கறுப்பு வெளிச்சங்கள்

This entry is part [part not set] of 31 in the series 20020330_Issue

அலர்மேல் மங்கை


முருகேசன் ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்தான். பீடிப் புகையை இழுத்துப் பின் வெளியே விட்ட போது பனிப் புகையுடன், பீடிப் புகையும் சேர்ந்து ஒரு குவியலாகப் பறந்தது. கிறுக்குச் சாமி அதே எகத்தாளச் சிரிப்புடன் அமர்ந்திருந்தது. வாய்க்காலுக்கு அப்புறம் ஓடிய திருவனந்தபுரம் ரோட்டில் ஒன்றிரண்டு பஸ்கள் அவ்வப்போது போகும் ஓசையில், வாய்க்கால் பாலத்தின் அடியில் தூங்கிக் கொண்டிருந்த பன்றிகள் சிறிது கலக்கத்துடன் நெளிந்தன.

‘பீடிய ஊதிட்டே இருந்தாப்ல…ரெட்டியாரண்ட போய்க் கேட்டியா ? ‘

கிறுக்குச் சாமி தாடியை வரட் வரட்டென்று சொறிந்து கொண்டே கேட்டது. முருகேசன் துண்டு பீடுயை விட்டெறிந்தான்.

‘அடக் கேக்கறம்ல… ? ‘

‘என்னத்தக் கேக்கற ? ரெட்டியார் பொண்டாட்டி வச்சதுதான் சட்டம். ரெட்டியாரு ஓட்டலப் பாப்பாரா, வீட்டுல பொண்டாட்டி யாருக்குச் சீட்டு கிழிச்சான்னு பாப்பாரா… ? ‘

‘அதான.. ?இந்த மடம் இல்லேன்னா வேற ஒரு எச்சி மடம்… ‘

கிறுக்குச் சாமி மீண்டும் சிரித்தது. முருகேசனுக்கு சுறுசுறுவென்று எரிச்சல் மண்டியது. மேலே போர்த்திக் கொண்டிருந்த பழைய போர்வையில் இருந்து காலை நீட்டி கிறுக்குச் சாமியை உதைத்தான். இதை எதிர்பாராத கிறுக்குச் சாமி சிறிது தடுமாறியது. பின் சிரித்தது.

‘வாய மூடு. குடிக்கிறது எச்சக்கலை பீடி. பேசறதுல மட்டும் ராங்கித்தனம்… ‘

முருகேசன் மீண்டும் காலை ஓங்கினான். கிறுக்குச் சாமி நகர்ந்து கொண்டது.

‘மல்லிகாவ எங்க ? ‘ என்றான் முருகேசன் சிறிது நேரம் கழித்து.

‘எங்க போனாளோ ? பாலத்துக்கு அடியில பாரு… ‘

கிறுக்குச் சாமி எழுந்து கொண்டது.

முருகேசன் சுருண்டு படுத்துக் கொண்டான். கிறுக்குச் சாமி வாய்க்கால் பக்கமாக நடந்தது. முருகேசன் அயர்ச்சியுடன் கண்களை மூடினான். இரண்டு நாட்களுக்கு முன் ரெட்டியார் பெண்டாட்டி அவனிடம் கூச்சலிட்டது நினைவில் ஆடியது. அப்போதும் அவள் முகத்தைப் பார்க்க முடியாமல் அவள் கைகளை நீட்டிப் பேசும் போது குலுங்கிய மார்புகளை வெறித்தான். மாடிக்குப் போகும் அறை வாசலில் நின்று, ரெட்டியார் மகள் குமுதா நடப்பதை வெறித்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் அவனுள் ஒரு வக்ரம் தலை தூக்கியது.

‘இந்தப் புள்ள பேச்சக் கேட்டுத்தான இந்தப் பொம்பள விரட்டறா…இப்ப பாரு…. ‘

‘அட நிறுத்தும்மா.. நீயும் உன் போக்கத்த வேலையும்..என்னத்த முடிஞ்சு வச்சிருக்கீக ஆத்தாளும், மகளும்! ஒம் பொண்ணு அவுத்துப் போட்டுட்டுத் திரியுது! நீ மூடி மூடி மரச்சுட்டு அந்த டாக்டரு வீட்டுக்கு ஏஞ் சும்மா சும்மா போறேன்னு தெரியாதாக்கும் ? பெரிசா பேச வந்துட்டா…அங்க என்னடான்னா உம் புருசன் மாடத் தெருக்குப் போட்டா, கீழத் தெருக்குப் போட்டான்னு அலைதான்… ‘ கூறி விட்டு ரெட்டியார் மகளைப் பார்த்தான். அதிர்ச்சியில் அவளுக்கு முகம் இறுகி, கண்கள் கலங்கி இருந்தன. வேகமாகப் படியேறி மாடிக்குச் சென்று விட்டாள் அவள். ரெட்டியார் பெண்டாட்டிக்கு அவமானத்திலும், கோபத்திலும் குரல் கிறீச்சிட்டது. வாட்ச் மேனைக் கூப்பிட்டு முருகேசனை வெளியே தள்ளச் சொன்னாள். முருகேசன் சத்தம் போட்டுக் கொண்டே வெளியேறினான்.

‘…….. ‘ என்று முனகினான். அப்படியே உறங்கிப் போனான்.

மீண்டும் முருகேசன் கண் விழித்த போது ஓலைக் கீற்றின் வழியாக வெயில் உள்ளே புள்ளிக் கோலம் வரைந்திருந்தது. முருகேசன் சுற்று முற்றும் பார்த்தான். சிறிது தள்ளி மல்லிகா அலங்கோலமாகப் படுத்திருந்தாள். லேசான குறட்டைச் சத்தம். வாயிலிருந்து எச்சில் கோடு! முருகேசன் பீடியைப் பற்ற வைத்தவாறே அவளை வெறித்தான். ஏனோ காரணமில்லாமல் ரெட்டியார் பெண்டாட்டி நினைவுக்கு வந்தாள்.

‘சிறுக்கி…இவ அந்த டாக்டரு வீட்டுக்கு ஏன் மினுக்கிட்டுப் போறான்னு தெரியாதாக்கும் ?ஆத்தா ஒரு……..,

மக ஒரு ………. ‘என்று அசிங்கமாக முனகிக் கொண்டான்.

முந்தைய தினம் காலையில் சாப்பிட்ட இட்லி எப்போதோ ஜீரணமாகி விட்டதில் வயிறு ஓலமிட்டது. மீண்டும் மல்லிகாவைப் பார்த்தான்.

ஏனோ குமட்டிக் கொண்டு வந்தது. இருந்த இடத்தில் இருந்தே காலால் அவளை எட்டி உதைத்தான்.

அவள் கண்களைத் திறந்து பார்த்து விட்டு மீண்டும் மூடிக் கொண்டாள். முருகேசனுக்குள் கோபம் மூண்டது.

‘எழுந்திருடி…முண்ட… ‘

மல்லிகா ஒரு ஆங்காரத்துடன் எழுந்து அமர்ந்தாள்.

‘ நேத்து எவண்டி வந்தான் ? ‘

‘ஒனக்கென்ன எவன் வந்தா ? ‘

சொல்லி விட்டு மீண்டும் படுத்தாள். முருகேசன் கோபத்தில் சிலிர்த்தான்.

‘அடச் சீ! திமிரப் பாரேன். இவளுகளையெல்லாம் கொல்லணும்…பணக்காரிக்கு ஒரு கொழுப்பு தின்னு, தின்னு! இந்த ‘………. ‘

பாரேன், திமிரை!.. ‘

வேகமாக எழுந்தவன், மல்லிகா அருகில் சென்று அவள் இடுப்பில் வைத்திருந்த சிறிய, அழுக்கான சுருக்குப் பையை எடுத்து, அதனுள் இருந்த பணத்தை எடுத்தான். ஒரு ஐந்து ரூபாய் நோட்டும், ஏழு ஒரு ரூபாய் நோட்டுக்களும் இருந்தன.

மல்லிகா ரெளத்ரம் பொங்க அவன் சட்டையை இறுகப் பற்றினாள்.

வாயில் சரமாரியாகப் பொழிந்த வசவுகள், அலறலுடன் கலந்தன. முருகேசன் ஐந்து ரூபாய் நோட்டை மட்டும் உருவிக் கொண்டு மீதியை அவள் மடியில் விட்டெறிந்தான். அவள் தலைமுடியை முடிந்து கொண்டே, ஆத்திரமும், குமுறலுமாகப் புலம்பினாள். முருகேசன் எதையும் கண்டு கொள்ளாதவனாகக் குடிசைக் கதவைத் திறந்து, வாய்க்காலை நோக்கி நடந்தான்.

போகும் வழியில் அரச மரத்துப் பிள்ளையார் மேடையில் கிறுக்குச் சாமி அமர்ந்திருந்தது. முருகேசனைக் கண்டதும் சிரித்தது.

‘எங்க போற ? துட்டப் புடிங்கிட்டு வந்தியா ? போய் எதாவது தின்னு போ, ‘ என்றது.

‘உள்ள போகாத…மல்லிகா கோபமா இருக்கா. ‘ என்று உரக்கச் சொல்லி விட்டு வாய்க்காலுக்குள் இறங்கினான். கிறுக்குச் சாமி பெரிதாகச் சிரித்தது.

முருகேசன் வாய்க்காலில் குளித்து விட்டு, டவுணுக்குக் கிளம்பினான். போகிற வழியில் மூக்கப் பிள்ளை கடையில் ‘பன் ‘னைத் தின்று, ஒரு டாயையும் குடித்து வயிற்று ஓலத்தைச் சிறிது அடக்கினான்.

‘கொஞ்சம் விடியல்லயே கிளம்பிருக்கணும்.. ‘ என்று தனக்குள் முனகிக் கொண்டான். டவுண் போகும் பஸ்ஸில் ஏறிக் கொண்டான்.

அன்றும் மண்டித் தெருவில் ஒரே கூட்டம். அந்தத் தெருவே மிகக் குறுகலானது. தெருவின் இரு பக்கமும் கமிஷன் வியாபாரம், வெங்காய மண்டி, வெல்ல மண்டி என்று கடைகள். தரையெல்லாம் வெங்காயத் தோல் சருகுகளும், கசகசவென்று ஈரமும். அங்கு வரும் மாட்டு வண்டிகளின் மாட்டு மூத்திரமாகவும் இருக்கலாம். மனிதர்களே இடித்துப் பிடித்துக் கொண்டு செல்லும் வீதியில், லாரியும், பஸ்ஸும், போதாக்குறைக்கு மாட்டு வண்டிகளும் புழுதியை வாரிக் கொண்டு நுழைந்தன. அந்தத் தெருவில் இருந்த ‘வினாயகா கபே ‘யில் காலை பத்தரை மணி சிறிது தூங்கி வழிந்தது. இன்னும் இரண்டு மணி நேரத்தில், வண்டிக்காரர்களும், லாரி க்ளீனர்களும் என்று கூட்டம் அலை மோதும். முருகேசன் ‘தனலஷ்மி வெங்காய மண்டி ‘யின் முன் வந்து நின்றான்.

அப்போதுதான் ஒரு லாரி வந்து நின்றிருந்தது.

‘ரத்னண்ணே… ‘ என்றான் முருகேசன் மெதுவாக.

ரத்னம் என்று அழைக்கப் பட்டவன் கையில் ஒரு நீண்ட கணக்கு நோட்டுடன் போராடிக் கொண்டிருந்தவன் நிமிர்ந்தான்.

‘முருகேசனா ? என்னடா கொஞ்ச நாளா உன்னக் காணோம் ? ‘

‘ஊருக்குப் போயிருந்தேண்ணே…! ‘என்றான் முருகேசன் அசட்டுச் சிரிப்புடன்.

‘ஊருக்கா ? அடி சக்கை..எந்த ஊருக்குடா போயிருந்தே ? ‘ என்றான் ரத்னம் அமுத்தலான சிரிப்புடன்.

‘ஆமாண்ணே..ஊருக்குத்தான் போயிருந்தேண்ணே…. ‘

‘அது தெரியும்ல..எந்த ஊருக்குப் போன ? ‘

ரத்னம் முருகேசனுடைய பதிலை எதிர்பார்த்தது போலவும் தெரியவில்லை. மண்டிக்குள் திரும்பி யாரிடமோ கத்திப் பேசினான். ஒரு ஐந்து நிமிடங்கள் மெளனமாகக் கழிந்தது. பின் முருகேசன் மெதுவாக,

‘இன்னிக்கி ஆள் வேணுமாண்ணே ? ‘ என்றான்.

ரத்னம் நிமிர்ந்து பார்த்தவன், சில கணங்கள் ஏதோ யோசிக்கும் பாவனையில் இருந்தான்.

‘ நீ இவ்ள லேட்டா வந்திருக்கியே..! நா ஏற்கனவே ரெண்டு பேர எடுத்திட்டனே.. ‘என்றான்.

‘அண்ணே, எனக்கு இன்னிக்குக் கட்டாயம் வேல வேணும்ணே..பாத்துக் குடுங்கண்ணே… ‘என்றான் கெஞ்சும் குரலில்.

ரத்னம் அவன் சொன்னதைக் கேளாதவன் போல, மீண்டும் ஒரு இரண்டு, மூன்று நிமிடங்கள் கணக்கு நோட்டில் மூழ்கினான்.

முருகேசன் மனதில் கோபமும், தன்னிரக்கமும் பிறந்தது.

‘அடச் சிறுக்கி பயபுள்ள..இவன்கிட்ட வந்து கெஞ்ச வேண்டியிருக்கு பாரு ‘ என்று மனதுள் நொந்து கொண்டான்.

‘இனி தெனக்கிம் வாரேண்ணே. பாத்துப் போட்டுக் குடுங்க… ‘ என்றான் இறைஞ்சும் குரலில்.

‘கிழிச்ச போ.. நாலு நாள் வருவ.அப்புறம் வெள்ளையடிக்கப் போறேன், அழகேச முதலியார் வீட்டுல தோட்ட வேலக்குப் போறேன்னுட்டு கம்பி நீட்டிருவே..உன்னத் தெரியும்டா… ‘

‘இல்லண்ணே..இனி எங்கியும் போறதில்ல..இங்கிட்டு இருக்கேன்… ‘

ரத்னம் சிரித்தான்.

‘சரி..இங்கிட்டு இருக்கிறதப் பத்தி அப்புறம் பாக்கலாம். இன்னிக்கு நாப்பது ரூபாதான் தர முடியும். ஏற்கனவே ரெண்டு பேர எடுத்தாச்சு.. ‘

‘சரிண்ணே.. ‘ என்றான் முருகேசன் உற்சாகமாக. ஒரு நாள் மூட்டைகளைத் தூக்கி அடுக்க ஐம்பது ரூபாய் கூலி. பத்து ரூபாய் ரத்னத்துக்கு. முருகேசனுக்கு வயிறு எரிந்தது.

‘போகட்டும், இன்னிக்கு வேல குடுத்தானே.. ‘ என்று எண்ணிக் கொண்டு லாரிக்குப் போனான், துண்டை முண்டாசாகக் கட்டிக் கொண்டே.

வெயில் உச்சிக்கு ஏறிப் பின் நிதானமாக இறங்கியது. வீதியின் கலகலப்பு மறைந்து ஒரு மதிய வேளை சோம்பேறித்தனம் தெரிந்தது.

மாலையில் நாற்பது ரூபாய்களை வாங்கும் போது, மனதில் ஒரு உல்லாசம் நிரம்பியது. அன்று திரும்பும் போது மல்லிகா இருக்க வேண்டுமே, ஏதேனும் கிராக்கியைப் பிடித்துக் கொண்டு போய் விடக் கூடாதே என்று நினைத்துக் கொண்டான். பிரபு ஹோட்டலில் இரண்டு அரை ப்ளேட் பிரியாணி வாங்கிக் கொண்டு, கிறுக்குச் சாமிக்கு ஒரு பீடிக் கட்டும் வாங்கிக் கொண்டான். பஸ்ஸில் ஏறி வாய்க்கால் பாலத்து ஸ்டாப்பில் இறங்கிய போது இருட்டி விட்டது.

சீட்டியடித்துக் கொண்டே குடிசையை அடைந்த போது, கிறுக்குச் சாமி வாசலில் அமர்ந்திருந்தது. ஒரு பிரியாணிப் பொட்டலத்தையும், பீடிக்கட்டையும் அதனிடம் கொடுத்தான்.

‘என்ன, இன்னிக்கு வேலக்கிப் போனியா ? ‘

‘ஆமா, மண்டிக்குப் போனேன். இனி தெனம் அங்கதான் போகணும். ‘

கிறுக்குச் சாமி பிரியாணிப் பொட்டலத்தைப் பிரித்துக் கொண்டே முருகேசனை பார்த்துச் சிரித்தது.

‘போனாச் சரிதான்… ‘

‘மல்லிகா உள்ள இருக்காளா ? ‘

‘இருக்கா, இருக்கா… ‘ என்றது கிறுக்குச் சாமி பிரியாணியை வாயில் போட்டுக் கொண்டே.

முருகேசன் குடிசைக்கு உள்ளே நுழைந்து கதவைச் சார்த்திக் கொண்டான்.

வெளியே கிறுக்குச் சாமி சிரித்தது.

***

Series Navigation

அலர்மேல் மங்கை

அலர்மேல் மங்கை