ஒளவை 11, 12, 13

This entry is part [part not set] of 25 in the series 20011222_Issue

இன்குலாப்



வறியவர்கள் சுற்றத்துக்குத் தலைவன்


அதியன் :
என்ன ஒளவை ? போன தூது வென்றதா ?

ஒளவை :
அதில் உனக்கு ஐயமா ?

அதியன் :
எப்படி ? தொண்டைமான் எப்படி வரவேற்றான்.
என்ன சொன்னான் ?

ஒளவை :
நான் அரசியல் பணியாள் அல்லள்.. கலைமகள்.
அங்குபோய் வந்ததை ஒரு கூத்தாக உன்னிடம்
நடித்துக் காட்ட விரும்புகிறேன்.

அதியன் :
உன் போன்ற பாடினியிடம் அரசியல் அதிகாரம்
இருந்தால்… வாளால் நடைபெறுவது யாழால்
நடைபெற்றுவிடும். நல்லது நடித்துக் காட்டு…

ஒளவை :
(பாணர்களை நோக்கி) அருமைத் தோழர்களே ‘
கூத்தைத் தொடங்கலாமா ? (பாணர்கள் ஒரு
திரைச்சீலையை அதியன் முன் இழுத்தபடி
நிற்கிறார்கள். வாத்தியங்களும் வாய்பாட்டும்
ஒலிக்கின்றன. விலக்கப்படும்போது தொண்டை
மானும் ஒளவையும் நிற்கிறார்கள்)

தொண்டைமான் :
ஒளவை ‘ உன் பாட்டிலும் கூத்திலும் மகிழ்ந்தேன்.
மீண்டும் அதியனிடம் தானே போகிறாய்…..
போவதற்குமுன் என் படைக்கொட்டிலைப் பார்த்து
விட்டுப் போயேன்….

ஒளவை :
எதற்கு அரசே ‘

தொண்டைமான் :
நான் எவ்வளவு படைக்கருவிகள் வைத்திருக்கிறேன்
என்பதை அதியமானிடம் கூறுவாயல்லவா ?

ஒளவை :
ஆமாம்.

தொண்டைமான் :
வா… இந்தக் குத்தீட்டி வரிசையைப் பார்… அதோ
வாள்வகைகள்.. இதுபோன்ற வாள் தமிழ் அரசர்கள்
யாரிடமும் கிடையாது. யவன நாட்டிலிருந்து
இறக்குமதியானவை ‘

ஒளவை :
ஓகோ… போர்க் கருவிகளையும் இறக்குமதி
செய்கிறாயா ?

தொண்டைமான் :
அப்பொழுதுதான் பக்கத்து நாட்டான் அஞ்சுவான்….
இந்த வேலைப் பார்த்தாயா ? இதனுடைய முனை
எளிதில் மழுங்காது… எதிரியின் எஃகுப் போன்ற
உடம்பிலும், வாழைப் பழத்தில் ஊசி இறங்குவது
போல எளிதாக நுழைந்துவிடும்…. இந்த வேலுடைய
கம்பு கருங்காலி மரத்தில் இழைக்கப்பட்டது.

ஒளவை :
அப்படியா ‘

தொண்டைமான் :
என்ன இதற்கே வாயடைத்துப் போய் நிற்கிறாய்.
இன்னும் ஏராளமான கருவிகளை வாங்கி குவிக்க
முடியும்….

பொன்னாலும் மணியாலும் என் கருவூலம் வழிகிறது.
என் படைவீரர்கள் வீரச் செருக்குடையவர்கள் மட்டும்
அல்ல– செல்வச் செருக்குடையவர்களும் கூட,
அவ்வளவு பேரும் உயர்குடி பிறந்தவர்கள்….

ஒளவை :
ஆமாம் பார்த்தேன்.. இந்த உடம்பை வைத்துக் கொண்டு
எப்படிச் சண்டை போடுவார்கள் ?

தொண்டைமான் :
கையில் அகப்பட்டால் கசக்கிப் பிழிந்து விடுவார்கள்….

ஒளவை :
ஆமாம்… ஆனால், கையில் யாராவது பிடித்துக்
கொண்டுதான் போய்க் கொடுக்க வேண்டும்.

தொண்டைமான் :
அதியனிடம் இத்தகைய படைக்கலங்கள் உண்டா ?
படைவீரர்கள் உள்ளனரா ?

ஒளவை :
அட நீ வேறு.. அதியன் படைக்கலன்களா வைத்து
இருக்கிறான்…..அவ்வளவும் குப்பை.

தொண்டைமான் :
அப்படியா ?

ஒளவை :
வேறென்ன ? இதோ பார்… இங்கே உன் கருவிகளுக்குப்
பீலி அணிவித்து.. மாலை சூட்டி…வலிய காம்புகளைத்
திருத்தி காவல் மிகுந்த இவ்விடத்தில் எத்தனை
அழகாக வைத்திருக்கிறாய். உன் கருவிகளைக் கண்ணில்
ஒற்றிக் கொள்ளலாம் போல் இருக்கிறது… ஆனால்

தொண்டைமான் :
என்ன ஆனால் ?

ஒளவை :
அதியனுடைய படைக்கொட்டடியைப் பற்றி நினைத்தேன்.

தொண்டைமான் :
(தலையைப் பெருமிதத்துடன் உயர்த்தி) அந்தக் குப்பைக்
கிடங்கைப்பற்றி சொல்லேன்….

ஒளவை :
பகைவரைக் குத்துதலால் கங்கும் நுனியும் முறிந்துவிட்டன…
எப்பொழுதும் கொல்லுப்பட்டறையில் ஒக்கிடப்படுவதற்காகவே
கிடக்கின்றன. சொல்… உன் ஈட்டி எவ்வளவு பளபளப்பு…
ஆனால், அவன் ஈட்டி எப்பொழுதும் எதிரிகளைக் குத்திக்
குத்திக் குருதிக்கறையுடன் காணப்படுகின்றது. உன்
வீரர்களைப்பார்… நன்றாக உண்டு கொழுகொழுவென்று…
ஆனால்….அதியன் வீரர்களைப் பற்றிப் பேச வேண்டாம்.
அதியனையே எடுத்துக்கொள்வோம். அவன் எந்த
அரசரினும் எளியன். செல்வம் வந்தால், நீ கருவூலத்தை
நிரப்புகிறாய். அவன் எல்லோருக்கும் உணவு கொடுப்பான்.
வராவிட்டாலோ….. தன்னிடம் உள்ளதைப் பலரோடு
பங்கிட்டு உண்பான். நீ செல்வர்களின் சுற்றத்துக்கு
அரசன். அவனோ வறியவர்களின் சுற்றத்துக்குத்
தலைவன்….

தொண்டைமான் :
அப்படியா ஒளவை… அவனை எளிதில் வென்றுவிடலாம்
என்று சொல்….

ஒளவை :
ஆமாம் (சிரிக்கிறாள்) நான் புறப்படுகிறேன்.

தொண்டைமான் :
நில் ஒளவை… நான் அதியமானிடம் போர் புரியமாட்டேன்
என்று சொல்….

ஒளவை :
அந்த எளியன் மீது உனக்கு இரக்கம் வந்துவிட்டதா ?

தொண்டைமான் :
இல்லை…. உண்மையைச் சொல்வதென்றால் அச்சம் வந்து
விட்டது. அவன் படைப்பயிற்சிக்கு முன்னால் நான்
எம்மாத்திரம்… இல்லாதவர் சுற்றத்துக்குத் தலைவன்
என்றால் மக்கள் எதையும் எதிர்பார்க்காமல் அவனுக்காக
தங்கள் உயிரை ஈவார்கள். என் படைத்தலைவர்கள்…
தடியர்கள்…எவ்வளவு கொடுத்தாலும் நிறையாது….
இப்பேர்ப்பட்ட அதியனிடம் எனக்கு ஒரு போர் தேவை
தானா ? இல்லை அமைதி தான் எனக்குக் காவல்.

ஒளவை :
நல்லது தொண்டைமான் ‘ நீ வாழ்க ‘ நின் நாடு வாழ்க ‘

அதியன் :
(கைதட்டியபடி) ஒளவை ‘ இப்படியும் ஒரு தூது நடத்த
முடியுமா ? உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்…

ஒளவை :
ஒன்றும் செய்ய வேண்டாம். பயணத்தில் களைத்து வந்து
இருக்கிறேன். கொஞ்சம் உறங்க விடு.


தோன்றுங்காலை தோன்றவும் வல்லன்


(போர் முரசு ஒலிக்கிறது. தகடூர் வீரர்கள் நடமாட்டம்)

வீரன்-1 :
கடைசியில் போர் வந்துவிட்டது.

வீரன்-2 :
இது எளிதில் முடிவதுபோலத் தோன்றவில்லை.

வீரன்-3 :
போர் எங்கே முடிகிறது ? ஓரிடத்தில் போர் முடிவது
போலத் தோன்றினால் வேறிடத்தில் இன்னும்
வெறியுடன் போர்முரசு ஒலிக்கிறது. ஒரு போர்
மற்றொரு போருக்கு வித்திடுகிறது.

வீரன்-1 :
அதுவும் நமது சின்னஞ்சிறிய தகடூரைச் சுற்றி
எவ்வளவு பெரிய முற்றுகை ‘

வீரன்-2 :
இளைத்த இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி
ஓங்கி அடிப்பானாம்… அதுபோல நமது சிறிய
நாட்டையும் வேட்டையாடியே தீர்த்துவிடுவது என்று
வேந்தர்கள் வேட்கை கொண்டு அலைகிறார்கள்.

வீரன்-3 :
இதில் தொண்டைமான் எவ்வளவோ நல்லவன்…
ஒளவையின் ஒரு தூது அவன் போர் முயற்சி
தவறென்று உணர்த்திவிட்டது ‘

வீரன்-1 :
அவன் அறிவாளி… போரின் விளைவுகள் என்ன
என்பதைப் புரிந்துகொண்டான்.

வீரன்-2 :
அப்படி என்றால் இப்பொழுது அதியனை எதிர்த்து
நிற்கும் திருமுடிக்காரி மூடனா ?

வீரன்-1 :
இல்லை… தொண்டைமான் பெருவேந்தரின்
துணையை நாடவில்லை. தொண்டை மண்டலம்
போதும் என்ற மனப்பான்மை அவனுக்கு வந்து
விட்டது போலும். ஆனால் திருமுடிக்காரி அப்படி
இல்லை…. அவன் பழிவாங்கும் உணர்வில்
அலைகிறான்.

வீரன்-3 :
ஆமாம்… நாம் அவனுடைய திருக்கோவலூரைக்
கையகப்படுத்திக் கொள்ளவில்லையா ?

வீரன்-2 :
ஆமாம்… ஆயினும் நமது எல்லையில் அவன்
தொல்லை தந்து கொண்டிருந்தான்.

வீரன்-1 :
இன்று சேரன் பெருஞ்சேரல் இரும்பொறையையும்
நம்மீது இதே குற்றச்சாட்டைச் சுமத்துகிறான். நமது
எல்லைக்குட்பட்ட கொல்லி மலையின் ஒரு பகுதி
தனக்குரியது என்கிறான்.

வீரன்-2 :
அதனால்தான் நம்மிடம் தோற்ற திருமுடிக்காரி
சேரனின் உதவியுடன் கொல்லிமலைத் தலைவன்
வல்வில் ஒரியைக் கொன்றுவிட்டான். நம்
எல்லைக்குட்பட்ட கொல்லிமலையின் அனைத்துப்
பகுதிகளையும் பெருஞ்சேரல் இரும்பொறைக்கே
உரியதென்று கொடுக்கும் உரிமையைத் திருமுடிக்
காரிக்கு யார் வழங்கியது ?

வீரன்-3 :
அந்தோ வல்வில் ஒரி ‘ எப்பேர்ப்பட்ட வில் வீரன்
…. வில்லில் நாண் வளைப்பதில் மகிழ்வது போலவே,
பாணர்களின் யாழ் நரம்பு ஒலிப்பதிலும் மகிழ்ந்து
இருந்தான்… பாணர்களும் வள்ளல் என்று அவனை
வாயார வாழ்த்தினர் ‘

வீரன்-3 :
புகழ்பெற்ற பழங்குடிகள் எல்லாம் ஒருவர்
ஒருவராக அழிக்கப்படுகிறார்கள்… புதிதாய்
விரிவுபடுத்தும் வெறியில் இப்பழங்குடித் தலைவர்களைக்
கவளம் கவளமாக உண்கிறார்கள்….

வீரன்-3 :
ஆம்…இது வாள்முனையில் வாழ்க்கையை முடிவு
செய்யும் காலம்..ஒருவரை ஒருவர் கொன்றொழிப்பது
இன்றின் இயல்பாகி விட்டது.

வீரன்-1 :
திருமுடிக்காரிக்கு உதவச் சேரன்….நமக்கு…. ?

வீரன்-3 :
ஏன் பாண்டியரும் சோழரும் நம் அரசருக்கு
உதவுவதாகச் சொல்லி இருந்தார்களே ‘

வீரன்-2 :
சொன்னார்கள் ‘ ஆனால், திருமுடிக்காரிக்குச் சேரன்
உதவுவதாகத் தெரியவந்தவுடன் நமக்கு எதற்கு வம்பு
என்று ஒதுங்கிவிட்டார்கள் போலும்.

வீரன்-3 :
நம்மை வளைத்துவிட்ட முற்றுகையை நம் அரசர்
ஏன் முறியடிக்கவில்லை ? வஞ்சி சூடி வஞ்சினம்
கூறி வெளிப்பட்டால்….

வீரன்-1 :
வெளிப்படுவார். நம் அதியன் குறித்து ஒளவை
சொன்னது நினைவில்லையா ?

வீரன்-2 :
என்ன சொன்னார்…… ?

வீரன்-3 :
அதை எப்படி மறக்க முடியும் ? அதியன், வீட்டின்
இறவானத்தில் செருகி வைக்கப்பட்ட தீக்கடைக்
கோல்போல், தன் வீரத்தை வெளிப்படுத்தாது
அடங்கி இருக்கவும் செய்வான். வெளி வரவேண்டிய
நேரம் வந்துவிட்டால் ‘கான்று படு கணையெரி
போலத் ‘ தோன்றுங்காலை தோன்றவும் வல்லன்…..

வீரன்-2 :
ஒளவை ஒரு முறை தோன்றி ஒருவரி இசைத்தால்
போதும். ஆமாம் ஒளவை எங்கே ?

(அதியன் கவலை தோய்ந்த முகத்தைக் கைகளில் ஊன்றியபடி தனித்து
இருக்கிறான். ஒளவை வருகிறாள்)

ஒளவை :
யார் அதியனா ? கப்பல் மூழ்கியது போன்ற
கவலையுடன் ‘

அதியன் :
மழவர் மரபு என்னோடு முடிந்துவிடும் காலம்
வந்துவிட்டதா ? பேரரசுகளுக்குப் பசி இன்னும்
தீரவில்லை. இந்தச் சின்னஞ்சிறிய தகடூரை
விழுங்குவதற்குத் தங்களுடைய குகைவாய்களைத்
திறந்துவிட்டன….ஆமாம் திருமுடிக்காரிக்கு
உதவுவது என்ற போர்வையில் முற்றுகை…..
நாளை திருமுடிக்காரியையும் வீழ்த்திவிடலாம்…..
சேரர் மரபின் பங்காளியாகிய என்னை வீழ்த்திய
பிறகு…. எனது தகடூரை விழுங்கிய பிறகு…..
எல்லை அகன்ற சேர நாடு என்ற பெருமிதத்தில்
சேரன் மிதக்க நினைக்கிறான்…..

ஒளவை :
சிறிய நாட்டைப் பெரிய நாடுகள் விழுங்குவது
தானே இன்றின் அரசியல் ஆகிவிட்டது.

அதியன் :
ஆனால், அது இந்த அதியனிடம் நடக்காது.

ஒளவை :
அதை உன் பகைவன் கூட அறிவான்….ஆனால்
பிறகு நீ ஏன் வஞ்சி சூடிக் களம் புகவில்லை…. ?

அதியன் :
யானை நீர்த்துறைக்கு வெளியே நின்று
ஆர்ப்பரிக்கிறது. ஆனால், முதலை நீருக்கடியில்
காத்திருக்கிறது… நீர்த்துறையில் காலைவைத்த
மறுகணமே மாபெரும் யானை வீழ்வது உறுதி ‘

ஒளவை :
அதிய…யானை நீர்த்துறையில் காலை வைத்தது
மட்டுமின்றி அதைக் கலக்கவும் செய்கிறது ‘

அதியன் :
ஒளவை ‘ இன்னும் எனக்குப் போதிய வலிமை
வேண்டும்….

ஒளவை :
என்ன வலிமை ? சோழனும் பாண்டியனும் உன்
உதவிக்குவராமல் போகலாம். ஆனால், சேரன்
பெருஞ்சேரல் இரும்பொறையுடன் சேரவில்லை.
களத்தைவிட்டே விலகி நிற்கிறார்கள். இதோ,
தொண்டைமான் போன்ற சிற்றரசர்கள் உன்னோடு
கொண்டிருந்த பகையை நீக்கிவிட்டார்கள். பிறகு
களத்தில் நீயும் சேரனும்தான் வா. பனம்பூ
மாலையை யார் சூட்டுவது என்பதை வாள் முனையில்
உறுதி செய்யலாம். அதிய….சிறிது உற்றுக் கேள்
(மரம் வெட்டும் ஓசை ‘) உன் அரசின் வலிமைக்குக்
குறியாகிய காவல் மரம் வெட்டப்படுகிறது என்பது
பொருள். உன் அதிகாரத்தை மறுதலித்தல் என்பது
பொருள். நீ என்ன செய்யப் போகிறாய் ?

அதியன் :
ஒளவை ‘

ஒளவை :
நீ காத்திருப்பதால் உன் படைப்பிரிவுகள் மன
வலிமை குன்றிவிடக்கூடும். எனவே இறங்கு….

வளையல் உடைபடும் ஓசைபோல
காந்தள்பூ மலரும் ஒலிகேட்கும் சாரல்…..
கொம்பு மான்கள் கூட்டம் கூட்டமாய்…
புலி உறுமினால் ஒரு மான் நிற்குமா ?
இளஞாயிறே நீ சினந்து எழுந்தால்
எத்திசையிலும் இருள் நிற்கத் துணியுமோ ?
பண்டங்களின் சுமையால் தள்ளாடும் வண்டி
மணல் பிதுங்க, கல் உடையும்படி மிதித்து
இழுத்து நடக்கும் பெருமிதம் கொண்ட காளைக்கு…
கடப்பதற்கு அரிய துறையும் உண்டோ ?
கணைய மரத்தைப் போன்ற வலிய உன் தடக்கை
முழங்கால் மட்டுக்கும் நீண்டது ‘ தலைவா ‘
வில் கொண்டு மண்கலங்கப் போரிட வரும்
வீரன் யாருண்டு ‘ நீ களம் புகுந்தால்…. ‘

அதியன் :
(உரத்த குரலில்) போர் முரசு ஒலிக்கட்டும்…..


பாடுநரும் இல்லை… ஒன்று ஈகுநரும் இல்லை

(அரண்மனையில் பெண்கள் பேசும் குரல். பிறந்த குழந்தை அழுங்குரல்)

பெண்குரல்-1 :
என்ன குழந்தை…. ?

பெண்குரல்-2 :
ஆண் குழந்தை.

பெண்குரல்-3 :
அப்படியே அரசரைப் போல மொத்து
மொத்தென்று…..

பெண்குரல்-1 :
ஆனால், தன் குழந்தையைப் பார்ப்பதற்கு அரசர்
அரண்மனையில் இல்லை.

பெண்குரல்-2 :
களத்தில் நிற்கும் அரசருக்குச் செய்தி போய்
விட்டது….

பெண்குரல்-1 :
போர்க்கோலத்தோடு தன் மகவைப் பார்ப்பது
எப்பேர்ப்பட்ட பேறு ‘ பிறந்த குழந்தை அந்தக்
காட்சியைக் கண்டால் பெருவீரனாக வளர்வான்
என்பது நம்பிக்கை….

பெண்குரல்-2 :
பெண் குழந்தை பிறந்தால் பார்க்க வர
மாட்டார்களா…. ?

பெண்குரல்-1 :
வரலாம். ஆனால், பெண் குழந்தை என்ன
அரசாளவா போகிறது ? இன்றுவரை முடிசூடிக்
கொண்ட அரசி என்று ஒருத்தியை நம்மாற்
காட்ட முடியுமா ?

பெண்குரல்-2 :
என்றால் பெண்கள் வீரம் காட்ட வேண்டிய
தேவையே இல்லை. அப்படித்தானே.

பெண்குரல்-3 :
அப்படி இல்லை… ஒரு வீரமகனைப் பெற்றுத்
தந்தால் போதும்.. அதுவே பெண் காட்ட
வேண்டிய வீரம்.

பெண்குரல்-1 :
இது என்ன வம்பு ? முதலில் குழந்தை பெற
வேண்டும். அதுவும் ஆண்மகவாக இருத்தல்
வேண்டும். அதுவும் வீரனாக இருத்தல் வேண்டும்.
பிள்ளையைப் பெற்றுத் தரும்போதே கையில்
வாளுடனா பெற்றுத் தர முடியும் ?

பெண்குரல்-2 :
வாளுடன் பிறந்த குடி என்றுதான் ஆடவர்கள்
நம்புகிறார்கள் ?

பெண்குரல்-3 :
குழந்தையைப் பெறுத்தாட்டும் மருத்துவச்சியிடம்
கேட்க வேண்டும்.

பெண்குரல்-2 :
என்ன ?

பெண்குரல்-3 :
கொப்பூள் கொடியோடு வாள் வேல் ஏதாவது கூடப்
பிறந்ததா ? என்று.

பெண்குரல் :
வாயாடியே வாயை மூடு…இதோ அரசர் களத்தில்
இருந்து வருகிறார்.

(அதியன் களத்தில் இருந்து அசைந்து அசைந்து
யானை வருவதுபோல வருகிறான். ஒளவையின் குரல்
பின்னணியில்)

ஒளவை :
கையது வேலே….காலில் வீரக்கழல்….
மெய்யெல்லாம் வியர்வை…கழுத்தில்
புதிதாய்க் காயம்…
பனையின் வெண்பூ மாலையோடு
வெட்சியும் வேங்கையும் பொலியச் சூடி
புலியோடு போரிட்ட பெரு யானைபோல
இன்னும் மாறாத சினத்துடன் வருகிறான்…
இவனுடன்
போரிட்டோர் எவர் மிஞ்சுவார்கள் ?
பகைவரை நோக்கிச் சிவந்த கண்கள்…
சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆயினவே
சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆயினவே ‘

(அதியன் தொட்டிலில் கிடக்கும் குழந்தையைக் குனிந்து நோக்குகின்றான்…
முத்தமிடுகிறான் – மீண்டும் களம் நோக்கி அதே நடையுடன் திரும்புகிறான்)

(போர் முரசு ஒலிக்கிறது. போர்க்கள ஆரவாரம்)

ஒளவையின் குரல் :
கள்ளுண்டு செல்லுங்கள் களம்புகுவோர்களே ‘
அதோ ஒரு வீரன்… உண்டாட்டில் நிற்கிறான்…
துடிப்பறை கொட்டும் துடியன் வந்து
பிழிந்த கள் தர, வேண்டாம் என்கிறான்….
கவரப்பட்ட ஆநிரை மீட்கும்
வலிமை மிக்க வாள் வேண்டுகின்றான்…

கள்ளுண்டு செல்லுங்கள் களம்புகுவோர்களே ‘

தலைவ….இவனுக்கு முதலில் கள்ளை வார்…
உன் தந்தையின் தந்தைக்கு இவன்
தந்தையின் தந்தை…
காவலாகக் களத்தில் நின்றான்….
பகைவர் வீசிய வேல்கள் அனைத்தையும்
ஆரக்கால் போல் சுழன்று அவனே தாங்கினான்…..

இவனும் அத்தகைய மறப்புகழ் பெறுவான்…
ஓலைக் குடையொன்று சாரலைத் தடுத்தல்
போல
உன் மீது

பாயும் வேல் அனைத்தையும் இவள் மார்பே
மறைக்கும்.
தலைவ… முதலில் இவனுக்குக் கள் வார்….

(போர் முரசு ஒலிக்கிறது…)

குரல்-1 :
இதோ அரசரைப் பகைவர்கள் சூழ்ந்து விட்டார்கள்…

குரல்-2 :
புலியைச் சூழ்ந்த செந்நாய்கள் போல…..

குரல்-1 :
இதோ அரசர் மார்பில் ஒரு வேல் பாய்ந்தது…..

குரல்-2 :
மலை சாய்வது போல் மன்னர் சாய்கிறார் ‘

(போர் ஆரவாரம் – அழுகை. ஒளவை வருகிறாள். அதியன் சுற்றத்தார்–
மனைவி – சூழ்ந்து நிற்க அழத்தொடங்குகிறாள். ஒப்பாரி)

ஒளவை :
ஓ….மன்னா….
சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் மன்னே ‘
பெரிய கள் பெறினே,
யாம் பாடத் தாம் மகிழ்ந்து உண்ணும் மன்னே ‘
சிறு சோற்றானும் நனிபல கலத்தல் மன்னே ‘
பெருஞ் சோற்றானும் நனிபல கலத்தல் மன்னே ‘
என்போடு தடிபடும் வழி எல்லாம் எமக்கு ஈயும்
மன்னே ‘
அம்பொடு வேல் நுழை எல்லாம் தான் நிற்கும்
மன்னே ‘
நரந்தம் நாறும் தன்கையால்
புலவுநாறும் என் தலை தைவருமன்னே ‘

(பின்னணியாக ஒப்பாரி-கூட்டிசை)

சிறிய கள் பெறினே எனக்கன்றோ தருவான்….
பெரிய கள் பெற்றால்….
நான் பாட அவன் மகிழ்ந்து உண்பான் உண்பான்…
சிறிது சோறாயினும் என்னுடன் பகிர்வான்….
பெரிது சோறாயினும் என்னுடன் பகிர்வான்
எலும்பைத்
தான் உண்டு கறியை எனக்கு ஈவான்…
அம்பு பாய்கிற வழியெல்லாம் அவன் நிற்பான்…
நரந்த மணம் நாறும் தன் நீண்ட கையால்…
புலால் நாறும் என் தலையைப் பூப்போல்
வருடுவான் ‘

ஒளவை :
அருந்தலை இரும்பாணர் அகல் மண்டைத் துளைஇ
இரப்போர் கையுளும் போகி
புரப்போர் புன்கண் பாவை சோர
அம்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்று வீழ்ந்தன்று அவன்
அருநிறத்து இயங்கிய வேலே…..

(பின்னணிக் குரல் – ஒப்பாரி)

பாணர்கள் உணவுப் பாத்திரம் துளைத்தது…..
இரப்போர் ஏந்திய இருகை துளைத்தது….
புரவலர் கண்ணின் பாவையும் சோர்ந்தது….
அழகிய சொல்லை நுட்பமாய்ச் சொல்லும்
புலவர் நாவையும் துளைத்தது
எங்கள்….
தலைவன் மார்பைத் துளைத்த கொடுவேல்….
தலைவன் மார்பைத் துளைத்த கொடுவேல்….

ஒளவை :
ஆசு ஆகு எந்தை யாண்டுளன் கொல்லோ ? இனி
பாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும்
இல்லை ‘
பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
சூடாது வைகியாங்கு பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே ‘
சிறிய கட்பெறினே எமக்கீயும் மன்னே….

Series Navigation

இன்குலாப்

இன்குலாப்