சேவல் கூவிய நாட்கள் – 7 – குறுநாவல்

This entry is part [part not set] of 26 in the series 20011015_Issue

வ ஐ ச ஜெயபாலன்


7

அம்மா அதிகம் படித்ததும் திருமணம்வரை பிரபலமான ஆங்கில ஆசிரியராக இருந்ததும் அப்பாவுவை அவமானப் படுத்தித் தலைகுனிய வைக்கும் ஒரு விடயமாக இருந்தது. அதற்காக அம்மாவை மன்னிக்க அவர் ஒருபோதும் தயாராக இருக்கவில்லை. திருமணமான கையோடே அப்பா தன்னை அடித்து உதைத்து தனது ஆங்கில ஆசிரியர் வேலைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக சொல்லி அம்மா அடிக்கடி புலம்புவாள். அப்பாவோ ‘ நான் மானமுள்ள தமிழனடி ‘ என்பார். தமிழ் கலாசாரத்தை அழிய விடுகிறவன் தமிழன் இல்லை ‘ என்பது அவரது உறுதியான கருத்தாக இருந்தது. உண்மையான தமிழன் ஒரு போதும் பொம்பிளையை வேலைக்கு அனுப்பி அவர்களது உழைப்பில சீவிக்க மாட்டானாம். இந்தத் தருணங்களில் அம்மா ஒன்றும் பேசாமல் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனையாக இருக்கும். ஆனால் அம்மா கடைசியாக தனது வாயைத் திறந்து விடுவாள். ‘அப்ப நாங்கள் பொம்பிளையள் எல்லாரும் சிங்களவரா ‘ என பதில் சொல்ல முடியாத கேள்விகளால் அப்பவை மடக்கி அவரை வன்முறைக்குத் தூண்டுவாள்.

பெண்கள் வேலை செய்வது தமிழ்க் கலாச்சாரத்துக்கு மாறானது என்பது அப்பாவின் உண்மையான கருத்தாக இருந்தது என்று சொல்ல முடியாது. அம்மாவைத் தவிர வேறு படித்த பெண்களைக் கண்டால் அப்பா எப்படி வழிவார் என்பது எனக்குத் தெரியும். கல்வி கற்று வேலை செய்யும் பெண்களை பாரதி கண்ட புதுமைப் பெண் என்று வர்ணித்து எக்கச் சக்கமாகப் புகழ்ந்து பாராட்டுவார். தேடித் தேடிப்போய் உதவிகள் செய்வார் அதனால் பல படித்த பெண்களுக்கும் அப்பாவைப் பிடித்திருந்தது. அம்மா படித்தது மட்டும்தான் அப்பாவுக்கு பிடிக்கவில்லை என்கிறதை எண்ணுகிறபோது எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வரும்.

அப்பா நல்ல அறிவாளி. ஆரோக்கியமானவர். ஆங்கிலம் படிக்கவில்லையே என்கிற கவலை மட்டும்தான் அவருக்கிருந்த ஒரே ஒரு நோய் எனப் படுகிறது. பள்ளிப் பராயத்தில் கொஞ்சம் ஆங்கிலம் படிக்க மட்டும் வசதி கிட்டியிருந்தால் அவரது வாழ்வே மாறிப்போயிருக்கும். இளமையில் அவர் மலாயாவுக்கோ சிங்கப்பூருக்கோ வேலைதேடிப் போக விரும்பி இருந்தாராம். ஆங்கிலம் எழுத வாசிக்கத் தெரிந்த பல யாழ்ப்பாணத்து ஏழை இளைஞர்கள் மலேசியா சிங்கப்பூரென சென்று போஸ்மாஸ்டராகவோ, புகையிரத நிலைய ஸ்ரேசன் மாஸ்டராகவோமாறிக் கை நிறையச் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தார்கள். ‘ஊரில வாழ வக்கில்லாததுகள் எல்லாம் பீத்தல் கால்சட்டை சேட்டுகளைப் போட்டுக் கொண்டு பஞ்சம் பிழைக்கப் பரதேசம் போகுதுகள் ‘ என்ற நிலம் புலம் உள்ள பெரிய குடுபத்தவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் மத்தியில் ‘சென்றே தீருவோம் வென்றே தீருவோம் ‘ என கப்பல் ஏறிய அந்த ஏழை இளைஞர்கள் எல்லாம் மலேசியாவில் இருந்தும் சிங்கப்பூரில் இருந்தும் காசுக் கட்டுகளோடு திரும்பி வந்தார்கள். ஆனால் முதலாம் உலக யுத்தம் முடிந்து இரண்டாம் உலக யுத்தம் கருக்கொண்டு வளர்கிற அந்தச் சூளலில் பணம் வற்றி பெரிய குடும்பங்கள் எல்லாம் வரண்டு போயிருந்தன. சுத்தமான யாழ்ப்பாணத்து வெள்ளாளன் பட்டினி கிடந்து செத்தாலும் சாவானே தவிர பரம்பரைக் காணியை விற்கமாட்டான் என வீராப்புப் பேசிக் கொண்டிருந்தவர்கள் இரகசியமாக யார் யார் எவ்வளவு பணத்தோடு திரும்பி வந்திருக்கிறார்கள் என விசாரித்தார்கள். திரும்பிவந்தவர்கள் அதுவரை சந்தைக்கு வந்திராத பெரிய குடும்பங்களின் காணிபூமிகளை எல்லாம் அடி மாட்டு விலைக்கு வாங்கிக் குவித்தது எல்லோரையுமே திடுக்குற வைத்தார்கள். அதுவரை அயல் ஊரில் திருமனம் பேசி வந்தாலே ‘ஐயோ அந்த ஊர் இங்கிருந்து ஐஞ்சு ஆறு மைல் தூரம் இருக்குமே அவ்வளவு தூரத்தில மாப்பிளை எடுக்கமாட்டோம் எனக் கூறி பெண்கொடுக்க மறுத்து வந்த யாழ்ப்பாணத்துத் தாய்தந்தையர்கள் மலேசியா சிங்கப்பூரில் வேலைபார்க்கும் மாப்பிள்ளைகளுக்கு உறவுமுறை, வயது, சாத்திரம், சம்பிரதாயங்கள் ஒன்றும் பார்க்காமல் தங்கள் சின்னப் பெண்களைக் கட்டிக் கொடுத்து விருந்து கொண்டாடி கப்பலில் ஏற்றி அந்தக் கண்காணாத் தேசாந்தரத்துக்கு அனுப்பிவிடத் தயாராக இருந்தார்கள். அப்பாவால் மலேசியக் கனவுகளில் அதிகநாள் மிதக்க முடியவில்லை. மலேசியாவுக்கு அப்பாவை அழைத்துச் செல்ல உறவினர் ஒருவர் தயாராக இருந்தபோதும் ஆங்கிலம் அவரது கால்களை வாரி விட்டது.

அந்தநாட்களில் அப்பாவின் மாமன் ஒருத்தர் கிராம அதிகாரியாக வேலை பார்த்துக்கொண்டு ஓரளவு காணி பூமியென ஊருக்குள் வசதியாக இருந்தாராம். அவருக்கு ஒரே ஒரு பெண்பிள்ளை. எலுமிச்சம் பழ நிறத்தில் இருந்த அவளை ஊரில் எல்லோரும் வெள்ளைச்சி என்றுதான் அழைப்பார்கள். யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் பொதுவாக கறுப்பாகவோ கபில நிறமாகவோ இருந்ததால் வெளிர் நிறத் தோலையே அவர்கள் அழகு என கொண்டாடினார்கள். இதைவிட வெள்ளைச்சி பட்டினத்துப் பள்ளிக்கூடத்தில் படித்தவள். அவளுக்கு ஆங்கிலம் எழுத வாசிக்கத் தெரிந்திருந்தது. அப்போதெல்லாம் மச்சான் மச்சாள் முறைபார்த்துத்தான் திருமணம் செய்வார்கள். முறைதவறிக் கல்யானம் செய்தவர்களை ஊரில் யாரும் மதிக்க மாட்டார்கள். முறைப் பெண்ணைத் திருமணம் செய்வதுதான் தமிழ்க் கலாச்சாரம் என எல்லொருமே சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் மலேசியா சிங்கப்பூரில் இருந்து வந்த பணம் சிதறடித்து விட்டது.

அப்பா வீட்டிலும் வெள்ளைச்சி வீட்டிலும் ஒரே சலைவைத் தொழிலாளிதான் துணி எடுக்கப் போய் வந்து கொண்டிருந்தானாம். அவன் மூலம்தான் அப்பா தனது இருப்பையும் விருப்பையும் வெள்ளைச்சிக்கு அவ்வப்போது உணர்த்திக் கொண்டிருந்தார். அப்பா மலேசியா செல்வதற்க்கு முயன்று கொண்டிருந்தபோது வெள்ளைச்சியும் அடிக்கடி அவனிடம் அப்பாவைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தாளாம். அப்பாவுக்கு மலேசியா போக வாய்ப்பில்லை என்பது உறுதியான போது வெள்ளைச்சி அப்பாவை காய் வெட்டி விட்டாள் என மணியம் மாமமா சொல்லியிருந்தார். ‘மச்சானை எட்டாப் பழத்துக்குக் கொட்டாவி விடாமல் எட்டக்கூடிய பழமாய் பார்க்கச் சொல்லுங்கள் ‘ என வெள்ளைச்சி சொல்லி அனுப்பிய போது அப்பா இடிந்துபோனாராம். முறைப் பெண்ணான வெள்ளைச்சியை மலேசியாவில் இருந்து கை நிறையக் காசோடு வெளியூரைச் சேர்ந்த அன்னியன் ஒருவன் கொத்திக் கொண்டு போனபோது அப்பாவுக்கு வாழும் ஆசையே நொருங்கிப் போனதாம். அந்த நாட்களில் அப்பாவுக்கிருந்த ஒரே ஆறுதல் மணியம் மாமாதான். பாட்டி இரகசியமாக மணியம் மாமாவை அழைத்து ‘கொஞ்சநாளுக்கு என்ர மகனுக்கு கண் இமையாய் இரு ‘ என மன்றாடினாளாம். சூள் வெளிச்சத்தில் கடற்க் கரையோரத்தில் மீன் கொத்துவது, களவாகப் பனை ஏறிக் கள்ளுக் குடிப்பது, பற்றைக் காடுகளில் காடை கெளதாரி பிடித்து புல்வெளியில் வைத்துச் சுட்டுத் தின்னுவது, வல்லை வெளிக்குப் போய் குதிரைகளை விரட்டிப் பிடிக்கிற வீர விழையாட்டில் மகிழ்வது என மணியம் மாமா எப்போதும் அப்பாவுக்குப் பராக்குக் காட்டிக் கொண்டிருந்தாராம். வெள்ளைச்சி வெட்டி விட்டதுதான் அப்பாவுக்குள் எப்போதும் புதைந்து கிடந்த இனம்தெரியாத விரக்தியின் காரணமாக இருக்க வேண்டும். ‘வெள்ளைச்சி வெட்டுவாள் என்று தெரிந்திருந்தால் நானே முந்தியிருப்பன் ‘ என அப்பா ஒருமுறை குடி வெறியில் பக்கத்தில் நான் இருப்பதையே மறந்துபோய் மணியம் மாமாவிடம் சொன்னார். ‘நான் வெட்டியிருந்தால் கவலை ஒண்டும் இருந்திருக்காது. ‘ அதன்பின்னர் தான் அப்பாவுக்கு வெள்ளைச்சியைவிட அதிகம் ஆங்கிலம் படித்த பெரிய இடத்துப் பெண்கள்மீது நாட்டம் ஏற்பட்டிருக்க வேண்டும். இந்த அசுவமேத யாகத்தில் எங்கோ வெகுதொலைவில் கொஞ்சம் ஆண்விரோதப் போக்கோடு ஆங்கில ஆசிரியராக இருந்த அம்மாவையும் அப்பா கைப்பற்றி இருக்கவேண்டும்.

அவ்வப்போது மணியம் மாமாவுக்கு ஐஸ் வைத்து அப்பாவின் இளமைக் காலங்கள் பற்றிய கதைகளை அறிந்து வைத்திருந்தேன். அப்பாவும் மணியம் மாமாவும் உறவினர்கள் மட்டுமல்ல ஒன்றாகவே படித்து ஒன்றாகவே வளர்ந்தவர்கள். ஏழை என்றாலும் மானஸ்தன். மணியம் மாமா ஒருபோதும் அப்பாவிடம் செப்புச் சல்லி கடன் கேட்க மாட்டார் என்று அம்மா பெருமையாகச் சொல்வாள். மணியம் மாமாவும் அம்மாவுக்காக அப்பாவிடம் எப்போதும் பரிந்து பேசுவார். அப்பா படகில் வந்து நெடுந்தீவுத் துறை முகத்தில் இறங்கியதுமே மணியம் மாமா மோப்பம் பிடித்து விடுவார் என்று சொப்ல்வார்கள். ஒருமுறை அப்பாவைக் கண்டதுமே ‘நெடுந்தீவுக்கு வந்தால் மச்சானுக்கு எப்பவும் வெள்ளச்சி நினைப்புத்தான் ‘ என மணியம் மாமா கின்டல் செய்தார். அப்பா அதிர்ந்துபோய் என்னைப் பார்த்தார். ‘வெள்ளைச்சி என்று பனங்கள்ளைச் சொன்னேன் மச்சான் ‘ என மணியம் மாமா சமாளித்தார். நான் எதையுமே கவனிக்காத பாவனையில் பரக்குப் பார்த்துக்கொண்டு நின்றேன். அப்பா அவரை அதற்குமேல் பேசவிடவில்லை. தனது வேலைகளை அப்படியே விட்டு விட்டு ‘வா மச்சான். ‘ என்று மணியம் மாமாவை வரவேற்று வீட்டுக்கு அழைத்து வந்தார். படலை திறக்கும்போதே விருந்துச் சாப்பாடு சமைக்கும்படி அம்மாவுக்குச் உத்தரவு போட்டார். நானும் தங்கையும் அப்பால் போனதும் மணியம் மாமாவும் அப்பாவும் வெள்ளைச்சி பற்றிக் கதைக்கப் போகின்றார்கள் எனத் தோன்றியது. இந்தத் தடவை எப்படியும் ஒட்டுக் கேட்பது என்று தீர்மானித்துக் கொண்டேன்.

இரண்டு கிளாஸ் எடுத்துக் கொண்டுவரவேண்டும் என அப்பா எனக்கு உத்தரவிட்டார். விட்டு விறந்தையில் இருந்து இரண்டு கதிரைகளைத் தூக்கி மணியம் மாவிடம் கொடுத்தபடி ‘வேப்பமரத்துக்குக் கீழே போடு மச்சான் நான் போத்தலை எடுத்துக் கொண்டு வாறன் ‘ என்றார். பின்னர் வீட்டுக்குள்போய் ஒரு கையில் கொழும்பில் இருந்து கொண்டுவந்த விசேட சாராயப் போத்தலையும் மறுகையில் ஒரு தேநீர் மேசையையும் தூக்கிக் கொண்டு தானும் வேப்பமரத்தடிக்குப் போனார். தங்கையும் நானும் ஆளுக்கொரு கிளாசுடன் வீட்டின் பின்புறத்தில் இருந்த வேப்பமரத்தடிக்குப் போனோம். அப்பா கிளாசுகளை வாங்கியபடி ‘நீங்கள் ஓடிப்போய் விழையாடுங்கள் ‘ என எம்மை அதட்டினார். அம்மா என்னை மீண்டும் அழைத்தாள், அதற்குள் அவள் ஐந்தாறு முட்டைகளை அவித்துப் பாதியாக வெட்டி மிழகு தூவி வைத்திருந்தாள். அவித்த முட்டைகளை வெட்டும்போது அவை உடைந்து போக வேண்டுமென எப்போதும் பிரார்த்திப்பேன். முட்டையாகட்டும் பொரித்த மீனாகட்டும் ‘உடைந்தவை எல்லாம் பிள்ளைகளுக்கு உடையாதவை எல்லாம் அப்பாவுக்கும் விருந்தினருக்கும் ‘ என்பதுதான் எங்கள் வீட்டில் எழுதப் படாத சட்டமாக இருந்தது.

அதற்குள் வெண்பூச் சொரியும் வேப்பமர நிழலில் சாராயக் கிளாசும் கையுமாக இருந்தபடி மணியம் மாமாவும் அப்பாவும் தமது இளமை நாட்களை மீண்டும் வாழ ஆரம்பித்து விடுவார்கள்…

Series Navigation