அத்தனை ஒளவையும் பாட்டிதான் -2

This entry is part of 20 in the series 20011111_Issue

இன்குலாப் (ஒளவை ‘ யிலிருந்து)


பாடினி வந்தாள்

மூடிய பழமைத் தூசியை விலக்கி

முகத்தில் ஒரு நிலவைத் துலக்கி

ஏடு இனிக் காணாத எழுத்தில் இருந்து

எழுந்து வருகிறாள் இன்னிசை விருந்து.

பாடினி வந்தாள் பாடினி வந்தாள்

பாட்டும் கூத்துமாய்ப் பாடினி வந்தாள்.

காடு இனி மறந்த பசுமையை நினைக்கும்

கானக் குயில்களைக் கிளைகள் அழைக்கும்

நீடிய வழிகளில் யாழிசை மீண்டும்

நினைவில் கனலைக் குழலிசை தூண்டும்.

பழகிய வாழ்க்கையைப் பாடலில் வார்த்து

பசப்புதல் இல்லாத சொற்களில் கோத்து

அழகிய ஒளவைப் பாடினி வந்தாள்

அறம் போதியாமல் பாடினி வந்தாள்.

கள்ளில் ஒரு சொல் காதலில் மறுசொல்

களத்தில் நிற்கும் வீரர்கள் எல்லாம்

வாளால் வரைந்த குருதி வரிகளை

யாழின் நரம்பில் திரும்ப எழுதிய

பாடினி வந்தாள் பாடினி வந்தாள்

பாட்டும் கூத்துமாய்ப் பாடினி வந்தாள்.

அடர்குரல் முழவுகள் கடும் குரல் வங்கியம்

அடிதொடும் சிலம்பிசை தொடுவளை ஆர்த்திடும்.

தடிஇலை நரைஇலை தரையினில் விழிஇலை

விடுதலை நடையுடன் நெடுவழி தொடர்கிறாள்.

பாடினி வந்தாள் பாடினி வந்தாள்

பாட்டும் கூத்துமாய்ப் பாடினி வந்தாள்.

பாணர்கள் பாடியபடி:

குன்றுகள் ஏறிச் சமவெளி பாவும்

முகில்களோடு நாங்களும் நடந்தோம்

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்

பாலை எங்கும் பாடித் திரிந்தோம்.

இன்னும் பாடுக பாட்டே

(பாணர்களின் குடியிருப்பு..சில குடிசைகள். ஒன்றில் மீன்வலை காய்கிறது. சிறிது தள்ளி ஒரு மர நிழலில் முழவு, யாழ், குழல் போன்ற இசைக் கருவிகளுடன்-பாடினியர்-ஒரு கூத்துக்கு ஒத்திகை பார்க்கிறார்கள். முதுகைக் காட்டியபடி ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள்.)

பாடினி-1 :சரி….தலைவி தலைவனைக் காண முடியாமல் இல்லத்தில் இருக்கிறாள்….

பாடினி-2 :தன்னுடைய காதலை நற்றாயிடமும் சொல்ல முடியவில்லை… செவிலித்தாயும் செவி கொடுக்கவில்லை.

பாடினி-1 :ஏனடி… காதலைச் சொல்வதற்கும் தடையா ?

பாடினி-2 :ஆமாம். காதலை வெளிப்படையாக ஒரு பெண்ணால் பேச முடியுமா ?

பாடினி-1 :ஆமாம்…அது ஒரு காலம். மலையேறிவிட்டது. தலைவனும் தலைவியும் தாமே கண்டு தாமே மணந்து மகிழ்ந்த காலம் அது…

பாடினி-2 :மணமுடித்து வைக்கப் பெரியோர் இல்லை… சேர்ந்த நாளே திருநாள்.. திருமணநாள்…

பாடினி-1 :ஆடவன் பெண்ணை ஏமாற்றியதில்லை….

பாடினி-2 :காதலில் ஏமாற்றுவது பற்றிக் கனவு கூடக் காண்பதில்லை…

பாடினி-1 :போதும் கனவுகள் காண்பது. கூத்துக் கதையைச் சொல்.

பாடினி-2 : ஒரு புறம் அச்சம்…. மறுபுறம் நாணம்…. பேதை அவள் எப்படி தன் காதலைச் சொல்வாள் ? நினைத்தால் உயிர் வேகிறது. நினைக்காதிருந்தாலோ உயிரே போகிறது…. உடல் கூட்டுக்குள் மனப் பறவை சிறகடிக்கும்…. உற்றார் செவிகளோ இரும்பால் ஆனவை… பேதை அவள் எப்படித் தன் காதலைச் சொல்வாள் ? தினை மாவை நற்றாய் தேன் ஊற்றிப் பிசைவாள், தேனினும் இனியவன் மனதைப் பிசைவான்…. மலைச்சாரல், வண்ணப் வண்ணப் பூக்கள்….. மணக்கும் பூக்களால் மாலை கிறங்கும்… மேற்கில் வானம் பொன்னாய் இளகும்…. தலைவியின் நெஞ்சும் தானாய் மயங்கும்… திரும்பும் திசையெல்லாம் தேனாய் உருகும்….

பேதை அவள் காதலை எப்படிச் சொல்வாள், இருந்த இடத்தில் சிலைபோல் இருந்தாள்….. உணவு மறந்தாள்…. உறக்கம் துறந்தாள்…. இமை மூடாமல் கனவுகள் கண்டாள்…. குன்றக் குறவனின் அன்பு மகள். இவள்…. வேண்டித் தவமிருந்து வரமாய் வந்தவள்…. பேதை மனத்தில் காதல் கொழுந்துகள் எரிவதால் அவளும் வெண்ணெய் போல் உருகுவதைத் தந்தையும் அறியான்…. தாயும் அறியாள்… முருகவேளுக்கு ஏதோ குறை இழைத்தோம்… எனப் பெற்றோர் கருதினர்…. கட்டுவிச்சியை அழைத்துக் குறியும் கேட்டனர்…. குன்றப் பெயரைச் சொன்னவுடன்…. தலைவியின் நெற்றியில் சுடரொன்று படர்ந்தது… இதுதான் இன்றைய கூத்தின் செய்தி….

இப்படி முடியும் இந்தக் கூத்துக்குக் கடைசி வரிகளாய் ஒரு காதற் பாட்டு….

யாரிடம் கேட்கலாம்…. கூறடி பாடினி.

பாடினி-1 : பேச்சாலே கதை சொல்வாய் என்று நினைத்தேன். பாட்டாலே பாடி முடிச்சிட்டியே….

பாடினி-2 : பாணர்களுக்குக் கதை சொல்ல வராது… பாடத்தான் வரும்…. நாம் பெற்ற பயிற்சி அப்படி…. கடைசி வரிகளாய் என்னடி சொல்லலாம்… ? யாரைக் கேட்கலாம் ?

பாடினி-1 : என்னிடம் என்ன கேட்பது…. ? அதோ பார்…. அந்தப் புன்னை மர நிழலில் யார்…. ?

பாடினி-2 : ஒளவை. மீன் வலை பின்னுகிறாளா ?

பாடினி-3 : ஏதாவது பாடலுக்குச் சொல்வலை பின்னியபடி இருப்பாள். யாழ் மீட்டும் கைகள் மீன் பிடிக்குமா ?

பாடினி-1 : ஏன் மீன் பிடிக்கும் கைகளுக்கு யாழ் மீட்ட வராதா ?

பாடினி-3 : ஏன் வராது ? மீன்கள் வலையில் மாட்டுவது யாழ் நரம்பில் இசை வந்து பொருந்துவது போலத்தான்… பாட்டுக்குச் சொல்வந்து பொருந்துவது போலத்தான். எல்லாம் முயற்சி தான்…. ஏய் ஒளவை… நீ வலை பின்னுகிறாயா ? கலை பண்ணுகிறாயா ?

(ஒளவை திரும்புகிறாள். கையில் கலயம்)

ஒளவை :இப்பொழுது கலயம் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.(கலயத்திலிருந்து குடிக்கிறாள்)

பாடினி-1 :என்ன ஏதாவது மீதம் இருக்கிறதா ?

ஒளவை :இல்லை.. கொஞ்சம் கள்தான் இருந்தது. அதனுடைய கடைசித்துளியும் உணர்வூட்டுகிறது….

பாடினி-1 :கலயத்தையாவது மிச்சம் வை, ஒளவை ‘

ஒளவை :கள்ளிருந்த இந்தக் கலயத்துக்கும் வெறிவந்து விட்டது. பார்…அதுதான் ஆடுகிறது.

பாடினி-1 :வெறி கலயத்துக்கு இல்லை…… உன்விழிகளுக்கு வந்திருக்கிறது. கைகளுக்கு வந்திருக்கிறது.

ஒளவை :கலயம் உன் கைக்கு வராத மட்டுக்கும் ஏய் பாடினியே… உனக்குக் கலயத்தின் உண்மை தெரியாது… இதோ என் கையில் உள்ள இந்தக் கலயத்தின் நரம்புகள் துடிக்கின்றன… இதனுடைய வாயில் ஒரு சொல் இருக்கிறது. இதை முகத்தருகே வைத்துப்பார்…. அந்தச் சொல் ஒரு பாடலாய் நீளும்.. (என்று கலயத்தைப் பாடினி முகத்தருகே கொண்டு செல்கிறாள்.)

பாடினி :(மூக்கைப் பிடித்தபடி) ஒளவை.. கலயத்தின் சொல் மணக்கிறது. ரொம்ப முற்றிவிட்டது…எங்களுக்கு ஒரு பாடலாவது இசைப்பாயா ? கூத்தின் கடைசி வரிகளாய் ஒரு பாட்டு… கூத்தின் செய்தி….

ஒளவை :தெரியும் பெண்ணே…. காதலுற்ற தலைவி.. யாரிடமும் சொல்லாமல் தன் உணர்வுகளை அடக்கி வைத்ததால் பேதுற்றவள் போல்… பித்துற்றவள் போல்… இந்த மனநோயைப் புரிந்து கொள்ளாத தாயும் தந்தையும் முருகன் வந்து ஆட்கொண்டிருப்பதாய்…… கட்டுவிச்சியை அழைத்துக் குறி கேட்கின்றனர். குறி சொல்லும் அக்குறமகள் குன்றங்களைப் பாடுகிறாள்.. தலைவனின் குன்றம் பாடும்பொழுது தலைவியின் முகத்தில் ஒளி…. இதுதானே செய்தி….

பாடினி-2 :சரியாகச் சொன்னாய்..கலயத்தோடிருந்த நீ கதையோடு எப்படி ஒன்றினாய் ?

ஒளவை :அடி பேதாய்…. மீன் வலை விரித்தவன் அலைகளின் வளைவுகளில் மயங்கினாலும் மீன் சிக்கியதை அவன் விரல் உணரும்… பாடினி எனக்குக் கலயம் கையில்… கவனம் கதையில்.

பாடினி :பிறகென்ன ஒளவை ? பாடு….

ஒளவை :குன்றம் பாடிய கட்டுவிச்சியைத் தலைவியின் தோழி பார்க்கிறாள்… பிறகு பாடுகிறாள்….

அகவன் மகளே ‘ அகவன் மகளே…

மனவுக் கோப்பன்ன நல்லெடுங்கூந்தல்

அகவன் மகளே ‘ அகவன் மகளே ‘

இன்னும் பாடுக பாட்டே ‘ அவர்

நல் நெடுங்குன்றம் பாடிய பாட்டே….

இதுதான் பாட்டு… தோழி பாடிய இந்தப் பாடலை நற்றாய் கேட்டாள்.. செவிலி கேட்டாள்..வேலிக்கு வெளியே ஒளிந்து நின்ற தலைவனும் கேட்டான்….

பாடினி-2 :தலைவன் கேட்டானா ?

ஒளவை :தலைவன் கேட்கவேண்டும் என்பதற்குத்தான் தோழியும் பாடினாள்.

பாடினி-1 :அவன் ஏன் கேட்க வேண்டும் ?

ஒளவை :பேசாத தலைவியின் காதல் வேட்கையை ஆடவன் நெஞ்சம் அறிய மட்டுமன்று.. செயலற்று நிற்கும் அவனுக்குத் திருமணக் கடமையை நினைவு படுத்தவும் பாடினாள்.

அகவன் மகளே ‘ அகவன் மகளே ‘

இன்னும் பாடுக பாட்டே ‘

அவர் நல் நெடுங்குன்றம் பாடிய பாட்டே ‘

(பாடலும் நாட்டியமும் தொடர்கின்றன…)

நெல்லுமணி தூவி நிறைஞ்ச குறி சொல்லுவேன்…

மல்லிகை மலர் வீசி மணந்த குறி சொல்லுவேன்…

(நெல்லுமணி)

நாள்தோறும் பூப் பூக்கும் நல்ல மலை நாட்டில்

நாளில் ஒரு பூவாக நீ மலரவில்லை ‘

திங்கள் ஒரு பூவாக குன்றில் ஒளிவீசும்

திங்கள் ஒரு பூவாக நீ பூத்ததில்லை ‘

பன்னிரண்டு ஆண்டில் ஒரு குறிஞ்சி பூத்ததுபோல்

பலவாண்டு தவமிருந்து பெற்ற ஒரு பூவே ‘

(நெல்லுமணி)

வானில் உள்ள மீனில் ஒரு மீன் வேண்டும் என்றால்

வில் வளைப்பான் உன் தந்தை

வீணில் அழவேண்டாம்

உச்சிமலைத் தேனில் ஒரு துளி வேண்டும் என்றால்

உடும்புபோல் அவன் ஊர்வான்

குடம் குடமாய்த் தேன் வார்ப்பான் ‘

(நெல்லுமணி)

பிறைபோன்ற நெற்றியிலும் பசலை படர்ந்திடுமோ ?

பேசுங்கிளி வாய்மூடி ஊமையாகிவிடுமோ ?

இந்த மலை உன் தந்தை சொந்தமலை அன்றோ ?

எதிர்த்த மலை உன் அன்னை உதித்தமலை அன்றோ ?

எந்த மலைப் பூமணத்தில் நீ மயங்கிப் போனாய் ?

எந்த வில்லின் நாணதிர்ந்து நீ விழுந்தாய் மானாய் ?

மாலவன்போல் முகிழ் தவழும் கோலமலையா சொல் ?

வண்டுகள் யாழ் மீட்டுகிற நீலமலையா சொல் ?

கொற்றவை கண்விழித்ததுபோல் நெருப்பு மலர் பூக்கும்

கொடிவள்ளி படர ஒரு முருகவேள் தோள் நோக்கும்,

அந்த மலையா ? இல்லை அடுத்தமலையா சொல்… ‘

பாடினி-2 :அகவன் மகளே ‘ அகவன் மகளே ‘

மணி கோத்ததுபோல் கரு நெடுங்கூந்தல்

அகவன் மகளே ‘அதையே பாடுக…

அந்தக் குன்றின் அழகைப் பாடுக ‘

இன்னும் பாடுக பாட்டே அந்த

நன்னெடும் குன்றம் பாடிய பாட்டே ‘

பாணர்கள்:குன்றுகள் ஏறிச் சமவெளி பாவும்

முகில்களோடு நாங்களும் நடந்தோம்…

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்

பாலை எங்கும் பாடித் தெரிந்தோம்.

Series Navigation

இன்குலாப் (ஒளவை ‘ யிலிருந்து)