பசிக்கிறது!

This entry is part [part not set] of 17 in the series 20010715_Issue

இரா. சுந்தரேஸ்வரன்.


அன்று மாலை தன்னை யாரோ பின் தொடர்ந்து வருவது போல் அவனுக்குப் பட்டது. திரும்பிப் பார்ப்பதும் நடப்பதுமாக இருந்தான். அவனால் அது யாரென்று காணமுடியவில்லை.

யாரவனைத் தொடரக்கூடும் ? கடன் கொடுப்பதும், வாங்குவதும் அவனுக்குப் பழக்கமில்லை. காசு கேட்டு தொந்தரவு செய்யும் உறவு என்று யாரும் அருகில் கிடையாது. அவன் சமூகத்தில் எந்த முக்கியத்துவமும் பெற்றிருக்காத மனிதன். அதனால் அவனைப் பற்றித் தகவல் சேகாிப்பதற்காகவோ அல்லது அவனைப் பேட்டி எடுப்பதற்காகவோ யாரும் வருவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. காாியம் ஆக வேண்டி அவனைத் தேடி யாரும் வருமளவுக்கு அவன் எந்தப் பதவியிலும் கூட இல்லை.

போலீசாக இருக்கலாமோ ? சின்ன வயதில் அம்மா ஏன் போலீசைக் காட்டிப் பயமுறுத்தினாள் என்பது வளர்ந்தவுடன் அவனுக்குப் புாிந்திருந்தது. நல்லதோ பொல்லாததோ, அவன் போலீசிடம் வைத்துக் கொள்வதில்லை. தொடர்வது போலீசாக இருக்காது என்று ஏனோ அவனுக்குத் தோன்றியது. அதனால் அவனது படபடப்பு கொஞ்சம் குறைந்தது.

இன்னும் அவனால் யார் தன்னைத் தொடர்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அவனால் நிம்மதியாக நடக்கவும் முடியவில்லை.

ஏன் ? யார் ?

நின்று கொஞ்ச நேரம் சுற்றும் முற்றும் பார்த்தான். பிறகு நடக்க ஆரம்பித்தான்.

அது நேரம் வரை தொடர்ந்து வந்தவர் இப்போது துரத்த ஆரம்பித்துவிட்டதைப் போல் தோன்றியது. அந்த துரத்தலை எப்படிப் பாவிப்பது என்று அவன் யோசித்துப் பார்த்தான். தொட்டுப் பிடித்து விளையாடும் ஆட்டத்தில் தன்னை நோக்கி ஓடி வரும் குழந்தையின் துரத்தலா அல்லது எளியோரை வலியோர் மிரட்டலுடன் விரட்டும் விரட்டலா ? எமனாயிருக்குமோ என்ற ஐயத்துடன் எருமை ஏதும் கண்ணில் தொிகிறதா என்று பயத்துடன் இன்னொரு முறை திரும்பிப் பார்த்துக் கொண்டான்.

துரத்திக் காதலிக்கிற பெண்களை சினிமாவில் பார்த்திருக்கிறான். ஆனால், தன்னிடம் எந்த ஹீரோத்தனமும் இல்லை என்பதால் அப்படி எதுவும் இருக்காது என எண்ணினான். இந்த மாதிாியான விஷயங்கள் பெரும்பாலும் வெவ்வேறு ஜாதி மனிதர்களிடையே தான் நேரும்படி ஆகிறது. அப்புறம் ஊரே கூடி பின்னால் துரத்தி வர, ஊரை விட்டே ஓடிப் போகவேண்டும். ஊரை விட்டு ஓடிப் போய்… என்ன பிழைப்பு அது ? ஆனாலும் துரத்தி செல்லுகிற மனிதர்களிடையே தான் இருக்கக்கூடாது என்று எண்ணிக் கொண்டான்.

கொஞ்ச நேரத்தில், ஆளைப் பார்க்கமுடியாவிட்டாலும், துரத்தி வருபவாிடம் பழக்கம் ஏற்பட்டு விட்டது போல் தோன்றியது. ஆனாலும், விளையாட்டு மாதிாி இல்லாமலும் மிரட்டாமலும் அந்தத் துரத்தல் தொடர்ந்தது.

கனவில் முகம் தொியாத ஆள் துரத்தி வர, கண் மண் தொியாமல் சாக்கடை, கண்மாய்களில் விழுந்தடித்துக் கொண்டு, ஓட முடியாமல் ஓடி… விழித்து விடுவதை நினைத்து அவனுக்கு இலேசாக சிாிப்பு வந்தது.

சிறிது தூரம் சென்ற பின், அங்கே நடைபாதையிலிருந்து சற்று உள் தள்ளி இருந்த பெஞ்சில் அமர்ந்து என்ன நடக்கிறதென பொறுத்துப் பார்க்கலாம் என்று முடிவு செய்து பெஞ்சின் மீது உட்கார்ந்தான். களைத்திருந்ததால், அவனுக்கும் கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு நடைபாதையை கவனிக்கலானான். அப்போது, குளுமையான காற்று சில விநாடிகள் வீசியது. தன்னை மறந்து கண்களை மூடினான். காற்றிலே கரைந்துவிட நினைப்பவன் போல் அவனது முகத்தில் உணர்ச்சிகள் வெளிப்பட்டன.

அவன் கண் விழித்துப் பார்த்த போது, மனித உருவெடுத்து அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்திருந்த பசியை, அவனால் அடையாளம் காண முடிந்தது.

‘நீ தானே என்னைத் துரத்தி வந்தாய் ? ‘

பசி பதிலேதும் சொல்லவில்லை. அது அமர்ந்திருந்த விதத்தில் பெருமிதம் மிகவும் குறைந்து காணப்பட்டது. பசி மாதிாியானவர்கள், உலகையே ஆட்டிப் படைக்கிறவர்கள், கம்பீரமாக உலா வரவேண்டாமா ?

அவனது புகழ் வார்த்தைகளினால் பசியிடம் எந்த மாற்றமும் இல்லை. பசி ஏதாகிலும் பேசினால் ஒழிய ஒரு உரையாடல் தொடர சாத்தியங்கள் இல்லை. உரையாடல் ஆரம்பித்தால், அப்புறமாய் பேசி மெதுவாக ஒரு சமாதானத்திற்கு வர முடியும்.

அவன் தொடர்ந்தான். ‘சாி! காாில் செல்பவர்களை நீ எப்போதாவது துரத்தியிருக்கிறாயா ? ‘

பசி சங்கடமாய் அவனைப் பார்த்துவிட்டு எழுந்து புறப்பட்டது.

சில அடிகள் எடுத்து வைத்து நடந்த பின், பசி திரும்பிப் பார்த்து,

‘நான் துரத்தியதில்லை, அவர்கள்தான் என்னைத் துரத்துகிறார்கள்! ‘

என்று சொல்லிவிட்டு சாலையைக் கடந்தது.

தானில்லாத போது வீட்டுப்பக்கம் வரவேண்டாமென்று பசியிடம் கேட்டுக்கொள்ள அவன் மறந்து போய்விட்டான்; அடுத்த சந்திப்பில் கேட்டுக்கொள்ளலாம் என நினைத்து, எழுந்து வீட்டிற்கு கிளம்பினான்.

Series Navigation

இரா. சுந்தரேஸ்வரன்.

இரா. சுந்தரேஸ்வரன்.