கிருஸ்துமஸ் வாழ்த்து கடவுளே

This entry is part [part not set] of 5 in the series 20000124_Issue

லாரி ஃப்ரெஞ்ச்


‘ஏன் அப்படிச் சொல்கிறாய் ? ‘ என்று அவள் கேட்டாள். ‘அவனுக்கு வாழ்த்து தேவைதான் என்று உனக்குத் தோன்றவில்லையா ? நமக்கு அவன் செய்திருக்கிறதெல்லாம் பார்க்கிறாய் தானே ? ‘ என்றான் அவன். அவர்கள் இருவரும் பல மாதங்களாய்ப் பிரிந்து இருந்தார்கள். அவள் விவாகரத்துக்கு விண்ணப்பம் பதிவும் செய்தாயிற்று. அவன் கிருஸ்துமஸ் மரத்தைவைக்க உதவி பண்ணுவதற்கும், குழந்தைகள் பரிசுப் பொருட்களை அலங்காரமாய்க் கட்டிவைக்க உதவி பண்ணவும் வந்திருந்தான். ‘உன்னை மாதிரியே எனக்கும் கூட இது பிடிக்கத் தான் இல்லை, ஜிம். ‘ என்றாள் அவள். அவன் ஒரு கிருஸ்துமஸ் அணிகலனை மரத்தின் ஓர் இழையில் மாட்டிக் கொண்டிருந்தான். ‘ படுக்கையிலிருந்து இறங்கினவுடனேயே வக்கீலுக்கு ஃபோன் செய்தாயாக்கும் ? ‘ என்றான் அவன். ‘படுக்கையில் அவன் அருமையாய் இருந்தானோ.. ம்ம் ? படுக்கையில் இருந்தபடியே எட்டி படுக்கைக்கருகில் இருந்த ஃபோனில் தான் வக்கீலைக் கூப்பிட்டாயோ ? ‘ மின்விளக்குச் சரத்தை அவன் ஒழுங்கு பண்ணியபடி, எரியாத விளக்குகளுக்குப் பதிலாக வேறு விளக்குகளை மாட்டினான். ‘ஜிம், இது மாதிரி ஆரம்பிக்க மாட்டாய் என்று எனக்கு வாக்குக் கொடுத்தாயே..எனக்குக் களைத்துப் போகிறது.. மிகக் களைத்துப் போகிறது. ‘ என்று பெருமூச்சு விட்டாள் அவள். ‘நீ களைத்துப் போவாய் என்று தான் நினைத்தேன். ‘ என்றான் அவன். ‘உன் இந்தப் புதிய வாழ்க்கையில் நீ விட்டமின் மாத்திரைகள் சாப்பிட வேண்டும். ‘ ஒரு குழந்தை மாடியில் அழ ஆரம்பித்தவுடன் , அதைக் கவனிக்க அவள் மேலே சென்றாள். ரிகார்ட் பிளேயர் அருகில் சென்று அவன் பிங்க் க்ராஸ்பியின் கிருஸ்துமஸ் பாடல் தட்டை இயக்கினான். பொன்னிறத்தாலும், வெள்ளி நிறத்தாலும் அணிசெய்யப் பட்ட பரிசுப் பெட்டிகளை மரத்தின் கீழே வைத்து, எல்லாவற்றிலும் பரிசு வாழ்த்து அட்டை இருக்கின்றனவா என்று சரி பார்த்தான். அவள் கீழே இறங்கி வந்து, சிறு சிறு மரத்தாலான கிருஸ்துமஸ் அலங்காரங்களை அவற்றின் பெட்டியிலிருந்து எடுக்கலானாள். அவற்றை மாட்டிவிட்டு சற்றுப் பின் தள்ளி நின்று அவை எப்படித் தோன்றுகின்றன என்று சரி பார்த்தாள். அவன் மூன்று விளக்குச் சரங்களை இணைத்து கீழே கிடத்தியிருந்தான். அவை எல்லாமே இப்போது எரியலாயின. மற்ற மாற்று மின் விளக்குகளை அவன் ஒரு சிறிய பழுப்பு நிற சாக்குப் பையில் போடலானான். அணைந்து எரியும் மின் விளக்குகள் கீழே கிடந்த விதம், அவனுக்கு டிஸ்கோ நடனக் கூடம் போன்று தோற்றமளித்தது. ‘ஃப்ரான், இதைச் சொல்லு..அந்த வெறும்பயல் ந்தடனமும் ஆடத் தெரிந்தவனா ? அவனுக்கு ஆடத்தெரியுமா ? ‘ இன்னும் சில அணிகளை மாட்டிய அவள் கேட்டாள். ‘ இடது பக்கம் நிறைய மாட்டிவிட்டேன் போல. பார்த்துச் சொல். ‘ பிங்க் க்ராஸ்பியின் பாடல் முடிந்து விட்டது. விட்டு விட்டு எரியும் விளக்குகளிடையே அமைதியில் அவர்கள் குரல் உரக்க ஒலித்தது. ‘விட்டமின் ‘ என்றான் அவன். ‘உனக்கு ஒவ்வொரு கிருஸ்துமசுக்கும் என்ன கொடுக்க வேண்டுமென்றாவது எனக்குத் தெரிகிறது – பெரிய பெட்டியில் விட்டமின். பல ரக விட்டமின். அது தானே உனக்குப் பிடிக்கும் இல்லையா ? ‘ இடது பக்கத்திலிருந்து சில அணிகலன்களை வலது பக்கத்திற்கு அவள் மாற்றினாள். ‘ ஜிம். பேசாமல் தயவு செய்து ,பாழாய்ப் போன விளக்கை மாத்திரம் சரி பண்ணு. ‘ என்றாள் அவள். மரத்துக்கு அருகில் நின்றிருந்த அவன், கீழே குனிந்து, பெரிய விளக்குகளைக் கொண்ட சரத்தை எடுத்தான். ஒரு சிவப்பு மின்விளக்கை பற்களுக்கிடையில் வைத்தான். அது பளிச்சிட்ட போது அதை அழுந்தக் கடித்து சிதறச் செய்தான். அவன் ரத்தத்தைச் சுவைக்கும் வரை இன்னமும் நான்கு விளக்குகளையும் அதே போல் செய்தான். அவனாலேயே நம்ப முடியாத படி, அவள் கதறலையும் மீறி, உடைந்த கண்ணாடி கீழே குழந்தைகளின் பரிசுப் பொருளில் விழுகிற சிறிய ஒலி அவனுக்குத் துல்லியமாய்க் கேட்டது.

Translation Gopal Rajaram

Thinnai 2000 January 24

திண்ணை

Series Navigation

லாரி ஃப்ரெஞ்ச்

லாரி ஃப்ரெஞ்ச்