இழப்பு

This entry is part of 29 in the series 20020722_Issue

துரைசாமி


தூக்கம் இல்லை மயக்கம், நினைவுகள் மயங்கவில்லை, உடல் மயங்குகிறது. கண் இரப்பைகள் பிரியவில்லை, உணர்வுகள் விழித்துக்கொண்டிருக்கின்றன. திறந்திருந்த ஜன்னல் வழியே பாதங்களில் பரவ ஆரம்பித்த வெளிச்சம் மெல்ல மெல்ல கழுத்துவரை ஏறிக்கொண்டிருக்கிறது. உடம்பில் வெயில் உறைக்க ஆரம்பித்தும் தலை நிமிர்தமுடியவில்லை. கை, கால்கள் கட்டளையின்றி தன்னிச்சையாய் – அழுக்கு துணியாய் தரையில் பரவிகிடப்பதை உணரமுடிந்தும் எதுவும் செய்ய தோன்றாமல் மூளை மயங்கிகொண்டிருக்கிறது. சிறகிழந்த பறவையாய் நினைவுகள் பாதாளத்தை நோக்கி வெகுவேகமாய் எங்கோ ….எங்கோ… நினைவுகள் சிதற ஆரம்பிக்கின்றன. சிதறி தெரித்த நினைவுகளில் தேங்கி நிற்பது அவன் -ரவி

ஈரமணலில் தடம்பதித்து சிறுது தூரம் நடந்து பின் திரும்ப, பதிந்த தடங்கள் மீண்டும் ஈரமணலாய்…

எத்தனை நேரம் நடை தெரியவில்லை, இடையில் இரண்டு குப்பம், வரிசையாய் கட்டுமரங்கள், மனிதநடமாட்டம் இன்றி அமைதியாய் ஒதுங்கியிருந்த கரை, மனித நரவல்கள் அற்று சில இடங்களில் சிரித்துக்கொண்டிருந்த கடல், இத்தனையும் தாண்டி அஷ்டலஷ்மி கோயில் வந்தாயிற்று. வெளிச்சத்தில் ஆரம்பித்தது, முகம் மறைக்கும் இருள் கவிழ்ந்து கொண்டிருக்கிறது. பேச்சில்லை, பேசுவதற்கு எதுவும் இல்லாமலும் இல்லை. உள்ளேயிருக்கிறது எல்லாம். கோபம், அதிர்ச்தி, ஆயாசம், வருத்தம், எதையும் வெளிப்படுத்ததெரியாமல் குழம்பி உறைந்து கிடக்கிறது அவன் முகம். என்னிடம் ஆச்சர்யம் மட்டும் தேங்கியிருக்கிறது. இருவரும் ஈரமணலை பார்த்தபடி இணையாகத்தான் நடந்துகொண்டிருக்கிறோம். அவன் உதடுகள் அசையவில்லை, ஆனால் அவனுடைய ஒவ்வொரு செல்லின் அசைவும் – அதிர்வும் எனக்கு கேட்டபடியேதானிருக்கிறது.

எத்தனையோ முறை இப்படி நேர்ந்திருக்கிறது. ஆனால் இதுபோல் எதுவும் நிகழ்ந்ததில்லை. ஒவ்வொருமுறையும் ஒவ்வொன்று, அந்த கணத்திற்கு தகுந்தாற்போல். மனம் எப்படியோ கணங்களும் அப்படி, காலங்கள் உறைந்துபோக கண்ணாடி டம்ளரில் டா குடிந்துகொண்டிருந்த கணங்கள் உட்பட, எத்தனையோ….எவ்வளவோ…பேசி பேசியே கரைந்துகொண்டிருந்த காலங்கள், பேச்சில்லாமல் மவுனமாய் நடந்த நேரங்களில் புரிந்தது, புரிந்துகொண்டதாய் உணர்ந்தது. உணரந்தது உறைந்து, உறைவில் மயங்கி மயக்கமே தூக்கமாய், தூக்கத்திற்கும் மயக்கத்திற்கும் இடைபட்ட கணமே வாழ்க்கையாய், சுழலில் படகாய், அதுவே சுகமாய், அந்த சுகமும் அவனாய்…………..

சரம் அறுந்து உதிர்ந்த மணிகளாய் நினைவுகள் அறுபட அலறுகிறது அலாரம். எங்கே……எங்கே…….சட்…மணி ஐந்து, இத்தனை நேரம் அவன் டெல்லி புறபடுவதற்கான ஆயத்தங்களில் இருக்கலாம். மகுடிக்கு முன் பாம்பாய் சுழற்சியில் சிக்கிக்கொண்டிருந்த எனக்கு விழிப்பு கொடுப்பதாய் வந்தது அவனுடைய சென்னை வருகையை பற்றின செய்தி. அவன் டெல்லி போய் வேறு வேலையை ஏற்றுகொள்வதற்கு முன் சென்னையில் இரண்டு நாட்கள் தங்கிபோகபோவதாக கிடைத்த அந்த செய்தி எனக்கு மிகவும் சந்தோசம் தருவதாக இருந்தது. வாழ்க்கையே மூன்று எட்டு மணிநேரங்களாக சிதறிகிடக்க, கிழமைகள் மறந்து, காலநேரங்களற்று குடைராட்டின குதிரையாய் மாறிக்கொண்டிருக்கையில், அவனின் வருகை….. படுக்கும் நேரம், விழிக்கும் நேரம், எல்லாம்….. எல்லாம்…திட்டமிட்டபடியே நூல்பிடித்து போட்ட கோட்டின் ஊடே இயந்திரமாய் ஓடிக்கொண்டிருக்கையில், திட்டங்கள் அற்று, நேரங்கள் பற்றிய பிரஞ்சை அற்று, என் கையுக்குள் அடங்கிகிடக்கும் காலத்தோடு ஒரு முழு இருபத்திநாலு மணிநேரமேனும் அவனுடன்…நூலறுந்த பட்டமாய் அவன் அருகில்………….

‘ ‘இல்லடா ரொம்ப கஷ்டம். என் நிலமைய புரிஞ்சுகயேன். மெட்ராஸ் முக்கியமாய் வந்ததே கம்பனி பெரிய ஆளுங்க கொஞ்சம் பேர் இங்க இருக்காங்க, அவுங்களை பார்கத்தான். நாளக்கி சாயந்தரம் அவுங்களோட டின்னர்….. ‘ ‘

என் மவுனம் அவனை சங்கடபடுத்தியிருக்க வேண்டும்.

‘ ‘இல்லன ஒன்னு செய்யலாம். ஸகன்ட் ஸோ வேண போகலாம். எந்த தியட்டருனு சொல்லிட்டேனா, அங்க வந்துடுவேன். மூனு பஸ் மாறி உன்னை இங்க பாக்க வரத்துக்குள்ள பாதி நாள் போச்சிடா…. ‘ ‘

‘ ‘சரி என்னைக்கு ஊருக்கு போறேனு சொல்லு நான் ஸ்டேசன் வர்றேன் ‘ ‘

கடைசி வருட கல்லூரி தேர்வுகள் முடிந்து எல்லோரும் எல்லோருடனும் – பிடித்தவர் பிடிக்காதவர் பேதமற்று கலந்து சிதறிக்கொண்டிருந்த பொழுது, நாங்கள் இருவரும் எதிலும் கலந்து கொள்ளாமல், கூவத்தின் குறுக்கே கிடந்த அந்த மரபாலத்தை கடந்துகொண்டிருந்தோம். அவன்தான் தீடாரென்று எங்கள் இருவருக்கும் பொதுவான ஒரு நண்பனுக்கும் அவனுக்கும் இடையில் உள்ள பிரச்சனையை பற்றிய பேச்சை ஆரம்பித்தான். எப்பொழுது என்று உணர்ந்து கொள்ளும் முன்பே, நாங்கள் இருவரும் எதிர் எதிர் கட்சியிலிருந்து வாதித்தபடியே கடற்கரைக்கு வந்துலிட்டிருந்தோம். வாதம், பிரதிவாதம் – கட்சி, எதிர்கட்சி என்ன சொல்ல, அன்று என் நாக்கில் சனி. அவன் என்னை அமர்த்த நினைத்தது நீதிபதியாக நான் அமர்ந்தது எதிர்தரப்பில். அன்றைய கசப்பு ஐந்து வருடங்களுக்கு பின் இன்னும் தொண்டைகுழியில்.

சற்று நேரம் எதுவும் செய்ய தோன்றாமால் அசைந்துக்கொண்டிருக்கும் கடிகாரமுள்ளை பார்த்தபடியே அமர்ந்திருந்தேன். எதையேனும்…..அவனுக்கு கொடுக்கவேண்டும். அதற்கே உடைய பிரத்யோக வாடையுடன் பழைய பெட்டி, கல்லூரி நாட்கள் டைரி, நோட்டுபுத்தகங்கள் , போட்டோ ஆல்பங்கள் …எல்லாம் என்னை சுற்றி விரிந்து கிடக்கின்றன மழலைபேசியபடி. மீண்டும் கிடைக்கமுடியாததாய் எதையேனும் அவனுக்கு…………..

பிளாட்பார டிக்கெட் வாங்கி சென்டரல் உள் நுழைந்தபோது, அவன் போவதற்கான ரயில் இன்னும் பிளாட்பாரத்திற்குள் வந்திருக்கவில்லை. மழை ஓய்ந்தவுடன் திட்டு திட்டாய் தண்ணீர் தேங்கி காட்சியளிக்கும் குழம்பிய தெருவாய் மனித முகங்கள். போனவுடன் மறக்காமல் கடிதம் எழுதசொல்லி வற்புறுத்தும் குரல்கள், இத்தனை சீக்கிரம் புறபட்டுவிட்டாயே என்று ஆதங்கத்துடன் ஒலிக்கும் குரல்கள்…..எல்லாம் குரல்கள், ஒருசில இடத்தில் மனங்கள். வார்த்தைகளற்று கைக்குள் கை பொதித்து கொண்டு உணர்வுகளை பரிமாறியபடி ஆபூர்வமாய் மனிதர்கள். எங்கும் பேச்சு, சப்தம், ஆராவரம், அமர்களம்…… சவகாசமாய் யார் மீதும் மோதிக்கொள்ளாமல் அந்த கடைசி பிளாட்பாரத்துக்குள் நுழைந்தபொழுது மிகவும் ஆயாசமாய் இருந்தது. எப்பொழுதுமே எங்களது பேச்சும், நட்பும் ஆள் அரவமற்ற தார்சாலையிலும், மனித நடமாட்டம் அற்று தவக்கோலத்தில் வீற்றிருக்கும் ரயில் நிலையங்களிலுமே இனிமையாய், சந்தோசமாய், தன்விருப்பம் போல்…..

கூடுவாஞ்சேரி தாண்டி எங்கோ…பெயர் ஞாபகமற்ற அந்த ஸ்டேசன் பெஞ்சில் உட்கார்ந்தபடியே எத்தனையோ…எவ்வளவோ…என்னை பற்றி, அவனை பற்றி, அடிமனதில் படிந்திருக்கும் வண்டலெல்லாம் வெளிவர திரைகளற்று அத்தனையும் எங்கள் எதிரில், அந்த கணத்தில் கடிகாரங்கலெல்லாம் செல்லரித்து போனதாகதான் தோன்றுகிறது.

எல்லாம் எங்களுக்காக, கல்லூரி மரத்தடியில் சிமிண்டு திண்டு, ஹாஸ்டல் வராண்டா, நாயர் கடை பெஞ்ச், மனித நடமாட்டம் ஓய்ந்திருக்கும் நேரத்தில் எங்களுக்காக இரவு நேரத்து மெர்குரி விளக்கு, எல்லாம்…எல்லாம்….எங்களுக்காக காத்திருந்தது போய், எல்லாவற்றிக்கும் நாங்கள், இல்லை நான். இத்தனை சந்தடியில் இப்படிபட்ட கூச்சலில் அவனிடம் எப்படி, எதைபற்றி பேச ? கோபத்தையும், பிடிவாதத்தையும் சடங்காக்கி கொண்டு…சை…நான் இல்லை அவன் இல்லை இருவமில்லை,எல்லாம் ….எல்லாம் ….சடங்காகிக்கொண்டு……சப்தத்துடன் பிளாட்பாரத்துக்குள் நுழைந்தது வண்டி. அவன் இருக்கையை தேடி அது பார்வையில் படும்படியாக சந்தடியற்ற பிளாட்பாரத்தின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டேன்.

கையில் பத்திரமாய் அவன் வரவிற்காக காத்திருந்த அந்த போட்டோ..குளிர் நிறைந்த மலைபிரதேசத்தில், முகங்கள் அற்று, அடையாளங்காணமுடியாத பாதைகளின் நடுவே, முடிவற்ற பயணத்தை மட்டும் நினைவுறுத்தும் அந்த போட்டோ, அவனுக்கென்று.

வண்டி புறபட இன்னும் இருபது நிமிடங்களே, எழுந்து தூணில் சாய்ந்துகொண்டேன். தொலைவாய் அவனும், இன்னுமொரு நண்பனும், உடன் அறிமுகமில்லாத நான்கைந்து பேர்களும் வேகமாக வந்துகொண்டிருந்தனர். அவன் நன்கு மழித்த முகத்துடன் அழுந்த தலை வாரியிருந்தான். மைகோடாய் அரும்பு மீசை. சிலுப்பிக்கொண்டிருக்கும் முரட்டு முடியும், திட்டு திட்டாய் மழிக்கபடாத ரோமங்களுமாய் பொருந்தாமல் நானும்…என் கால்கள் மெல்ல அவர்களை நோக்கி நகர்ந்தது. அவனுடைய மற்ற நண்பர்களுக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தான்.என்னுடைய வேலையை பற்றி பேசுவதிலே நான்கைந்து நிமிடங்கள் உதிர்ந்து கொண்டிருந்தன, மழிக்கபட்ட கன்னமும், அரும்பு மீசையுமாய் அவன் முகம் சலனங்களற்று இருந்தது.

‘ ‘அப்புறம்….. என்னடா….. ‘ ‘

என்னுடைய கையை தன்னுடைய முரட்டு கையால் பிடித்துக்கொண்டான். நான் எதுவும் தோன்றாமல் அவனை பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் பார்வை மிக கூர்மையாய் என்னையே ஊடுவிக்கொண்டிருந்தது. உப்பியிருந்த கன்னமும், விரிந்திருந்த மார்பும், நன்கு ஏறியிருந்த புஜங்களும்,

‘ ‘நீ நல்லா குண்டாயிட்டடா…. ‘ ‘

அவனிடமிருந்து சப்தத்துடன் ஒரு சிரிப்பு உதிர்ந்தது.அவன் கையுக்குள் இருந்த என் விரல்களில் இலேசக ஒரு அழுத்தம் பரவிற்று.

‘ ‘நான் மாறிட்டேனு சொல்ற அப்படிதானே…. ‘ ‘

நான் எதுவும் பேசவில்லை.

‘ ‘முன்னெல்லாம் நிறைய நேரமிருந்தது, நிறைய நடந்தோம்..இப்பெல்லாம் டாய்லெட் போறதுன்னா கூட பதினஞ்சி நிமிசமுனுதான் யோசிக்க தோனுது…. ‘ ‘

‘ ‘……………………….. ‘ ‘

‘ ‘பழசெல்லாம் ஞாபகமா மட்டுதான் இருக்குடா…. ‘ ‘

அவன் குரல் கிணற்றுகுள்ளிருந்தது வந்தது. விசில் ஊதியாகிவிட்டது. அவன் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு வண்டியில் ஏறிக்கொண்டான். என் விரல்களுக்கிடையே போட்டோயிருந்த கவர் பிசுபிசுத்துக்கொண்டிருந்தது. என் குழம்பிய முகத்தை மறைத்துக்கொண்டு கவர் அவன் முன் எழும்பிற்று.

‘ ‘என்னடா ? ‘ ‘ ரயில் மெல்ல நகர ஆரம்பித்தது.

‘ ‘ஒண்ணுமில்லடா……போட்டோ ஒண்ணு…… ‘ ‘ என் நடை வேகமாகிக்கொண்டிருந்தது.

‘ ‘பெட்டியெல்லாம் பேக்பண்ணிட்டன்டா…. அடுத்த…. ‘ ‘

வண்டி வேகம் பிடித்துவிட்டது. கல்லாய் நானும், காலியாகிக்கொண்டிருந்த பிளாட்பார காற்றில் என் கை கவரும்… மனித நடமாட்டமற்ற தார்சாலையும், ரயில் நிலையமும், எனக்காக…எனக்காக…. அங்கே என்னுடைய நண்பனும்……..

***

ttpoondi@emirates.net.ae

Series Navigation