்கட்டும். வந்து பிடிக்கவில்லை என்று சொன்னால், சமாளித்துக் கொள்ளலாம். போகாமலேயே விட்டு விட்டால், என்னால் சமாளிக்க முடியாது. எதுவாக இருந்தாலும் பின்னர் பார்த்துக் கொள்வோம் என்று முடிவு செய்தேன்.

காபி குடித்தான். எழுந்து ஷேவ் செய்தான், அம்மா வந்து வைத்த காபியை குடித்துக் கொண்டே கம்ப்யூட்டரை ஆஃப் செய்தான்,சலவையில் இருந்த வந்த சொக்காய் , நிஜாரை அணிந்தான்.

அரை மனதோடு கிளம்பினான்

**********

சுரேஷ்

——–

அரை மனதோடு கிளம்பினேன். இந்த ப்ரசாத்துக்கு என்ன ? கவிதை கதை என்று ஒரு புண்ணாக்கும் தெரியாது. காதல் கல்யாணம் வேறே. நான் அப்படியா ? வளரும் எழுத்தாளன். என் மனைவி எப்படி பட்டவளாக இருக்க வேண்டும் என்று நான் கற்பனை செய்யக் கூடாதா ? என்ன அராஜகம் இது. பெண்ணுக்கு தமிழ் தெரியவில்லை என்றால் அங்கேயே பெண்ணை பிடிக்கவில்லை என்று சொல்லி நிராகரித்து விட வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டு காரில் ஏறினேன்.

எனக்கு கல்யாணம் என்றால் வெறுப்பெல்லாம் ஒன்றும் இல்லை. வாழ்நாள் முழுக்க கூட வரப்போகிறவளை, நிதானமாக, ஆற அமர யோசித்து செலக்ட் செய்யலாம் என்றால் அதற்குள் குதிக்கிறார்கள். எல்லாம் இந்த ப்ரசாத் பயலால் வந்தது. அவனுக்கு ‘என்னால் இந்த திருமணம் நடந்தது ‘ என்று மார்தட்டிக் கொள்ளவேண்டும். அதற்கு நான் தான் அகப்பட்டேனா ? பேசாமல் இவனை மாதிரியே காதல் செய்து தொலைத்திருக்கலாம். தெரிந்த பிசாசு பெட்டராக இருக்கும்.

ப்ரசாத்தை எனக்கு சுமாராக இருபத்தைத்து ஆண்டுப் பழக்கம். நான் காபி பிரியன் என்றால் அவன் டா ரசிகன். எனக்கு ரஜினி என்றால் அவன் கமல் ரசிகன் , பள்ளியில் படிக்கும் போது எனக்கு ரூபி டாச்ச்ர் டாச்சர் என்றால் அவன், ஜெயலட்சுமி டாச்சருக்கு ரசிகர் மன்றமே துவக்கினான். எந்த விஷயத்திலும் ஒத்துப் போகாதவர்கள் இருவரும் எப்படி இது மாதிரி நண்பர்களாக இருக்கமுடியும் என்றே வியப்பாக இருக்கும். அவன் மீது இந்த பெண்பார்க்கும் விஷயத்தில் கோபம் இருந்தாலும், என் சுக துக்கங்களில் அவனுக்கும் அக்கறை இருக்கிறது என்று சும்மா இருந்தேன்.

கல்லூரி இறுதியாண்டு படிக்கும் போது என் அப்பா அகாலமாக இறந்து விட, ப்ரசாத்தும் அவன் அப்பா அம்மாவும் செய்த உதவிகள் மறக்க முடியாது. பணம் ப்ரச்சனை இல்லைதான். இருந்தாலும், கூடமாட ஒத்தாசையாக, ஆதரவாக இருந்தார்கள். ஷாலினி அப்போது ரொம்ப சின்னப் பெண்.

திடாரென்று போட்ட ப்ரேக்கில், என் நினைவலை அறுந்தது. முன் சீட்டில், ப்ரசாத் ஓட்டிக் கொண்டிருந்தான், அவன் அருகில் நான். பின் சீட்டில், என் அம்மா, சித்தி, ஷாலினி, என் தங்கை.ப்ளஸ் டூ படிக்கிறாள். முப்பது வயதுக்காரனுக்கு எப்படி ப்ளஸ்டூ தங்கை என்று நினைப்பவர்களுக்கு செத்துப் போன என் அப்பாவைப் பற்றித் தெரியாது. நான் சொல்வதாகவும் இல்லை

சித்தப்பா வரன்னு சொன்னாரே, வரலியா ‘ என்றான் ப்ரசாத், ‘ அம்மா முந்திக் கொண்டு, ‘ அவர் அங்கேயே வந்து ஜாயின் பண்ணிக்கறேன்னு சொன்னாருப்பா ‘

நான் மெளனமாக இருந்தேன். சிகரெட் பிடிக்க வேண்டும் போல இருந்தது.

‘ என்னடா பேசாமலே வரே ‘ என்றான் ப்ரசாத்.

‘ இல்லேண்ணா,.. அவன் ப்ரியாவை நெனைச்சு நினைச்சு கனவு காணறான் போலிருக்கு ‘ என்றது பின் சீட்டு சனியன். என்னைத் தவிர எல்லாரையும் அண்ணன் என்று கூப்பிடும். வயதுக்கு மீறின பேச்சு. கைய பின்னால் அனுப்பி கிள்ளலாம் என்று நினைத்தேன். வேண்டாம். இது சந்தர்ப்பமில்லை.

‘ டா, அண்ணியா வரப்போறா, அவளைப் போய் பேர் சொல்றியே ‘ என்று சித்தி அதட்டினாள்.

என்ன தைரியத்தில், நான் பெண்ணை ஓகே செய்து விடுவேன் என்று நினைக்கிறார்களோ தெரியவில்லை. இருந்தாலும் ப்ரியா என்ற பெயர் எனக்குப் பிடித்திருந்தது. முழுப்பெயரை ஊகிக்க முயன்றேன். மூட் ஆஃப் ஆன மாதிரி முகத்தை வைத்திருந்தேன்.

மயிலை ஆடம் தெருவில் இருந்தது அவர்கள் வீடு. ஆழ்வார்ப்பேடை சிக்னல், தேவகி ஆஸ்பத்ரி தாண்டி , காமதேனு வந்து, லஸ் கார்னரில் வலது பக்கம் கார் திரும்பியது. திருமயிலை ஸ்டேஷனைப் பார்த்து, ‘திருமயிலைன்னா நம்ம மயிலாப்பூர்தானா ? நான் என்னவோ அது பூந்தமல்லி பக்கம் இருக்குன்னு நெனச்சிட்டுருந்தேன் ‘ என்றாள் அம்மா.

‘மாமி அது திருமழிசை. திருமயிலைன்னா, இது தான் ‘ என்று ப்ரசாத் சொன்னான்.

‘மயிலை மார்கெட் வழியாத்தானே போகணும் ப்ரசாத் ? அப்படியானா. கொஞ்சம் மார்க்கெட் கிட்ட நிறுத்தேன், வாழைப்பழம் மட்டும் இன்னும் வாங்கலே. அதை வாங்கிக்கலாம் ‘ என்றாள் சித்தி.

‘ ஏன் வாழைப்பழம் இல்லேன்னா , உள்ள விடமாட்டங்களா ? அதெல்லாம் வேணாம் ‘ என்று நான் ஆட்சேபம் சொன்னதை யாரும் பொருட்படுத்த வில்லை ‘ எனக்கு யார் மீது கோபம் என்றே இன்னும் சரியாக விளங்கவில்லை. நானும் இறங்கினேன் . சித்தியும் ஷாலினியும் இறங்கி, பேரம் பேசி வாங்கினார்கள். ‘ சுற்றி முற்றி பார்த்தேன். இன்னும் வித்யா ஸ்டோர்ஸ் இருக்கிறதா என்ன ? முகப்பு மாறிவிட்டிருக்கிறது. அதே கூட்டம். இங்கேதான் நாங்களும் புத்தகங்கள் வாங்குவது வழக்கம். ப்ரசாத்தும் அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தன். அவனுக்கும் நினைவு வந்திருக்கவேண்டும்.

வாழைப்பழம் வாங்கி முடித்ததும், காரைக் கிளப்பி ஆடம் தெருவுக்கு வந்து பெண் வீட்டின் முன் காரை நிறுத்தியதும் , வாசலில் நாலைந்து பெரிசுகள் நின்று கொண்டிருந்தன. சித்தப்பாவும் நின்றிருந்தார். அவரைத் தவிர வேறு யாரும் தெரிந்த முகமாக இல்லை . பெண்ணுடைய அப்பா மாதிரி இருந்த ஒருத்தர் மட்டும் வந்து ‘ வாங்க, வாங்க… என்றார். ‘ சூழ்நிலையில் பரபரப்புக் கூடியது. ப்ரசாத்தை பார்த்து சினேகமாக சிரித்தான் ஒருத்தன். அவன் , பெண்ணின் ஒன்று விட்ட சகோதரனாக இருக்கும். உள்ளே நுழைந்தோம். கொஞ்சம் பழங்காலத்திய வீடு. மொத்தம் நாலைந்து ஆண்கள். ஹாலில் பெண்கள் யாரையும் காணவில்லை. ஆனால், பக்கத்து அறையில் இருந்து சளசளவென்ற பெண்களின் பேச்சுக்குரல் கேட்டது.

சித்தப்பா அதற்குள் அங்கே சகஜமாகிவிட்டுருந்தார். உரக்கப் பேசி சிரித்துக் கொண்டிருந்தார். நான் மரியாதைக்கு சென்று ‘ எப்ப வந்தீங்க சித்தப்பா ‘ என்று கேட்டு விட்டு அமர்த்தலாக சென்று சோபாவில் அமர்ந்தேன். அவர் ஒரு இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட் என்று தெரிந்தால், பக்கத்தில் உட்கார்ந்த்து சிரித்துக் கொண்டு இருப்பவர்கள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள் என்று தோன்றியது. இன்னும் சொல்லி இருக்க மாட்டார்.

நான் என் முகமூடியைக் கழற்றவில்லை. அந்த சூழ்நிலையே கொஞ்சம் அபத்தமாக இருந்தது. ஒருவர் ஆரம்பிக்க அப்படியே பேச்சு பற்றிக்கொண்டது. அவர்கள் உறவு முறைகள், அமரிக்காவில் இருக்கும் அவர்களின் சுற்றத்தினர் என்று துவங்கி ஒரு ஐந்து நிமிடம் சென்றது. அவர்களின் உறவுப் பெரிசு ஒன்று, என் அருகில் பவ்யமாக, ‘ சாருக்கு என்ன வேலையோ ‘ என்றது. சொன்னேன்.

பெண்ணை அழைத்து வரச் சொன்னான் ப்ரசாத். கல்யாணம் ஆகி விட்டாலே ஏதோ கொம்பு முளைத்து விடுகிறது. இத்தனைக்கும் அவன் என்னை விட ஒரு மாதம் சின்னவன். பெரிய மனுஷன் மாதிரி, தைரியமாக பொண்ணை வரச் சொல்லுங்க என்கிறான்.

கையில் காஃபி யோடு வந்த பெண்ணைப் பார்த்தேன், உடனே மனதில் தோன்றிய உணர்ச்சி என்னவென்று விளங்கவில்லை. அழகாக இருந்தாள். நான் லேசாக தலை குனிந்திருந்த போது, அவள் காலில் மருதாணியுடன் புடவையை ஒட்டி லேசாக, மிக லேசாக பிங்க் கலர் ஃப்ரில் தெரிந்தது. ‘கவர்ச்சி என்பது புடவையை மீறி கொஞ்சூண்டு தெரியும் ஃப்ரில் ‘ என்று ஒரு புதுக்கவிஞன் எழுதி இருந்தது நினைவுக்கு வந்தது. ஓரக்கண்ணில் அம்மாவைப் பார்த்தேன். முகத்தில் த்ருப்தி தெரிந்தது. காபி கொடுக்கும் போது லேசாக புன்னகை ஒன்றை சிந்தினாள். திருத்தமான பல்வரிசை. முகத்தில் உணர்ச்சி எதுவும் காட்டிக் கொள்ளாமல், லேசாக பதில் புன்னகை செய்து விட்டு காஃபியை வாங்கிக் கொண்டேன்.

பொத்தாம் பொதுவாக நமஸ்காரம் செய்தாள். உள்ளே சென்றாள். பெரியவர்கள் என்னவோ பேசிக்கொண்டிருந்தார்கள். லேசாகக் காது கொடுத்ததில், அவர்கள் வாயில் ஜெயலலிதாவும் கலைஞரும் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கும் அது பற்றிய அழுத்தம் திருத்தமான கருத்துக்கள் உண்டு என்றாலும், அதில் கலந்துகொள்ள இது சந்தர்ப்பமில்லை. பக்கத்திலிருந்து ப்ரசாத் தொடையைத் தட்டி, என்ன என்று கண்ணாலேயே கேட்டான். நான் இன்னும் முடிவு செய்யவில்லை. என் லட்சியத்தில் இருந்து பின் வாங்குவதாக இல்லை.

‘ நான் பொண்ணோட கொஞ்சம் பேசணும் ‘ என்றேன் ப்ரசாத்திடம் கிசுகிசுப்பாக. அவன் அதிர்ந்து போய் ‘ டேய் அதெல்லாம். நம்ம பழக்கமில்லை, எதுனா வேணும்னா, இங்கேயே பொதுவா வச்சு பேசு ‘ என்று பதிலுக்கு கிசுகிசுத்தான். பெண்ணின் தகப்பனார் நாங்கள் இருவரும் ரகசியம் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தார் என்று அப்போதுதான் தெரிந்தது. ‘ என்ன விஷயம்னு தெரிஞ்சிக்கலாமா ? ‘ என்றார் பணிவாக.

நான் குண்டு போடுவதாக எண்ணிக் கொண்டு, ‘ நான் பொண்ணோட கொஞ்சம் தனியாக பேசணும் ‘ என்றேன். இதை அம்மா எதிர்பார்க்கவில்லை என்று உடனே தெரிந்தது. ‘சூ… சும்மாயிருடா…அவங்க தப்பா நினைச்சுக்கப் போறாங்க ‘ என்று மெதுவான குரலில் அதட்டினாள். ஆனால், பெண்ணுடைய அப்பா ‘ தாராளமா பேசுங்க மாப்பிளை. ‘ மாப்பிள்ளை என்கிறார். ‘ – இன்ஃபாக்ட், கல்யாணத்துக்கு முன்னாலேயே ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டா நிறைய பிரச்சனைகளை அவாய்ட் பண்ணிடலாம்,… நீங்க அந்த ரூம்லே போய் இருங்க.., நா அரேஞ் பண்றேன்.. ‘என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார்.

பெண்களுடன் பேசுவதற்கு எனக்கு தயக்கமே ஏற்பட்டதில்லை. ஆனால், வெளியில், பெண்ணுடைய அப்பா, அம்மாவை வைத்துக் கொண்டு, லேசாக திறந்திருந்த அறையில் , என்னை புடிச்சிருக்கா என்று ஒரு பெண்ணிடம் கேட்டுப் பழக்கமில்லை.

ஜன்னலில் ஓரமாக நின்று கொண்டிருந்தாள். பட்டுப்புடவை இல்லை. ஆனால் பட்டை விட ரிச்சாக இருந்தது அவள் அணிந்திருந்த புடவை. அழகு என்று முன்பே சொல்லிவிட்டேன் இல்லை ?. கிட்டத்தில் பார்த்ததும்தான், அது அழகில்லை வசீகரம் என்று தெரிந்தது . வட்ட முகத்தில் நீளப் பொட்டு. இப்போதைய ஸ்டைல்

போலிருக்கிறது.

நான் துவங்குவதா அல்லது அவள் பேசத் துவங்குவாளா என்று யோசித்தேன். நானே ஆரம்பித்தேன்.

‘ உன் பேர் ப்ரியான்னு சொன்னாங்க ‘, உன் என்பதா அல்லது உங்கள் என்பதா ? ‘ முழுப்பேர் என்ன ? ‘

இது தான் அவளிடம் நான் கேட்ட முதலும் கடைசியுமான கேள்வி. .

அது முதல் இன்றைய தேதி வரை அவள்தான் என்னை கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறாள். ஏன் லேட் என்று, காலையில் பாங்கில் இருந்து ட்ரா செய்த ஆயிரம் ரூபாய்க்கு என்ன கணக்கு என்று, வாழ்த்து அட்டையில் பெயர் போட்டிருந்த சுதா யார் என்று , என் மொபைலில் கேட்ட பெண்குரல் யாருடையதென்று, ஏன் மூன்று இட்லியுடன் எழுந்து விட்டார்கள் என்று விதம் விதமாக கேள்விகள். மிரட்டல்கள், அதட்டல்கள். வீட்டை அமர்க்களப் படுத்திக் கொண்டிருக்கிறாள். அம்மாவுக்கு ரொம்பப் பெருமை.

பெண் பார்க்கப் போன அந்த தினத்தில், ஒரு பத்து நிமிடங்களுக்கு நீடித்த அந்த செமி பர்சனல் சந்திப்பில், அவள் முழுப் பெயர் லட்சுமிப்ரியா என்று தெரிந்து கொண்டதும் , அவள் கன்னக்குழியில் என்னை அறியாமல் நான் விழுந்ததும், அவளுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது , அதிகபட்சமாக தினத்தந்தி எழுத்துக்கூட்டி வாசிக்கத் தெரியும் என்பதும் , கவிதை கதைகளை விட சுவாரசியமான சங்கதிகளும் வாழ்க்கையில் உண்டு என்று தெரிந்துகொண்டதும், எனக்கு ப்ரியாவைப் பிடிச்சிருக்குடா என்று சொன்னபோது ப்ரசாத் முகத்தில் தெரிந்த குறும்பும், ஒரு சுபயோக சுபதினத்தில், சையத் பாக்கர் கடை கோட்டு சூட்டு அணிந்து, மேளதாளங்கள் சகிதம் அண்ணாநகர் டாகே திருமண மகாலில் ப்ரியாவை டும் டும் டும் செய்து

கொண்டதும் இக்கதைக்கு பிற்சேர்க்கைகள்.

***

icarus1972us@hotmail.com

Series Navigation

ப்ரகாஷ்ராயன்

ப்ரகாஷ்ராயன்