கேட்டால் காதல் என்பீர்கள்…

This entry is part [part not set] of 30 in the series 20010819_Issue

சேவியர்


தொலைபேசியில் கேட்ட குரலால் அதிர்ச்சியின் உச்சத்துக்குத் தள்ளப்பட்டேன்.

அவள் தான் பேசுகிறாள். எப்படியும் இரண்டு மூன்று வருடங்களாவது இருக்கும் அவளோடு பேசி. இருந்தாலும் அந்த ஒரே குரலில் கண்டுபிடிக்குமளவுக்கு அவளுடைய குரல் மனசுக்குள் பதியமிடப்பட்டிருந்தது.

ஏன் இப்போது பேசுகிறாள் ? ஆச்சரியம் ஒருபுறம், கிளர்ந்தெழும்பும் நினைவுகள் ஒருபுறம் …. ஏன் இந்த திடார்த் தேடல் ? புரியவில்லை…

ஹலோ… மறு முனையில் மீண்டும் அவள் குரல்….

‘சொல்லு சந்தியா…. என்னை கிள்ளிப்பார்த்துட்டு இருக்கேன்…. நீ தான் பேசறியா ? என்ன விசேஷம் ? ‘ என்

குரலிலிருந்த உணர்ச்சி என்ன வென்று சத்தியமாகச் சந்தியாவிற்குப் புரிந்திருக்காது. ஏனென்றால் அது எனக்கே புரியவில்லை

‘ சும்மா தான் பேசறேன்…. ‘ – அவளுடைய குரலிலும் சுரத்தில்லை.

முன்பெல்லாம், சும்மாதான் பேசுகிறேன் என்று சொன்னால் ஹிந்தி சும்மா வா , இல்லே தமிழ் சும்மாவா என்று வம்பு பண்ணுவேன்… இப்போதும் தொண்டைவரை சத்தமில்லாமல் அந்த வார்த்தை வந்து தான் போனது ஆனால் கேட்கவில்லை. எப்படிக்கேட்க முடியும் ? ஒருகாலத்தில் அவள் என் காதலி ? அவளை எப்படியெல்லாம் காதலித்தேன்

காதல் என்றால் பிறர் பொறாமைப்படுமளவிற்கு காதலித்திருக்கிறேன். காதலித்தேன் என்று ஒருமையில் சொன்னால், ஒருவேளை அவள் காதலிக்கவில்லையோ என்று நீங்கள் எண்ணி விடுவீர்கள்… எனவே காதலித்தோம் என்று சொல்வதே சரியாக இருக்கும்.

என்னைப்பற்றி சொல்வதென்றால், ஒரு பத்திரிகை அலுவலகத்தில் போட்டோகிராபர் வேலை. போட்டோகிராபர் வேலை என்றதும் இரத்தச் சிவப்புக்கலரில் ஒரு ரோஜா, அதன் மீது காலை விட்டுச்சென்ற சில பனித்துளிகளின் மிச்சம், தூரத்தில் பனித்துளிகளைப் பத்திரப்படுத்த உதித்து வரும் சூரியன் என்றெல்லாம் நீங்கள் கற்பனை பண்ணினீர்கள் என்றால் அதை அப்படியே மறந்துவிடுங்கள். எங்கேயாவது வி.ஐ.பி வீட்டுத் திருமணம், பொதுக்கூட்டம், திறப்புவிழாக்கள் , திருவிழாக்கள் இங்கெல்லாம் சென்று போட்டோ எடுக்கவேண்டும் அது தான் என் வேலை. அதே அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்தவள் தான் சந்தியா. ஒரு தேவதை தரையிறங்கி நடந்தது போல் இருந்தது என்று எழுதுமளவிற்கு அழகாயில்லை அவள். ஆனாலும் அழகுதான். ஒரு மிகச்சிறந்த பேச்சாளனுக்குரிய தெளிவான பேச்சு.எனக்கு அவளைப்பார்த்ததும் பிடித்திருந்தது. குரலுக்குள் சின்னச் சின்ன பச்சைக்கிளிகள் படபடக்கும், அவளுடைய இமைகளில் பட்டாம்பூச்சிகள் மெதுவாக சாமரம் வீசும். இப்படி நிறைய கிறுக்குத்தனமான கிறுக்கல்களுக்கெல்லாம் ஒரு பிள்ளையார்ச்சுழி போட்டு ஆரம்பித்து வைத்ததே அவள் தான்.

அவளோடு முதன் முதலில் பேசிய நிகழ்ச்சி இன்னும் எனக்குள் வினாடி சுத்தமாய் நினைவில் இருக்கிறது. அப்போது தான் முதன் முதலாய்ப் பேசுகிறேன் ஆனால் பத்தாண்டு காலப் பழக்கம் இருந்தது போலத் தான் பேசவே ஆரம்பித்தேன்.

‘ சொல்லு சந்தியா … இங்கே புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கிறதா விருதாச்சலம் சார் சொன்னாரு… எங்கிருந்து வரீங்க ? ‘ என்று ஆரம்பித்து ஒருமணிநேரம் பேசினோம். கலகலப்பாகப் பேசினாள். அவளைவிட அவளுடைய கண்கள் அதிகம் பேசின. அவள் கொஞ்சம் பணக்காரப் பெண். பத்திரிகை ஆசிரியராய்ச் சேரவேண்டும் என்னும் ஒரு குறிக்கோளோடு இருக்கிறாளாம்… அதற்காக முதலில் பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரிய வேண்டுமாம். சினிமா டைரக்ட் பண்ணுபவர்களெல்லாம் அசிஸ்டன்ட் டைரக்டரா சேர்ராங்களே அதுபோல என்று விளக்கம் வேறு.

‘எழுத்து மேல ஆசை உண்டா ?, கவிதை எழுதுவீங்களா ‘ என்று மெதுவாகக் கேட்டேன். எழுத்து மேல ஆசை உண்டு… என் எழுத்து அழகா இருக்கும் ஸ்கூல்ல சிறந்த கையெழுத்துக்காக பரிசு கூட வாங்கியிருக்கேன். நான் சொன்னதை புரியாமல் சொல்கிறாளா, இல்லை என்னைக் கிண்டலடிக்கிறாளா என்று சரியாகப் புரியவில்லை. எனவே முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு ‘ அப்படியா.. அப்போ நீங்க சிறந்த எழுத்தாளராகலாம்…. எந்த எழுத்தாளரைப் பிடிக்கும் உங்களுக்கு ? ‘ – கேட்டுவிட்டு ‘அம்புலிமாமா கதை ‘ என்று சொல்லப்போகிறாள் என்ற பயத்தோடு அவள் முகத்தைப் பார்த்தேன். அதெல்லாம் அப்புறம் பேசலாமே எனக்கு நேரமாகிறது என்று நழுவினாள்.

பிறகு பேசிப் பேசி …. பழகிப் பழகி… அவளைப்பற்றி ஏதோ எழுதுவதைக் கவிதை என்று அவளிடமே தைரியமாகக் கொடுத்து விடுவேன், அவளுக்கு கவிதைகள் பற்றி அவ்வளவாய் தெரியாததால் என்னை கவிஞன் என்றே நினைத்து விட்டாள். முதல் வெற்றி எனக்கு.

என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய் ? மெதுவாகக் கேட்டபோதெல்லாம் .. நல்ல ஒரு நண்பன்… என்பாள். வேண்டுமென்றே நண்பன் என்னும் வார்த்தை மேல் ஒரு தேவையில்லாத அழுத்தம் கொடுப்பதாகத் தோன்றும். வேறென்ன செய்ய முடியும் ஒரு சிரிப்புடன் நகர்ந்து விடுவேன். ஆனால் அவள் மனதிற்குள்ளும் என்னைப்பற்றி ஒரு சின்னதாய் ஒரு காதல் இருந்திருக்கிறது. ஒருமுறை அவளைக்காண அவளுடைய அப்பா ,அம்மா எல்லோரும் வந்திருந்தார்கள். காலையில் ஒன்பது மணிக்கு முன்னால் எழும்பிப் பழக்கப்படாத நான், முதன் முதலாக காலை ஐந்து மணிக்கே குளித்து இருந்ததில் நல்லதாய் ஒரு உடை அணிந்து ரெயில்வேஸ்டேஷன் போனேன். அவளுடைய அம்மாவிடம் சந்தியாவின் தோழன் என்று அறிமுகப்படுத்தி சினிமாவில் ஹீரோ, காதலியின் அம்மாவிடம் நல்லவனாய்க் காண்பிக்க நடிப்பது போல நடித்தேன். வேண்டாமென்று சொன்னபோதும் அவசரமாய் சென்று ஸ்பெஷல் டா வாங்கிக் கொடுத்ததிலிருந்து, ஆட்டோ பிடித்து வீடு கொண்டு சேர்த்தது வரை நன்றாக முடிந்து விட்டது. இரண்டு நாட்களுக்குப் பின் சந்தியா வந்து சொன்னாள்…. அம்மாவிற்கு உங்களை ரொம்ப ரொம்பப் பிடித்திருக்கிறது. அடடா… இவ்வளவு சீக்கிரமாய் இது நடக்குமென்று நினைக்கவில்லையே… இரண்டாவது வெற்றி…. மனசு துள்ளியது.

சில மாதங்களுக்குப் பிறகு, ஒரு மாலைப்பொழுதில் அதே வழக்கமான காதலர்கள் சந்திக்கும் கடற்கரையோரத்தில் அமர்ந்து மெதுவாய் கரம் பற்றினேன்… ‘ என்ன பண்றீங்க ? ‘ என்று பதட்டப்பட்டவளிடம், பயப்படாதே நான் ஒண்ணும் செய்ய மாட்டேன் உன்னுடைய கைரேகை பாக்கறேன் என்றேன். கைரேகை பற்றி எனக்கென்ன தெரியும்… ஒரு தடவை என்னோட கையைப் பார்த்து ஒரு பாட்டி ஏதேதோ பொய் பொய்யா சொல்லியிருக்கிறாள்.. அதை மாதிரி ஏதாவது சொல்லவேண்டியது தான் என்ற எண்ணத்தோடு அவளுடைய கரங்களின் மீது விரலை ஓட்டினேன்.

அடடா… சட்டென்று என் விரல்கள் வழியாக சில வாலிப நரம்புகள் புதிதாய் புலன்கள் பெற்றன. வார்த்தைகள் உள்ளுக்குள்ளே பிறந்து உள்ளுக்குள்ளே மடிந்து, ‘வெறும் காத்து தாங்க வருது ‘ கணக்காக வழிந்தேன்.

சந்தியா…. ஐ லவ் யூ .. சந்தியா…. சொல்லிவிட்டேன்… என்னாலேயே நம்ப முடியவில்லை. சொல்லிவிட்டேன். சொல்லிவிட்டு அவள் முகத்தைப் பார்த்தேன். எப்போதுமில்லாத ஒரு உணர்ச்சி அவள் முகத்தில் படர்வதாகப் பட்டது எனக்கு. சொல்லியிருக்க வேண்டாமோ… தெரியாம சொல்லிட்டேன் – என்று சொல்லலாமோ என்று யோசித்த போது அவளே சொன்னாள்…. நானும் உங்களை லவ் பண்றேனாம்… அம்மா சொன்னாங்க.

என் முகத்தில் கேள்வியின் ஆச்சரியக் குறிகள் !!! அம்மா சொன்னாங்களா ? நீ என்னை லவ் பண்றேன்னு அம்மா சொன்னாங்களா ?

உச்சகட்ட சந்தேகத்தில் கேட்டேன்… அவள் மீண்டும் மெல்ல அழுத்தம் திருத்தமாய் சொன்னாள்.. ஆமாம்… அம்மா இங்கே வந்திருந்தப்போ உங்க கூட நான் பேசினதுல, நான் அம்மா கூட பேசும் போதெல்லாம் உங்களைப்பற்றி பேசறேனே அதுல எல்லாம் காதலோட சாயல் கொஞ்சம் நிறையவே இருக்காம். அம்மா தான் சொன்னாங்க. அப்புறம் நான் என் மனசுக்குள்ளே கேட்டுப் பார்த்தேன் அது உண்மை தானான்னு என்று சொல்லி விட்டு என்னைப் பார்த்தாள்…. ‘ சரி பார்த்தாயா ? என்ன தெரியுது ? காதலோட சாயல் ஏதாவது தெரியுதா இல்லே என் நேசத்தோட நிழல் ஏதாவது தெரியுதா ‘- சொல்லி முடித்த போது சபாஷ்டா நீ நல்லா பேசறே என்று என்னுடைய மனசு எனக்கே ஒரு பாராட்டுப் பத்திரம் வாசித்தது. எனக்கு காதல் தெரிஞ்சதா இல்லையா என்றெல்லாம் தெரியல.. ஆனா நீங்க தெரிஞ்சீங்க… சொல்லிவிட்டு மணலைக் கீறினாள்… அது ஏன் இந்த பெண்கள் வெட்கம் வந்தால் பூமித்தாயை கஷ்டப்படுத்தறாங்களோ என்னவோ…. கை நகத்தால கீறறது, காலால கோலமிடறது… இப்படி ஒரு சின்ன தத்துவம் மனசில எழுந்தாலும், சந்தியா சொன்ன காதல் வார்த்தையால என் மனசே கீறிப் போச்சு.

அப்புறம் என்ன வழக்கம் போல அதே மாலை நேர காதல் பேச்சுக்கள், காலம் காலமா கவிஞர்கள் எழுதி எழுதி கசக்கிப் போட்ட ரோஜாப்பூவையும், நிலவொளியையும் கடன் வாங்கி நானும் கவிதை எழுதி… அதை அவளுக்கு கொடுத்து…

அவளைப்பற்றி நான் எழுதின கவிதைகளுக்கு நானே அவளுக்கு விளக்கம் கொடுத்து…. இப்படியே வளர்ந்து போனது காதல்.

பிறகெல்லாம் விளையாட்டுச் சேட்டைகள் மறைந்து உண்மையான நேசம் நிறையத் துவங்கியது.

எதிர்பார்த்தது போலவே அவள் வீட்டில முழு சம்மதம், எதிர்பாராத விதமாய் என் வீட்டிலும் முழு சம்மதம்.

அட என்ன சந்தியா இது… எதிர்ப்பே இல்லாத காதல் கொஞ்சம் போர் தான், யாரையாவது கொஞ்சம் எதிர்க்கச் சொல்லேன் என்று ஜோக் ( ? ) அடித்து, சிரித்து பேசி.. எதிர்காலத்துக்கு அடுக்கடுக்காய்த் திட்டங்கள் வரைந்து முடித்த போது என் வீட்டாரும் அவள் வீட்டாரும் பேசி திருமண நாளும் முடிவு செய்திருந்தார்கள்.

அதற்குப் பின் தான் பெரிய மாற்ரங்களே நிகழ்ந்தன.

‘கல்யாணம் செய்ய பயமா இருக்கு .. ‘ – திருமணம் முடிவு செய்தபின் ஒரு நாள் சந்தியா மெதுவாய் சொன்னாள்.

ஏதோ வழக்கமாய் திருமணம் என்றதும் பெண்களுக்கு வரும் பயம் என்று தான் நினைத்தேன். ஆனால் அவள் விலகிச் செல்ல ஆரம்பித்தாள்.

என் இதயத்துக்குள் ஏராளம் கேள்விக்கணைகள். இரண்டு மூன்று வாரங்கள் அப்படியே அலைக்கழிக்கப் பட்டேன். ஒரு மிகப் பெரிய வலியின் தாக்கம் என்ன என்பதை அப்போது தான் இதயம் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தது. நிறைய தடவை கேட்டுப் பார்த்தேன். சொல்லவேயில்லை. திருமணம் வேண்டாம் நிறுத்தி விடுங்கள் என்று மட்டுமே சொன்னாள். மாதம் ஒன்று கடந்த பின்பு, எனது பிறந்த நாள் வந்தது அப்போது ஒரு பிறந்த நாள் பரிசோடு என்னை சந்தித்து, நான் உண்மையைச் சொல்லவா ? என்றாள்…

‘சொல்.. ‘ சொல்லாமல் இருப்பதை விட சொல்லிவிடுவதே உசிதம் என்றேன்.

‘கோபப் படக் கூடாது , எல்லாம் உங்கள் நன்மைக்காகத் தான் ‘ என்றாள்…

திருமணம் தடை படுவது என் நன்மைக்கா ? மனசுக்குள் மட்டும் கேள்விகள். இல்லை சொல் என்றேன்….

‘சொக்கலிங்கத்தை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்… ‘ சொல்லி விட்டு இரண்டடி பின்னால் நகர்ந்தாள்.

சொக்கலிங்கமா ? இதயத்துக்குள் தடாலென்று ஒரு இடி….

ஆமா உங்க நண்பன் சொக்கலிங்கம் தான். அவனும் என்னை காதலிச்சானாம்…. என்னை மன்னிச்சுடுங்க….அவன்……

‘ மன்னிச்சுடுங்க.. ‘ – ம்ம்… எவ்வளவு எளிதான வார்த்தை. எனக்கு கால்கள் வலுவில்லாமல் தோன்றியது. நான் இப்படி ஒரு பதிலை நான் எதிர் பார்த்திருக்கவில்லை. மனசை இறுக்கக் கட்டி விட்டு ஒரு சாரி சொல்லி அவிழ்த்து விடக்கூடிய அளவிற்கு தான் அவள் காதலித்தாளா ? ?

அன்று இரவு எப்படி என் வீட்டை அடைந்தேன் என்று இன்று வரை நினைவிலில்லை. எப்போதுமே சிரித்த முகத்துடன் என்னைப்பார்த்துப் பழக்கப் பட்ட அலுவலகம் பிறகு என் சோர்வுக்கான பதிலைத் தேட ஆரம்பித்தது.

சொக்கலிங்கத்தைக் காதலிக்கும் விஷயத்தை அவள் சொன்னதற்கு ஒரே காரணம்.. இனிமேல் அவர்கள் என் முன்னால் ஜோடியாக உலாவலாம் என்பதற்காகத்தான் என்பது எனக்கு இரண்டொரு நாளில் புரிந்து விட்டது. நாம் ஓராண்டு தானே பழகினோம்…. என் மனசை மாற்றிக் கொள்ள எனக்கு உரிமையில்லையா ? ? என்றெல்லாம் ஏராளம் கேள்விகள் அவளிடமிருந்து. பதில் இருவரிடமும் இருந்தது. ஆனால் வேறு வேறு விதமாய்.

சொக்கலிங்கம் யாரையோ ஐந்து வருடம் காதலித்தானாம், அவளை ஏமாற்றி விட்டு சந்தியா பின்னால் சுத்துகிறானாம்… அந்த பெண் விஷம் குடித்து மனநிலை பாதிக்கப்பட்டு, சந்தியாவிடம் அவளுடைய நண்பர்கள் எல்லாம் கெஞ்சினார்களாம்…. சந்தியா புதிய காதலனை விடுவதாக இல்லையாம்… சந்தியாவை நான் காதலிக்கும் முன் யாரோ இக்னி என்பவன் நான்கு வருடம் காதலித்தானாம், அது இவளால் உடைக்கப் பட்டதாம்… வித விதமான கதைகள் கேட்டு இதயம் சோர்ந்த போது வேலையை விட்டு விட்டு வந்துவிட்டேன்.

அதற்குப்பின் என்ன நடந்தது என்றே தெரியவில்லை…. இப்போது தான் பேசுகிறாள்.

‘என்ன யோசிக்கிறீங்க… பேசறது பிடிக்கலயா ? ‘ – வழக்கமான அதே வார்த்தைகள். இதொன்றும் புதிதில்லை எனக்கு .. எனக்கு அவள் தந்த காதல் கடிதங்களையும், சொக்கலிங்கத்திற்குக் கொடுத்த காதல் கடிதங்களையும் பார்த்தால் ஜெராக்ஸ் எடுத்தது போல இருக்கும்.

‘ புடிக்கலேன்னு இல்லே…. சொல்லு என்ன விஷயம் ? .. கல்யாணம் ? ‘ இதைக் கேட்கும் போது மனசு கொஞ்சம் கனத்தது ஆனால் எதையும் நான் வெளிக்காட்டவில்லை.

‘ கல்யாணம் இன்னும் ஆகவில்லை.. ‘ அது எப்போது நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. அதைப்பற்றி இப்போதெல்லாம் நான் கவலைப்படுவதுமில்லை. – சந்தியாவின் பேச்சில் கொஞ்சம் சோகம் இருப்பதாய்ப் பட்டது எனக்கு.

‘ எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது…. ‘ இது நான் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். அந்த கீதாசாரத்தை அப்படியே சொன்னேன்.

‘ நீ எனக்கு போன் பண்ணினது சந்தோஷமா இருக்கு… ‘ அப்பப்போ போண் பண்ணு…. அவள் பண்ண மாட்டாள் என்று மனசு சொன்னது.

பண்ணாமல் இருப்பதே நல்லதென்று எனக்கும் பட்டது. ஆனாலும் சம்பிரதாய வார்த்தைகள் வந்தன.

‘ நீங்க எப்படி இருக்கிறீங்க ? ‘ சந்தியாவின் குரலில் சிறிது எதிர்பார்ப்பு இழையோடுவதாகப் பட்டது எனக்கு.

‘ நீ யில்லாத வாழ்க்கை எனக்குப் பிடிக்கவில்லை ‘ – தொண்டைவரைக்கும் வ்ந்த வார்த்தைகளை அங்கேயே விழுங்கிவிட்டு,

‘சந்தோஷமா இருக்கேன்….வாழ்க்கை ஓடுகிறது… நானும் கூடவே ஓடுகிறேன் ‘ – வரவழைத்த சிரிப்போடு சொன்னேன்.

‘ கல்யாணம் ஏதும் பண்ணிக்கலயா ‘ – அவளிடமிருந்து மீண்டும் கேள்வி.

‘கல்யாணத்துக்கு பெண்பார்த்து முடிவு பண்ணிட்டேன்… ரொம்ப நல்ல பொண்ணு…. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…. இன்னும் மூணு மாசத்துல கல்யாணம்.. என் கல்யாணத்துக்கு நீ கண்டிப்பா வரணும் ‘ – சாதாரணமான குரலில்…. எந்த உணர்ச்சிகளும் தெறிக்காமல் பேசினேன்.

சரி நீ என்ன விஷயமா போன் பண்ணினே ? – மீண்டும் கேட்டேன்.

‘சும்மா தான்..- கடைசியா ஒரு தடவை பேச முடிஞ்சதுல சந்தோஷம்…. ‘ .. அவள் சொன்னதில் கடைசி வார்த்தை உடைபட்டது.

‘ சும்மாவா … ‘ என் கேள்வி முடியுமுன் மறு பக்கத்தில் தொலை பேசி வைக்கப்பட்டது.

பேச்சு வராமல் உதட்டைப்பிதுக்கி, தலையை அசைத்தபடி நான் நிமிர, என் தொலைபேசி அருகே இருந்த புகைப்படத்தில் இன்னும் மூன்று மாதத்தில் நான் திருமணம் செய்து கொள்ளப் போகும் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள்.

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்