சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் – 2

This entry is part of 7 in the series 20000611_Issue

ஆதவன்


அன்று மாலை கனாட் பிளேஸ் கஃபேயில் நண்பர்களுடன் அமர்ந்து காபி அருந்தும் போதும் , பிறகு ஒரு எழுபது மி மி . சினிமாத்தியேட்டரில் பானாவிஷன் பிம்பங்களை ‘ஸ்டாரியோஃபோனிக் ‘ ஒலிப் பின்னணியில், காணூம் போதும் , கேசவனின் மனத்தில் திடார் என்று நீலாவின் உருவம் தோன்றிக் கொண்டிருந்தது. ‘இன்று இவள் ரொம்பவும் அலட்டிக் கொள்வது போலிருந்ததே — என்னிடம் ஏதேதோ தெரிவிக்க முயலுவது போலிருந்ததே — என் பிரமை தானோ ? ‘ என்று அவன் நினைத்தான். ஒரு வேளை இவளுக்கு என்மேல் காதல் .. . கீதல் . . . ?

இந்த எண்ணம் அவன் முகத்தில் புன்னகையைத் தோற்றுவித்தது. ஒரு பெருந்தன்மையான கருணை நிரம்பிய புன்னகை — ‘பாவம், பேதை! ‘ என்பதைப் போல ‘ இவள் குற்றமில்லை நான் ரொம்ப அட்ராக்டிவாக இருக்கிறேன். தட் ஈஸ் தி டிரபிள்… ‘ என்று அவன் நினைத்தான்.

திடாரென்று அவளுடைய இங்கிலீஷ் உச்சரிப்பு நினைவு வரவே, அவனுடைய புன்னகை அதிகமாகியது. ‘சில்லி புரனன்ஷியேஷன்! ‘ என்று நினைத்தான். திரையில் அட்ரி ஹெப்பர்ன் அழகாக குழந்தைத் தனமாகச் சிரித்தாள். கேசவனுக்கு அப்படியே அவளை கிஸ் பண்ணவேண்டும்போல் இருந்தது. சினிமாவிலிருந்து வெளியே வந்து சிகரெட்டை உறிஞ்சி இப்புகையை ஊதித் தள்ளியபோது அவன் கேசவனாக இல்லை. இந்த நாட்டில் இல்லை. பீட்டர் ஓட்டூலாக மாறி, நியூயார்க் வீதியில் நடந்து கொண்டிருந்தான். அட்ரி ஹெப்பர்னின் சாயலை எதிரே வந்த பெண்களின் முகங்களில் தேடிக்கொண்டிருந்தான். அவனுக்கு மிகவும் பிரியமான நடிகை ஆட்ரி ஹெப்பர்ன் தான். அதற்கு அடுத்தபடி சோபியா லாரன்; பிறகு, ஷெர்லி மெக்லைன்.

அவனுடைய வாழ்க்கைத் துணைவியின் இலட்சிய உருவகம் இந்த பிரியமான நடிகைகளின் சாயல்களில் இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் என்று சிதறிக் கிடந்தது. புடவை, டூத் பேஸ்ட் விளம்பரங்களில் சிரிக்கும் வனிதைகளில் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது. கனாட் ப்ளேஸ் வராந்தாக்களில் காணும் சில முகங்கள், சில நடைகள், சில சிரிப்புகள், சில அபிநயங்கள், இவற்றில் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது. இந்த வெவ்வேறு துணுக்குகளைச் சேர்த்துப் பார்த்தால், அவன் விரும்பியவள் எப்படிப் பட்டவளாக இருப்பாள் என்று ஒரு வேளை புலப்படக்கூடும். ஆனால், அவன் இதுவரை இந்த முயற்சியில் ஈடுபடவில்லை. தன்னுடைய நிச்சயமின்மை அவனுக்குப் பிடித்திருந்தது. அந்தந்தக் கணத்தில் ஆங்காங்கே எதிர்ப்படும் அழகுகளில் சுவாதீனமாக லயித்து ஈடுபட அனுமதித்த அவனுடைய சுயேச்சைத் தன்மை அவனுக்குப் பிடித்திருந்தது. ஒரு குறிப்பிட்ட பிம்பத்துக்கு அடிமையாகி தன் பார்வைக்கும் இலக்குகளுக்கும் எல்லைகள் வகுத்துவிட அவனுக்கு விருப்பமில்லை. ‘காதலென்பது வாழ்நாள் முழுவதும் ஒருவன் ஈடுபடும் இடையறாத தேடல் ‘ என்னும் ரொமாண்டிக் ஐடியா அவனுக்குப் பிடித்திருந்தது. அவனுடைய பெற்றோருக்கு வேண்டுமானால் பாட்டுப்பாடத் தெரிந்த தோசை அரைக்கத் தெரிந்த எவளாவது ஒருத்தி வந்தால் போதுமானதாக இருக்கலாம். ஆனால் அவனுக்கு வாழ்க்கை வெறும் மோர்க்குழம்பும் தோசையும் அல்ல. சீமந்தமும் தாலாட்டும் அல்ல…. இதற்கெல்லாம் அப்பாற்பட்டது. மேம்பட்டது. இந்த மேம்பட்ட சிகரங்களை அவன் எட்டமுடியாமலேயே போகலாம் – அது வேறு விஷயம். ஆனால் இவற்றை எட்டக்கூடிய சுதந்திரத்தை அவன் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். இது அவசியம்.

‘மிஸ் நீலா ! என்னை நீங்கள் காதலிக்கும் பட்சத்தில், பாவம் , உங்கள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள்! ‘ என்று அவன் நினைத்தான்.

மறு நாளிலிருந்து மறைத்துக் கொள்ளப் பட்ட ஆர்வத்துடனும், பரபரப்புடனும் அவர்கள் ஒருவரையொருவர் கவனிக்கத் தொடங்கினார்கள். கண்காணிக்கத் தொடங்கினார்கள். ‘கேசவன் தன் அழகை ரசிக்கிறானோ ? ‘ என்று நீலா கவனித்தாள். ‘இந்தப் பெண் என்னை பக்தியுடன் பார்க்கிறதோ ? ‘ என்று கேசவன் கவனித்தான். இருவருமே தான் கவனிப்பது எதிராளிக்குத் தெரியாது என்றும் , தம்மைப் பாதிக்காமல் தம்மைக் காப்பாற்றிக் கொண்டு தாம் மட்டும் எதிராளியைப் பாதித்து விட்டதாகவும் நம்பினார்கள். இந்த நம்பிக்கையில் குதூகலமும் பெருமையும் அடைந்தார்கள். வெற்றியின் பெருமை, வெற்றியின் கர்வம். நீலாவிடம் எத்தனை விதமான நிறங்களில் , எத்தனை விதமான டிசைன்களில் புடவைகள் இருந்தன என்பதை கேசவன் முதன் முதலாகக் கண்டு பிடித்தான். அவள் காதுகளைத் தலை மயிருக்குள் ஒளித்துக் கொள்ளும் விதம் , வயிற்றுப் பாகம் மறையும் படியாகப் புடவைத்தலைப்பை இடுப்பில் நட்டுக் கொண்டு பிறகு தோலில் படர விட்டிருந்த நாசூக்கு., அவள் பேச்சிலிருந்த ஒரு லேசான மழலை. அவள் விழிகளிலும் பாவனைகளிலும் கரைந்து விடாமல் தேங்கிக் கிடந்த ஒரு குழந்தைத் தனமும் பேதமையும் – இவற்றையெல்லாம் அவன் நுணுக்கமாகக் கவனிக்கத் தொடங்கினான்.

தன் கவனத்தைக் கவர, நீலா ரொம்பவும் பிரயாசைப் படுகிறாள் என்று கேசவன் நினைத்தான். ஆனால், ‘நானா கவனிப்பவன் ? ‘ என்று அவளைக் கவனித்துக் கொண்டே, அவன் நினைத்தான்.

‘ஒரு நாளில் கிட்டத்தட்ட ஐம்பது அல்லது அறுபது தடவையாவது , கேசவன் என்பக்கம் பார்க்கிறான் ‘ என்று நீலா நினைத்தாள். தன் அழகுக்கும் கவர்ச்சிக்கும் ஓர் எளிய பக்தன் அளித்த சிறு காணிக்கையாக இதை அவள் திரஸ்கரிக்காமல் ஏற்றுக் கொண்டாள். ‘தன்னுடைய கனவு இளைஞனை அவள் சந்திக்கும் போது, இந்தக் குட்டி பக்தனைப் பற்றி அவனிடம் சொல்லிச் சிரிப்பாள் அவள். கேசவன் அவளைப் பார்க்கப் பார்க்க, கனவு இளைஞனைப் பற்றிய அவளுடைய நம்பிக்கைகளும் ஆசைகளும் மேன் மேலும் உறுதிப் பட்டன. அவளுடைய அழகின் வல்லமையும் , சாத்தியக் கூறுகளும் தெளிவாயின. மறு முறை பார்ககத் தூண்டும் பிரமிக்க வைக்கும் உருவம் அவளுடையது. வடிவம் அவளுடையது. கனவு இளைஞன் அவளை நிச்சயம் தவற விடப் போவதில்லை — எத்தகைய அதிர்ஷ்டசாலி அவன்!.

செக்ஷனில் இருந்த மற்றவர்கள் மீது அவளுக்கு இருந்த கோபம் கூட இப்போது குறையத் தொடங்கியது. ஏனென்றால் அவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லும் போதெல்லாம் — ஏதாவது ஒரு காரியமாக அவர்களை நோக்கி நடக்கும் போதெல்லாம் அவள் உண்மையில் கேசவனுக்காகத் தான் பேசினாள்; கேசவனுக்காகவே நடந்தாள். அவளைச் சுற்றியிருந்த உண்மைகள் திடாரென மறைந்து விட்டிருந்தன. கனவு இளைஞனுக்காகப் போற்றி வந்த அவளுடைய உலகம் ஆகி விட்டிருந்தன.

கேசவனுடைய கண்களிலும் உலகம் மாறித்தான் போயிருந்தது. திடாரென்று தன்னுடைய முக்கியத்துவத்தை பிரத்தியேகத் தன்மையை — அவன் உணர்ந்தான். காலரியில் உட்கார்ந்து கைதட்டும் பெயரற்ற பலருள் ஒருவனாக — ஒரு நடிகையின் பல உபாசகர்களுள் ஒருவனாக — நடைபாதைகளில் மிகுந்து செல்லும் அழகிகளின் பார்வைத்தெளிப்புகளையும் வர்ணச் சிதறல்களையும் பொறுக்கிச் சேர்க்கும் பலவீனர்களுள் ஒருவனாக இருந்தவன், திடாரென்று இந்தக் கும்பல்களிலிருந்து தான் விலகி விட்டதை உணர்ந்தான். தன் ஒருவனுடைய ரசனைக்காகவும், பாராட்டுக்காகவும் மட்டுமே ஒரு அழகு தினந்தோறும் மலருவதை உணர்ந்தான். அவனுக்காகவே எழுப்பப் படும் கவிதை; வரையப் படும் ஓவியம்; இசைக்கப் படும் இசை. — அவனுக்காக மட்டுமே ஸ்கிரிப்ட் செய்யப்பட்டு, டைரக்ட் செய்யப்பட்டு, திரையிடப் படும் ஒரு படம் — எவ்வளவு அபூர்வமான கர்வப் பட வேண்டிய விஷயம்.!

சில சமயங்களில் அவனுக்கு உற்சாகத்தைக் கட்டுப் படுத்திக் கொள்ளவே முடியாதென்று தோன்றியது. சாலையில் எதிர்ப்படும் முன் பின் அறியாதவர்களையெல்லாம் நிறுத்தி, விஷயத்தைச் சொல்ல வேண்டும் போல இருந்தது. அடுக்கு மாடிக் கட்டடத்தின் உச்சியில் போய் நின்று கொண்டு , மேகங்களிடம் தன் ரகசியத்தைப் பீற்றிக் கொள்ள வேண்டும் போலிருந்தது. அவன் தனியானவன்; வேறு பட்டவன்; வேறு யாருக்குமே கிடைக்காத இரு வாய்ப்பையும், ஒரு கெளரவத்தையும், அதன் மதிப்பு எப்படி இருந்தாலும் பெற்றவன்.

கேசவன் கவலைப் படத் தொடங்கினான்.

கவலைகளற்ற சுதந்திரப்பட்சி என்று மற்றவர்களால் கருதப்பட்டவன், திடாரென்று தன் விருப்பமின்றியே ஓர் அதிசயமான சிறையில் அடைபட்டுவிட்டதை உணர்ந்தான்; கரைகளற்ற நீர்ப்பரப்பில், அலைகளின் போக்குக்கேற்ப அலைந்து திரிந்த படகாக இருந்தவன் திடாரென்று ஒரு கரையருகில் ஒரு முனையில் தான் கட்டப்பட்டுவிட்டதை உணர்ந்தான். இந்த மாறுதலை அவனால் முழுமனதாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதே சமயத்தில் இதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவும் முடியவில்லை! ஒரு கோணத்திலிருந்து பார்க்கும்போது இது மகத்தான தோல்வியாகவும் வீழ்ச்சியாகவும் தோன்றியது. ஆனால்-

ஆனால், இந்தத் தோல்வியில் ஒரு கவர்ச்சியும் இருந்தது. ஒரு மர்மமான ஆழமும் அழகும் இருந்தன. அந்தத் தோல்வியை நேருக்குநேர் சந்திக்கவும் பயந்து கொண்டு வந்த வழியே திரும்பிச் செல்லவும் மனம் வராமல், அவன் குழம்பினான்; தவித்தான்.

ஒரு நாள் சினிமாத் தியேட்டரில் சினேகிதிகளுடன் வந்திருந்த நீலாவைப் பார்த்து அவன் சிரித்தான்; அவளும் சிரித்தாள். அவனுக்கு தைரியம் வந்தது. செக்ஷனில் சிரிப்புக்கான சந்தர்ப்பங்கள் வரும்போதெல்லாம் வேடிக்கைப்பேச்சுகளும் கலகலப்பும் ஏற்படும்போதெல்லாம் அவர்களுடைய பார்வைகள் ஒன்றையொன்று நாடின. அவர்களுடைய புன்னகைகள் மோதிக்கொண்டன. மின்சார அலை போல ஒன்று அவர்களிடையே எப்போதும் ஓடிக்கொண்டே இருந்தது. அவள் பார்வைக்கு ஒரு அர்த்தம்தான் இருக்க முடியும். அவள் புன்னகைக்கு ஒரு அர்த்தம்தான் இருக்கமுடியும். ஆனாலும் அவனால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. பிறகு, அவன் நினைத்தான்- இவள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்ட பிறகு, நான் ஏன் வீணாக யோசிக்கவேண்டும் ? எனக்கும் சேர்த்து இவள் முடிவு செய்ததாக இருக்கட்டும். இவளுக்கு நான் ஏன் ஏமாற்றத்தை அளிக்கவேண்டும் ? ஒரு பெண்ணின் மனத்திருப்தியை விட என் அழகின் தேடல் தானா பெரிது ? ஓர் உடைந்த இதயத்தின் பாவத்தை மனச்சாட்சியில் சுமந்து கொண்டு குற்றம் சாட்டும் இரு விழிகளை நினைவில் சுமந்து கொண்டு, எந்த அழகை என்னால் ரசிக்க முடியும் ? எதில்தான் முழு மனதாக லயித்து ஈடுபட முடியும் ? நான் நன்றாக மாட்டிக்கொண்டு விட்டேன். காலியாக நிர்மலமாக இருந்த என் மனத்தை ஒரு குறிப்பிட்ட பிம்பம் பூதாகாரமாக அடைத்துக் கொண்டு விட்டது- இனி செய்வதற்கு ஒன்று தான் இருக்கிறது –

ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது; கேசவன் முடிவுக்கு வந்துவிட்டான்.

ஒருநாள் மாலை நீலா ஆபீசைவிட்டுக் கிளம்பும்போது கேசவனும் கூடவே கிளம்பினான். அவள் முகம் சுளிக்காதது அவனுக்குத் தெம்பை அளித்தது.

‘வீட்டுக்கா ? ‘ என்றான். அசட்டுக்கேள்விதான்.

‘ஆமாம் ‘

‘எங்கேயாவது போய் காபி சாப்பிடுவோமே ? ‘

அவள் இதை எதிர்ப்பார்க்கவில்லை என்று தெரிந்தது. முகத்தில் குப்பென்று நிறம் ஏறியது. சமாளித்துக்கொண்டு ‘இல்லை; நான் வருவதற்கில்லை ‘ என்றாள்.

‘ஏன் ‘

‘ஒரு வேலை இருக்கிறது ‘

‘நான் நம்பவில்லை ‘

அவள் பதில் பேசாமல் நடந்தாள். கேசவனுக்குத் தாளவில்லை. இவ்வளவு நாள் யோசித்து யோசித்து – சே! இதற்குத்தானா ?

‘ப்ளீஸ்! ‘ என்று அவன் உணர்ச்சி வசப்பட்டவனாய் அவள் கையைப் பிடித்தான். அவ்வளவுதான். வெடுக்கென்ற உதறலுடன் தன் கையை விடுவித்துக் கொண்டு அவனை நோக்கி ஒரு முறை முறைத்துவிட்டு, அவள் சரசரவென்று வேகமாக நடந்தாள்.

கேசவன் அவள் நடந்து செல்வதைப் பார்த்தவாறு நின்றான்.

‘சீ! என்ன துணிச்சல்! ‘ – பஸ் ஸ்டாண்டில் நிற்கும்போது, உடை மாற்றிக்கொண்டு கையில் பத்திரிக்கையுடன் அமரும்போது, அவளுக்கு கேசவன் மேல் கோபம் கோபமாக வந்தது. இடியட்! என்ன நினைத்துக்கொண்டிருக்கிறான் இவன்! எப்படிப்பட்டவளென்று நினைக்கிறான் இவன் அவளை ? காபி சாப்பிட வேண்டுமாம், அதுவும் இவனுடன். என்ன ஆசை ? என்ன … கொழுப்பு! கையை வேறு பிடித்து –

சே! நல்லதுக்குக் காலமில்லை. அவளைச் சுற்றிலும் இறுக்கமும் வறட்சியும் இல்லாமல் சற்றே சந்தோஷத் தென்றல் வீசட்டும் என்று – அழகின் ஒளிக்கற்றைகள் இருந்த இடங்களில் எல்லாம் பாயட்டும் என்று அவள் சுயநலமின்றிச் சிரித்துப் பேசினால், இப்படியா ஒருவன் தப்பர்த்தம் செய்து கொள்வான் ? முட்டாள்தனமாக நடந்து கொள்வான்!

தன் குட்டி பக்தனை அவள் சிறிதும் மன்னிக்கத் தயாராக இல்லை;

அவனுக்காகவென்று அவள் வகுத்திருந்த சில எல்லைகளை அவன் மீறிவிட்டதாக அவள் நினைத்தாள். நடை வாசலில் நின்று கொண்டிருக்க வேண்டியவன், கர்ப்பக்கிருகத்துக்குள் திபுதிபுவென்று நுழைந்திருக்கக்கூடாதென்று நினைத்தாள். பரிசுத்தமான மனசுடன் அவள் தன் ஜன்னல்களைத் திறந்து வைத்தாள் என்பதற்காக, அவன் உரிமையுடன் ஜன்னலைத் தாண்டி உட்புறம் குதிக்க முயற்சித்திருக்கக்கூடாதென்று நினைத்தாள். எல்லாமே கேசவனின் குற்றத்தையும் அவளுடைய குற்றமின்மையையும் ருசுப்படுத்தும், ஸ்தாபிக்கும், எண்ணங்கள்.

அவன் தான் குற்றவாளி; அவளுடைய நல்ல எண்ணங்களைத் தவறாக புரிந்து கொண்ட குற்றவாளி. இனி இவனிடம் பேசவே கூடாதென்று மறுநாள் ஆபீசுக்குக் கிளம்பும்போது அவள் முடிவு செய்தாள்.

அன்று கேசவன் ஆபீசுக்கு வரவில்லை

(தொடரும்)

 

 

  Thinnai 2000 June 11

திண்ணை

Series Navigation