நான்காவது கொலை!!! (அத்யாயம் – ஒன்பது )

This entry is part of 27 in the series 20021001_Issue

ஜெயமோகன்


ஒன்பது

**

சங்கர்லால் அந்த இருவரையும் பதுங்கிப் பதுங்கிப் பின் தொடரும்போது எதிரே வேறு ஒரு ஆசாமி பதுங்கிப்பதுங்கி வருவதைக் கண்டு [ சரவணா ஸ்டோரில் கிலோ விலைக்கு வாங்கிய ] துப்பாக்கியை சரேலென்று உருவி ஒரு தூணின் மறைவில் ஒளிந்தபடி எட்டிப்பார்க்கையில் ஒரு சடைமுடிச் சாமியார் பம்முவதைக் கண்டு ‘ கைகளை மேலே தூக்கு ! உன் பெயர் என்ன ? எங்கிருந்து வருகிறாய் ? ‘ என்று கேட்டார் .

‘கைகளை மேலே தூக்கினால் வேட்டி அவிழ்ந்துவிடுமே ‘ என்றார் சாமியார்

‘அப்படியானால் ஒருகையை மட்டும்தூக்கினால் போதும் . ‘ சங்கர்லால் கட்டளையிட்டார் ‘ நீர் யார் ? ‘

சாமியார் புன்னகையுடன் ‘ ‘என் பெயர் திகம்பர சாமியார் . பூர்வாசிரமத்திலே சொக்கலிங்கம் பிள்ளை . மனைவி சிவகாமியுடன் துப்பறியும்பொருட்டிங்கு வந்தேன், துப்பறிவதற்கு தாசிகளைத் தேடி போகிறேன் ‘ என்றார் .

‘தாசிகளா எதற்கு ? ‘

‘என்ன கேள்வி இது மகனே ? பத்து பக்கத்துக்கு பத்துபக்கம் தாசிகதைகள் இல்லாமல் என்னால் எப்படி துப்பறிய முடியும் ? நீ என் புகழ்பெற்ற கும்பகோணம் வக்கீல் என்ற கேஸைமட்டுமாவது ஒருமுறை படித்துப் பார்க்கவேண்டும்… ‘ திகம்பர சாமியார் சொல்லலானார் ‘ நீ கேட்ட வினாவானது ஆழமானதும் அற்புதகரமானதுமாகுமெனக் கூறக்கடமைப்பட்டுள்ளேன். . பரமயோகிகள்கூட இதைப்பற்றி பலவாறாக சிந்தித்தும் பதில்காணமுடியாது தவித்துக் கொண்டிருகிறார்களெனினும் உனதுவினாவினை ஒருவாறு தெளிந்து சில சொற்கள் சொல்லலுற்றேன். கும்பகோணம் மன்னார்குடி ரஸ்தாவிலே பாபநாசம் என்று ஒரு சிற்றூருண்டு .அங்கே ஸ்தனபாக்கியம் என்றொரு தாசி ………. ‘

சங்கர்லால் எட்டிப்பார்த்தார் .ஐயத்துக்குரிய இருவரும் வெகுதொலைவில் சென்றுவிட்டிருந்தார்கள் . ‘சற்று வேகமாக சொல்லவேண்டும் சுவாமி.. ‘ என்றார்

‘ஆயிரத்து துளாயிரத்து முப்பதுகளிலே எங்கள் வடுவூரார் கதையே அதிவேக இலக்கியமென அறியப்பட்டதென நீவிரறியீரோ ? தஞ்சாவூர் கும்பகோணம் பாசஞ்சர் போல ராத்திரி முழுக்க பாய்ந்து போய்க்கொண்டே இருக்குமென்பார்கள் .ஒரு புள்ளியைக்கடக்க ஐம்பத்தேழாயிரம் சொற்களோ அல்லது ஆறு நாட்களோ அல்லது இதில் எதுஅதிகமோ அது ஆகும். ..நான் யாரென நீவிர் கேட்டவினாவுக்கு பதில்சொல்லப்புகின் விரியும். அமரும்… ‘

சங்கர்லால் தந்திரமாக கீழ்பக்கம் ஓடிய படிகளை பார்த்தார் ‘ …. அங்கே தர்மநெறி வழுவா பிராமணோத்தமர்கள் தினம் சந்திவந்தனம் பந்திவந்தனமீறாக குலதர்மங்களை மீறாதவர்களாக ஒழுகிவந்தமையினால் ….. ‘

துப்பறியும் நிபுணர்களுக்கேயுரிய லாவகத்துடன் சங்கர்லால் தப்பியோடியமை வாசகர்கள் ஊகித்தறிந்து மகிழ்வு கொள்ளத்தக்க விஷயமேயாகும்.

******

காலையில் வசந்த் தொடர கணேஷ் ஹாலுக்கு வந்தபோது அங்கே ஒரே களேபரமாக இருந்தது . ‘பாஸ் நம்ம ஃபல்குனன் பிள்ளா என்னமோ ஸ்டால் திறந்திருக்காப்ல ‘ என்றான் வசந்த் .

ஃபல்குனன் பிள்ளா ஒரு மேஜைக்கு பின்னால் சொகுசாக சாய்ந்து தேசாபிமானி பார்த்துக் கொண்டிருந்தார் . ‘வணக்கம் வாங்க … ‘

‘என்ன எஸ் டி டி பூத்தா ? ‘ என்றான் வசந்த் .

‘இல்லை சார். போலீஸ் செய்தி தொடர்புக்கு போட்டிருக்காங்க . ஏகப்பட்ட துப்பறியும் நிபுணர்கள் வந்திட்டாங்க . எல்லாருக்கும் செய்தி சொல்லி கட்டுப்படியாகவில்லை .அதுதான் . இரண்டாவது கொலை போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வாங்கிட்டாங்களா ? ‘

‘என்னது பிட் நோட்டாஸா ? ‘

‘இல்லை சார் . நூறு காப்பி வரை தேவைப்பட்டது . அதான் எஸ். பி உத்தரவு ‘

‘புத்தம் புதிய சருமத்துக்கு புன்னகை பூசுமஞ்சள் தூள் ! ‘ என்று வசந்த் வாசித்தான்

‘ஹி ஹி ஹி செலவை விளம்பரம் வழியாக ஈடுகட்டுகிறோம் சார் … ‘

அந்தபக்கமாக ஒருவர் நடந்து போக வசந்த் உற்று பார்த்து ‘எங்கேயோ பார்த்த முகம் ‘ என்றான்

‘பெரி மேசன் சார் .பின்னால் போகிறது அவரது துப்பறியும் நிபுணர் ‘ ‘

‘ஏகப்பட்ட ஆட்கள் வந்துவிட்டார்கள் போலிருக்கிறதே ‘

‘மொத்தம் எண்பதுபேர் . கான்ஸ்டபிள் கந்தசாமி , குங்குமப்பொட்டு குமாரசாமி , ஆனந்த சிங் ‘

‘சரிதான் சர்தார்ஜி ஜோக் வேறயா ? ‘

‘இவர் ஆரணி குப்புசாமி முதலியார் கதாபாத்திரம் . ‘

‘இத்தனைபேர் ஒரு கதையிலேயா ? ‘

‘இந்த கதாசிரியர் ஒரு டைப் சார் . மொத்தம் ஆயிரத்துஅறுநூறு பக்கம் நாநூறு கதாபாத்திரங்கள் என்று திட்டமிட்ட பிறகுதான் நாவலுக்கு கருவே யோசிப்பாராம் . இந்தக் கதையைக்கூட மொத்தம் ஆறாயிரத்து எழுநூற்று பதினெட்டு அத்தியாயம் எழுதபோகிறதாக பேச்சு . நல்ல வேளை நான் அதற்குள்ளே ரிட்டையர் ஆகிவிடுவேன் .நீங்கள்தான் பாவம் , மர்மம் அவிழாமல் நிம்மதியாக டாய்லட் கூட போக முடியாது ‘

‘அதுக்காக இப்படியா , ஒருத்தர் பின்பக்கத்தை இன்னொருத்தர் லென்ஸ் வைச்சு பாக்கணும்போலவா ? ‘

‘அதுதான் இந்தக் கதையின் ஜீவகளை சார். இந்த கதையிலே துப்பறியும் நிபுணர்கள் மேலேயே சந்தேகம் . குற்றவாளி யார் ? கணேஷ் வசந்த் ? ஷெர்லக் ஹோம்ஸ் ? துப்பறியும் அப்புசாமி ? ‘

‘அந்தாள் வந்துட்டானா ? ‘ வசந்த் அலறிவிட்டான்.

‘ அரைபிளேடு ,ரசகுண்டு ஜ. ரா. சுந்தரேசன் எல்லாரும் வந்தாச்சு ‘

‘சி. ஐ. டி சகுந்தலா வரலீங்களா ? ‘

‘அவங்கதான் இன்னைக்கு காபரே ஆட்டம் . போஸ்டர் பார்க்கவில்லையா ? ‘

‘பாஸ் இன்னைக்கு நான் தனியா துப்பறியறேனே ? ‘

கணேஷ் நொந்துபோய் ‘ விடுரா , நான் போய் போரும் அமைதியும் மறுபடி படிக்கமுடியுமா என்று பார்க்கிறேன் ‘ என்று போய்விட வசந்த் ரிசப்ஷனில் இருந்த ஒல்லியான பெண்ணிடம் ‘ மிஸ், நீங்க ஹார்லிக்ஸ் சாப்பிடுவது கிடையாதா ? ‘ என்று கேட்கப்புகுந்தான்.

அப்போது அவிழ்ந்த கூந்தலுடன் கொற்றவையல்லள் என வேம்பு பாய்ந்து வந்து ‘ என்னாங்க ஓட்டல் இது ? தினத்துக்கு ரெண்டாயிரம் ரூபா வாங்கறீங்க . ஒட்டடையெல்லாம் கூட்டி தொடைச்சு வைக்கிறதில்லையா ? கோந்தை வெளையாடற எடம்… ‘ என்றாள்.

‘ஒட்டடையா ? இருக்காதே ‘ என்றார் மேனேஜர் .

‘ எங்கிட்டே சொல்றேளா ? அந்த ஓரத்து ரூமிலே இத்தா பெரிசு ஒரு சிலந்தி … ‘

‘அய்யோ அம்மா .அது ஸ்பைடர்மேன் .ராத்திரி பூரா துப்பறிஞ்சுட்டு இப்பதான் வந்து உத்தரத்துக்கு அடியிலே ஒட்டிக்கிட்டு ரெஸ்ட் எடுக்கறார் ‘ என்றார் பட்லர் பரமசிவம் .

‘ ஏன் அவருக்கு மூல உபத்திரவமோ ? ‘ . வசந்தால் அந்த ஒல்லியை சிரிக்கவைக்கமுடியவில்லை

‘அந்த வடக்குப் பக்க ரூமிலே பேட்மேன் வேற தலைகீழா தொங்கிட்டிருக்கார் . பாத்துப்போங்கோ.. ‘

‘நல்ல ஓட்டல் கட்டினீங்க போங்க .பூச்சியும் பொட்டுமா … ‘

அப்போது ஒரு ஆசாமி மூக்குமேல் இரு மெல்லிய குச்சிகளை வைத்து ஆட்டியபடியே போனார்.

‘வித்தைக்காரருங்களா ? ‘ என்றான் வசந்த் .

‘இல்லீங்க .இவரு பேரு காக்ரோச் மேன் .. ‘

‘கேள்விப்பட்டதில்லையே ? ‘

‘இன்னும் ரிலீஸ் ஆகலை . ஸ்பைடர்மேன் கிட்டே அப்ரண்டாஸாக இருக்கார் . ‘

‘வெங்காய சருகு மாதிரி இருக்கு ‘ வசந்த் அந்த ஆளின் கோட்டை தொடப்போனான் .

‘பின்னாலே போகாதீங்க . அவரோட ஆயுதமே பின்னாலே பீச்சி அடிக்கிற நாத்தம்தான் .முந்தாநேத்து பார்க்கிங் லாட்லே அப்டியே சீறிட்டார். இன்னும் கழுவி முடிக்கலை .. ‘

வேறு ஒருவர் சோபாநுனிகள் மேல் கால்வைத்து தாவித்தாவி போனார் ‘இவரு யாருண்ணு நான் சொல்றேன் .கிராஸ்ஹோப்பர்மேன் .சரியா ? ‘ என்றான் வசந்த்

‘ ‘இந்தமாதிரி ஏகப்பட்டது இருக்கு சார் . இன்னும் பதினேழுபேர் இப்ப லார்வா ஸ்டேஜிலே இருக்காங்க ‘

அந்தப்பக்கமாக போன இரு வெள்ளையர்களை வசந்த் கவனித்தான் .அவர்களில் ஒருவர் ஸ்டிக்கர்பொட்டு வைத்திருந்தார் .

****

இன்ஸ்பெக்டர் கோபாலன் தன் முதன்மை சந்தேகபாத்திரத்தை அடிமேலடிவைத்து நிழல்போல பின் தொடர்ந்துகொண்டிருந்தது அவரது குணச்சித்திரத்துக்கு இயல்பே என அதிபுத்திசாலிகளான நமது நேயர்கள் இதற்குள் ஊகித்திருப்பார்கள் . இவ்வாறு பழகிவிட்டமையினால் அவர் தன்முன் பின்தொடர யாருமில்லாத பட்சம் நடப்பதேயில்லை. அடிமேலடி காரணமாக அவருக்கு கொன்னக்கோல் என்றபெயரும் காய்கறிக்கடை வட்டாரத்தில் உண்டு . [அவர் தன் வீட்டில் சமையலறையிலிருந்து குளியலறைக்கு போகும்போது அம்மியில் தடுக்கி விழ அது சற்று நகர்ந்த விஷயத்தை எமது ‘பழமொழிகளும் உண்மையும் ‘ என்ற நூலில் காண்க. விலை மூன்றணா . முன்பணம் கட்டுபவர்களுக்கு பிழைதிருத்தப்பட்டியல் இனாம் ]

கறுப்புக்கண்ணாடி அணிந்த அந்த மர்ம ஆசாமி பேசும் மொழியும் விபரீதமாக இருப்பதை கோபாலன் கவனிக்கத்தவறவில்லை . ஒரு வேளை ஏதாவது தமிழ்ப் பாடநூலில் இருந்து தவறி வந்த கதாபாத்திரமோ என்ற சந்தேகமும் அவருக்கு எழாமலில்லை . கடைசியில் முப்பது சொற்களுக்குமிகாமல் பதில் சொல்லவேண்டியிருக்குமோ என பீதியுடன் எண்ணிக் கோண்டார் , அவர் தமிழ்பாடத்தில்தான் ஃபெயிலாகி போலீஸ் பக்கம் வந்தார் .

வராந்தாவை தாண்டிச்செல்கையில் ‘…… கண்ணாடி காந்தாமணி என்பவளைப்பற்றி கேள்விப்பட்டிருக்காதவர்கள் வெகுஅபூர்வம். இவளது கன்னமாகப்பட்டது பெல்ஜியம்கண்ணாடி போலிருப்பதாலிப்பெயர் சித்திததென்று கூறுவாருளர் . கண்ணாடிக்கடை கந்தப்பமுதலியென்பானின் எடுத்துவைப்பிவளென்பதால் இப்பெயரென்று கூறுவார் சிலருமுளர் . … ‘ என்று ஒரு குரல் கேட்டது

கறுப்புக்கண்ணாடி அணிந்த மர்ம ஆசாமி அக்குரலைக்கேட்டதுமே இடியோசைகேட்ட நாகம் போலவும் , அம்மா குரல் கேட்ட மந்திரிபோலவும் பம்மிப் பதுங்கி மறுபக்கமாகச் செல்வதை கோபாலன் கவனிக்காமலிருப்பரென நாம் எதிர்பார்க்கமுடியாது . அவ்வழி வந்த ஒரு பட்லரிடம் ‘அதென்ன ஏதோ கதை கேட்கிறது ? ‘ என்று கோபாலன் கேட்டார்.

‘ ‘அது துப்பறியும் திகம்பர சாமியார் சார் . அவரிடம் யாரோ எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டுவிட்டார்கள். காலையிலிருந்து பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். கேட்டவன் தப்பி ஓடிவிட்டான், வழிதவறி ஒரு ஆசாமி அகப்பட்டுக் கொண்டான் . அவனை மீட்க தீயணைக்கும்படைக்கு சொல்லி அனுப்பியிருக்கிறது…. ‘ ‘ என்றான்.

அதற்குள் கறுப்புக்கண்ணாடி அணிந்த மர்ம ஆசாமி தப்பிவிட்டான் என கோபாலன் அறிந்து ஆஹாரம் போட்டு தேட ஆரம்பித்தார் . எல்லா அறைக்கதவுகளும் மூடியிருந்தமையால் அவர் ஒவ்வொரு அறைக்கதவாக காதைவைத்து கேட்டது துப்பறியும் சாஸ்திர விதிப்பிரகாரமேயாகும். ஓர் அறைக்குள்ளிருந்து பயங்கரமான சிரிப்பொலியும் ‘ ‘வாலு போயி கத்தி வந்தது ! டும் ! டும் ! டும் ! ‘ ‘ என்ற கவிதையும் யாரோ நடனமிடும் ஒலியும் கேட்டது .

கோபாலனுக்கு கோபம் வந்தது , என்ன தொடர்கதை இது சம்பந்தமே இல்லாமல் . என்னதான் அங்கதக்கதை என்றாலும் இப்படியா ? திடாரென அவர் மனதை பீதி கவ்வியது . ஒருவேளை உள்ளே இருப்பதுதான் கதாசிரியரா ? கதைபோகிறபோக்கைபார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது . அடாடா மாட்டிக் கொண்டேனே , என்ன செய்வது என அவர் தவித்தபோது கதவு திறந்து உள்ளே நின்ற வெள்ளைக்கார நாரீமணியின் காலடியில் அவர் குப்புற விழுந்து தெண்டனிட்டார் .

‘அய்யோ அய்யோ ! அறையிலும் இருக்க விடமாட்டார்களா ? ‘ என்றாள் அவள்

‘நான்.. நான்….. ‘ என்றார் கோபாலன்

‘தெரியும் நீங்கள் காங்கிரஸ் கட்சி . ஐயா, எனக்கு இத்தாலி என்ற தேசத்தையே தெரியாது போதுமா… ‘

‘ நான் துப்பறியும் கோபாலன் . ‘ என்றார் கோபாலன் ‘துப்பறியும் சாம்பு கூட வருவேனே ? ‘

‘கேள்விபட்டதில்லையே ? ‘

‘ ‘கத்தி போயி ரொட்டி வந்தது ! டும் ! டும் ! டும் ! ‘ ‘

‘ மரவீடு அதாவது பி ஜி வுட்ஹவுஸ் கேள்விப்பட்டிருப்பீர்கள் . அவருடைய மூன்றாம் கார்பன் தாளைத்தான் நாங்கள் பயன்படுத்துவது . யார் இவர் ? ‘

‘இவர்தான் பெர்ரி மேசன் …. ‘

‘இங்கிலாந்திலெல்லாம் கொத்தனார்களுக்கு நல்ல மவுஸ் போல . பார்க்க பந்தாவாக இருக்கிறார் … ‘

‘நான் டெல்லா ஸ்ட்ரீட்.. . ‘

‘நான் தம்புசெட்டி தெரு . நீங்க இவருக்கு யாரு ? ‘

‘இவர் உலகப்புகழ்பெற்ற துப்பறிீயும் வக்கீல் சார் . நான் இவரோட செகரட்டரி . எத்தனையோ சிக்கல்களை அனாயாசமாக தீர்த்துவைத்த எங்கள் பாஸ் இங்கே ஒரு பெரிய சிக்கலை தீர்க்கமுடியாமல் இப்படி ஆகிவிட்டார் … ‘

‘அடாடா ,என்ன ஆயிற்று ? ‘

‘ ‘ரொட்டி போயி புட்டி வந்தது ! டும் ! டும் ! டும் ! ‘ ‘

‘இந்தக்கதையின் ஆசிரியர் கத்துக்குட்டி .கதை ஓடாமல் பக்கத்து நாவலில் இருந்து எங்கள் பாஸை இழுத்துவிட்டார் . பாஸ் ஒரு இங்கே ஒரு கார் லைசன்ஸ் எடுக்க விரும்பினார் . அதற்காக ஆர் டி ஓ ஆபீஸ் போனார் … ‘

‘அடாடா … ‘

‘ ஐம்பது ஆவணங்கள் கேட்டார்கள் . இன்ஷூரன்ஸில் தொடங்கி ஆர்த்தோ டாக்டரின் சான்றிதழ் வரை . ‘ ‘

‘ கடைசியாகச் சொன்னது எதற்கு ? ‘ ‘

‘சைடு கொடுக்கும்போது கையை வெளியே விட்டு வேகமாக ஆட்டத்தேவையான எலும்புபலம் இருக்கிறது என்று . இந்த ஐம்பது ஆவணங்களை வாங்க மொத்தம் இருநூற்று எண்பத்தெட்டு ஆவணங்கள் தேவைப்பட்டன . ‘

‘அப்புறம் ? ‘

‘பாஸ் சோர்ந்துவிடுபவரல்ல . அவற்றை பெற முயன்றார் .அதற்கு மொத்தம் ஆயிரத்து அறுநூற்று பதினெட்டு ஆவணங்கள் தெவைப்பட்டன … ‘

‘ பிறகு ? ‘

‘ பாஸ் பிறகு ஒரு ஏஜென்ஸியை அமர்த்தினார் . அந்த ஆயிரத்து அறுநூற்று பதினெட்டு ஆவணங்களைப் பெறுவதற்கு மொத்தம் பதினெட்டாயிரத்து முந்நூற்று அறுபத்தேழு ஆவணங்கள் தேவை என்று கணக்கிட்டுவிட்டார் .படிப்படியாக விடாமுயற்சியுடன் முன்னேறினார் . அப்போதுதான் காற்றடித்து ஆவணங்களைப்பற்றிய குறிப்புகள் கலந்துவிட்டன .போன திங்கள்கிழமை அவற்றை அடுக்கமுயன்றார் . ஒருவாரம் ரொட்டிவைன் உள்ளே செல்லவில்லை. இப்போது இப்படி ஆகிவிட்டார் . இந்தப்பாட்டு ஆர். டி. ஓ ஆபீஸ் வாசலில் ஒரு பைத்தியம் பாடிக்கொண்டிருந்தது . அதையே விடாமல் பாடுகிறார் . ‘

‘பாவம் ‘

‘எனக்கு இப்போது ஒரு குழப்பம் ‘

‘நான் போய்விட்டு பிறகு வருகிறேனே அவசரமாக ஒரு… ‘

‘இருங்கள் . பிளீஸ் . அந்த டிரைவிங் லைசன்ஸ் கிடைத்து விட்டது … ‘

‘அப்பாடா. எப்படி ? ‘

‘ பட்லர் பரமுவிடம் ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்தேன் . மறுநாளே வாங்கிவந்துவிட்டான் . ‘

‘அப்புறமென்ன ? ‘

‘சந்தோஷத்தில் அவனுக்கு இரண்டாயிரம் ரூபாய் டிப்ஸ் கொடுத்தேன். அவனுக்கு என் ஆங்கிலம் புரியாமல் இன்னொரு லைசன்ஸ் வாங்கி வந்துவிட்டான் … ‘

‘இன்னொன்றா ? ‘

‘இது விமானம் ஓட்டும் லைசன்ஸ் .இதை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்றே தெரியவில்லை …மூளை குழம்புகிறது. எங்கேயோ கேட்ட ஒரு பாட்டுமட்டும் பழுதடைந்த ரேடியோ போல மூளைக்குள் கேட்டபடியே இருக்கிறது …. ‘

கோபாலன் ‘ அமைதியாக இருங்கள் . என்ன இது ? ‘ என்றார்

அந்த அம்மையார் ‘ அடிக்கிற கைதான் அணைக்கும் … ‘ ‘ என்று பயங்கரமாக பாட ஆரம்பிக்க கோபாலன் வெளியே பாய்ந்து படிகளில் தாவி ‘இவளுக்கு தனலட்சுமி தனலட்சுமியென்று ஒர் அதிரூ – பலா- வண்யவதியான ஒரு மகளுண்டு . ரூபவதிகளின் குணங்களேழு வகை . அவையாவனவெனில்… ‘ என்று சொல்லிக்கொண்டிருந்த திகம்பர சாமியாரை தாண்டி ஓடினார்

[தொடரும்]

Series Navigation