வாசனை

This entry is part [part not set] of 40 in the series 20080103_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்


அதிலாந்திக் சமுத்திரத்தின்மேல் பறந்தபோது
அவளது வாசனையை உணர்ந்தேன்.

நாங்கள் பிரிந்தபோது
வசந்தத்தைக் கொண்டுவந்த பறவைகளும்
ரொறன்ரொவை நீங்கின.
ஒன்ராறியோ ஏரியின்மீது
தெற்கு நோக்கிப் பறந்த வாத்துக்களுள்
கண்ணீரை மறைத்தபடி
நாம் விடைபெற்றோம்.

அந்த வசந்தத்தில்
சினைப் பிடித்த சல்மன் மீன்கள் நீந்திய
ஒன்ராறியோ ஏரிக்கரையின்
எந்தச் செடிகளை விடவும்
பூத்துப்போயும்
வாசனையோடும் என் படகில் இருந்தாள்.

படகை விட்டு இறங்கும்போது
ஈழத் தமிழர் தலைவிதி என்றாள்.
நாங்கள் மட்டக்களப்பின் வாவிக் கரைகளில்
சந்தித்திருக்கலாமே என்று பெருமூச்செறிந்தாள்.
வானை வெண்பறவைகள் நிறைத்தன.
ஒருகணம் போர் ஓய்ந்தது.
வடமோடிக் கூத்தர்களின் மத்தளமும்
மங்களப் பாடலும்
பாங்கொலியும் கேட்டேன்.
மீன்பாடும் முழு நிலவில்
அவள் கமழும் ஒரு படகு
நெஞ்சுள் நுளைய நெடுமூச்செறிகின்றேன்.

எங்கள் பிள்ளைகளை அறிமுகப் படுத்தவேணும்
நாங்கள் இழந்த
விருந்துகளையும் கந்தூரிகளையும்
மட்டுநகர் வாவியையும்
அவர்களாவது மகிழட்டும் என்றாள்.
வெல்க பெடியள் என்றேன்.
வெல்க நம் பெட்டையள் என்றாள்.
கைகோர்த்தும் இருவேறுலகம்.

நாங்கள் பிரிந்தபோது
மேப்பிள் மரங்கள் பசுமை இழந்தது.
கறுப்பு அணில்கள்
எதிர்வரும் பஞ்சம் உணர்ந்து
ஓக் விதைகளை மண்ணுள் புதைத்தன.
ஒவ்வொரு தடவையும்
சுவர்க்கங்களைத் தாண்டி
நினைவுகளில் முடிந்த
வண்ணத்துப் பூச்சி வழிகள் எங்கும்
மேப்பிள் சருகுகள் மிதிபட
உரித்துக் கொண்டு காரில் ஏறினோம்.
ஸ்காபரோவில் பசித்திருந்த
கொங்கிரீட் டைனசோர்களின் முன்னம்
கைவிட்டுப் பேருந்துச் சாரதிபோல் போய்விட்டாள்.

உடைகளுள் தாழம்பூ வைப்பதுபோல
என் நினைவுகளின் அடுக்கில்
அவள் தனது
இறுதி அணைப்பின் வாசனையை
இப்படித்ததன் விட்டுச் சென்றாள்.


Series Navigation

வாசனை

This entry is part [part not set] of 29 in the series 20030112_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


இவ்வளவு வெள்ளனையோடு என்ன முழிப்பு இது!

கண் முழிச்சாப் பிறகும் ஏன் இத்தனை இருட்டாயிருக்கிறது என முழிச்ச மயக்கத்தில் அவனுக்கு உடனே தெளிவாகவில்லை. பாயை விட்டு எழும்ப மனமில்லாமல் அசைவில்லாமல் கிடந்தான். வழமையாக அவன் துயில் எழுவதற்குள் சுற்றுப்புற ஜீவராசிகளுக்கு விடிந்து மணிக் கணக்காயிருக்கும். எதிர்வீட்டுத் திமிர்ச்சேவல் ஏழெட்டு முறை கூவி எரிச்சலூட்டிய பின்னர் ராசநடையும் போட்டிருக்கும். இருட்டுக்கு அடங்கியிருந்த காகங்கள், ஏதோ கண்டறியாத வேலைக்கு உடுத்துப் படுத்துப் போவது போல் நாலாபக்கமும் கரைந்து பறந்திருக்கும், சைக்கிள் பாண்காரன், வாங்கினாலும் வாங்கா விட்டாலும் வாடிக்கைப் பழக்கத்தில் ஒழுங்கைக்குள் கத்தித் தொலைத்திருப்பான். குளிக்க பஞ்சிப்படுகிற ‘மொன்டிசூரி’ வகுப்பு மகனை இங்கால திரும்பு, கண்ணை மூடு என்று சவர்க்காரத்தால் குளிப்பாட்டி கிணற்றடிச்சண்டை பிடித்திருப்பாள் சாவித்திரி.

எத்தனையோ கலண்டர்கள் கிழித்தெறிந்த காலங்களாய் இவை எதுவும் அவனை பாயை விட்டு வெள்ளனையோடு அசைக்க முடிந்ததில்லை.

மகனை வெளிக்கிடுத்தி சாப்பாடு தீத்தி வகுப்பிற்கு ஆயத்தமாக்கிவிட்டு, முன்வாசல்க் கதவைத் திறந்து விட்டாளென்றால் நிச்சயமாய் மணி ஏழரையாகியிருக்கும். விறாந்தை வாசலுக்கு தலைநீட்டிப் புதையலுக்குக் காவல் காக்கிறவன் போல அவன் படுத்திருப்பான். கிழக்கு வானில் கிளம்புகிற சூரியன் முதுகில் தட்டி ‘எழும்படா சோம்பேறி’ என்று சொல்லும் வரைக்கும் மூசி மூசிப் படுத்துக் கண்டுவிட்ட சுகம். கோப்பி வந்து தலைமாட்டில் அமர்கிற மட்டில் அடித்த பாம்பு நெளிவது போல் கை விசுக்கி சோம்பல் முறிப்பான்.

புதுசுக்கு வெளுக்கிற மாதிரி கொஞ்சநாள் சொல்லிச் சொல்லிப் பார்த்தாள் சாவித்திரி. வீட்டு ஆம்பிளை இப்படிப் படுத்தா பிரம்மசத்தி பிடிக்கப் போகுதென்று பயம் காட்டிப் பார்த்தாள். செவிடன் காதிலடித்த பறையானாலும் கேட்டிருக்கும். புல்லுக்கே பொசிந்த பாய்ச்சல் நீராய் அவை பொசிய, நீயாச்சு உன் நித்திரையாச்சு என்று அவளும் கைகழுவி நாளாச்சு.

கீழ்வானில் சூரியனை வரவேற்க சிவப்புக் கம்பளம் இன்னும் விரிபடவில்லை. நுளம்பு வயலினிஸ்ற்களின் அறுவை அடங்கவில்லை. எலாம் வைத்த மாதிரி அச்சொட்டாய் எழும்புகிற மனையாள் முழித்த சிலமனில்லை. எதிர்வீட்டுச் சேவல் பாவம் இன்னும் கோழித்தூக்கத்திலிருக்கிறது போலும்!. என்ன முழிப்பு அதற்குள்! அதுவும் சுற்றி வளைத்திருக்கும் இந்த மார்கழிப்பனிக்குள்!

பாயை விரித்துச் சரிவதுதான் தெரியும், அயர்ந்து தூங்கி விடும் கொடுப்பினை அவனுக்கு. சாக்குக் கட்டில் தாங்கமாட்டாத பெரிய சதிரம். மரக்காலையில் விட்டுவிட்டு அறுக்கிற மாதிரி குறட்டை. நேற்றிரவு எதுவும் கைகூடி வரவில்லை. கண்கிண் பட்டிருக்குமோ! கொழுத்தி வைத்த திரிக்கும் கேட்;காத நுளம்புக்கடியால் கைகளில் தட்டுப்பட்ட வீக்கங்களை தடவிப் பார்த்துக் கொண்டான். அதுதான் நகராண்மைக்கழக வடிகாலின் நிரந்தர அறுவடையாயிற்றே. இருந்தும் நித்திரைக்குப் பங்கம் வந்ததில்லையே! இன்றைக்கு என்ன!

நமக்கும் நாலு கழுதை வயசாச்சு. தோளுக்கு மேல் வளரப் போகிறான் மகன். அப்பாவே படுக்கிறாராம் எனக்கென்ன என்று அவனும் தாய்க்கு விரைவில் வாய் காட்டக்கூடும். இப்பவே கொஞ்சம் நீளந்தான்.

படுத்தபடியே உயர்த்தி மடித்த முழங்காலில் இடதுகாலை குறுக்காகக் போட்டுக் கொண்டு ஒட்டடை தொங்கும் முகட்டைப் பார்த்து யோசிக்க, அவனது ‘நரகல்’ பழக்கங்கள் வரிசையில் முண்டியடித்தன. ஆனாவில் தொடங்கி அக்கன்னா வரைக்கும் நீண்ட வரிசை.

காலையில் நித்திரைப்பாயில் குடிக்கிற கோப்பி முதல் ஆளாய் கோயில் காளாஞ்சி வாங்கும் கம்பீரத்துடன் நின்றது. அம்மா பழக்கின பழக்கம். அருமைப் பெருமையாய்ப் பெற்ற பிள்ளையென்று அவனை கட்டாக் காலியாக்கி விட்டவள் அம்மாதான். பொம்பிளைப் பிள்ளைகளை பிழிந்து சக்கை வாங்கியது அவர்கள் மேலுள்ள வெறுப்பினால் அல்ல. ஐந்து பெட்டைகளுக்குப் பிறகு நேர்த்திக்;திக்கடனில் பிறந்த ஒரேயொரு ஆம்பிளைப்பி;ள்ளையை ப+ப்போல வைத்திருக்கிற ஆசையினால். நீளஅகலமாச் செல்லம் கொடுத்து வளர்த்ததில் கண்டிப்பு தவறிப் போய்விட்டது.

நிறம் பார்த்துத் தேர்ந்த கோப்பிக் கொட்டைக்கு சுக்கு மல்லி சேர்த்து பொன் நிறத்தில் பதமாக வறுத்து கையால் இடிச்ச தூளில் அளவாக ரெண்டு கரண்டி சீனி போட்டுக் கலக்கி, சூடு ஆத்தாமல், ஆவி பறக்க நீட்டிப் பழக்கியது அம்மாவின் குற்றம். வாசம் மணக்க ஒவ்வொரு முடரும் நீண்ட உர்ர்ர்ர் உறிஞ்சலோடு நெஞ்சை வருடிக் கொண்டு வள்ளீசாக இறங்க வேண்டும் அவனுக்கு. புதுசில், சாவித்திரிக்கு விசயம் விளங்கவில்லை. கடையில் வாங்கும் கோப்பித்தூளில் கலக்கிக் கொடுத்ததற்கு வாங்கிக் கட்டிய கட்டு அவளுக்கு காலத்திற்கும் போதும்.

மாடு புண்ணாக்குத் தண்ணி உறுஞ்சுகிற மாதிரி கோப்பியை மண்டி நீக்கி குடித்த பிறகுதான் வெளிக்குப் போகிற உத்தரவு வயிற்றில் கறுபுறுக்கும். தலையணைக்கடியில் வைத்த சிகரட்டை கை தானாகப் பொறுக்கி வாயில் வைக்கும். சிகரட் இல்லாமல் வெளிக்குப் போனதேயில்லையென்று சொல்லிக் கொள்ளும் வரட்டுப் பெருமை வேறு. லேசுப்பட்ட சிகரட்டெல்லாம் மன்னன் குடிக்கமாட்டான். பிறிஸ்டலுக்கென்று ஒரு தனி வாசம் இருக்கு என்று லண்டனிலிருக்கும் கம்பனிக்கு வக்காளத்து வாங்குவான். பைக்கட் கணக்கில் வாங்கி வைத்துக் குடிப்பதற்கு வைப்புச்செப்பு இல்லாதிருந்தாலும் நாளுக்கு ஏழோ எட்டோ ஊதி விடுவான்.

பிள்ளைக்கு அளவுக்கதிகமாச் செல்லம் குடுத்துக் கெடுத்துப் போடாதை, நான் இல்லாக் காலத்தில சிகரட்டும் கையுமா வந்து நிக்கப் போறான் என்று வழிக்கு வழி அம்மாவிடம் சொல்லித்தான் அப்பா செத்துப் போனார். பலித்து விட்டது. அவர் சீவனோட இருந்த வரைக்கும் இல்லாத பழக்கம் எப்போது பிடித்ததோ சரியாக ஞுாபகமில்லை.

ரமேசிற்கு நாலு வயசு முடிந்து ஒரு மாதமாகிறது. அன்றைக்கெப்பவோ, மடியிலிருந்து இறங்குகிறான் இல்லை என்று பார்த்தால் சிகரட்டுப் புகையின் வாசம் பிடிக்கிறான். தகப்பனின் வாயாலும் மூக்காலும் புகை பறக்கிற விந்தையை ஊன்றிக் கவனிக்கிறான். இப்படியே விட்டால் அப்பாவின் மரண வாக்குமூலம் பேரனிலும் பலித்துவிடும். பிள்ளைப் பாசத்தில் அடிக்கடி பட்டினத்தடிகள் ஆவான். பிறகு புகைப்பாசத்தில் அவனாகவே மாறி விடுவான்.

இன்றைக்கு இதெல்லாம் சரிவராது!

கோப்பி குடித்து இனித்த வாய்க்கு சிகரட் இழுத்தால் சுதியெனத் தொடங்கி, சாப்பிட்டு உறைத்த வாய்க்கு ஒன்று பத்தினால்த்தான் ஆத்திரம் அடங்கும் என்ற நிலை வளர்ந்துவிட்டது. இல்லாவிட்டால் நாள் முழுக்க தண்ணிர் குடிக்காமலிருப்பது போல் ஒரு விடாய். கோப்பியைத் தொட்டு சிகரட், சிகரட்டைத் தொட்டு! ஓன்றைத் தொட்டு ஒன்றாக வளர்ந்த சங்கிலிக் கோர்வை.

கோப்பியை விட்டால் மற்றதெல்லாம் நாயிலிருந்து உண்ணி கழருவது போல தானாகக் கழன்று போகும். என்றுமில்லா வைராக்கியம் முள்ளங்கிப் பத்தையாக உள்ளே படர்வதை அவன் நிச்சயமாக உணர்ந்தான். ஒரு கோப்பை தண்ணீர் கலவாத பசும்பால் சூடாக குடித்த மாதிரி ஒரு புதுத்தெம்பு.

திடார்த்தெம்பு ‘வேற ஆர், வா முன்னால’ என்று சவால் விட்டது. நான்தான் என்று கைகட்டி நின்றது குடி! கண்மண் தெரியாமல் போட்டுவிட்டு தெருவில் தள்ளாடி அயலில் நாறிப் போகிற குடியில்லை. நாலு பேர் சிண்டிகேட் போட்டு முழுசு எடுத்து அடிக்கிற குடியுமில்லை. குடிச்சிற்றன் என்று பெரிதாகக் குளறிக் கொட்டி சண்டித்தனம் காட்டுறதுமில்லை. பகல் முழுக்க லேத் மிசினில் முறிந்த உடம்பலுப்புக்கென்று போத்தல் வாங்கி வீட்டில் தொடங்கிய குடி. பெஞ்சாதிக்கு மட்டும் தெரிஞ்ச இரகசியக் குடி.

பகல் முழுக்க கஷ்டப்பட்டு முறிகிற மனுசன். அவளும் ஆழமாய் கண்டு கொள்ளவில்லை, வீட்டோடதானே என்ற ஆறுதலில். வெறும் உடம்பலும்புக்குத்தான் தொடங்கியது, இப்ப, கை பிடிக்குது கால் பிடிக்குது போன்ற சகலமான மனப்பிடிப்பிற்கும் அதுவே சர்வரோகநிவாரணியாகி நிற்கிறது.

சின்னதாகப் போட்டாலே விறுவிறுவென்று உன்னைப்பிடி என்னைப்பிடியென்று அவனுக்கு ஏறிவிடும். நெற்றி நரம்பு புடைத்து குட்டி வியர்வை மேல் முழுக்கப் போட்டுவிடும். வர வர எறும்பு கடித்த மாதிரி சின்னக் கீறு கூட இல்லை. ஏத்தத்துக்காக அளவைக் கூட்டப் போக, கறிபுளி வாங்குகிற காசில் காலும் அரையும் கூடாரத்தில் ஒதுங்கிய ஒட்டகம் மாதிரி சொந்தம் கொண்டாடின.

அது மாசக் கடைசி. அவ்வளவு பெரிதாகப் போடவுமில்லை, அடிமண்டியைச் சொட்டுச் சொட்டாகச் சேர்த்து தீர்த்தம் மாதிரி. அப்பாவின் மடியிலிருந்து நிலத்தில் பம்பரம் விட்டுக் கொண்டிருந்த மகன் சொன்னான். ஓடிகொலோன் மாதிரி நல்ல வாசம் வருதப்பா, எங்க வாயைக் காட்டுங்க.. .. .. .. சேர்ட்டிபிக்கேட் வழங்கிவிட்டு வாசம் பிடிக்க அருகில் வந்தான். வாரிசிடம் அகப்பட்டுக் கொண்ட வெட்கம். இதற்கு மேலும் இது தேவையா ?

கோப்பியோ குடியோ புகையோ அதனதன் வாசந்தான் அதனதன் கவர்ச்சி. வாசமற்ற சிகரட் வைக்கோலுக்குச் சமம்;. விருட்சமாய் வளர்ந்துவிட்ட சிகரட் பழக்கத்தை வேரோடு பிரட்ட வாசனைக் கவர்ச்சியைத் துறக்க வேண்டும். பத்தியம் காக்க வேண்டும். விலகியிருக்க வேண்டும். முடியுமா ? நாலைஞ்சு நாளைக்கு பல்லைக் கடிச்சுக் கொண்டு முயன்றால் எதுதான் முடியாது ?

மண்ணுக்குள் போன அப்பா மார்பில் வந்தார். எவ்வளவு நிறைஞ்ச மனுசன். தேத்தண்ணி கூட வாயில் நனைக்காத சீவன். சடங்கு வீடுகளுக்கு வேட்டி சால்வையில் போனால் மட்டும் வாய் நிறைய தாம்ப+லம் போட்டுக் கொண்டு வருவார். பார்க்கிறதுக்கு செந்தளிப்பாக வடிவாகவும் இருக்கும். அந்த மனுசனுக்குப் பிறந்தும்!.. .. .. .. .. மனதிற்குள் தோப்புக் கரணம் போட்டுக் கொண்டான்.

காகங்கள் மெலிதாகக் கரைந்து கேட்டது. சொல்லி வைத்தாற் போல் சேவலும் குரலெடுத்துக் கூவியது. சாவித்திரி இன்னமும் எழும்பவில்லை. கொஞ்சநேரம் படுக்கட்டும் பாவம். புருசன் பிள்ளையென்று காலில் சக்கரம் மாட்டிக் கொண்டு வேறு பிராக்கேயில்லாமல் இருக்கிறவள். அவளுக்காகவாவது!

முகட்டு வளையில் கீச்சிட்டு ஓடிய மாட்டுஎலியை இன்னொரு எருமைஎலி விட்டுத் துரத்திற்று. எலிகளின் பெரிசு கண்டு மலைத்தவன் கண் செருகி அயர்ந்து தூங்கியே போனான்.

அத்தான் தலைமாட்டில் கோப்பி வைச்சிருக்கு, ஆறப்போகுது என்று அவள் சொல்லிவிட்டு குசினிப் பக்கம் விரைந்தாள். ஆயிரத்தெட்டு வேலைகள் அவளுக்கு. அவனது அதிகாலைத் தீர்மானங்களை அவள் அறியமாட்டாள்.

அவன் முழித்துப் பார்த்தான்.

தென்னோலைக்கிடையில் சூரியன் ஒளித்து விளையாடிக் கொண்டிருந்தது. தலைமாட்டில் குண்டாளக் கோப்பை. சூடு ஆத்தாத ஆவி பறக்கும் கோப்பி. நெஞ்சை நிறைச்ச வாசனை.

அவன் கோப்பையை எடுத்தான்.

போட்டதை வீணாக்கக் கூடாது. நாளையிலிருந்து..!

***

karulsubramaniam@hotmail.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்