சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் – 1

This entry is part of 2 in the series 20000606_Issue

ஆதவன்


சிவப்பாக உயரமாக மீசை வசுக்காமல் – தனக்கு வரப் போகிறவனைப் பற்றிய இந்த மங்கலான உருவம் இப்போது சில நாட்களாக நீலாவின் மனதில் அடிக்கடி ஊசலாடத் தொடங்கியிருந்தது.

வயது இருபத்தி இரண்டு. பெண்குழந்தை . வீட்டில் வரன் பார்க்கத் தொடங்கி விட்டிருந்தார்கள். ஜாதகம், பூர்வீகம், குலம், கோத்திரம், பதவி, சம்பளம் — இத்யாதி . இந்த முயற்சிகளும் அதன் பின்னிருந்த பரிவும் கவலையும் அவளுக்கு ஒரு விதத்தில் பிடித்துத் தானிருந்தது. என்றாலும், இது சம்பந்தமாக அவளுடைய இளம் மனதிலும், சில அபிப்பிராயங்களும், கொள்கைகளும் இருக்கக் கூடும் என்றோ அவற்றுக்கு ஒரு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றோ தன் பெற்றோர் சிறிதும் நினைக்காதது அவளுக்குச் சற்று எரிச்சலையும் அளித்தது. அதே சமயத்தில் இது சம்பந்தமாகத் தன்னை அவர்கள் விசாரித்தால் தன்னால் தீர்மானமான துல்லியமானதொரு பதிலைச் சொல்ல முடியுமா என்றும் சந்தேகமாகவும் இருந்தது. பெரியோர்களுடைய கருத்துக்கள் எவ்வளவுக்கெவ்வளவு திடமான கன பரிமாணங்களும் உண்மையின் தீவிரமும் உடையதாக இருந்தனவோ , அவ்வளவுக்கவ்வளவு அவளுடைய கருத்துக்கள் அவளுக்கே புரியாததொரு புதிராகவும், பிறர் கேட்டால், சிரிப்பார்களோ என்ற பயத்தை மூட்டுபவையாகவும் இருந்தன.

அவன் சிவப்பாக இருந்தான். அவளுடைய கனவுகளில் இடம் பெற்றிருந்த இளைஞன் சிவப்பென்றால் ஆங்காரச் சிவப்பு இல்லை. மட்டான, பதவிசான சிவப்பு. அவன் உயரமாக இருந்தான் — நீலாவை விட ஓரிரு அங்குலங்கள் உயரமாக. அவள் செளகரியமாக தன் முகத்தை அவன் மார்பில் பதித்துக் கொள்ளக் கூடிய உயரம். வெட்கத்தில் தாழ்ந்திருக்கும் அவள் பார்வை சற்றே நிமிரும் சமயங்களில் அவளை உவகையிலும் சிலிர்ப்பிலும் ஆழ்த்தும் உயரம். கடைசியாக ஆனால் முக்கியமாக அவனுக்கு மீசையோ தாடியோ இருக்கவில்லை. மழு மழுவென்று ஒட்ட ஷவரம் செய்யப்பட்ட சுத்தமான மாசு மறுவற்ற முகம் அவனுடையது. அந்த இளைஞனுடன் அவன் தன் கனவுகளில் தனக்கு மிகவும் பரிச்சயமான இடங்களிலும் , தான் பார்த்தேயிராத பல புதிய இடங்களிலும் மீண்டும் மீண்டும் அலைந்து திரிவான். ஜோடியாக அவர்கள் பார்த்து மகிழ்ந்த பேச்சுக்கள் தான் எத்தனை . ஆனால் அந்தக் கனவு இளைஞன் எவ்வளவுக்கு எவ்வளவு அருகில் இருப்பதாகத் தோன்றினானோ அவ்வளவுக்கு அவ்வளவு எட்டாத் தொலைவில் இருப்பதாகவும் தோன்றினான். எவ்வளவுக்கு எவ்வளவு அவனைப் பற்றித் தெரியும் என்று தோன்றியதோ அவ்வளவுக்கு அவ்வளவு அவனைப் பற்றித் தெரியாதென்றும் தோன்றியது. ஓயாமல் அலை பாயும் நீர்ப் பரப்பில் கோணல் மாணலாக நெளியும் ஒரு பிம்பம் அவன்; வேகமாகச் சென்று மறைந்து விட்ட பஸ் ஜன்னலில் பார்த்த முகம் — அவள் அவனைப் பார்க்கவும் செய்தாள்; பார்க்கவும் இல்லை.

நீலா ஒரு சர்க்கார் ஆபிஸில் வேலை பார்த்து வந்தாள் – குமாஸ்தாவாக. அவளுடைய ஆபிஸில் நிறைய இளைஞர்கள் இருந்தார்கள். ஏன் அவளுடைய செக்ஷனிலேயே ஒருவன் இருந்தான். எல்லாம் — அவள் பார்வையில் — படு சாதாரணமாக ‘ச்சீப் ஃபெல்லோஸ் ‘. அவளைப் போன்ற ஓர் அரிய ரத்தினத்தைப் புரிந்து கொள்ளவோ, அதன் அருமையை அறிந்து போற்றிப் பாதுகாக்கவோ லாயக்கில்லாதவர்கள். இந்த மட்ட ரகமான கும்பலிலிருந்து அவளுக்கு விடுதலை அளிப்பதெற்கென்று அவதாரம் எடுத்திருப்பவன் தான் அவளுடைய கனவு இளைஞன்.

‘ஓ என் அன்புக்குரியவனே, எங்கிருக்கிறாய் நீ ? நான் கேட்கும் பாடல்களைக் கேட்டுக் கொண்டு , படிக்கும் பத்திரிகைகளைப் படித்துக் கொண்டு , நடக்கும் சாலைகளில் நடந்து கொண்டு , கவனிக்கும் போஸ்டர்களைக் கவனித்துக் கொண்டு பயணம் செய்யும் டாக்ஸிகளிலுல், ஆட்டோ ரிக்ஷாக்களிலும் பயணம் செய்து கொண்டு , ஏறியிறங்கும் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி, உபயோகிக்கும் ஹேர் ஆயிலையும், டூத் பேஸ்டையும் உபயோகித்துக் கொண்டு , அருந்தும் பானங்களை அருந்திக் கொண்டு , என்னைத் தாக்கும் ஓசை, மணங்களினால் தாக்கப் பட்டு , சிலிர்க்க வைக்கும் காட்சிகளைக் கண்டு சிலிர்ப்பில் ஆழ்ந்து, வியர்க்க வைக்கும் வெயிலில் வியர்த்துக் கொண்டு, விசிறும் தென்றலினால் விசிறப்பட்டு, நனைக்கும் மழையிலும் நிலவொளியிலும் நனைந்து கொண்டு, பீடித்திருக்கும் இதே கனவுகளினால் பீடிக்கப் பட்டவனாய் எங்கிருக்கிறாய் நீ ? வா, வந்து விடு, ப்ளீஸ் என்னை ஆட்கொள். என்னைக் காப்பாற்று, என்ன்னைச் சுற்றியிருக்கும் இந்த மனிதர்களிடமிருந்து, இந்த இடங்களிலுருந்து, இந்தப் பொருள்களிலிருந்து, என்னிடமிருந்தே .. . . ‘

ஆர்ப்பரிக்கும் எண்ண அலைகள், திமிறித்துள்ளும் உள்ளம்.

தினசரி காலையில் பஸ் ஸ்டாண்டில், ஒரரு நீண்ட க்யூவின் மிகச் சிறிய பகுதியாகத் தன்னை ஆக்கிக் கொள்ளும் கணத்தில் , அவளுடைய இதயத்தை ஒரு விவரிக்க முடியாத சோகமும், தவிப்பும் கவ்விக் கொள்ளும் – – ‘இதோ மீண்டும் இன்னொரு நாள், நான் பஸ் ஸ்டாண்டில் வந்து நிற்கிறேன்; பஸ்ஸில் ஏறிப் போகிறேன். — சலித்துப்போன இதே பழைய முகங்களுடன் ‘ என்று அவள் நினைத்துக் கொள்வாள். சாலையில் படபடவென விரையும் கார்கள் ஸ்கூட்டர்கள், இவற்றை அவளுடைய பார்வை ஆற்றாமையுடன் துரத்தும். துழாவும். பஸ்ஸில் செல்லும் போது பஸ்ஸை ஓவர்டேக் செய்து கொண்டு செல்லும் வாகனங்களையும், இந்த வாகனங்களுக்குள் அமர்ந்திருக்கும் மனிதர்களையும், அவளுடைய பார்வை நீவும்.; அணைக்கும். இந்தக் கார்கள், ஸ்கூட்டர்கள், அதோ அந்தப் போர்ட்டிகோக்கள், பார்க்கிங் லாட்கள், அடுக்கு மாடிக் கட்டடங்கள், ஜன்னல்கள், – – இவை உள்ள உலகம் தான் கனவு இளைஞன் வசித்த உலகம். பஸ் கியூக்களுக்கும் , டிபன் பாக்ஸ்களுக்கும் அப்பாற்பட்ட உலகம். நீண்ட கியூக்களில் கூட்டமான பஸ்களில் , நிரந்தரமாகச் சிறையாகிப் போன அவளை , அவன் எப்படித்தான் கண்டுகொள்ளப் போகிறானோவென்று அவள் பெருமூச்செறிவாள். அவள் கையிலிருந்த- -, நேற்று ஆபிஸ் கிளப்பிலிருந்து எடுத்து வந்திருந்த – – பத்திரிகையின் பின்னட்டையில் , சிகரெட் விளம்பரத்தில் , தன்னைப் போன்ற பெண்ணொருத்தியை ஒரு கையால் அனைத்தவாறு, இன்னொரு கையில் சிகரெட்டை ஒயிலாகப் பிடித்திருக்கும் இளைஞன் கூட ஓரளவு கனவு இளைஞனின் சாயலுள்ளவன் தான். சிகரெட் ஷேவிங் லோஷன், ஹேர் ஆயில் விளம்பரங்களில் இடம் பெறும் இந்த இளைஞர்கள் கூடவெல்லாம் பேச முடிந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்.! இவர்கள் கனவு இளைஞனின் நண்பர்களாய்த் தான் இருப்பார்கள். அவனுடைய விலாசம் இவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

பிறகு ஆபிஸ் . கையிலிருந்த பத்திரிகையைக் குப்பு சாமியின் மேஜை மீது வைத்துவிட்டு , அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்தரில் கையெழுத்திட்டு விட்டு , அவள் தன் இடத்தில் உட்காருவாள். செக்ஷனில் வேலை செய்யும் சிலர் ஏற்கனவே வந்திருப்பார்கள். மற்றவர்களும் ஒவ்வொருவராக வந்து உட்காருவார்கள். வேலை தொடங்கும். இரவெல்லாம் நிசப்தமாக நிச்சலனமாக இருந்த அந்த அறை திரை தூக்கப்பட்ட நாடக மேடை போலக் குபுக்கென்று உயிர் பெற்று விழித்துக் கொள்ளும். — குரல்கள், ஓசைகள், அசைவுகள் — நிற்கும் நடக்கும் , உட்காரும் மனிதர்கள், இவர்களை இணைக்கும் சில பொதுவான அசேதனப் பொருட்கள். படபடவெனப் பொரிந்து தள்ளும் டைப்ரைட்டர்கள், சரசரக்கும் , மொடமொடக்கும் காகிதங்கள் , இக்காகிதங்களின் மேல தம் நீல உதிரத்தை எழுத்து வடிவங்களாக உகுத்தவாறு தாவும், ஊறும் தள்ளாடும் பேனாக்கள் , கிரிங்க். . கிரிங்க். . எனத் தன் இருத்தலையும் ஹோதாவையும் அடிக்கடி கர்வத்துடன் பறைசாற்றும் தொலைபேசி பொத் பொத்தென்று வைக்கப் படும் திறக்கப் படும் ரெஜிஸ்தர்கள், டபால் டபால் என்று திறக்கப் படும் மூடப் படும் இழுப்பறைகள் , அலமாரிகள் , தரையுடன் உராயும் நாற்காலிக்கால்கள், காற்றில் சுவரில் உராயும் ஒரு காலண்டர், ஒரு தேசப்படம் ஒன்றோடொன்று உராயும் மோதும், இணையும் , இணையாத ஒலிகள். . .

ஒரே விதமான ஓசைகளின் மத்தியில் , ஒரே விதமான மனிதர்களின் மத்தியில் , ஒரே விதமான வேலையைச் செய்துகொண்டு – – சே! இதில் பிரமாதமான கெடுபிடியும் , அவசரமும் வேறே .. . ‘ மிஸ் நீலா! டெபுடேஷன் ஃபைல் கடைசியாக யார் பெயருக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப் பட்டிருக்கிறது ? ‘ ‘மிஸ் நீலா! ஆர். வி. கோபாலன் டிரான்ஸ்ஃபர் ஆர்டர் டிஸ்பாச்சுக்குப் போய் விட்டதா ? ‘ ‘மிஸ் நீலா! பி.என் (பென்ஷன் ) தலைப்பில் புதிய ஃபைல் திறக்க அடுத்த நம்பர் என்ன ? ‘ கேள்விகள், கேள்விகள், கேள்விகள். அவர்கள் தன்னைக் கேட்காத போது , அவள் தன்னையே கேட்டுக் கொள்வாள். . .மிஸ் நீலா! உனக்கு ஏன் பைத்தியம் பிடிக்க வில்லை ? மிஸ் நீலா! நீ எதற்காக இந்த அறையில் இந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறாய் ? மிஸ் நீலா ! உனக்கும் இந்த மனிதர்களுக்கும் என்ன சம்பந்தம் ?

விதம் விதமான மனிதர்கள். வெவ்வேறு ருசிகளும் போக்குகளும் , சாயல்களும், பாவனைகளும் உள்ள மனிதர்கள். ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் குறிப்பிட்ட வட்டத்தில் சுழலும் மனிதர்கள். சலிப்பூட்டும் மனிதர்கள்.!

இந்த செக்ஷனில் இருந்தவரகளிலேயே வயதானவர் தண்டபாணி. நெற்றியில் விபூதி. வாயில் புகையிலை. முகத்தில் எப்போதும் ஒரு கடுகடுப்பு. பெண்கள் வேலைக்கு வருவதைப் பற்றி அவருக்கு நல்ல அபிப்பிராயம் இல்லாத காரணத்தால் , நீலா என்ற பெண்ணொருத்தி அந்த செக்ஷனில் வேலை செய்த உணர்ந்ததாகவே அவர் காட்டிக் கொள்வதில்லை. செக்ஷனில் உள்ள மற்றவர்கள் ஒரு பெண் இருக்கிறாளே என்று கூறத் தயங்கும் சொற்களை டாபிக்குகளை அவர் வெகு அலட்சியமாகக் கூறுவார் . அலசுவார். வேண்டுமென்று தன்னை அதிர வைக்கும் நோக்கத்துடனேயே அவர் அப்படிப் பேசுவதாக நீலாவிற்குத் தோன்றும்.

குப்புசாமி இன்னொரு ரகம். செக்ஷனில் ‘பத்திரிகை கிளப் ‘ அவர் தான் நடத்தி வந்தார். அவரே கிட்டத்தட்ட ஒரு பத்திரிகை மாதிரி தான்; சதா மேட்டர் தேடி அலையும் பத்திரிகை. பியூன் பராங்குசத்தின் சம்சாரத்துக்குக் கால் நோவென்றால் அதற்குப் பரிகாரமென்னவென்று — ஹைஸ்கூல் படிப்பை முடித்து விட்ட கணபதி ராமனின் மகன் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமென்று- – அமெச்சூர் நடிகரான சீனிவாசன் எந்த எந்த மேநாட்டு நடிகர்களைப் பின்பற்றலாமென்று — அடிக்கடி லேட்டாக வரும் கேசவன் தன் தினசரி அட்டவணையை எப்படியெல்லாம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாமென்று அவர் ஒவ்வொருவருக்கும் வலிய ஆலோசனை வழங்குவார். நீலாவிடமும் அவர் பேசுவார். ‘இன்றைக்கு என்ன சீக்கிரமா வந்துட்டே போல இருக்கே! ‘என்கிற ரீதியில் அவர் அவளிடம் வெகு செளஜன்யத்துடன் பேச முற்படும் போது எரிச்சல் தான் வரும் . தண்டபாணி ஓர் அமுக்கு என்றால், குப்புசாமி ஓர் அதிகப் பிரசங்கி.

கணபதி ராமன் , சீனிவாசன், கேசவன், பராங்குசம் — இவர்களையும் கூட ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரணத்துக்காக அவள் வெறுத்தாள். கணபதி ராமன், சதா அவளுடைய வேலையில் ஏதாவது தவறுகளைச் சுட்டிக் காட்டுவதும் ,சின்னப் பாப்பாவின் கையைப் பிடித்து ‘அ ‘ எழுதச் சொல்லித் தருவதைப் போல , ஒவ்வொரு விஷயத்தையும் ஆதியோடந்தம் சொல்லித் தர முற்படுவதும் அவளுக்குப் பிடிக்கவில்லை. சீனிவாசன் ‘மிஸ் நீலா! ‘ என்று உத்தரவிடும் போதெல்லாம், ‘இஃப் யூ டோண்ட் மைன்ட் ‘, , ‘கைண்ட்லி ‘ என்ற சொற்களைப் பயன் படுத்துவது மரியாதையாகத் தோன்றாமல் ஒரு நாசூக்கான ஏளனமாகவே தோன்றியது. கேசவனுடைய பெரிய மனுஷத் தோரணையும், யாரையும் லட்சியம் செய்யாத (அவள் உட்பட) அலட்சியப் போக்கும் அவளுக்கு அவன் பால் வெறுப்பை ஏற்படுத்தின. பியூன் பராங்குசத்தைப் பொறுத்தவரையில் ரிஜிஸ்தர்களையும் ஃபைல்களையும் , பல சமயங்களில் அவன் அனாவசியமான வேகத்துடன் , ஓசையுடன், தன் மேஜை மீது எறிவதாக அவளுக்குப் பட்டது. சில சமயங்களில் அவள் வராந்தாவில் நடந்து செல்லும் போது , வேறு பியூன்களிடம் தன்னைப் பற்றி மட்டமாக ஏதோ சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்ததாகப் பட்டது.

செக்ஷனில் இருந்த யாரையுமே அவளுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் , அவளுக்கு மிக அதிகமாகப் பிடிக்காத ஆசாமி கேசவன் தான். செக்ஷனில் உள்ள மற்றவர்கள் அவனை ஒரு செல்லப் பிள்ளை போல நடத்துவதும், அளவுக்கு மீறி அவனைத் தூக்கி வைத்துப் பேசுவதும் அவளுக்குப் பொறுப்பதில்லை. இவர்கள் கொடுக்கும் இடத்தினால் தான் ‘இதற்கு ‘ திமிர் அதிகமாகிறது என்று அவள் நினைப்பாள்.

– லக்கி ஃபெல்லோ சார் . . நோ கமிட்மெண்ட்ஸ். நோ வொர்ரீஸ்

— ஒரு மாசத்திற்கு எவ்வளவு படம் பார்ப்பாய் நீ கேசவன் ?

— தனியாகப் பார்ப்பாயா , அல்லது ஸ்வீட் கம்பெனி ஏதாவது ?

— இந்தக் காலத்துப் பசங்களெல்லாம் பரவாயில்லை. ஸார். இவங்க வயசிலே நாம் இருந்த போது என்ன எஞ்ஜாய் பண்ணியிருப்போம் சொல்லுங்கோ!

அவனுடைய இளமைக்கும் சுயேட்சைத் தன்மைக்கும் அவர்கள் அளிக்கும் அஞ்சலி . தம் இறந்த கால உருவத்தை அவன் வடிவத்தில் மீண்டும் உருவகப் படுத்திப் பார்த்து மகிழும் முயற்சி. அவளுக்குச் சில சமயங்களில் பொறாமையாகக் கூட இருக்கும். தனக்குக் கிடைக்காத ஒரு விசேஷக் கவனிப்பும் , ஸ்தானமும் அவனுக்குக் கிடைத்திருப்பது அவள் நெஞ்சை உறுத்தும். இது போன்ற சமயங்களில் இந்தப் பொறாமையும் உறுத்தலும் வெளியே தெரிந்து விடாமல் அவள் மிகச் சிரமப்பட்டு தன் முகத்தையும் பாவனைகளையும் அலட்சியமாக வைத்துக்கொள்வாள் — எனக்கொன்றும் இதொன்றும் லட்சியம் இல்லை என்பது போல.

ஒரு நாள் மாலை குப்பு சாமி கேசவனிடம் பேசிக் கொண்டிருந்த போது அவள் இப்படித்தான் மூஞ்சியை அலட்சியமாக வைத்துக் கொண்டிருந்தாள்.

‘ உனக்கு எந்த மாதிரி வைஃப் வரணும் என்று ஆசைப் படுகிறாய் ? ‘ என்று குப்பு சாமி கேட்டார்.

‘ எந்த மாதிரி என்றால் ? ‘

‘அழகானவளாகவா ? ‘

‘ அழகானவளாக வரணும் என்று யாருக்குத் தான் ஆசை இருக்காது ? ‘

‘ ரொம்ப அழகாயிருந்தாலும் அப்புறம் மானேஜ் பண்றது கஷ்டம் . ‘

கேசவன் கட கட வென்று சிரித்தான். ‘எனக்கு இதிலே உங்களளவு அனுபவம் இல்லை சார். ‘ என்றான். இப்படி அவன் சொன்னபோது தன் பக்கம் அவன் பார்வை திரும்பியது போல நீலாவுக்குத் தோன்றியது. இதை ருசுப் படுத்திக் கொள்ள அவன் பக்கம் திரும்பவும் தயக்கமாக இருந்தது.

அன்று வீட்டுக்குச் சென்றதும், அவள் முதல் வேலையாகத் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள் — கேசவன் பார்வை விழுந்த தன் மாலை நேரத்து முகம் எப்படி இருந்தது என்று தெரிந்து கொள்வதற்காக. அது களைத்திருந்தது. வியர்த்திருந்தது. சற்றே புழுதி படிந்திருந்தது. துடிப்பும் பிரகாசமும் இன்றி மந்தமாக இருந்தது.

இது தான் அவளுடைய முகம், அவளுடைய அழகென்று கேசவன் தீர்மானித்து விட்டானோ ? இந்த எண்ணம் தோன்றிய மறு கணமே , சேச்சே , இவன் பார்க்கும் போது என் முகம் எப்படி இருந்தால் என்ன ? இவன் என்னைப் பற்றி என்ன நினைத்தால் என்ன ? என்றும் நினைத்தாள். அவனைப் பற்றி மறக்க முயன்றாள்.

ஆனால் மறு நாள் காலை ஆபிஸ்க்குக் கிளம்பும் போது வழக்கத்தை விட அதிகச் சிரத்தையுடனும் பிரயாசையுடனும், அவள் தன்னை அலங்கரித்துக் கொண்டாள். ‘ அவனுக்காக அல்ல. அவன் மூலம் தன்னைத் திருப்திப் படுத்திக் கொள்வதற்காக. ‘ என்று அவள் சொல்லிக் கொண்டாள். ‘ அவனுடைய அலட்சியத்தைப் பிளந்து அவனைச் சலனப் படுத்துவதற்காக அவனுடைய கவனத்தைக் கவர்ந்து அதன்மூலம் என் வெற்றியை ஸ்தாபிப்பதற்காக ‘ — இந்தப் போக்கிரித்தனமான எண்ணம் அவள் முகத்தில் ஒரு புன்னகையை எழுப்பியது. அன்று பஸ்ஸில் செல்லும் வழியெல்லாம் அவள் முகத்தில் ‘பளிச் பளிச் ‘ என்று புன்னகை ரேகைகள் தோன்றி மறைந்த வண்ணம் இருந்தன.

அவள் செக்ஷனுக்குள் நுழையும்போது கேசவனின் நாற்காலி காலியாக இருந்தது. அட்டெண்டன்ஸ் மார்க் பண்ணிவிட்டு தன்னிடத்தில் வந்து உட்காரும் போது ‘ இன்று ஒரு வேளை மட்டம் போட்டு விட்டானோ ? ‘ என்று நினைத்தாள்.

ஆனால், அவன் மட்டம் போடவில்லை. பத்தே முக்கால் மணிக்கு வந்தான். தாமதமாக வந்த குற்ற உணர்வினால் பீடிக்கப் பட்டவனாய் அவசர அவசரமாக ஃபைல் கட்டுகளைப் பிரித்து வேலையைத் துவக்கினான்.

நீலா கைகளை உயர்த்தித் தன் தலையில் வைத்திருந்த பூச்சரத்தைச் சரி பார்த்துக் கொண்டாள். ‘கிளிங் கிளிங் ‘ என்று வளையல்கள் குலுங்கின. அவன் நிமிரவில்லை. கையிலிருந்த பென்ஸிலைத் தரையில் நழுவ விட்டு விட்டு மேஜைக்கு முன்புறம் போய் உருண்டு விழுந்துள்ள அதை எடுக்கும் சாக்கில் அவள் இடத்தை விட்டு எழுந்தாள். — சரக் சரக் — குனிந்து பென்ஸிலைப் பொறுக்கினாள். – ‘கிளிங் கிளிங் ‘ — ஊகும் அவன் நிமிரவே இல்லை, அவளுக்கு எரிச்சலாக வந்தது. இன்று திடாரென அவன் கவனத்தைக் கவருவது அவளுக்கு ஒரு முக்கியமான விஷயமாக — கெளரவப் பிரசினையாக — ஆகி விட்டிருந்தது. அடுத்த படியாக ஒரு ரிஜிஸ்தரை வேண்டுமானால் கீழே போடலாமா என்று அவள் யோசித்துக் கொண்டிருந்த போது தான் சீனிவாசன் அவளைக் கூப்பிட்டார்.

‘ மிஸ் நீலா ! இஃப் யூ டோண்ட் மைண்ட் — ஒரு லெட்டர் கம்பேர் செய்யணும் ‘.

அவள் இடத்திலிருந்து எழுந்தாள். கேசவனின் மேஜைக்கு அருகில் உரசினாற்போல புடவை சலசலக்க , வளையல் சப்திக்க , பவுடர் மணக்க , (இன்று கொஞ்சம் பவுடர் அதிகமாகவே பூசிக் கொண்டிருந்தாள். ) நடந்து சென்று அவள் , சீனிவாசனின் மேஜையை அடைந்தாள். கேசவனின் பேனா சற்று நின்றது. அவன் நிமிர்ந்து தன்னைப் பார்ப்பதை அவள் உணர்ந்தாள். ‘பாரு, பாரு நன்றாய்ப் பாரு . . ‘ என்று நினைத்தவாறு அவள் , சீனிவாசனருகில் இருந்த காலி நாற்காலியில் அமர்ந்து அவரிடமிருந்த கடித நகலை வாங்கிப் படிக்கத் தொடங்கினாள். அவர் டைப் செய்யப்பட்ட ஒரிஜினலை வைத்துக் கொண்டு சரி பார்க்கத் தொடங்கினார். தான் படிக்கிறோம் என்பதை நன்கு உணர்ந்தவளாய் அவள் படித்தாள். அவளுடைய அழகிய குரலும் உச்சரிப்பும் இந்த வறட்டு ஆபீஸ் கடிதத்தைப் படிப்பதில் செலவாகிக் கொண்டிருப்பது துரதிர்ஷ்டம் தான். ஆனால், கேசவன் கேட்டுக் கொண்டிருக்கிறான் — இந்த நினைவு அவளுக்கு ஒரு போதையையும் உந்துதலையும் அளித்தது. கடிதத்தைப் படித்து முடித்துவிட்டு மீண்டும் தன் இடத்தில் வந்து உட்கார்ந்ததும், கேசவன் திசையில் அவள் பார்வையைச் செலுத்தினாள். குபுக்கென்று அவன் பார்வை அவளை விட்டு அகலுவதைக் கண்டு பிடித்தாள். அப்படியானால் இவ்வளவு நேரமாக அவன் அவளைத் தான் கவனித்துக் கொண்டிருந்தானா ? அவளுக்குக் கர்வம் தாங்கவில்லை. அன்று அவ்ள் தேவைக்கதிகமாகவே நடமாடினாள். கேசவனின் பார்வை அடிக்கடி தன் திசையில் இழுபடுவதைத் திருப்தியுடன் கவனித்தாள் – கப்பம் கட்டாமல் ஏய்த்து வந்த அண்டை நாட்டுச் சிற்றரசன் ஒருவனுக்குத் தன் பலத்தை நிரூபித்த திருப்தி. இன்னும் பெரிய அரசர்களின் மேல் போர் தொடுக்க முஸ்தீப்பாக அவள் ஈடுபட்ட ஒரு சிறு பலப் பரீட்சையில் வெற்றி.

(தொடரும்)

 

 

  Thinnai 2000 June 06

திண்ணை

Series Navigation