நாட்டு நாய்களும் நகரத்து நாய்களும்

This entry is part [part not set] of 35 in the series 20021124_Issue

சைதன்யா


ஆத்து நிறையத் தண்ணி ஓடினாலும் நாய் நக்கித்தானே குடிக்கணும் ? இதுல மேற்கத்திய நாய் நம்மூர் நாய்ன்னெல்லாம் ஒண்ணில்லப்போவ். குரைத்தலிலும் மேற்கத்திய குரைப்பு, நம்மூர்க் குரைப்புன்னெல்லாம் வர்க்க வித்தியாசம் வந்தாச்சி. இதுல இன்னொரு வேடிக்கை. குரைக்காத நாய்னா கிண்டல். யோகியாம்ல… ஒரு பாம்புக்கு யோகி சொன்னாராம் அறிவுரை. நீ கடிக்கண்டாம். ஆனாச் சீறு-ன்னாராம். நல்ல விசயம்.

நாட்டுநாய் வானத்தைப் பாக்காதாம். பாக்குமாம்…. வியக்காதாம். இவாள் தன்புண்ணைத் தானே நக்கிக்கிட்டு ஹிஹின்னு இளிச்சாறது. இதுல கிண்டல் வேற. தேவையா ? ஏம்ல பட்டணத்து நாய்ங்களா… எங்கூர் தெரியுமாடா ஒனக்கு ? சைவமும் வைணவமும் தாமிரவரணித் தண்ணியும் தெரியுமாடா ? தினசரி குளிக்கற வழக்கமே அத்த பயல்வளா… கூரையேறிக் கோழி பிடிக்காதவன் வானத்ல ஏறி வைகுண்டம் போக ஆசைப்படாண்டாம்.

நாய அடிச்சாப் பீயச் சொமக்கணும்னு எங்கூர்ல வசனம்.

சும்மாபோற நாய்ன்னா சனங்க கல்லெடுத்து அடிக்கறது ஒரு சுவாரஸ்யம். சில பேர் தபால் பெட்டில கல்லெடுத்துப் போட்டுட்டுப் போவான். எருமை மாட்டுமேல எச்சித் துப்பிட்டுப் போவான்… விசித்திரமான குணாம்சம். அதுலயும் தண்ணிப் பார்ட்டின்னா அவாளுக்கு ரெண்டு ரேன்ஜ்தான். கட்டியணைத்து முத்தம் தருவாப்டி. இல்லாட்டி ‘டாய்! ‘னு ஆரம்பிச்சிற வேண்டிது ரகளையை! நடுவாந்தரம் கிடையவே கிடையாது. தராதரமே கிடையாது!

நம்ம சிவராமன் அண்ணாச்சி உள்ளூரில் சிறு வியாபாரி. அப்பிராணி. நெளிவுசுழிவுல்லாம் இல்லை. சூதுவாது இல்லை. நல்ல விசயம், நல்ல காரியம்னா கேட்க ரசிக்க ஒரு சந்தோசம். வஞ்சனையில்லாமப் பாராட்டுவாரு. சபாசுடா தம்பி நீ நம்மாளு. பைல இருக்க துட்டை எடுத்துக் குடுத்துருவாரு. வெச்சிக்க… எதுனாச்சிம் வாங்கிக்க. நேர்ப் பேச்சு. பாவனை கிடையாது. மூக்கைச் சுத்தித் தொடற வழக்கம் இல்லை. இதுதாண்டா உத்தி… பாவனை… புதுமை… தளுக்கு… ஜாலம்னு மார்தட்டித் திரிய மாட்டார். தெரிஞ்சதை எழுதேம்ல ? ஏன், நீயும் இம்சைப்பட்டு பிறத்தியாளையும் பாடாப்படுத்தி…

பக்கத்துாருக்குப் போறவன் பஸ்ஸேறிப் போறான் பட்டணத்துல. நேரத்தை மிச்சம் பிடிக்கானாம். காய்கறி வாங்கவே வண்டி கேக்கறான். ஏல நடந்தா கால் தேஞ்சிருமாலே ?… என்பார் பேரக் குழந்தைகளிடம்.

பட்டணத்துல பெரியவங்களுக்கே தன் காரியத்தைப் பாத்துக்க துப்பு கிடையாது. துட்டு வெறி. அரிதார பாவனையும் வெட்டி பந்தாவும்னு திர்றாங்க. அதுனால என்னாவுது ? வீட்டு அன்னாட வேலைங்களுக்கே தனி பிசினெஸ்னு ஆளுங்க வந்தாச்சி. பால்பாக்கெட் போட தனி ஆளு. தண்ணி… குடி தண்ணி எடுத்துவரத் தனிக்கூலி. கரண்டு பில் கட்ட தனி ஏற்பாடுகள்…

மகன் மருமகள் இருவரும் வேலைக்குப் போறாங்க. எதிரெதிர் திசையில் பஸ். வந்து அசந்து விழும் அவங்களைப் பாத்துக்கவே ஆளு தேவை. இதுல குழந்தைகளை ஆரு பாக்குறது.

மருமகள் பேசும் சில வார்த்தைங்க அவரை அப்டியே துடிக்கச் செஞ்சிரும். வயசாயிட்டு. நாமதான் விட்டுக் குடுத்துப் போவணும்னு நினைச்சிக்குவார்.

விசாலாட்சி கூட இருந்தா. மொட்டை மாடில இந்த வயசுலயும் அவளோடு பாய் விரிச்சி கதை பேசுவது அலுக்கவில்லை. ஒவ்வொரு நட்சத்திரம் பத்தியும் கதைங்க அவருக்குத் தெரியும். மேகம் எப்டியெல்லாம் உருவம் உருவமா எடுக்குது… என்று எதுனாச்சும் ரசனையாப் பேசிக்குவார்கள். பேச்சு முக்கியமில்லை. அந்த மனசின் வெள்ளையும் அன்புப் பரிமாற்றமும் உட்கதகதப்பாய் நிறையும். மனசும் வெளியும் குளிர்ந்து உள்ளேயும் அமைதி, வெளியேயும் அமைதி. பாதிப் பேச்சிலயே துாக்கம் வந்து அப்டியே கண் சொக்கத் துாங்கி விடுவார்கள். பட்டணம்னா அந்தத் துாக்கத்தை நினைச்சாவது பாக்க முடியுதா ?

விசாலம் இறந்து போனதும் திகைப்பாகி விட்டது முதலில். உட்புழுக்கத்துடன் திண்டாடிப் போனார். ஆனால் காலப்போக்கில் மனசு கைக்கட்டுக்குள் வந்தது. மகன் கூப்பிட்டானே என்று பட்டணத்தில் கொஞ்ச நாள் வாசம். அங்கே அவருக்குப் பிடிக்கவில்லை. புத்தகத்திலும் அகராதியிலும் அறிவைத் தேடுகிற பாவனை மிக்க நகரம். துட்டை சிம்மாசனமாய் உணர்கிற நகரம் அவருக்கு ஒட்டவில்லை. பழையபடி ஊர்திரும்பி விட்டார். சரக்குகள் எடுத்து மீண்டும் வியாபாரம்… ஊர்ச்சனங்களுக்கு அவர் வந்ததையிட்டு சந்தோசம். ஆ பட்டணவாசிகள் அவர் போனதையிட்டு சிரிச்சிருப்பாங்க. சிரிக்கட்டுமே… அவங்க சிரிச்சா நல்லதுதானே ? ஆனா மனசாரச் சிரியுங்கப்போவ். அதான் விசேசம்…

கொஞ்சம் புத்தகப் பித்து உள்ள மனுசன். வாசிப்பு ருசி. கதைக் கிறுக்கு உண்டு. யதார்த்தமாப் பேசுவார். வேடிக்கையாக் கூடத் தோணும். ஆனா அதில் குத்தல் இராது. சிவராமனிடம் ஒருதரம் சிநேகிதர் கேட்டார். ‘ ‘சார் நீங்க கதைல்லா எழுதறீங்களாமே சொல்லவேயில்லையே ? ‘ ‘ என்றார்கள். ‘ ‘அட அது பெரிய விசயமா ? ‘ ‘ என்றார் சிரித்தபடி.

‘ ‘என்ன அப்டிச் சொல்லிட்டாங்க. நாட்ல கதை எழுதறவன்லாம் கொம்பு முளைச்சாப்ல அடுத்தாளைக் குத்த திமில் சிலிர்த்து அலையிறான்… பேசிக் திரியறான்… ‘ ‘

‘ ‘நாய்ன்னா ஒரெடத்ல தங்காது. சும்மாவாச்சும் அலைஞ்சிட்டே கெடக்கும். அது ஒரு கணக்காய்யா… ‘ ‘

பட்டண நாய்ங்க பாவம் பெரிய அலைச்சல் பார்ட்டிங்க… பெரிய மனுசங்க கூட வாக்கிங்…. அதுசரி, வாக்கிங் வர்றவங்க பெரியாளுங்க. நம்ம ரேன்ஜ் என்ன ? அதை நினைக்கண்டாமா மனுசன் ? ‘ ‘எனக்கும் ட்டியார் ராஜகுமாரிக்கும் கல்யாணம் பாதி முடிஞ்சாப்ல ‘ ‘ன்னானாம் ஒருத்தன். ‘ ‘அதெப்டி மாப்ளோய்னா… எனக்குப் பூரண சம்மதம், அவ சம்மதம்தான் பாக்கி ‘ ‘ன்னானாம்.

பக்கத்துச் சிற்றுாரில் சில தம்பிமார்கள் இலக்கியம் என்று கூட்டம் நடத்திக் கூட்டிக் குறைத்துப் பேசுவதில் பிரியம் கொண்டவர்கள். அவரையும் கூப்பிட்டார்கள்.

‘ ‘நீங்க ஏன் எழுதறீங்க ? ‘ ‘ என்றார் ஒருவர். ‘ ‘ஏண்டா எழுதறேன்ற அளவுக்கா மோசமா எழுதிப்பிட்டேன் ? ‘ ‘ என்று சிரித்தார். அப்போது சிவராமன் ஜாலியான மூடில் இருந்தார். ‘ ‘ஏய்யா கதையெழுதறதுல திருட்டு ருசி ஒண்ணு இருக்கப்போவ். தெரியாத பெண்ணை அனுபவிக்கற ருசி… ‘ ‘

அவ்ளதான். பிடிச்சிக் கிட்டாங்கப்பா மனுசனை. நீரு எப்பிடி அப்பிடிப் பேசலாம் ? ஆச்சி பூச்சின்னு கட்சி கட்டி விவாதம். எள்ளல் எகிறல். அவருக்கும் முதல்ல அதில் கலந்துக்கிட உற்சாகம். ‘ ‘சார் நீங்க அக்கா தங்கச்சிகூடப் பொறக்கல்லியா ? இப்டிப் படார்னு எடுத்தடிக்கறீங்களே ? ‘ ‘ – ‘ ‘எலேய் இப்டிச் சொல்லி எங்க அப்பா-அம்மாவைக் கேவலப்படுத்தாதீங்க… ‘ ‘ என அதுக்கும் வேடிக்கை பண்ணினார்.

கிராமத்தில் பொழுது போகண்டாமா ?

விஷ்ணுதாஸ்னு ஒரு எழுத்தாளன். அவனையும் பாராட்டிப் பரிசளிச்சாரு ஒரு தரம். கொஞ்சம் வளைசல் நெளிசல் எடுத்தா – அமைதியாக்கி விட்டுட்டா ஓகோன்னு ஜமாய்ச்சிருவப்பான்னு இருந்தது.

அதென்னமோ சட்டைக்காலரை அவன் மடிச்சிவிட்டுப் பாத்ததேயில்லை. அது ஒரு ஸ்டைல்னு நினைக்கானோ என்னமோ ? விட்டுத் தள்ளு. அவன் சட்டை. அவன் காலர்.

படைப்புக்குப் படைப்பு பேர் மாத்திக்குவான். பெருமாள். பிரமாள்னு… தீவிர இலக்கியவாதியா, இலக்கியத் தீவிரவாதியா ? எதோ ஒண்ணு. விசயம் என்னன்னா… அவனுக்கும் போது பத்தவில்லை. நமக்கு வெறுதே கிடக்கிற பொழுதுக்கு கையோட்டமும் மன ஓட்டமும் உள்ளபடி கதை எழுதியாறது. அவனுக்கு இலக்கியமே மூச்சு. அப்டியொரு பாவனைக்காரன். கதை கட்டுரை நாவல்… எல்லாத்லயும் அத்தாரிட்டி. யானை தன் தலைலயே அட்சதை வாரிக் கொட்டிக்கிரும். பாவப்பட்ட மனுசன். ஒரு நாவல்ல அந்தாக்ல உலகத்தையே சும்மா இப்டித் துாக்கி அப்டிப் போட்டேன்ல… இட்லி எடுத்தாப்ல…ன்னு ஒரு கண்சொருகல். ‘ ‘ஒரு ஸ்பெசல் சாதா… ‘ ‘ன்னு கத்தினாலும், அவந்தான் எடுத்திட்டு வர வேண்டியிருக்கு. நினைப்புல்லாம் ‘ ‘யாரங்கே ? ‘ ‘ன்னு ராஜகூவல் கூவறாப்ல.

லெளகிக வாழ்க்கை இலக்கியத்துக்கு லாயக் படாது…ன்னு அவனுக்கு ஒரு தீர்மானம். இலக்கியவாதின்னா கஞ்சா அடிக்கத் தெரியண்டாமா ? நாலு அனுபவம் புது அனுபவம்… வெளிய ஓடிப்போய்… திருட்டு ரயில் ஏறித் திரட்டண்டாமா ? அப்பதானே வித்யாசமான அனுபவம் கிடைக்கும். கைல காசு பொறள வழி பண்ணிக்கிட்டு, கல்யாணம் பண்ணிக்கிட்டுன்னு என்ன இது ? சம்சாரித்தனம்… சராசரித்தனம் உள்ளாளுகளுக்கு தரிசனம் எப்டிக் கிடைக்கும்னாப்ல ஒரு கெத்து. தெனாவெட்டு. அதையே வெளிப்படையா சிவராமனைக் கைகாட்டியே எழுதுவான்…

சிவராமன் கைவிசிறியால் விசிறிக் கொண்டார். விசாலம் போனபின் அவருக்கும் பொழுது போக அவனை வேடிக்கை பார்ப்பதில் ஒரு சந்தோசம். வீட்டு முன்றிலில் உட்கார்ந்து அதையெல்லாம் வாசித்துச் சிரிப்பார். பதில் சொல்லவெல்லாம் வேணாம். அதில் இந்த வேடிக்கை கிடைக்காது என்றிருந்தது.

பட்டண பாவனை உள்ள மனுசன். நம்மூர்க் கணக்கு வேற. சரி அவன் சொல்றது என்னன்னு பாப்பம்… வானம் மேற்கால இருந்தது அவனுக்கு. நாம கிழக்க பாக்கறோம்… என நினைத்துக் கொண்டார். விஷ்ணுவுக்கு அவல் கிடைச்சாப் போல சிவராமன் பேசியது. திருட்டு ருசியா எழுத்து ? அதும் கல்யாணம் முடிச்ச மனுசன் பேசற பேச்சா இது ? – என்று சீறிச் சினந்தெழுத்தாறது. கல்யாணமே தேவையில்லை, மனுசைக் கட்டுப்படுத்தப் ப்டாதுன்னு சொன்ன மனுசன் இப்ப ஆவேசப் படறாப்டி!… வேடிக்கைதானே ?

எலேய், ஒரு பெண்ணை வர்ணிச்சு எழுதறே கதைல. எத்தனைக்கு தத்ரூபம் குடுக்கறியோ அத்தனைக்கு அது எடுபடுது. அவ யாரு வேறொரு பெண்தானே ? அதைத் தானல சொன்னேன். அதை நான் ஒத்துக்குவேன். நீங்க பாவனை பண்றீங்க… அதான் வித்தியாசம்!

அடேடே, பொழுது ஓடிரும் போலுக்கே, என நினைத்துக் கொண்டார்.

எளிய வாழ்க்கை. வேலைக்கு என ஒருத்தி வருகிறாள். சமையல் கிமையல் பண்ணி வீட்டைத் துாத்து துப்புரவாக்கி விட்டு தண்ணி பிடிச்சி வெச்சிட்டு அவள் போவாள். கல்யாணி. நடவுவேலை முதல் சித்தாள் வேலைவரை எது கிடைக்குதோ பார்க்கிறதுதான்… வயித்துப்பாடு ஆகணும்ல. தானியம் புடைத்துத் தருவாள். தோசைக்கு அரைத்துத் தருவாள்.

பலசரக்கு அவ்வப்போது வாங்கிப் போவதுக்குக் கணக்கு கிடையாது. அவர் பார்ப்பதில்லை. சிறு சம்பளம். அதையும் அவள் பார்ப்பதில்லை. ‘ ‘நீங்களே வெச்சிக்கிடுங்க சாமி. கணக்கு பாத்து பையனுக்குப் பள்ளிக்கூடத்துப் படிப்புச் செலவுன்னு கட்ட தேவைப்படும்போது மொத்தமா வாங்கிக்கிறேன்… ‘ ‘ என்பாள்.

பக்கத்து ஊரின் கூட்டம். அந்த விஷ்ணு வந்திருந்தான். சரி இப்பத்தைய மனுசனைப் பார்ப்பம்… நிச்சயம் என்னைப் பத்தி எதுனாச்சும் சொல்லாம இருக்கப் போறதில்லை! திருட்டு ருசி!… வெடிகுண்டுல்லா ? நல்லாத்தான் இருக்கு, இல்ல ?… புன்னகை செய்து கொண்டார். கூட்டத்தில் அவர் கீழே அவன் மேடையில். உற்சாகத்துக்குக் குறைவில்லை அவனுக்கு. கண்டிப்பா என்பேரை இழுக்காமல் அவனுக்குத் துாக்கம் வராது என்று தெரியும். மறிச்சிப் பேசப்டாது, என ஒரு சங்கல்பம் போல நினைத்துக் கொண்டார்…

நல்ல வேகமான வீறாப்பான பேச்சுதான். ஆவேசக் கொந்தளிப்பு. வேண்டிதான். சிலாளுக்கு அது இல்லாட்டி முடியாது. அவர் பதிலெல்லாம் சொல்லவில்லை. அட அவன் முட்டாளா என்ன ? ஒரு அமைதியான நாள் அவனுக்கு வராதா என்ன ? என்னா அவசரம் உன்னையும் என்னையும் நிரூபிக்க ? வாசகன் தீர்மானிச்சிட்டுப் போறான்… சிவராமன் அவனை மனசாற, நல்லாயிருப்பா என வாழ்த்தினார்.

கூட்டம் முடிந்து கைகொடுத்தார். ‘ ‘பக்கத்து ஊர்தான் எனக்கு. வாயேன் ராத்திரி என்கூடத் தங்கலாமே ? ‘ ‘ சரி என்று ஒத்துக் கொண்டான். சந்தோசமாய் இருந்தது. விசாலம் போனபின் பெரிதும் பேச்சரவம் கேட்காத வீட்டுக்கு அழகு வந்தது. வாசலில் கல்யாணி வந்து நின்றாள். கோதுமை புதுச் சரக்கு இறக்கியிருந்தார். புடைக்க ஏற்பாடுகள் பண்ணிவிட்டு மொட்டை மாடிக்கு வந்தார்கள். ஹ… என வியந்தான் அவன். பட்டணத்துக்காரன் வானத்தை எங்கே பார்த்திருக்கப் போகிறான்… புன்னகைத்துக் கொண்டார். அல்லது வாகனம் மேலே பார்த்து எறிந்த குப்பைகளை மேகமென மயங்கி யிருக்கலாம். நிறையப் படித்தவன். பேசவே வந்தவன்போல, பேசவே காத்திருந்தாப் போல அவன் உரையாடினான். இலக்கியமே மூச்சு. அதைப் பிறர்மேல் விடுவதில் ஒரு சந்தோசம். ‘ ‘எந்த ஊர்ப்பா உனக்கு ? ‘ ‘ – ‘ ‘நான் மனிதன். படைப்பாளி. இலக்கியவாதி. ஊரும் சனமும் அப்பாற் பட்டவன்… ‘ ‘ சரிதான், என்றிருந்தது. இவன் இருபத்திநாலு மணியும் குறிவிறைத்து அலைகிற பாவனை யுள்ளவன். அதும் எதிராளி இலக்கியவாதின்னா சாதாரணமாப் பேசிறப்டாது போலுக்கு… சரி, இருக்கட்டும்.

இதையே அரசியல்வாதிங்க கிட்டே கேட்டால் ‘ ‘நான் இந்தியன்! ‘ ‘ என்பார்கள். சரி இருக்கட்டும். அதைச் சொல்ல ஏம்டா இத்தனை ஆவேசம். சாதாரணமாச் சொல்லப்டாதா ? அடிக்க வர்றாப்ல ‘ ‘நான் இந்தியன்! ‘ ‘ன்றதா ? படிச்சது ராமாயணம். இடிச்சது பெருமாகோயில்ன்றாப்ல சில பார்ட்டிங்க. தமிழ் இலக்கியம்பாங்க, எல்லாம் வெளிநாட்டு சிந்தனை, சரக்கு எழுத்தில்… வேடிக்கைக்கு நாட்ல பஞ்சமேயில்லை.

இலக்கியத்தையும் அரசியல் ‘மட்டத் ‘துக்குக் கொண்ட்டு வந்துறாதீங்க மாப்ளைகளா.

அவனது பாதிப் பேச்சிலேயே அவர் துாங்கிட்டாரு. இதில் வேடிக்கை… அவன் துாங்கலப்பா! அவனுக்கு ஒரு கணக்கு உள்ள. வெளிய என்ன பேசினாலும் உள்க்கணக்கு வேறல்லா ? வெளிப்படையா திருட்டு ருசின்னு பேசற மனுசன். பெண்டாட்டி செத்த மனுசன்… வேலைக்காரின்னு அதும் மத்த வேலை முடிச்சி, சாயந்தரமா புடைக்க வந்தததாச் சாக்கு சொல்லி வந்த கல்யாணியச் சும்மா விட்ருப்பாரா ?

கீழ என்னமோ சத்தம். பாதித் துாக்கம் கலைந்து அவர் இறங்கி வந்தால் திண்ணையில் படுத்திருந்த கல்யாணி மூச்சிறைக்க எழுந்து நிற்கிறாள். விசயம் துப்புரவா விளங்கிட்டது. கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதுக்கு ?

‘ ‘ஐயா இத்தனைநாள் நான் எப்டி பயமில்லாம வந்து போயிட்டிருக்கேன்… இந்தாளு ஒரு நிமிசத்ல… என்னா தைரியம்… இவரை எப்பிடி உங்க சிநேகிதர்னு கூட்டியாந்தீங்க… ‘ ‘

‘ ‘தப்புதான் ‘ ‘ என்று கைகூப்பியவர் திரும்பி அவனைப் பார்த்தார். ‘ ‘வெளிய போ. போயி… என்னைப் பத்திக் கேவலமா எழுது. அது உன் தீராவிதி ‘ ‘ என்றார்.

***

E.mail- storysankar@hotmail.com

storysankar@yahoo.com

storysankar@rediffmail.com

Series Navigation

சைதன்யா

சைதன்யா