ஆற்றின் மூன்றாவது கரை

This entry is part [part not set] of 5 in the series 20000820_Issue

(ஒரு லத்தீன் அமெரிக்கக் கதை)


ஹோ குமாரேஸ் ரோஸா

என் அப்பா ஒரு கடமை தவறாத , ஒழுங்கான, நேர்வழியில் போகிற ஆசாமி. நான் விசாரித்தறிந்தவரை இந்த அவர் குணங்கள் சிறு வயது தொட்டே வந்தவை. என் நினைப்பிலும் அவர் ரொம்ப மகிழ்ச்சியானவராகவோ அல்லது ரொம்ப சோகம் காப்பவராகவோ இருந்ததில்லை. கொஞ்சம் அமைதியான ஆள் தான். அம்மாதான் வீட்டில் அரசாட்சி. எல்லாரையும் – என்னை, என் தங்கையை, என் சகோதரனை – திட்டிக் கொண்டேயிருப்பாள். ஆனால் ஒரு நாள் என் அப்பா ஒரு படகு வாங்கலானார்.

அது பற்றி ரொம்பவும் ஈடுபாடு கொண்டார். மிமோஸா மரத்தில் அவருக்கென்றே பிரத்தியேகமாகத் தயாரிக்கப் பட்டது அது. ஒரே ஒரு ஆளுக்கானது அது. ஆனால் இருபது அல்லது முப்பது வருடங்கள் கூடத் தாக்குப் பிடிக்கும் படியாக அது செய்யப் படவிருந்தது. அம்மாதான் அது பற்றிப் பேசிக் கொண்டே இருந்தாள். என் புருஷன் மீன்பிடிக்கப் போகிறாராக்கும் ? வேட்டையாடப் போகிறாரா ? அப்பா ஒன்றும் பேசவே இல்லை. எங்கள் வீடு ஆற்றுக்கு ஒரு மைல் தான் தூரத்தில் தான் இருந்தது. ஆறு, ஆழமாயிருந்தது. அக்கரையைக் கூடப் பார்க்க முடியாத படி அகலமாய் இருந்தது.

அந்தப் படகு வீட்டிற்கு வந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. அப்பா மகிழ்ச்சியையோ வேறேதும் உணர்ச்சியையோ காட்டிக் கொள்ளவில்லை. எப்போதும் போலத் தன் தொப்பியை அணிந்து கொண்டு எங்களிடம் விடை பெற்றுக் கொண்டார். உணவோ வேறேதும் மூட்டையோ எடுத்துக் கொள்ளவில்லை. அம்மா கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுவாள் என்று எதிர் பார்த்தோம் , ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.அவள் முகம் வெளிறிக் கிடந்தது. உதட்டைக் கடித்துக் கொண்டாள் . அவள் சொன்னது இவ்வளவு தான்: ‘ போனால் போய்த் தொலை. திரும்பி வருகிற யோசனையே வேண்டாம். ‘

அப்பா பதில் அளிக்கவில்லை. என்னை மென்மையாய்ப் பார்த்தவர் தன்னுடன் வரச் சைகை செய்தார். அம்மாவின் கோபம் எண்ணிப் பயப்பட்டாலும் ஆவலுடன் அவர் சொன்னபடி கேட்டேன். ஆற்றை நோக்கி இணைந்தே நடக்கலானோம். துணிச்சலும், மகிழ்ச்சியும் ததும்ப ‘ என்னையும் கூட்டிப் போகிறாய் இல்லையா ? ‘ என்று கேட்டேன்.

என்னை வெறுமே பார்த்தவர், கையை உயர்த்தி என்னை வாழ்த்துபவர் போல சைகை செய்தவர் , சைகையிலேயே என்னைத் திரும்பிப் போகச் சொன்னார். திரும்பிப் போகிறவன் போல நடந்தவன், அவர் திரும்பியதும், ஒரு புதரில் மறைந்து கொண்டு அவர் என்ன செய்கிறார் என்று பார்த்தேன். அப்பா படகுக்குள் இறங்கி, ஓட்டிச் சென்று விட்டார். அதன் நிழல் ஒரு முதலையைப் போல நீரில் நழுவிச் சென்றது.

அப்பா திரும்பி வரவில்லை. அவர் எங்கேயும் போய் விடவும் இல்லை. அங்கேயே நதியில் மிதந்தபடி அங்கும் இங்கும் சென்ற படி இருந்தார். எல்லோருக்கும் ஒரே அருவருப்பான வியப்பு. என்றும் நடக்கமுடியாத ஒன்று, இது. எங்கள் உறவினர், அண்டை வீட்டார், நண்பர்கள் எல்லோரும் வந்து இந்த நிகழ்வு பற்றிப் பேசினார்கள்.

அம்மாவிற்கு ஒரே லஜ்ஜை. மிகக் கொஞ்சமே பேசினாள். அடக்கமாய் நடந்து கொண்டாள். இதனால் எல்லோருமே (யாரும் இதைச் சொல்லாவிடினும்) அப்பாவிற்குப் பைத்தியம் என்று முடிவு கட்டினார்கள். சிலர் மட்டும் ஏதோ பிரார்த்தனையை அப்பா நிறைவேற்றுகிறார் என்று சொன்னார்கள். ஏதாவது பயங்கர வியாதியோ, குஷ்டமோ என்னவோ, அதனால் தான் , குடும்பத்தின் மீதுள்ள அக்கறையினால், குடும்பத்தை விட்டு — ஆனால் வெகு தூரம் சென்று விடாமல் — இருக்கிறார் என்று குறிப்பிட்டார்கள்.

ஆற்றின் வழிச் சென்ற பயணிகளும் சரி, ஆற்றின் அருகில் வசித்தவர்களும் சரி, அப்பா கரையில் கால் பதிக்கவே இல்லை என்று தீர்மானமாகச் சொன்னார்கள். தனியாக, குறிக்கோள் எதுவும் இல்லாத நாடோடி போல அவர் ஆற்றில் அங்கும் இங்கும் சென்றவாறிருந்தார். அம்மாவும், உறவினர்களும், படகில் அவர் உணவை மறைத்து வைத்திருந்திருக்க வேண்டும் என்று அபிப்பிராயப் பட்டார்கள் அம்மாவும் உறவினர்களும். உணவு முடிந்து போனவுடன், திரும்பியே ஆக வேண்டும் என்று சொன்னார்கள். அல்லது வேறெங்காவது போய்த் தொலைந்தால் மரியாதையாவது மிஞ்சும்.

உண்மைக்கு வெகு தொலைவானது இந்த அபிப்பிராயம். அப்பாவுக்கு ஒரு ரகசிய உணவு விநியோகம் இருந்தது — நான் தான். நான் தினமும் உணவைத் திருடிக் கொண்டு போய்க் கொடுத்தேன். அவர் சென்று விட்டிருந்த முதல் நாள் இரவு நாங்களெல்லாம் கரையில் தீமூட்டி, பிரார்த்தனை செய்தோம். அவரையும் கூப்பிட்டோம். நான் மிகத் துயருற்று அவருக்கு வேறு ஏதும் செய்யவேண்டும் என எண்ணினேன். மறு நாள் சோள ரொட்டி ஒரு துண்டும், வாழைப்பழம் ஒரு சீப்பும், கருப்பட்டியும் கொண்டு போனேன். மணிக் கணக்கில் பொறுமையிழந்து காத்திருந்தேன். தூரத்தில் ஒரு படகு நீரில் நழுவி வரக் கண்டேன். அப்பா படகடியில் உட்கார்ந்திருந்தார். என்னைப் பார்த்தார். ஆனால் எனக்கு சைகையும் காட்டவில்லை. என்னருகில் வரவும் இல்லை. அவருக்கு உணவைக் காட்டி விட்டு, ஒரு குழியில், கரையோரம் வைத்தேன். அந்தக் குழியில் மிருகங்களுக்குத் தப்பி, மழைக்குத் தப்பி உணவு பாதுகாப்பாய் இருக்கும். தினமும் நான் இதைச் செய்தேன். பிற்பாடு தான் , அம்மாவிற்கும் இது தெரிந்திருந்தது என்பதையும், நான் சுலபமாகத் திருடக் கூடிய இடத்தில் உணவை வைத்தவளும் அவள் தான் என்று புரிந்து கொண்டேன். காட்டிக் கொள்ள விரும்பாவிடினும் அவளுக்கு இளகிய மனம் தான்.

அம்மா அவள் சகோதரனை அழைத்தி வந்து வயல் வேலை உதவிக்கும், வியாபார உதவிக்கும் வைத்துக் கொண்டாள். ஆசிரியர் ஒருவரை அமர்த்தி எங்களை வீட்டில் பாடம் பயிலச் செய்தாள். அவள் கேட்டுக் கொண்டபடி ஒரு நாள் பாதிரியார் தன் அங்கிகளையெல்லாம் அணிந்து கொண்டு, கரைக்குச் சென்று, என் அப்பாவைப் பீடித்திருந்த பேயை ஓட்ட முயன்றார். அவர் அப்பாவைப் பார்த்து இந்தப் பாவகரமான பிடிவாதத்தை விட்டு விடும்படி கத்தினார். இன்னொரு நாள் இரண்டு போர் வீரர்களைக் கூட்டிக் கொண்டு போய் அவரைப் பயமுறுத்த முயற்சி செய்தாள். ஒன்றும் பயனில்லை. தூரமாய்ப் போய் விடுவார். பார்க்கக் கூட முடியாது. அவர் யாருக்கும் பதில் சொல்லவில்லை. யாரும் அவரை நெருங்க முடிய வில்லை. பத்திரிகைக் காரர்கள் படகில் வந்து அவரைப் படமெடுக்க வந்த போது விலகி வேறு திசையில் போய் விட்டார். அந்தப் பகுதியெல்லாம் அவருக்கு மிகத் தெரிந்த பகுதி. மற்றவர்களுக்கு அதில் சென்றால் எப்படி மீள்வது என்று தெரியாது. புதர் மண்டிய அந்த ஆற்றுப் பகுதியில் , பாசிகளும், நீர்த் தாவரங்களும் சூழ, அவர் பாதுகாப்பாய் இருந்தார்.

அவர் ஆற்றில் வசிப்பதற்கு நாங்கள் பழகிகொள்ளத் தான் வேண்டும். ஆனால் எங்களால் பழகிக் கொள்ள இயல வில்லை. எப்போதுமே எங்களால் முடியவில்லை. என் ஒருவனுக்குத் தான் என் அப்பாவிற்கு என்ன வேண்டும், என்ன வேண்டியதில்லை என்று கொஞ்சம் புரிந்ததென நினைத்தேன். எப்படிக் கஷ்டத்தைத் தாங்கிக் கொண்டார் என்பது தான் எனக்குப் புரியவில்லை. இரவும் பகலும், வெயிலிலும், மழையிலும், உஷ்னத்திலும், கடுங்குளிர் காற்றிலும், வெறுமே ஒரு பழைய தொப்பியும், மாற்றுத் துணி கொஞ்சமே கொண்டு, வாரம் கழிய, மாதம் கழிய, வருடம் கழிய , வீணாய் வெறுமையாய்க் கழியும் வாழ்க்கையைப் பற்றி கருதாமல். . கரையிலோ, புல்லிலோ, ஆற்று நடுத்தீவிலோ அவர் கால் பதிக்கவே இல்லை. தூங்க வேண்டிய பொழுதில் ஏதோ ஒரு கரையோர மரத்தில் படகைக் கட்டியிருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் நெருப்புப் பற்றவைக்கவுமில்லை, டார்ச் லைட்டும் அவரிடம் இல்லை. நான் குழிவான கல்லில் விட்டுச் சென்ற உணவிலும் அவர் சிறிதளவே எடுத்துக் கொண்டார் — உயிர் வாழ அது போதுமானதில்லை தான். அவர் உடல் நலம் எப்படி இருக்கும் ? துடுப்புப் போடவும், படகை வலிக்கவும் பலம் தேவைப் படுமே ? வருடாவருடம் வருகிற பெருவெள்ளத்தில், பல ஆபத்தான பொருட்கள் — செத்த மிருகங்கள், மரக்கிளைகள் போன்றவை — இழுத்து வரப் படுமே , அவற்றில் படகு மோதிவிடாமல் எப்படித் தப்பினார் ?

யாருடனும் அவர் பேசவில்லை. நாங்களும் அவரைப் பற்றிப் பேசவில்லை.ஆனால் எங்கள் எண்ணத்தில் அவர் இருந்தார். அவர் நினைவை எங்கள் மனங்களிலிருந்து அகற்ற முடியவில்லை. சிறு பொழுது அவர் நினைவில்லாமல் இருக்க நேர்ந்தால், ஏதோ பய உணர்ச்சி தாக்க மீண்டும் விழித்தெழுந்தது போல், அவர் நினைவு மனதில் படரும்.

என் சகோதரிக்குக் கல்யாணம் ஆயிற்று, ஆனால் கல்யாண விழாவை அம்மா விரும்பவில்லை. அது சோகமாய் இருந்திருக்கும், ஏனென்றால், சுவையான உணவு சாப்பிடும் போதெல்லாம் நாங்கள் அவரை நினைத்துக் கொள்வோம். புயல் பொழுதுகளில் பாதுகப்பாக எங்கள் படுக்கைகளில் நாங்கள் சுருண்டு கொண்டிருந்த போது அவரை நினைத்தோம் — அங்கே தனியாக, எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் வெறும் கையால் அவர் படகை எப்படிச் சமாளிப்பார் ? எப்போதாவது யாராவது சொல்வார்கள் , நான் அப்பா மாதிரி நடை உடை பாவனையில் இருப்பேனாம். ஆனால் இப்போது அவர் முடியும் வளர்ந்து, நகம் எல்லாம் வளர்ந்து கிடக்கும். அவரை ஒல்லியாக, நோய்வாய்ப்பட்டவராக, வெயிலில் கறுத்துப் போனவராக நான் கற்பனை செய்து கொண்டேன். சில சமயம் அவருக்கு நான் உடைகளை விட்டு வந்தாலும் அவரை அரை நிர்வாணமாய்த் தான் என்னால் கற்பனை செய்ய முடிந்தது.

எங்களைப் பற்றி அவர் கவலைப் பட்டவராகவே தெரியவில்லை. இருந்தாலும் அவர் மீது மதிப்பும், அன்பும் நான் கொண்டிருந்தேன். என் நல்ல காரியம் எதையேனும் யாராவது புகழ்ந்தால் , ‘ என் அப்பா தான் இப்படி நடந்து கொள்ளச் சொல்லிக் கொடுத்தார் ‘ என்று கூறலானேன்.

அது நிஜமல்ல என்றாலும், உண்மையானதொரு பொய். எங்களைப் பற்றிக் கவலைப் படாதவர் ஏன் எங்களைச் சுற்றியே வந்து கொண்டிருந்தார் ? எங்களைப் பார்க்க முடியாதபடி, நாங்கள் பார்க்க முடியாத படி ஏன் அவர் ஆற்றின் வேறு இடங்களுக்குப் போகவில்லை ? அவருக்குத் தான் வெளிச்சம்.

என் சகோதரிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அப்பாவிற்கு அவருடைய பேரப் பிள்ளையைக் காட்ட வேண்டும் என்று அவள் மிக விருப்பப் பட்டாள். ஒரு அழகான நாள் பொழுதில் நாங்கள் கரைக்குச் சென்றோம். என் சகோதரி தன் திருமண உடையான அழகிய வெள்ளை நீள் அங்கியில் இருந்தாள். தன் குழந்தையை உயரத்தூக்கினாள். அப்பாவிற்காகக் குரல் கொடுத்துக் காத்திருந்தாள். அப்பா தென்படவில்லை. அவள் அழுதாள். நாங்களும் அவளுடன் சேர்ந்து ஒருவர் மற்றவரை அணைத்தபடி அழுதோம்.

என் சகோதரியும், அவள் கணவனும் வெகுதூரம் சென்று வசிக்கலானார்கள். என் சகோதரன் நகரத்திற்குப் போய் விட்டான். காலங்கள் துரித கதியில், புலப்படாமலே ,மாறின. அம்மாவும் அங்கிருந்து சென்று விட்டாள். அவளுக்கு வயதாகி விட்டது. அவள் மகளுடன் வசிக்க்ப் போய் விட்டாள். நான் மட்டும் பின் தங்கியிருந்தேன். திருமணம் பற்றி என்னால் யோசிக்கக் கூட முடியவில்லை. என் வாழ்க்கையில் நான் செய்தே ஆக வேண்டிய காரியங்களுக்காக நான் அப்படியே இருக்க வேண்டியதாயிற்று. தனியாய் அங்குமிங்கும் போய் வந்து கொண்டிருந்த அப்பாவிற்கு நான் தேவை. அவருக்கு நான் தேவை என்று எனக்குத் தெரியும் — ஏன் இப்படி செய்கிறார் என்று என்னிடம் அவர் சொல்லாவிடினும் கூட. அவருக்குத் தெரிந்தவர்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்ட போது அவர்கள் , படகு செய்தவனுக்குத்தான் அந்தக் காரணம் தெரியும் என்று சொன்னார்கள். அவன் இப்போது செத்துப் போய் விட்டான், மற்றவர்களுக்குத் தெரியவில்லை அல்லது நினைவில்லை. மழை வலுத்துப் பெய்கிற வேளைகளில் முட்டாள் தனமாக என் அப்பா நோவா மாதிரி , வெள்ள ஏற்பாட்டிற்காகப் புதுப் படகைச் செய்தார் என்று சிலர் சொல்லக் கேட்டிருந்தேன். எனினும் என் அப்பாவை நான் குறை சொல்லவில்லை. என் முடியும் நரைக்கத் தொடங்கி விட்டது.

எனக்குச் சொல்லவிருந்ததெல்லாம் சோகமான விஷயங்கள் தாம். என் தவறு என்ன ? குற்றம் என்ன ? என் அப்பா என்னைவிட்டுப் பிரிந்த போதும், அவர் பிரிவு என்னை விட்டுப் பிரியாமல் எப்போதும். எப்போதுமாக ஆறு. எனக்கு வயதாகிக் கொண்டு வந்தது. வாழ்க்கை தட்டுத் தடுமாறி. கூடவே நோய்களும் பயங்களும். மூட்டு வலி வேறு. அவருக்கு ? ஏன் இதைச் செய்கிறார் அவர் ? அவருக்கும் ரொம்பக் கஷ்டமாய்த் தானிருக்கும்.அவருக்கும் வயதாகி விட்டது. அவர் பலம் குறைந்த போது படகு தள்ளாடி முழுகிவிட்டால் ? இல்லை, நீரோட்டத்தில் போய் விட்டால் — வேகமாய் நீரோட்டத்தில் போய் நீர் வீழ்ச்சியில் கவிழ்ந்து விட்டால் ? எனக்கு இதயமெல்லாம் இந்த எண்ணம் அழுத்தியது. அவர் அங்கே இருந்தார் , எனக்கு மன அமைதி போயே போய் விட்டது. என்ன குற்றம் எனது என்று தெரியாமலே, ஆறாக்காயமாய் என்னுள் ஒரு வலி. வேறு மாதிரியாய் விஷயங்கள் நடந்திருக்குமெனில் எனக்கு இதன் காரணமும் தெரிந்திருக்கும். எனக்கு ஒரு மாதிரி ஊகமாய்த் தவறு என்ன என்று தெரிந்தது.

சொல்லியே ஆக வேண்டும். எனக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா ? இல்லை, எங்கள் வீட்டில் அந்த வார்த்தையை மட்டும் யாருமே உச்சரித்ததில்லை, இவ்வளவு வருடங்களாகியும். யாரும் யாரையும் பைத்தியம் என்று மட்டும் சொன்னதில்லை. ஏனென்றால் யாரும் பைத்தியமில்லை. ஒரு வேளை எல்லோருமே பைத்தியமோ என்னவோ ? நான் செய்ததெல்லாம் இவ்வளவு தான். அங்கே போய் அவர் பார்க்கும் படியாக என் கைக்குட்டையை அசைத்தேன். அமைதி காத்தேன். காத்திருந்தேன். கடைசியில் அவர் தூரத்தில் , மெள்ள மெள்ள அருகில் , படகில் ஒரு தெளிவற்ற உருவமாகத் தெரியக் கண்டேன். அவரை நிறையத் தரம் கூப்பிட்டேன். அவரிடம் சொல்லவிருந்ததை மரியாதையான குரலில், சத்தியம் செய்பவன் போலச் சொன்னேன். முடிந்த அளவு குரலை உயர்த்திக் கூறினேன்.:

‘அப்பா. . ரொம்ப காலமாய்ப் பண்ணிக் கொண்டிருக்கிறாய். . திரும்பி வா . . இனிமேல் இதைப் பண்ண வேண்டாம் . . திரும்பி வா. . உனக்குப் பதில் நான் வேண்டுமானால் போகிறேன். . வேண்டுமானால் இப்போதே. . எப்பொழுது வேண்டுமானாலும். . நான் படகில் ஏறுவேன். உன் இடத்தில் நான் இருப்பேன். . ‘

இதைச் சொன்ன போது என் இதயம் திடமாய்த் துடித்தது.

அவர் சொன்னதைக் கேட்டார். எழுந்து நின்றார். துடுப்பை வலித்து, என் பக்கமாகப் படகைச் செலுத்தினார். என் சொல்படி நடப்பார். திடாரென்று எனக்கு உள்ளூர நடுக்கம். பலப் பல வருடங்களுக்குப் பின்னர் முதல் முறையாகக் கையை உயர்த்தி அசைத்தார். என்னால் முடியவில்லை.. கலவரம் தாக்க, என் மெய் சிலிர்க்க.. ஓடினேன். பைத்தியக்காரன் போல ஓடினேன். எதோ இன்னொரு உலகத்திலிருந்து வருபவராய் அவர் தோற்றங்கொண்டார். நான் மன்னிப்புக் கேட்டுக் கெஞ்சுகிறேன், மன்றாடுகிறேன்.. மன்றாடுகிறேன்.

பெரும் பயம் தாக்குவது போல் உடம்பெல்லாம் வியர்த்து ஒழுகியது. நான் நோய்வாய்ப் பட்டேன். அவரை அதற்குப் பின் யாரும் பார்க்கவும் இல்லை, அவரைப் பற்றிக் கேள்விப்படவும் இல்லை. இப்படியொரு தோல்விக்குப் பின்பு என்னை மனிதன் என்று கூறத்தகுமோ ? இருக்கவே லாயக்கில்லாதவன். மெளனம் கொள்ள வெண்டியவன். ஆனால் தாமதாமாகி விட்டது. பாலைவனங்களிலும் , குறிப்பேயில்லாத பரப்புகளிலும் , என் வாழ்நாள் கழியும். அது வெகுநாட்களும் இராது என்று தோன்றியது. ஆனால், மரணம் வருகையில், என்னை ஒரு சிறு படகில் , இரு நெடுங்கரைகளுக்கிடையில் வற்றாத தண்ணீர்மேல் போட்டு விடுங்கள். ; நான் ஆற்றில் என்னையிழந்து . ஆற்றினுள் .. ஆறு. .

(Joao Guimaraes Rosa -1908-67. பிரேஸிலில் பிறந்தவர். மருத்துவராய் படைகளில் பணி புரிந்தவர். )

 

 

  Thinnai 2000 August 20

திண்ணை

Series Navigation

ஹோ குமாரேஸ் ரோஸா

ஹோ குமாரேஸ் ரோஸா