ஆயா

This entry is part [part not set] of 7 in the series 20000905_Issue

– தி. ஜானகிராமன்


‘ஈச்வரதாஸ் ‘ என்று வெளியே வந்த பியூன் கூப்பிட்டான். ஈச்வரதாஸ் எழுந்தான். இவ்வளவு சீக்கிரம் கூப்பிடுவார்கள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. எட்டு பேர் போய் விட்டு வந்துவிட்டார்கள். என்ன கேள்வி கேட்டார்கள் என்று வெளியே வந்த ஒவ்வொரு ஆளிடமும் அவன் கேட்டுக் கொண்டிருந்தான். அவசர அவசரமாக ஏதோ சொல்லிவிட்டு அவர்கள் போய் விட்டார்கள். கேள்விகளைச் சொல்லிவிட்டால் மற்றவர்கள் ஜாக்ரதையாகத் தயார் செய்து கொண்டு பதில் சொல்லிவிடுவார்களோ என்று அவர்கள் கவலைப்பட்டிருக்கவேண்டும். முன்னால் தெரிந்து கொள்வதும் ‘காப்பி ‘ அடிக்கிற மாதிரி தானே ‘

உள்ளே போகும்போது, கால், கை நடுங்கிற்று. ஐந்து பேர் நீள மேசைக்குப் பின்னால் உட்கார்ந்திருந்தார்கள். மத்தியில் ஒரு கவுன் போட்ட ஆள்.

மற்றவர்களுக்குச் சாதாரண சட்டை கால் சட்டை. ஓரத்தில் ஒரு பெண். இவள்தான் பள்ளிக்கூடத்துக்குத் தலைமை ஆசிரியை, தெரியும்.

மத்தியில் இருந்தவர் கையில்லாத நாற்காலியைக் காட்டினார். ஈஸ்வரதாஸ் உட்கார்ந்தான்–அடக்க ஒடுக்கமாக.

‘உன் பேர் என்ன ? ‘

‘ஈச்வரதாஸ். ‘

‘நல்லா கெட்டியாச் சொல்லு. என்ன பயம் ? என்ன வயசு ? ‘

‘பதினேழு. ‘

‘என்ன படிச்சிருக்கே ? ‘

‘போன வாரம்தான் ஸ்கூல்லே கடைசிப் பரீட்சை எழுதியிருக்கேன். ‘

‘அப்படின்னா ? ‘

‘ஆமா. ‘

‘போன வாரம் வரைக்கும் மாணவன். இப்ப வாத்தியாரா ? பரீட்சையிலே தேற வேண்டாமா ? ‘

‘நிச்சயமா தேறிடுவேன். இது வரைக்கும் எல்லா க்ளாஸிலேயும் முதல் அஞ்சு ராங்க்குக்குள்ள வந்திட்டிருக்கிறேன். இந்தப் பரீட்சையிலும் நல்லாத் தேறிடுவேன். ‘

‘வாத்தியார் வேலைக்குப் பயிற்சி வேண்மே. ‘

‘…… ‘

‘தெரியாதா ? ‘

‘தெரியும், ஆனா பயிற்சியில்லாம, என் சிநேகிதங்க ரெண்டு மூன்று பேர் வாத்தியார் வேலை பார்க்கறாங்க ‘ நானும் அந்த மாதிரிதான் வந்திருக்கிறேன். அப்புறம் இரண்டு மூன்று வருஷம் கழிச்சு நீங்களே பயிற்சிக்கு அனுப்புங்களேன் ‘

‘வேலையே கிடைத்து விட்டாற் போல பேசுகிறாயே. ‘

‘ஸாரி. ‘

‘பாதிரி சிரித்தார். ‘

‘இந்த மாதிரி சின்ன எலிமென்டரி பள்ளிக்கூடத்திலே வாத்தியாரா இருக்கிறதுன்னா என்ன என்ன தெரிந்திருக்க வேண்டும் ? ‘

‘நல்லா விளையாடத் தெரியணும். சிரிக்கத் தெரியணும். புள்ளைங்களோட வேடிக்கையா பேசத்தெரியணும். சுத்தமாக இருக்கணும். ‘

‘ஏன் ? ‘

‘அப்பதான் பிள்ளைங்களும் சுத்தமா இருக்கும். ‘

‘வேடிக்கையாய்ப் பேசத் தெரியணும்னா ? ‘

‘கதை மாதிரி எல்லாம் புதுசு புதுசா சொல்லணும். ‘

‘அப்ப ஒரு கதை சொல்லு பார்ப்பம். நாங்க அஞ்சு பேரும், நாலாங் க்ளாஸ் பிள்ளைங்கன்னு நெனச்சுக்க. ஒரு கதை சொல்லு. ‘

ஈசுவரதாஸ் குழம்பி புன்னகை பூத்தான்.

‘ஆமாம், நாங்க இப்ப நாலாம் க்ளாஸ் குழந்தைகள், ஒரு கதை சொல்லு. ‘

‘பிராணி கதை சொல்லலாமா ? ‘

‘எது வேணும்னாலும். ‘

‘பழைய கதையா–பைபிள்–ராமாயணம் மாதிரி ? ‘

‘எது வேணும்னாலும். ‘

திருதிருவென்று விழித்தான் அவன். ஒரு கதை கூட நினைவுக்கு வரவில்லை. ஒரு நிமிஷம் ஓடிற்று. பிராணிகள், பறவைகள் எல்லாம் எங்கேயோ பறந்துபோய் விட்டாற் போலிருந்தது.

விழித்தான்.

‘எந்தக் கதையாகவும் இருக்கலாமா ? ‘

‘எந்தக் கதையாயிருந்தாலும் சரி…. நாங்க இப்ப நாலாம் க்ளாசுப் பிள்ளைகள். அது மாத்திரம் ஞாபகம் இருக்கணும்….. ‘

மீண்டும் புன்னகையுடன் சிறிது விழித்தான் அவன். பிறகு மெதுவாக ஆரம்பித்தான்.

‘ஒரே ஒரு ஊரிலே, ஒரு அப்பா அம்மா. அவங்களுக்கு ரண்டு குழந்தை. ஒரு ஆணு, ஒரு பொண்ணு. அப்பா வந்து ராணுவத்திலெ ட்ரக்கு டரைவர். ரொம்ப தொலைவுலெ ஏதோ ஊரிலே வேலை பார்த்துக்கிட்டிருந்தார். அம்மாவையும் பிள்ளைங்களையும் ரண்டு வருஷத்துக்கொருக்கத்தான் வந்து பார்ப்பார்—லீவு எடுத்துக்கிட்டு வந்து. அப்படி வர்றப்ப, ரண்டு நாளைக்கு அப்புறம் கோச்சுக்கிட்டு கத்த ஆரம்பிச்சிடுவார்– நல்ல சாப்பாடு போடலேன்னு. ஒரு மீனு கிடையாது, ஒரு கறிக் குளம்பு கிடையாது— இது என்ன பன்னி துன்ற சாப்பாடுன்னு கத்துவார். காசில்லேயே மீனு வாங்க, கறிவாங்கல்லாம். அவரு காசு நிறைய கொண்டாரதில்லெ. அவர்கிட்டே காசு இருக்காது. அவரு நிறைய சாராயம் குடிப்பாரு சம்பாதிக்கிறதெல்லாம் அதுக்கே சரியாப் போயிடும். உனக்குக் கை காலு இல்லியா நாலு காசு சம்பாதிக்க முடியாதா உன்னாலேன்னு கத்துவாரு அவரு அம்மாவைப் பார்த்து. அப்படி நாலஞ்சு நாள் கத்துவாரு. சாராயத்துக்கு காசு கேப்பாரு. கொடுக்காட்டி அடிப்பாரு அம்மாவை. அம்மா, பாத்திரம், தோடுன்னு எதையாவது வித்துப் போட்டு நல்லா சமையல் பண்ணிப் போடுவாங்க. காசு தீந்தப்புறம் நல்லா சமைக்க முடியாது. மறுபடியும் சண்டைபோடுவாரு, அடிப்பாரு. கோவிச்சுக்கிட்டு திரும்பி ஊருக்குப் போயிடுவாரு. பிள்ளைங்க படிக்கணும், சாப்பிடனும். அதனாலே அம்மா வந்து ஆயா வேலைக்குப் போனாங்க. பணக்கார வீட்டிலே போய் சமைக்கிறது, துணி தோய்க்கிறது, வீடு கூட்றது, பாத்ரம் தேய்க்கிறது, குழந்தையைப் பார்த்துக்கிறது, இந்த மாதிரி வேலை செய்ய ஆரம்பிச்சாங்க. காலையிலே ரண்டு பிள்ளைங்களுக்குச் சமைச்சுப் போட்டு, வேலைக்குப் போனா, ராத்திரிதான் வருவாங்க— அசந்து போய் வருவாங்க கிறிஸ்மஸ்உ, தீபாவளின்னு எப்பவாவது அவங்களுக்கு ஒரு புடவை இனாம் கிடைக்கும்.

‘கட்சீலெ ஒரு நல்ல வீட்டிலே ஆயா வேலை கிடைச்சுது அந்த அம்மாவுக்கு. ஒரு புருஷன், பொண்டாட்டி–ரண்டு பேரும் வேலைக்குப் போறவங்க. அவங்களுக்கு ஒரு குழந்தை. அவங்க வேலைக்குப் போயிருக்கறப்ப,குழந்தையைப் பார்த்துக்கிட வேண்டியது. அவங்க ரொம்ப நல்லவங்க. ஆயாவுக்கு நல்ல சாப்பாடு போட்டாங்க. சேலை கொடுப்பாங்க. அந்தக் குழந்தையும் ஆயா மேலே ரொம்பப் ப்ரியமா இருந்திச்சு. ஆயாவும் அந்தக் குழந்தை மேலே உசிரா இருந்தாங்க. அது அப்பா அம்மாகிட்ட சித்த நேரம் போகும். அப்புறம் ஆயா கிட்டவேதான் இருக்கும். சாயங்காலம் ஆயா வீட்டுக்குப் போனபுறம் அதுக்கு வெறிச்சுனு போயிடும். அதைப் பார்த்துட்டு அந்தப் புருஷன் பெண்டாட்டி ரண்டுபேரும் ஆயாகிட்ட இன்னும் ரொம்பப் பிரியமா இருக்கத் தொடங்கினாங்க. ஆனா அந்த ஆயாவுக்கு எத்தனை வந்தாலும் போறலெ மக பெரிசா ஆயிட்டுது. அதனாலெ தம் சேலையெல்லாம் மகளைக் கட்டிக்கச் சொல்லும் அந்த ஆயா. பையனும் பெரிய கிளாசு படிக்க ஆரம்பிச்சான். பள்ளிக்கூடத்திலெ புஸ்தகம், நோட்டு, அது இதுன்னு புடுங்குவாங்க. நல்ல உடுப்புப் போட்டுக்கணும்னு கண்டிப்பாங்க. புள்ளை நல்லா படிச்சு பெரிய மனுசனாக ஆகணும்னு ஆசை ஆயாவுக்கு. திடார் திடானு இருபது ரூபா முப்பது ரூபா வேணும்பான் பையன். ஆயா சம்பளத்தையெல்லாம் முன் பணமா வாங்கிப்பா. அப்புறம் மேலே, மகளுக்குக் கலியாணம் பண்ணிரணும்னாங்க உறவு சனக. அதுக்காக வேண்டி மோதிரம் சங்கிலி பண்ணாங்க ஆயா. பணம் பத்தலெ. ஆனா எப்படியோ ஆயா பணம் கொண்டாந்துடுவாங்க. ஒரு நாளைக்கு பெரிய பரீட்சைக்குப் பணம் கட்டணும்னு பையன் பணம் கேட்டான். இல்லெ. ஒரு வாரத்திலே கட்டணும்னான். ஆனா மூணு மாசத்து சம்பளத்தை முன் பணமா வாங்கிட்டாங்க ஆயா. ஆனா ஒரு வாரத்துக்குள்ளே பணம் கொண்டாந்துட்டாங்க. ஆனா மறுநாள் காலையிலே வேலைக்கு போனவங்க ஒரு மணி நேரத்திலே திரும்பிட்டாங்க. ஏன்னு கேட்டான் பையன். வேலையை உட்டு நிறுத்திட்டாங்களாம்.

‘பென்ஜீ நாலஞ்சு மாசமா ரூபாய் எல்லாம் இருபதும் முப்பதுமா காணாம போயிட்டே இருக்கு. இத்தோட நானூறு ரூபாய்க்கு மேலே கெட்டுப் போயிருக்கு, நீங்க எடுத்தீங்கன்னு நாங்க சொல்லலெ. நீங்க எடுக்க மாட்டாங்கன்னு ஓர் எண்ணம் இருக்கு. ஆனா, இங்க வேற ஒருத்தரும் வர்றதில்லே. அதனால உங்க மேலே சந்தேகப்படும்படியா இருக்கு. சந்தேகம் இருக்கறப்ப நீங்க இங்க வேலை செய்யறது நல்லாருக்கா, நாளைக்கு ஏதாவது பெரிசா கெட்டுப் போயிடுச்சுன்னா உங்க பேர்லதான் பழிவரும்னு சொல்லி மூணு மாசத்துச் சம்பளத்தை நீங்க திருப்பிக் கொடுக்கவாணாம்னு சொல்லி நிறுத்திட்டாங்க அந்த புருஷன் பெண்டாட்டி ரண்டுபேரும். அந்த ஆயா அழுதுகிட்டே வீட்டுக்கு வந்தது.

‘இது பெரிய அக்ரமமா இருக்கேன்னான் பையன். ‘

‘இல்லே. அவங்க சந்தேகப்பட்டது சரிதான் ‘ன்னாங்க ஆயா. ‘அப்படின்னா நீ எடுத்தியா ? ‘ ன்னு கேட்டான் பையன்.

‘ஆமா உனக்குத்தான் குடும்ப நிலைமை தெரிஞ்சிருக்கே. உன் படிப்பு, தங்கச்சி கலியாணம் அதுக்குக் காப்பு, சேலை, காதுக்குதோடு…. ‘ன்னா ஆயா.

‘அதை அவங்ககிட்ட ஒத்துகிட்டா என்னவாம் ? அவங்கதான் ரொம்ப நல்லவங்கன்னு சொல்றியே ? ‘

‘ஒத்துக்கிட்டா திருடின்னு பட்டம் நிலைச்சுப் போயிடும். ‘உன்மேல் சந்தேகம். ஆனா, நீ யோக்யமாவள்னு சொல்லி வேற யாருக்கிட்டவாவது வேலை வாங்கித் தாரேன், நீ அங்கியும் இந்த மாதிரி பண்ணாம இருந்தா ‘ ன்னு சொன்னாங்களாம்.

‘அந்த ஆயா அதைக் கேட்டுக்கிட்டுத் திரும்பி வந்திரிச்சு அழுதுகிட்டு.

‘அந்த பையன் ஒரே துடிப்பா துடிச்சுது எப்படியாவது அந்த ரூபாய்களைச் சம்பாரிச்சுத் திருப்பிக்கொண்டு கொடுத்திரணுன்னு, திருப்பித் திருப்பி அம்மாகிட்ட சொன்னான். அப்படின்னா திருடிப் பட்டம் கட்டலாம்னு பாக்கறியா எனக்குன்னு கேட்டது அந்த ஆயா. நமக்குப் பத்தலெ எடுத்துகிட்டு வந்தேன். அவங்ககிட்ட சொல்லாமெ எடுத்தது தப்புதான்னு சொல்லிச்சு அந்த ஆயா. ‘அது திருடு இல்லியா ? ‘ ன்னு கேட்டான் பையன்.

‘அம்மா முழிச்சு தரையை பாத்துக்கிட்டே இருந்தது. ‘

ஈச்வரதாஸ் நிறுத்திவிட்டான்.

‘கதை முழுக்க முடிஞ்சி போச்சா ? ‘

‘போச்சு சார். ‘

‘இதுதான் நாலாங் க்ளாஸ் புள்ளீங்களுக்குச் சொல்ற கதையா ? ‘

‘சொல்லலாம் சார். ‘

‘அவங்களுக்கு புரியுமா இது ? ‘

‘புரியும் சார். ‘

‘கடசீயிலே ஒரே சிக்கலா இருக்கே. அவங்க சந்தேகப்பட்டுத்தான் நிறுத்தினாங்க. இந்த ஆயா திருடிப்பிட்டு, ஒப்புக்கமாட்டேன்னிட்டாங்க, திருடின்னு பேர் வரக்கூடாதுன்னு பையனையும் தடுக்கறாங்க. இதெல்லாம் நாலாம் க்ளாசுக் குழந்தைகளுக்குப் புரியுமா ? ‘

‘புரியும் சார். அஞ்சு வயது முடிஞ்சவுடனே எது நல்லது, எது கெட்டதுன்னு தெரியும் சார். ‘

ஐந்து பேரும் சிரித்தார்கள்.

‘சரி, இப்ப உங்க அம்மா எங்க இருக்காங்க ? ‘

‘வீட்டிலெதான். ‘

‘அந்த புருஷன் பெண்டாட்டி வேலை வாங்கித் தரேன்னாங்களே. இன்னும் தரலியா ? ‘

‘இன்னும் இல்லெ சார். ‘

‘சரி, நீ வாத்தியார் வேலை பார்க்கறது கிடக்கட்டும். முதல்லெ போயி, உங்கம்மாவைக் கூட்டிக்கிட்டு வா; இங்கே ஒரு ஆயா வேணும் இப்ப ‘ என்று ஓரத்திலிருந்த பெண் சொன்னாள்.

 

 

  Thinnai 2000 September 5

திண்ணை

Series Navigation

- தி. ஜானகிராமன்

- தி. ஜானகிராமன்