Where are you from ?

This entry is part [part not set] of 25 in the series 20021013_Issue

வ.ந.கிரிதரன்


‘டாக்ஸி கிடைக்குமா ? ‘

வார்டன் பாதாள ரயிலிலிருந்து வந்திருந்த அந்தக் கனடிய வெள்ளையினப் பெண்மணி கேட்டபோதுதான் அமைப்பியல் பற்றிய தமிழ் நூலொன்றினை வாசித்துக் கொண்டிருந்த நான் இவ்வுலகிற்கு வந்தேன். ‘தாராளமாகக் கிடைக்கும். எங்கு போக வேண்டும் ? ‘ என்றேன். ‘ பேர்ச்மவுண்ட்/ லாரண்ஸ் ‘ என்று அதற்குப் பதிலிறுத்தபடியே கதவைத் திறந்து டாக்ஸியினுள் ஏறி அமர்ந்தாள் அந்தப் பெண்மணி. வயது முதிர்ந்த, நன்கு பருத்த உடல் வாகுடன் கூடிய தோற்றத்திலிருந்தாள் அவள். முகத்தில் ஒருவித கடுமையுடன் கூடிய பாவம் விரவிக் கிடந்தது. பாதாளரயில் வாகனத் தரிப்பிடத்திலிருந்து வார்டன் வீதிக்கு வந்து கிழக்காக சென்ற்கிளயர் அவென்யுவில் பேர்ச்மவுண்ட் நோக்கித் திரும்பினேன்.

‘Where are you from ? ‘

நான் கனடா வந்து பத்து வருடங்களைத் தாண்டி விட்டன. நானொரு பூரண உரிமையுள்ள கனடிய குடிமகன். என்னைப் பார்த்துக் கேட்கின்றாள் இந்த வயோதிப வெள்ளையின மாது எங்கேயிருந்து வந்திருக்கின்றேனென்று. நாளைக்கு இங்கு பிறந்து,வளரும் என் குழந்தைகளைப் பார்த்தும் இது போலொரு வயோதிப வெள்ளையின மாது இதே மாதிரியானதொரு கேள்வியினைக் கேட்கக் கூடும். இவளைச் சீண்டிப் பார்க்க வேண்டுமென்றொரு எண்ணத்தில் ‘ என்னைப் பார்த்தால் நானொரு கனேடியன் மாதிரித் தெரியவில்லையா ? ‘ என்றேன். அதற்கு அந்த முதிய வெள்ளையின மாதும் சளைக்காமல் பதிலிறுத்தாள் ‘ அது எனக்குத் தெரிகின்றது. ஆனால் இதற்கு முன் எங்கு வாழ்ந்து வந்தாய் ? ‘ என்றாள்.

‘அவற்றைச் சொல்ல ஆரம்பித்தால் நேரம் போதாது. வரிசைப் படுத்துக் கூறுகின்றேன். கேட்க உனக்குப் பொறுமை இருக்கிறதா ? ‘ என்றேன். ‘தாராளமாக ‘ என்று காதுகளை நீட்டிக் காத்திருந்தாள் அவள். ‘இங்கு வருவதற்கு முன் நான் அமெரிக்காவில் சிறிது காலம் வசித்திருக்கின்றேன். அதற்கு முன்னர் பாரிஸில் சிலகாலம், ஜேர்மனியில் சில காலம், சுவிஸில் சில காலம்… ‘ நான் வார்த்தைகளை முடிக்கவில்லை அவள் குறுக்கிட்டாள். ‘ நீ கொடுத்து வைத்த பிறவி. உலகம் முழுவதையும் சுற்றிப் பார்த்திருப்பாய் போலும். உன்னைப் பார்த்தால் எனக்குப் பொறாமயாக இருக்கிறது. ‘ என்றவாறே தொடர்ந்தாள் ‘ நான் கேட்டது நீ பிறந்த இடத்தை ‘. ‘இந்தியாவை உனக்குத் தெரியுமல்லவா ? ‘

‘ஆம் ‘

‘ இந்தியாவின் தெற்கு மூலைக்கு அப்பால் விரிந்திருக்கும் இந்து சமுத்திரத்தில் உள்ளதொரு அழகான தீவு என் தாய் வீடு ‘ என்றேன். சிறிது நேரம் சிந்தித்தவள் ‘தெரியவில்லையே ‘ என்றாள்.

‘ இங்கு பார். நான் சிறுவனாகப் பாடசாலையில் இருந்த பொழுதே புவியலில் உலகின் நீண்ட சாலை யங் வீதி என்று படித்திருக்கின்றேன். உனக்கோ என் பிறந்த மண் பற்றித் தெரியவில்லையே ‘ என்றேன். தொடர்ந்து ‘ சிறிலங்கா பற்றிக் கேள்விப் பட்டிருக்கின்றாயா ? அது தான் என் தாய் நாடு ‘ என்றேன். அதற்கு அவள் ‘ஓ சிறிலங்காவா. நீ சிறி லங்கனா ? ‘ என்று வியந்தவள் போல் கேட்டாள். அத்துடன் தொடர்ந்து ‘ஓ சிலோன். சிலோன் தேநீர் என்றால் எனக்கு நல்ல விருப்பம். அது சரி எப்பொழுது சிலோனை சிறிலங்காவாக மாற்றினார்கள். ‘ என்றாள். ‘ஸ்ரீலங்காவும் கனடாவைப் போல் தான் முன்பிருந்தது. பொது நலவாய நாடுகளிலொன்றாக. இன்றைய ஜனாதிபதி சந்திரிகாவின் தாய் ஸ்ரீமா பண்டாரநாயக்க காலத்தில் தான் , 1972 இல் குடியரசாக மாற்றினார்கள். அன்றிலிருந்து தான் சிலோன் ஸ்ரீலங்காவாக மாற்றம் அடைந்தது ‘

பேச்சு வேறு திசைக்கு மாறியது. ‘இங்கு பார். இன்று நீ எனது பதினைந்தாவது பிரயாணி. இந்தப் பதினைந்தில் ‘நீ எங்கிருந்து வந்தாய் ? ‘ என்று கேட்ட பத்தாவது ஆள் நீ. நீ தவறாக நினைக்க மாட்டாயென்றால் நான் ஒன்று தாராளமாகக் கேட்கலாமா ? ‘

‘கேள். நான் ஒன்றும் தவறாக எடுக்க மாட்டேன். தாராளமாகக் கேள் ‘

‘எதற்காகச் சொல்லி வைத்தது மாதிரி நீங்கள் எல்லோருமே இந்தக் கேள்வியைக் கேட்கின்றீர்கள் ? ஒவ்வொருவரின் தோற்றத்தையும் பார்த்ததுமே உங்களுக்குப் புரிந்திருக்குமே. பின்னேன் கேட்கின்றீர்கள் ? ‘

‘ஏன் கேட்கக் கூடாதா ? நீங்கள் எல்லோரும் வந்தேறு குடிகள். உங்கள் பூர்வீகம் பற்றி அறிய எங்களுக்கு ஆசை இருக்காதா ? ‘

‘நீங்களும் தான் வந்தேறு குடிகள். நீங்கள் அன்று வந்தீர்கள். நாங்கள் இன்று வந்திருக்கின்றோம். அவ்வளவு தான் வித்தியாசம். ‘

‘ நீ நன்கு பேசப் பழகிக் கொண்டாய் ‘ என்று கூறி அந்த மாது சிரித்தாள்.

‘ கனேடியக் குடிமகனல்லவா ? அது தான் ‘ என்று நானும் சிரித்தேன். அந்த மாதை இறக்க வேண்டிய இடத்தில் இறக்கி விட்டு மீண்டும் வார்டன் பாதாள ரயில் வாகனத் தரிப்பிடத்திற்கு வருவதற்கு முடிவு செய்து வாகனத்தைத் திருப்பினேன். இந்த Where are you from ? என்ற கேள்வி இருக்கிறதே. இது மிகவும் சுவாரசியமானது. இங்கு வரும் ஒவ்வொரு குடியேற்றவாசியும் அடிக்கடி எதிர் நோக்கும் கேள்விகளில் ஒன்று. இது கேட்கப் படும் பொழுது, கேட்கும் நபரைப் பொறுத்துப் பல்வேறு அர்த்தங்களில் கேட்கப் படலாம். உண்மையிலேயே அறிய வேண்டுமென்று ஆவலில் கேட்கப் படலாம். அல்லது ‘நீ கனடியன் அல்ல ‘ என்னும் ஆழ்மனத்தில் ஒளிந்திருக்கும் துவேஷ உணர்வின் வெளிப்பாட்டினைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கலாம். ஆனால் இந்தக் கேள்வியினை எதிர் கொள்ளும் நபர் இதனால் அடையும் மன உளைச்சல்களை யாரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு முறைம இதனை எதிர் கொள்ளும் பொழுதும் அவர் அவமானப் படுபவராகவே உணர்ந்து கொள்வதால் அடையும் எரிச்சலினை யாரும் புரிந்து கொள்வதாகத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் பல்வேறு அனுபவங்களிற்கும் என்னைத் தயார் படுத்தி வாழ இயல்பூக்கம் அடைந்து விட்டேன். தொழிலிற்காக முகமூடிகளை அடிக்கடி மாற்றுவதில் எனக்கு எந்த விதச் சிரமமோ அல்லது சமூக உளவியற் பிரச்சினைகளோ இருப்பதில்லை. ஆனால் நம்மவர் பலருக்கு ஊரியிலை இருந்த ‘கொண்மேந்து ‘ (Government) உத்தியோக மோகம் இன்னும் இருக்கத் தான் செய்கிறது.

அடுத்த சில மணித்தியாலங்கள் வார்டன் பாதாள ரயிலை சுற்றியே கழித்து விட்டு டொராண்டோ உள்நகர் ( ‘Down town ‘) நோக்கி வாகனத்தைத் திருப்பினேன். வழியில் இன்னுமொரு வெள்ளையின வாலிபன் வழியில் மறித்தான். கஞ்சா சற்று முன்பு தான் புகைத்திருப்பான் போலும். அவ்வளவு நாற்றம்.

‘எங்கு போக வேண்டும் ? ‘ என்றேன்.

‘சேர்போன்- டண்டாஸ் ‘ என்றான்.

உள்ளே ஏறி அமர்ந்தவன் ‘ நான் புகை பிடிக்கலாமா ? ‘ என்றான். பெரிதாக புகை பிடிக்கக் கூடாது என்ற குறி கார்க் கண்ணாடியிலிருந்ததை அவன் கவனிக்கவில்லை. ‘இல்லை நண்பனே. இந்த டாக்ஸியில் புகை பிடித்தல் தடை செய்யப் பட்டுள்ளது ‘ என்றேன். அவனுக்கு ஆத்திரம் சிறிது வந்தது. ‘ஆனால் நான் புகை பிடிக்கத் தான் போகின்றேன். யன்னலைத் திறந்து விடுகின்றேன். என்ன சொல்கின்றாய் ? ‘ என்றான். நான் திடமாக ‘மன்னிக்கவேண்டும். அனுமதிப்பதிற்கில்லை ‘ என்றேன். அவனது ஆத்திரம் சற்றே அதிகரித்தது. ஆத்திரத்தை வேறு வழியில் காட்ட எண்ணினான். ‘நீ மிகவும் மெதுவாகப் போகின்றாய். ‘ என்று முறையிட்டான். ‘ என்னுடைய வேக எல்லையை உனக்காக நான் தாண்ட முடியாது. இது தான் என்னுடைய எல்லை. இது உனக்குப் பிடிக்காவிட்டால் நீ தாராளமாக வேறு டாக்ஸி பிடிக்கலாம். ஆட்சேபனையில்லை ‘ என்றேன். அவனது ஆத்திரம் மேலும் அதிகரித்தது. சிறிது நேரம் இருக்கையில் நெளிந்தவன் ‘நிறுத்து ‘ என்றான். நான் வாகனத்தை வீதியோரமாக நிறுத்தினேன். இறங்கியவன் கதவை அறைந்து சாத்தினான். அத்துடன் ‘ இது கனடா மனிதா. உன்னுடைய நாட்டுக்கே போய் விடு (Go back to your country) ‘ என்றும் பலமாகச் சத்தத்துடன் கூடிய அறிவுரை கூறி விட்டுச் சென்றான். நானும் பதிலிற்கு ‘இது என்னுடைய நாடு. எந்த நாட்டிற்குப் போகச் சொல்லுகின்றாய் ‘ என்று கேட்டு ஆத்திரத்தை அடக்கி விட்டு எனது வியாபாரத்தைத் தொடர்ந்தேன். மாதம் ஆயிரம் டொலர்களுக்கு டாக்ஸி ‘பிளேட் ‘ (Taxi Plate) குத்தகைக்கு எடுத்து, இருபதினாயிரத்திற்கும் மேல் செலவழித்துப் புதுக்கார் வாங்கி, காப்புறுதி, ரேடியோ என்று மாதாமாதம் செலவழித்துச் சொந்தமாக வியாபாரம் செய்யும் எனக்கு இதுவும் வேண்டும் . இன்னமும் வேண்டும். இடையில் ஒரு டிம் கோர்ட்டன் டோனற் கடை தென்பட்டது. கோப்பி குடித்துச் சிறிது ஆறுதல் அடைந்து விட்டு வியாபாரத்தைத் தொடரலாமெனப் பட்டது. டாக்ஸியைப் நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தேன். நம்மவர் ஒருவர் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். தெரியாதது மாதிரி ஆங்கிலத்தில் ஒரு ‘மீடியம் டபுள் டபுள் ‘ என்றேன். ஒருமுறை என்னைக் கூர்ந்து பார்த்தவர் கேட்டார் ‘நீங்கள் ஸ்ரீலங்காவிலிருந்தா (Are you from Srilanka) ? ‘ என்றார். ‘ஆம் ‘ என்றேன். ‘அண்ணை தமிழிலையே கதைக்கலாமே ‘ என்றார். ‘கதைக்கலாம் ‘ என்றேன். அடுத்து அவர் கேட்டார்:

‘அண்ணை ஊரிலை எந்த இடம் ? ‘

இது எப்படி இருக்கு.

***

ngiri2704@rogers.com

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்