சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் – 3

This entry is part of 11 in the series 20000618_Issue

ஆதவன்


‘உம்! பச்சாத்தாபப் படுகிறானாக்கும்; அல்லது தன் காலி நாற்காலியின் மூலம் அதிருப்தியைத் தெரிவிக்கிறானாக்கும். என் அனுதாபத்தைப் பெற முயற்சிக்கிறானாக்கும்! ‘ என்று அவள் அலட்சியமாக நினைத்தாள். அவனைப் பற்றி எதுவும் நினைக்காமல் அவனால் பாதிக்கப் படாமல் இயல்பாக இருக்க முயன்றாள். ஆனால் நினைவுகளை யாரால் கட்டுப் படுத்திக் கொள்ள முடியும் ? வேண்டும் வேண்டாம் என்று பாகு பாடு செய்து பொறுக்க முடியும் ? அவன் திசையில் எண்ணங்கள் பாய்வதை அவன் உருவம் மனதில் தோன்றித் தோன்றி மறைவதை அவளால் தவிர்க்க முடியவில்லை.

மாலையில் வீட்டில் உட்கார்ந்து , கேசவனைத் தள்ளுபடி செய்யக் கூடிய காரணங்களை அவள் தேடிப் பார்த்தாள். செக்ஷனில் வேலை செய்யும் பலருள் ஒருவனாக அவனை அசட்டையாகக் கருதி வந்த தன் பழைய மன நிலையை மீண்டும் உருவாக்கிக் கொள்ள முயன்றாள் ஆனால், அதில் அவளால் வெற்றி பெற முடிய வில்லை. கேசவனை ஒரு தனி மனிதனாக குறிப்பிட்ட சில இயல்புகளும் ருசிகளும் போக்குகளும் உள்ளவனாக எல்லாவற்றுக்கும் மேலாக அவளிடம் சிரத்தை கொண்ட ஒருவனாக, பேச்சுக்கள், பார்வைகள் மூலமாக அவளுடைய மனம் ஒருவிதமாக உருவகப் படுத்தி வைத்திருந்தத்து. இந்த உருவகத்தை அவளால் சிதைக்கவோ அழிக்கவோ முடியவில்லை. முகமற்ற , பெயரற்ற ,உருவற்ற, ஜனத்திரளில் ஒருவனாக — அவளை எந்த விதத்திலும் பாதிக்காதவனாக — அவனை மீண்டும் தூக்கி எறிய முடியவில்லை.

‘அவனும் இப்போது என்னைப் பற்றி என்னைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருப்பானோ ? ‘ இருக்கலாம் ; யார் கண்டது ? என்ன விசித்திரமான தப்ப முடியாத விஷயம் இது ? அவள் அனுமதியின்றி , அவளுக்குத் தெரியாமல் , இந்தக் கணத்தில் அவளை அறிந்த பலர் அவளைப் பற்றி பலவிதமாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். அந்த நினைவுகளைப் பற்றி அவளால் எதுவும் தெரிந்து கொள்ள முடியாது. அவற்றை ஒடுக்கவோ மாற்றவோ முடியாது; அவற்றிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ள முடியாது.

என்ன நினைத்துக் கொண்டிருப்பான் கேசவன் ? அவள் கர்வம் பிடித்தவள் என்றா ? இரக்கமற்றவள் என்றா ? எப்படியாவது நினைத்துக் கொள்ளட்டும் — ஆனால் ஆனால் — ஆனால் ஒரு வேளை அவன் ரொம்ப வருத்தப் படுகிறானோ ? தன் தவறுக்காகத் தன்னையே கடிந்து கொண்டு கழிவிரக்கத்தில் உழலுகிறானோ ? இந்தக் கற்பனை அவளுக்கு ஒரு பயத்தையும் சங்கடத்தையும் அளித்தது. ‘ யாரோ என்னைப் பற்றி ஏதோ நினைத்துக் கொண்டு அவஸ்தைப் பட்டால் அதற்கு நானா பொறுப்பாளி ? ‘ என்று சமாதானம் செய்து கொள்ள முயன்றாள். ரேடியோவில் கேட்ட காதல் பாடலிலும், பத்திரிகை விளம்பரத்தில் இருந்த இளைஞன் முகத்திலும் , தன் மனதை ஈடுபடுத்தி கற்பனைகளை திசை திருப்பி விட முயற்சித்தாள். ஆனால், திடாரென்று இவையெல்லாம் உயிரற்றதாக அர்த்தமற்றதாக் வெறும் போலியாக , அவளுக்குத் தோன்றின. உயிரும் இயக்கமும் உள்ள ஓர் உண்மையாக அவள் பார்த்திருந்த — அவளுடன் பேசியிருந்த — கேசவனைச் சுற்றியே மீண்டும் மீண்டும் இந்த மனம் —

மறு நாள் கேசவன் ஆபிசுக்கு வந்தான். ஆனால் அவன் கேசவனாக இல்லை. கலப்பாக இல்லை. சுற்றுமுற்றும் பார்க்காமல், சிரிக்காமல் காரியமே கண்ணாக இருந்தான்.

நீலா அவனுடைய மாறுதல்களைக் கவனித்தவளாய், ஆனால், அதைக் கவனித்ததாகக் காட்டிக் கொள்ளாதவளாய் அமர்ந்திருந்தாள். கேசவன் வாய்ப்புக் கிடைக்கும் போது அவளிடம் ‘ ஐ யாம் சாரி ‘ என்று மன்னிப்புக் கேட்டுக்கொள்ளப் போகிறான் என்று அவள் எதிர்பார்த்தாள். . .ஆனால், கேசவன் ஒரு நாள் லீவில் தன்னைக் கடுமையாக ஆத்ம சோதனை செய்து கொண்டு , பெண்கள் , அவர்களுடைய பார்வைகள், சிரிப்புகள், இவற்றின் அர்த்தங்கள் ஆகியவற்றிலெல்லாம் முற்றும் நம்பிக்கை இழந்த ஒரு விரக்தி நிலை அடைந்திருந்தான், என்பது அவளுக்குத் தெரியவில்லை.

அன்று லஞ்ச் டயத்திற்குப் பிறகு சில நிமிடங்களுக்குச் செக்ஷனில் அவளும் அவனும் மட்டும் தான் தனியாக இருந்தார்கள். அப்போது கேசவன் , தன்னிடம் பேசப் போகிறான் என்று அவள் எதிர் பார்த்தாள். ஆனால் அவன் பேசவில்லை. அடுத்த நாளும், அதற்கடுத்த நாளும் கூட இப்படிப் பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. ஆனால் , கேசவன் எந்த சந்தர்ப்பத்தையுமே உபயோகித்துக் கொள்ள வில்லை.

‘ ரொம்பக் கோபம் போலிருக்கு ! ‘ என்று அவள் நினைத்தாள்.

அவனுடைய விலகிய போக்கும் உஷ்ணமும் — ஆபிஸ் வேலை விஷயமாக அவளிடம் பேச வேண்டி வரும் போது மிக மரியாதையுடன் . முகத்தைப் பார்க்காமல் பேசி விட்டு நகருதலும் அவளுக்கு ரசமாகவும் , வேடிக்கையாகவும் இருந்தன. அதே சமயத்தில் இந்தக் கோபத்தின் பின்னிருந்த ஏமாற்றத்தையும் வேதனையையும் ஊகித்துணரும் போது அவளுக்கு அவன் மேல் இரக்கமாகவும் இருந்தது. ‘சுத்தப் பைத்தியம் ‘ என்று அவள் நினைத்தாள். அவள் நிலை அவனுக்கு ஏன் புரிய மாட்டேன் என்கிறது ? அவள் ஒரு பெண். — விளைவுகளைப் பற்றி சுற்றியுள்ள சமூகத்தின் பார்வையையும் பேச்சுகளையும் பற்றி யோசிக்க வேண்டியவள். எவனோ கூப்பிட்டான் என்று உடனே காபி சாப்பிடப் போக இது என்ன சினிமாவா ? டிராமாவா ?

இப்படியாக, அவன் காப்பி சாப்பிடக் கூப்பிட்டதே தப்பு என்கிற ரீதியில் யோசித்துக் கொண்டிருந்தவள், அவன் அப்படிச் செய்தது சரியாக இருந்தாலும் கூடத் தான் ஏன் அதை ஏற்றுக் கொண்டிருக்க முடியாது ? என்று தனக்குத் தானே நிரூபித்துக் கொண்டு , தன் செய்கை சரிதானா என்று ஸ்தாபித்துக் கொள்ள முயன்றாள். இருந்தாலும் மனதின் அரிப்பையும் , குடைவையும் அவளால் தடுக்க இயல வில்லை. ஒரு வேளை அந்தச் சந்தர்ப்பத்தில் அவள் வேறு வார்த்தைகளை உபயோகப்படுத்தியிருக்கலாமோ ? இன்னும் சிறிது பிரியமாக நடந்து கொண்டிருக்கலாமோ ? அவனைப் புண்படுத்தாமலும் அதே சமயத்தில் தன்னைப் பந்தப் படுத்திக் கொள்ளாமலும், சாதுரியமாக நிலைமையைச் சமாளித்திருக்கலாமோ ?

அவள் தான் இப்படியெல்லாம் ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தாளே தவிர அவன் அவளைப் பற்றி கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. . . அவள் பக்கம் பார்ப்பதையே அவன் நிறுத்தி விட்டான். ஏன், சீட்டில் உட்காரும் நேரத்தையே அவன் கூடியவரை குறைத்துக் கொள்ளத் தொடங்கியிருந்தான். அவனுடைய அலட்சியம் அவளுடைய ராத்தூக்கத்தைக் கெடுத்து விடவில்லை. ஆனாலும் ஒரு சூனிய உணர்வு அவளை அவ்வப்போது பிடித்து உலுக்கத் தான் செய்தது. அவளுக்குள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த ஏதோ ஒரு பல்பு ஃபியூஸ் ஆனதைப் போல இருந்தது. அந்த பல்பு இல்லாமலும் , அவள் இயங்கக் கூடும் . இருந்தாலும் வித்தியாசம் இருக்கத் தான் செய்தது. குறை தெரியத்தான் செய்தது.

அழகு படுத்திக்கொள்வதிலும் , அலங்கரித்துக் கொள்வதிலும் முன் போல ஆர்வமும் உற்சாகமும் காட்ட அவளால் முடிய வில்லை. தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு முயற்சியாக அவை தோன்றின. கனவு இளைஞனை மண்டியிடச் செய்யும் தேஜஸ் வாய்ந்ததாகத் தோன்றிய தன் அழகின் மேல் முன் போல் அவளால் நம்பிக்கை வைக்க முடியவில்லை,. அதன் கவர்ச்சியையும் வல்லமையையும் பற்றி தீர்மானமாகவும் இறுமாப்பாகவும் இருக்க முடிய வில்லை. எதை அஸ்திவாரமாகக் கொண்டு அவள் தடபுடலாக மாளிகை கட்டிக்னாளோ அந்த அஸ்திவாரமே இப்போது சந்தேகத்திற்குரியதாக மாறி விட்டிருந்தது. ‘இவ்வளவு சீக்கிரம் புறக்கணிக்கக் கூடிய சக்தியா அவள் சக்தி ? பைத்தியம் பிடிக்கச் செய்யும் , நிரந்தரமான , விடுபடமுடியாத , போதையிலாழ்த்தும் அழகு இல்லையா அவளுடைய அழகு ? கேசவன் அவளைப் பார்த்து மயங்கியது கூடத் தற்செயலாக நிகழ்ந்தது தானோ ? அல்லது அவன் மயங்கியதாக நினைத்தது கூட அவள் பிரமை தானா ? தன்னை மறந்து ஒரு நிலையில் — ஒரு திடார் உந்துதலில் — அவன் அவளை நெருங்கி வர -, இவள் பைத்தியம் போல அந்த வாய்ப்பை நழுவ விட்டு விட்டாளா ? இனி இது போன்ற வாய்ப்புகள் அவள் வாழ்வில் வர நேருமோ, நேராதோ ? அப்பாவும் அம்மாவும் ஜோசியர்களும், தேர்ந்தெடுக்கும் யாரோ ஒரு — என்ன பயங்கரம் ?

‘நான் முட்டாள் படு முட்டாள் ‘ என்று அவள் தன்னைத் தானே திட்டிக் கொண்டாள். கேசவன் மீசை வைத்திருந்தான். அதனாலென்ன ? சுமாரான நிறம் தான். அதனாலென்ன ? அவன் கேசவன் — அவளுக்குப் பரிச்சயமானவன். மோசமான டைப் என்று சொல்ல முடியாதவன்.

‘உம்! இந்தப் பெண்கள் ! ‘ — காலையில் பஸ்ஸில் ஆபிஸை நெருங்கிக் கொண்டிருந்த கேசவன் அனுபவபூர்வமாகவும், கரை கண்டவனாகவும், புன்னகை செய்து கொண்டான். ‘ இவர்களுக்கு கவனிக்கப் படவும் வேண்டும் கவனிக்கப் படவும் கூடாது. சலுகைகள் எடுத்துக் கொள்ளப்படவும் வேண்டும்; எடுத்துக் கொள்ளப் படவும் கூடாது. காற்றடிக்கவும் வேண்டும்; புடவை பறக்கவும் கூடாது. ‘

‘ இந்தப் பெண்களே ஸ்திர புத்தியற்றவர்கள். மோசக்காரிகள் — பிச்சஸ் – இவர்களை நம்பவே கூடாது ‘ என்று நினைத்தவனாய் அவன் செக்ஷனுக்குள் நுழைந்தான். தண்டபாணி உரத்த குரலி சீனிவாசனிடம் ஏதோ உரக்க வாக்கு வாதம் செய்து கொண்டிருந்தார். கணபதி ராமன் தன் குறை எதையோ குப்பு சாமியிடம் சொல்லி அழுது கொண்டிருந்தார். நீலா . . .

கேசவன் அசட்டையாக அவள் பக்கம் பார்த்தான். திடுக்கிட்டான். அதே புடவை அணிந்திருந்தாள் அவள்., அன்று அவன் காப்பி சாப்பிடக் கூப்பிட்ட போது அணிந்திருந்த அதே புடவை. அவன் அவள் முகத்தைப் பார்த்தான். அவள் பார்வையில் கூத்தாடிய விஷமத்தையும் உல்லாசத்தையும் கவனித்தான். பிறகு, உதட்டைக் கடித்துக் கொண்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டான். இல்லை, மறுபடியும் ஏமாறத் தயாராய் இல்லை அவன்.

அட்டெண்டன்ஸ் மார்க் பண்னி விட்டு அவன் தன் இடத்தில் போய் உட்கார்ந்தான். ஃபைல் ஒன்றைப் பிரித்தான். ,. ‘ கிளிங் . .கிளிங்.. ‘ என்ற வளையல் ஓசை — அவன் நிமிரவில்லை. ‘ பெரிய மகாராணி ‘ என்று நினைத்தான். இவள் இஷ்டப் படி போடும் விதிகளின் படி நான் விளையாட வேண்டும் போலிருக்கிறது. அவள், அவன் கவனத்தைக் கவர முயற்சிப்பதும் , அவன் இதை மெளனமாக எதிர்ப்பதுமாக சில நிமிடங்கள் ஊர்ந்தன. திடார் என்று பியூன் பாராங்குசம் கையில் ஒரு காப்பித் தம்ளருடன் செக்ஷனுக்குள் நுழைந்தான். ஒரு தம்ளரை நீலாவின் மேஜை மேல் வைத்தான். இன்னொன்றை கேசவன் மேஜை மீது வைக்குமாறு அவள் ஜாடை காட்டவும், பாராங்குசம் அப்படியே செய்தான்.

கேசவன் நிமிர்ந்தான் — ‘என்னப்பா இது ? ‘

‘ நான் தான் வாங்கி வரச் சொன்னேன் ‘ என்றாள் நீலா. புன்னகையுடன் , ‘ யூ லைக் காபி, நோ ? ‘

கேசவன் திணறிப் போனான் . இப்படி ஒரு சந்தர்ப்பத்தை அவன் எதிர் பார்க்க வில்லை. இப்படி நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்று கணக்குப் போட்டிருக்கவில்லை. உஷ்ணமாக ஏதாவது சொல்ல வேண்டும் போலிருந்தது.

‘ காப்பி சாப்பிடுங்க சார். ஆறிப் போயிடும் ‘ என்றான் பராங்குசம்.

அவன் குடிக்கப் போவதை எதிர் பார்த்து நீலா தம்ளரைக் கையில் எடுத்து அவனுடன் சேர்ந்து குடிப்பதற்காகக் காத்திருந்தாள். அவள் விழிகளிலிருந்த நிச்சயமும் நம்பிக்கையும்! கேசவன் தான் தோற்று விட்டதை உணர்ந்தான். காப்பியை அருந்தத் தொடங்கினான். அவளிடம் ஏதேதோ கோபப் பட வேண்டும் விஷயங்களைத் தெளிவு படுத்த வேண்டும் என்று அவன் விஸ்தாரமாக யோசித்து வைத்திருந்தான். ஆனால் இப்போது எல்லாமே அநாவசியமானதாக, அர்த்தமற்றதாகத் தோன்றின. அவள் அருகில் சுமுகமான நிலையில் இருப்பதே போதும் என்று தோன்றியது.

‘காப்பிக்காக தாங்ஸ் ‘ என்றான் அவன்.

‘குடித்ததற்காக தாங்க்ஸ் ‘ என்றாள் அவள்.அதற்கு மேலும் ஏதாவது சொல்ல வேண்டுமென்று துடித்தவளாய் , ஆனால், தவறாக எதையும் சொல்லி விடக் கூடாதே என்று தயங்கியவளாய் அவள் ஒரு புன்னகை மட்டும் செய்தாள். அவனுக்கும் பதிலுக்குப் புன்னகை செய்தான்.

ஒருவரையொருவர் ஜெயிக்க நினைத்தார்கள். ஒருவரிடம் ஒருவர் தோற்றுப் போய் உட்கார்ந்திருந்தார்கள்.

(முற்றும்)

 

 

  Thinnai 2000 June 18

திண்ணை

Series Navigation

{ Comments are closed }