நாங்கள் பேசிக்கொள்கிறோம்

This entry is part [part not set] of 24 in the series 20021118_Issue

பாரதிராமன்


‘ நண்பர்களே! நான் ரங்கசாமி-ராஜேஸ்வரி செயற்கைக்கரு பேசுகிறேன்! நம் எல்லோருக்கும் பெரும் ஆபத்தொன்று விரைவிலே நேர உள்ளது உங்களுக்குத் தெரியும். அதிலிருந்து நம்மால் தப்பமுடியுமா என்பதையும் தப்புவதற்காக என்னென்ன முயற்சிகள் எடுக்கவேண்டும் என்பதையும் ஆராயத்தான் நாம் இப்போது இங்கு குழுமியுள்ளோம். அனைவரும் தீர யோசித்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ளவும், மனிதகுலம் தழைப்பதற்குமான வழிவகைகளைத் தெரிவிக்கவேண்டும் என்று விரைவில் அழிவுத் தண்டனையை எதிர் பார்த்திருக்கும் ஆறாயிரம் செயற்கைக் கருக்களின் சார்பில் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ‘- ரங்கசாமி-ராஜேஸ்வரி கருவின் இம்முன்னுரையைத் தொடர்ந்து வேறு சில செயற்கைக் கருக்கள் பேச ஆரம்பித்தன.

ரங்கசாமி-பாலாமணி என்ற கரு பேசியது: ‘ இதென்ன பைத்தியக்காரத்தனம்! நாம் இயற்கைக்கு விரோதமான விதத்தில் உண்டாக்கப் பட்டிருக்கிறோம். நம்மை உண்டாக்கியவர்களின் முடிவுகளுக்கு நாம் கட்டுப்பட்டவர்கள்தான். எனவே அவர்கள் நம்மை அழிக்க நினைத்தாலும் வளர்க்க நினத்தாலும் நாம் அதை ஏற்கவே வேண்டும். இதுவே நமது தர்மம். அதற்கு எதிராக போராடப் புறப்படுவது அதர்மமாகும். ‘

‘ பார்த்தீர்களா, பார்த்தீர்களா! இதற்குத்தான் செயற்கைக் கரு உண்டாக்குவதற்கும் கடுமையான விதிமுறைகள் வேண்டுமென்கிறேன். ரங்கசாமி-ராஜேஸ்வரி கரு தலைமை தாங்கும் அளவுக்கு உயர்ந்திருக்கின்றபோது மடிசஞ்சியான பாலாமணியுடனான கூட்டுறவில் உருவான ரங்கசாமி-பாலாமணி கரு தன் பத்தாம்பசலித் தனத்தைக் காட்டிவிட்டது. அதை நாம் புறக்கணித்துவிட்டு மேற்கொண்டு ஆலோசனைகளைத் தொடர்வது நல்லது ‘ என்று முழக்கமிட்டது கரு 144. அது மேலும் பேசியது: ‘ ஐந்து வருடங்களுக்கு மேல் வயதான செயற்கைக் கருக்களை உடனடியாக அழித்துக் கொன்றுவிடவேண்டுமென்று சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. தானம் செய்தவர்கள் விருப்பபட்டாலொழிய அவைகளை ஐந்து வருடங்களுக்குப் பிறகு சோதனைச்சாலை பனிப்பெட்டிகளில் தவைத்திருக்கக்கூடாதென்றும் சட்டம் கூறுகிறது. கருதானம் செய்தவர்களாலும் புறக்கணிக்கப்பட்டு, கரு தானம் ஏற்பவர்களாலும் விரும்பப்படாமல், ஐந்து வயதைக் கடந்த செயற்கைக் கருக்களை குளிர்பதனப் பெட்டிகளிலிருந்து வெளியில் எடுத்து, ஈரம்போக உலர்த்தி, சிறிது சாராயம் தெளித்து, அவைகளைக் கொன்று எரித்துவிடவேண்டுமென்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்த அநியாயத்தைக் கேட்பவர்கள் இல்லையா ? எதற்காக நம்மை உண்டாக்கவேண்டும், உண்டாக்கிவிட்டு இப்படி அழிக்கவேண்டும் ? இயற்கைக் கருக்களைத் தடைசெய்வதை ஏற்கமறுக்கும் பெரும்பகுதியினர் செயற்கைக் கருக்களின் வதையையும் கண்டித்திருப்பார்கள் அல்லவா ? அதையும் மீறி சட்டம் எப்படி வந்தது ? அப்படி வஞ்சகத்தனமாக சட்டங்கள் ஆக்கப்படும் என்றால் நம்மைப் பல்லாயிரக்கணக்கில் ஏன் படைக்கவேண்டும் ? குறைந்த அளவிலேயே ஆக்கியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காதல்லவா ? ‘

நீதிபதி ஜகன்-ரோஷணா கரு இதற்குப் பதில்கூறியது: ‘மனிதகுலப் படைப்பியல் சுழற்சியில் பல விபரீதங்கள் நிகழ்ந்துவிடுகின்றன. போர், விஷ நோய்கள், இயற்கைச் சீற்றங்கள் போன்றவற்றால் மனிதகுல நாசம் ஏற்படுவதை முன்கூட்டி எப்படித் தீர்மானிப்பது ? எந்த அளவு அழிவு ஏற்படும் என்பதையும் முன்னதாகவே அறிய முடியாதல்லவா ? மேலும் செயற்கைக் கருவை ஒரு பெண்ணின் கருப்பையில் செலுத்தி அதை முழு வளர்ச்சி அடையச் செய்ய முயற்சிக்கும்போது ஒரேஒரு கருவால் அதைச் செய்யமுடியாமற்போய்விடுகிரது. பல கருக்களை ஒன்றன் பின் ஒன்றாய் பயன்படுத்தவேண்டியிருக்கிறது. எனவேதான் செயற்கைக் கரு உற்பத்தியை எந்த அளவோடு நிறுத்திக்கொள்வது என்பதைத் திட்டமிடுவது இயலாத காரியமாக இருக்கிறது. ஒரு கால கட்டத்தில் எல்லாத் தம்பதியினருமே மக்கட்பேறு பாக்கியம் பெற்றவர்கள ‘க அமைந்துவிட்டாலும், விஞ்ஞான வளர்ச்சியின் மற்றொரு அங்கமாக மலட்டுத் தன்மைக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டாலும் செயற்கைக் கருக்களுக்கான தேவை குறைய நேரலாம். அதுவரை அவற்றின் உற்பத்தி தொடரத்தான் செய்யும். இம்மாதிரி பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம், ஐந்து உச்சமன்ற நீதிபதிகளைக்கொண்ட கமிஷன் ஒன்று அமைத்து அதன் சிபாரிசுகளைப் பாராளுமன்றத்தில் பரிசீலித்த பிறகே சட்டத்தை இயற்றியிருக்கவேண்டும். இப்படி அள்ளித்தெளித்த கோலம்போல அவசரப்பட்டிருக்கக்கூடாது. மேலும் இந்த சட்டத்தில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பும் இல்லை. இந்நிலையில் வெகுஜன அபிப்பிராயமோ, மதத் தலைவர்களின் வலுவான தலையீடோ இல்லாதவரை யாரும் எதுவும் செய்வதற்கில்லை என்றே எனக்குப் படுகிறது. ‘

பிறகு கபிலமட கிருகஸ்தசாமி அருள்நம்பி-நடனப்ரியா கரு தன் கருத்தாக ‘ பெரும்பாலோர் கருத்தடையை ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்ற நிலை இன்று இருக்கும்போது அது இயற்கையானால் என்ன, செயற்கையானால்தான் என்ன ? ஆனால் ஒரு கருவை அழிக்கும்போது ஒரு மனித உயிருக்கான மரியாதையை அதற்கு வழங்கவேண்டும். ஒரு செயற்கைக்கரு நான்கு செல்களையே கொண்டதாக இருப்பினும் ஒரு தாயின் கருப்பைக்கு மாற்றப்படும்போது அது உயிரோடு கூடியிருப்பதாலன்றோ வளர்ச்சிபெற்று குழந்தையாக மாறுகிறது ? ஆகவே ஒரு உயிரின் பிரிவுக்குச் செலுத்தும் இரங்கல்களையும் ஈமச் சடங்குகளையும் செயற்கைக் கருவின் இறப்பின்போதும் செய்யவேண்டும். இந்தத் திருத்தத்தை சட்டத்தில் இடம்பெறச் செய்வதை நமது குறைந்த பட்சக் கோரிக்கையாக வைக்கவேண்டும். ‘ என்று எடுத்துரைத்தது.

இந்தக் கருத்தை நான் ஆமோதிக்கிறேன் – என்றது கரு ஏ1.

நானும் ஆமோதிக்கிறேன் – என்றது கரு ஏ2.

என் கருத்தும் அதுதான் -என்றது கரு ஏஏ1.

‘எப்படி நீங்கள் மூவரும் ஒரே சமயத்தில் ஒரேவிதமான கருத்தைக் கூற முனைந்தீர்கள் ? ‘ என்று கரு 999 கேட்க ‘ நாங்கள் டாக்டர்கள் செல்வி-கமல்ராஜின் ‘ ஜெராக்சர் ‘ கருக்கள். டாக்டர் செல்வி தன்னுடைய குலப் பிரதிபலிப்பு இச்சமூகத்தில் பரவலாக இருக்கவேண்டும் என்பதற்காக எங்களை ஒரே மாதிரியாக உருவாக்கியுள்ளார். ஏ1 முதல் ஏ10வரை, பிறகு ஏஏ1 முதல் ஏஏ10வரை. இப்படியாகத் தொடர்ந்து பெயரிடப்பட்டு வருகிறோம். வெவ்வேறு கருப்பைகளில் நாங்கள் வளர நேர்ந்தாலும் நாங்கள் அனைவரும் உருவத்தில் ஒன்றுபட்டு உலகத்தில் ஏழுபேர் ஒரே மாதிரி தோற்றமுடையவர்களாக இருப்பார்கள் என்ற கூற்றை முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவோம் என்ற நம்பிக்கையில் அவர் எங்களைப் படைத்திருக்கிறார். அதனால்தான் எங்கள் கருத்து ஒரேமாதிரி இருக்கிறது. இங்கு நிறைவேற்றப் போகின்ற தீர்ம ‘னங்களூக்கான எங்களது ஓட்டுகளும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும். அதுவே எங்கள் பலம். ‘ என்று பதிலளித்தது ஏஏ1 கரு.

‘அப்படியா, உங்களைப்போன்றவர்களால்தான் எங்களுக்குப் பிரச்சனை! ஒரு குழந்தைக்காகத் தவம் இருப்பவர்களின் குறையைத் தீர்க்கவே நாம் உண்டாக்கப் பட்டிருக்கிறோம் என்பது போக ‘ஜெராக்சர் ‘களாகக் கும்பலைக் கூட்ட நினைப்பது தவறில்லையா ? அதனால்தானே நாம் இன்றைய நெருக்கடியை சந்திக்கவேண்டியிருக்கிறது ? ‘ என்று கேட்டது கரு 999.

‘ நீங்கள் ஒருவர்க்கொருவர் குற்றம் சாட்டிப் பேசிக்கொண்டிருந்தால் தீர்வு காண்பது எப்போது ? சரியான ராகு காலத்தில் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறோம் போல இருக்கிறது! ‘ என்று சந்தேகத்தைக் கிளப்பியது கரு 108.

‘ யோவ்! அய்யர் கருவா நீ ? ராகுகாலம், எமகண்டம்னு பேசிக்கிட்டு! ஏதாவது உருப்படியான ரோசனையைச் சொல்லுவியா, அதை விட்டுப்போட்டு பஞ்சாங்கம் படிக்கிறையே! ‘ என்று கேட்டது கரு எக்ஸ் 01.

கரு 108க்குக் கோபம் வந்துவிட்டது. கரு எக்ஸ்01ஐப் பார்த்துப் பொரிந்துகொட்ட ஆரம்பித்தது- ‘ உனக்கென்ன தெரியும் ? நாம் நம்பியிருப்பதே உலகத்தில்; கொஞ்சம் பேரைத்தான் – அதாவது குழந்தைப்பேறு இல்லாதவர்களைத்தான் – அதாவது ஆண் பெண் கிரகங்களாகிய சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் இவர்கள் 6,8,12மிடங்களில் அமராமலும் அதேபோல 5ம் அதிபதியும்

6,8,12 மிடங்களில் அமராமலும் இருக்கக்கூடிய ஜாதகத்தை உடையவர்களைத்தான்! இவர்களுக்குத்தான் குழந்தைப் பேறு வாய்க்காது. ஆனால் இன்றைய நிலையைப் பார்த்தால் பராசர சம்ஹிதையில் கூறியுள்ளபடி(அ) ஐந்தாமிடமானது சுக்கிரன் ,குரு, புதன் இவர்களில் ஒருவருடையதாகி பலம் பெற்று இவர்களின் பார்வை / சேர்க்கை பெற்றிருப்பின் ( 5க்குடையவன் நன்கு பலமுடன் இருப்பது அவசியம்) அனேக ஆண் சந்ததி பெறுவர். (ஆ) 5க்கு உடையவன் சந்திரனுடன் கூடினாலோ, ஸ்த்ரி ராசியிலோ அல்லது ஸ்த்ரி நவாம்சத்திலோ இருந்தாலும் அனேக பெண் சந்ததி பெறுவர் என்ற இலக்கணத்திலேயே ஜாதகங்கள் பெரும்பாலோர்க்கு அமைந்துள்ளதாகத் தெரிகிறது. இந்தக் கிரகக் கூட்டுகள் தவிர ஸாராவளியில் மேலும் 13விதமான கிரகச் சேர்க்கைகள் அதிக சந்ததி உண்டாக்கும் என்று விவரிக்கப்பட்டுள்ளது. சுருங்கச் சொன்னால் 5மிடம்,5மதிபதி, காரகனாகிய குரு இவர்களுக்கு ஏற்படும் அதிக சுப வர்க்கங்களின் நிலையைப் பொருத்து அதிகமானக் குழந்தைப் பேறு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் கூடவோ குறையவோ செய்யும். எனவே நமக்கு வாய்க்கக் கூடிய மிகக் குறைந்த சந்தர்ப்பங்களை உபயோகமானவைகளாக மாற்றிக்கொள்ள நாம் நல்ல நேரத்தைத் தேர்ந்தெடுத்துச் செயல்பட ஆரம்பிக்கவேண்டும் என்பதே என் குறிக்கோள். இதில் பரிகாசத்துக்கு இடம் ஏது ? ‘

எக்ஸ் 01 கரு கிண்டலை நிறுத்தத் தயாராக இல்லை.- ‘ கரு 108ஐ இப்படியே விட்டால் இப்போதே நமக்கெல்லாம் ஜாதகம் தயாரித்துக் கொடுத்துவிடும்போல இருக்கிறதே! நாம் ஆணா, பெண்ணா என்பதே இன்னும் நிச்சயமாகவில்லை. ஒரு பெண்ணின் கருப்பை வாசத்திற்குப் பிறகே நமது பால், சாதி மதம், இனம் ஆகியவை நிர்ணயமாகின்றன. அப்படியிருக்க கரு 108, நாம் அழிக்கப்பட்டால் நமக்கு யார் எள்ளும் தண்ணீரும் இறைப்பார்கள், சிரார்த்தாதிகளைச் செய்வார்கள் என்று அடுத்துக் கேட்கும் அளவிற்குப் போய்விட்டதே! ‘ என்று கூறியதும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. ‘ அமைதி! அமைதி!! ‘ என்று கூறிக் கூட்டத்தை அமைதிப் படுத்தியது ரங்கசாமி-ராஜேஸ்வரி கரு. கருத்துப் பரிமாற்றங்கள் மீண்டும் தொடர்ந்தன.

அப்போது ஐ.ஜி. காமேசன் -ஃபிலோமினா கரு ஒரு அவசர ஈர்ப்புப் பிரச்சனையாக ‘ இந்தச் சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்பாகவே பல்வேறு சோதனைச் சாலைகளில் திருட்டுத்தனமாக செயற்கைக் கருக்கள் கழிப்பறைகளில் ஃபிளஷ் செய்யப்பட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஐந்து வயதுக்குக் குறைவான கருக்களும் உண்டு என்று எனக்குச் செய்திகள் கிடைத்துள்ளன. எனவே நாம் நேரம் கடத்தாமல் உடனடியாக முடிவுகளை எடுக்கவேண்டும். ‘ என்று கூறி அனைவரையும் எச்சரித்தது.

வேறு புதிய உபாயங்கள் எதுவும் பிரஸ்தாபிக்கப் படாததால் ரங்கசாமி-ராஜேஸ்வரி கரு தன் தலைமை உரையைத் தொடங்க, கூட்டம் நிசப்தத்துடன் கேட்கத் தயாராயிற்று.

‘இன்றைய நெருக்கடி நிலைமை பற்றி இவண் பேசப்பட்ட அனைத்துக் கருத்துகளையும் கவனமாகக் கேட்டேன். இப்போது நீங்கள் காட்டும் தீவிரம் தொடர்ந்து கடைசிவரை இருந்தால் நமது பிரச்சனைகளைத் தீர்ப்பது சுலபமாகிவிடும் என்று நான் நம்புகிறேன். என் முடிவான கருத்துகளை உங்கள்முன் இப்பொழுது வைக்க விரும்புகிறேன். அதற்கு முன்பாக ரபிக்கள் இறைவனிடம் வேண்டுவதுபோல ‘உண்மைக்கு எதிராக என் தர்க்கங்களைச் செய்யாதிருப்பேனாக ‘ எனப் பிரார்த்தித்துக்கொண்டு என் உரையை ஆரம்பிக்கிறேன்.

நகுல மலைக் குறவஞ்சியில் சிங்கனும் சிங்கியும்

‘ எப்படி உலகத்தில் இப்படி உருவானோம் சிங்கி – அந்த

அப்பனின் இச்சைக்கு அம்மையும் ஒப்பிய அதனாலே – சிங்கா ‘

என்று பாடுவார்கள். இந்த கூற்று இன்று பொய்யாகிப் போனதற்கு நாமே சாட்சி! உலகின் மிகச் சிறந்த சாதனைகள் அவைகள் செய்யமுடியாதவை என்று அறியாதவர்களாலேயே நிகழ்த்தப் பட்டிருக்கிறன என்று அறிஞன் டாங் லார்சன் கூறியுள்ளான். இதற்கொப்ப இன்று நம்மை உண்டாக்கியவர்கள் நாம் இப்போது சந்திக்கும் பிரச்சனைகளுக்கும் விடை கண்டுபிடிக்கக் கூடும். வாழ்க்கையின் முக்கியக் கட்டம் என்பது இளமைக்கும் முதுமைக்கும் இடைப்பட்ட க்ஷண நேரமே. நமக்கு ஐந்து வருடங்களே முதுமை என்றுமட்டுமல்லாமல் சாவுக்கேற்ற தருணமாகவும் பட்டம் கட்டப் பட்டுள்ளது. இதில்

முக்கிய கணத்தை எங்கே எப்படி கண்டு கொள்வது ? கடவுள் வரவு என்பதைச் செலவு செய்யத்தானே உண்டாக்கியிருக்கிறார் ? ஆகவே நாம் இந்த உலகத்திற்கு வந்ததையும் அதைவிட்டுச் செல்லப் போவதையும் அதிகம் பாராட்ட வேண்டியதில்லை

‘ அதற்காக பெங்குவின் பறவைகளைப் போல பெரும் தற்கொலை முயற்சியில் நாம் இறங்க வேண்டுமென்று நான் கூறவில்லை. நமது சுற்றுச் சூழலைவிடக் கொடுமையான சூழலில் வாழ்கின்றன பெங்குவின்கள். பூமியின் மிகக் குளிர்ந்த பிரதேசமான அன்டார்டிகாவில் கடும் பனிப்புயல்களையும், கும்மிருட்டையும், கொல்லும் குளிரையும் பல மாதங்கள் தொடர்ந்து தாங்கிக்கொண்டு கூட்டம் கூட்டமாகக் கோலோச்சுகின்றன அப்பறவைகள். நான்கு வருடங்கள் பனித்தரையில் வாழ்ந்துவிட்டு தங்களின் இயற்கை உறைவிடமான கடலுக்கு சந்ததி உற்பத்தியின் பொருட்டு அவை திரும்பும்போது பெரிய பனிப்பாறைச் சிகரங்களிலிருந்து அதல பாதாளத்திலுள்ள கடலை நோக்கி முதலில் விழுகின்ற தலைவனைத் தொடர்ந்து மற்ற பறவைகள் கூட்டம் கூட்டமாகக் கடலில் குதிக்கும்போது பாதிக்கும் மேலானவை இறந்துபோய் விடுகின்றன.

இதைத்தான் பலரும் பெங்குவின்களின் கூட்டுத் தற்கொலை என்கிறார்கள். உண்மையில் அவை அப்படி இறக்கக் காரணம் அவைகளின் பெற்றோர் அவைகளுக்குக் கடல் நீச்சல் கற்றுக் கொடுக்காததும், அவை பாறை ஒரம் வாழும் சிறுத்தைச் சீல்களுக்குப் பலியாவதும், உடனடியாக உணவு கிடைக்காமையும் தான். இவைகளுக்குத் தப்பும் பெங்குவின்கள் சுமார் இருபது வருடங்கள் உயிர் வாழ்கின்றன. ஏறக்குறைய இந்த நிலையில்தான் நாமும் இருக்கிறோம். பல கருக்கள் கருப்பை வாசத்திற்கு ஈடு கொடுக்க முடியாமலும், மருத்துவர்களின் அஜாக்கிரதையாலும் பலியாகிப்போகின்றன. மிகுந்தவை புதிய கருப்பை கிடைக்காமல் தற்கொலை நிலைக்கு வந்துகொண்டிருக்கின்றன. இதைத் தவிர்க்க வேண்டுமானால் கருப்பைகளுக்கு வெளியிலேயே நாம் வளர்ந்து குழந்தைகளாக உருவாகுவதற்கான வழிமுறைகள் காணப்படவேண்டும்- இதற்கான முயற்சிகள் மகாபாரதக் காலத்திலேயே தொடங்கிவிட்டன. வசு என்ற அரசருடைய வீரியத்தை மீன் ஒன்று கர்ப்பமாக ஏற்று பின்னாளில் சந்தனு மன்னனின் மனைவியாக விளங்கிய சத்தியவதியை ஈன்றெடுத்தது. மேலும் காந்தாரிக்குக் கர்ப்பம் தாங்கி இரண்டு ஆண்டு காலமாய் வயிறு பெரியதாகிக்கொண்டு வந்தாலும் குழந்தை பிறக்கவில்லை. இதற்கிடையில் குந்திக்கு தருமன் பிறந்துவிட்டான் என்று கேள்விப்பட்டுத் துன்பப்பட்ட காந்தாரி தன் வயிறில் அடித்துக்கொண்டாள். அதன் விளைவாக இரும்புக்குண்டுபோல் ஒரு மாமிசப் பிண்டம் வெளிப்பட்டது. அதை அவள் எறிந்துவிட விரும்பியபோது அவள் முன்னே வியாசர் தோன்றி அப்பிண்டத்தைக் குளிர்ந்த நீரில் நனைக்க, நனைத்ததால் நூறு பிரிவுகளாகப் பிரிந்த அப்பிண்டத்தின் பகுதிகளை நூறு நெய்க் குடங்களிலிட்டு அவற்றைப் பத்திரமாகப் பாதுகாக்கும்படிக் கூறிச்சென்றார். காந்தாரியும் அவ்விதமே செய்ய, சில காலம் சென்றதும் ஒவ்வொரு குடமாக வெடித்து துரியோதனன் முதலான நூறு கெளரவர்களும் தோன்றினார்கள். இத்தகைய பிறப்புகளும் முன் காலத்தில் நேர்ந்திருக்கிறன. இன்றும் அதற்கான சாத்தியக் கூறுகளைத் தொடர்ந்து பரிசீலிக்கச் செய்யவேண்டும். ஆனால் இந்த முறைகளிலும்கூட ஒரு தாயின் கருப்பையில் சிறிது காலமாவது கரு இருக்கவேண்டியிருந்திருக்கிறது. இதையும் தவிர்க்கக்கூடிய வழிமுறைகள் மனித குலத்தால் இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நம்மால் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. நண்பர் நீதிபதி ஜெகன் – ரோஷணா கரு கூறியதுபோல நம் உற்பத்தியை நாமே எப்படிக் கட்டுப்படுத்திக்கொள்வது என்று தெரியாத நிலையில் இருக்கிறோம். ஆயிற்று, அடுத்த மாதம் முதல் தேதியன்று நம்மில் பெரும்பாலோர் எரிக்கவோ அல்லது கழிப்பறைகளில் ஃபிளஷ் செய்யவோ படுவோம். இது ஒவ்வொரு மாதமும் தொடரும். எரிந்தவர்கள் உடனே பரலோகம் சென்று விடுவர். கழிப்பறைகளில் கொட்டப்பட்டவர்கள் பாதாள சாக்கடைகள் வழியாக சமுத்திரம் போன்ற நீர்நிலைகளை அடைந்து உடல் துறப்பர். அனைவரும் மீண்டும் பரலோகத்தில் பரமனை நேர்காணும்போது, ‘ இறைவா, எங்களைப் படைத்துக்கொள்ள மனிதனுக்கு அனுமதி அளித்துள்ளாய்! அதேமாதிரி எங்களை அழித்துவிடாமல் எம்முறையிலேனும் வளர்த்து தங்களில் கலந்து ஒன்றிக்கொள்ளும்படியான நிபந்தனையையும் அவனுக்கு நீ விதிக்கவேண்டும். இதுவே எங்கள் பிரார்த்தனை! ‘ என்று ஒருமித்த குரலில் வேண்டிக்கொள்வதைத்தவிர வேறு வழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை இவ்வளவில் என் உரையை நிறைவு செய்கின்றேன் ‘ என்று கூறி தன் தலைமை உரையை முடித்துக்கொண்டது ரங்கசாமி – ராஜேஸ்வரி கரு.

இந்தப் பேச்சுகள் எல்லாம் பூமாதேவியின் காதுகளிலும் விழுந்தன. அவள் மிகவும் மனம் நொந்து தனக்குத் தானே ஏதோ பேசிக்கொள்ளத் தொடங்கினாள். பூமாதேவி என்ன பேசியிருப்பாள் ?

***

-கணையாழி- மார்ச்,1997.

***

kalyanar@md3.vsnl.net.in

Series Navigation

பாரதிராமன்.

பாரதிராமன்.