பாண்டி விளையாட்டு

This entry is part [part not set] of 6 in the series 20000521_Issue

அசோகமித்திரன்


அவன் ஏறிய பாசஞ்சர் வண்டி திருவாரூர் ஜங்ஷனை அடையப் பன்னிரண்டு மணியாயிற்று. ரயிலில் போகக்கூடிய பல ஊர்களுக்கிடையில் அந்த நாளில் பஸ் வசதி கிடையாது. போலகத்திலிருந்து தஞ்சாவூர் போகவேண்டுமென்றால் மாயவரம் போய் இன்னொரு ரயில் ஏறவேண்டும். அல்லது திருவாரூர் சென்று வேறொரு ரயில் பிடித்து தஞ்சாவூர் அடைய வேண்டும். காலை ரயிலை விட்டால் மீண்டும் மாலையிலும் நள்ளிரவிலும்தான் மாயவரத்திலிருந்து வண்டிகள். ஆதலால் அவன் திருவாரூரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தது. அவனுக்கு அதிகம் பரிச்சியம் இல்லாத பிரதேசத்தில் அவனுடைய பதினைந்தாவது வயதில் இப்படித் தன்னந்தனியாகத் திட்டமிட வேண்டியிருந்தது அவனுக்குப் பயமாகவும் பெருமையாகவும் இருந்தது. பன்னிரண்டு மணிக்கு மே மாத வெயில் வறுத்தெடுப்பது போல காய்ந்து கொண்டிருந்தது. தஞ்சாவூருக்கு ரயில் மாலை நான்கு மணிக்குத்தான்.

அதுவரை அவன் அந்த ரயில்நிலையத்திலேயே காத்திருக்க வேண்டும். அந்த நாளில் எல்லா ரயில் நிலையங்களுமெ சிறியதாகத்தான் இருந்தன. ரயில் சிப்பந்திகள் மூண்று நான்கு பேர்களுக்கு மேல் கிடையாது. நீல சட்டை அணிந்த இரண்டு அல்லது மூண்று போர்ட்டர்கள். நிலையத்தில் கூரையுள்ள பகுதியில் ஐம்பது அறுவது நபர்கள் கூட மழைக்கோ வெயிலுக்கோ ஒதுங்க முடியாது. ஆனால், ரயில் பாதைகளைக் கடந்து வேறொரு ப்ளாட்ஃபாரத்துக்குப் போக மட்டும் விமரிசையாகப் படிக்கட்டு. வெயில் தண்டவாளங்களின் மேல் பகுதி கண்கூச வைக்கும் ஒளிக் கோடாகத் தெரிந்தன. முதலிலிருந்தே அவை இணைகோடுகளாகத் தென்படவில்லை. ஒன்றுக்கொன்று நெருங்கி வந்தபடி எங்கோ கண்ணுக்கெட்டாத தூரத்தில் சேர்ந்துவிடும் என்ற எண்ணத்தைத் தரும்படிதான் இருந்தன. பூமியை தழுவியிருக்கும் காற்றுப் பகுதி வெயிலில் நிலைக்கொள்ளாது தத்தளித்துக் கொண்டிருந்தது. ரயில் பாதையோடு நடந்தே தஞ்சாவூர் போய்விடலாமா என்றுகூட ஒருகணம் யோசனை மின்னி மறைந்தது. போலகத்தில் அவனோர் வீட்டில் விருந்தாளி போலத் தஞ்சாவூரில் ஒரு வீட்டில் அவனுடைய அப்பா விருந்தாளி. அவர்கள் வசித்து வந்த அயல் பிரதேசத்தில் ஒரு வருடகாலமாக அரசியல் அமளி. யார் யாரோ குடும்பம் குடும்பமாக அந்த இடத்தை விட்டு வெளியேறி எங்கெங்கோ சிதறியிருந்தார்கள். ஆனால் அவனும் அவனுடைய அப்பாவும் ஊர்விட்டு வந்ததற்குக் காரணம் அவடைய சகோதரிக்கு வரன் தேடுவதற்க்கு. அவனுடைய அப்பா உத்தியோகம் புரிந்த அரசுக்கு தீடாரென்று ஏதோ சந்தேகம் வந்து மூண்று நாட்களுக்குள் மீண்டும் நீ வேலைக்கு வந்து சேராவிட்டால் நீ கடமையை விட்டு ஓடிப் போனவனாக கருதப்படுவாய் என்ற எச்சரிக்கையை அப்பாவுக்கு அனுப்பி இருந்தது. அவன் தங்கியிருந்த முகவரிக்கு வந்த அந்த கடிதத்தை அன்று மாலையே தஞ்சையில் வரன் தேடிக்கொண்டிருந்த அவனுடைய அப்பாவிடம் கொடுத்து அவர் உடனே கிளம்பினால்கூட அவர்கள் ஊர் அடைய நான்கு நாட்களாகிவிடும். அவனுடைய அப்பா எந்த நெருக்கடியையும் சமாளித்து விடுவார் என்பதில் அவனுக்கு சந்தேகம் இல்லை இந்த உலகத்தில் ஒருவனுக்கு என்னென்ன நெருக்கடிகள் வரக்கூடும், அவற்றை அவன் சமாளிக்கக்கூடியவை எது, எவ்வளவு என்றெல்லாம் அந்த வயதில் தெளிவாகப் புரியவில்லை. அப்பா மட்டும் எல்லா நெருக்கடிகளையும் சமாளித்து விடுவார். அவரிடம் அவன் அக்கடிதத்தைக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால் போதும். அதற்கு இன்னும் பல மணி நேரம் தேவைப்பட்டது. திருவாரூர் ‘ திருவாரூர்! ‘ பரமசிவன் நடனமாடிய இடம்.

உலகத்திலேயே மிகப்பெரிய குளமும் தேரும் உடைய இடம். மனுநீதி!சோழனும் முத்துசுவாமி தீட்சிதரும் வாழ்ந்த இடம். இதைப் பார்ப்பதற்கு என்று அவனாக வரப்போவதில்லை. வருவதற்குச் சாத்தியமும் இருக்காது. ஆனால் இப்போது வர நேர்ந்துவிட்டது. இருக்கும் மூண்று நான்கு மணி நேரத்தை இந்த ரயில் நிலையத்திலேயே கழிக்க வேண்டுமா ? தென்னிந்தியாவில் பல இடங்களைப் போலவே இங்கும் ஊருக்கும் ரயில் நிலையத்துக்கும் சம்பந்தமே கிடையாது ஏன் இப்படி ரயிலடியை எங்கோ அமைக்கிறார்கள் ? ஒரு மணி நேர ரயில் பயணத்துக்கு ரயிலடிக்குப் போகவும் ஒரு மணி நேரம் தேவைப்படும் போலிருக்கிறது. புழுதி படிந்த பாதையில் சிறிது நேரம் நடந்துவிட்டு அவன் மீண்டும் ரயிலடிக்கே திரும்பி வந்து விட்டான். கோயிலும் குளமும் தேரும் இன்னொரு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருக்க வேண்டும். பிளாட்ஃபாரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சரக்கு மூட்டைகளில் ஒன்று தனியாக விடப்பட்டிருந்தது. அதன் மீது ஏறி உட்கார்ந்து கொண்டான். முந்தைய வருடம் இதே மாதத்தில் அவன் என்ன செய்து கொண்டிருந்தான் ? அவன் ஊரில் பத்தாவது வகுப்பைத்தான் பள்ளி இறுதியாக வைத்திருந்தார்கள் இறுதிப் பரிட்சை எழுதிவிட்டு முடிவுகளுக்காகக் காத்திருந்தான். அவனுடைய ஊரில் மே மாதக் காலைகள் குரூர மனமுடையவனுக்குக்கூட மென்மையான எண்ணங்களை உண்டு பண்ணும். வயதான மரங்கள் கூட உற்சாகமாகச் சலசல்க்கும். வழக்கமான காக்கை குருவிகளோடு கிளிகளும் வந்து சேரும். காக்கைகளாலும் கழுகுகளாலும் அவற்றுக்கு ஆபத்துதான். ஆனால் அதை பொருட்படுத்தாதபடி அவன் படுக்கைக்கருகில் இருந்த ஜன்னலின் கதவின் மீது வந்து உட்கார்ந்து கொள்ளும். கிளி ‘ கிளி ‘ அவனுக்கு பிடித்தமானவர்கள் எல்லோரும் கிளிகள். அவனுடைய முதல் கிளி மங்களம். மங்களம் திருவாரூரில்தானே இருப்பதாகச் சொன்னார்கள் ? மங்களம் என்றவுடன் யாருக்கும் முப்பது நாற்பது வயது மாதுதான் மனதில் தோன்றும் இந்த மங்களத்துக்குப் பன்னிரண்டு, பதிமூண்று வயதுதான் முடிந்திருக்கும். அவனுடைய அப்பாவும் அவளுடைய அப்பாவும் அநேகமாக ஒரு சமயத்தில் ஊரைவிட்டு வடக்கே பிழைப்பைத் தேடிப் போயிருக்கிறார்கள். சேவகப் பிழைப்புதான். மாதம் பதினைந்து ரூபாயாவது உறுதியாகக் கிடைக்கும் என்று தெரிந்த பிறகு மீண்டும் சொந்த ஊருக்கு சென்று அவரவர்கள் மனைவி தாய்தந்தையரை அழைத்து போயிருக்கிறார்கள். மங்களத்தின் அப்பாவுக்கு வரிசையாக மூண்று பெண்கள். திடாரென்று ஒரு நாள் அல்பாயுசில் செத்துப் போய் விட்டார். மங்களத்தின் அம்மாவையும் மூண்று பெண்களையும் உறவினர்கள் அழைத்துப் போய்த் திருவாரூரில் எங்கோ வைத்திருப்பதாகச் சொன்னார்கள். அவனுக்கு இதெல்லாம்கூட அவ்வளவு தெளிவாகத் தெரியாது. அவளுடைய அப்பா செத்து கிடக்க, பாவாடை சட்டை போட்ட ஒரு பெண் தன்னுடைய தங்கையச் சமாதானப்படுத்திச் சாதம் ஊட்டிய காட்சிதான் அவனுக்கு நினைவிலிருந்தது. மங்களத்தின் தங்கைகளின் பெயர்கள்கூட அவனுக்கு சரியாக நினைவில்லை. அவனுக்கு திடாரென்று மங்களத்தைப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. அவனும் மங்களமும் சேர்ந்து விளையாடியவர்கள்தான் அவள் நன்றாகப் பாண்டி ஆடுவாள். அதிலும் ஏரோப்ளேன் பாண்டியாட்டத்தில் அவளை மிஞ்சவே முடியாது. ஒருமுறை சில்லைப் போட ஆரம்பித்தால் அத்தனை ஆட்டத்தையும் முடித்து, கண்ணை மூடியபடி ‘ஆம்பியாட் ? ‘ ( ஆங்கிலத்தில் ‘ஆம் ஐ அவுட் ? ‘) என்று கேட்டபடி எந்த கோட்டையும் மிதியாதபடி பாண்டியின் எல்லா கட்டங்களையும் தன்னுடையதாக்கி கொள்வாள். அவளைவிட அவன் பெரியவன் என்றாலும் திரும்பத் திரும்பத் தோற்றுவிட்டு ‘ இனிமே உன்னோட விளையாட மாட்டேன் போ ‘ என்று கோபித்து கொண்டும் போய்விட்டான். அன்றிலிருந்து அவள் அவனிடம் மட்டும் தோற்றுப் போவாள். முதலில் அது அவனுக்கு மகிழ்ச்சி அளித்தது. ஆனால் போக போக அதுவும் சோர்வு தந்தது. மங்களத்தின் கையைப் பிடித்துக்கொண்டு, ‘ இனிமே கோச்சுக்க மாட்டேன் மங்களம். நீதான் நன்னா ஆடறே. நீயே ஜெயிச்சுக்கோ. ‘ என்றான். அவனைவிட முகத்தை நீளமாக வைத்துக்கொண்டு, ‘நான் என்ன பண்றதுடா, உன்னோட ஆடினா தோக்கத்தான் முடியறது. ‘ என்று அவள் சொன்னாள். அது பொய். ஆனால் அவளுக்கு அதுதான் நிஜமாய் இருக்க வேண்டும் என்று அவன் கண்டு கொண்டான். அவ்வளவு சிறிய வயதில்கூட நிஜம் பொய் பற்றி அவளுக்கு தெரிந்திருந்தது. கோயில் மூடி இருந்தது. நான்கு மணிக்குத்தான் திறப்பார்கள். ஆனால் அதுவரை காத்திருக்க முடியாது. வடக்கே இருந்து தமிழ்நாட்டுக்கு வருபவர்கள் எல்லோருக்கும் கோயில்கள் மூடியிருக்கும் நேரம் பற்றி அதிகமாக தெரியாது. அவனே பலமுறை அவனுடைய பெற்றோருடன் மூடிய கோயில்கள் திறப்பதற்க்காக காத்து நின்றிருக்கிறான். இன்று அவன் வசமிருக்கும் சிறிது நேரத்தில் மங்களம் எங்காவது கண்ணில் படுவாளா என்றுதான் பார்க்க இயலும். எப்படி முகவரி ஏதும் இல்லாமல் திருவாரூரில் ஒரு விதவையையும் அவளுடைய மூண்று பெண்களையும் தேடுவது ? அவனுக்கு அவர்கள் முகம்கூடச் சரியாக நினைவில்லை. ஏதோ நடந்தது ஞாபகத்திலிருக்கிறது. முகங்கள் கலைந்து விடுகின்றன. அவன் கமலாலயத்தை ஒட்டியிருந்த வீடுகளில் பார்த்தபடி சென்றான். யாரும் பெரிய வசதி படைத்தவர்கள் இல்லை. ஆனால் ஆதரவற்ற தன்மையைக் காட்டும் முகமாக ஏதும் தென்படவில்லை. ம்ங்களம் இப்படிக்கூட இருக்கமுடியாது. இன்னும் பரம தரித்திரத்தில், துன்பத்தில்தான் இருக்க வேண்டும். மங்களத்தின் அப்பா செத்துப் போன போது வீட்டில் இருந்த சிறு பாத்திரம் பண்டங்கள் தவிர வேறு விலைமதிப்புடையவை என்று ஏதும் கிடையாது. மங்களத்தின் அம்மாவின் கழுத்தில் ஒழுங்காக ஒரு சங்கிலிகூடக் கிடையாது. அப்படிபட்டவர்கள் திருவாரூர் போன்ற ஊரில் குடியேறினால் எப்படிப்பட்ட வாழ்க்கையை நடத்தமுடியும் ? கிழிந்த உடை, பரட்டைத் தலை, கண்களில் எப்போதும் பயமும் அற்ப எதிர்ப்பார்ப்பும், கன்னங்கள் குழி விழுந்திருக்கும். மங்களம் படிப்பை நிறுத்திவிட்டு யார் வீட்டிலேயோ வேலை செய்து கொண்டிருக்க கூடும். செய்த குற்றம், செய்யாத குற்றம் எல்லாவற்றுக்கும் அடி உதை வசவு பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். அவன் அங்கிருந்த சந்து பொந்துகளை அவசரத்தோடு சுற்றி சுற்றி வந்தான். என்ன நம்பிக்கையில் எந்தத் தகவலின் பேரில் இப்படி தேடுகிறான் ? கண்ணில் பட்ட எல்லாப் பெண்களும் மங்களம் மாதிரி இருந்தார்கள். அவனுடைய கற்பனை மங்களம் போல அந்த சிற்றூரில் நிறையப் பெண்கள் இருந்தார்கள். அவனுடைய முழங்கால் வரை புழுதி படிந்திருந்தது. இப்போது அவனே ஒரு பிச்சைக்காரப் பையன் போலத்தான் தோற்றமளித்தான். காலையில் சாப்பிட்ட பழையச் சோறு எப்போதோ கரைந்து போய் விட்டிருந்தது. தஞ்சாவூருக்கு ரயில் டிக்கெட் வாங்க மட்டும் சிறிது சில்லறை இருந்தது. அவனுக்கு தஞ்சாவூருக்கு ஒரே டிக்கெட்டாக வாங்கியிருக்கலாம் என்று தெரியாமல் போய்விட்டிருந்தது. அந்த தெருவில் நான்கைந்து சிறுமியர் பாண்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இது அவன் அறிந்த ‘ஏரோப்ளேன் சிட்டி ‘ விளையாட்டில்லை. எல்லோரையும்விட வயதில் பெரியவளாயிருந்தவள் அவளை தட்டிக் கேட்க யாருமில்லை என்ற உணர்வில் எல்லோரையும் மிரட்டி விரட்டிக் கொண்டிருந்தாள். இவளுக்கும் மங்களத்திற்க்கும்தான் எவ்வளவு வித்தியாசம். ‘இங்கே மங்களம்னு ஒரு பொண்ணு இருக்காளா ? ‘

அந்தப் பெரிய பெண் ஒரு கட்டத்திலிருந்து இன்னொன்றுக்கு ஒற்றைக் காலில் தத்திச் சென்றபடியே, ‘என்ன கேக்கறே ? ‘ என்றாள். ‘ம்ங்களம்னு ஒரு பொண்ணு. ‘

அவன் ஏதோ அபத்தமான செயலொன்றைச் செய்து விட்டது போல அவள் களுக்கென்று சிரித்தாள்.

அவள் சிரிபபதைக் கண்டு இதர பெண்களும் சிரிக்க ஆரம்பித்தனர். சிரிப்பை அடக்க முடியாதபடி மாறி மாறி வெடித்துக் கொண்டு சிரித்தார்கள்.

அவனுக்கு அழுகை வந்துவிடும் போலிருந்தது. அவனிருந்த ஊரில் பெண்கள் இவ்வளவு பொல்லாதவர்களாக இருக்க மாட்டார்கள். இப்படி நடுத்தெருவில் பாண்டி விளையாட மாட்டார்கள். யாராவது கேள்வி கேட்டால் உடனே அவனை கேலிச் செய்ய தொடங்கிவிட மாட்டார்கள்.

அவன் அங்கிருந்து நகர்ந்து செல்ல அந்த பெண் கூப்பிட்டாள். ‘டேய் பையா ‘ பையா ‘ என்ன கேட்டே ‘ பதில் சொல்றதுக்கு முன்னாலியே போயிடறியே ? ‘ அவன் நின்றான்.

‘மங்களம்னு இந்த தெருவிலே ஒரு பொண்ணு இருக்கா. ‘

‘எங்கே இருக்கா ? ‘

‘பூசணிக்காய் அடுக்கியிருக்கே ஒரு திண்ணை அந்த வீட்டிலே இருக்கா. ‘

‘அவளை அழைச்சிண்டு வரியா ? நான் ரொம்பத் தூரத்திலிருந்து வந்திருக்கேன். ‘

‘அவளை அழைச்சிண்டு வர முடியாது. ‘

‘ஏன் ‘

‘ஏன்னா அவளுக்கு கால் இல்லே. ‘

‘காலு இல்லியா ? ‘

‘அவளுக்கு ஜ்உரம் வந்து இரண்டு காலும் நிக்க முடியாதபடி போயிடுத்தாம். நீ வேணா அவ வீட்டுக்கு போய் பாரு. அவ உக்காந்தபடியேத்தான் நகருவா. ‘ அவன் அந்த வீட்டுக்கு போக அடியெடுத்து வைத்தான். ‘வாசப் பக்கமாய் போகாதே. வீட்டுக்காரா கத்துவா. கொல்லை வழியாய் போ. மங்களம் இருக்கிறதே கொல்லைப் பக்கம்தான். ‘ அவன் மங்களத்தைப் பற்றி கற்பனை செய்து கொண்டிருந்தது எல்லாமே சரியாய் போயிற்று. அப்பா செத்துப் போய்விட்டால் எப்படிப்பட்ட கஷ்டங்கள் எல்லாம் வந்து விடுகின்றன ‘ பாண்டியாடி யாரையும் தோற்கடிக்கும் கால்களுக்குக்கூட வியாதி வந்து செயலிலந்து போய்விடுகின்றன. இனியும் மங்கத்தைப் போய்ப் பார்க்க வேண்டுமா ? இருவரின் துக்கம்தான் பெருகி வழியும். அவனால் அவளுக்கு எந்த உதவியும் புரிய முடியாது. அவளால் எழுந்து வந்து அவனுக்கு ஒரு தம்ளர் தண்ணீர் கூடத் தரமுடியாது. அவனுடைய அப்பாவை அவன் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். அப்பாவின் வேலைக்கு ஆபத்து வந்திருக்கிறது. அவரை எப்படியும் காப்பாற்றி விட வேண்டும். அவன் ரயில் நிலையம் நோக்கி வேகமாக நடந்தான்.

 

 

  Thinnai 2000 May 21

திண்ணை

Series Navigation

அசோகமித்திரன்

அசோகமித்திரன்