சகீனாவின் வளையல்கள்

This entry is part [part not set] of 16 in the series 20011104_Issue

ஜாஹீரா சையது


(லெமார்-அஃப்தாப் என்ற ஆஃப்கானிஸ்தானிய இலக்கிய இதழிலிருந்து)

எனக்கு வயது பத்தாக இருந்தபோது, எனக்கு சகீனா என்ற ஒரு தோழி இருந்தாள். அவளுக்கும் அதே வயது. அப்போது நாங்கள் நண்பர்களாக இருந்தகாலத்தில், எங்கள் வீட்டில் 6 சிறுமிகள் இருந்தார்கள். என்னுடைய இரண்டு தம்பிகள் இன்னும் பிறக்கவில்லை. அவளது வீட்டில் இருந்த ஏழு சகோதரர்களுக்கு அவள் ஒருத்தியே தங்கை. எல்லோரும் வளர்ந்து கல்யாணமும் செய்து கொண்டுவிட்டார்கள். சகீனா எங்களுக்கு அடுத்த வீட்டில் வாழ்ந்து வந்தாள். அவளது தகப்பனார் மிகவும் கண்டிப்பானவர். அவளை வீட்டுக்கு வெளியே அதிக நேரம் விளையாட அனுமதிக்கமாட்டார். அவள் தன்னுடைய வீட்டு வேலைகளை முடித்த பின்னால், அவளுடைய அப்பா தூங்கிக்கொண்டிருக்கும்போது, அவளுடைய அம்மா அவளை எங்களது வீட்டு பின்கட்டுக்கு யாருக்கும் தெரியாமல் அனுப்பி வைப்பாள்.

எங்கள் வீட்டுக்கும் அவளது வீட்டுக்கும் இடையே காய்ந்து போன ஓடை ஒன்று இருந்தது. அதில் வருடத்துக்கு இரண்டு முறைதான் தண்ணீர் இருக்கும். அப்போதும் தண்ணீர் மேலாகத்தான் இருக்கும்.

ஓடைக்கருகில் இருந்த சகீனாவின் வீட்டுச்சுவரில் ஒரு சின்ன ஓட்டை இருந்தது. அதில் சகீனாவால் தவழ்ந்து வெளியே வந்துவிட முடியும். என்னுடைய அக்கா இதைக் கண்டுபிடித்து சகீனாவிடம் சொன்னாள். சகீனாவின் அப்பாவின் குறட்டை சத்தம் கேட்கும்போது, அவள் இந்த ஓட்டை வழியாக வெளியே வந்து எங்களுடன் விளையாடுவாள்.

என்னுடைய அப்பா அடிக்கடி வியாபார விஷயமாக வெளியூர் சென்றுவிடுவார். அவர் எங்களுடன் இல்லாத காலங்களைச் சரிக்கட்ட, அவரது ஒவ்வொரு மகளுக்கும் பை நிறைய பொம்மைகளை வாங்கி வருவார். எங்கள் வீட்டின் பின்புறம் சிறிய விளையாட்டு மைதானம் கூட கட்டி வைத்திருந்தார். அவர் வாங்கி வந்த விளையாட்டுச் சாமான்களை அங்கு போட்டு நிரப்பி வைத்திருந்தோம். சிறிய, பளபளக்கும் சமையல் விளையாட்டுப் சாமான்கள், பொம்மையின் உதடுக்கு ஏற்ற அளவில் சிறிய அழகான கோப்பைகள், மரப்பாச்சி பொம்மைகள் எல்லாம் இருந்தன. எங்களது விளையாட்டு நாங்கள் கொடுக்கும் pretend விருந்துக்கு இலைகளையும், பழங்களையும், புற்களையும், அழுக்குச்சாமான்களையும் பொறுக்குவதுதான். எங்கள் பொம்மைகளை எங்களது குழந்தைகள் போலப் பார்த்துக்கொண்டு எங்கள் அம்மாக்களை சிறப்பாகக் காப்பி அடித்தோம். எங்கள் ஏழு பேரோடு எங்களது ஒரு நாள் எங்களது உலகத்தில் நன்றாகப் போகும். சகீனாவின் அப்பாவின் இருமல் சத்தம் மட்டுமே எங்களது உலகத்துக்குள் வந்து எங்களைக் கலைக்கும். அவர் தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டார் என்பதையும் உடனே தன் மகளைத் தேட ஆரம்பித்துவிடுவார் என்பதையும் எங்களுக்கு எச்சரிக்கை செய்யும்.

சகீனாவின் கைகளிலும் கால்களிலும் அழகான வளையல்களும் தண்டைகளும் நிரம்பிக் கிடந்தன. என்னுடைய சகோதரிகளும் நானும் அவளது வளையல்களின் மீது மிகவும் ஆசையாக இருந்தோம். எங்களது வீட்டில் சத்தம் வரும் எதையும் நாங்கள் போட்டுக்கொள்ளக்கூடாது. எங்களது அப்பா இருக்கும்போது, நாங்கள் பாடுவதோ அல்லது சும்மா ஹம்மிங் செய்வதோ கூட கூடாது. ஆகவே நாங்கள் ஆறுபேரும், எங்களுக்கு அனுமதி கிடைக்காத, அவளது சங்கீதச் சொத்துக்களால் கவரப்பட்டோம். அவளைப்போல இருப்பதற்காக, நாங்கள் கொடிகளை எங்கள் கைகளிலும் கால்களிலும் சுற்றிக்கொள்வோம். எங்களது பொய் உலகத்திலாவது சகீனாவைப் போல வளையல்களும் தண்டைகளும் போட முடிந்தது.

எதிர்பாராமல் எங்களது பெற்றோர் வெளியூருக்குச் செல்ல வேண்டிவந்ததால், நாங்கள் ஒரு நாள் இரவு சகீனாவின் வீட்டில் தூங்கும்படி ஆயிற்று.

எங்களது பாட்டி வரும்வரைக்கும், என்னையும் என் சகோதரிகளையும் பார்த்துக்கொள்வதாக சகீனாவின் அம்மா ஒப்புக்கொண்டார். அது இரண்டு நாள்தான். முதலாம் நாள் இரவு, சகீனா தன் வளையல்களையும் தண்டைகளையும் கழற்றி விட்டாள். எல்லோரும் தூங்கி விட்டதால், என்னால் அவளது வளையல்களையும் தண்டைகளையும் போட்டுப்பார்க்க வந்த ஆசையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் அவளருகில் ஊர்ந்து சென்று தூங்கிக்கொண்டிருக்கும் அவளது காதில் கிசுகிசுத்தேன். ‘சகீனா ? சகீனா ? நான் இந்த வளையல்களைப் போட்டுக்கொள்ளவா ? சகீனா ? கொஞ்ச நேரம் மட்டும் போட்டுக்கொள்கிறேன் ‘ அவள் அதற்கு பதில் சொல்லவில்லை. அதற்கு நான் அரைகுறை மனத்தோடு அவளை எழுப்ப முயன்றதுதான் காரணம். ஒருவேளை முடியாது என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது ?

என்னுடைய மனசாட்சியின் படி, நான் அவளிடம் கேட்க முயன்றுவிட்டேன். ஆகவே நான் அவளது வளையல்களைப் போட்டால் குற்றமனது எனக்கு இருக்காது.

ஒரு மூலைக்கு ஓடிப்போய், அவளது வளையல்களையும் தண்டைகளையும் போட்டேன். என்னுடைய தோலில் அழகாக அவை இருந்தன. என்ன எடை! நான் என்ன செய்தாலும் அவை ஜிலிங் ஜிலிங் என ஒலியெழுப்பியதால், அந்த எடையை என்னால் பொறுத்துக்கொள்ள முடிந்தது.

‘சிங்! சிங்! சிங்! ‘ என்னுடைய கைகளை வீசிக்கொண்டே நான், தூங்கும் என் சகோதரிகளின் அருகே சென்றேன்.

‘சிங்! சிங்! சிங்! ‘ என் கைகளை வீசியபடி நடப்பது என்னை முக்கியமானவளாகவும், பெரியவளாகவும் என்னை உணர்த்தியது. பின் கட்டு கதவின் பக்கமிருந்து கொண்டு முன்னும் பின்னும் நடந்தேன். என் கால்களை தட்டென்று ஊன்றி என் கால் சதங்கைகளின் ஒலியை சந்தோஷத்துடன் கேட்டேன். ஒலிக்கும் வளையல்கள் குளிர்ச்சியாக என் தோலில் உரசுவதை சந்தோஷத்துடன் உணர்ந்தேன்.

‘சிங்! சிங்! சிங்! ‘ என்னுடைய சந்தோஷ சங்கீத உருவாக்கத்தில் நான் நிறையத் தண்ணீர் குடித்துவிட்டேன் என்பதையும், அதற்கான விளைவை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தேன். வீட்டுக்கு வெளியே செல்வது எனக்கு மிகுந்த பயம். ஆனால் நான் செய்த சிறிய குற்றத்தால், யாரையும் எழுப்ப முடியவில்லை.

என் வலிமையையெல்லாம் துணைக்கழைத்துக்கொண்டு நான் பின் கட்டு கதவைத் திறந்து தனியே வெளியே வந்தேன்.

‘சிங்! சிங்! சிங்! ‘ சகீனாவின் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் மரங்களில் தொங்கிக்கொண்டிருக்கும் பேயையும், விட்டுப்பின்புறத்தில் நடமாடிக்கொண்டிருக்கும் பேயையும் சத்தம் போட்டு துரத்தி விட வளையலை வேகமாக ஆட்டினேன்.

‘சிங்! சிங்! சிங்! ‘ சத்தம் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்ததில், வீட்டுக்குப் பின்னால் இருக்கும் கழிப்பறைக்கு, நான் தனியாக முழு இருட்டில் நடந்து போய்க்கொண்டிருப்பதையே மறந்துவிட்டேன்.

‘சிங்! சிங்! சிங் ‘ இறுதியாக என்னால் சகீனாவைப் போலவே எனது அசைவுகளில் தோன்றும் இசையை அனுபவிக்கத் தொடங்கினேன்.

‘சிங்! சிங்! சிங்! ‘ அவளது அப்பாவின் சத்தம் கேட்டதும் ஏன் சகீனா இந்த அழகான ஓசையை அடக்கினாள் ? சில நேரங்களில் அவளது வீட்டின் அருகே இருக்கும் ஓட்டையில் இந்த வளையல்களை ஏன் போட்டாள் ?

‘சிங்! சிங்! சிங்! ‘ அவளுக்கு இவைகளோடு விளையாட பிடிக்க வில்லையா ?

‘சிங்! சிங்! சிங்! ‘ இவைகளை உடைத்துவிடுவோம் என்று நினைத்தாளா ?

‘சிங்! சிங்! சிங்! ‘ திடாரென்று கும்மென்ற அமைதியில் மூன்று துப்பாக்கி குண்டுகள் காதைத் துளைத்து வெடித்தன. ஆகாயமே மூன்றாக உடைந்துவிட்டது போன்ற சத்தம். நான் தடுமாறி தரையில் விழுந்து, அங்கேயே என்னையே ஈரப்படுத்திவிட்டேன்.

சகீனாவின் அப்பா கூரையிலிருந்து பஷ்தோ மொழியில் கத்தினார். ‘சகீனா எங்கே தனியாகப் போகிறாய் ? இப்பவே வீட்டுக்குள் போ! ஏன் அம்மா உன்னுடன் இல்லை ? ‘

துப்பாக்கி வெடித்ததில் முழு வீடே எழுந்து கொண்டுவிட்டது. என் சகோதரிகள், சகீனா, சகீனாவின் அம்மா, அப்புறம் சகீனாவின் அப்பா எல்லோருக்கும் நான் செய்த குற்றம் தெரிந்து போய் எனக்கு அவமானமே கிட்டுமென்று ஒரே வெட்கமாகிவிட்டது. இறுதியில், என் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, தாரி மொழியில் ‘மாமா, நான் ஷிரீன் குல். நான் யாரையும் எழுப்ப விரும்பவில்லை. ஒரு அவசரம் வந்துவிட்டது ‘ என்றேன்.

‘ஷிரீன் குல் ? ‘ என்று குழம்பிப் போய் சகீனாவின் அப்பா கேட்டார். ‘அட மன்னிக்கணும் பெண்ணே. நீ சகீனா மாதிரி சத்தம் போட்டாய். இருட்டில் தனியே வெளியே போகக்கூடாதென்று சகீனாவுக்கு கட்டளை போட்டிருப்பதால் எனக்குக் கோபம் வந்துவிட்டது. உன்னுடன் கூட வர, உன் அக்கா யாரையாவது எழுப்பி இருக்க வேண்டும் ‘

சகீனாவும் அவளது அம்மாவுமே முதலில் சிரிக்க ஆரம்பித்தார்கள். ஏனெனில் அவர்களே என் பயப்பீதியடைந்த முகத்தைப் பார்த்தார்கள். விரைவில் என் குழம்பிய அக்காள்களும் சிரிக்க ஆரம்பித்தார்கள். என்னுடைய மூத்த அக்காள் எனக்காக வெட்கப்பட்டாள் என்று நினைக்கிறேன். இந்த சிரிப்புக்கிடையில் நான் நகரவே விரும்பவில்லை. அந்த சிரிப்போடு இன்னும் அதிக சிரிப்பை சேர்க்க விரும்பவில்லை. தரையில் இருந்த ஈரம் என்னுடைய பாவாடையால் மறைக்கப்பட்டிருந்தது.

நான் அங்கிருந்த படியே என்னுடைய முகத்தை மூடி என் விரல்களுக்கு இடையே பார்த்தேன்.

ஏன் சகீனா தன் வளையல்களை அடக்கி வாசித்தாள் என்பதையும் அவள் ஏன் அவைகளை ஒளித்து வைத்தாள் என்ற மர்மத்தின் பின்னணியையும் அந்த இரவு அறிந்தேன். அவள் தன்னுடைய வளையல்களை அணிந்திருந்த போதெல்லாம், அவளது அப்பாவால் அவள் எங்கிருக்கிறாள் என்று கண்டுபிடிக்க முடியும். அவளது வளையல்கள் அவளது அம்மாவின் வளையல்களை விட வித்தியாசமாக சத்தம் போட்டன.

என் பாட்டி எங்களை சகீனாவின் வீட்டிலிருந்து பெற்றுக்கொள்ளும்போது, அவளிடம் முழுக்கதையும் சொல்லப்பட்டது. பொதுவாக அமைதியாக இருக்கும் என் பாட்டி கண்ணிலிருந்து தண்ணீர் வரும்வரை சிரித்தாள். என் பாட்டி என்னை வந்து தூக்கும் வரை, வெட்கத்தால், நான் சகீனாவின் அலங்கார மேஜைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டேன். என்னுடைய நல்ல அதிர்ஷ்டம், அவளது வளையல்களை அணிந்ததை பொருட்படுத்தாமல் என்னை மன்னித்ததுதான். கேட்டிருந்தால் அவளே தன் வளையல்களை என் கையில் போட்டிருப்பாள் என்று சொன்னதுதான் உண்மை. அவளே என் மிக நெருங்கிய சினேகிதி. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அவள் இன்னும் நெருங்கிய சினேகிதியானாள்.

வீட்டில், என் பாட்டி என்னை கொஞ்சம் திட்டிவிட்டு, என்னை காய்கறி வாங்க சந்தைக்கு அழைத்துப் போனாள். குற்றத்துக்கு தண்டனையாக காய்கறிகளை வீட்டுக்கு தூக்கிக்கொண்டு வரவேண்டும் என்று சொன்னாள். நான் சந்தைக்குச் சென்றபோது காய்கறிக் கடைகள் பக்கம் போகவில்லை. பதிலாக வளையல்களையும், தண்டைகளையும் விற்றுக்கொண்டிருந்த ஒருவரிடம் நேராக அழைத்துப் போனாள். சந்தோஷ அதிர்ச்சியில் பேச வராமல், நான் என் கைகளெல்லாம் வளையல்களை அடுக்கிக்கொண்டு பாட்டியின் கைகளுக்கு முத்தம் கொடுத்தேன்.

அவளுக்கும் சந்தோஷமாக இருந்தது. என் சகோதரிகளுக்கும் ஒவ்வொரு கொத்து வளையல்களை எடுத்துக்கொண்டாள். வீட்டுக்கு வந்ததும் எல்லாவற்றையும் பகிர்ந்தளித்தோம். என்னுடைய சகோதரிகளுக்கும் சந்தோஷமாகி ஒரேயடியாக குதித்துக்கொண்டிருந்தோம். வீட்டின் ஒவ்வொரு அறையிலும் சென்று சிலிங் சிலிங் என்று வளையல்களை ஆட்டி ஆட்டி சந்தோஷப்பட்டோம். சகீனாவின் வீட்டின் சுவர்களை தட்டி அவளை அழைத்து எங்களது வளையல்களைக் காண்பித்து அழைத்தோம். இந்த வளையல் சத்தத்தில், அவளது அப்பாவுக்கு சகீனாவின் வளையல் சத்தம் கேட்காததால், சகீனாவும் தன் வளையல்களை அவிழ்க்காமல் எங்கள் வீட்டுக்கு வந்தாள். எங்களது வீட்டின் பின்புறமிருந்த வந்த சத்தத்தால் தான், அவருக்கு சகீனா வீட்டு வேலைகளைப் பண்ணாமல் எங்களோடு விளையாடிக்கொண்டிருக்கிறாள் என்று கண்டுபிடிக்க முடிந்தது.

எங்களது அப்பாவும் அம்மாவும் வரும் வரைக்கும்தான் இந்த சந்தோஷம் நீடிக்கும் என்று எனக்கும் என் அக்காள்களுக்கும் தெரியும். எங்களது வளையல் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும்போதே திடுமென்று அவர்கள் வந்து நின்றார்கள். முதலில் என் அப்பா மிகவும் கோபமாகி அவரது சங்கீத சந்தோஷம் கொண்டாடும் மகள்களை, உடைந்த வளையல்களும் குவிக்கப்பட்ட சோகமான பெண்களுமாக ஆக்க புறங்கையை ஓங்கிக்கொண்டு வந்தார். நாங்கள் வசமாக பிடிக்கப்பட்டுவிட்டோம். எங்களுக்கு அவரது கோபத்தைப் பார்த்து மிகவும் பயமாகி விட்டது. ஆனால், பாட்டி அவளது கைத்தடியை நீட்டி எங்களை காப்பாற்றினாள். பிறகு அமைதியாக, சாதாரணமாக சகீனா வீட்டில் என்ன நடந்தது என்று அவரிடம் சொன்னாள். சகீனாவின் அப்பாவுக்கு பயந்து நான் ஈரப்படுத்திவிட்ட விஷயத்தையும் மறைக்காமல் சொல்லி என்னை வெட்கப்படுத்தி விட்டாள். எப்படியோ, அவளது கதை, அவரது கோபத்தை ஆவியாக்கி விட்டது. என் பெற்றோர் புன்னகைத்தனர்.

இந்த வளையல்களை அணிந்துகொள்ள என் அப்பா அனுமதிகொடுத்தார். இந்த சத்தத்தை கேட்டு பிறகு கோபிக்கவும் இல்லை. ஆனால், இந்த கண்ணாடி வளையல்கள் (என் பாட்டி தங்க வளையல்கள் வாங்க வில்லை) உடைந்ததும் அவர் மறுபடி வளையல்கள் வாங்கித்தரமாட்டார் என்பதும் எங்களுக்குத் தெரியும்.

வருடங்கள் கடந்தன. சகீனாவும் நானும் நெருங்கிய சினேகிதிகளாக நீடித்தோம். என்னுடைய திருமணத்தின் முந்திய நாளன்று, என்னுடைய கைக்கு மருதாணி தீட்டிக்கொண்டிருந்த பெண்களிடமும் சிறுமிகளிடமும் வளையல்கள் கதையைச் சொன்னாள். நான் ஞாபகம் வைத்திருந்ததை விட அழகாகவே அந்தக்கதையைச் சொன்னாள். என்னுடைய முகத்தை பட்டாடையால் மூடிக்கொண்டாலும், எல்லோரையும் போல நானும் அந்தக்கதையை ரசித்தேன். எப்படியோ என் கணவரும் இந்தக் கதையை தெரிந்து கொண்டார். ஒருவேளை அவரது தங்கை இந்தக்கதையை சொல்லியிருக்கலாம். தேனிலவின் இரண்டாம் நாளன்று இரண்டு தங்க வளையல்களையும், கை வேலை நிரம்பிய தங்கத் தண்டைகளையும் எனக்குப் பரிசளித்தார். நான் அந்த பரிசால் மிகவும் மகிழ்ந்தேன். என்னுடைய கைகள் முழுவதும் தங்க வளையல்கள் போட்டு அழகு பார்க்க விரும்புவதாக அவர் என்னிடம் சொன்னார். சகீனாவின் அப்பாவிடம் கற்ற பாடத்தின் மூலம் இந்த பரிசுகள் வந்தன என்று எனக்கு இன்று தோன்றுகிறது!

***

Series Navigation

ஜாஹீரா சையது

ஜாஹீரா சையது