அத்தனை ஒளவையும் பாட்டிதான்- 3

This entry is part of 20 in the series 20011118_Issue

இன்குலாப்


பழையப் பாலைப் பண்ணும் பறையும்….

இளைஞன் : அதோ…. மரநிழல்……

பாணர் : ஆமாம் மராமரம்…. அதிலும் இலைகள் இல்லை….

ஒளவை : வெயில் நிழல் வலை பின்னியது போல…. கட்டம் கட்டமாய் நிழல்கோடுகள்.

பாடினி-1 : ஆமாம் ஒளவை…. கொளுத்தும் இந்த கோடையில் மண்ணிலும் ஈரமில்லை… மரத்திலும் பசுமை இல்லை….

பாணர் : அந்த காட்டாற்றில் நடந்து வந்தோமே…. கொஞ்சம் கூட நீர் இல்லை….

இளைஞன் : நீர் இருந்ததற்கான சுவடு கூட இல்லை…

பாடினி-1 : கரை நெடுக வெறும் மரம்…. ஒரு பிடி நிழல் கூட இல்லை. பிறகு முள்ளை மட்டுமே வளர்த்துக் கொண்டிருக்கும் உடை மரங்கள்.

இளைஞன் : பிறகு கூர்மையான பரல்கள்.

பாடினி-2 : (நடுவயதினள்) இதோ பார்… என் கால்களைப் பரல்கள் குத்திக் கொப்புளங்கள்…. சிறு நெல்லிக் காய்களைப் போல். கால்களோ வெயிலில் ஓடிக் களைத்த நாயின் நாக்குப் போல சிவந்து விட்டது.

பாடினி-2 : பேசியது போதும்…. இந்த மராமரத்து நிழலிலாவது உட்காருவோம்….

(பாணர் கூட்டம் நிழலில் போய் உட்கார்கிறது. நடுவயதினள் மரத்தின் அடியில் சாய்கிறாள். முழங்காலை நீட்டிக் கொள்கிறாள். ஒளவை அருகில் உட்கார்ந்து கால்களை நீட்டியபடி மரத்தில் சாய்கிறாள்.)

(நண்பகல் பாணர் கூட்டம் தள்ளாடியபடி நடந்து வருகிறது. நடுவில் ஒளவையும் பாணர் கூட்டத்தில் இளைஞன் ஒருவன் தனது முழவுக் கருவியைத் தட்டியபடி)*

பாணர் : நல்லது. கொளுத்தும் பாலை வெளியில், நிழலையாவது காட்டிய கொற்றவைக்குப் பறையடித்துப் பரவுவோம்…. (தடாரிப் பறையைக் கொட்டுகிறார்)

இளைஞன் : கொற்றவை எங்கே நிழலைக் காட்டினாள்…. ? நானல்லவோ காட்டினேன்….

பாடினி-1 : கவலைப்படாதே…. உனக்கும் பறையடிப்போம்…. கடைசியாக.

இளைஞன் : ஏன் கடைசிப்பறையைப் பற்றிப் பேசுகிறாய்…. திருமணத்துக்குப் பறை கொட்டமாட்டார்களா ?

பாடினி-2 : ஒளவை, என் கால்கள் நோகின்றன. அந்த வாயாடியை (இளைஞனைச் சுட்டி) இப்படி வந்து உட்காரவிடு. என் கால்களை பிடித்து விடப்பா… (ஒளவை சிறிது நகர இருவருக்கும் நடுவில் இளைஞன் வந்து உட்காருகிறான்)

ஒளவை : நடந்து நடந்து கால்கள் சோர்ந்தன….

பாடினி-2 : நடந்து சோர்ந்தது கொஞ்சம். நடமாடிச் சோர்ந்தது கொஞ்சம்.

இளைஞன் : (கால்களைப் பிடித்து விட்டபடி) வயிறு பசிக்கிறது.

பாணர்-1 : உண்பதற்கு ஏதாவது மிஞ்சியிருக்கிறதா ?

பாடினி-2 : என்ன மிச்சம்….. உலர்ந்த ஒரு சில மீன்கள்…. இந்தத் துணியில்.

பாணர்-1 : அவரை, துவரை, அரிசி என்று எதுவும் இல்லையா ?

பாடினி-2 : அவரையும் இல்லை. துவரையும் இல்லை…. கடைசியாக நாம் ஆடி முடித்தபோதே எல்லாம் தீர்ந்து போய்விட்டன.

இளைஞன் : அப்பா…. இப்படி ஒரு அழகான நிழலைக் காட்டிய கொற்றவை…. கொஞ்சம் உணவையும் காட்ட மாட்டாளா ?

பாணர்-1 : கொற்றவையைப் பழிக்காதே…. சினந்து விடுவாள்… தேடிப்பார்ப்போம், ஏதாவது காட்டுக் கீரைகள் கிடைத்தாலும் கிடைக்கும்.

பாடினி-1 : உமக்குக் கூரு கெட்டுப் போய்விட்டதா ? கண்ணுக்கெட்டிய தொலைவில் ஏதாவது ஒரு பசுமை தலை நீட்டியிருக்கிறதா ?

இளைஞன் :(எழுந்து வந்து பார்த்துவிட்டு) அதோ அந்தக் குன்றுக்குப் பக்கத்தில் சில குடிசைகள் தெரிகின்றன. நாம் அங்கே போவோமா ?

ஒளவை : கொஞ்சம் பொறு. பசிக்குப் பழகாதவன் போல…

இளைஞன் :இருந்தாலும் ஒளவையே, இவ்வளவு தொலைவு நடந்தபிறகு குடிப்பதற்குக் கூடத் தண்ணீர் இல்லாமல்…

ஒளவை : இந்தக் சுரைக் குடுவையில் கொஞ்சம் தண்ணீர் இருக்கிறது. குடி.

இளைஞன் : சுரைக் குடுவையில் வெறுந்தண்ணீரை மட்டுந்தான் வைத்திருக்கிறாயா ?

ஒளவை : பேசாதே… வறட்சியில் நாக்கு உள்ளே போய் விடப் போகிறது. குடி.

(சுரைக்குடுவையில் தண்ணீர் வாங்கி இளைஞன் குடிக்கிறான்.)

இளைஞன் : அப்பா.. கொஞ்சம் வேட்கை குறைந்தது… இனிப் பசிக்கு என்ன செய்வது ?

ஒளவை :வா. காற்றைச் சாப்பிடுவோம்.

இளைஞன் : என்ன ஒளவை… காற்றைச் சாப்பிடச் சொல்கிறாய்.

ஒளவை : அது ஒன்று தான் வேலிகளுக்குள் அடைபடாமல் வெளியே திரிகிறது. நல்லது, உனக்குக் காற்றை வேட்டையாடத் தெரியுமா ?

இளைஞன் : காற்றை வேட்டையாடுவதா ? சுரைக்குடுவையில் தண்ணீர்தானே கொண்டு வந்தாய் ? ஆமாம் காற்றை எப்படி வேட்டையாடுவது ?

ஒளவை : அதோ, உன் யாழை எடு.. (பாணனைக் காட்டி) நீ உன் முழவின் வார்களை இறுகக்கட்டு, (மற்றொரு பாணனைக் காட்டி) நீ பறையை பொருத்தமாகத் தட்டு. எல்லாம் சீராக அமையட்டும். இப்பொழுது இந்த வலைகளுக்குள் காற்று வந்து விழுகிறதா இல்லையா என்று பார்… உன் யாழில் பாலைப் பண் வந்து நடமாடட்டும். இந்த இசை அதோ அந்த எயினர் குடியிருப்பை எட்டும்….

பாணர் : பாலைப்பண்… மதங்கொண்ட யானையையே நிறுத்திவிடுமே..

இளைஞன் : என் பசியை நிறுத்துமா ?

ஒளவை : செவிக்கு விருந்து படை. வயிற்றுக்கு விருந்து தானாக வரும். வேலை செய்தால் தானே கூலி கிடைக்கும்.

(பாணர்கள் மெல்லமெல்ல இசை கூட்டிப் பாலைப்பண் இசைக்கின்றனர்.. சிறிது நேரம் இசை தொடர்கிறது. தொலைவிலிருந்து சில எயினர்கள் வில்லும் அம்புமாய் வருகின்றனர்.) அவர்கள் அருகில் வர இசை நிற்கிறது.**

எயினர்-1 : ஏன் இசைப்பதை நிறுத்தினீர்கள் ?

பாணர்-1 : நீங்கள் யார் ?

எயினர்-2 : நாங்கள் எயினர்கள்.

பாணர் : இங்கு எப்படி வந்தீர்கள்… ?

எயினர்-1 : உங்கள் இசை எங்களைக் கூட்டி வந்தது.

பாடினி-1 : இசைகேட்க வந்த உங்களுக்கு அம்பும் வில்லும் எதற்கு ?

எயினர்-3 : நாங்கள் வேட்டைக்குப் புறப்பட்டோம். வழியில் உங்கள் இசை கேட்டது வந்தோம்.

பாடினி-1 : கண்ணுக்கெட்டிய தொலைவில் கானல் பறக்கிறது. நீங்கள் வேட்டையாட ஒரு பறவை உண்டோ ?

பாடினி-2 : வழியெல்லாம் வறண்டு கிடக்கிறது. எந்த விலங்கு இந்த வெயிலில் வெளியே வரும் ?

எயினர்-1 : விலங்குகள் வராவிட்டாலும் வணிகர்கள் வருவார்கள்… வண்டிகளிலும் கழுதைகளிலும் சாத்து சாத்தாக வருவார்கள். பொதி பொதியாகப் பொருள் கொண்டு வருவார்கள்.

பாடினி-1 : சரி… அவர்கள் பொருள்களை அவர்கள் கொண்டு செல்கிறார்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் ?

எயினர்-1 : (சிரித்தபடி) நாங்கள் அவர்களை வேட்டை ஆடுகிறோம்.

பாடினி-2 :அவர்களையா ?

எயினர்-2 :அவர்கள் பொருள்களை ? எதிர்த்தால் அவர் களையுந்தான்.

பாடினி-1 :அதாவது…

எயினர்-1 :ஆமாம் நாங்கள் கொள்ளையடிக்கிறோம்.

பாடினி-2 :கொள்ளையடிப்பது குற்றமில்லையா ?

எயினர்-2 :இந்த வணிகர்களைக் கொள்ளையடிப்பதா ? குற்றமா ? (சிரிக்கிறான்) இதோ பாருங்கள் நாங்கள் இந்தப் பாலை மண்ணில் மட்டுந்தான் கொள்ளையடிக்கிறோம். இவர்களோ எல்லா மண்ணிலும் கொள்ளையடிக்கிறார்கள்.

பாடினி-1 :அது அவர்கள் தொழில்

எயினர்-1 :இது எங்கள் தொழில்

பாணர்-1 :அவர்கள் யாரையும் போய் வழிப்பறி செய்வதில்லை. வில்லையும் அம்பையும் காட்டி எதையும் விற்பதில்லை.

எயினர்-2 :அவர்கள் சொல்லைக் காட்டி நம்மைச் சூறையாடுகிறார்கள்.

எயினர்-1 :இதோ பாருங்கள். இந்தப் பாலை வெளியை என் பாட்டன் சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்த மண் முழுவதும் மரங்கள் அடர்ந்த காடுகளாய் இருந்தன என்றால் நீங்கள் நம்புவீர்களா ?

பாடினி-2 :என்ன ?

எயினர்-1 :ஆமாம். அந்தக் காலத்தில் எங்கள் வில்லும் அம்பும் எங்கள் வழியில் குறுக்கிடாத மட்டுக்கும் மனிதர்களைக் குறிவைத்ததில்லை. வேட்டைக்கு ஏராளமான விலங்குகள். மாமரக் கிளைகள் எல்லாம் கனிகளின் சுமையால் மண்ணைத் தொட்டன.

எயினர்-2 :இங்கே ஓர் ஆறு கூட இருந்ததாம். அதுவும் மண்ணுக்கடியில் புதைந்து போய்விட்டது.

பாடினி :இந்தக் காடுகளுக்கு என்ன நேர்ந்தது ?

எயினர்-2 :போங்கள். உங்கள் அரசர்களைப் போய்க் கேளுங்கள்.. அவர்கள் அரண்மனைகளின் கதவுகளைப் போய்க் கேளுங்கள். உத்தரங்களைப் போய்க் கேளுங்கள். பஞ்சணை தாங்கியிருக்கும் கட்டில்களைப் போய்க் கேளுங்கள். இந்த வணிகர்களின் வானுயர்ந்த வீடுகளைப் போய்க் கேளுங்கள். எங்கள் காடுகள் கொல்லப்பட்டு நாடுகள் உருவானக் கதையைச் சொல்லும்.

எயினர்-1 :எங்களை இந்த வெட்ட வெளியில் நிறுத்தியவர்களை நாங்களும் நிறுத்துகிறோம்.

எயினர்-2 :கொள்ளையடித்தவர்களைக் கொள்ளையடிக்கிறோம்.

எயினர்-1 :உங்கள் மன்னர்கள் தலைக்கு முடி சூட்டிக் கொண்ட கொள்ளையர்கள். (தாடியைத் தடவியபடி) நாங்கள் முகத்துக்கு முடி சூட்டிக் கொண்ட கொள்ளையர்கள்.

(அச்சமயம் எயினர் குலப்பெண்கள் அங்கு வருகிறார்கள்)

எயினி-1 :இங்கென்ன செய்கிறீர்கள் ?

எயினர்-1 :இவர்கள் பாணர்கள்.. இவர்கள் பாட்டுக் கேட்டு வந்தோம்.

எயினி-2 :நாங்களுந்தான்… (பாணர்களை உற்றுநோக்கி விட்டு…) ஐயோ… இன்னும் பசி ஆறவில்லையா ? முகமெல்லாம் வாடி… வாருங்கள். நமது குடிலுக்குச் செல்லுவோம்.

எயினர்-2 :அடடா, இவர்கள் உணவுண்டார்களா என்று எங்களுக்குக் கேட்கவே தோன்றவில்லை ‘

எயினி-1 :கொள்ளையடித்துக் கொள்ளையடித்து உங்கள் உணர்வுகளே மரத்துப் போய் விட்டன.

இளைஞன் :யார் கொள்ளையடிக்கவில்லை.. வணிகர்கள் கொள்ளையடிக்கவில்லையா ? அரசர்கள் கொள்ளையடிக்கவில்லை ? உழவர்கள் நெல்லைக் கொள்ளையடிக்கிறார்கள். பாணர்கள் மீன்களைக் கொள்ளையடிக்கிறார்கள். பறவைகள் பழங்களைக் கொள்ளையடிக்கின்றன. (எயினர் குலப் பெண்கள் அவனை உற்று நோக்க) நான் சொல்லவில்லை. இதோ இவர்கள் தான் சொன்னார்கள். எனக்குப் பசிக்கிறது. ஒளவை உனக்குப் பசிக்கிறதா ?

எயினர்-1 :ஒளவையா.. யார் அவள் ?

இளைஞன் :இதோ இவள்தான் ?

எயினர்-2 :இவ்வளவு இளம் பெண்ணா ? இவளுடைய பாடல் ஒன்றை அன்று குறிஞ்சித் திட்டில் பாணர்கள் பாடக்கேட்டேன். ஒரு முப்பது அகவையாவது இருக்கும் என்று நினைத்தேன். இவளோ ஆலமரத்துக் கிளிக்குஞ்சு போல…

எயினர்-1 :பாருங்கள் (தனது செருப்பைக் காட்டி) அடிபுதை அரணம் கூட இல்லாமல்.. வெறுங்காலுடன்…

எயினி :சரி…ஒளவையைப் பேசியே கொல்லாதே. அவர்களை அழைத்து வா.

_______________________________________________________________

* நாடகத்தின் மேடையேற்றத் தேவைக்காக இப்பகுதி பாடலாக வருகிறது. இதை இரண்டாவது பாடமாகக் கொள்ளலாம்.

நாளான மண்சுவர்

நைந்து விழும் கூரை

காளான்கள் பூக்கும்

கரையான் மண்கோடிழுக்கும்….

வேளைக்கீரை

உப்பின்றி வெந்ததை

வாசற்படல் அடைத்து

வயிற்றுத்தீதான் தணித்து….

வேர்வையில் நனைந்து

மூலநூல் இழை அறுந்து,

வேறுவேறு நூல் ஒட்டில்

ஈரும் பேனும் குடியிருக்கும்

ஆடைகளைப் போர்த்தி

வருகின்றோம் வருகின்றோம்

பாடல் துணையாகப்

பாடினியர், பாணர்கள்

வெக்கை பறக்கும் கானல் வெளிகளில்

நிற்கும் மரங்கள் இலையின்றி

வீழும் நிழற் கருங்கோட்டில்

உட்கார்ந்து இளைப்பாற

இளைஞர்கள் கால்நீவ

தக்கதிம் பறை முழக்கி

எழுகின்றோம் தமிழ் இசைக்க

** நடகத்தின் மேடையேற்றத் தேவைக்காக இந்தப் பாடலும் எழுதிச் சேர்க்கப்பட்டது.

பழைய பாலைப் பண்ணும் பறையும்

காதில் மோதுதே ‘

பாட்டன் சொன்ன நேற்றைய வாழ்வை

நினைவுறுத்துதே ‘

நிழல் குவிந்த நிலங்களில்

யார் நெருப்பு வைத்தது ?

நெளிந்து வந்த ஆறுகளை

யார் புதைத்தது ?

வழிப்பறியும் கொலை வெறியும்

யார் விதித்தது ?

வன்புலத்தில் எயினர் வாழ்வை

யார் விதைத்தது ?

Series Navigation