மெளன ஒலி

This entry is part [part not set] of 25 in the series 20011222_Issue

ராம்ஜி


இது என் கதை. இன்னொறு விதத்தில் பார்த்தால் இது என் கதை என்பதை விட ஒலியைப் பற்றிய என்னுடைய தேடலின் கதை எனலாம்.

நினைவு தெரிந்தது முதல் நான் ஓர் ஒலிப் பைத்தியம். இரவில் இடி இடித்தால் என் அண்ணன் அலறிக்கொண்டு அம்மாவின் அறைக்கு ஓடுவான். நான் குஷி கிளம்பி அங்கும் இங்கும் ஓடுவேன். ஒலி எங்கிருந்து வருகிறது என்று பார்க்க ஜன்னலருகே ஓடுவேன். எங்கிருந்து வருகிறது என்று தெரியாவிட்டாலும் மின்னல் அடித்ததும் வருகிறது என்று தெரிந்த பின் அங்கேயே நிற்பேன். இதோ இன்னொரு மின்னல். இதோ இடி. அம்மாவிடம் போய் மின்னல் நம்மிடம் பேசுகிறதா என்று கேட்பேன். தன்னால் என் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை என்று அம்மா கூறுவாள்.

சற்று வளர்ந்ததும் இடியினால் ஏற்பட்ட ஆவல் மற்ற ஒலிகளின் மூலத்தையும் தேட வைத்தது. யாராவது பேசினால் அவர்கள் உதட்டசைவைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். நண்பர்களைப் பேசச் சொல்லி காதுகளைப் பொத்தியவாறு அவர்கள் உதட்டசைவை வைத்து என்ன பேசினார்கள் என்று கண்டு பிடிப்பது ஒரு விளையாட்டு எனக்கு.

சிறு வயதிலேயெ இசையில் ஈடுபாடு. ரேடியோவில் நல்ல பாட்டுகளைக் கேட்கும்போது ஒரு தவிப்பு. அதைக் கவனித்த அப்பா அம்மா என்னை ஒரு நல்ல பாடல்கள் நிறைந்த சினிமாவுக்கு அழைத்துப் போனார்கள். பேச்சு, பாட்டு, இரண்டுக்கும் உதட்டசைவுக்கும் சம்பந்தமே இருக்கவில்லை. எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. பாதியில் அப்பா- அம்மாவைத் துளைத்தெடுத்து வெளியே வர வைத்து விட்டேன். நடிகர்களுக்கு தமிழ் தெரியாதாம். வேறு யாருடையோ குரலுக்கு உதட்டசைக்கிறார்களாம். சினிமா பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.

அம்மா-அப்பாவுக்கு நல்ல சங்கீத ஞானமும் ஈடுபாடும் உண்டு. என்னை ஒரு நாள் கச்சேரிக்கு அழைத்து சென்றார்கள். ரேடியோவில் கேட்டு ரசித்திருந்தேன். முதல் இரண்டு பாட்டுகளில் உதட்டசைக் கூர்ந்து கவனித்துப் பரவசமானேன். ராக ஆலாபனை (அந்த வயதில் என்னவென்று தெரியாது) ஆரம்பித்ததும் ஒரு புதிய உணர்வு. உதடு பெரிதாக அசையவில்லை. ஆனால் இசை ஒலி வருகிறது. மயக்குகிறது. முதன் முறையாக ஒலி உதட்டிலிருந்து வரவில்லை என்று உணர்ந்தேன். அதே போல் வயலின் ஓசை தந்தியிலிருந்து வரவில்லையோ, தாளம் மத்தளத்திலிருந்து வரவில்லையோ என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

வயதாக ஆக சிறு வயதில் தோன்றிய உருவமற்ற கேள்விகள் உருவம் பெற்று என்னை வதைத்தன. கடற்கரையில் பல மணி நேரம் அலை ஓசையில் மூழ்கி உட்கார்ந்து கொண்டிருப்பேன். ஒரு நாள் இரவு முழுதும் அங்கேயே இருந்து விட்டேன். அலை ஒசை ஒரு புறம். மழையுடன் இடி ஒரு புறம். எனக்கு மட்டும் தனியாக ஒரு கச்சேரி. அலையில் கல்யாணியும் மோகனமும். இடியில் ஆதியும் மிச்ர தாப்பும். அந்த மிருதங்க ஜீனியஸைப் போலவே இடை விட்டு விட்டுத் தாள ஜாலம். ஒரு முறை இரண்டு ஒலியுமே நின்று கொஞ்ச நேரம் மெளனம். அந்த மெளன இடைவெளியில் நான் எங்கிருந்தேன் ? இந்த உலகம் எங்கிருந்தது ? காலையில் சொட்டச் சொட்ட வீட்டுக்குள் நுழைந்ததும் அம்மா அலறிக் கொண்டே வந்து என்னைக் கட்டிக்கொண்டாள். இரவு முழுதும் அழுதாளாம். அப்பா மிக அமுக்கு. அவர் மனதில் இருப்பது காரியத்தில்தான் தெரியும்.

அன்று மாலை நானும் கடற்கரைக்கு வருகிறேன் என்று அப்பா என்னுடன் வந்தார். அப்பொழுது எனக்கு இருபத்திரண்டு வயது. வெகு நேரம் இருவரும் மெளனமாக அமர்ந்து இருந்தோம். அம்மா உடம்பு மெலிந்திருப்பதை கவனித்தாயா என்று கேட்டார். சதா உன்னைப் பற்றிக் கவலைப் படுகிறாள். நிலையற்று அலைகிறாய். உன் எட்டு வயது வரை டாக்டரிடம் காண்பித்துக் கொண்டிருந்தோம். ஒன்றும் தேவையில்லை என்று அவர் சொல்லி நிறைய வருஷம் ஆகிறது. என்ன கேட்டாலும் எதோ ஒலி என்கிறாய். மூலத்தைத் தேடுகிறேன் என்கிறாய். நேரம் காலம் என்ற வரையறை இல்லாமல் இருக்கிறாய். உன்னுடைய ஒத்துழைப்பு இல்லாமல் யாரும் உனக்கு உதவ முடியாது. உதவி வேண்டாமா என்று கேட்டார். மெளனமாக இருந்தேன். அவர் உதவி என்றது எதை என்று தெரியும். இதற்கு டாக்டர் வேண்டாம்பா என்றேன். யாரையாவது மனதில் வைத்திருக்கிறாயா என்றார். இல்லை அப்பா என்றேன். மேல் படிப்பு என்ன உத்தேசம் என்று கேட்டார். உதட்டைப் பிதுக்கினேன். அத்துடன் விட்டு விட்டார்.

எம்.ஏ. முடித்திருந்தேன். காதால் கேட்பதெல்லாம் என்னுள் தங்கி பரிட்சையில் கொட்ட வேண்டியதுதான். படிக்கவே வேண்டாம். என் தேடலுக்கு அது உதவவில்லை. எனக்கு சாதாரணமாய் இருந்தது மற்றவர்களூக்கு அசாதாரணமாய்த் தோன்ற நான் ‘விசித்திரப் பிறவி ‘, ‘கிறுக்கு ‘, ‘பிறவி ஜீனியஸ் ‘ என்ற லேபல்களை அணிந்தேன். ஆனால் அவர்களுக்கு சாதாரணமாய் இருந்த ஒலி எனக்கு அசாதாரணமாய் இருந்தது.

திடாரென்று ஒரு நாள் என்னுடைய கல்லூரி ஆசிரியர் என்னை போனில் கூப்பிட்டு வந்து பார்க்கச் சொன்னார். நான் அவரிடம் என் தேடலை ஆராய்ச்சிக்கான கரு போல் எழுதிக் கொடுத்திருந்தேன். அதை அவர் அமெரிக்காவில் தனக்குத் தெரிந்த ஒரு ப்ரொபசரிடம் அனுப்பினாராம். அந்த ப்ரொபசர் எனக்கு ஒரு கடிதம் என் ஆசிரியர் முகவரிக்கு அனுப்பியிருந்தார். ஒரே நேரத்தில் அவரது ஆராய்ச்சிப் பொருளாகவும் ஆராய்ச்சித் துணைவனாகவும் இருக்க முடியுமா என்று கேட்டிருந்தார். என்னைப் பற்றி என் ஆசிரியர் நிறைய எழுதி பேசி இருந்தாராம்.

கடிதத்தைப் படித்து விட்டு என் ஆசிரியரை நோக்கினேன். புன்முறுவலுடன் அங்கேயும் கடற்கரை இருக்குதப்பா என்றார். பெரிய யூனிவர்சிடி. உலகப் புகழ் ப்ரொபசர். சென்னை அலை ஓசைக்கு சான்ப்ரான்சிஸ்கோவிலிருந்து எதிரொலி.

ஒலியை சாதாரணமாக நினைப்பவர்கள் அமெரிக்காவில் சப்தமே கிடையாது என்றார்கள். இரவிலும் விடிகாலையில் எழுந்து வெளியே வரும்போதும் சப்தமே இல்லாத சூழ்நிலையில் விதவிதமான ஒலிகளைக் கேட்டேன். ப்ரொபசர் வீட்டில் தான் வாசம். சாப்பாடும் அவர் கணக்கில். அதாவது அவரது ஆராய்ச்சிக் கணக்கில். அவருடன் எங்கெல்லாமோ போனேன். யாரையெல்லாமோ சந்தித்தேன். அமெரிக்க உதட்டசைவைப் புரிந்துகொள்ள சில நாட்கள் ஆயின. அதிலும் விதவிதமான உதட்டசைவுகள். ப்ரொபெசரின் ஆராய்ச்சியைப் பற்றியும் ஆராய்ச்சிப் பொருளான என்னைப் பற்றியும் டைம் பத்திரிகையில் ஒரு கட்டுரை வந்தது. நடு இரவு நேர ஷோவில் அந்தக் கோமாளி என்னை அமெரிக்காவிற்கு ( உலகிற்கு ?) அறிமுகப்படுத்தினார். திடேரென்று பேசுவதை நிறுத்தி வெறும் உதட்டசைத்து இப்பொழுது நான் என்ன சொன்னேன் என்று கேட்டார். நீங்கள் ஒன்றும் கூறவில்லை, வெறுமே ஏப்பம் விட்டார்கள் என்றேன். மறு நாள் அப்பா போனில் கூப்பிட்டு பெருமையுடன் சிரித்தார். அம்மா வழக்கம் போல் அழுதாள்.

ஒரு நாள் அம்மா அப்பாவையும் திருவெல்லிக்கேணி வீட்டில் சந்த்தித்து டாவீ உலகுக்குக் காட்டினார்கள். அத்துடன் விடாமல் எங்கள் வீட்டு வாசலில் மாடு பால் கறப்பதையும் அந்த மாட்டு மூத்திரத்தை ஒரு பாட்டி தொட்டு தன் தலையில் தடவிக் கொள்வதையும் காட்டினார்கள்.

நான் சூடான காட்சிப் பொருளானேன். மற்றவர்களெல்லாம் அமெரிக்கக் கனவை அடைய இரவு பகல் முழுதும் தூக்கமில்லாமல் உழைக்கும் போது நான் அந்தக் கனவை சில நாட்களில் அடைந்தேன். பணத்தின் மூலம் புரிந்து விட்டது. ஆனால் நான் எந்த மூலத்தைத் தேடினேனோ அது நழுவிக் கொண்டே இருந்தது.

தினமும் விதவிதமான கச்சேரிகளுக்குப் போனேன். பலநாட்டு பலவித கலாச்சார அடிப்படையில் உருவான சங்கீதங்கள். ப்ரொபசர் ஒரு நாள் என்னை மேடைக்குப்பின் அழைத்துச் சென்று நம் தபலா மேதையை அறிமுகப் படுத்தினார். நான் அவரிடம் உங்கள் தாள ஒலிக்கு மூலம் எங்கே என்று கேட்டேன். சிவனின் உடுக்கையில் என்றார். அந்த உடுக்கையின் மூலம் ? என்று கேட்டேன். நீங்கள் அதை ஆராய்ச்சி மூலம் தேடுகிறீர்கள், நான் என் விரல்கள் மூலம் தேடிக் கொண்டிருக்கிறேன் என்றார். அந்த அபூர்வக் கைகளைக் குலுக்கி விடை பெற்றேன்.

தபலா மேதையின் அறிமுகத்துடன் அதே மேடையில் ஒரு காய்லான் கடை போன்ற அமைப்பில் தாள மாயா பஜார் நடத்தியவரையும் சந்தித்தேன். கச்சேரி முடிந்து எல்லவற்றையும் பாக் செய்து கொண்டிருந்தார். தமிழர் என்பதால் தமிழிலிலேயே கேட்டேன், ‘ நீங்கள் பாக்கிங் கூட தாள்த்துடன் செய்கிறீர்களே ‘. அவர் சிரித்துக் கொண்டே ‘ என் அம்மா சொல்வாள். நான் வயிற்றில் இருக்கும் போது கூட அம்மாவை தாளத்துடன் உதைப்பேனாம். ‘ எல்லா குழந்தைகளும் தாளத்துடந்தான் உதைக்கின்றனவோ என்னவோ ? தாளத்தின் மூலத்திலிருந்து வந்தவை தாமே. நாம் தானே பிறகு வகை பிரித்து ஆதி என்றும் ரூபகம் என்றும் பெயர் சூட்டுகிறோம்.

ஆஸ்திரியா சென்று ஐந்து வயதில் இசை அமைத்த ஜீனியஸ்ின் இடத்தைப் பார்த்தேன். என்ன பயன் ? அந்தக் குழந்தையை அந்த வயதில் சந்தித்திருந்தால் கூட என்ன செய்திருக்க முடியும். ? எங்கிருந்து இந்த சிறு மண்டையில் நுழைந்தது என்று கேட்டிருக்க முடியுமா ? திருதிருவென்று முழித்துவிட்டு அம்மா….. என்று அழுதுகொண்டே ஓடியிருக்கும்.

முதன் முறை அக்கரையின் கடற்கரைக்குச் சென்ற அனுபவம் மறக்க முடியாதது. சென்னை அலை ஓசையின் மறுபக்கம் போல் ஒலித்தது. வங்காள விரிகுடாவும் பசிபிக் கடலும் ஒரே மத்தளத்தின் இரு பக்கங்கள் போல. அந்த அனுபவம் திரும்பத் திரும்ப என்னை கடற்கரைக்கு இழுத்தது. ஒரு நாள். இரவு பத்து மணிக்கு ப்ரொபசருடன் ஆராய்ச்சி பற்றிய சந்திப்பு இருந்தது. மாலை ஆறு மணியிலிருந்தே மின்னல் இடியுடன் பலத்த மழை. எனக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. எட்டு மணிக்கு எல்லாவற்றையும் மறந்து கடற்கரைக்குச் சென்றேன். சென்னையில் கேட்ட கண்ட அதே நிகழ்ச்சி. எனக்கு மட்டும் இரவு முழுதும். அலை ஓசையின் கானமும் இடியின் தாளமும். அலைகளின் நடனத்திற்கு மின்னலின் ஒளியமைப்பு. மறுபடியும் அந்த ஒசையின் இடையே இழுக்கப் பட்டேன். இக்கரை அக்கரை என்ற மனித வரையரைக்கு அப்பால்.

மறுநாள் காலயில் வீடு திரும்பும் போது வாசலில் ப்ரொபசர். அம்மா போல் அழவில்லை. உணர்ச்சியற்ற குரலில்

‘ இரவு முழுதும் எங்கே சென்றாய் ? மீட்டிங்க்கு வரமுடியாது என்று சொல்லிவிட்டுப் போயிருக்கலாமே ‘ என்றார்.

அவரைச் சொல்லிக் குற்றமில்லை. ‘பிரசுரம் செய். அல்லது செத்து மடி.( Publish or Perish ). ‘ என்ற அசுரக் கோட்பாட்டில் உழல்பவர். உழன்று உழன்று ஊதியம் பெற்று தங்கக்கூண்டில் சுகமாக வாழ்பவர். இந்த்க் கூண்டில் இருந்துகொண்டு பிரபஞ்ச ஒலியனைத்தையும் ஒரு சிப்பில் ( chip) அடக்கலாம். ஆனால் ஒலியின் மூலத்தை அடைய முடியுமா என்ற ஐயம் என்னிடம் ஒரு சலிப்பை ஏற்படுத்த ஆரம்பித்திருந்தது. ‘ எங்கே போனேனா ? ஒலியின் மூலத்தைத் தேடி, கடற்கரைக்கு ‘ என்றேன். என் சலிப்பு குரலில் தெரிந்திருக்க வேண்டும். அவர் முகம் இளகியது.

‘ நீ கடைசியாக ஆராய்ச்சிக் குறிப்பு எழுதி வெகு நாட்களாகின்றன. பொன்னான நேரத்தை கடற்கரையில் வீண் செய்வது போல் இருக்கிறது. சில நாட்களாக உன் பேச்சும் நடையும் தடம் புரண்டிருக்கின்றன. நான் சொல்வதைக் கேள். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணியிடம் மனோதத்துவ ஆலோசனைக்கு அனுப்புகிறேன். இங்கு இது வெகு சாதாரணம். தவிர, இவள் உன் மொழி பேசுபவள். ‘ என்றார்.

அவர் சொன்ன பெண்மணியை சந்த்ித்தது ஓர் அழகான ஆழ்ந்த அனுபவம். அந்த அழகும் அறிவும் கனிவும்! ஒலிக்குப் பிறகு அந்த அழகின் மூலத்தைத் தேடவேண்டும். நிச்சயமாக கண்ணிலோ மூக்கிலோ உருவத்திலோ இல்லை. உயிரணு ஆராய்ச்சியில் என்றாவது அவளைப் போல் நூறு உருவங்கள் உயிர்க்கலாம். அந்த நூற்ின் இடையே அவளை நிறுத்தினால் அடையாளம் கண்டு கொள்ள முடியும். தமிழ்த் தாயின் அரவணைப்பில் பெங்காலித் தந்தையின் தோளில் வளர்ந்தவள்.

என் கதை முழுவதையும், என் தேடல் முழுவதையும் அவளிடம் அர்ப்பணித்தேன்.

மேலும், ஒரு வருடத்திற்கு மேல் யாரிடமும் சொல்லாத ஒன்றையும் அவளிடம் சொன்னேன். அவ்வப்போது என் காதுகளில் அலை ஓசை போன்ற சப்தம் நீண்ட நேரத்திற்கு ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போதெல்லாம் ஒன்றுமே செய்ய முடியாமல் தனியே ஓர் இடத்தில் அமர்ந்து காதுகளைப் பொத்தியபடி அமர்ந்திருப்பேன். யாரிடமும் சொல்லாமல் என் ஒலி அப்சஷெஷனுக்கும் இதற்கும் ஒரு சம்பந்தத்தை நானே உருவாக்கிக் கொண்டு என்னையே ஒருவிதமாக ஏமாற்றிக்கொண்டிருந்தேனோ ?

அர்ப்பணம் என்றது சரிதான். என் மனநிலைக்கு இதுவரை கிடைத்திரா வடிகால் கிடைத்தது போல் உணர்ந்தேன். அவள் எழுந்து வந்து ஒரு கையால் என் தோளைப் பற்றி இன்னொரு கையால் என் தலையைக் கோதினாள். நான் சிறு குழந்தையாகி ‘ எனக்கு பீதோவனின் பாஸ்டோரல் ( Pastoral ) கேட்க வேண்டும் ‘ என்றேன். அறையிலிருந்த சிடி ராக்கிலிருந்து ஒரு சிடியை எடுத்து பிளேயரில் வைத்து பட்டனை அமுக்கினாள்.

ஆத்மாவை நெருடும் சங்கீதம். மழையே காணாமல் வறண்டிருக்கும் வயற்பரப்பில் திடாறென்று இடியுடன் மழை பெய்யும். சங்கீதம் அந்த இடியை நெருங்கும் போது என் நெஞ்சில் ஒரு படபடப்பு. வயிற்றில் அசுகம். இடி வந்தது. போன தடவை கேட்ட அளவு ஒலிக்கவில்லை. போன தடவை லெனார்ட் பெர்ன்ஸ்டெய்ன் கண்டக்ட் செய்ததைக் கேட்டேன். அதில் உள்ள இடி ஒலியின் உக்கிரமே தனி என்றது மனம்.

சிடி முடிந்ததும் நானே எழுந்து அதை எடுத்துப் பார்த்தேன். லெனார்ட் பெர்ன்ஸ்டெய்ன்.

அவள் ‘ வேறு எங்காவது போய் பேசுவோமே ? நீங்கள் வழக்கமாகச் செல்லும் கடற்கரைக்குப் போகலாமா ? ‘ என்றாள்.

ஒரு கணம் இனமறியாத தயக்கம். பிறகு சரியென்றேன். அவளுடைய காரில் ஏறினோம். கார் கிளம்பியதும் சிடியைப் போடப்போனாள். நான் வேண்டாமென்றேன். பேசிக்கொண்டே போகலாமே என்றேன். அவள் என்னுடைய உதட்டசைவால் கேட்கும் தன்மையைப் பற்றிக் கேட்டாள். உதடென்ன, அலைகள் பாய்வதையும் அடங்குவதையும் பார்த்தே அலை ஓசையை உணர்வேன் என்றேன்.

கடற்கரையில் வெகு நேரம் பேசாமல் அமர்ந்திருந்தோம். நான் அலைகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். திடாறென்று அவள் ‘ காதைப் பொத்தியவாறு கேளுங்கள் ‘ என்றாள். அதே போல் செய்து என்னால் அலை ஒசையை அப்படியே கேட்க முடிகிறது ‘ என்றேன். ‘ இப்பொழுது கண்ணை மூடிக்கொண்டு கேளுங்கள் ‘ என்றாள். நெஞ்சு படக்க கண்களை மூடினேன்.

மூடிய கண்களுக்குள் உண்மை விசுவ ரூபம் எடுத்து நின்றது. ‘ சப்தம் குறைந்து விட்டது. என்னையே ஏமாற்றிக்கொண்டு தான் இருந்திருக்கிறேன். கேட்கும் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்திருக்கிறது. இதற்கு என்ன வழி ? ‘ என்றேன்.

‘ கவலைப் படாதீர்கள். இது சிகிச்சையில் குணமாகக் கூடியது. இங்கே சிறந்த டாக்டர்கள் இருக்கிறார்கள். உலகிலேயே சிறந்த வைத்திய மூறை உள்ளது. கேட்கும் சக்தி முழுதும் திரும்பப் பெறுவது அதிசயமற்றது ‘ என்றாள். தொடர்ந்து, ‘ பீதோவன் இன்று இருந்தால் தன் படைப்பைத் தானே கேட்க முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டிருக்காது. ‘ என்றாள்.

ஆனாலும் எனக்கு உலகமே முடிந்தது போல் இருந்தது. தண்ணீரில் மூழப்போனவனுக்குக் கிடைத்த ஒரே மரத்துண்டு போல் தோன்றினாள் அவள். அவள் கைகளைப் பற்றியவாறு புலம்பி விட்டேன். என் தேடல் முரட்டுத் தனமாக நிறுத்தப் படுமா ? ஒலியில்லாமல் அனாதை ஆகி விடுவேனா ? எங்கு போய்த் தெடுவேன் ஒலியின் மூலத்தை ? இல்லை. என் தேடல் முடியாது. நவீன மருத்துவம் என்னை குணப்படுத்தும். எனக்கு வேண்டியது ஒரே ஒரு சான்ஸ். என் தேடல் முடிந்ததும் என் காதுகளை திருப்பி எடுத்துக் கொள்ளுங்கள். என் உடல் முழுதையும் எடுத்துக் கொள்ளுங்கள். என் மூளையை வைத்து மேலே ஆராய்ச்சி செய்யுங்கள். ஒரே ஒரு தரம். ப்ளீஸ்.

மறு நாளில் இருந்தே எல்லாம் அமெரிக்க வேகத்தில் நடந்தது. பரிசோதனைகள். மேலும் பரிசோதனைகள். சுற்றிவர மருத்துவ மேதைகள். அவர்கள் வாயையே நோக்கியவாறு மருத்துவ மாணவ மாணவிகள். ஜகத்தினை அழிக்கக்கூடிய விஞ்ஞானம் தனி ஒருவனுக்காகப் போராடியது. நான் எனது உணர்ச்சிகளிடமிருந்து விடுபட ஆரம்பித்தேன். எப்படியேனும் என் தேடல் நிற்காது என்ற நம்பிக்கை என்னுள் துளிர ஆரம்பித்தது. ‘ எனக்கு காது கேட்கா விட்டாலும் பரவாயில்லை. சங்கீத ஞானம் இல்லாதவரின் காதை மட்டும் என்னுள் பொருத்தி விடாதீரகள் ‘ என்று டாக்டர்களிடம் ஜோக் கூட அடிக்க ஆரம்பித்தேன்.

என்ன சிகிச்சை, என்ன பெயர் அதற்கு, எவ்வாறு என்ன செய்தார்கள், யார் அவர்கள், அவர்கள் பெயர்கள் என்ன என்பதெல்லாம் இந்தக் கதைக்கு அவசியமில்லை. உருவமற்ற தேடலைப் பற்றிய கதையில் பெயர்களுக்கு முக்கியத்துவம் இல்லை. அதே போல் எந்தக் காரணத்தினால் சிகிச்சை வெற்றி பெறவில்லை, நான் ஏன் கேட்கும் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக முழுதும் இழந்தேன் என்பதெல்லாம் கூட இக்கதைக்கு அவசியமில்லாத விவரங்கள்.

என் தேடலில் ஒரு மாபெரும் திருப்பம் என்னவென்றால் என் காதுகள் கேட்கும் சக்தியை முழுதும் இழந்ததுதான். ஆனால் எதை இழந்தால் தேடலை இழப்பேன் என்று பயந்தேனோ அதே இழப்பால் என் தேடலுக்கு முடிவு கண்டுவிட்டேன். நாளாக ஆக உதட்டசைவுகளும் அலையின் பாய்ச்சலும் கூட என்னுள்ளே ஒலியை உணர்த்தவில்லை. நிரந்தரமாக ஆதியும் அந்தமும் இல்லாத மெளனம். இந்த நிரந்தர நிலையில் விடை என்பது தேடலுக்கு அப்பால் இருக்கிறது என்று உணர்ந்து விட்டேன். நீங்கள் கேட்கும் ஒலிகளின் இடையே உள்ள மெளனத்தை நான் அடைந்து விட்டேன். நான் தேடிய மூலம் என்னை நிரந்தரமாக தன்னுள் அடக்கி விட்டது. நீங்கள் வேண்டுமானால் ஒலியின் மூலத்தைத் தேடி அலையுங்கள். எனக்கு அந்த தேடல் அவசியமில்லை. என்னை ஆக்கிரமித்துள்ள மெளனம் இல்லாமல் உங்கள் ஒலிகளில்லை. அடுத்த முறை ச ரி க ம அல்லது டோ ரே மி கேட்கும்போது அவற்றின் இடையில் நான் இருக்கிறேன் என்று உணருங்கள். நீங்கள் கேட்கும் ஒலிகளுக்கு எல்லை உண்டு. என் மெளனம் எல்லையற்றது. ஒலியனைத்தும் தன்னுள் அடக்கிய எல்லையில்லாத மெளனம் அது.

************

Series Navigation

ராம்ஜி

ராம்ஜி